Advertisement

“என்னது… அவர் உங்களுக்கு பிரண்டா, வாட் எ பிளசன்ட் சர்ப்ரைஸ்…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தாள் ஷீலா.

“அட… நம்ம சென்னை மச்சான்ஸ் கல்யாணத்துக்கு இங்கேயே வந்துட்டாங்களா… சூப்பர், அப்ப மண்டபமே களை கட்டப் போகுது…” என்று சிரித்தாள்.

“ஆமா… நீங்க வர்ஷூ கூட வரலியா, முன்னாடியே வந்துட்டிங்களா…”

“நான், கவி ஊருக்குக் கிளம்பும் போதே கூட ஒட்டிகிட்டேன்… அகிலா பாமிலியோட காலைல வந்திருவா… உங்க ஜோடிப்புறாக்கள் மட்டும் தான் இன்னும் சற்று நேரத்தில் சேலம் ரயில் நிலையத்துக்கு வந்து சேருவார்கள்…” என்று அறிக்கை வாசித்தாள்.

“ஓ… வரட்டும், சரி… நாங்க முன்னாடி இருக்கோம்…” என்று அவர்களுக்குத் தேவையான விஷயத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் நகர,

“எங்கே ஓடுறீங்க… இருங்க, உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…” என்றாள் ஷீலு.

“என்னது முக்கியமான வேலையா… பந்தல் போடவோ, சமையல் செய்யவோ சொல்லிடாதிங்க அம்மணி… அப்புறம் இன்சூரன்ஸ் பண்ணாம கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு நாங்க பொறுப்பில்லை…” என்றான் ராஜீவ்.

“ஹையோ… மொக்கை போடாதிங்க, வர்ஷூவும், தீபுவும் வந்த ட்ரெய்ன் லேட் போலருக்கு… நைட் பதினோரு மணி ஆகிடுமாம், சேலம் ரீச் ஆக… நீங்க அவங்களை கூட்டிட்டு வர முடியுமா…”

“ஓ… அவ்ளோ தானா, இது வேலை இல்லை… எங்க கடமை மா… கண்டிப்பா கூட்டிட்டு வரோம்… ஆனா நாங்க வந்ததைப் பத்தி அவங்ககிட்ட சொல்லக் கூடாது… சஸ்பென்ஸா போயி நிக்கறோம்…” என்றான் ராஜீவ்.

“ஓகே… அப்புறம், அதே ட்ரெயின்ல தான் என் பாட்டியும் பெரிம்மாவும் அவங்க ரெண்டு பசங்களும் வராங்க… அவங்களையும் கூட்டிட்டு வந்திடுங்க….” என்றாள் ஷீலா. 

“என்னது… அவங்களுமா…” என்றவனின் முகம் காற்றுப் போன பலூனாய் மாற, அதைப் பார்த்து சிரித்த ஷீலா,

“ஹஹா… பயந்துட்டிங்களா, சும்மா…” என்று சொல்லி விட்டு வெளியேறினாள்.

இரவு நேரத்துக் குளிர் சில்லென்று மேனியை வருட விக்கியும், ராஜிவும் அவர்களது பிரியமானவளை சுமந்து வரும் ரயிலுக்காய் காத்திருந்தனர். ரயில் வரப் போகும் அறிவிப்பைத் தொடர்ந்து சில நிமிடங்களில் நீண்ட ஹாரன் ஒலிக்கத் தொடங்கி பெரிய இரும்புப் பெட்டிகளைத் தாங்கிய அந்த நீண்ட வாகனம் வளைந்து நெளிந்து வேகம் குறைத்து அமைதியானது.

பொலபொலவென்று புற்றீசல் போல அவசரமாய் உதிர்ந்தது மனிதக் கூட்டம்.

அதில் தாங்கள் தேடும் தேவதையின் முகம் தெரிகிறதா என எட்டிப் பார்த்துக் கொண்டு நின்றனர் இருவரும். ட்ரெயினில் இருந்து இறங்கிய வர்ஷாவும், தீபாவும் கண்களில் சிறு பதட்டத்துடன் யாரையோ தேடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்த விக்கியும், ராஜீவும் அவர்கள் கண்ணில் படாமல் வெளியேறி கார் பார்க்கிங்கை நோக்கி நகர்ந்தனர்.

