Advertisement

இதயம் – 6

வெகு நாட்களுக்குப் பிறகு அந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்தான் சஞ்சய். ஹர்ஷா ரேணுகாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. ரேணுகாவின் அக்கறையான பேச்சும், சுபாவமும் மிகவும் பிடித்ததால் அவரை அன்புடன் சந்தோஷமாகவும் பார்த்துக் கொண்டாள். சஞ்சய் அதிகம் வீட்டில் இல்லாததால் அவளும் சுதந்திரமாய் இருந்தாள்.

ராணியும் ஹர்ஷாவுடன் நல்ல தோழமையுடன் பழகினார். அவரையும் அவளுக்குப் பிடித்திருந்தது. நல்ல ஆரோக்கியமான, அதே நேரம் ரேணும்மாவின் உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை சமைக்க அவருக்கும் சொல்லிக் கொடுத்தாள். நாட்கள் அழகாய் நீங்கிக் கொண்டிருக்க சஞ்சய் அவள் கண்ணிலேயே படுவதில்லை. அன்று அவன் வீட்டில் இருந்ததால் ரேணுகாவிற்கு கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுத்து விட்டு ஹர்ஷா, அவளது அறைக்குள்ளேயே இருந்தாள்.

ஹர்ஷா வந்த பிறகு எப்போதும் கலகலப்புடன் இருக்கும் வீடு அன்று காலையிலேயே அமைதியாய் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கு வந்த ரேணுகா, மகனிடம் பேசுவதற்காய் சஞ்சயின் அறைக்குள் நுழைந்தார்.

“டேய் சஞ்சு, எப்பவாவது ஒரு நாள் பகல்ல வீட்டுல இருக்கே… அப்பவும் இந்த லாப்டாப்பை எடுத்து மடில வச்சுக்கணுமா…” அலுத்துக் கொண்ட அன்னையைக் கண்டு திரையில் இருந்து முகத்தை உயர்த்தினான் மகன்.

“வேலை இருக்குமா… அதான், ஏதாவது சொல்லணுமா…” கேட்டுக் கொண்டே மீண்டும் அதன் திரையில் கண்ணைப் பதித்தான்.

“வீட்டுல இருக்கும் போதாவது கொஞ்சம் ப்ரீயா இருக்கலாம்ல… அதையே பார்த்துட்டு என்னதான் பண்ணிட்டு இருக்கியோ…”

“என்ன சொல்லணுமோ… சொல்லுங்கம்மா, நான் கேட்டுட்டு தான் இருக்கேன்…”

“கனடால இருந்து அண்ணன் கூப்பிட்டிருந்தார்… ப்ரீத்தி படிப்பை முடிச்சுட்டாளாம், இந்தியால ஒரு மாசம் வந்திருக்கணும்னு ஆசைப்படுறா போலருக்கு… அனுப்பட்டுமான்னு கேட்டார்…”

“ஓ… இப்பதான் தங்கை குடும்பம் கண்ணுக்குத் தெரிஞ்சதோ… அப்பா இறந்த சமயத்துல நாம யாருமில்லாம, என்ன செய்யறதுன்னு முழிச்சிட்டு நின்னப்போ, அவர் சொன்னது நினைவிருக்கு தானே… அப்பா பிசினஸ்குன்னு கண் மூடித்தனமா கடன் வாங்கி வச்சா அதுக்கு அவர் பொறுப்பேத்துக்க முடியாது… உங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்ததோட அண்ணன், தங்கை உறவு முடிஞ்சதுன்னு… நமக்கு ராம் அங்கிள் மட்டும் அப்ப ஹெல்ப் பண்ணலைன்னா, இப்ப நாம இருந்த இடம் தெரியாமல்ல போயிருப்போம்… இப்போ மட்டும் என்ன, திடீர்னு தங்கை இருக்கறது கண்ணுக்குத் தெரியுது…”

“டேய் சஞ்சு… எனக்கும் எல்லாம் நினைவு இருக்கு டா… அதுக்குன்னு பழசையே நினைச்சுட்டு இருந்தா சொந்த பந்தங்கிற உறவே விட்டுப் போயிடும்ல… அதான், அவர் சொன்னதும் சரி, ப்ரீத்தி இங்கே வந்து இருக்கட்டும்… அனுப்புங்கன்னு சொல்லிட்டேன்…”

“ஓ… சொல்லிட்டிங்க, இனி வேண்டாம்னு சொல்லவா முடியும்… வரட்டும், எப்ப வராளாம்…” என்றான் அவன் திரையில் கண்ணைப் பதித்துக் கொண்டே.

