Advertisement

இதயம் – 4

“ராணி….”

பெரிய ஹாலில் நிறைந்திருந்த சோபாவில் உடம்பைக் கொடுத்திருந்த ரேணுகா தேவி அடுக்களையை நோக்கிக் குரல் கொடுக்க, உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவரிடம் வந்தார்.

“சொல்லுங்கம்மா…”

“எனக்கு சக்கரை கொஞ்சம் தூக்கலாப் போட்டு ஸ்ட்ராங்கா ஒரு காப்பி எடுத்திட்டு வா, குடிக்கணும் போலருக்கு…”

“அம்மா… சக்கரை போட்டா அய்யா திட்டுவாரே…”

“அவன் தான் வீட்ல இல்லையே, அவன் கிட்ட நான் சொல்ல மாட்டேன்… நீ தைரியமா எடுத்திட்டு வா…”

“அம்மா… உங்களுக்கு சுகர் ஜாஸ்தி ஆயிருச்சு, கண்டிப்பா சக்கரை போடக் கூடாதுன்னு அய்யா சொல்லிருக்காருங்க…” என்றாள் அவள் தயக்கத்துடன்.

“ஓ… அப்ப ஐயா சொன்னா தான் நீ கேப்ப, நான் சொன்னா கேக்க மாட்டே… எனக்கு இந்த வீட்டுல எந்த அதிகாரமும் கிடையாதுன்னு சொல்ல வர்ற… அப்படித்தானே…” குழந்தை போல அடம் பிடித்தார் ரேணுகா.

“அச்சோ அம்மா, நான் அந்த அர்த்தத்துல சொல்லலை… அய்யா சொல்லை மீறி நான் ஏதும் செய்தா, அப்புறம் என்னை வேலைய விட்டே தூக்கிடுவார்… அதான் பயமா இருக்கு…”

“ஓ… அப்ப நான் வெறும் டம்மின்னு சொல்ல வர்றே…”

“இல்லம்மா… அது வந்து…” அவள் அவஸ்தையாய் கையைப் பிசைய, “நீ இப்போ காப்பி எடுத்திட்டு வரலைன்னாலும் உன் வேலை போயிடும், ஜாக்கிரதை…” மிரட்டினார்.

“ச…சரிம்மா, காப்பி எடுத்திட்டு வரேன்…” என்றவள், அடுக்களைக்குள் நுழைந்தாள்.

“இந்தம்மாவுக்கு உடம்புல இல்லாத வியாதி இல்லை… ஆனாலும் வாயைக் கட்ட மாட்டேங்குது… நம்மளை மிரட்டியே காரியத்தை சாதிச்சுக்க வேண்டியது…” எனப் புலம்பிக் கொண்டே காபியைக் கலக்கத் தொடங்கினார்.

அப்போது இன்டர்காம் ஒலிக்க, எழுந்து சென்று அதை எடுத்தார் ரேணுகா. முன் கேட்டில் இருந்து செக்யூரிட்டி தான் அழைத்திருந்தான்.

“ம்ம்… சொல்லு ராம் பாபு…”

“அம்மா… ஹர்ஷான்னு ஒரு பொண்ணு, உங்களைப் பார்க்க வந்திருக்கு… சுகந்தி டாக்டர் அனுப்பின நர்சுன்னு சொல்ல சொன்னாங்க…”

“ஓ… அப்படியா… அவங்களை உள்ள விடு…” என்றார் அவர்.

சிறிது நேரத்தில் வாசலில் ஸ்கூட்டி சத்தம் கேட்க, அதை ஓரமாய் நிறுத்திவிட்டு நர்ஸ் யூனிபார்முடன் கீழே இறங்கிய ஹர்ஷா பார்வையை சுழல விட்டாள். இரண்டு நிலைகளைக் கொண்ட குட்டி பங்களா. வீட்டின் நடை பாதையின் இரு புறமும் பச்சைப் புல் மரகதக் கம்பளம் விரித்தாற் போல கண்ணை நிறைத்தது. சுவரை ஒட்டியபடி விதவிதமான கலரில் ரோஜாச் செடிகள் மட்டும். ரசனையோடு கட்டப்பட்ட அழகான வீடு.

