Advertisement

அவளது முகத்தில் ஒருவித வேதனை அப்பிக்கிடக்க கலக்கமாய் பார்வையை வெளியே பதித்திருந்தாள். மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை முக பாவனைகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அமைதியாய் கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் தான் சொன்னதும் ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த அடிப்பட்ட பாவனைகள் சற்றே சஞ்சயின் மனதை வருத்தியிருந்தது.

“பாவம்… அவள் மீது இதில் என்ன தப்பு, அப்படி முகத்தில் அடித்தது போல் பேசியிருக்கக் கூடாதோ…” என்று ஒரு மனம் பரிதாபப்பட்டாலும், “இல்லை… இப்படி சொன்னால் தான் அவள் சற்று விலகியிருப்பாள்… நான் சொன்னதில் என்ன தப்பு, அழகு என்றும் ஆபத்தானது தான்… அவளை நெருங்க விடக் கூடாது… இப்போதே அம்மாவைக் கைக்குள் போட்டுக் கொண்டாள்… எல்லாவற்றுக்கும் என்னையே எதிர்பார்க்கும் அம்மாவிற்கு இப்போது அவள் தான் முக்கியமாகி விட்டாள்… இதை இப்போதே சரியாக்கி விட வேண்டும்…” என நினைத்துக் கொண்டவனின் பார்வை எதேச்சையாய் நடுவில் இருந்த கண்ணாடியில் விழ, அசோகவனத்து சீதையாய் கலங்கிய முகத்துடன் பின்னில் அமர்ந்திருந்த ஹர்ஷாவைக் கண்டு அவனுக்கே பரிதாபமாய் தோன்றியது. அன்றைய பொழுது மௌனமாய் கழிய, அடுத்த நாள் ஹர்ஷா வேலைக்கு வரவில்லை. சஞ்சய்க்கு ஒரு மீட்டிங் இருந்ததால் காலையில் மெதுவாய் கிளம்பினால் போதும் என்றிருந்தான். ஆனால் அன்று ஹர்ஷா வரவில்லை என்று தெரிந்ததும் அவன் மனதுக்குள் ஏதோ ஒருவித சங்கடம் பரவுவதை உணர்ந்தான்.

ராணியிடம் ஹர்ஷா வராததைப் பற்றிக் கேட்க, அவருக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டார். அன்னையும் அவனிடம் முகம் கொடுத்துப் பேசாததால், அவளைப் பற்றி அவரிடம் கேட்கவும் பிடிக்கவில்லை. ராணியிடம், ஹர்ஷாவின் அலைபேசி எண்ணை வாங்கி அவளுக்கு அழைக்க, நான்கைந்து முறை முழுதும் அடித்து ஓய்ந்தும் அது எடுக்கப்படவே இல்லை… அவளுக்கு கோபமோ என நினைத்தவன், ராணியிடம் அன்னையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுக் கிளம்பினான்.

சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்.

காலை நேரமாதலால் அலுவலகம் பரபரப்பாய் இருந்தது. கணினியைக் காட்டிலும் தீவிரமாய் இயக்கிக் கொண்டிருந்தது அங்கிருந்த இளம் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களின் மூளை. தனது காபினில் இருந்த கணினியில் கண்ணைப் பதித்து, மும்முரமாய் ஒரு புரோஜக்டில் ஆழ்ந்திருந்தான் ராஜீவ். அப்போது அவனது கணினிக்கு மேல் ஒரு தலை முளைக்க நிமிர்ந்தான்.

“என்னடா…” எரிச்சலாய்க் கேட்டான்.

“டேய் மச்சி… ஒரு டீ அடிச்சிட்டு வரலாம், வரியா…”

“இப்போ என்னடா… வந்து கொஞ்ச நேரம் தானே ஆச்சு… இன்னைக்கு இந்த புரோஜக்ட் முடிச்சு அனுப்பியாகணும்… இல்லேன்னா மேலிடத்தில் இருந்து வர்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிவரும்… என்ன விஷயம்னு சொல்லு…”

“டேய் மச்சி… இதெல்லாம் உனக்கு சப்ப மேட்டர்டா… வந்து பார்த்துக்கலாம் வாடா, ஒரு பத்தே நிமிஷம்…” மீண்டும் கெஞ்சினான் விக்கி. 