“அடுத்த மாசம் வர்றான்னு சொன்னார்… எனக்கும் என் மருமகளைப் பார்க்கணும் போல இருக்கு… சின்னப் பிள்ளையா இருக்கும்போது பார்த்தது… அப்புறம் அண்ணன் குடும்பம் வெளிநாடு போன பின்னால பார்க்கவே இல்லை…” என்றார் அவர் ஆசையுடன்.

அவரை ஏறிட்டவன், “இங்க பாருங்கம்மா… அண்ணன் பொண்ணுங்கறது சரிதான், இந்த மருமகள்னு உரிமை கொண்டாடறது எல்லாம் வேண்டாம்… சொல்லிட்டேன்… அந்தாளு குடும்பத்தையே எனக்குப் பிடிக்காது… உங்களுக்கு வேண்டி தான் அவ வர்றதுக்கே ஒத்துக்கறேன்…” என்றான் அவன் கடுப்புடன்.

“ம்ம்… சரி, சரி… நான் ஒண்ணும் அவளை சொந்தம் கொண்டாடிப் பேசலை… நீ இதைக் கொஞ்சம் மூட்டை கட்டி வை… நாம எங்காவது வெளிய போயிட்டு வருவோம்… ரொம்ப நாளாச்சு வெளில போயி… மருதமலை கோவிலுக்குப் போகலாமா…” என்றார் மகனிடம்.

“என்னமா இது, எனக்கு வொர்க் இருக்கு… டிரைவரைக் கூப்பிட்டுக்கங்கம்மா… அதான் துணைக்கு இப்போ உங்க செக்ரட்டரி இருக்காளே… அழைச்சிட்டு போயிட்டு வர வேண்டியது தானே…” 

“டிரைவர் கூட போறதுல என்னடா சந்தோசம் இருக்கு… கோவிலுக்குப் போகும்போது நீயும் கூட வந்தா அம்மாவுக்கு சந்தோஷமா இருக்கும்… ப்ளீஸ் கண்ணா, என் செல்லம்ல….” என்று அவர் கொஞ்ச அவனது முகம் கனிந்தது.

“ம்ம்… சரி, போயிட்டு வரலாம்… சீக்கிரம் ரெடியாவுங்க…” என்றான் அவன்.

“ம்ம்… என் சீனிக்கட்டிடா நீ…” என்றவர், “நீயும் புறப்படு… நான் வந்திடறேன்…” என்று வெளியே சென்றார். அவரது பேச்சைக் கேட்டு அவனது முகம் மலர்ந்தது.

அவனது ஆத்மபலமே அவன் அன்னை தான்… அவரது பாசிட்டிவான எண்ணங்கள், வார்த்தைகள், எப்போதும் சிரித்திருக்கும் முகம் இதைக் கண்டாலே அவன் மனதுக்கு ஒருவித நிம்மதி. அதுவே அவனைத் தெளிவாய் யோசிக்க வைக்கும்… அவரது முகம் சிறிது வாடினால் கூட அவன் மனதளவில் மிகவும் சோர்ந்து விடுவான். ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ள அவன் ஈகோ அனுமதிக்காது. அவனது பலமும், பலவீனமும் அவன் அன்னையே.

அன்னையைப் பற்றி யோசித்துக் கொண்டே புறப்பட்டு கீழே ஹாலுக்கு வந்தான். ஆலிவ் கிரீன் நிற முழுக்கை ஷர்ட்டும், கிரீம் கலர் பாண்ட்டும் அவனுக்கு பொருத்தமாய், கம்பீரமாய் இருந்தது. ஹாலில் சோபாவில் அமர்ந்தவன் அங்கிருந்த தினசரியை எடுத்துப் புரட்டிக் கொண்டே அன்னையின் அறை நோக்கிக் குரல் கொடுத்தான்.

“அம்மா ரெடியா…”

“இதோ வந்துட்டேண்டா…” கூறிக் கொண்டே வெளியே வந்தார் நமது புன்னகை அரசி ரேணுகா. சந்தன நிற சிறிய ஜரிகை வைத்த சேலையும், கழுத்தில் ஒரு முத்துமாலையும், முகத்தில் நிறைந்த புன்னகையுமாய்.

