Advertisement

“ஏய்… இது ஒரு நல்ல சந்தர்ப்பம்… உன் மனசுல உள்ளதை விக்கி கிட்டே சொல்லிடு… ரெண்டு பெரும் மனசு விட்டுப் பேசிடுங்க…”

“ம்ம்… சரிடி, நீயும் பத்திரமாப் போ… அங்கே ரீச் ஆனதும் எனக்குக் கால் பண்ணு…”

“ம்ம்… நீயும் வீட்டுக்குப் போனதும் எனக்குக் கால் பண்ணு…” என்றவள் ட்ரெயின் வரும் ஹாரன் கேட்கவே திரும்பினாள்.

மதிய நேரமாதலால் ரயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ராஜீவும், தீபாவும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு கையசைத்து விடை கொடுத்து காரை நோக்கி நகர்ந்தனர் விக்கியும் வர்ஷாவும்.

விக்கியின் மனது வர்ஷாவிடம் எப்படித் தொடங்குவது என யோசித்துக் கொண்டிருக்க, வர்ஷாவும் அதையே யோசித்துக் கொண்டிருந்தாள்.

“நான் எப்படி சொல்லுறது… சும்மா பிரண்டா தான் பழகினேன்னு அவன் சொல்லிட்டா… நான் எப்பவும் அவனைப் பத்தியே நினைக்குற போல அவனும் நினைப்பானா… அவனுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு தான் எனக்கும் தோணுது… இருந்தாலும், அவன் சொல்லாம நான் எப்படி முதல்ல…” என்று பலவாறாக யோசித்து குழம்பிக் கொண்டிருந்தாள்.

இருவரும் மௌனமாக காரை அடைய, காரின் முன் கதவை அவளுக்காய்த் திறந்து கொடுத்த விக்கி, “அமருங்கள் தேவியாரே…” என்றான் தலையை சரித்துக் கொண்டே.

அவளுக்கு ஒருவித படபடப்பாய் இருக்க, தலையைக் குனிந்து கொண்டே யோசனையுடன் அமர்ந்தாள் அவள்.

காரை ஸ்டார்ட் பண்ணியவன், அவளை நோக்கி புன்னகைத்தான்.

“எந்தக் கோட்டையைப் பிடிக்க இத்தனை யோசனை தேவி…” என்றான் சிரிப்புடன்.

“வ…வந்து… அதெல்லாம் ஒண்ணும் இல்லை…” என்று கூறும்போதே அவளது பாகில் கையில் இருந்த அலைபேசி செல்லமாய் சிணுங்கியது. அதில் ஒளிர்ந்த ஹர்ஷாவின் எண்ணைக் கண்டவள், எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.

“ஹலோ அக்கா…”

“ம்ம்… வர்ஷூம்மா… கவிதா மேரேஜ் நல்லபடியா முடிஞ்சுதா… நீ கிளம்பிட்டியா…”

“ம்ம்… முடிஞ்சுதுக்கா… இன்னும் கொஞ்ச நேரத்துல பஸ் ஏறிடுவேன்… அஞ்சு மணிக்கெல்லாம் அங்கே வந்திருவேன்…”

“நான் உன்னைப் பிக்கப் பண்ண வரணுமா… நீயே வந்திடுவியா…”

“நா… நானே வந்துடறேன்க்கா… உனக்கு எதுக்கு சிரமம், நீ ஈவினிங் சீக்கிரம் வீட்டுக்கு வந்திடு…”

“சரிடா, பார்த்து பத்திரமா வா…”

“ம்ம்… சரிக்கா, வச்சிடறேன்… அம்மாகிட்ட சொல்லிடு…” என்று வைத்து விட்டாள்.

“உன் அக்காவா… என்ன பண்ணுறாங்க…”

“நர்ஸா இருக்காங்க…” என்றவள் அவனது முகத்தை ஏறிட முடியாமல் மீண்டும் மௌனமாகி விட அவன் புன்னகைத்தான்.

“பட்டர்பிளை…”

“ம்ம்ம் என்ன…”

“என்ன யோசிச்சுகிட்டே இருக்க… என்கிட்டே ஏதாவது சொல்லணுமா…” என்றான் கண்ணைச் சிமிட்டி சிரித்துக் கொண்டே.

“சிரிக்காதே கண்ணா…

உன் கன்னத்துக் குழியில்

சிக்கிக் கொண்டு எனைக்

கொல்கிறது என் இதயம்…”

அவள் அவனையே பார்ப்பதைக் கண்டவன், காரை ஓரமாய் நிறுத்தினான்.