“வந்து தொலையறேன்…” என்றவன் அவனுடன் நடந்தான்.

“என்ன பாஸ்… ரெண்டு பேரும் எங்கே கிளம்பிட்டிங்க…” பின்னில் இருந்து குரல் வரவே திரும்பினர்.

ராஜிவின் அடுத்த காபினில் இருந்த வாசு எட்டிப்பார்த்தான்.

“நாங்க என்ன உலக சமாதானத்தைப் பத்திப் பேசவா கிளம்பப் போறோம்… ஒரு டீ அடிச்சிட்டு வந்திடறோம்…” என்றான் ராஜீவ்.

“நானும் வரேன் பாஸ்…” என்று அவனும் கிளம்பவே, “ஒண்ணும் வேண்டாம்… நான் உனக்குக் கொடுத்த வேலையை வொர்க் அவுட் பண்ணிட்டு இரு… நாங்க வந்ததும் நீ போகலாம்…”

“ம்ம்… சரி பாஸ், ஏதோ ரகசியம் பேசப் போறீங்க போலருக்கு… நடத்துங்க…” என்றவன் சோகமாய் குனிந்து கொண்டான். அவர்கள் காண்டீனுக்கு சென்று டீ சொல்லிக் காத்திருந்தனர்.

“டேய் மச்சி… தீப்ஸ் கிட்டே பேசினியா, வர்ஷுவை கூட்டிட்டு வருவாளா…”

“ம்ம்… உன் ஆளு இன்னைக்கு எதோ சோக கீதம் வாசிச்சிட்டு இருப்பா போலருக்கு… யாரோடவும் பேசலையாம், அதும் இல்லாம ஐஸ்க்ரீம் பார்லர்ல மீட் பண்ணுறதெல்லாம் வேண்டாம்னு தீபு சொன்னா… அவ அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்களாம்…”

“ஓ… சரி, பட்டர்பிளை எதுக்கு சோகமா இருக்கா…” என்றான் விக்கி.

“அதெல்லாம் நீயே உன் ஆள்கிட்டே பேசித் தெரிஞ்சுக்கோ… தீபா காலேஜ்ல இருப்பா… அவகிட்டே பேசி டிஸ்டர்ப் பண்ணாதே… எனக்கு வேலை இருக்கு…” என்றவன் டீயைக் குடித்து முடித்து அவன் காபினுக்கு கிளம்பினான்.

“வர்ஷூ ஏன் சோகமாய் இருக்கணும்… அவளையே கூப்பிட்டு என்ன பிரச்சனைன்னு கேட்டா நல்லாருக்காது… தீபாகிட்டேயே பேசுவோம்…” என நினைத்தவன், தீபா அந்த நேரத்தில் கல்லூரியில் இருந்ததால் அவளை அழைத்தால் எடுக்க மாட்டாள் என்று ஒரு மெசேஜை அனுப்பி வைத்தான். ப்ரீயானதும் அழைக்குமாறு கூறி. அவளும் உடனே அவனை அழைக்கவே வர்ஷாவைப் பற்றி கேட்டான். அவனிடம் சில விஷயங்களை அவள் கூற அதைக் கேட்டவனின் மனம் வருந்தியது.

“சரி.. இப்போ வர்ஷூ எங்கே இருப்பா… நீயும் அவ கூட இருந்திருக்கலாமே…” என்றான் அங்கலாய்ப்புடன்.

“அவ வீட்ல தான் இருப்பா… காலைல நானும் அவளும் ஒண்ணா தான் கோவிலுக்குப் போயிட்டு வந்தோம்… இன்னைக்கு ஒரு ரெகார்டு சப்மிட் பண்ண வேண்டி இருந்துச்சு… ரெண்டு பேரும் வரலைன்னா சப்மிட் பண்ண முடியாது, அதான் நான் எடுத்திட்டு காலேஜ் வந்துட்டேன்… இந்த வாரத்தோட கிளாஸ் முடிஞ்சு ஸ்டடி லீவ் வேற தொடங்குது, அதான்…”

“ம்ம்… சரி, வீட்ல உன் அம்மா இருப்பாங்களா…”

“அவங்க ஆபீஸ் போயிருப்பாங்க… வர்ஷூ மட்டும் தனியா தான் இருப்பா, நீங்க போய் பேசப் போறிங்களா… அவ இன்னைக்கு யாரோடவும் பேச மாட்டா…”

“ம்ம்… சரி… இருந்தாலும் நான் போயி பார்க்கறேன்… உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே…”

“அது வந்து… அவ தனியா இருக்கும்போது நீங்க போயி பேசினா சரியாருக்காது… யாராவது பார்த்து தப்பா நினைச்சுட்டா…” என்றாள் அவள் தயக்கத்துடன்.

