Advertisement

இதயம் – 5

ஹர்ஷாவின் முகம் அடிபட்ட குழந்தை போல சிறுத்துப் போய் சிவந்திருக்க, கண்களில் கரை தாண்டத் தயாராய் இரண்டு கண்ணீர் முத்துகள் உருண்டு நின்றன. அவனை ஏறிட முடியாமல் தலை தாழ்ந்து நின்றிருந்தாள்.

அதற்குள் வெளியே வந்த ரேணுகா, அவளது முகத்தைக் கண்டதும் வருந்தினார்.

ஆனால் சஞ்சய், சிறிதும் கம்பீரம் குறையாமல் அவளை ஏறிட்டான்.

“ஓ… நீதான் சுகந்தி ஆண்ட்டி அனுப்பின நர்ஸ,. எத்தனை வருஷ அனுபவம் இருக்கு… ஆண்ட்டி கிட்ட எவ்ளோ நாளா வொர்க் பண்ணற… உங்க வீடு எங்கிருக்கு…” என்று அவன் வாத்தியாராய் மாறி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, அவள் விடை தெரியாத மாணவி போல் எதுவும் சொல்லாமல் மௌனமாய் நின்றாள்.

“சஞ்சய்… நான் எல்லாத்தையும் விசாரிச்சுட்டேன், போதும் உன் கேள்விகள்…”

“அம்மா…” என்று தொடங்கியவனைப் பார்வையில் அடக்கினார் அன்னை.

“இல்லம்மா… சார் என்ன கேக்கணுமோ கேக்கட்டும்… வேலைன்னு வந்துட்டா இந்த மாதிரி அனுபவங்களை சந்திச்சு தானே ஆகணும்… நாங்க பணம் இல்லாதவங்க தான், ஆனா  குணம் இல்லாதவங்க இல்லை… ஏழைங்க எத்தனையோ பேர் மனசளவுல பணக்காரனா தான் இருக்காங்க… வந்த முதல் நாளே உங்க கிட்ட கேக்காம ரூமை மாத்தணும்னு சொன்னது தப்பு தான்… அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க, அம்மாவுக்கு அது தான் வசதின்னு நினைச்சு சொல்லிட்டேன்… உங்களுக்கு நான் செய்தது பிடிக்கலைனா சொல்லிடுங்க… இப்போதே போயிடறேன்…” என்றவள் மறந்தும் சஞ்சயின் முகத்தை ஏறிடவில்லை.

அவளது அழகிய முகம் வேதனையில் சுருங்கியிருக்க, கலங்கிய கண்கள் அவள் மனத்தைக் காட்டின. அவளை அப்படிக் காண ரேணுகாவிற்கு சங்கடமாய் இருந்தது. அவளுக்கு ஏதோ பதில் சொல்வதற்காய் வாயைத் திறந்த மகனை கண்களை உருட்டி முறைக்க, அவனும் பதிலுக்கு முறைத்துக் கொண்டே எதுவும் பேசாமல் சென்று விட்டான்.

“கடவுளே, வந்த முதல் நாளே இந்தப் பொண்ணு இப்படியா இவன் கிட்ட மாட்டிக்கணும்… என்னமா உறுமிட்டு போறான்… பாவம் புலிகிட்டே சிக்கின மான் போல அது நடுங்கிப் போய் நிக்குது… சரியான முசுட்டுப் பயலைப் பெத்து வச்சிருக்கேன்…” மனதுக்குள் நினைத்துக் கொண்டவர்,

“ஹர்ஷா… நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதம்மா, சஞ்சு எப்பவும் இப்படிதான்… உன்னைப் பார்க்காம பொதுவாப் பேசுற போல பேசிட்டான், உன்னைப் பார்த்திருந்தா இப்படி சொல்லி இருப்பானா… ஒருத்தர் முகத்தைப் பார்த்தாலே அவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியாதா… அவனுக்கு கிடைத்த அனுபவங்களை வச்சு கத்திட்டு போறான்… அவன் கிடக்கிறான்… அவன் கிட்ட நான் பேசிக்கறேன்… நீ ஒண்ணும் வருத்தப்படாதே…”

“ம்ம்…” என்று தயக்கத்துடன் அவரை ஏறிட்டவள், “அம்மா… உங்களுக்கு என்னைப் பிடிக்கலைனா சொல்லுங்க… நான் இப்பவே போயிடறேன்…”

“அட… உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்மா… நீ அதையே நினைச்சுட்டு இருக்காதே… உன்னை இப்படிப் பார்க்க சங்கடமா இருக்கு… கீழே ரூம் ரெடி பண்ணிட்டியா… அங்கே போலாமா…” என்றார் அவள் மனதை மாற்றுவதற்காய்.

