Advertisement

இதயம் – 8

சஞ்சயுடன் தனியாக காரில் செல்வதற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் ரேணுகா சொன்னதற்கு ஒத்துக் கொண்டாள் ஹர்ஷா. தெரியாத ஏதோ ஒரு ஆட்டோக்காரனை விட தெரிந்த இந்த ஹிட்லர் மேல் என நினைத்து தன் பேகுடன் கிளம்பினாள்.

“டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்…” என்று மாடிக்கு சென்ற சஞ்சய், ஒரு டைட் டீஷர்ட்டும், ஜீன்ஸும் அணிந்து காஷுவலாய் இறங்கி வந்தான். ஜிம்முக்கு சென்று முறுக்கேறிய புஜங்கள் எடுப்பாய் தெரிய கம்பீரமாய் இருந்தான்.

எப்போதும் ஆபீஸ் உடையிலேயே அவனைக் கண்டவளுக்கு இது வித்தியாசமாய் இருந்தது. தயக்கத்துடன் ஏறிட்டாலும் அவனது உடையின் மீதுள்ள ரசனையை மெச்சிக் கொண்டாள்.

அவளிடம் கம்பீரமாய் நிமிர்ந்தவன், “கிளம்பலாமா…” என்றான்.

“ம்ம்…” தலையாட்டினாலும் அவளுக்கு சற்று பதட்டமாகவே இருந்தது.

போர்டிகோவில் இருந்த காரை ஸ்டார்ட் செய்து வந்து அவன் வாசலில் நிறுத்த பின்னால் ஏறப் போனவளைத் தடுத்தார் ரேணுகா.

“ஹர்ஷூ… சஞ்சுவுக்குப் பின்னால் ஏறினா பிடிக்காது, நீ முன்னாடியே உக்கார்ந்துக்கோ…” என்றார். அவள் திகைப்புடன் நோக்க, சஞ்சு எரிச்சலாய் தாயை நோக்கினான்.

“இந்த அம்மாவுக்கு எப்பவும் ஓவர் ஸ்மார்ட் ஆகறதே வேலை… இவங்களை என் பக்கத்துல நான் உக்கார சொன்னேன்னு இவளை முன்னாடி உக்கார சொல்லுறாங்களா…” என்று நினைத்துக் கொண்டு கடுப்புடன் அமர்ந்திருக்க,

“என்ன சஞ்சு… நான் சொன்னது சரிதானே, நீ வண்டி ஓட்டும்போது நாங்க பின்னாடி உக்கார்ந்தா, டிரைவர் போல தோணும் தானே உனக்கு…” என்றார் ரேணுகா புன்னகையுடன்.

“ம்ம்… ஆ…மாம்மா… ஆமாம், நீங்க சொல்லறது ரொம்ப சரி…” வழிந்தவன், “நீங்க முன்னாடியே உக்காருங்க…” என்று முன்னில் கதவைத் திறந்து விட்டான்.

ஹர்ஷா தயக்கத்துடன் முன்னில் அமர்ந்து கொண்டாள். கருப்பு நிற பஜேரோவில் கம்பீரமாய் அவன் குதிரை போல் அமர்ந்திருக்க, அருகில் ஜோடியாய் அமர்ந்திருப்பது அவளுக்கு சங்கோஜமாய் இருந்தது. அவர்கள் இருவரையும் அருகருகில் கண்ட ரேணுகாவிற்கோ மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

புன்னகையுடன் அவர் கையசைக்க, வண்டியைக் கிளப்பினான் சஞ்சய்.

வெளியே ஹோவெனப் பெய்து கொண்டிருந்த மழையும், அவ்வப்போது கடந்து செல்லும் வாகனங்களின் வெளிச்சமும் மட்டுமே. ஹர்ஷாவின் பார்வை முன்னில் சாலையில் பதிந்திருக்க தப்பித் தவறிக் கூட அவன் பக்கம் திரும்பவில்லை.

ஸ்டீயரிங்கை லாவகமாய் திருப்பியவன், அவள் அட்டென்ஷனில் அமர்ந்திருப்பதைக் கண்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டான். காருக்குள் நிலவிய மௌனம் அவனுக்கும் மூச்சு முட்ட மெலிதாய் இளையராஜாவின் மெல்லிசையை இசைக்க விட்டான்.