“இல்லை… நான் ஒரு அஞ்சே நிமிஷம் அவளைப் பார்த்துப் பேசிட்டு போயிடறேன், ப்ளீஸ்…” என்றான் அவன்.

யோசித்தவள், “ம்ம்… சரி, போயிப் பேசுங்க… ஆனா அஞ்சு நிமிஷத்துல பார்த்துட்டு கிளம்பிடணும்… யாராவது பார்த்து அம்மாகிட்டே சொன்னா வம்பு… அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது…” என்றாள் தீபா.

“ம்ம்…. தேங்க்ஸ் தீபா, கண்டிப்பா யாரும் சொல்லுற மாதிரி நான் வச்சுக்க மாட்டேன்… உன் அட்ரசை எனக்கு மெசேஜ் பண்ணிடு…” என்றவன், ராஜிவிடம் விஷயத்தைக் கூறிவிட்டுக் கிளம்பினான். தீபா கூறிய அட்ரஸைக் கண்டு பிடித்து தெரு முனையிலேயே காரை நிறுத்தி இறங்கியவன் வீட்டை அடைந்தான். அழகாய் ஒதுக்கமாய் இருந்த அந்த சின்ன வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே சென்றவன், சாத்தியிருந்த கதவின் வலது புறத்தில் இருந்த சுவரில் பதித்திருந்த அழைப்பு மணியை அழுத்தினான். உள்ளே இனிமையாய் ஒரு கீதம் ஒலித்து அடங்க, யாரோ கதவைத் திறக்கும் ஓசை கேட்டது. ஆவலுடன் உள்ளே பார்வையைப் பதித்த விக்கியின் முகம் சட்டென்று மாறியது. அவனைக் கண்ட வர்ஷாவின் முகமும் அதிர்ச்சியைக் காட்டியது.

“வர்ஷூ… என்ன இது, இந்தக் கோலத்துல…” என்றவனை மௌனமாய்ப் பார்த்தவள் சோகத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். அவளது கோலம் அப்படிதான் இருந்தது. கலைந்த கூந்தலும், அழுதழுது வீங்கிய கண்களும், வீங்கிய முகமுமாய் பிய்த்துப் போட்ட பட்டாம்பூச்சியாய்  நின்றவளைக் காணவே பரிதாபமாய் இருந்தது.

வண்ணங்களைத் தொலைத்தாயோ

என் வண்ணத்துப் பூச்சியே…

எண்ணங்களைத் தொலைத்திடாதே…

எனக்கான வண்ணங்கள் அவை…

அவளைக் கண்டு பரிதவித்தது அவன் மனது. அவள் அப்படியே நிற்க, “நான் உள்ளே வரலாமா…” என்றான்.

“நீங்க எப்படி இங்கே…” என்ற கேள்வியுடன் அவன் முகத்தை ஏறிட்டாள்.

அவன், “உன்னைப் பார்க்க தான் வந்தேன்…” என்றதும், மௌனமாய் வழிவிட்டு விலகி நின்றாள்.

“வர்ஷூ… என்ன இது, தீபா எல்லாத்தையும் சொன்னா… உன் அப்பா இறந்த நாள்னா, மனசுக்கு வருத்தமா இருக்கும் தான்… அதுக்காக ஒவ்வொரு வருஷமும் இப்படி அழுதுகிட்டே இருக்கணுமா… வாழ்க்கைல இன்பமும் துன்பமும், இரவும் பகலும் மாதிரி… மாறி மாறி வந்துட்டு தான் இருக்கும்… அதுக்காக நாம இப்படித் துவண்டு போயிடக் கூடாது… நீ எத்தனை போல்டான ஆளுன்னு நினைச்சுட்டு இருக்கேன்… இப்படிக் கலங்கிட்டு இருக்கே…”

ஆறுதலான அவன் வார்த்தைகள் கண்களில் மீண்டும் கண்ணீரைப் புதியதாய் உற்பத்தி செய்து கன்னத்தில் வழிய விட்டது.