“ம்ம் கிளம்பலாமா…” எழுந்தான் அவன்.

“ஒரு நிமிஷம் இருப்பா…” என்றவர், “ஹர்ஷூ… நீ ரெடியாம்மா…” என்று அவரது அறைக்கு அருகில் இருந்த அவளுக்கான அறையைத் தட்டினார்.

அதைக் கண்டு குழம்பியவன், அவளை எதுக்கு அழைக்கிறார் என யோசித்துக் கொண்டிருக்க, அறைக் கதவைத் திறந்து கொண்டு தயக்கத்துடன் வெளியே வந்தாள் ஹர்ஷா.

“அம்மா… நான் வரணுமா, நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்…” என்றவளை முறைத்தவர், “நீ என்னோட வா, சொல்லறேன்…” என்று அழைத்து வந்து, “ராணி… அந்தப் பூவை எடு…” என்று அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தார்.

அவர் பிரிட்ஜில் இருந்த மல்லிகைப் பூவை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கியவர் ஹர்ஷாவிடம், “நீ திரும்பு…” என்றார். அவள் வீட்டில் இருந்து போட்டு வந்திருந்த கறுப்பு பிளவுசுக்கு பொருத்தமாய் மாம்பழ வண்ண மைசூர் சில்க் சாரியில் சின்னதாய் கறுப்புக்கரை பார்டர் வைத்த அவரது சேலையைக் கட்டச் சொல்லிக் கொடுத்திருந்தார் ரேணுகா.

“அம்மா… ப்ளீஸ் மா, நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்…” என்றாள் தயக்கத்துடன் சஞ்சயின் முகத்தை ஏறிட்டுக் கொண்டே. அதுவரை அவர்களை முறைத்துக் கொண்டு நின்றவன், சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அவளது தலையில் பூவை வைத்து விட்டவர் முன்னில் வந்து, “ம்ம்… அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கே…” என்று கன்னத்தை வழித்தார்.

“ஹூக்கும்… இவங்க என்னமோ மகாலட்சுமி தோள்ள கையப் போட்டுட்டு சுத்தின மாதிரி தான் பேசுவாங்க… இவளை எதுக்கு புறப்பட சொன்னாங்க…” என்று மனதுக்குள் முனங்கிக் கொண்டு நின்றான் அவன்.

“டேய் சஞ்சய்…. நீயே சொல்லு, கோவில்ல பிரகாரத்தை சுத்தி வரும்போது என்னைப் பிடிச்சு நடக்க துணைக்கு ஒரு ஆளு வேணும்ல… அதான் நம்ம ஹர்ஷூவை வர சொன்னேன்… இவ என்னமோ வர மாட்டேன்னு சொல்லுறா… நீ சொல்லு, அவ வர்றது தானே சரி…” என்றார் அவனிடம்.

“ஆகா… இந்த அம்மா செம கில்லாடி தான், பந்தை என் பக்கமே உருட்டி என்னையே கோல் போட வைக்குறாங்களே…” என நினைத்துக் கொண்டாலும், அவருடன் ஒரு ஆள் இருப்பது நல்லது தான் என்று தோன்ற, ஆமோதிப்பாய் தலையாட்டினான்.

“ம்ம்… அம்மா சொல்லுறது சரிதான்… அவங்க கூட ஒருத்தர் துணைக்கு இருக்குறது நல்லது, நீங்க வாங்க…” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

“அம்மா… அது வந்து…” என்று மீண்டும் அவள் தயங்க, “நீ கொஞ்சம் பேசாம வா… அதான், என் புள்ளையே வரச் சொல்லிட்டான்ல… இன்னும் என்ன தயக்கம்…” என்றவர், “ராணி… அந்தத் தண்ணி பாட்டிலை எடுத்து வண்டில வை… சஞ்சு, கிளம்பலாமா…” என்றார்.

“ம்ம் சரிம்மா…” என்றவன், ஸ்டைலாய் சாவியை சுழற்றிக் கொண்டே கண்ணில் ரேபானுடன் முன்னில் நடக்க, அவனை அதிசயமாய்ப் பார்த்தாள் ஹர்ஷா.

