Advertisement

இதயம் – 9

காலையில் கல்யாண மண்டபமே பரபரப்பாய் இருக்க, விக்கியும், ராஜீவும் மாப்பிள்ளையைத் தயாராக்கிக் கொண்டிருந்தனர்.

“புது மாப்பிள்ளைக்கு ராபாப்பரி…

நல்ல யோகமடா… ராபாப்பரி…

அந்த மணமகள் தான்… ராபாப்பரி…

வந்த நேரமடா… ராபாப்பரி…”

பாடிக் கொண்டே சதீஷின் பட்டு வேஷ்டியை அவனுக்கு கட்டிவிடுவதற்காய் கையில் எடுத்தான் ராஜீவ். சதீஷ் அவன் பாடுவதை தலை விதியே என்று கேட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

“ஆஹா… டேய் மச்சி, நீ ஏன் டிவி சானல்ல பாட டிரை பண்ணக் கூடாது…” என்ற விக்கியை சதீஷ் வினோதமாய் பார்க்க, ராஜீவோ பெருமையாய்ப் பார்த்தான்.

“என்னடா மச்சி சொல்லற, நான் பாடறது அவ்ளோ நல்லாருக்கா…” ஆச்சர்யத்துடன் கேட்டான் ராஜீவ்.

“அதுக்கில்லடா மச்சி, டீவியா இருந்தா ஆப் பண்ணியாவது தொலையலாமே… இப்படி உன் இம்சையை சகிச்சுக்க வேண்டி இருக்காதே, அதான் கேட்டேன்…” அப்பாவியாய் முகத்தை வைத்து விக்கி கூற, சதீஷ் கலகலவென்று சிரித்தான்.

“மச்சி… அப்ப எனக்கு பல்பு கொடுக்கத்தான் அப்படி சொன்னியா… ரொம்ப சந்தோஷம்டா மச்சி, உன்னை என் நண்பனா கிடைக்க நான் என்ன புண்ணியம் பண்ணினேனோ… நான் வாயே திறக்கலை… நீ இம்சை இல்லாம இரு…” என்றவன் வாயை மூடிக் கொண்டான்.

       

“ஹஹா… இன்னும் காலேஜ் டேஸ்ல பார்த்த போலவே ரெண்டு பேரும் இருக்கீங்கடா… உங்களை இப்படிப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு…” என்ற சதீஷ்க்கு புன்னகையுடன் பட்டு வேஷ்டியை கட்டி முடித்தான் விக்கி.

“ஹாஹா… நாங்க எப்பவும் இப்படிதான் இருப்போம்டா… எங்க டிஸைன் அப்படி…” என்று சிரித்த ராஜீவ், விக்கியின் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான்.

“ம்ம்… சரி, உங்க ஆபீஸ் வொர்க் எல்லாம் எப்படிப் போகுது… உங்களுக்கு அமேரிக்கால எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க,  நான் பண்ணறேன்…” என்றான் சதீஷ்.

“ம்ம்… எங்களுக்கு இப்ப அமெரிக்கால இருந்து ஒரு பெரிய பிராஜக்ட் வந்திருக்கு… அதான் பண்ணிட்டு இருக்கோம்… எதாவது வேணும்னா சொல்லுறோம்…” என்ற விக்கி,

“சரி… புதுமணத் தம்பதிகள் எப்போ அமெரிக்கா கிளம்பறீங்க…” என்றான்.

“ஒரு மாசம் இங்கே தான் மச்சான்… கவிதாவோட விசா ரெடி பண்ணிட்டு இருக்கேன்… அது வந்ததும் பிளைட்ல பறந்திட வேண்டியது தான்… அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு தான் இந்தியா ரிட்டர்ன்…”

“ஓ… அதுக்குள்ளே அவங்க எக்ஸாமும் முடிஞ்சிரும்… லைப் நல்லா என்ஜாய் பண்ணுங்க, சரி மச்சி… ஹனிமூன் எல்லாம் எங்கே போறதுன்னு பிளேன் பண்ணிட்டியா… எங்கேன்னு மட்டும் சொல்லு… அதுக்கான ஸ்பான்சர்ஷிப், உங்க கல்யாணத்துக்கான எங்க கல்யாணப் பரிசு…” என்றான்.