“அட… சின்னக் குழந்தை போல அழுதுட்டு இருக்கியே… பட்டர்பிளை… உன் மேக்கப் எல்லாம் கரைஞ்சு முகமே அசிங்கமா இருக்கு, கண்மை எல்லாம் கீழே வந்திருச்சு… கண்ணாடில பார்த்தியா…” என்றதும், சட்டென்று அவள் அழுகை நின்று கைகள் அனிச்சையாய் முகத்தைத் துடைத்துக் கொண்டன.

“ஹஹா… இவ்ளோ நேரம் அழ வேண்டாம்னு சொல்லும்போது நிக்காத அழுகை, மேக்கப் கலைஞ்சிடும்னு சொன்னதும் நின்னுடுச்சு பார்த்தியா… என் பட்டர்பிளைக்கு இந்த அழற சீன் நல்லாவே இல்லை…” என்றவன், அவளது தோளில் தொங்கிய துப்பட்டாவை எடுத்து கண்ணைத் துடைத்து விட்டான்.

அவன் செயலைக் கண்டு வியப்புடன் ஏறிட்டவளை, “என்ன பாக்குறே… உன் துப்பட்டா தான், என் டவல்ல துடைச்சு விட்டு அதுல கண்மை ஆயிடுச்சுன்னா… அதான், நான் எல்லாம் ரியல் ஹீரோ பேபி… சினிமா ஹீரோ இல்ல…” என்றதும் அவள் முகத்தில் மெல்லப் புன்னகை எட்டிப் பார்த்தது.

“ம்ம்… இது நல்லாருக்கு… சரி, நான் கேட்ட அஞ்சு நிமிஷம் பர்மிஷன் டைம் முடிஞ்சது… நான் கிளம்பட்டா…” என்றான்.

“என்னது… பர்மிஷனா, யார்கிட்ட….” என்றாள் சிரிப்புடன்.

“எல்லாம் உன் நண்பி கிட்டே தான்… அஞ்சு நிமிஷம் பர்மிஷன் கேட்டு வந்தேன்… ஆமா நீ பேசிட்டியே, நான் வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணி உன் மௌனவிரதத்தை கேன்சல் பண்ண வச்சுட்டேனா…”

“அதான் டிஸ்டர்ப் பண்ணி மௌனத்தைக் கலைச்சாச்சே… என்னது, தீபு கிட்ட பர்மிஷன் வாங்கினிங்களா… நானும் கூட நீங்க ஆபீஸ்ல பர்மிஷன் வாங்கினதா சொல்லறீங்கன்னு நினைச்சேன்…”

“ஆபீசெல்லாம் நமக்கு ஒரு மேட்டரா… இன்னும் எவ்ளோ நேரம்னாலும் நோ பிராப்ளம்… என்ன, அதுக்கு உன்னோட பர்மிஷன் வேணும்….”

“என்னோட பர்மிஷனா… எதுக்கு…”

“எனக்கு இன்னும் எவ்ளோ நேரம் இங்கே இருக்க பர்மிஷன் குடுப்பேன்னு தெரிஞ்சா ஆபீஸ்ல பர்மிஷன் சொல்லறதுக்கு தான்…”

“ஹஹ்ஹா… உங்களை…” என்றவள் சிரிப்புடன் அவனை நோக்க,

“ம்ம்… எப்பவும் நீ சிரிச்சுகிட்டே இருக்கணும் பட்டர்பிளை… அதான் என் ஆசை, அப்பா… நம்ம வாழ்க்கைல பெரிய இழப்பு தான்… எனக்கும் அந்த வலி தெரியும்… அதான் உன்னை சமாதானப்படுத்த ஓடி வந்தேன்…”

