Advertisement

“ஆண்ட்டி… கல்யாணத்தைப் பத்தி எனக்கு இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை…. நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு… அதுக்கு இந்த குடும்பம், குழந்தை எல்லாம் ஒரு தடங்கலா இருக்கும்கிறது என் அபிப்ராயம்… அதுனால அதைப் பத்தி பேசிப் பிரயோசனம் இல்லை ஆண்ட்டி… அதுக்கு தான் அம்மாவுக்கு ஒரு ஹோம் நர்ஸை ஏற்பாடு பண்ணலாம்னு யோசிச்சேன்… உங்க கிட்டே நான் சொல்லி இருந்தேனே… அந்த மாதிரி நம்பிக்கையான நர்ஸ் யாராவது இருக்காங்களா…” என்றான்.

“ம்ம்… ஒரு பொண்ணு இருக்கா, ரொம்ப பொறுமையான, புத்திசாலியான பொண்ணும் கூட… நம்ம வீட்டுப் பொண்ணைப் போல நம்பலாம்… என்கிட்டே ரெண்டு வருஷமா வொர்க் பண்ணுறா… ஆனா அவளுக்கு நைட் தங்க முடியாதுன்னு சொல்லுறா… அவங்க அம்மாக்கு ஒரு ஹார்ட் ஆப்பரேஷன் முடிஞ்சிருக்கு… சோ, நைட் அவங்களோட இருக்கணும்னு நினைக்குறா… மார்னிங் எட்டுல இருந்து நைட் எட்டு வரைக்கும் போதும்னா அவ வருவான்னு நினைக்கறேன்… இல்லன்னா வேற நர்ஸ் யாரையாவது யோசிக்கணும்…” என்றார் அவர்.

“ஓ…” என்றவன் யோசித்தான்.

அவனுக்கும் இரவில் ஏதோ ஒரு தெரியாத பெண்ணை வீட்டில் கொண்டு வந்து தங்க வைப்பதில் உடன்பாடில்லை… இரவு எப்படியும் அவன் வீட்டுக்கு வந்து விடுவான்… அதனால் பிரச்சனை இல்லை…” என நினைத்தவன், “சரி… ஆண்ட்டி, அந்தப் பொண்ணையே வர சொல்லிடுங்க… நல்ல சம்பளமும் கொடுத்திடலாம்… ஆனா, பொறுமையா, அம்மாவை நல்லா பார்த்துக்கணும்… நம்பிக்கையா நடந்துக்கணும்… அது ரொம்ப முக்கியம்…” என்றான்.

“அதெல்லாம் பிரச்சனை இல்லை சஞ்சய்… என்னைப் போல நீங்க அவளை நம்பலாம்…” என்று சிரித்தவர், “அத்தை, அந்தப் பொண்ணு வார்ட்ல தான் இருக்கா… வரச் சொல்லவா, பார்த்துட்டுப் போறிங்களா…” என்றார்.

“இல்லை ஆண்ட்டி… நீங்களே சர்டிபிகேட் கொடுத்துட்டீங்க, அப்புறம் என்ன…  எனக்கு அர்ஜண்டா ஒரு மீட்டிங் போயாகணும்… அம்மாவுக்கு வேண்டி தான் வந்தேன்… நீங்க அந்தப் பொண்ணு எப்போ வருவான்னு பேசிட்டு அம்மாகிட்ட போன்ல சொல்லிடுங்க… அவங்க பார்த்துக்குவாங்க…”  என்றவன் எழுந்தான்.

“ம்ம்… சரி அத்தை, அந்தப் பொண்ணு எப்படியும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வர்ற மாதிரி பார்த்துக்கறேன்… அது வரைக்கும் மறக்காம இந்த மாத்திரையைப் போடுங்க…” என்றவர் ஒரு சீட்டை அவரிடம் நீட்டினார்.