மௌனமான நேரம்… இள மனதில் என்ன பாரம்…

இது மௌனமான நேரம்… இள மனதில் என்ன பாரம்…

மனதில் ஓசைகள்… இதழில் மௌனங்கள்…

ஏனென்று கேளுங்கள்…

வாணி ஜெயராமின் குரல் உருகிக் கொண்டிருந்தது.

அந்த சிச்சுவேஷனுகுத் தகுந்த போல் பாடலும் ஒலிக்க, ஹர்ஷா அவஸ்தையாய் நெளிந்தாள். அதைக் கண்டவனுக்கு உற்சாகம் தோன்ற அவளை சீண்டினான்.

“மௌன விரதமோ…”

அவன் சொன்னது காதில் விழுந்தும் உண்மையில் அவன் தான் பேசினானா என சந்தேகத்தில் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் அவள்.

“மௌன விரதமான்னு கேட்டேன்…” அழுத்தமாய் கேட்டான்.

“வ…வந்து… இ…இல்லை…” அவள் வார்த்தைகள் தந்தியடிக்க,

“இவள் எதற்கு இப்படி டைப்படிக்கிறாள்…” என யோசித்தான் அவன்.

“எதுக்கு இப்ப இந்தப் பதட்டம்… நான் என்ன புலியா, சிங்கமா…”

“புலி, சிங்கத்தைக் கூட கணக்குல எடுத்துக்கலாம்… நீ ஹிட்லராச்சே… உன் கிட்ட பேசி யாரு வாங்கிக் கட்டிக்கறது…” மனதுக்குள் நினைத்தாலும் அமைதியாய் இருந்தாள்.

“நான் என்ன உங்க டிரைவரா… ஏதோ வண்டி ஓட்டுறது மட்டும் தான் என் வேலைங்கற போல அமைதியா இருக்கீங்க…”

“அ…ய்யய்யோ, அப்படில்லாம் இல்லை… எ… என்ன பேசுறது…”

“எதாவது பேசுங்க… ரொம்ப நல்லாப் பேசுவீங்கன்னு அம்மா சொன்னாங்க…”

“அது வந்து… என்ன பேசறதுன்னு தெரியலை…”

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நாய்க்குட்டி ஒன்று மழையில் நனைந்து கொண்டே ரோட்டைக் கடக்கப் போனது. அதைக் கண்ட சஞ்சய், சடன் பிரேக்கிட, அருகில் வந்து கிறீச்சிட்ட காரைக் கண்டு பயந்து போன நாய்க்குட்டி மழையில் நடுங்கிக் கொண்டு நின்றிருந்தது.

நின்ற வண்டியில் இருந்து பாய்ந்து இறங்கினாள் ஹர்ஷா.

“ஒரு நிமிஷம்… வந்திடறேன்…”

“ஏய்… எங்க போறே… நில்லு…” பதறிக் கொண்டே சஞ்சய் பார்த்துக் கொண்டிருந்தான். நாய்க் குட்டியைக் கையில் எடுத்தவள், தெருவோரமாய் சாத்தியிருந்த கடைகளை நோக்கிப் போனாள். அங்கே ஒரு காய்கறிக் கடையின் முன்னில் இருந்த சாக்கு ஒன்றில் நாய்க்குட்டியைப் படுக்க வைத்தாள். அங்கு மழை நீர் விழாததால் நாய்க்குட்டி க்கூம்… க்கூம்… என முனங்கிக் கொண்டே அதில் படுத்துக் கொண்டது.

சற்றுத் தள்ளி ஒரு ஆள் அமர்ந்து அழுது கொண்டிருக்க அவனைக் கண்டவள் திகைத்தாள். அதற்குள் சஞ்சய் காரை எடுத்துக் கொண்டு அங்கே வந்திருந்தான்.

“நீ… நீங்க தானே மனைவி இறந்துட்டாங்கன்னு பணம் கேட்டு வந்திங்க… அடக்கம் பண்ணிட்டிங்களா…” என்றாள் அவனிடம் சென்று. அவளை ஏறிட்டவன் அடையாளம் கண்டு கதறினான்.