கடவுளை மனதுக்குள் தியானித்துக்கொண்டே படியேறியவள், உள்ளே ஹாலில் கம்பீரமாய் அமர்ந்திருந்த ரேணுகாவைக் கண்டதும் ஆச்சர்யப்பட்டாள்.

“இவங்க அன்னைக்குக் கோவில்ல பார்த்த அம்மா தானே… அந்த ஹிட்லரோட வீடா இது, அய்யய்யோ… அந்தாள் வீட்ல எப்படி வேலை செய்யறது…” யோசித்துக் கொண்டு உள்ளே செல்ல தயங்கியவளைக் கண்டதும், சந்தோஷத்துடன் எழுந்து அவளருகே வந்தார் ரேணுகா.

“அடடா… நீதான் சுகந்தி சொன்ன நர்ஸ், ஹர்ஷாவா… உன்னைப் போலவே உன் பேரும் ரொம்ப அழகாருக்குமா… உள்ளே வா, ஏன் அப்படியே நிக்கறே…” அன்போடு பேசியவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உள்ளே நுழைந்தாள்.

மனதுக்குள் சிறு குழப்பம் வந்திருந்தது. அந்த சிரிக்கக் கூடத் தெரியாத ஹிட்லர் இருக்கும் வீட்டில் காலை முதல் மாலை வரை எப்படி இருப்பது… யோசித்தவளுக்கு ரேணுகா கூறிய வார்த்தை சந்தோஷத்தைக் கொடுத்தது.

“உக்காரும்மா… என் மகன் காலைல கிளம்பினா நைட்டு தான் வீட்டுக்கு வருவான், அவன் வீட்ல இருந்தாலும் மொபைலும் லாப்டாப்பும் தான் கையில… ஹூம், பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாம, தனியா இருக்குறது தான் எனக்கு மிகப் பெரிய நோய்னு நினைக்கறேன்…”

“ஓ… அப்படியானால் பகல்ல இந்தம்மா மட்டும் தான் வீட்டில் இருப்பார்கள் போலிருக்கு… அப்படியானால் பிரச்சனை இல்லை…” எனத் தன்னைத் தானே மனதுக்குள் சமாதானித்துக் கொண்டாள்.

“அன்னைக்கு கோவில்ல பார்த்த போதே உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு… இப்ப நீயே இங்க வந்ததுல ரொம்ப சந்தோசம் மா…” என்றவர், அவள் கையைப் பிடித்துக் கொண்டார். அவளுக்கு ஏனோ அவரைப் பார்க்க பாவமாய்த் தோன்றியது. ஒரு பணக்கார ஏழை… பணத்துக்கு எந்தக் குறைவும் இல்லா விட்டாலும் தனிமை சூழலில் சிக்கித் தவிக்கும் ஏழை தானே…

“வருத்தப் படாதிங்க மேடம், நான்தான் உங்ககூட இருக்கப் போறேனே… நாம எப்பவும் பேசிட்டே இருக்கலாம்…” என்றவள் அழகாய் சிரிக்க, ரேணுகாவின் முகம் சுருங்கியது.

“அன்னைக்கு கோவில்ல பார்த்தவுடனே அம்மான்னு கூப்பிட்டே… இன்னைக்கு எதுக்கும்மா மேடம் எல்லாம்…” என்றார் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.

“அன்னைக்கு நீங்க யாருன்னு தெரியாது… அதான் அம்மான்னு சொன்னேன்… இன்னைக்கு நீங்க என் முதலாளிம்மா இல்லையா… வேலைன்னு வரும்போது மேடம்னு கூப்பிடறது தானே சரி, அதான்…..” என்றாள் ஹர்ஷா.

