Advertisement

“அய்யா… நான் சொன்னதெல்லாம் உண்மைங்க… மழை வர்ற மாதிரி இருக்கு… எதாவது பண உதவி செய்தீங்கன்னா கிளம்பிருவேங்க…” அவன் கண்களில் அவசரம் தெரிந்தது.

“சரி… உன் வீடு எங்கே…”

“இங்கே காந்திபுரம் பக்கத்துலங்க…” 

“ஓ… சரி, முழு அட்ரஸ் சொல்லு…” என்றான் சஞ்சய்.

“சஞ்சு… ஏதாவது கொடுத்து அனுப்பிடேன் பா…” என்றார் ரேணுகா.

“இருங்கம்மா…” என்றவன், “நீ அட்ரஸ் சொல்லு…” என்றான்.

“அய்யா… நான் இங்கே வந்து மூணு நாள் தான் ஆச்சு… எனக்கு சரியா அட்ரஸ் சொல்லத் தெரியலை… அங்கே ஒரு தியேட்டர் பக்கத்துல…” என்றான்.

“அவனோட எதுக்கு வாக்குவாதம்… எதாவது கொடுத்து அனுப்பிடேன்…” என்றார் ரேணுகா. ஹர்ஷாவிற்கும் சஞ்சய் செய்வது சற்றும் பிடிக்கவில்லை என்பதை அவள் முகமே உணர்த்தியது.

“என்னம்மா நீங்க… இந்த மாதிரி எத்தனை பேர் பொய் சொல்லி ஏமாத்திட்டு திரியுறாங்க தெரியுமா… நீ எந்தத் தியேட்டர்னு சொல்லு…” என்றான் அவன்.

“என்னங்கையா… பொண்டாட்டி செத்துப் போன துக்கத்துல இருக்கேன், நீங்க போலீசு மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க… பெரிய வீட்டு ஆளுங்க… ஏதாவது உதவி பண்ணுவீங்கன்னு வந்தேன்… முடியும், முடியாதுன்னு சொல்லிடுங்க… நான் போகணும்… அங்கே பொணம் கிடக்கு…” என்றவனின் முகத்தில் கவலை தெரிந்தது.

“உன்னோட சரியான அட்ரஸ் சொல்லு… பணம் தரேன்…”

“ஐயோ… எனக்கு தான் சொல்லத் தெரியலைன்னு சொன்னனே… எனக்கு பணமே வேண்டாம் சார்…” என்றவன், சட்டென்று அழத் தொடங்கினான்.

அவன் கோபமாய் ஏதாவது சொல்வானோ என ஹர்ஷா நினைத்துக் கொண்டிருக்க, அவன் அழுவதைக் கண்ட பெண்கள் இருவருக்கும் சங்கடமாய் இருந்தது. சட்டென்று திரும்பியவன், “நான் வரேன் சார்…” என்று கூறிவிட்டு கேட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அதைக் கண்டு பெண்கள் அதிர்ந்து நிற்க, சஞ்சய் அதை எதிர்பார்க்கா விட்டாலும் அவன் செய்கைக்கு வருந்தவில்லை.

வெறும் கையோடு, கண்களில் வழியும் கண்ணீருடன் மன வேதனையுடன் அவன் திரும்பிச் சென்றது ஹர்ஷாவை உறுத்த, “ஏங்க, ஒரு நிமிஷம் நில்லுங்க…” என்றவள் அவன் அங்கேயே நிற்கவும், ஓடிச்சென்று அவள் பாகில் இருந்து இருநூறு ரூபாயை எடுத்து வந்து கொடுத்தாள்.

“ரொம்ப நன்றிம்மா…” என்றவன், “நான் வரேன்…” என்று வெளியே நடந்தான்.

