Advertisement

இதயம் – 3

SV குரூப் ஆப் கம்பெனீஸ்.

நான்கு தளங்களைக் கொண்ட கட்டிடம் முகப்பில் பெரிய பெயர்ப் பலகையுடன் கம்பீரமாய் நின்றது. தங்க எழுத்துக்களைத் தாங்கி நின்ற பலகையின் கீழ் அந்த குரூப்பில் வரும் நிறுவனங்களின் பெயரும் அது கட்டிடத்தின் எந்த தளத்தில் செயல்படுகிறது என்ற விவரமும் இருந்தது.

SV ப்ரமோட்டர்ஸ் அலுவலகத்தில் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர் அதன் ஊழியர்கள். அதற்குக் காரணம் மேனேஜிங் டைரக்டர் என்ற பெயர்ப்பலகை மேசையை அலங்கரிக்க, சுழல் நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்திருந்த சஞ்சய். அவன் இருக்கும்போது அலுவலகத்தில் எல்லோரும் சீரியஸாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்க வேண்டி வருமே என்ற பயம்தான்.

அவனது மேசை முழுதும் சைட் அப்ரூவலுக்கான வரை படங்களும் அந்த இடத்தைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பேப்பரும் நிறைந்து கிடக்க, அருகில் பவ்யமாய் நின்று கொண்டிருந்தாள் அவனது காரியதரிசி பிரியா. மிதமான ஒப்பனையில் அழகாய் இருந்தாள். நிமிடத்திற்கொருமுறை உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் சஞ்சயின் மீது ஆர்வத்தோடு பதிந்தன அவளது விழிகள். அவன் அவளைப் பாராட்டிக் கூறும்
குட்…” என்ற வார்த்தைக்காய் எத்தனை வேண்டுமென்றாலும் மெனக்கெடுவாள் போலிருந்தது. பேப்பரில் கண்ணைப் பதித்திருந்த சஞ்சய், யோசனையுடன் நிமிர்ந்தான்.

“ம்ம்… பிரியா, நம்ம SV ரெசிடென்சியல் பார்க் சைட்ல புக்கிங் ஆனது போக இன்னும் எத்தனை சைட் பாலன்ஸ் இருக்கு…”

தன் கையில் இருந்த டயரியைப் புரட்டியவள், “இன்னும் அஞ்சு சைட் தான் பாலன்ஸ் இருக்கு சார்… பாக்கி எல்லாம் புக் ஆயிடுச்சு, எல்லா சைட்டுக்கும் பாங்கு லோனும் அப்ரூவ் ஆகிடுச்சு… இனி ஹவுசிங் வொர்க் ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்… பத்து வீட்டுக்கு பாங்கு லோன்க்கு பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணி கொடுத்தாச்சு…”

அவன் கேட்காத விவரங்களையும் ஒப்பித்தாள் அவள். எல்லா விஷயங்களிலும் அவள் மிகவும் ஷார்ப்… அதனாலேயே அவள் மீது சஞ்சய்க்கு ஒரு மரியாதை இருந்தது.

“ம்ம்… குட்… அந்த பாக்கி சைட் அப்படியே இருக்கட்டும்… நாமளே வீடு கட்டிட்டு அப்புறம் சேல் பண்ணிக்கலாம்…”

“ஓகே சார்…”

“அப்புறம் அந்த காண்ட்ராக்டர் கோவிந்தனை வர சொல்லி இருந்தனே….”

“எஸ் சார்… இன்பார்ம் பண்ணிட்டேன், அவர் வெளியூர்ல இருக்குறதால நாளைக்கு வந்து உங்களைப் பார்க்கறேன்னு சொன்னார்…”

“ஓகே… நம்ம புது சைட் பத்தி நாளைக்கு தமிழ், ஆங்கிலம் ரெண்டு பேப்பர்லயும் ஒரு விளம்பரம் கொடுத்திடு…”

“ஓகே சார்…” அவள் கூற, அவனது ஆப்பிள் அலைபேசி அழகாய் சிணுங்கியது. அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டவன் கண்ணை சுருக்கினான்.

“பிரியா… நீ பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணிக் கொண்டு வா… கையெழுத்து போட்டுக் கொடுத்திட்டு கொஞ்ச நேரத்துல நான் கிளம்பிடுவேன்…” என்றான் அவன்.