“ம்ம்… என் அப்பா கரண்டு கம்பில ஷாக் அடிச்சு, கீழே விழுந்து தலைல அடிபட்டு துடிதுடிச்சு இறந்தார்…. அதை நான் கண்ணால பார்த்திருக்கேன்… அவர் இறந்த நாள் அன்னைக்கு அது எப்பவும் என் கண்ணுக்குள்ளேயே இருந்து வேதனைப் படுத்தும்… தேங்க்ஸ் விக்கி, இப்ப எனக்கு கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணறேன்… சரி, எங்கே வேதாளத்தை காணோம்… இன்னைக்கு விக்கிரமாதித்த மகாராஜா மட்டும் தனியா எழுந்தருளி இருக்கீங்க…”

“ஹஹா… இரு, அந்த வேதாளங்கிட்டே சொல்லறேன்… சரி, நான் கிளம்பட்டுமா…” என்றான் அவளது சிரிக்கத் தொடங்கிய விழிகளை நோக்கி.

“ம்ம்… கிளம்பணுமா…” என்றாள் அவள் தலையைக் குனிந்து கொண்டு.

அவளையே பார்த்தவன், “கிளம்ப மனசு இல்லை தான்… ஆனால் என்னால உனக்கு பிரச்னை வந்திடக் கூடாதே… அதான், சரி வர்ஷூ… இனி அழக் கூடாது… டேக் கேர்…”

“ம்ம்…” என்றவளின் முகம் மீண்டும் சோகமாய் மாற குனிந்து கொண்டாள். 

“வரு நான் கிளம்பட்டுமா…” என்றான். “வேண்டாம்னு சொன்னா இருக்கவா போறீங்க, கிளம்புங்க விக்கி…” என்றாள் அவள் சிரிப்புடன்.

“நீ சொல்லித்தான் பாரேன்…” என்று புருவத்தைத் தூக்கி சிரித்தவனைக் கண்கள்  நிறைய பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் முகத்தில் நிலைத்திருந்த அவள் பார்வையைக் கண்டவன், “என்ன வரு அப்படிப் பாக்கறே… என் முகம் அவ்ளோ அழகா இருக்கா…” என்றான்.

“ம்ம்… ரொம்ப அழகா இருக்கு…” என்று அவள் உதடுகள் அவளையும் மீறி உதிர்த்துவிட, அதைக் கேட்டவன் சிரித்தான்.

“ம்ம்… என் முகம் உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கா… என் முகத்துல என்ன பிடிச்சிருக்கு… இந்தக் கண்ணா, இந்த மூக்கா… இல்லை இந்த…” என்று அவன் நிறுத்த, அவள் அவனை ஏறிட்டாள்.

“இந்த… அதையும் சொல்லுங்க…”

“உன்னை பட்டர்பிளைன்னு நொடிக்கு நொடி கூப்பிடுற இந்த உதடான்னு கேட்டேன்…” என்றவன் புருவத்தை தூக்க,

“அய்யே… ரொம்ப தான் வழியாதிங்க…. உங்க முகம் ஒரு குழந்தை முகம் போல பிரெஷா, ரொம்ப அழகா இருக்கு… அதுனால பிடிச்சிருக்குனு சொன்னேன்… உடனே கலர் கலரா ரீல் சுத்த வேண்டியது… சரி, சரி… கிளம்புங்க… காத்து வரட்டும்…” என்றாள் அவள்.

“அடிப்பாவி… லாஸ்ட்ல என்னைத் துரத்தியா விடற… சரி, வரு… டேக் கேர்… பை…” என்றவன், அங்கிருந்து செல்ல அவன் தலை மறையும் வரை படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

தாலாட்டும் பூங்காற்றாய்

தலையில் மெல்லத் தடவுகிறாய்…

தாயைக் கண்ட பிள்ளை போல்

தத்தித் தாவுது மனமே…

எந்தன் நெஞ்சில் அழியாத வண்ணமாய்

எழில் நிறைந்த நிந்தன் ஓவியம்…

எனது எண்ணத்தில் எல்லாம்

உனது வண்ணமயமான நினைவுகள்…

பூவை நீ நீங்கும் பொழுதில்

மலருக்கும் மணமில்லை…

நான் உன்னை சேர்ந்தால் பிரிய

நமக்குள்ளும் மனமில்லை… என்றும்

இணைந்திருப்போம் இதயத்தில்…

Advertisement