“ம்ம்… சரி சுகந்தி, இவனைக் கல்யாணத்தைப் பண்ணி மருமகளைக் கூட்டிட்டு வரச் சொன்னா, என்னைப் பார்த்துக்க ஒரு நர்சைக் கூட்டிட்டு வரான்… நேரடியா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்குறான் போலருக்கு… ம்ம்ம்… என்ன நடக்கணும்ன்னு இருக்கோ நடக்கட்டும்…” பெருமூச்சை விட்டுக் கொண்டே எழுந்து விடை பெற்றவர் மகனுடன் நடந்தார்.

உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரை எனப் புகழ் பெற்ற மெரினா கடற்கரை அந்த மாலை நேரத்தில் ஜெகஜோதியாய் இருந்தது. வண்ண வண்ணப் பட்டாம் பூச்சிகளின் உற்சாகக் குரல்களும், குழந்தைகளின் சந்தோஷக் குரலும், பெரியவர்களின் அக்கறைக் குரலும் என அங்கங்கே பல தரப்பட்ட வெளிப்படுத்தல்களைக் கொண்டிருந்த குரல்கள்.

உழைப்பாளர் சிலை அருகே கடலை ரசித்துக் கொண்டே கடலை போட்டுக் கொண்டிருந்தது அந்தக் கன்னியர் கூட்டம். எல்லாம் நம்ம பஞ்ச பாண்டவிகள் தான்… அங்கங்கே நின்று கொண்டிருந்த காளையர் கூட்டமோ அவர்களை கண்களால் மொய்த்துக் கொண்டிருந்தது.

“ஏய்… ஷீலு, காலைல நம்ம கிங்காங் கிட்டே அசைன்மெண்ட் முடிக்காம டோஸ் வாங்கிட்டு, அதை செய்து முடிக்காம இன்னைக்கு பீச்சுக்கு வந்தே ஆகணும்னு உனக்கு என்ன அவசியம்…” என்றாள் அகிலா.

“ப்போடிப் போடி பொடிமாசு, டோஸ் வாங்குறதெல்லாம் நமக்கு ஒரு மேட்டரா என்ன… இதுக்குப் போயி யாராவது பீல் பண்ணி உடனே முடிச்சுக் கொடுப்பாங்களா… அப்புறம் நம்ம கௌரவம் என்னாகுறது…” என்றவளை முறைத்தாள் தீபா.

“ஏய் தீப்ஸ்… நீ ஏண்டி அந்த முழியாங்கண்ணை உருட்டி உருட்டிப் பாக்கறே… கிங்காங் விட எனக்கு உன்னை தான் பயமா இருக்கு…” என்று பயப்படுவது போல செய்தாள் ஷீலா. அதைக் கண்டதும் மற்றவர்கள் சிரித்தனர்.

“சரி… விடுங்கடி, ஏதோ கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்னு பீச்சுக்கு வந்தா இங்கயும் வந்து அட்வைஸ் பண்ணிகிட்டு… நான் அலைல விளையாடப் போறேன், என்னோட யாரெல்லாம் வரீங்க…” என்றாள் கவிதா.

“நான் வரேன்டி கவி…” என்ற ஷீலுவும், அகிலாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள அவள், “நீங்க வரலையா பக்கீஸ்…” என்றாள் வர்ஷா, தீபாவை நோக்கி.

“இல்லடி… நீங்க போங்க, நாங்க இங்கே இருந்து பார்க்கறோம்…” என்றாள் தீபா.

“ஓகே… பியூட்டிஸ்…” என்றவர்கள், அலையில் கால் நனைத்து விளையாட சென்றனர். அவர்கள் சிரிப்பும் கும்மாளமுமாய் அலையுடன் ஓடுவதும் திரும்பி வருவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அலையையே வெறுமையாய் பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்த வர்ஷாவை ஏறிட்டாள் தீபா.