“ம்ம்… ஆளோட சுபாவம் ஹிட்லர் போல இருந்தாலும் நல்ல டிரஸ்ஸிங் சென்ஸ் இருக்கு… பார்க்கறதுக்கு என்னமோ ஹீரோ லுக் தான்… வாயைத் திறந்தா தான் தேளைப் போல கொட்டுறான்…” என மனதுக்குள் அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டே ரேணுகாவுடன் நடந்தாள் ஹர்ஷா.

பெண்கள் இருவரும் பின்னில் ஏறவும், மகன் தன்னை முறைப்பதைக் கண்ட ரேணுகா, “இவன் ஒருத்தன்… எப்பப் பார்த்தாலும் முறைச்சுகிட்டே இருப்பான்…” என்றவர், “இப்ப என்னடா…” என்றார்.

“அம்மா… நான் டிரைவ் பண்ணும்போது நீங்க முன்னாடிதான் உக்காரணும்னு தெரியாதா, முன்னால வாங்க…” என்றான்.

“பின்னால ஹர்ஷூ மட்டும் தனியா உக்காருவாளேன்னு போனேன்… அது பொறுக்கலையா உனக்கு…” முனங்கிக் கொண்டே முன்னில் வந்து அமர்ந்தார். தனியாகப் பின்னில் அமர்ந்த ஹர்ஷா, அமைதியாய் வெளியில் பார்வையைப் பதித்துக் கொண்டாள். அரைமணி நேரப் பயணத்தில் மருதமலை ரோட்டில் கார் பயணிக்க மலையையும் பசுமையையும், ரசித்துக் கொண்டே வந்தாள் ஹர்ஷு.

“அப்பா இருக்கும்போது இந்தக் கோவிலுக்கு வந்தது… எத்தனை வருஷமாயிற்று… இங்கே எப்படியெல்லாம் மாற்றம் வந்துவிட்டது…” என நினைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள்.

காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு சஞ்சய் வருவதற்குள், பூஜைக்கான பொருள்களை வாங்கிக் கொண்டு ரேணுகா ஹர்ஷாவின் கையைப் பிடித்துக் கொண்டு மெல்லப் படியேறத் தொடங்கினார். சிறிது நேரத்தில் சஞ்சயும் வந்து சேர்ந்து கொண்டான். சிறப்பு தரிசனத்தின் வழியாய் சென்று அர்ச்சனை தட்டுடன் முருகனை மனமுருகப் பிரார்த்தித்தனர்.

சஞ்சய் உடன் வருகையில் சேர்ந்து நடக்க ஹர்ஷாவிற்கு சற்று கூச்சமாய் இருந்தது. ரேணுகாவும் சஞ்சயும் முன்னில் நடக்க, அவள் பின்னில் வருவதைக் கண்ட ரேணுகா, அவள் கையைப் பிடித்துக் கொண்டார். பிரகாரத்தை சுற்றி வருகையில் பின்னிலிருந்து யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினார்.

ரேணுகாவின் வயதைச் சேர்ந்த ஒரு தடித்த பெண்மணி புன்னகை முகமாய் மூச்சிறைக்க அவரை அழைத்துக் கொண்டே அடுத்து வந்தார். அவரைக் கண்டதும் ரேணுகாவின் முகம் மலர்ந்தது.

“பார்வதி, நல்லாருக்கியா… எவ்ளோ நாள் ஆச்சு உன்னைப் பார்த்து…” சிநேகமாய் அவரது கையைப் பற்றிக் கொண்டார் ரேணுகா. அவரது கணவர் உள்ள சமயத்தில் வாடகை வீட்டில் குடி இருந்தபோது அருகில் இருந்த வீட்டில் குடியிருந்தவர் இந்தப் பார்வதி.

“நான் நல்லாருக்கேன் ரேணு… நீ எப்படி இருக்கே… உன்னை இங்கே பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை… ரொம்ப சந்தோஷமா இருக்கு, எங்களை எல்லாம் மறந்துட்டியா…”

“என்ன பார்வதி, இப்படி சொல்லிட்ட… உன்னை எப்படி மறப்பேன், டேய் சஞ்சய்… உனக்கு இவங்க யாருன்னு தெரியுதா…” என்றார் மகனிடம்.