“அய்யே… அதெல்லாம் வேண்டாம்… நீ என்னை அன்னைக்கு மாதிரி அம்மான்னே கூப்பிடு, அது பிடிக்கலைனா ஆண்ட்டின்னு கூப்பிடு… இந்த மேடம், மோடம் எல்லாம் வேண்டாம்…” என்றார் அவர்.

“சரிம்மா… உங்க இஷ்டம்…” என்றாள் அவள் புன்னகையுடன். அவளுக்கு அவரது பேச்சு மிகவும் நெருங்கிய ஒரு உணர்வைக் கொடுத்தது.

ராணி அதற்குள் காப்பியை எடுத்து வர, “இவங்களுக்கு குடு ராணி… இவங்க தான் இனி என்னோடவே இருந்து என்னைப் பார்த்துக்கப் போறாங்க…” என்றார் ரேணுகா சந்தோஷத்துடன். ராணிக்கும் அவர் சர்க்கரை போட்ட காப்பியைக் குடிக்காமல் ஹர்ஷாவிற்கு கொடுத்ததில் மிகவும் சந்தோசம்.

“ஓ… நீங்க தான் அய்யா சொன்ன புது நர்சம்மாவா… வணக்கம் மா…” என்றாள் அவள்.

“வணக்கம் ராணிம்மா… நான் வரப் போறேன்னு முதல்லையே காபி கலந்துட்டீங்களா…” என்றவள், “காப்பி சூப்பர்… ஆனா, சர்க்கரை தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு…” என்றாள்.

அவள் இயல்பாய் பேசியது ராணிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் ரேணுகாவைத் தயக்கமாய் பார்த்தார். அவருக்குப் போட்ட காப்பி என்று எப்படி சொல்லுவது. அவர் கண்ணால் ஜாடை காட்ட அதை கவனித்து விட்டாள் ஹர்ஷா.

“என்னம்மா, இது உங்களுக்கு கலந்த காப்பியா…” என்றவள் அவரை நோக்கி கண்ணை உருட்ட, “கிகி… எப்பவாவது இத்தனூண்டு காப்பி, இப்படிக் கலந்து குடுக்க சொல்லுவேன்.. இனி குடிக்கலை மா…” என்று வழிந்தார் அவர்.

“ம்ம்… சரிம்மா, உங்களைப் பத்தி டாக்டர் நிறைய சொன்னாங்க… இருந்தாலும் உங்க மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் குடுங்க… நான் ஒரு தடவை பார்த்திடறேன்…” என்றாள் அவள்.

“அதெல்லாம் எங்கே ஓடிடப் போகுது… நீ இனி இங்கே தான இருக்கப் போறே… அதை அப்புறம் பார்க்கலாம் மா, முதல்ல உன்னைப் பத்தி சொல்லு… உன் வீடு எங்கிருக்கு… அம்மாக்கு ஏதோ ஆப்பரேஷன் பண்ணி இருக்குனு சுகந்தி சொன்னா… அவங்க நல்லாருக்காங்களா…” என்று விசாரிக்கத் தொடங்கினார்.

அவளைப் பற்றி, அவள் வீட்டைப் பற்றி அவள் சொல்ல, குடும்பத்தை தன் தோளில் சுமக்கும் அவளை நினைத்து ரேணுகாவிற்கு பெருமிதமாய் இருந்தது.

“ம்ம்… உன்னை உன் அம்மா நல்லா வளர்த்திருக்காங்க மா… உன்னைப் பத்தி கேக்கும்போது எனக்கு இப்படி ஒரு பொண்ணு இல்லையேனு வருத்தமா இருக்கு… என் மகனும் இந்தக் குடும்பத்துக்காக எல்லாமே பண்ணறான் தான்… ஆனா அவன் ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல ஆகிட்டான்… அதான் என் கவலை, அவனுக்குன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா என் பாதி நோய் குறைஞ்சிரும்…” என்றார் கவலையுடன்.