“என்னடி வரு… என்ன யோசிச்சுட்டு இருக்கே, அம்மா நினைவு வந்திடுச்சா…”

“ம்ம்… அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு… பாவம் அக்கா, அம்மாவை கவனிச்சுகிட்டே வேலைக்கும் போயி, மருந்து செலவு, என்னோட படிப்பு செலவையும் பார்த்துட்டு ரொம்ப கஷ்டப்படறா…. சீக்கிரம் எக்ஸாமை முடிச்சிட்டு அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுது… இப்போ யார் வீட்டுக்கோ ஹோம் நர்ஸா வேற போகப் போறாளாம்…” அவள் குரலில் வருத்தம் நிறைந்திருந்தது.

“ம்ம்… எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தானே… ஒரு மாசத்துல நமக்கு ஸ்டடி லீவ் வந்திரும்… அப்புறம் எக்சாம், அதுக்கப்புறம் நாம நினைச்ச போல ஒரே இடத்துல நமக்கு நல்ல வேலையும் கிடைச்சுட்டா அக்காவோட பாரமும் குறையும்… உன் வருத்தமும் மறையும்… சரி வா, கொஞ்ச நேரம் நாமும் விளையாடலாம்… இப்போ இதெல்லாம் நினைச்சு புலம்பி எதுவும் ஆகப் போறதில்லை…” அவளை சமாதானப் படுத்தினாள் தீபா.

“ம்ம்… சரிதாண்டி, இங்கயே நல்ல ஐடி கம்பெனி எதுலயாவது டிரை பண்ணனும்… அப்பத்தான் நல்ல சாலரி கிடைக்கும்… சரிடி, நீ போயி அவங்களோட விளையாடு… நான் அம்மாவுக்கு போன் பண்ணிட்டு வரேன்… அப்ப தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…” என்றாள் வர்ஷா.

“ஓகே மச்சி, சீக்கிரம் வா…” என்ற தீபா, எழுந்து அலையோடு விளையாட சென்றாள். அவர்கள் விளையாடுவதைப் புன்னகையுடன் நோக்கிக் கொண்டே அலைபேசியை எடுத்தவள், அன்னைக்கு அழைத்துக் கொண்டே மணலில் கால் புதையப் புதைய நடந்தாள்.

சிறிது நேரம் அவருடைய உடல் நிலையைப் பற்றியும், ஹர்ஷாவைப் பற்றியும் பேசிவிட்டு அலைபேசியை வைத்தவளின் மனம் சற்றுத் தெளிந்திருக்க, காதில் அந்தக் குரல் கேட்டது.

அவளுக்குப் பின்னில் இருந்து தான் ஒலித்தது.

எங்கேயோ கேட்டு மறந்த நினைவடுக்கில் அவள் ஒதுக்கி வைத்த அதே குரல்.

“நோ டார்லிங்… அப்படில்லாம் சொல்லக் கூடாது, எனக்கு மட்டும் உன்னைப் பார்க்கணும்னு ஆசை இருக்காதா… கொஞ்சம் கேப் கிடைச்சாலும் உன்னைப் பார்க்க ஓடி வந்திட மாட்டேனா… என் செல்ல டார்லிங், எனக்கு உன் மேல லவ்வே இல்லேன்னு சொன்னா எப்படி…”

“…………………..”

“எப்படா உன்னைப் பார்க்க வருவேன்… என் டார்லிங் மடில படுத்துட்டு கொஞ்சுவேன்னு இருக்கு… உன் கையால ஊட்டி விட்டேன்னா அப்படியே தேவாமிர்தமா இனிக்கும்… இங்கே ஏதும் சாப்பிடவே பிடிக்கலை தெரியுமா…”

“…………………….”

“டார்லிங்… நீ என் பக்கத்துல இருந்தா எப்படில்லாம் கவனிச்சுப்பே… இங்கே யார் என்னை கவனிக்குறா… நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணறேன் டார்லிங்…. இந்த வாரம் கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன்… ஓகே டார்லிங், மிஸ் யூ லாட்… உம்மா…” என்றவனின் குரலைக் கேட்டதும் தோன்றிய உற்சாகம் அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டதும் அப்படியே வடிந்தது.

