Advertisement

“இந்த மாதிரி ஒரு குணவதியைப் பார்க்க முடியாது கண்ணு… ரொம்ப அன்பா, உரிமையா பழகுவாங்க… ஆனா உடம்புல இல்லாத வியாதி இல்லை… பெரியவருக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணும்னு அவருக்கு ரொம்ப ஆசை… அந்தப் புள்ளை கல்யாணம்னாலே காதைப் பொத்திக்குது…”

“ம்ம்… ஏன், அவருக்கு ஏதாவது காதல் தோல்வியா…”

“அதெல்லாம் இல்ல கண்ணு… ஏனோ, பணம் சம்பாதிக்கறது தான் முக்கியம்னு நினைச்சு கல்யாணத்தைப் பத்தி யோசிக்கறதில்லை…. சின்னையா பெரியவருக்கு அப்படியே எதிர்ப்பதம்… அவர் இருந்தா வீடே கலகலன்னு இருக்கும்…”

“ம்ம்… இவர் இப்படித்தான் அம்மா கிட்டயும் அன்பே இல்லாம சிடுசிடுப்பாரா…”

“அட… அப்படி இல்ல கண்ணு… தம்பி வெளியாளுங்ககிட்டே தான் இப்படி… அம்மான்னா உசுரு… எத்தனை முக்கியமான வேலையா வெளிய இருந்தாலும் நேரத்துக்கு அம்மாவைக் கூப்பிட்டு விசாரிக்கும்… தம்பி மேலயும் அப்படித்தான்… ரொம்பப் பாசம், உசுரையே வச்சிருக்கும்… ஆனா வெளியே காட்டிக்காது…”

“ஓ… ஆள் ஒரு பலாப்பழம் போலருக்கு…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அவள். ஏனோ அவனைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குள் ஒரு ஆவல் வந்தது.  அதற்குப் பிறகு அன்றைய பொழுது நல்லவிதமாய் நீங்க, இரவு எட்டு மணிக்கு ரேணுகாவிற்கு மாத்திரையைக் கொடுத்ததும் ஹர்ஷா வீட்டுக்குக் கிளம்பினாள். மகளுக்காய் ஹாலிலேயே காத்திருந்தார் உமா.

“அம்மா… மதியம் நான் சொன்ன போல மாத்திரை போட்டிங்களா… இப்ப பசிக்குதா, பத்தே நிமிஷம்… குளிச்சு வந்து உங்களுக்கு தோசை ஊத்தித் தர்றேன்… சரியா…” என்றவளை, “இரும்மா… புதுசா வேலைக்குப் போன இடத்துல எப்படின்னு சொல்லவே இல்லை…”

“ம்ம்… சுருக்கமா சொன்னா, வேலைக்குப் போன மாதிரியே இல்லைம்மா… எங்கேயோ சொந்தக்காரங்க வீட்டுக்குப் போன போல இருக்கு… அந்தம்மா எவ்வளவு அன்பா பழகுறாங்க தெரியுமா, ரொம்ப நல்ல டைப்… பணக்காரங்கன்னு துளி கூட கர்வம் இல்லை… உங்களோட பேசுற போல அவங்க கிட்டே இயல்பா பழக முடியுது…” என்றாள் மலர்ச்சியுடன்.

“ம்ம்… எனக்கு அது போதும்மா, ஹாஸ்பிடல் வேற… வீடு வேற… அங்கே எப்படிப் பழகுவாங்களோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு… இப்பதான் நிம்மதியா இருக்கு… சரி, நீ குளிச்சிட்டு வா…” என்றார் உமா.

“ம்ம்… எங்கேயானாலும் எல்லாரும் மனுஷங்க தானேம்மா… நீங்க தேவையில்லாம எதையும் யோசிச்சு கவலைப் படாதீங்க…” என்றவளுக்கு சஞ்சயைப் பற்றி குற்றம் சொல்ல மனது வரவில்லை.