“சஞ்சய்… என்ன இது… அவனுக்கு எதாவது கொடுத்து அனுப்பாம இத்தனை கேள்வி கேட்டுட்டு இருக்கே…”

“அம்மா… இதெல்லாம் வெறும் பித்தலாட்டம்… நம்பாதிங்க…”

“அப்படின்னா அவன் எதுக்கு அழுதான்… ஏதாவது கொடுத்திருக்கலாம் பாவம்…”

“அவன் ஒழுங்கா அட்ரஸ் சொல்லி இருந்தா நானே கொடுத்திருக்கப் போறேன்… அவனைப் பார்த்தா பொண்டாட்டி செத்தவன் மாதிரியா இருக்கான்… திருதிருன்னு முழிக்கறதுலயே அவன் சொல்லுறது பொய்னு தெரியலை… எல்லாம் நடிப்பு…”

“எனக்கு அவன் மூஞ்சியைப் பார்த்தா நடிக்குற போலத் தோணலை…”

“உங்களுக்கு எல்லாருமே நல்லவங்க தான்…”

“அப்படி பொய்யே சொல்லி இருந்தாலும் ஏதாவது கொடுக்குறதுல நமக்கு என்ன குறைஞ்சிடப் போகுது… எவ்ளோ செலவு பண்ணறோம்…” என்றார் ரேணுகா.

“அது வேற விஷயம்… இந்த மாதிரி பொய்யா நடிச்சு, வீடு தேடி வந்து நம்மை முட்டாள் ஆக்குறவங்களுக்கு ஹெல்ப் பண்ணனுமா என்பது தான் பிரச்னை… இதே அவன் நேரடியா சாப்பிட பணம் வேணும்னு கேட்டிருந்தா நான் கொடுத்திருக்கப் போறேன்… பொண்டாட்டி செத்துட்டான்னு சரடு விட்டா, சாவுன்னதும் நாம ஏதும் கேக்காம நம்பி பணம் கொடுத்திருவோம்னு கதை விட்டு… என்னவொரு பித்தலாட்டம், இதை நாம எப்படி என்கரேஜ் பண்ணறது…” என்றவனிடம் என்ன சொல்லுவதென்று புரியாமல் பார்த்தார் ரேணுகா.

“நம்மளோட தாராள மனசை மத்தவங்க ஏமாளியாக்க விடக் கூடாது…” என்றவன், ஹர்ஷாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, அவன் பக்கத்தையும் நியாயப்படுத்தி வீட்டுக்குள் நுழைந்தான்.

அதுவரை அமைதியாய் நின்றிருந்தவளிடம் ரேணுகா, “ஹர்ஷூம்மா… நீ ஏதும் தப்பா நினைச்சுக்காதே… அவன் சுபாவத்தைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே… யாரையுமே அவ்ளோ சீக்கிரம் நம்பிட மாட்டான்… எப்படியோ நீயாவது அந்தப் பணத்தைக் கொடுத்து அனுப்பினியே… அது வரைக்கும் எனக்கு சந்தோசம்…” என்றவர், “வா… உள்ள போவோம்…” என்று வீட்டுக்குள் நுழைந்தார். ஹர்ஷாவின் மனதில் சஞ்சய் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது சடசடவென்று மழையும் பெய்யத் தொடங்கியது.

“ஹர்ஷா… உள்ளே வா, மழைல வெளியே நிக்காதே…” உள்ளிருந்து ரேணுகாவின் குரல் கேட்டது.

“இத்தனை அன்பான அம்மாவுக்கு இப்படி ஒரு ஹிட்லர் மகன்… ஹூம்… அச்சச்சோ இந்நேரத்துல மழை பிடிச்சுகிச்சே… நான் வீட்டுக்குப் போறதுக்குள்ளே நின்னுடுமா…” கவலையோடு யோசித்துக் கொண்டே ரேணுகாவிடம் சென்றாள்.

“என்னம்மா… என்ன யோசிச்சுட்டு இருக்கே…”

“ஒண்ணுமில்லைமா… மணி வேற ஆறாகப் போகுது… இந்நேரத்துல மழை பிடிச்சுகிச்சே… நான் வீட்டுக்குப் கிளம்பறதுக்குள்ளே நின்னுட்டா பரவாயில்லைன்னு யோசிச்சேன்… அம்மா வேற பயந்துட்டே இருப்பாங்க…”

“ம்ம்… அதுக்கென்ன, கொஞ்ச நேரத்துல நின்னுடும் மா.. நீ வா…”

“ம்ம்…” என்றவள் தயக்கத்துடன் மழையைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள். நேரம் எட்டு ஆனாலும் மழை தான் நின்றபாடில்லை.