“பண்ணிட்டேன் தாயி… நான் காசுக்காக ஒவ்வொருத்தர் கிட்டயும் அலைஞ்சிட்டு இருக்கும் போது பொணமா கிடந்தவ பக்கத்துல யாருமில்லாம நாய்ங்க கொதறிப் போட்டுடுச்சு… இந்தப் பக்கமா வந்தவங்க யாரோ தொரத்தி விட்டுருக்காங்க… என் பொண்டாட்டி செத்தும் அவ பொணத்துக்கு கூட என்னால மரியாதை செய்ய முடியல…” என்றவன் கதறி அழுதான்.

அதைக் கண்டு அவளுக்கு வேதனையாய் இருந்தது.

“அழாதீங்க… நீங்க ஏன் மழைல இங்க உக்கார்ந்து அழறீங்க… வீட்டுக்குப் போகலையா…”

“வீடென்ன தாயி வீடு… அன்னாடங்காச்சிங்க நாங்க… இந்த ரோட்டோரம் தான் எங்களுக்கு வீடு… துணையா இருந்தவளையும் தொலைச்சுட்டனே… இனி என்ன பண்ணப் போறேன்…” மீண்டும் அழத் தொடங்கினான் அவன்.

“சரி.. அழுகாதீங்க, இந்தாங்க… ஏதாவது வாங்கி சாப்பிடுங்க…” என்று பாகில் இருந்து நூறு ரூபாயை எடுத்து அவள் நீட்டினாள்.

“வேண்டாம் தாயி… என் பொண்டாட்டி பொணத்தை அடக்கம் பண்ணுறதுக்கு தான் உதவி கேட்டு வந்தேன்… நான் பிச்சைக்காரன் இல்லை… இனி எதுக்கு இந்தப் பணம், அதுக்கு தந்ததே போதும்…” மறுத்தவன், எழுந்து மழையில் நனைந்து கொண்டே எங்கோ நடந்து சென்றான். 

காரில் இருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சய்க்கு வருத்தமாய் இருந்தது. அவனுக்கு வேண்டிய நேரத்தில் உதவி செய்யாமல் விட்டதன் குற்றவுணர்ச்சி அவனுக்கு வேதனையைக் கொடுத்தது. அவனையும் எல்லாரையும் போல் சந்தேகப்பட்டு ஒரு பாவத்துக்குக் காரணமாகி விட்டோமே என்று மனது குற்றப் படுத்தியது.

யோசித்துக் கொண்டிருந்தவனை, ஹர்ஷாவின் குரல் கலைத்தது.

“என் டிரஸ் எல்லாம் நனைஞ்சிருச்சு… காரில் ஏறினா சீட் நனைஞ்சிருச்சுன்னு திட்டுவிங்க… நான் ஆட்டோல போயிடட்டுமா…” நனைந்த சுரிதார் உடலில் ஒட்டிப் பிடித்திருக்க, தலையிலும் முகத்திலும் இருந்து மழை நீர் சொட்ட நின்று கொண்டிருந்தவளின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், அவனை ஓங்கி அடித்தது போலத் தோன்றியது.

“யாருக்கு எந்த பிரச்னை என்றாலும் உனக்கு உன் காரியம் மட்டும் தானே…” குற்றப் படுத்துவது போலத் தோன்றியது.

“ஹர்ஷா… முதல்ல கார்ல ஏறு…” அவனது வார்த்தைகள் வலியோடு ஒலித்தது.

அது அவளுக்குப் புரிந்தாலும் புரியாதது போல் கேட்டாள்.

“இல்லை… நான் ஏறினா சீட்டெல்லாம் நனைஞ்சிடுமே…”

“பரவாயில்லை… காய வச்சுக்கலாம், நீ மழைல நிக்காம கார்ல ஏறு…” அவன் முதன் முதலாய் அவளைப் பெயர் சொல்லி அழைத்ததோடு அல்லாமல் அக்கறையோடு ஒருமையிலும் அழைத்தது அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.

