Advertisement

இதயம் – 7

மீட்டிங் முடிந்து, மாலையில் வீடு திரும்பிய சஞ்சய், ராணியிடம் ஹர்ஷாவைப் பற்றிக் கேட்க, அவள் அன்று வரவில்லை எனத் தெரியவும், அன்னையின் அறைக்கு சென்றான்.

“அம்மா… மதியம் மாத்திரை போடலைன்னு ராணி சொன்னாங்க, கால் வேற வலிக்குதுனு சொன்னிங்களாமே… மலைக் கோவிலுக்குப் போக வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே.. சரி, இப்ப எப்படி இருக்கு… முதல்ல மாத்திரையைப் போடுங்க, உங்க நர்ஸ் எங்கே… இன்னைக்கு ஆளைக் காணோம்…” பேசிக் கொண்டே போனான். அவன் பேசியது காதில் விழுகாதது போல, முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தார் ரேணுகா.

“என்னம்மா… என் மேல கோபமா, நேத்திருந்து எதுவுமே பேச மாட்டேங்கறிங்க…”

அவனை நோக்கித் திரும்பியவர் முறைத்தார்.

“எதுக்குமா… இப்ப உங்களுக்கு இத்தனை கோபம்… நான் சொன்னதுல என்ன தப்பு… எவளோ ஒருத்தியை என் பொண்டாட்டின்னு அந்தப் பார்வதி ஆண்ட்டி சொன்னா கோபம் வரத்தானே செய்யும்… அதான் அப்படிப் பேசினேன், அதுக்குக் கோவிச்சுகிட்டு உங்க செக்ரட்டரி இப்படி சொல்லாமக் கொள்ளாம வராம இருப்பான்னு எனக்கு எப்படித் தெரியும்… இவ்வளவு தான் அவங்க உங்க மேல வச்சிருக்குற பாசம்னு இப்பவாவது புரியுதா… நீங்கதான் தலைல வச்சுட்டுக் கொண்டாடுறீங்க…” அவன் பேசப் பேச முகத்தில் கோபம் தெரிந்தாலும் பேசாமல் இருந்தார்.

“சரி விடுங்க… பணத்துக்கு வர்றவங்க அன்பு இவ்ளோ தான் இருக்கும்… சுகந்தி ஆண்ட்டி கிட்ட வேற ஒரு நர்ஸை அனுப்ப சொல்லறேன்…” என்றான் அவன்.

“போதும் நிறுத்து… எனக்கு எந்த நர்சும் வேண்டாம்…” என்றார் கோபத்துடன்.

“ஏன்மா… அப்படி சொல்லறிங்க, அவ ஒருத்தி தான் நர்ஸா என்ன… பணம் கொடுத்தா எத்தனை நர்ஸ் வேணும்னாலும் வரப் போறாங்க…”

“பணம் கொடுத்தா நர்ஸ் தான் கிடைப்பாங்க… என்னை சொந்த அம்மா போலப் பார்த்துக்க ஹர்ஷா போல குணமுள்ள பொண்ணு கிடைக்க மாட்டாங்க… பணமாம் பணம், அதை நீயே வேக வச்சுத் தின்னு….”

“அம்மா… நேத்து வந்த ஒருத்திக்காகவா நீங்க என்கிட்டே இப்படி எல்லாம் பேசறீங்க… அவ அந்த அளவுக்கு உங்களை மயக்கி வச்சிருக்காளா…”

“சஞ்சய்… அவ என்னை மருந்து குடுத்தோ, மாயஜாலம் பண்ணியோ  மயக்கலை… அன்பால மயக்கி வச்சிருக்கா, இந்த மாதிரி ஒரு பொண்ணை நீ கேவலப்படுத்திப் பேசி இருக்கக் கூடாது… பார்வதி தப்பா சொன்னா என்ன… உனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னாப் போதாதா… என்னமோ அவ எல்லாம் கல்யாணப் பொண்ணா வரத் தகுதியே இல்லாதவங்கிற மாதிரிப் பேசுற… அவ மனசு எத்தனை வேதனைப் பட்டிருக்கும்…”

“அம்மா… இப்போ என்ன, நான் செய்தது தப்புன்னு சொல்லறிங்களா…”