“அம்மா… டிபன் ரெடியாகிடுச்சு, சாப்பிட எடுத்து வைக்கட்டுமா…” என்றார் ராணி.

“சஞ்சு கிட்டே கேட்டு எடுத்து வச்சிரு… எனக்கு மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரி இருக்கு… ஒரு கிளாஸ் பால் மட்டும் குடு ராணி… ஹர்ஷா, நீ போயி சாப்பிடும்மா… மழைக்கு பசிக்கும்…”

“இல்லைம்மா, அம்மா எனக்காகக் காத்திட்டு இருப்பாங்க… நான் வீட்டுக்குப் போயி சாப்பிட்டுக்கறேன்…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது அலைபேசி ஒலித்தது. அதில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணை நோக்கிக் கொண்டே எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள் ஹர்ஷா.

“ஹலோ அம்மா, நான் கொஞ்ச நேரத்தில் மழை குறைஞ்சதும் வந்திடறேன்மா… நீங்க பயப்படாதீங்க… வாசலுக்கு வந்து நிக்காதிங்க, சாரல் அடிக்கப் போகுது… உள்ளேயே இருங்க…” குழந்தைக்கு சொல்லுவது போல் அன்னையிடம் அவள் சொல்வதைக் கேட்டு ரேணுகாவின் முகம் மலர்ந்தது.

“ஹர்ஷூ… மழை பலமாப் பெய்யுதே… நீ எப்படிம்மா வருவ… எங்காவது கரண்ட் கம்பி கீது அறுந்து விழுந்து கிடக்கப் போகுது, பார்த்து வாடா…” வருத்தத்துடன் வந்தது உமாவின் குரல்.

“நான் பத்திரமா வந்திடறேன்மா… மழை நிக்கலைன்னா ஆட்டோ பிடிச்சாவது வந்திருவேன்… நீங்க கவலைப்படாம பத்திரமா இருங்க, நான் வச்சிடறேன்…” என்றவள் போனை அணைத்துவிட்டாள்.

“என்ன ஹர்ஷூ… உன் அம்மா இவ்ளோ பயப்படுறாங்க… மழை நிக்கலைன்னா இன்னைக்கு நீ இங்கயே தங்கிட்டாப் போகுது…” என்றார் அவர் ஆவலுடன்.

“இ…இல்லம்மா… அம்மாவோட பயத்துக்கு காரணம் வேற… என் அப்பா ஒரு ஈபி லைன்மேன்… ஒரு நாள் ராத்திரி மழைல அறுந்து கிடந்த கரண்ட் லைனை சரி பண்ணப் போனபோது ஷாக் அடிச்சு போஸ்ட்ல இருந்து கீழே விழுந்து தலைல அடிபட்டு இறந்துட்டார்… அவர் அப்படிக் கிடந்த காட்சி இப்பவும் எங்க கண்ணை விட்டுப் போகலை… அதும் அப்பாவோட நினைவு நாள் இப்போ தானே முடிஞ்சது… அம்மா அதையே யோசிச்சிட்டு இருப்பாங்க… அதான், பயந்துக்கிறாங்க… ஒவ்வொருத்தரோட செயலுக்கும் ஒவ்வொரு அனுபவம் தான் காரணமாயிடுது…” என்றாள் ஹர்ஷா.

“ம்ம்… உண்மைதான் மா… என் பையனும் இப்படி எல்லாம் இல்லை, அவன் அப்பாவை அவரோட நெருங்கின நண்பர் ஒருத்தர் பிசினஸ்ல ஏமாத்தி, எல்லாத்தையும் எடுத்துகிட்டு, பெரிய கடங்காரனாக்கி, ஒண்ணும் இல்லாம நடுத்தெருவுல நிக்க வச்சுட்டார்… சொந்த பந்தங்களும் உதவிக்கு வரலை… நம்ம ஆளுங்கன்னு நம்பின எல்லாருமே கையை விரிச்சுட்டாங்க… கடன் தாங்க முடியாம எல்லாத்தையும் வித்தும் பத்தலை… அவங்கப்பா நண்பனோட நம்பிக்கை துரோகத்தை தாங்க முடியாம நெஞ்சு வலி வந்து இறந்துட்டார்…”

“ஓ… அதான், சார் எந்த விஷயத்தையும் நம்பாம எல்லாத்தையும் சந்தேகத்தோட பாக்குறாரா…” என்றாள் ஹர்ஷா.