அவள் காரில் அமர்ந்ததும், ஒரு டவலை எடுத்து நீட்டினான். அவளது வீட்டை நோக்கி வண்டியை விடத் தொடங்கியவன் அமைதியாய் இருந்தான். டவலால் துடைத்துக் கொண்டே அவனை ஓரக்கண்ணால் பார்த்தவளுக்கு அவன் எதோ வருத்தத்துடன் யோசித்துக் கொண்டிருப்பது புரிந்தது.

அதன் காரணம் தெரிந்திருந்ததால் குனிந்து கொண்டே, “மௌன விரதமோ…” என்றாள். சட்டென்று அவன் அவளை நிமிர்ந்து பார்க்க, “மௌன விரதமான்னு கேட்டேன்…” என்றவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அதைக் கேட்டதும் மழை தீர்ந்த வானம் போல மனதில் குழப்பம் மறைய, பளிச்சென்று உதட்டில் ஒரு மின்னல் புன்னகை எட்டிப் பார்த்தது. அந்த மின்னல் அவள் கண்களில் பளிச்சிட, அவனை ஹிட்லர் போல் அல்லாமல் ஹீரோவாய் தோன்றியது அவளுக்கு.

“கார்கால இருளில்

பளீரிடும் மின்னலாய்

உன் ஒற்றைப் புன்னகையில்

என் மனதில் மின்னி மறைகிறாய்…..”

“ச.. சாரி ஹர்ஷா…”

“எதுக்கு…” புன்னகையுடன் கேட்டவளை கனிவோடு நோக்கினான் அவன்.

“எல்லாத்துக்கும்… முக்கியமா என் கண்ணைத் திறந்ததுக்கு…” சொல்லிக் கொண்டே அவளை நோக்கி சிரித்தவனின் சிரிப்பில் தன் இதயம் மெல்ல தொலைந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள் அவள்.

“அச்சச்சோ… அப்படின்னா இவ்ளோ நேரம் கண்ணை மூடிகிட்டா வண்டிய ஓட்டினீங்க…” கிண்டலாய் கேட்டவளை ஆச்சர்யமாய் பார்த்தான் அவன்.

“என்ன அப்படிப் பாக்குறீங்க…” என்றாள் அவள் கூச்சத்துடன் குனிந்து கொண்டே.

“இல்ல… நீ இப்படில்லாம் கூடப் பேசுவியான்னு பார்த்தேன்…”

“ம்ம்… மறந்துட்டேன் தான், உங்களைப் போல… இப்ப நினைவு வந்திடுச்சு…”

“என்னைப் போலவா…” என்றவன் யோசிக்க அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தது.

அவன் உதடுகளில் ஒரு புன்முறுவல் பூக்க, அதற்குப் பிறகு அவர்களைப் பற்றி பொதுவாய் பேசிக் கொண்டே அந்தப் பயணம் அமைந்தது. ஹர்ஷாவின் வீட்டில் வண்டியை நிறுத்தியபோது அவனுக்கு எதோ பெரிய சுமை இறங்கியது போல மனசு லேசாய் இருந்தது. இத்தனை நாள் தான் பிடித்து வைத்துக் கொண்டிருந்த கர்வமும் திமிரும் ஈகோவும் மற்ற எதுவும் தனக்கு இத்தனை சந்தோஷத்தைத் தரவில்லை என்பதையும் உணர்ந்திருந்தான். ஹர்ஷாவின் அன்னையைக் கண்டு நலம் விசாரித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.

********************

“வாவ்… என்னடா சொல்லற, நம்ம பிரண்டு சதீஷ் தான் கவிதாவோட மாப்பிள்ளையா…”

“ஆமாண்டா மச்சி… நீ அவனோட கல்யாண இன்விடேஷன் பார்க்கலையா…”

“இல்ல மச்சி… சரி இது நம்ம ஆளுங்களுக்குத் தெரியுமா…”

“என்னது… நம்ம ஆளுங்களா…”

“அடடடா… படுத்தாதடா… உன் பட்டர்பிளைக்கும், என் சில்வண்டுக்கும் தெரியுமான்னு கேட்டேன்…”

“கவிதாவுக்கே இது தெரியாதுடா மச்சி… நாம சஸ்பென்சா நம்ம நண்பன் கல்யாணத்துக்குப் போறோம்… அவங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறோம்…”