அலைபேசியை வைத்துவிட்டுத் திரும்பிய விக்ரம் அங்கே நின்று கொண்டிருந்த வர்ஷாவின் முகத்தில் தெரிந்த வர்ண ஜாலங்களைக் கண்டு அதிசயித்தான். அவள் முகத்தில் கோபமும், வருத்தமும், ஏக்கமும் மாறி மாறிப் போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

அவர்கள் சந்திப்புக்குப் பிறகு சில நாட்கள் அவனது முகம் அவள் கண்ணுக்குள்ளேயே நின்றாலும், படிப்பில் கவனம் செலுத்தி அந்த முகத்தை ஒதுக்கி வைத்தாள் வர்ஷா. இப்போது அவனைக் கண்டதும் அவளையும் மீறி அந்த முகம் மீண்டும் கண்ணுக்குள் ஒட்டிக் கொண்டது.

“வாவ்… பியூட்டிபுல்…” என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே அவளிடம் வந்தான் விக்ரம்.

மனதுக்குள் அவசரமாய் ஒரு கவிதை பிறந்தது.

“கையில் வந்த வானவில்லாய்

கண்ணில் வண்ணம் பகர்ந்து சென்றாய்…

காலமெல்லாம் எண்ணத்திலே

கரம் கோர்க்க வருவாயோ

என் வண்ணத்துப் பூச்சியே…”

“ஹாய் பட்டர்பிளை, என்ன இந்தப் பக்கம்…”

“ம்ம்… சுண்டல் விக்கலாம்னு வந்தேன்… நீங்களும் ரெண்டு பொட்டலம் வாங்கிக்கறீங்களா…” என்றவளின் குரலில் பறந்த அனலைக் கண்டு யோசித்தவன், “ஓ… அதானா விஷயம்…” என நினைத்துக் கொண்டான்.

“டேய் விக்கி, இந்தாடா சுண்டல்…” கூறிக் கொண்டே இரு பொட்டலங்களுடன் அங்கே ஹாஜர் ஆனான் ராஜீவ்.

“இவன் ஒருத்தன்… நேரம் காலம் இல்லாம ஹாஜராயிட்டு…” மனதுக்குள் அவனைக் கொஞ்சினான் விக்ரம்.

“ஹேய்… என்னடா பட்டர்பிளை இந்த திசையில் பறக்குது… அப்போ சில்வண்டும் கூட இருக்கணுமே…” என்றவன் அவன் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு தீபாவைத் தேடிக் கொண்டே நகர்ந்தான். அவன் சொன்னதைக் கேட்டாலும் அவள் மனதுக்குள் விக்ரம் பேசியதே புகைந்து கொண்டிருந்ததில் கவனிக்கவில்லை.

“ஹாய்… கூல், நான் விக்ரம்… நீங்க…” புன்னகையுடன் கை நீட்டினான்.

“ஓ… விக்ரம்னு பேர் இருந்தா பெரிய விக்கிரமாதித்த மகாராஜான்னு நினைப்பா… கூடவே எப்பவும் ஒரு வேதாளம் வேற… இப்படிதான் பப்ளிக்ல போன்ல கொஞ்சுவாங்களா…” என்றாள் கடுப்புடன்.

“ஹஹா… அவன் வேதாளமா, சரியான பேர்தான்…” திகைத்த புன்னகையுடன் புருவத்தைத் தூக்கியவனை அவளது கண்கள் விலகாமல் நோக்கின.

“எத்தனை அழகான முகம்… வசீகரிக்கும் கண்கள், ச்சே… இவனை எப்படி என்னால் கொஞ்சம் கூட வெட்கமின்றி ரசிக்க முடிகிறது… இவன்தானே சற்று முன்னால் யாரையோ போனில் கொஞ்சிக் கொண்டிருந்தான்…” என்று நினைத்தவளின் முகம் மீண்டும் சுருங்கியது. கடுப்புடன் நிமிர்ந்தாள்.