“ம்ம்… அவரோட ஒரு சிநேகிதர் மட்டும் தான் சஞ்சுகிட்டே இப்படில்லாம் பண்ணுன்னு சொல்லிக் கொடுத்து அவனைக் கை பிடிச்சு வழி நடத்தினார்… இவனோட ஒவ்வொரு வளர்ச்சிக்குப் பின்னாலயும் அவரோட வழிகாட்டல் இருக்கு… அவர் இப்போ வெளிநாடு போயிருக்கார்… கொஞ்ச நாள்ல திரும்பி  வந்திருவார்… அவர் ஒருத்தரை மட்டும் தான் இவன் நம்புவான்… இவன் அப்பாவோட அனுபவம் போல, யாரும் ஏமாத்திடக் கூடாதுன்னு யோசிச்சு யோசிச்சு, இப்படி ஒரு சந்தேகப் பேர்வழி ஆகிட்டான்…” என்றார் ரேணுகா.

“ம்ம்… எல்லாம் அனுபவத்துல வர்ற பாடம் தான்மா… அவரும் புரிஞ்சுக்குவார், எல்லாமே நல்லதும் இல்லை… எல்லாமே கெட்டதும் இல்லை… ரெண்டும் இந்த பூமில கலந்து தான் இருக்கு… அதுனால எல்லாத்தையுமே கெட்டதா யோசிச்சுப் பார்க்கக் கூடாது… அதை அவரோட அனுபவம் தான் புரிய வைக்கணும்… சரிம்மா, மழை நிக்கற போலத் தெரியலை… நான் இப்படியே கிளம்பட்டா…”

“என்ன ஹர்ஷூ சொல்லற… அப்புறம் உடம்புக்கு முடியாமப் போகவா, அதெல்லாம் வேண்டாம்… நான் வேணும்னா உன் அம்மாகிட்டே இன்னைக்கு நீ இங்கே தங்கிக்க பர்மிஷன் கேக்கறேன்…”

“அச்சோ… வேண்டாம்மா… அம்மா என்னைப் பத்தி யோசிச்சுட்டே இருப்பாங்க… எனக்கும் அம்மாவைத் தனியா விட பயமாருக்கும்… ஹெல்மெட் போட்டுட்டு அப்படியே கிளம்பிடறேனே…”

“உதைக்கணும் உன்னை… அப்புறம் நாளைக்கு நீ படுத்துகிட்டா என்ன பண்ணுறது… அதெல்லாம் வேண்டாம்…” என்றார் ரேணு.

“ஆமா கண்ணு… எவ்ளோ தூரம் போகணும், அதும் ராத்திரி நேரம் வேற… இப்பவே மழை நல்லா வலுவாதான் பெய்யுது… உடம்புக்கு முடியாமப் போயிரும்…” என்றார் ராணி.

“அப்போ எப்படி போறதும்மா… மழை இன்னும் நிக்க மாட்டேங்குதே… ராணிம்மா… உங்களுக்கு ஏதாவது ஆட்டோ டிரைவர் நம்பர் தெரியுமா…” என்றாள் ஹர்ஷா.

“அச்சோ, இல்லையே கண்ணு… அப்படித் தெரிஞ்சாலும் ஆட்டோக்காரனை நம்பி இந்த ராத்திரில எப்படிப் போறது…” அவர்கள் பேசிக் கொண்டிருக்க கேட்டுக் கொண்டே சாப்பிடுவதற்காய் மாடியில் இருந்து இறங்கி வந்தான் சஞ்சய்.

அவன் வந்ததும் ஹர்ஷா மௌனமாய் ஹாலில் ஒதுங்கி நிற்க, ராணி சாப்பாட்டு மேசைக்கு நகர்ந்தார்.

“என்னம்மா… யாருக்கு ஆட்டோ, நீங்க சாப்டிங்களா…” என்றவன் சாப்பாட்டு மேசையில் அமர, ராணி தட்டை வைத்து சப்பாத்தி, குருமாவைப் பரிமாறினார்.