“நீ பண்ணினது சாதாரணத் தப்பு இல்ல… ஒரு பொண்ணோட மனசை வேதனைப்படுத்தி இருக்கே… இந்தப் பணமும், புகழும் உன்னை அதுக்கு அடிமை ஆக்கிருச்சு…  மனுஷத்தன்மையை குறைச்சிருச்சு…”

“அம்மா… என்ன பேசறீங்க, ஒரு காலத்துல இந்தப் பணத்துக்காக நாம எத்தனை கஷ்டப்பட்டோம்னு மறந்துட்டீங்களா…”

“நான் எதையும் மறக்கலை… வாழறதுக்கு பணம் தேவை தான்… ஆனா அது மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமானது இல்லை…”

“ஓ… அப்ப நான் மனுஷத் தன்மையை இழந்துட்டேன்னு சொல்லறீங்க…” கோபத்துடன் கேட்டான் சஞ்சய்.

“இழந்துடாதேன்னு சொல்ல வர்றேன்…” என்றார் ரேணுகா.

“ஓ… சரி நான் இப்ப என்ன பண்ணனும்… அந்த அன்பு நிறைந்த அன்னை தெரசா, ஹர்ஷா கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டு அவளைக் கூட்டிட்டு வரணுமா…” கடுகடுவென்று பேசியவனை முறைத்தார் ரேணுகா.

“இங்க பாரு சஞ்சய்… நீ ஒண்ணும் அவகிட்டே மன்னிப்பும் கேட்க வேண்டாம், கால்லயும் விழ வேண்டாம்… அவ அப்பாவுக்கு இன்னைக்கு நினைவு நாள்… வர மாட்டேன்னு என்கிட்டே சொல்லிட்டுதான் போனா, நாளைக்கு வந்திருவா…”

“அடப்பாவமே… இவ்ளோதானா விஷயம், இத்தன நேரம் இந்த அம்மா அவ லீவ் சொன்னதை சொல்லாம பில்ட் அப் பண்ணி வச்சு என்னை பல்பு வாங்க வச்சுட்டாங்களே…” என மனதுக்குள் நினைத்தவன்,

“ஓ… அவ இன்னைக்கு லீவா, நான் கூட மகாராணி நான் சொன்னதுக்கு கோவிச்சுகிட்டு இன்னைக்கு வரலையோன்னு நினைச்சுட்டேன்…”

“சஞ்சு… அவ உன்னை என்ன பண்ணினா… அவ மேல உனக்கு எதுக்கு இத்தனை கோபம், கொஞ்சம் சாதாரணமா நடந்துக்கக் கூடாதா… பாவம், அவளும் உன்னைப் போல தான்… அவ குடும்பத்துக்காக இப்படில்லாம் கஷ்டப்பட்டுட்டு இருக்கா… நீ அவகிட்டே அன்பா நடந்துக்கலைனாலும் பரவாயில்லை… சிடுசிடுன்னு முகத்தைக் காட்டாதே…” அன்னையின் கெஞ்சலான முகம் அவனைத் தணிவாய்ப் பேச வைத்தது.

“சரிம்மா… அது என்னவோ, அவளைப் பார்த்தாலே எனக்கு கோபம் கோபமா வருது… இனி கண்ட்ரோல் பண்ணிப் பேசிக்கறேன்… நீங்க முதல்ல இந்த மாத்திரையைப் போடுங்க…” என்று நீட்டினான்.

“ம்ம்… நல்ல பொண்ணுடா அவ… அவளைப் பத்தி நீ தப்பா நினைச்சுக்காதே…” என்றவர், மாத்திரையை வாங்கி விழுங்கினார்.

“அம்மா… அழகான எல்லாமே நல்லதுன்னு தான் தோணும், ஆனா சந்தர்ப்பம் வரும் போது தான் அதில் உள்ள ஆபத்து நமக்கு தெரியும்… நல்ல பாம்பும் கூட அழகு தான், ஆனா அதோட விஷம் ரொம்ப ஆபத்தானது தானே…” என்றவனைப் பரிதாபமாய்ப் பார்த்தார் ரேணுகா.

“உன்கிட்டே எல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியுமா… எதையுமே குத்தமாப் பாக்குற உன் சுபாவத்தை காலம் தான் மாத்தணும்… உலகத்துல எல்லாமே கெட்டதா இல்லை… இன்னும் சில நல்ல விஷயங்களும், நன்மையையும் மிச்சம் இருக்கத்தான் செய்யுது… இதுக்கு மேல நான் என்ன சொல்லறது…” என்றவர் அதற்குப் பிறகு அமைதியாகி விட்டார்.