“அம்மா, வர்ஷூ கூப்பிட்டாளா…”

“ம்ம்… அவளோட பிரண்டு கவிதாவுக்கு ஸ்டடி லீவ் டைம்ல மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்காம்… சேலத்துல கல்யாணம், எல்லாரும் போறாங்க… நானும் போயிட்டு வரட்டுமான்னு கேட்டா… நீ வந்ததும் பேசிட்டு சொல்லறேன்னு சொன்னேன்…”

“ஓ… போயிட்டு வரட்டும் மா… கவி, அவளோட குளோஸ் பிரண்டாச்சே… கல்யாணம் முடிஞ்சதும் அப்படியே சேலத்துல இருந்து இங்கே வர சொல்லிடுங்க…”

“ம்ம்… சொல்லிடறேன் மா… கல்யாணத்துக்கு எல்லாரும் சேர்ந்து பிரேஸ்லெட் கொடுக்குறாங்களாம்… நான் பணம் அனுப்பனுமான்னு கேட்டேன்… அவளுக்கு நீ கொடுத்த பாக்கெட் மணி சேர்த்து வச்சிருக்காளாம்… அதுல கொடுத்துக்கறேன்னு சொல்லிட்டா…”

“ஹஹா… பார்த்திங்களா, அவளுக்கு அதிகமா செலவுக்குப் பணம் கொடுக்காத… கண்டபடி செலவு பண்ணிப் பழகுவான்னு புலம்புவிங்க… இப்போ பாருங்க, அவ அதுலயே சேமிச்சு வச்சிருக்கா… நாங்க உங்க வளர்ப்புமா. கண்டிப்பா தப்பாக மாட்டோம்…” என்ற மூத்த மகளின் வார்த்தையில் நெகிழ்ந்தார் உமா. 

“சரி… நாளையோட உங்க மருந்தெல்லாம் தீர்ந்திடும்… மருந்து லிஸ்ட் வெளியே எடுத்து வச்சிடுங்கம்மா… நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வந்திடறேன்…”

“ம்ம்… சரிம்மா, நீ போயி குளிச்சிட்டு வா…” என்றவர், அடுக்களைக்கு நகர்ந்தார்.

மகள் எத்தனை தான் அடுக்களைப் பணி செய்வதற்கு தடை சொன்னாலும் அவளுக்குப் பிடித்த வெங்காய சட்னி செய்து வைத்திருந்தவர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சன்னமாய் தோசை ஊற்றத் தொடங்கினார். குளித்து முடித்து பதறிக் கொண்டே ஓடி வந்த மகளைக் கண்டு எதுவும் பேசாமல் புன்னகைத்தவர், “சாப்பிடும்மா…” என்றார்.

“நீங்க சாப்பிடுங்கம்மா… நான் அப்புறம் சாப்பிடறேன்…”

“நீ சாப்பிடும்மா… இது என் ஹர்ஷூ செல்லத்துக்கு அம்மா ஆசையா ஊத்தின தோசை…” என்று நீட்ட அதை வாங்கிக் கொண்டவள், அன்னையின் அன்பு நிறைந்திருந்த தோசையை மனமும் வயிறும் நிறைய சாப்பிடத் தொடங்கினாள்.

“டேய் விக்கி, போதுண்டா மச்சி… அந்த மொபைலுக்கு மட்டும் காதிருந்தா கதறி அழுதிடும் டா…” என்றான் ராஜீவ். அங்குமிங்கும் நடந்து கொண்டே அலைபேசியில் வர்ஷாவுடன் அளப்பரிய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த விக்கி, தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தான்.

“ஓகே பட்டர்பிளை… இங்கே கொசுத்தொல்லை ரொம்ப ஜாஸ்தியாருக்கு… நான் அப்புறமா கூப்பிடறேன்… வச்சிடட்டா…” என்றவன் காதிலிருந்து அலைபேசியைப் பிரித்தெடுக்க, அது பாட்டரி தீர்ந்ததை சொல்லிக் கொண்டே அணைந்து போனது.

அதைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்ட ராஜீவ், “என்னடா சொன்ன… கொசுத் தொல்லையா, ஏண்டா சொல்ல மாட்ட… என்னோட ஆளுகிட்டே நான் நம்பரை வாங்குவேன்… அதுக்குக் கூப்பிட்டு நான் பேசப் போனா, உன் ஆளு கிட்டே பேசணும்னு அதைப் புடுங்கி அதுலயே சார்ஜ் போகற வரைக்கும் பேசிட்டு இருப்பே… இதுல நான் உனக்கு தொல்லையா…. நானும் நீ ஒவ்வொரு டைம் ஓகேன்னு சொல்லும்போதெல்லாம், வச்சிடப் போறேன்னு காத்திட்டு இருந்தது தான் மிச்சம்… உன் பட்டர்பிளை நம்பர்ல கூப்பிட வேண்டியது தானே…” ராஜீவ் புலம்பிக் கொண்டிருந்தான்.

“டேய்… ராத்திரி நேரத்துல ஏண்டா இப்படித் தொணதொணன்னு பேசிட்டு இருக்க… சார்ஜ் தீர்ந்தா போட்டுக்க வேண்டியதுதான… ஒரு நண்பனுக்கு உன் மொபைலைக் கொடுக்க மாட்டியாடா… என்னைத் தூங்க விடேண்டா மச்சி…”

“அடேய்… சாமி, நான் எதுக்குப் புலம்பறேன்னு கூட உனக்குப் புரியலை… அப்படித்தானே, ம்ம்ம்… சரி… போத்திட்டு படு… உன்னோட பேசுறது வேஸ்ட்… ம்ம், ஒரு ஹீரோக்கு நண்பனா இருக்குறது எத்தனை கஷ்டமான வேலையா இருக்கு… இனிமே இவன் முன்னாடி நம்ம சில்வண்டுக்கு போன் போடவே கூடாது…” என்றவன் அலைபேசியில் சார்ஜ் ஏறிவிட்டதா எனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

விக்ரம், ராஜீவ் இருவரும் ஒரு பெரிய அபார்ட்மெண்டில் அவர்களுக்கு சொந்தமான ஒரு பிளாட்டில் தங்கி இருந்தனர். அங்கிருந்து அவர்களது அலுவலகம் அருகிலேயே இருந்தது. 

“டேய்… ஏண்டா, சும்மா மொபைலை நோண்டிகிட்டு இருக்கே…” என்ற விக்ரம், ராஜீவ் முறைக்கவே, தன் அலைபேசியுடன் நகர்ந்தான். இயர் போனை காதில் மாட்டிக் கொண்டு அவனுக்குப் பிடித்தமான அந்தப் பாடலை ஒலிக்க விட்டான்.

“மழையே… மழையே… இளமை

முழுதும் நனையும் வரையில் வா…

சாரல் விழும் நேரம்… தேவ மயக்கம்…

கூந்தல் மலரின் தேனை எடுக்க

காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க…

இதயம் துடிக்க…”

ரசனையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த விக்ரமின் மீது தலையணையைத் தூக்கி எறிந்தான் ராஜீவ்.

“எரும… என்னைப் புலம்ப விட்டுட்டு உனக்கு பாட்டு கேக்குதா, மழையே… மழையேவா…”

“டேய்… அடங்குடா, என் ஆளோட பாட்டை நான் கேக்குறேன்… உனக்கு என்ன…”

“இது எப்படா உன் ஆளு பாட்டா மாறுச்சு… எனக்குத் தெரியாதே…”

“ஏய்… லூசு, வர்ஷான்னா மழைன்னு தான் அர்த்தம்… இந்த பாட்டுல மழைக்கு பதிலா வர்ஷாவைப் போட்டுப் பாடிப் பாரு… செமல்ல, இதுக்கு தான் தமிழ் பாடம் எடுக்கும் போது ஒழுங்கா கிளாஸை கவனிக்கணும்னு சொல்லுறது… சரி சரி, நீ பாடிப்பார்க்க வேண்டாம்… நானே பாடிக்கறேன்…” என்று மாற்றினான்.