“ம்ம்ம்ம்… ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமப் போன ஹிட்லராச்சே உங்க மகன்…” மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

“எல்லாம் சரியாகும்மா, நீங்க கவலைப் படாதீங்க… உங்களுக்கு ரெண்டு பசங்கன்னு டாக்டர் சொன்னாங்க… இன்னொருத்தர் எங்கிருக்கார்…”

அதைக் கேட்டதும் அவர் முகம் மலர்ந்தது.

“என் ரெண்டாவது பையன் சென்னைல ஒரு பெரிய ஐடி கம்பெனில, பெரிய பதவில வேலைல இருக்கான்… அவன் இங்க இருந்தா வீடே கலகலன்னு இருக்கும்… என்னைக் கொஞ்சிட்டு, என் பின்னாடியே சுத்திட்டு இருப்பான்… எனக்கும் பொழுது போறதே தெரியாது, ஹூம்… இந்த மூத்தவன் தான் அவனைக் கொஞ்ச நாள் வேலைக்கு போயி மனுஷங்களையும் தொழிலையும் பழகட்டும்னு சென்னைக்கு அனுப்பி வச்சுட்டான்… இங்கிருந்தா நான் அவனை செல்லம் கொடுத்து கெடுத்திருவேனாம்…” என்றார் அவர்.

“ஓ… இவருக்கு தனிமை தான் பெரிய நோய் போலிருக்கிறது…” என நினைத்துக் கொண்டாள் ஹர்ஷா.

“சரிம்மா… நீ ராணி கூடப் போயி வீடெல்லாம் சுத்திப் பாரு… மாடில என் ரூமுக்குப் பக்கத்துல தான் உனக்கு ரூம்… நீ அதை யூஸ் பண்ணிக்கோ… நீ எதுக்கு வீட்டுலயும் நர்ஸ் யூனிபார்ம் போட்டிருக்கே… கலர் டிரஸ் போட்டு வந்தா போதும்…” என்றார் அவள் உடையைப் பார்த்து.

“நான் ஹாஸ்பிடல் போயிட்டு அப்படியே வந்துட்டேன் மா… அதான் நேரம் ஆயிடுச்சு… நாளைல இருந்து நேரமா, கலர் டிரஸ்லயே வந்திடறேன்…” என்றாள் அவள் சிரிப்புடன்.

“ம்ம்… சந்தோசம் மா, நீ சிரிச்சா அப்படியே மகாலட்சுமி போலருக்கு…” என்றார் அவர் புன்னகையுடன்.

“ஹஹா… சரிம்மா, நான் வீட்டைப் பார்த்துட்டு வரேன்…” என்றவள் ராணியுடன் நடந்தாள். ராணியிடம் ரேணுகாவின் உணவு வழக்கத்தை விசாரித்துக் கொண்டே அந்தப் பெரிய அழகான வீட்டை சுற்றி வந்தாள் ஹர்ஷா.

மீண்டும் ரேணுகாவிடம் வந்தவளை, “என்னம்மா வீடெல்லாம் பார்த்துட்டியா, என் ரூமைப் பார்த்தியா…” என்றார் அவர்.

“ம்ம்… பார்த்துட்டேன் மா, ஏன் மாடி ரூம் உபயோகிக்கறீங்க… கீழே ரூம் இல்லையா…” என்றாள் அவள் யோசித்துக் கொண்டே.

“ஏன்மா… என்னாச்சு…”

“உங்களுக்கு கால் வலி இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க… அப்புறம் மாடி ஏறி இறங்கினா அதிகமாகத்தானே செய்யும்… கீழே ரூம் இல்லையா…”

“ஓ… கீழே ரெண்டு ரூம் சும்மா தான் இருக்கு… அவர் இருந்த போது கீழ் ரூம்ல தான் நாங்க இருந்தோம்… மேல மாடில தான் பசங்க ரூம் இருக்கு… ராத்திரி என்னைத் தனியா கீழே இருக்க வேண்டாம்னு அவங்க பக்கத்துக்கு ரூம்லயே என்னையும் தங்க வைச்சுட்டாங்க…”

அவரது கணவரின் நினைவுகளை சுமந்திருந்த அந்த அறையைப் பிரிந்த ஆதங்கம் அதில் வெளிப்பட்டது.