“ம்ம்… போலாம் மா…” என்றவள் அவருடன் படியிறங்கினாள்.

அவள் பார்வை அவன் எங்காவது இருக்கிறானா என அச்சத்துடன் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் அவனோ அப்போதே கிளம்பி இருந்ததால் அவள் கண்ணிலேயே அகப்படவில்லை.

“ச்ச்சே… வந்த முதல் நாளே என்னவெல்லாம் சொல்லி விட்டான்… எல்லாம் பணம் இருக்குங்கிற திமிர்… என்னவோ பணம் இல்லாதவங்க எல்லாம் நம்பத் தகுதி இல்லாதவங்க போலப் பேசறான்… உண்மைலயே இவன் ஹிட்லர் தான் போலருக்கு…” மனதுக்குள் நினைத்துக் கொண்டே நடந்தாள்.

பளிச்சென்று புதிய திரைசீலைகளுடன் இருந்த அறையைக் கண்டதும் ரேணுகாவுக்கு மிகவும் பிடித்தது. மனதுக்குள் ஒருவித சந்தோஷமான உணர்வு. அவருடைய பொருட்களை எல்லாம் ராணி மாடியில் இருந்து கொண்டு வர, அவற்றை அழகாய் அங்கிருந்த அலமாரியில் வைத்தாள் ஹர்ஷா.

“ரொம்ப அழகா இருக்கு மா… மனசுக்கு நிறைவா இருக்கு…”

“ம்ம்…”

“சரி, நீ சாப்டியா…”

“இ…இல்லமா, பசிக்கலை…” என்றவளின் சோர்ந்த முகம் அவள் மனதை உணர்த்த, “நீ முதல்ல வா…” என்று அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உணவு மேசைக்கு அழைத்து சென்றார்.

“ராணி… ஹர்ஷாக்கு சாதம் எடுத்து வை….”

“ஹையோ வேண்டாம் மா… நான் கொண்டு வந்திருக்கேன்…”

“அது காலைல எவ்ளோ நேரமா செய்து எடுத்திட்டு வந்தியோ… இங்கே சூடா சாப்பிடு…”

“இ…இல்லம்மா… நான் அதையே சாப்பிட்டுக்கறேன்… சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு அம்மா எப்பவும் சொல்லுவாங்க…” என்றவள் அவள் பாகில் இருந்த சிறிய டிபன் பாக்சை எடுத்து மேசையில் வைத்தாள்.

“சரி… என்ன கொண்டு வந்திருக்கே…” என்றவர், உரிமையுடன் அதை எடுத்துத் திறந்தார்.

“அடடா… புளியோதரையா, நல்ல மணமா இருக்கே… யார் பண்ணினது… அம்மாவா, சரி சாப்பிடு…” என்றவர், “ராணி… பொறியல் எடுத்திட்டு வா…” என்றார்.

“இல்லம்மா… அம்மாக்கு ஆப்பரேஷன் பண்ணினதால எந்த வேலையும் செய்ய விட மாட்டேன்… அப்பவும் அவங்க சும்மா இருக்காம பக்கத்துல வந்து எப்படி செய்யணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க… அதனால ஓரளவுக்கு நல்லா சமைப்பேன்… நீங்க சாப்பிட்டுப் பாருங்களேன்…” என்று அவரிடம் நீட்டினாள்.

ஒரு ஸ்பூனால் சிறிது எடுத்து வாயில் போட்டுக் கொண்டவர், “அட, கோவில் புளியோதரை போல டேஸ்ட்டா இருக்கே…” பாராட்டிக் கொண்டே இன்னொரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டார். அதைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.

“ராணிம்மா… நீங்களும் கொஞ்சம் எடுத்துக்கோங்க…” என்று அவளுக்கு நீட்டினாள்.

“இல்லம்மா… நீங்க சாப்பிடுங்க, அதுவே இத்தனூண்டு தான் இருக்கு… நான் இன்னொரு நாள் சாப்பிட்டுக்கறேன்…” என்றார்.