அன்னையின் அறையில் இருந்து வெளியே வந்த சஞ்சயின் மனது யோசிக்கத் தொடங்கியது.

“அம்மா சொன்னது போல் இவளிடம் நான் கொஞ்சம் ஹார்ஷாக தான் நடந்து கொள்கிறேனோ…. நான் எல்லாப் பெண்களோடும் இப்படி கோபப் படுவதில்லையே… இவளிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன்… இவள் எனக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை… அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளவும் செய்கிறாள்… நம்பிக்கையாய் இருக்கிறாள்… எதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் எரிந்து விழுந்து அவளைக் காயப்படுத்தி விலக்கி நிறுத்த முயற்சிக்கிறேன்…” வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு விஷயம் மட்டுமே தோன்றியது.

“அவள் அழகாய் இருக்கிறாள்… அந்த அழகு என் கண்ணை உறுத்தியது போல் மனதையும் உறுத்தத் தொடங்கி விட்டால் என் லட்சியம் என்னவாகும்… இந்தக் காதல், கத்தரிக்காயில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், அழகான ஒரு பெண்ணிடம் இயல்பாய் ஆணுக்குத் தோன்றும் ஈர்ப்பு அவளிடம் எனக்குத் தோன்றுகிறதே… அந்த ஈர்ப்பில் என் சுயத்தை இழந்து விடக் கூடாது என்ற பயத்தில் தான் அவளை விட்டு ஓட நினைக்கிறேனோ… அப்படியானால் என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லையா, அவள் அழகைத்தான் நம்புகிறேனா…”

“இல்லை, என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது… இவள் என்ன, உலக அழகியே வந்தாலும் என்னை மயக்கிவிட முடியாது… இனி இவளிடம் கொஞ்சம் சாதாரணமாய் நடந்துக்கணும்… நான் பேசுவது பிடிக்காம இவள் வராமல் இருந்துட்டா அம்மா ரொம்ப வருத்தப் படுவாங்க… அவங்களுக்கு வேண்டியாவது கொஞ்சம் நல்லா நடந்துக்கணும்….” மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டவன், லாப்டாப்புடன் அமர்ந்தான்.

“அம்மா… இட்லி செய்து ஹாட் பாக்ஸ்ல போட்டு வச்சிருக்கேன்… பக்கத்துலயே மாத்திரை எடுத்து வச்சிருக்கேன்… சாப்பிட்டதும் மறக்காமப் போடுங்க, மதியத்துக்கு சாம்பாரும், கத்தரிக்காய் பொறியலும் பண்ணி வச்சிருக்கேன்… எல்லாம் நேரத்துக்கு எடுத்து சாப்பிடுங்க… வேற ஏதாவது பண்ணனுமா…” என்றாள் ஹர்ஷா நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டே.

“ம்ம்… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ கிளம்பிட்டியா… சாப்பிட்டியா…” என்றபடி குளியலறையில் இருந்து வெளியே வந்தார் உமா.

“ம்ம்… சாப்பிட்டு கிளம்பிட்டேன் மா, நைட் வரும்போது உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா… அப்புறம், நீங்க பாத்ரூம்ல இருக்கும் போது வர்ஷூ போன் பண்ணி இருந்தா… நாளைக்கு கவிதா கல்யாணத்துக்கு சேலம் கிளம்புறாங்களாம்… நாளன்னிக்கு கல்யாணம் முடிஞ்சதும் அங்கிருந்து கிளம்பி இங்கே வந்திடறேன்னு சொல்லி இருக்கா… ஒரு வாரம் இங்கே இருந்துட்டு எக்ஸாம்க்கு கிளம்புவேன்னு சொன்னா…”

“ஓ… வரட்டும், அவளைப் பார்த்து எவ்ளோ நாள் ஆகிருச்சு… பரீட்சை முடிஞ்சதும் வேலைக்கு சென்னைக்கு தான் போவேன்… அங்கே தான் நல்ல சம்பளம் கிடைக்கும்னு சொல்லிட்டு இருக்கா… நீ கொஞ்சம் அவகிட்டே சொல்லக் கூடாதா, எத்தனை நாள் தான், அவ பிரண்டு வீட்லயே இப்படித் தங்கிட்டு இருப்பா… அவங்களுக்கும் அது ஒரு கஷ்டமாத் தோணக் கூடாதுல்ல…”