“அடப்பாவி… இப்படில்லாம் வேற யோசிக்கறியா நீ… டேய் மச்சி, நீ ரொம்ப ஓவரா போகாதே… பின்னாடி பிரச்சனையாகிடப் போகுது… உன் அண்ணனுக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சது, மவனே நமக்கு சங்குதாண்டி…”

“டேய்… அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா… என் அண்ணனுக்கு வேணும்னா காதல், கல்யாணம் எல்லாம் பிடிக்காம இருக்கலாம்… அதுக்காக நானும் அப்படி இருக்க முடியுமா, இதெல்லாம் நான் பார்த்துக்கறேன்… நீ உன் சில்வண்டை மட்டும் பாரு…”

“ஹூம்… என்னை எங்கே பார்க்க விடறே, அதான் நந்தி போல எல்லாத்துலயும் குறுக்கே வந்திடறியே…”

“சரி… சரி, கோச்சுக்காத நண்பா… நீ உன் சில்வண்டோட சிறகடிக்கறதுக்கு நான் ஒரு தடையாக மாட்டேன்… நாளைக்கு எப்படியாவது அவங்களை சந்திக்கணும்… நீ உன் சில்வண்டு கிட்டே கேட்டு சொல்லேன்…”

“ம்ம்… அதானே பார்த்தேன், அடி விழா விஷயத்தை எல்லாம் நீ பேசிடு… இந்த மாதிரி விஷயத்தை மட்டும் என்கிட்டே தள்ளி விடு…” அலுத்துக் கொண்டான் ராஜீவ்.

“போடா மச்சி… நீ எதுக்குமே ஒத்து வர மாட்டேங்குறே…” என்று அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“சரி… எங்க வர சொல்லலாம், சொல்லு…” என்றான் ராஜீவ்.

“ஹஹா… நண்பேன்டா மச்சி… அவங்க காலேஜ் பக்கத்துல இருக்குற ஐஸ்க்ரீம் பார்லர் எதுக்காவது வர சொல்லு…”

“ஓகே… நான் சில்வண்டு கிட்டே பேசிட்டு சொல்லறேன்…” என்றான் ராஜீவ்.

“ஓகேடா நண்பா…” என்று அவனை அணைத்து முத்தமிட்டான் விக்கி.

“டேய்… டேய்… விடுடா, நான் ஒண்ணும் உன் பட்டர்பிளை இல்லை…”

“ஹஹா… ஓகே டா மச்சி… குட் நைட்… நான் பட்டர்பிளையோட கனவுல பறக்கப் போறேன்… என்னை டிஸ்டர்ப் பண்ணாதே…” என்றவன் கட்டிலில் சாய்ந்தான்.

“ஓ… பட்டர்பிளை… பட்டர்பிளை…

ஏன் விரித்தாய் சிறகை…

வா… வா… ஓ பட்டர்பிளை…”

அழகான மாலை நேரம்… அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் பல வண்ணப் பட்டாம்பூச்சிகள் அமர்ந்திருக்க தன்னவளைத் தேடி விழிகளை சுழற்றினான் விக்ரம். அதோ ஓரமாய் இருந்த மேசையின் முன்னில் இருந்த நாற்காலியில் இமைகள் படபடக்க தவிப்புடன் காத்திருக்கிறாள் என்னவள். லாவண்டர் வண்ணச் சுடிதாரில் புதிதாய்ப் பிறந்த பட்டாம்பூச்சி போல வண்ணமாய் ஜொலிக்கிறாள்.