“ஏய் தீபு… இந்தக் கவி நமக்கு வண்டி அனுப்பறேன்னு சொல்லி இருந்தா, அனுப்பிட்டாளான்னு தெரியலையே… ரொம்ப லேட் ஆகிடுச்சு, எனக்கு பயமா இருக்கு…” என்றாள் வர்ஷா.

“எதுக்கு வரு, கவலைப் படறே… நாம ரெண்டு பேர் இருக்கோம்… அப்புறம் கவி வண்டி அனுப்பறேன்னு சொல்லிட்டு அனுப்பாம இருப்பாளா… கண்டிப்பா அனுப்பிருப்பா, வா நாம வெளியே போயி பார்ப்போம்…” என்றாள் தீபா.

“எதுக்கும் அவளுக்கு கால் பண்ணி கேட்டுடலாம்…” என்ற வர்ஷா, கவிதாவின் எண்ணுக்கு அழைத்தாள். அவள் வெள்ளை நிற ஆடி கார் வெளியே அவர்களுக்காய் காத்திருக்கிறது என்று கூறவும் தான் அவளுக்கு சமாதானமானது. வெளியே செல்லும் வழி தேடி பார்வையைச் சுழற்ற, அதைக்  கண்டதும் வெளியேறி கார் பார்க்கிங்கை நோக்கி தயக்கத்துடன் நகர்ந்தனர்.

சில்லென்ற காற்று முகத்தில் மோதி கூந்தலைக் கலைக்க, பறந்த முடிகளை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே மறு கையில் பாகுடன் நடந்தாள் வர்ஷா. கார் பார்க்கிங்கை அடைந்தவர்கள், வெள்ளை நிற ஆடி காரைத் தேட அங்கே ஆடி காரே இல்லை. டாக்சி டிரைவர்கள் வண்டி வேண்டுமா என்று கேட்டுக் கொண்டே இருக்க அவர்களைக் கடந்து அந்த ஏரியா முழுதும் பார்வையால் தேடியும் வெள்ளை நிற ஆடி காரைக் காணவில்லை.

கவிதாவை அலைபேசியில் அழைக்க அது சற்றும் இரக்கமே இல்லாமல், நாட் ரீச்சபிள் என்று கூறியது. மெதுவாய் ஏறத் தொடங்கிய டென்ஷனுடன், தெரியாத ஊரில் என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பமும் அவர்களின் இதயத்துடிப்பை அதிகமாக்க மெதுவாய் பிரஷர் ஏறத் தொடங்கியது.

“தீபு… அந்தப் பக்கி நமக்கு கார் வெயிட் பண்ணிட்டு இருக்குன்னு சொன்னா… இங்கே அந்த மாதிரிக் காரே காணோமே, அவ நம்பர் வேற நாட் ரீச்சபிள் வேற வருது… இப்ப என்னடி பண்ணுவோம்…” கலக்கத்துடன் கேட்டாள் வர்ஷா.

“எனக்கும் அதாண்டி புரியலை… எதாவது டாக்ஸியில் ஏறிப் போயிடலாம்னாலும் பயமா இருக்கே… அம்மா வேற கால் பண்ணி வீட்டுக்குப் போயி சேர்ந்துட்டிங்களான்னு கேட்டாங்க… நான் வெளியே கார் ஏறப் போறோம்னு சொல்லிட்டேன்… எனக்கும் பயமா இருக்கு…” என்றாள் தீபா. ரயில் நிலையம் மெதுவாய் வெறிச்சோடத் தொடங்க, அவர்கள் என்ன செய்வதென்ற குழப்பத்துடன் ஷீலாவின் எண்ணுக்கும் அழைத்துப் பார்த்தனர். அதும் நாட் ரீச்சபிள் வரவே, குழம்பிப் போயினர்.