“வாவ்… சூப்பர் டா மச்சி… சரி நாம எப்ப கிளம்பறோம்…”

“நாம இன்னைக்கு மதியம் நம்ம கார்ல கிளம்பறோம்…” 

“அவங்கல்லாம் ட்ரெயின்ல வர்றதா சொன்னாங்களே… அவங்களையும் கூட்டிட்டுப் போகலாமா…”

“வேண்டாம்டா… அப்புறம் சஸ்பென்ஸ் போயிரும்… நான் மேரேஜ் முடிஞ்சதும் அப்படியே ஊருக்குப் போலாம்னு இருக்கேன்… அம்மா கூப்பிட்டே இருக்காங்க…”

“நானும் உன்னோட ஊருக்கு வர்றேன் டா…” 

“நோநோ… நீ திரும்ப சென்னை வந்திடு, அந்த அமெரிக்கன் ப்ரொஜெக்ட் வேற முடிச்சு அனுப்பியாகணும்னு மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்கு… நீ அப்புறம் ஊருக்குப் போயிக்கோ… இதுல இன்னொரு விஷயம் இருக்கு டா…”

“நீ என்னை கழற்றி விட்டுட்டு ஊருக்குப் போகணும்னு முடிவு பண்ணிட்டே… அதானே, வேறென்ன விஷயம்…”

“டேய் மச்சி… சேலத்துல கல்யாணம் முடிஞ்சதும் என்னோட பட்டர்பிளை கோவைல அவ வீட்டுக்குப் போறா… அவளை நம்ம வண்டிலயே கூட்டிட்டுப் போகப் போறேன்… அப்படியே என் மனசுல உள்ளதை அவகிட்டே சொல்லிடப் போறேன்… உன்னோட சில்வண்டு தனியா தான் திரும்பி சென்னை வருது… நீயும் துணைக்கு வந்தா அவளுக்கு சந்தோஷமா இருக்கும்ல டா… உன் ஆளோட நீ சந்தோஷமா இருக்கட்டும்னு நினைச்சு சொன்னா ரொம்ப தான் பண்ணறே…”

“யாரு நீ… என்னோட சந்தோஷத்துக்கு, ஹூம்… பக்காவா பிளேன் பண்ணிட்டு என்கிட்ட சொல்லுறதைப் பாரு… என் சில்வண்டுக்கு சந்தோஷமா இருக்குமோ இல்லியோ… உன்னோட சந்தோசம் இப்பவே மூஞ்சில வழியுது… துடைச்சுகிட்டு கிளம்பற வழியைப் பாரு… நான் கட்டிங் போயிட்டு வந்திடறேன்…”

“ம்ம்… சரி டா மச்சி…” என்றவன், பல கற்பனைகளுடன் சேலம் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். மதியம் கிளம்பியவர்கள் மாலையில் கல்யாண மண்டபத்தை  அடைந்தனர்.

கவிதாவின் மாப்பிள்ளை சதீஷ் அவர்களுடன் கல்லூரியில் ஒன்றாய் படித்தவன். படித்து முடித்து அமெரிக்காவில் வேலை கிடைக்கவே அங்கே சென்று விட்டான். இப்போது கல்லூரி நண்பர்கள் என்ற முறையில் இவர்களை அழைத்திருந்தான்.

சதீஷூடன் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு கவிதாவைக் காண மணமகள் அறைக்கு சென்றனர்.

அவர்களைக் கண்டு திகைத்த கவிதா, “அட நீங்களா… நீங்க ரிசப்ஷன்க்கு தான் வருவீங்கன்னு வர்ஷூவும், தீபுவும் சொன்னாங்க… இப்ப கல்யாணத்துக்கே வந்துட்டிங்களே… ரொம்ப தேங்க்ஸ்…” சிரித்தாள்.

“நாங்க ஒண்ணும் உன் கல்யாணத்துக்கு வரலை… சின்னப் பசங்களை ரிசப்ஷன் இன்விடேஷன் கொடுத்து ஏமாத்திட்டேல்ல… நாங்க எங்க நண்பன் சதீஷ் மேரேஜ்க்கு தான் வந்தோம்…” என்றதும் அவள் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

Advertisement