அவளை நோக்கி ஆவலுடன் நீங்கியது விக்ரமின் கால்கள். அவனைக் கண்டதும் மருண்ட அவளது விழிகள் சுற்றிலும் பார்வையை ஓட்டி தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா எனத் தேடியது. அவளுக்கு முன்னில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். சில்வண்டும், மற்ற தோழியரும் எங்கு சென்றார்கள்… இவள் மட்டும் தனித்திருக்கிறாள்… ஒரு வேளை, என்னிடம் தனியாகப் பேச வேண்டுமென்று அவர்களை போக சொல்லி விட்டாளோ… மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவளை ஏறிட்டவனுக்கு சற்று பதட்டமாய் இருந்தது.

அவளும் ஏதோ பேசத் தயங்கிக் கொண்டிருக்கவே, சற்று நேரம் கழித்து அவனே பேசினான். அவர்களிடம் வந்த வெயிட்டரைக் கண்டவன், “என்ன சாப்பிடலாம்…” என்றான் அவளிடம் பொதுவாக. “உங்க இஷ்டம்…” என்றாள் அவள்.

“ரெண்டு இடாலியன் டிலைட்…” என்றவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு கூச்சமாய் இருந்தது.

“ஹூம்… போதும் பார்த்தது…”

“ஹஹா… சரி, ஒண்ணும் பேசத்தான் இல்லை… பார்க்காமலும் இருக்க சொன்னா… எப்படி பட்டர்பிளை…”

“மனது இரண்டும் பேசிக் கொள்ளும் போது

வார்த்தைகளுக்கு தேவை இன்றிப் போகும்…” என்றாள் அவள்.

“ஓஹோ… அப்படியானால் உன் கண்களின் மொழியையும் சொல்லித் தருவாயா, இப்படிப் படபடக்கிறதே…” என்றான் அவன். அதற்குள் ஐஸ்க்ரீம் வரவே அவள் அதை சாப்பிடத் தொடங்க அவன் விழிகள் அவளை சாப்பிடத் தொடங்கின.

உன் உதடுகளுக்குள் உருகும் ஐஸ்க்ரீமாய்

உன் விழிகளுக்குள் உருகிப் போகிறேன் நானடி…

என் இதயத்தில் ஏகாந்தமாய் ஒரு மழைக்காலம்…

உன் நினைவுகளில் தூறல் போடுதடி…

சிறகடிக்கும் உன் வண்ணத்துப்பூச்சி விழிகள்

தேனாக என் மனதை உறிஞ்சுதடி… என்னோடு

ஊடல் கொண்டு சிணுங்கி நீயும் நின்றாலே

செல்லரித்து சிதறிப் போகிறேன் நானடி…

சண்டைக் கோழியாய் நீயும் சிலிர்க்கும்போதோ

சறுக்கு மரமாய் நெஞ்சம் வழுக்குதடி….

சத்தமில்லாமல் என் நெஞ்சில் யுத்தம் செய்பவளே…

நாளெல்லாம் உன்னிடம் தோற்றுப் போகவே

நான் பேராவல் கொண்டேனடி…

“டேய்… எழுந்திருடா, எத்தனை நேரம் தான் கூப்பிடறது…  இப்படியா தூங்குவே, மணி என்னாச்சு பாரு… ஆபீஸ் போக வேண்டாமா…” சலிப்புடன் கேட்டது ராஜீவின் குரல்.

“பட்டர்பிளை… என்னாச்சு திடீர்னு உன் குரல் மாறிடுச்சு…” கேட்டுக் கொண்டே போர்வையை விலக்கிய விக்ரமிடம்,

“ஹூம்… உன் பட்டர்பிளை நைட் சரக்கு போட்டுச்சு… அதான் குரல் மாறிடுச்சு, டேய்… எந்திரிடா, உன் அலும்பு தாங்கலை…” என்றான் ராஜீவ்.

Advertisement