“ஓகே சார்…” என்றவள் புன்னகையுடன் அவளது காபினை நோக்கி நகர்ந்தாள்.

அலைபேசியை எடுத்தவன், வீட்டு எண்ணுக்குத் திரும்ப அழைத்தான்.

நான்கைந்து மணியடித்த பின் எதிர்ப்புறம் ஆண்குரலில் ஹலோவியது.

“சுப்பு… நான்தான், எதுக்கு கால் பண்ணே… நான் ஆபீஸ்ல இருக்கும்போது கூப்பிடக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல…” என்றான் சற்று குரலை உயர்த்தி.

“தம்பி… அம்மாவுக்கு திடீர்னு தலை சுத்தி மயங்கிக் கீழே விழுந்துட்டாங்க… எனக்கு சட்டுன்னு என்ன பண்ணறதுன்னே தெரியலை… அதான் உங்களைக் கூப்பிட்டேன்… அதுக்குள்ளே நம்ம ராணி தான் அம்மா முகத்துல தண்ணியைத் தெளிச்சு எழுப்பி விட்டுச்சு…”

“அச்சச்சோ… எங்கே விழுந்தாங்க, அடி ஒண்ணும் படலையே…” என்றான் அவன் பதட்டத்துடன்.

“இ…இல்ல தம்பி… மாடிப் படில இருந்து இறங்கும் போது தலை சுத்தியிருக்கு போல… நல்ல வேளை, அப்படியே கீழே உக்கார்ந்துட்டாங்க… கால் மட்டும் லேசா வலிக்குதுன்னு சொல்லுறாங்க…”

“ஓ… சரி நான் உடனே கிளம்பி வரேன், எப்பப் பார்த்தாலும் மாத்திரையை ஒழுங்காப் போடாம மயங்கி விழறதே இவங்களுக்கு வேலையா போயிருச்சு…” என்றவனின் மனதில் அன்னையை மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த ஹர்ஷாவின் முகம் வந்து போனது.

கண்ணுக்குக் கண்ணாடியைக் கொடுத்தவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

சாரதா நர்ஸிங் ஹோம்.

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள் ஹர்ஷா. அவளைக் கண்டதும் ரிஷப்ஷனில் இருந்த பெண் சிநேகமாய் சிரித்தாள். அந்நேரத்தில் நோயாளிகளின் கூட்டம் சற்றுக் குறைவாகவே இருந்தது.

“குட் நூன் ஹர்ஷா… நீங்க வந்ததும் தான் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் பனிரெண்டு மணியில ஒட்டி நிக்கும் போலருக்கு…” என்றவளின் வார்த்தைக்கு புன்னகை ஒன்றை பதிலாய் உதிர்த்துவிட்டு டியூட்டி லெட்ஜரில் கையெழுத்தைப் போட்டவள் உள்ளே நுழைந்தாள்.

“ஹாங்… ஹர்ஷூ நீ வந்தாச்சா, எனிக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணம்… நீ எப்போடா வரும்னு நான் பார்த்துட்டே இருந்தது… நல்ல காலம், நீ வந்து… எண்டே மோனுக்கு நல்ல சுகமில்லாந்து அம்மாயம்மா கூப்பிட்டாச்சு… மனசே சரியில்லா… சரி, நான் கிளம்பட்டா…” என்றாள் டியூட்டி முடியக் காத்திருந்த சோபனா. அவள் ஒரு மலையாளி… கல்யாணமாகி வந்த நாள் முதல் தமிழ் நாட்டில் வசித்தாலும் அவளுக்கு இப்போதும் தமிழும் மலையாளமும் கலந்தே பேச வரும். தன் ஒரு வயதுக் குழந்தையை மாமியாரின் பொறுப்பில் வீட்டில் விட்டுவிட்டு ஹாஸ்பிடலுக்கு வந்து கொண்டிருக்கிறாள்.

“ஓ… குட்டிக்கு என்னாச்சு சேச்சி…”

“நான் வீட்டுல இருந்து கிளம்பும் போதே ஜலதோஷத்துக்கான லக்ஷணம் இருந்தது… இப்போ பனியும் சேர்ந்திருக்கும்னு தோணறது… நான் போயி பார்த்தால் தான் தெரியும்…”

“சரி… நீங்க கிளம்புங்க சேச்சி, ரொம்ப முடியலைனா இங்கே எடுத்திட்டு வந்திடுங்க…” 

“ம்ம்… சரி ஹர்ஷூ… நான் வரேன்…” என்றவள், அவசரமாய் கிளம்பினாள்.