“ஹலோ மிஸ்டர் விக்ரமாதித்தன், நீங்க எதுக்கு என்னை பட்டர்பிளைனு கூப்பிடறீங்க… யார் உங்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்தது…” என்றவளின் படபடத்த விழிகளை நோக்கியவன்,

“இதோ இந்த விழிகள் தான்… அப்படியே பட்டர்பிளை சிறகடிக்குற போலவே தோணுச்சு…” என்றான் கூலாய் சுண்டலை வாயில் போட்டுக் கொண்டே.

அவள் திகைத்து நிற்க, “சுண்டல் வேணுமா…” என்று நீட்டியவன், அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “உங்க பேர் என்னன்னு சொல்லலை… அதான் நானே பொருத்தமா ஒரு பேர் வச்சேன்… உங்களுக்குப் பிடிக்கலையா…” என்றான்.

அந்தப் பிடிக்கலையா மனதை என்னவோ செய்ய, அவன் கண்களையே ஒரு நிமிடம் பார்த்து நின்றவள், போனில் பேசியது மீண்டும் நினைவு வர “பிடிக்கலை……” என்றாள்.

“ஓகே… அப்ப உங்க பேரை சொல்லுங்க… அதையே சொல்லிக் கூப்பிடறேன்…”

“என் பேரை எதுக்கு உங்க கிட்ட சொல்லணும்… என்ன அவசியம்… அவன் போனில் பேசியதற்கு நீ கொடி பிடிப்பது மட்டும் அவசியமா…” என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.

“ஓகே… வேண்டாம்… நான் பட்டர்பிளைனே கூப்பிடறேன்… சரியா பட்டர்பிளை…” அவனது குரலில் இருந்த காந்தம் அந்த உச்சரிப்பை மேலும் அழகாக்கியது. அதற்குள் அவளைத் தேடிக் கொண்டு அங்கே வந்திருந்தது தோழியர் பட்டாளம்.

“ஏய் வர்ஷூ… என்னடி இங்கே நிக்கறே…” என்றவர்கள், விக்ரமைக் கண்டதும், “ஓ… தேவதூதன் இங்கயும் அவதரித்திருக்கிறாரா…” என்றனர் கோரசாக. அதைக் கேட்டதும் வியப்புடன் மலர்ந்தது விக்ரமின் முகம்.

“ஹாய்… கேர்ள்ஸ்…” என்றவன், அவனைப் பற்றி அவர்களிடம் அறிமுகப்படுத்த, அவர்களும் அவர்களைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர். இது எதற்கும் எனக்கு சம்மந்தமில்லை என்பது போல் ஒதுங்கி நின்றாள் வர்ஷா. அதற்குள் ஏதோ பேசிக் கொண்டே அங்கு வந்தனர் தீபாவும் ராஜீவும். எல்லோரும் நட்புக் கரம் கோர்க்க வர்ஷாவின் காதில் புகை வரத் தொடங்கியது.

விழிகளில் என்ன வைத்தாயடா…

வீழ்ந்து போகிறேன் ஒவ்வொரு முறையும்…

விழுவதும் பின் எழுவதுமாய்

தொலைந்து கொண்டிருக்கிறது – மனது…

அழகாய் கரையை வருடும் சிறு அலையாக

மனதை வருடிச் செல்லுகிறாய் – அருகில்…

ஆர்ப்பரிக்கும் பெரும் அலையாய் எழுந்து

கலங்கடிக்கவும் செய்கிறாய் விலகலில்…

பிடிக்கலையா என்று கேட்கிறாயே…

அந்தக் கேள்வி எனக்கு பிடிக்கவே இல்லையடா…

என்னை விலக விடாமல் பிடித்து

வைத்திருக்கும் – உன் விழிகளிடம் கேள்…

என் மனதின் பிடித்தத்தைக் கூறும்…

Advertisement