“வாவ்… கிரேட் டா மச்சி… சூப்பர், நான் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லறேன்…” என்றான் சதீஷ் சந்தோஷத்துடன்.

“சரி… அந்த பிரேஸ்லட், செயின் எல்லாம் நம்ம மாப்பிள்ளைக்கு போட்டு விடு…” விக்கி கூற, ராஜீவ் அதை எடுத்து அணிவித்தான்.

அப்போது சதீஷின் வேறு சில நண்பர்கள் அறைக்கு வர அவர்களிடம் பாக்கிப் பொறுப்பை விட்டுவிட்டு விக்கியும் ராஜீவும் புறப்பட்டு வெளியே வந்தார்கள்.

“டேய் மச்சி… எங்கடா நம்மாளுங்களைக் காணோம்…” என்ற ராஜீவ் பார்வையை சுழற்ற வரவேற்பில் நின்றிருந்த வர்ஷூவும், தீபாவும் அவன் கண்ணில் விழுந்தனர்.

“வாவ்… பியூட்டிபுல்…” என்றவனின் விழிகளைத் தொடர்ந்து விக்கியின் கண்களும் அவன் பார்வையை வழி மொழிய கால்கள் அவளை நோக்கி நீங்கின. அவன் இமைகள், சிமிட்ட மறந்து புன்னகையுடன் நின்று கொண்டிருந்த பட்டர்பிளையின் வர்ண ஜாலத்தை கண்களால் பருகிக் கொண்டிருந்தன.

“பட்டர்பிளை…” அவனது உதடுகள் காதலோடு உச்சரித்த அந்த வார்த்தை அவள் காதில் மெல்லத் தீண்ட, திரும்பிப் பார்த்தாள்.

முதன் முறையாய் அவளை சேலையில் பார்க்கிறான்.

இளம் பச்சை நிற மைசூர் சில்க்கில் பச்சைக் கிளியாய் நின்றவளை கண்ட அவனது பிரமித்த பார்வையில் அவள் கன்னங்களில் இன்ஸ்டண்டாய் நாணத்தின் ரோஜாக்கள் மலர்ந்து அவள் முகத்தை மேலும் அழகாக்கியது.

ராஜீவின் கண்கள் தன்னையே ஆவலுடன் பார்ப்பதைக் கண்ட தீபா, “ஹேய்… வேத்ஸ், போதும் ஜொள்ளு விட்டது… உங்க ரெண்டு பேர் ஜொள்ளுல இந்த மண்டபமே மிதந்திடும் போலருக்கு… சந்தனம் எடுத்துகிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க…” என்றாள் மென்மையான குரலில்.

“என்னது வேத்ஸ் ஆ… அப்படின்னா…” என்றான் ராஜீவ் புரியாமல்.

“வேதாளத்தோட ஷார்ட் வேத்ஸ்… ஹூம், நல்லார்க்குல்ல…” தலையைக் குலுக்கியவளைக் கடுப்புடன் முறைத்தான்.

“ஏய் சில்வண்டு, அவங்கதான் அப்படி சொல்லுறாங்கன்னா, நீயுமா…”

“போங்க வேத்ஸ்… உங்க ஒரிஜினல் பேரை விட இதான் செமையா இருக்கு…” சிரித்தாள் அவள்.

“ஹூம் என்னமோ, கூப்பிட்டுப் போங்க…” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான். 

“விக்கி… என்ன இது, சந்தனத்தை எடுத்திட்டு அந்தப் பக்கம் நகருங்க… இப்படிப் பார்த்துட்டு நிக்கறீங்க… யாராவது பார்க்கப் போறாங்க…” என்றாள் வர்ஷூ அங்குமிங்கும் பார்வையை ஓட்டிக் கொண்டே.

“வாவ்… பட்டர்பிளை, சேலை உனக்கு அசத்தலா இருக்கு…” என்றான் அவன்.