“ஒருவேளை… அந்த கார் டிரைவர் எங்காவது போயிருப்பானோ… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்…” என்றாள் தீபா. அப்போது வர்ஷாவின் அலைபேசி சிணுங்க, அதில் ஒளிர்ந்த விக்கியின் எண்ணைக் கண்டதும் சிறு சமாதானத்துடன், காதுக்குக் கொடுத்தாள்.

“ஹலோ விக்கி…”

“ஹாய் பட்டர்பிளை… கவிதா வீட்டுக்கு நல்லபடியா போயி சேர்ந்துட்டிங்களா…”

இ…இல்ல… ட்ரெயின் லேட்… இங்கே ரயில்வே ஸ்டேஷன்ல நின்னுட்டு இருக்கோம்… அந்தப் பிசாசு கார் அனுப்பி இருக்கேன்னு சொன்னா… ஆனா காரைக் காணோம், அவளைக் கூப்பிட்டா நாட் ரீச்சபிள் வருது… என்ன பண்ணுறதுன்னு தெரியலை… ஸ்டேஷனே காலியாகத் தொடங்கிருச்சு… எங்களுக்கு பயமா இருக்கு…” என்றவள் அழுது விடுவாள் போலத் தோன்றியது.

“அய்யய்யோ… என்ன வர்ஷூ சொல்லற, இந்த ராத்திரி நேரத்துல ரெண்டு பேரும் தனியா நின்னுட்டு இருக்கிங்களா… டாக்சிக்காரங்களை நம்பி ஏறவும் முடியாதே… அச்சச்சோ, இப்போ என்ன பண்ணப் போறீங்க…”

“எங்களுக்கும் அதான் தெரியலை விக்கி… உனக்கு யாரையாவது சேலத்துல தெரியுமா… எதாவது ஹெல்ப் பண்ண முடியுமா…” என்றாள் பரிதாபமாக.

“ஹூம்…” என்று யோசித்தவன், “சரி நீங்க அங்கேயே இருங்க… நான் எதாவது ஏற்பாடு பண்ணறேன், பயப்படாத… நான் இருக்கேன்…”

“ம்ம்… சரி விக்கி, சீக்கிரம் ஏதாவது பண்ணு…” என்றவள் சற்று நிம்மதியுடன் அலைபேசியை வைத்தாள்.  

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்களின் முன்னில் ஒரு வெண்ணிற ஆடி கார் வந்து நிற்க, அதில் இருந்து ஸ்டைலாய் இறங்கிய விக்ரம், ராஜீவைக் கண்டு திகைத்தாள் வர்ஷா.

“ஹே… விக்கி, நீங்களா…” என்றவளின் கண்கள் விரிந்து கொள்ள, சிறகு விரித்த அந்த விழிகளை ஆசையுடன் பார்த்தான் விக்கி.

“விழி சிறகை விரிக்காதே பெண்ணே

அதில் பறக்கத் தொடங்குவது என் மனம்……”

“நானே தான்… நீ கூப்பிட்டா அடுத்த குரலுக்கு வந்து நிப்பன்ல…” என்றான் புன்னகையுடன்.

“நீங்க எப்படி இங்கே… அப்போ இங்கிருந்து தான் ஒண்ணும் தெரியாத மாதிரி எனக்குக் கால் பண்ணியா… உன்னை…” என்றவள் அவனை அடிக்கப் போக,

“அம்மா தாயே… இங்கே நாங்களும் இருக்கோம்… மறந்துடாதிங்க…” என்றான் ஓரமாய் தள்ளி நின்ற ராஜீவ் பெருமூச்சுடன்.

அவனிடம் தீபா, “ஏண்ணா… எதுக்கு இப்படி பெருமூச்சு விடறீங்க…” என்றாள்.

“ஏய் தீபு… என்னை நீ அண்ணான்னு கூப்பிடாதேன்னு சொல்லி இருக்கேன்ல…”

“இது நீங்க சொல்லுற போல அய்யங்கார் அண்ணா தான், பயப்படாதீங்க…” என்றாள் அவள் சிறு நாணப் புன்னகையுடன்.