கவலையுடன் வெளியே மழையைப் பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவைக் கண்டு யோசித்த ரேணுகா, “நான் பால் மட்டும் குடிச்சுட்டேன் பா… மதியம் நிறைய சாப்பிட்டது ஒரு மாதிரி இருக்கு… சஞ்சு… நீ அம்மாக்கு ஒரு உதவி செய்வியா…” என்றார்.

“என்னம்மா இது, உதவின்னு எல்லாம் சொல்லுறீங்க… என்ன செய்யணும்னு சொல்லுங்கம்மா…” என்றான் அவன் சப்பாத்தியை குருமாவில் குழைத்து வாயில் வைத்துக் கொண்டே.

அவன் ரசித்து சாப்பிடுவதைக் கண்ட ரேணு, “ராணி… சஞ்சுக்கு இன்னொரு சப்பாத்தி வை…” என்றார்.

“இன்னைக்கு சப்பாத்தி ரொம்ப சாப்டா இருக்கு… குருமாவும் டேஸ்ட் நல்லாருக்கே…” என்றான்.

அதைக் கேட்டதும் முகம் மலர்ந்த ராணி, “நம்ம ஹர்ஷூ கண்ணு தான் இப்படி செய்ய சொல்லிக் கொடுத்துச்சு தம்பி…” என்றார்.

“என்னது ஹர்ஷூ கண்ணா… ஹூம் ராணிம்மா… உங்களையும் அவ மயக்கிட்டாளா, சரிதான்…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், “என்னம்மா… ஏதோ செய்யணும்னு சொன்னிங்க…” என்றான் அன்னையிடம்.

“சஞ்சு… மழை ரொம்ப பலமாப் பெய்யுது… ஹர்ஷாவோட அம்மா தனியா இருப்பாங்கன்னு அவ வீட்டுக்குப் போகணும்னு பிடிவாதமா நிக்குறா… ஸ்கூட்டில எப்படிப் போக முடியும்… அதான், உனக்கு தெரிஞ்ச ஆட்டோக்காரங்க யாராவது இருந்தா, வர சொல்லுறியா… அவளை ஆட்டோல அனுப்பிடலாம்…” என்றார் தயக்கத்துடன்.

ஒரு நிமிடம் யோசித்தவன், “இந்த ராத்திரில ஆட்டோ எல்லாம் வேண்டாம், நானே கார்ல கூட்டிட்டுப் போயி விட்டுடறேன்… அவங்களை வர சொல்லுங்க…” என்றவன் எழுந்து கை கழுக சென்றான். அவன் சொன்னதைக் கேட்ட ரேணுகா, ராணி இருவரின் முகமும் மலர்ந்தன.

அவனுக்குள்ளும் மனித நேயம் மரித்துவிடவில்லை என அவர்கள் நினைக்க, அவனது மனமோ, “இந்த நேரத்துல யார் கூடயாவது அனுப்பி வச்சு ஏதாவது ஆயிருச்சுன்னா அப்புறம் யார் பொறுப்பெடுத்துக்கறது… அதுக்கு நாமே கொண்டு போயி விட்டுட்டு வந்திடலாம், யாரையும் நம்ப முடியாது…” என நினைத்துக் கொண்டிருந்தது.

சுட்டெரிக்கும் கொடும் வெயிலா…

சுகமாய் நனைக்கும் குளிர் மழையா…

சில நேரம் சூரியனாய் கொதிக்கிறாய்…

சில நேரம் நிலவாய் குளிர்கிறாய்…

எட்டி நின்று வேடிக்கை பார்க்கும்

விட்டில் பூச்சியாய் நான்…

வெளிச்சம் தரும் ஆதவனோ…

வெப்பம் தரும் கதிரவனோ… உன்

வெளிச்சம் கண்டு நெருங்கும் முன்னே

வெப்பத்தால் பொசுக்குகிறாய்…

வெப்பத்தில் குளிர் காயும் முன்னே

இருட்டை எங்கும் பரப்புகிறாய்…

இரவா பகலா… நிலவா கதிரா… நீ…

அறியாமல் திகைக்கும் விட்டில் நான்…

Advertisement