“எ… எதுக்கு காரை நிறுத்திட்டீங்க…”

“நீ இப்படியே என்னையே பார்த்துட்டு இருந்தா என்னால வண்டி ஓட்டவே முடியலையே…” சிணுங்கியவனின் சிகையைக் கலைத்து விளையாட அவளுக்குள் பேராவல் எழுந்தது.

“வ… வண்டியை எடுங்க விக்கி, டைம் ஆச்சு…”

“ஹலோ… மேடம், கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க… இதான் பஸ் ஸ்டேண்ட்…” என்று அவன் கூற, அவள் அசடு வழிந்தாள்.

“ஓ… பஸ் ஸ்டேண்ட் வந்திருச்சா…” என்றவளின் ஏமாற்றம் கலந்த முகம் அவள் சொல்லாமலே அவள் மனதை அவனுக்கு உணர்த்தியது.

அவளையே ஒரு நிமிடம் குறுகுறுவென்று அவன் பார்க்க அதை எதிர் கொள்ள முடியாமல் குனிந்து கொண்டவள், “சரி… நான் கிளம்பறேன்…” என்றாள் சுரத்தே இல்லாமல். அவள் பேருந்து நிலையத்துக்கு தூரம் இருக்கும் என நினைத்திருக்க அத்தனை பக்கத்திலேயே இருக்கும் என்று எண்ணவில்லை. ஏமாற்றத்துடன் அவள் இறங்க, அவனும் புன்னகையுடன் இறங்கினான்.

“பட்டர்பிளை… கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு ஜூஸ் குடிச்சா என்ன…” என்றான் புருவத்தைத் தூக்கி கேள்வியுடன். பளிச்சென்ற அவனது சிரிப்பும், அந்த புருவம் தூக்கலும் அவளை மயக்க அவள் தலை சம்மதமாய் ஆடியது.

“ஒருவேளை, அவன் மனதை என்னிடம் சொல்லத்தான் அழைக்கிறானோ…” என்று எண்ணிக் கொண்டே அவனுடன் நடந்தாள். கிளம்பும்போது அவன் பாண்ட்டுக்கு மாறி இருக்க, அவளும் சுரிதாரில் இருந்தாள்.

ஜேஜே பழமுதிர் நிலையத்துள் நுழைந்து இரண்டு ஆப்பிள் ஜூஸ் சொல்லிவிட்டு எதிரெதிர் இருக்கையில் அமர்ந்தனர். அவன் ஆவலுடன் அவளைப் பார்க்க, அவளுக்கு தயக்கமாய் இருந்தது. அங்கே நிரம்பி இருந்த பலவகை பழங்களின் மணம் நாசியை வருட தலையைக் குனிந்து கொண்டு யோசனையுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் விக்கி.

“இப்போதே மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டும்… இனி இது போல் சந்தர்ப்பம் அமையாது.” என நினைத்தவன், மெல்லப் பேசத் தொடங்கினான்.

“பட்டர்பிளை… நான் உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்… சொல்லட்டுமா…”

“ஹூம்…” என்றவளின் குரல் அவனுக்குப் புதிதாய் இருந்தது.

அவனிடம் சரிக்கு சரியாய் வாயடிப்பவள் இப்போது எதோ மனதுக்குள் வைத்து அலட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

“ஒருவேளை… நான் நினைப்பது போல அவளும் இதைப் பற்றி பேச நினைத்து தான் தவிக்கிறாளோ.” என யோசித்தான் அவன்.

அதற்குள் ஆப்பிள் ஜூஸ் மேசைக்கு வர, அதில் ஒரு ஸ்ட்ராவைப் போட்டு அவளிடம் நகர்த்தியவன், “குடி வர்ஷு…” என்றான். அவள் அதை உறிஞ்சத் தொடங்க, அவனுக்குள் கவிதை விரிந்தது.

“பழரசத்தை நீ

உறிஞ்சுகிறாய்

பட்டாம் பூச்சியே…

எனது தாகம்

ஏனோ அதிகமாகிறதே…”

அவளையே குறுகுறுவென்று அவன் நோக்குவது புரிய அவள் நெளிந்தாள்.

“விக்கி, ஜூஸை குடிங்க…”

“ம்ம்…”

“நான் குடித்துக் கொண்டு

தானிருக்கிறேன் பெண்ணே…

பழரசத்தை அல்ல…

பல ரசங்களைக் காட்டும்

உன் விழி ரசத்தை… ஆனாலும்

தாகம் தீரத்தான் இல்லை…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டவன்,

“வர்ஷூ, நீ என்னோடவே வந்திடறயா…” என்றான் மென்மையான குரலில்.

“என்னது… உங்களோடவா, எங்கே…” என்றாள் திகைப்புடன்.