“ஹையோ… நிசமாவா சொல்லற…” என்றவன், ஆசையுடன் அவளிடம் சென்றான்.

“அய்யங்காரு வீட்டு அழகே…

அய்யங்காரு வீட்டு அழகே…”

அவளிடம் பாடதத் தொடங்க,

“டேய்… பப்ளிக் பிளேஸ்ல ராத்திரி  நேரத்துல என்ன டூயட் வேண்டிக் கிடக்கு… ஒழுங்கா வண்டில உக்காரு…” என்றான் விக்கி.

“ஹூக்கும்… அதானே, இவ்ளோ நேரமா இவங்களுக்கு இது பப்ளிக் பிளேஸ்னு தெரியலை… இப்போ தான் தெரிஞ்சிருக்கு… எனக்கு வில்லன் வெளியில இல்லை…” என்றவன் முனங்கிக் கொண்டே முன்னில் அமரப் போனான்.

“டேய்… பப்ளிக்கா பாட வேண்டாம்னு தான் சொன்னேன்… நீ பின்னாடி சீட்ல உக்கார்ந்து சில்வண்டு கிட்டே பாடினா யாரும் பார்க்க மாட்டாங்க…” என்றான்.

“ஓஹோ… இப்ப நான் பின் சீட்டுல உக்காரணும்னு சொல்ல வர்ற… அதானே, போதுண்டா மச்சி… புரிஞ்சிடுச்சு…” என்றவன்,

“சில்வண்டு… நான் உன் பக்கத்துல உக்காரதுல உனக்கு ஏதும் அப்ஜெக்ஷன் இல்லையே….” என்றான்.

“என்னது சில்வண்டா…” என்ற தீபாவின் அருகில் ராஜீவ் அமர, வர்ஷா அவர்கள் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே விக்கியின் அருகில் அமர்ந்தாள். அவளைப் புன்னகையுடன் நோக்கிக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான் விக்கி.

“யாருமே வைக்காத ஒரு செல்லப் பேரை உனக்கு வைக்கணும்னு நினைச்சேன்… அதான், சில்ல்ல் வண்டுனு வச்சேன்… அழகாருக்கா…” என்றான் ராஜீவ்.

“ஹூக்கும்… வேற பேரே கிடைக்கலையாக்கும்… உங்களை நான், அய்யங்கார் அண்ணாவை கான்சல் பண்ணிட்டு நார்மல் அண்ணாவே சொல்லி கூப்பிடலாமான்னு யோசிக்குறேன்…” என்றாள் அவள்.

“அய்யய்யோ… எனக்கு தாடி வச்சா அழகாவே இருக்காதே…” என்றான் அவன்.

“என்னது… தாடி வைக்கப் போறிங்களா, ஏன்…” என்றாள் அவள் புரியாமல்.

“பின்ன நீ என்னை அண்ணான்னு கூப்பிட்டா இந்தப் பிஞ்சு மனசு வெம்பிப் போயி தாடி வளர்த்திட்டு அலையுமே… அந்தக் கொடுமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு, இதெல்லாம் இந்த உலகம் தாங்குமா…” அவன் சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, சிரித்தனர் தீபாவும், வர்ஷாவும்.

         

“ஆமாம்… நீங்க இன்னைக்கு இங்கே வரப் போறதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை…” என்றாள் சற்று கோபத்துடன் வர்ஷா.

“சொல்லி இருந்தா இந்த சர்ப்ரைஸ் இருந்திருக்காதே… நான் சதீஷோட இன்விடேஷன் பார்த்த பின்னால தான் இதைத் தீர்மானிச்சேன்… சரி கொஞ்ச நேரம் நீங்க என்ன பண்ணுவிங்கன்னு பார்க்க தான் மறைஞ்சிருந்தோம்…” என்று கண்ணைச் சிமிட்டி அவன் சிரிக்க வழக்கம் போல அந்தக் கன்னத்துக் குழியில் சுருண்டு விழுந்தாள் வர்ஷா. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோபமாய் வைத்துக் கொண்டாள்.