“சரிம்மா… நாம கீழே உள்ள அறையை பழைய போல உங்களுக்கு மாத்திட்டா என்ன…” என்றாள் ஹர்ஷா. அதைக் கேட்டதும் அவர் கண்களில் ஒரு மலர்ச்சி.

“சரிம்மா, மாத்திடலாம்…” என்றவர், “ராணி, என் பழைய ரூமை ரெடி பண்ணு… ராமுவையும் துணைக்குக் கூப்பிட்டுக்கோ…” என்றார்.

“சரிம்மா… நீங்க மாடில கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க… நாங்க இங்கே ரூமெல்லாம் ரெடி பண்ணிட்டு உங்களைக் கூப்பிடறோம்…” என்றாள் ஹர்ஷா.

“ம்ம்… வந்த முதல் நாளே எல்லாத்தையும் மாத்தத் தொடங்கிட்டே… என் மகனைக் கூட கொஞ்சம் மாத்திட்டா நல்லா தான் இருக்கும்…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர், பெருமூச்சுடன் மாடிப்படி ஏறினார்.

கீழே அறையை மாற்றி அமைத்துக் கொண்டே உணவு நேரம் ஆனதும், மதிய உணவுடன் அவர் அறைக்கு சென்றாள் ஹர்ஷா.

“அம்மா… சாப்பிடலாமா…”

கட்டிலில் சாய்வாய் அமர்ந்து கண்ணாடியின் வழியே ஜெயகாந்தனின் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவர் நிமிர்ந்தார்.

“இங்கேயே கொண்டு வந்துட்டியா… நான் கீழே வந்திருப்பேனே…”

“இல்லமா… நீங்க மாடி ஏறி, இறங்க வேண்டாம்னு தான் நானே எடுத்திட்டு வந்தேன்…”  என்றவளிடம், “சரி… நீயும் சாப்பிடு…” என்றார்.

“இல்லம்மா… நீங்க சாப்பிடுங்க, நான் வீட்ல இருந்து கொண்டு வந்துட்டேன்… நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்…”

“ஓ… நாளைல இருந்து நீ கொண்டு வர வேண்டாம் மா, இங்கயே என்னோட சாப்பிடேன்… தனியா உக்கார்ந்து சாப்பிட்டா சாப்பாடே இறங்க மாட்டேங்குது…”

“உங்க மகன் லஞ்சுக்கு வர மாட்டாரா…”

“அவன் காலைல கிளம்பினா நைட் தான் வீட்டுக்கு வருவான்… எந்த நேரத்துல எங்கே இருப்பான்னு சொல்ல முடியாது… சில நாள் நைட் வீட்டுல என்னோட சாப்பிடுவான்…”

“ஓ… சரிம்மா, நாளைல இருந்து நாம ஒண்ணா சாப்பிடுவோம்… இப்ப நீங்க  சாப்பிட்டு மாத்திரை போடுங்க…” என்றவள், அவருக்குப் பரிமாற அவர் கை அலம்பிவிட்டு சாப்பிட வந்தார்.

அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவள், முடித்ததும் மாத்திரையைக் கொடுத்து, “நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் கொஞ்ச நேரத்துல ரூமை ரெடி பண்ணிட்டு வந்து கூப்பிடறேன்…” என்றாள்.

“ம்ம் சரிம்மா…” என்றதும் அவள் நகர்ந்தாள்.

மீண்டும் புக்கைக் எடுக்கப் போனவர், அலைபேசி அலறவே அதை எடுத்தார். சஞ்சய் தான் அழைத்திருந்தான்.

Advertisement