“பட்டு சேலைக்குள் ஒரு பட்டாம்பூச்சி…

பார்ப்பவர் நெஞ்சைப் பறிக்குதடி…

பளிங்கு போல மின்னும் வண்ணம் கண்டு

பரவசத்தில் மனம் சிலிர்க்குதடி…”

அவனது பார்வையைத் தாங்க முடியாமல் நெளிந்தவள், “விக்கி… அந்தப் பக்கம் போங்க, யாராவது கவனிக்கப் போறாங்க…” என்றாள்.

“சரி… சரி, போயிடறேன்… நீ சேலைல ரொம்ப அழகா இருக்கே பட்டர்பிளை…”

“ம்ம்… தேங்க்ஸ், நீங்களும் இந்த டிரெஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்க…”

“ஹூம், அப்படியா…” என்று புன்னகையுடன் புருவத்தைத் தூக்கியவன் அவன் டிரஸ்ஸை சந்தோஷத்தோடு பார்த்தான். கரும்பச்சை வண்ண முழுக்கை ஷர்ட்டும் ராம்ராஜின் ஒட்டிக்கோ… கட்டிக்கோ வேஷ்டியும் அவனை அழகனாய் காட்டியது.

அப்போது அகிலா அவள் பெற்றோருடன் மண்டபத்துக்குள் வந்தாள்.

“ஏய்… அகி, ஏண்டி இவ்ளோ லேட்டு… வாங்கப்பா, அம்மா நல்லார்க்கீங்களா…” என்று அவர்களிடம் நலம் விசாரித்து வரவேற்று, “விக்கி… இவங்களை டிபன் சாப்பிட அழைச்சிட்டுப் போங்களேன்…” என்று அவர்களுக்கும் ஒரு வேலையைக் கொடுத்தாள் தீபா.

விக்கியும் ராஜீவும் அவர்களை அழைத்துச் செல்ல சற்று நின்ற அகிலாவின் தந்தை, “இவங்க யாரும்மா…” என்றார் தீபாவிடம்.

“அவங்க மாப்பிள்ளையோட பிரண்ட்ஸ் ப்பா… சென்னைல ஒரு ஐடி கம்பெனில வேலை செய்யுறாங்க… ரொம்ப நல்ல டைப்… ஏன், உங்களுக்குத் தெரியுமா…”

“ஓ… அதுக்கில்லம்மா, கல்யாணமாகாத பசங்க போல இருக்காங்க… பார்த்தா நல்ல குடும்பத்துப் பையன் போல தெரியுது… அதான் நம்ம குடும்பத்துப் பொண்ணுகளுக்குப் பார்க்கலாமான்னு கேட்டேன்…” என்றார். அவர் அப்படிக் கூறியதும் வர்ஷாவின் முகம் பியூஸ் போன பல்பைப் போல் ஆக, அதை கவனித்துக் கொண்டே தீபா அவரிடம் பேசி அனுப்பி வைத்தாள்.

“அப்பா… அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், நீங்க முதல்ல சாப்பிட்டு வாங்க…” என்றவள் அவரை அனுப்பி வைத்து விட்டு வர்ஷூவிடம் திரும்பினாள்.

“என்ன மேடம்,  உங்க முகத்துல இருந்த பிரைட்னெஸ் எல்லாம் எங்கே போச்சு… இப்ப உனக்கு ஒரு பீல் ஆச்சே… இதுக்குப் பேர்தான் லவ்… ரெண்டு பேரும் ப்ரபோஸ் பண்ணலையே ஒழிய அப்படியே காதல் கடல்ல நீந்துறீங்க…”

“ஏய்… ஏண்டி நீ வேற, அப்படி அவருக்கு என் மேல தோணி இருந்தா ப்ரபோஸ் பண்ணிருப்பாரே…”

“ஏன்… உனக்கு கூட தான் விக்கியைப் பிடிச்சிருக்கு… நீ ப்ரபோஸ் பண்ண வேண்டியது தானே…”

“அது வந்து… எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு தான், ஆனா நான் எப்படி…” என்று இழுத்தாள் அவள்.