“இந்த ராத்திரி நேரத்துல தெரியாத ஊர்ல என்ன பண்ணப் போறோம்னு தெரியாம எவ்ளோ தவிச்சுப் போயிட்டோம் தெரியுமா… நீங்க தான் எங்களைக் கூட்டிட்டுப் போக வந்திருக்கீங்கனு கவிதாவும் சொல்லலை… எப்பப் பார்த்தாலும் உங்களுக்கு விளையாட்டு தான்…” அவளது குரல் கலங்கி இருந்தது.

அதைக் கண்டு விக்கி எதோ சொல்லப் போக, “ஹேய் வரு… விடுடி… அவங்க எதோ நமக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு விளையாடி இருக்காங்க…” என்றாள் தீபா.

“எதெதுல தான் விளையாடறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம்… நாம தனியா இருக்கோம்… எப்படி பயந்து போனோம்னு உனக்கும் தெரியும்ல, சரி சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சது கூட ஓகே… இங்கயே காத்திருந்தா கூட நமக்கு சர்ப்ரைஸ் தானே… எதுக்கு நம்ம கண்ணுல படாம ஒளிஞ்சு நின்னு விளையாட்டுக் காட்டணும்…” என்றாள் குரல் கமற.

“ஹேய் பட்டர்பிளை… என்ன இது, நீ இவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்க… இந்த வேதாளம் இப்படிப் பண்ணலாம்னு சொன்ன போதே நான் இதெல்லாம் வேண்டாம்னு தான் சொன்னேன்… அவன் தான் இதெல்லாம் ஒரு திரில் தானேனு சொல்லி செய்ய வச்சுட்டான்… சாரிம்மா…” என்று சமாதானப் படுத்த,

“அடப் பாவி, நான் எப்படா உன்கிட்டே இப்படி செய்யலாம்னு சொன்னேன்… எல்லாத்தையும் நீயே பண்ணிட்டு பழியை என் மேல தூக்கிப் போடறியா… நட்பின் இலக்கணம் டா நீ…” என்று மனதுக்குள் பேசிக் கொண்டிருந்தான் ராஜீவ்.

“ஓ… இந்த வேதாளம் தான் இப்படில்லாம் செய்யலாம்னு சொல்லுச்சா… நினைச்சேன்…” என்று ராஜீவை முறைத்தவள், “இனி இப்படில்லாம் விளையாடாதீங்க விக்கி… நான் ரொம்ப பயந்துட்டேன்…” என்றாள்.

“ம்ம்… சரி, தீபா பாரு… எவ்ளோ கூலா இருக்கா… நீ பயந்து நிக்கறேன்னு தான் நான் உனக்கு கால் பண்ணினேன்… என்னம்மா… இதுக்கெல்லாம் பீல் பண்ணிட்டு…” என்றான் விக்கி.

“ஆஹா… நண்பனைப் போட்டுத் தாக்கிட்டு தான் உனக்கு ரொமான்ஸ் வேண்டிக் கிடக்காடா மச்சி… ம்ம், அனுபவி… ராஜா, அனுபவி…” என வாய்க்குள் சொல்லிக் கொண்டான் ராஜீவ்.

தீபா தன்னையே சிரிப்புடன் பார்ப்பதை உணர்ந்தவன், “என்ன…” என்பதுபோல் தலையாட்டினான்.

“வேதாளம்… யூ… ஹஹஹா…” என்று அவள் சிரிக்க, “அச்சோ… என் ஆளு முன்னாடி மானத்தை வாங்கிட்டாங்களே…” என்று பீல் பண்ணத் தொடங்கினான். பிறகு ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டே கல்யாண மண்டபத்தை அடைந்தனர்.

கன்னத்துக் குழியினிலே

காந்தம் எதற்கு வைத்தாயடா…

கடக்க முடியாமல் கவர்ந்து என்னை

உன் வசமாய் இழுக்குதடா…

இறகில்லாமல் சிறகை விரித்தவளே

இமைகளில் நான் தொலைகின்றேன்…

இருந்தும் விழி மூடாமல்

இதயம் திறந்து அழைக்கின்றேன்…

Advertisement