“அம்மா… முதல்ல அவ நல்லபடியா எக்ஸாமை முடிக்கட்டும்… அப்புறம் வேலைக்கு போறதைப் பத்தி யோசிச்சுக்கலாம்… அதும் இல்லாம தீபா அம்மா பத்தி நமக்குத் தெரியாதா… நம்ம வர்ஷு பேயிங் கஸ்ட் ஆகத் தங்கி இருந்தாலும் மகள் தீபாவைப் போல தானே பார்த்துக்குறாங்க… அவங்களுக்கு இதுல எந்த கஷ்டமும் இல்லை… நீங்க ஏதும் யோசிச்சு பீல் பண்ணிட்டு இருக்காதிங்க…”

“ம்ம்… நீயும் எவ்ளோ நாள் தான் இப்படி ஓடிட்டே இருப்பே… அவ வேலைக்குப் போகத் தொடங்கியதும் உனக்கு கல்யாணத்துக்குப் பார்த்திடணும்…” என்றார் உமா யோசித்துக் கொண்டே. தலை முடியை கிளிப்பில் ஒதுக்கிக் கொண்டே பதில் பேசினாள் ஹர்ஷா.

“என் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் மா… வர்ஷூவும் ஒரு நல்ல வேலைக்குப் போகட்டும், அப்புறம் யோசிச்சுக்கலாம்…”

“ம்ம்… கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல உன்னை வேலைக்கு அனுப்பி உன் வருமானத்துல இந்தக் குடும்பத்தை ஓட்டிட்டு இருக்கேன்… அதை நினைச்சா தான் மனசு ஆற மாட்டேங்குது… உன் அப்பா இருந்தா இப்படில்லாம் நடந்திருக்குமா, எல்லாம் நம்ம விதி…” கலக்கத்துடன் பேசிய அன்னையின் தோளில் ஆதரவாய் கை வைத்தாள் ஹர்ஷா.

“அம்மா… எதுக்கு இப்போ இதெல்லாம் யோசிச்சு கலங்கறீங்க… நமக்குன்னு என்ன எழுதி இருக்கோ அதானே நடக்கும்… அதுக்காக யோசிச்சு புலம்பி என்ன ஆகப் போகுது… நடக்கறதை ஏத்துகிட்டுப் போக வேண்டியது தான்… நீங்க கண்டதெல்லாம் யோசிச்சு மனசைக் குழப்பிக்காதிங்க… ஏதாவது புக்ஸ் படிங்க… மனசை ரிலாக்ஸா வச்சுக்கங்க, எல்லாம் நல்லதே நடக்கும்னு நம்புவோம்…”

“ம்ம்… நடந்தா சந்தோசம் தாண்டா…. சரி, லேட் ஆகிடப் போகுது, நீ கிளம்பு… மழை வர்ற மாதிரி இருக்கு… மெதுவா வண்டி ஓட்டிட்டுப் போ…”

“ம்ம்… சரிம்மா, நீங்க சாப்பிடுங்க… நான் வர்றேன்…” என்றவள், ஹெல்மட்டையும் தனது பாகையும் எடுத்துக்கொண்டு வண்டியிடம் நகர்ந்தாள். ஸ்கூட்டியை உயிர்ப்பித்து சாலையை அடைந்து சக வாகனங்களோடு கலந்தாள். வாசலில் ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் ஆவலுடன் வெளியே வந்தார் ரேணுகா.

“வாம்மா… எங்கே இன்னும் உன்னைக் காணோமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்… விநாயக சதுர்த்திக்கு இந்த ராணி விதவிதமா பலகாரம் பண்ணனும்னு சொன்னா, நீயும் இருந்தா நல்லாருக்குமேன்னு சொல்லிட்டு இருந்தா…”

“ஓ… அதான் நான் வந்துட்டனேம்மா… நீங்க சாப்பிட்டீங்களா…”

“இன்னும் இல்லைம்மா, ராத்திரி தூக்கமே வரலை… காலைல கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்… குளிச்சிட்டு வந்து சாப்பிடறேன்…”

“ம்ம்… சரிம்மா, நீங்க குளிச்சிட்டு வாங்க… நான் ராணிம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்…” என்றவள் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

வழக்கம் போல சஞ்சய் நேரமே கிளம்பிப் போயிருந்தான். பெண்கள் மூவரும் சந்தோஷமும், கலகலப்புமாய் கணபதிக்கு பதார்த்தங்களைப் படைத்து பூஜையை முடித்தனர்.