“ம்ம்… ராணி, நீயும் சாப்பிட்டுப் பாரு… நீயும் தான் ஒரு புளியோதரை செய்வியே… அதுல புளிப்பைத் தவிர ஒண்ணும் இருக்காது… ஹர்ஷா கிட்டே இதோட பக்குவம் கேட்டுத் தெரிஞ்சுக்கோ…” என்றார் அவர்.

“சரிம்மா… கேட்டுக்கறேன்…” என்றவர், “இவ்ளோ நாள் என்னை செய்ய சொல்லி சாப்பிட்டுட்டு, இப்போ என் சமையலை குத்தம் சொல்லுறதைப் பாரு…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே, உருளைக்கிழங்கு பொடிமாசை ஒரு பிளேட்டில் கொண்டு வந்து வைத்தார்.

“ராணிம்மா… நாளைல இருந்து அம்மாவுக்கு என்னல்லாம் சாப்பிடலாம்… சாப்பிடக் கூடாதுன்னு ஒரு சார்ட் தரேன்… அந்த காய்கறி பிரகாரம் சமைச்சா போதும்… இதெல்லாம் அவங்களுக்கு சாப்பிட கூடாது…” என்றாள் ஹர்ஷா சாப்பிட்டுக் கொண்டே.

“நர்ஸம்மா… நான் சொன்னா அம்மா கேக்க மாட்டாங்க… அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் சாப்பிடணும், இல்லன்னா என்னை மிரட்டிகிட்டே இருப்பாங்க… நீங்க அவங்க கிட்ட சொல்லுங்க…” என்றார் ராணி மனதுக்குள் கருவிக் கொண்டே. “என் புளியோதரைல புளி மட்டும் தான் இருக்குமா, இனி உங்களுக்கு புளிப்பே சாப்பிடாதபடி செய்யறேன்…” என்று நினைத்துக் கொண்டே.

“ஓ… என்னைப் போட்டுக் குடுக்கறியா…” என நினைத்த ரேணுகா, “அதென்ன நர்ஸம்மா… என்னமோ வயசானவங்களைக் கூப்பிடுற போல… அழகா ஹர்ஷூம்மா னு கூப்பிட வேண்டியது தானே…”

“அதென்னமோ, அந்தப் பேரு என் வாயிலேயே நுழைய மாட்டேங்குது… அப்புறம் நான் எப்படிம்மா கூப்பிடறது…” என்றார் ராணி.

அவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வதைப் பார்த்த ஹர்ஷாவிற்கு சிரிப்பாய் வந்தது.

அவள் முகத்தில் சிரிப்பைப் பார்த்த ரேணுகா, “என்ன ஹர்ஷூம்மா… இவங்க ரெண்டு பெரும் இப்படிப் பேசறாங்களேன்னு பாக்குறியா… ஹூம், எனக்கும் பொழுது போகணும்ல… அதான், எப்பவும் ராணியை சீண்டிகிட்டே இருப்பேன்…  அவளும் விட்டுக் குடுக்காம வீராப்பா பேசுவா… இந்த வீட்டுல பத்து வருஷமா இருக்கா… நான் என்ன சொன்னாலும் என்னை விட்டுப் போக மாட்டா, அவளை என் தங்கை மாதிரி நினைச்சு தான் நானும் சண்டை போடுவேன்…” என்றவரைக் கண்டு ராணியின் கண்கள் குளமாகின.

“அம்மா…” என்று நெகிழ்ந்த ராணியின் அருகில் வந்தவர், “அடச்சீ, அசடே… நான் உன்னை எப்படிலாம் மிரட்டி இருப்பேன்… என் சிடுமூஞ்சி சிங்கார வேலன் எத்தனை தடவை உன்னைத் திட்டி இருப்பான்… இருந்தாலும் உனக்கு என்னை விட்டுப் போகணும்னு தோணினதே இல்லைல்ல, அதான் அன்பு… உனக்கு இந்த வீட்டு மேலயும், என் மேலயும் உள்ள அன்பு…” என்றவரை பிரமிப்பாய் பார்த்தாள் ஹர்ஷா.

அவளது திகைத்த முகத்தைக் கண்டவர், “என்னம்மா என்னை அப்படிப் பார்க்கறே…” என்றார்.