“என்னோடவே கோவை வந்திடறயா… நானும் அங்கே தானே போறேன், நாம ஏன் தனித்தனியா போகணும்… ஒண்ணாவே போகலாமே…” என்றான் அவன் சிரிப்புடன்.

“அது…வந்து… வேண்டாம், நாம எப்படி ஒண்ணா… அவ்ளோ தூரம்… தனியா, அக்காகிட்டே பஸ்ல வரேன்னு நான் சொல்லி இருக்கேன்…”

“அப்ப என்னோட நீ வர மாட்டியா… உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லையா…”

“இதுல எங்கே நம்பிக்கை வந்துச்சு… உங்களை நம்பாமலா கூட உக்கார்ந்து ஜூஸ் குடிக்கறேன்…” என்றாள் அவசரமாய் அவள்.

“அப்ப என்னை நம்புறியா…”

“ம்ம்…” என்றாள் அவள் அவன் முகத்தைப் பார்க்க முடியாமல்.

“அப்ப என்னோடவே வந்திடறியா, லைப் புல்லா…”

“அதான் பஸ்ல போறேன்னு சொல்லிட்டனே…” என்றவள் அவன் சொன்னது புரிய திகைப்புடன் நிமிர்ந்தாள்.

“எ… என்ன சொல்லறிங்க விக்கி…” அவளது விழிகள் படபடக்க, குரல் அவளுக்கே கேக்கவில்லை.

“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு… உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கு, அப்புறம் எதுக்கு நாம தனித்தனியா போகணும்… என் வாழ்க்கையை உன்னோட தொடரணும்னு நான் ஆசைப்படறேன் பட்டர்பிளை… உனக்கு விருப்பம் இருந்தா துணையா என்னோட கார்ல வா… இல்லேன்னா உனக்கு பஸ் வெயிட் பண்ணிட்டிருக்கு… எதுவா இருந்தாலும் உன் விருப்பம் தான்…” என்றவன் ஜூஸை ஒரே உறிஞ்சில் குடித்து முடித்தான்.

அவன் காதலை சொல்லுவான் என அவள் நினைத்திருக்க, வாழ்க்கையில் துணையாய் வருகிறாயா…” என கேட்டது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் சந்தோஷத்தில் வார்த்தை வராமல் அமர்ந்திருக்க, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னோடு வருகிறாயா…” என்றவன் கையை நீட்ட, அவனது நீண்ட வெண்ணிற விரல்களை ஆசையுடன் பார்த்தவள், நாணத்துடன் தன் கையை நீட்டினாள்.

அவனது முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது.

“தேங்க்ஸ் பட்டர்பிளை…” என்றவன், அவளது பஞ்சு போன்ற மெத்தென்ற விரல்களை ஆசையோடு பிடித்துக் கொண்டான்.

“அப்போ… இனி நம்ம காதல் பயணத்தைத் தொடரலாமா பட்டர்பிளை…”

“ம்ம்…” என்றாள் அவள் நாணத்துடன்.

அவள் கையை உருவ முயல, “ஏன்மா… அதை நான் பத்திரமா வச்சுக்கறேன்…” என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவன் காரை நோக்கி நடந்தான்.

அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க மனதுக்குப் பிடித்திருந்தாலும் கூச்சமாகவும் இருந்தது. நிஜமாலுமே பட்டாம்பூச்சியாய் மாறி சிறகடிப்பது போல உணர்ந்தாள் அவள்.

அதற்குப் பிறகு அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டே கோவையை அடைந்தனர். அந்த மூன்று மணி நேரப் பயணம் அவர்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பமாய் அமைய கோவையை நெருங்குவதற்குள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் வந்திருந்தது.

வாழ்க்கைப் பாதையெங்கும்

வண்ணச் சோலையாய் மாறுதடி…

வசந்தம் வந்து வாசலில்

வாசம் தான் செய்யுதடி

வண்ணத்துப் பூச்சி உன் வரவினாலே…

உன் விழிகளிடம் சொல்லி வை

தீண்டாமை பாவமில்லை என்று…

நொடிக்கொரு தரம் தீண்டிச் செல்லும்

உன் விழிகளின் உரசலில்

வெட்கப் பூக்கள் ஓயாமல் பூக்குதடா…

பிஞ்சு விரல் பிடித்து நடக்கையிலே

பஞ்சாய் என் நெஞ்சும் மிதக்கிறதே…

உன் கரம் பிடித்து நடந்திடவே

தடுமாறி நானும் விழுகிறேனே…

வஞ்சி உந்தன் வார்த்தை ஒன்றே

நெஞ்சைக் குளிர வைத்தடி…

இதயத்தில் குடியிருக்க

இமை வழியே வந்தாயடி…

Advertisement