மாலையில் ராணி அடுக்களையில் எதோ வேலையாய் இருக்க ஹர்ஷா, ரேணுகாவிற்கு விநாயகர் புராணம் வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். அப்போது இன்டர்காம் ஒலிக்க அதை எடுத்தார் ரேணுகா.

“அம்மா… ஒராளு உங்களைப் பார்க்கணும் உள்ளே விடுன்னு வம்படியா நின்னுட்டு இருக்கான்… விடவா…” என்றார் செக்யூரிட்டி.

“யாரு, தெரிஞ்சவுங்களா…”

“இல்லைம்மா… யாரோ புதுசா இருக்கான், அவன் பொண்டாட்டி செத்துப் போயிட்டாளாம்… ஏதாவது ஹெல்ப் பண்ணுங்கனு கேக்கறான்…”

“ஓ… சரி… அவனை உள்ளே அனுப்பு… நான் பார்த்துக்கறேன்…” என்றவர், ஹர்ஷாவிடம் சொல்ல இருவருமாய் வாசலுக்கு வந்தனர்.

அப்போது முப்பது வயது மதிக்கத்தக்க ஒருத்தன், காலில் செருப்பின்றி கலைந்த தலையும் அழுது சோர்ந்த கண்களுமாய் உள்ளே வந்தான்.

“கும்பிடறேன் தாயி…” ரேணுகாவைக் கண்டதும் கும்பிட்டான்.

“யாருப்பா நீ… உனக்கு என்ன வேணும்…” என்றார் அவர். அவன் தன் சோகக் கதையை சுருக்கமாய் சொன்னான்.

“நான் ஊருக்குப் புதுசுங்க… வேலை தேடி இங்க வந்தேங்க, என் பொஞ்சாதி காலைல இறந்து போயிருச்சுங்க… பிணம் கிடக்குது, எடுக்கக் காசில்லை… பெரிய மனுஷங்க… உதவி பண்ணனுமுங்க…” அவன் சொன்னதைக் கேட்டு மனதுக்குள் வருத்தம் தோன்றினாலும் அவன் சொன்னது சரியா என்பதை அறிய அவனை ஆழ்ந்து நோக்கினார் ரேணுகா. மழிக்கப் படாத மூன்று நாள் தாடி… கண்களில் நிறைந்திருந்த சோகம்… அவன் சொல்லுவது உண்மைதானோ… என அவருக்குத் தோன்றியது.

“என்னாச்சு, எப்படி உங்க மனைவி இறந்தாங்க… எங்கே இருக்காங்க…” என்றாள் ஹர்ஷா.

அவள் அவனிடம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சஞ்சயின் கார் உள்ளே வர, “அய்யய்யோ… இவன் வேற இந்த நேரத்துல சம்மந்தமில்லாம ஹாஜர் ஆகுறானே…” என நினைத்துக் கொண்ட ரேணுகா, “ஹர்ஷூம்மா… இந்தாளு கையில ஒரு நூறு, இருநூறு குடுத்து விடும்மா…” என்று சொல்ல, அவர்களை கவனித்துக் கொண்டே காரில் இருந்து இறங்கி வந்தான் சஞ்சய்.

“என்னம்மா… யார் இவன், என்ன வேணுமாம்…” என்ற கேள்விக்கு அந்த ஆள் மீண்டும், “நான் ஊருக்குப் புதுசு… வேலை தேடி வந்தேங்க…” என்று தொடங்கி அவன் மனைவி இறந்த கதையை சொல்லி முடித்தான்.

“ஓ… நீ சொல்லுறதெல்லாம் உண்மைன்னு எப்புடி நம்புறது…” என்றவன் அவனை ஊடுருவும் பார்வை பார்க்க, அந்த ஆள் நெளிந்தான்.

Advertisement