“ஹூம்… பிடிச்சிருக்குல்ல, அப்ப ஒழுங்கு மரியாதையா உன் மனசுல உள்ளதை  அவர்கிட்டே ஓபனா சொல்லிடு… சொல்லாத காதல் சொதப்பலில் முடிஞ்சிட கூடாது… அப்புறம் வேற யாராவது லைனைக் கிராஸ் பண்ண பின்னாடிப் புலம்பி பிரயோசனம் இல்லை… சரி வா, நாம மேடைக்குப் போகலாம்…” என்றவள் அருகில் உள்ள பெண்ணிடம் சொல்லிவிட்டு நடந்தாள்.

சிறிது நேரத்தில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் மேடைக்கு வர, மந்திரம் ஓதி அனைவரும் வாழ்த்தி அட்சதை போட, கவிதாவின் கழுத்தில் சதீஷ் மூன்று முடிச்சுப் போட கல்யாணம் இனிதே நடந்தேறியது. அதற்குப் பிறகு சுற்றமும் நட்பும் வாழ்த்தி பரிசைக் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

மேடைக்கு முன்னில் ஓரமாய் தோழியருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் வர்ஷா. அவளது பார்வை அவ்வப்போது விக்கியைத் தேடி அவனைக் கண்டதும் சிறு புன்னகையுடன் மீண்டது. அவனும் அவள் பார்வை வட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தான். அவ்வப்போது பார்வையிலேயே சிறு சீண்டலும், புன்னகையுமாய் கழித்துக் கொண்டிருந்தனர்.

கல்யாண விருந்து முடிந்து ஒவ்வொருவரும் கிளம்பத் தொடங்க, தீபாவுக்கு மதியம் தான் ட்ரெயின் இருந்தது. ராஜீவும் ட்ரெயினில் போவதாக சொல்லவே அவர்கள் இருவரையும் ரயில்வே ஸ்டேஷனில் விடும் பொறுப்பு விக்கிக்கானது. ஷீலாவின் அப்பா வந்திருந்ததால் அவளும் அவருடன் சென்று விட்டாள். அகிலாவின் குடும்பம் கல்யாணம் முடிந்ததுமே சாப்பிட்டுக் கிளம்பி விட்டனர். வர்ஷாவை பேருந்து நிலையத்தில் விடுவதாக விக்கி கூறி இருந்தான். எனவே அவர்கள் நால்வரும் விடைபெற்றுக் கிளம்பினர்.

ரயில் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு ட்ரெயினுக்காய் காத்திருக்கத் தொடங்கினர்.

“டேய் மச்சி… வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரலாம் வா…” என்று விக்கியை அழைத்துக் கொண்டு போனான் ராஜீவ்.

“மச்சி… இதாண்டா நல்ல சந்தர்ப்பம்… உன் மனசுல உள்ளதை பட்டுன்னு உன் பட்டர்பிளை கிட்டே சொல்லிடு… லாஸ்ட்ல நான் பிரண்டா தான் பழகினேன்… உங்களை என் அண்ணன் மாதிரி நினைச்சேன்னு சொல்லுறது தான் இப்ப பொண்ணுங்களோட பாஷன்…”

“ம்ம்… சரிடா, நீயும் உன் சில்வண்டை பத்திரமா கூட்டிட்டுப் போ… அவளை இம்ப்ரெஸ் பண்ணறேன்னு எதையாவது பண்ணி வச்சு பேரைக் கெடுத்துக்காதே…” என்ற விக்கியின் கையைப் பற்றிக் கொண்டான் ராஜீவ்.

“என்ன இருந்தாலும் என் நண்பன்னு நிரூபிச்சுட்டியேடா… என் மேல உனக்கு எவ்ளோ அக்கறை… நான் பார்த்துக்கறேன், நீ கிளம்பு…” என்றான் கடுப்புடன். தீபாவும் அதையே தான் வர்ஷாவின் காதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

Advertisement