“ம்ம்… பார்வதி ஆண்ட்டி தானே… நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருந்தாங்களே…”

“ம்ம்… அவங்களே தான், பார்த்தியா… என் புள்ளை கூட உன்னை நினைவு வச்சிருக்கான்…” என்றார் ரேணுகா புன்னகையுடன்.

“ம்ம்… ரொம்ப சந்தோசம் ரேணு, இது யாரு உன் மருமகளா… ரொம்ப அழகாருக்கா… ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் ரொம்ப நல்லாருக்கு… என்னை மறக்காம தான் நீ கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்லையாக்கும்…”

அவர் சொன்னதைக் கேட்டு ரேணுகா திகைத்து நிற்க, சஞ்சயின் மனநிலையை சொல்ல முடியவில்லை… கோபமா, அதிர்ச்சியா… சந்தோஷமா, வெறுப்பா என வெளிப்படுத்தாத ஒரு இறுகிய முகம். ஆனால் அவர் சொன்னவுடன் அவன் பார்வை ஹர்ஷாவை ஏறிட்டது. அது வரை ஒரு பார்வையாளராய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவும் அதிர்ச்சியுடன் அவனை ஏறிட, அவளது ஆழ்மனது வரை ஊடுருவும் சக்தியுள்ள அந்தக் கண்களின் தகிப்பில் அவள் உருகிப் போவது போல் உணர்ந்தாள்.

தேகமெல்லாம் கூசுவது போல் தோன்றியது. ஏதோ, அவள் சொல்லிக் கொடுத்து அந்தம்மா வந்து பேசியது போல் அவன் கண்கள் அவள் மீது நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தன.

“ஆண்ட்டி… என்ன பேசறிங்க, இவளப் போய் என் மனைவின்னு சொல்லறிங்க… எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை… எதுவும் தெரியாம நீங்களே ஊகிச்சிட்டுப் பேசாதிங்க…” என்றவனின் கோபமான குரல், ஹர்ஷாவிற்கு ஒருவித அவமானமாய்த் தோன்றியது.

ஏதோ… தீண்டத் தகாதவளைத் தன்னுடன் சேர்த்துப் பேசியது போல அவன் பேசியதில் அவள் முகம் சிறுத்துப் போனது. மகன் முகத்தில் அடித்தாற் போல் பேசியதைக் கண்டு அதிர்ந்த ரேணு அந்த சூழ்நிலையை சரியாக்க நினைத்து,

“பார்வதி… என் பிள்ளைக்கு இன்னும் கல்யாணம் ஆகலை… பசங்க கல்யாணத்துக்கு உன்னைக் கூப்பிடாம இருப்பேனா… இவ என் சொந்தக்காரப் பொண்ணு, சரி… அப்புறம் உன் வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா…” என விசாரித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் பேசியது எதுவும் ஹர்ஷாவின் காதில் விழவே இல்லை. முகத்தைப் பார்த்தே அவர்களது மனநிலையைக் கணக்கிட்ட ரேணுகா, வேகமாய்ப் பார்வதியிடம் பேசி முடித்து அனுப்பிவிட்டு அவர்களுடன் மலை இறங்கத் தொடங்கினார். ஆனாலும் மகனின் மனம் மலையிறங்கவில்லை என்பதை அவனது முகமே உணர்த்த மனதுக்குள் திகில் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் ஹர்ஷாவை அழைத்துக் கொண்டு காரில் ஏறினார்.

“ஹூம்… முருகா, அந்தப் பார்வதி சொன்னது போல நிஜமாலுமே இவங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் நல்லாத்தான் இருக்கு… என் மகனோட கடுவன் பூனை சுபாவத்துக்கு, கிளி மாதிரி இருக்குற இந்தப் பொண்ணு கசக்குமா என்ன… நியாயமா இந்த வயசுப் பசங்க இப்படி யாராவது சொன்னா சந்தோஷப்படத்தான் செய்வாங்க… ஆனா இவன், இஞ்சி தின்ன கொரங்கு மாதிரில்ல முகத்தை வச்சிருக்கான்… எப்படித்தான் இப்படி ஒரு முசுடைப் பெத்தேனோ… இனி வீட்டுக்குப் போயி பெருசா கிளாஸ் எடுப்பானே… நீதான் காப்பாத்தணும் முருகா…” என வேண்டிக் கொண்டே ஹர்ஷாவைப் பார்த்தார்.

Advertisement