“இல்லம்மா… உங்க மகனோட சுபாவத்துக்கு அப்படியே ஆப்போசிட்டா இருக்கீங்க… பணக்காரங்க எல்லாருமே மனசைக் கழற்றி வச்சிடுறதில்லை… உங்களை மாதிரி அன்புக்கு மதிப்புக் கொடுக்கிறவங்களும் இருக்காங்க… எனக்கு உங்களை நினைச்சா ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு…”

“ஹஹா… இதுல என்னம்மா இருக்கு, என்னதான் பணம் இருந்தாலும் பசிக்குதேனு அதை எடுத்துத் தின்ன முடியுமா, இல்லை… உண்மையான பாசத்தை தான் விலைக்கு வாங்க முடியுமா… யாரோ ஒருத்தர் ஏமாத்திட்டாங்கன்னு ஒட்டு மொத்த மனித வர்கத்தையே சந்தேகப்படுறான் என் பிள்ளை… அவனைத் தப்பு சொல்லவும் முடியாது… அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள் அப்படி… இனி கிடைக்கப் போற அனுபவங்களாவது அந்த எண்ணத்தை மாத்த வைக்கணும்… அதான் என் ஆசை…” என்றவரின் குரல் கலங்கியிருந்தது.

“அவரும் புரிஞ்சுக்குவார்மா… நீங்க வருத்தப்படாதீங்க…” என்றாள் அவள் ஆதரவாக. அவளுக்கு ஆறுதல் சொல்ல வந்தவருக்கு அவள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது வருத்தம் எல்லாம் மாறியிருந்தது.

“ம்ம்… நீ சொன்ன போல நடந்தா ரொம்ப சந்தோசம் தான் மா… நீ வந்ததும் தான் இந்த வீடே கலகலன்னு இருக்கு… பேசிட்டே இருக்கணும் போலத் தோணுது…” என்றார் அவர் சிறு குழந்தையாக.

“ஹஹா… சரிம்மா… இனி உங்களுக்குப் போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு நாம பேசிட்டே இருக்கலாம்… இப்ப நீங்க கொஞ்சம் தூங்குங்க…”

“ம்ம்… சரிடா, சஞ்சு சொன்னதுல சங்கடப்பட்டுகிட்டு நாளைக்கு வராம இருந்துட மாட்டியே…” ஏக்கத்துடன் கேட்டவரைக் கண்டு புன்னகைத்தாள்.

“இல்லைம்மா… அவர் மேல கூட இப்போ வருத்தம் இல்லை… இந்த மாதிரி ஒரு அம்மாவுக்குப் பையனா இருக்கறவர், கண்டிப்பா தப்பா இருக்க முடியாது… எல்லாருக்குமே அனுபவங்கள் தான் அவங்க சுபாவத்தை மாத்துது… எனக்குப் புரியுது மா, நான் கண்டிப்பா நாளைக்கு வருவேன்… உங்களைப் போல ஒரு அருமையான அம்மாவுக்காக…” என்றாள் சந்தோஷத்துடன்.

“ம்ம்… எனக்கு இது போதும்டா…” என்றவர், “சரி, நான் கொஞ்சம் தூங்கிட்டு வரேன்… மாத்திரையைப் போட்டதுக்கு கண்ணை சுழற்றிகிட்டு வருது… நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு… ராணி, சாயந்திரம் கொஞ்சம் பாயசம் பண்ணிடுறியா… இன்னைக்கு ஹர்ஷா வந்த நாளைக் கொண்டாடின போல ஆச்சு…” என்று கூறினார்.

“என்னது பாயசமா… அதெல்லாம் வச்சா தம்பி என்னைக் கொன்னே போடும், நீங்க விளையாடுறீங்களா… சுகர் வேற தாறுமாறா இருக்குன்னு தம்பி சொல்லிட்டு இருந்தார்…” என்றார் ராணி.

“அதெல்லாம் நாலு மாத்திரையை அதிகம் போட்டு சரி பண்ணிக்கலாம்… நீ பாயசம் பண்ணிடு… சக்கரை கொஞ்சம் தூக்கலா…” என்று கூற, “அம்மா, என்ன சொல்லறீங்க… பாயசம்… அதுவும் சக்கரை தூக்கலாவா…” என்றாள் ஹர்ஷா அதிர்ச்சியுடன்.

“ஹஹா…. சும்மாடா… நான் ஒரே ஒரு ஸ்பூன் பேருக்குக் குடிச்சுக்கிறேன்… நீ பயப்படாதே… ஆனா பாயசம் கண்டிப்பா வேணும், சொல்லிட்டேன்…” என்று ராணியை மிரட்டிக் கொண்டே அறையை நோக்கி நடந்தார். அவரை அதிசயமாய் பார்த்துக் கொண்டே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் ஹர்ஷா.

Advertisement