ஸ்டாப் அறைக்குள் சென்ற ஹர்ஷா, தன் உடையை மாற்றி வெண்ணிற நர்ஸ் உடையில் வெளியே வந்தாள். அவளது சாந்தமான முகத்துக்கு அந்த யூனிபார்ம் பொருத்தமாய் இருந்தது. நேராய் டாக்டரின் அறையை நோக்கி சென்றாள்.

கண்ணாடிக் கதவின் பின்னில் நின்று அனுமதி கேட்டவளைக் கண்டதும் முகம் மலர்ந்த Dr. சுகந்தி ஐம்பதின் தொடக்கத்தில் இருந்தார். கருணை வழியும் கனிவான, அவரது முகம் பழைய சரோஜா தேவியை நினைவு படுத்தியது.

மூக்குக் கண்ணாடியை சரியாக்கிக் கொண்டே, “உள்ளே வா ஹர்ஷா…” என்றார்.

உள்ளே நுழைந்தவள், “குட் நூன் டாக்டர்…” என்றாள்.

“ம்ம்… குட் நூன் மா, உன்னை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்…” கையில் இருந்த ரிப்போர்ட்டை கீழே வைத்தவர், “உன்கிட்டே கொஞ்சம் பேசணும்மா…” என்றார்.

“ஓ… என்ன பேசணும் டாக்டர், சொல்லுங்க…”

“எனக்கு ரொம்ப வேண்டிய ஒரு குடும்பம்… அத்தை முறையாகுது… அவங்களுக்கு சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால், ரத்த வாதத்தோட கம்ப்ளெயின்ட் எல்லாம் இருக்கு… நல்ல வசதியான பாமிலி…”

“ம்ம்… சரி டாக்டர்…”

“அவங்க கூடவே வீட்ல இருந்து பார்த்துக்கறதுக்கு நம்பிக்கையான, நல்ல பொறுமையான ஒரு ஹோம் நர்ஸ் வேணும்னு அவங்க மகன் கேட்டார்…”

“ஓ… சரி…” என்றாள் அவள் யோசனையாக.

“எனக்கு சட்டுன்னு உன் நினைவு தான் வந்துச்சு… இங்கே வாங்குற போல ரெண்டு மடங்கு சம்பளம் கொடுப்பாங்க… உனக்கும் இப்போ பாமிலில கொஞ்சம் கஷ்டம்னு சொல்லிட்டு இருந்தியே… அவங்க பெரிய வசதி உள்ளவங்க, நிறைய நிறுவனம் இருக்கு… உன்னை அவங்களுக்குப் பிடிச்சிருச்சுன்னா இன்னும் சம்பளம் அதிகம் கொடுக்கலாம்… நீ என்னம்மா நினைக்கற…”

“டாக்டர்… நீங்க சொல்லறீங்கன்னா அது கண்டிப்பா எனக்கு நன்மையான விஷயமா தான் இருக்கும்… ஆனா, நான் எப்படி… அம்மா வேற வீட்ல ரெஸ்ட்ல இருக்காங்க… அவங்களால எந்த வேலையும் செய்ய முடியாது… ஹோம் நர்ஸ்னா நைட்டும் அவங்களோட தங்க வேண்டி வருமே… எனக்கு அம்மாவை விட்டுட்டு நைட் வெளியே தங்க முடியாது டாக்டர்… அதனால தானே நான் நம்ம ஹாஸ்பிடல்லயே மார்னிங் 8 டு ஈவினிங் 8 எடுக்கறேன்… இல்லன்னா மதியம் வந்துட்டு எட்டு மணிக்கு ஷிப்ட் முடிச்சுக்கறேன்…” என்றாள் அவள் யோசனையுடன்.

“ம்ம்… அது சரிதான், நல்ல சம்பளம்… உன்னை நம்பிக்கையா அவங்க வீட்டுக்கு அனுப்பலாம்… அதான் கேட்டேன், இன்னைக்கு அவங்க பரிசோதனைக்கு இங்கே வருவாங்க… சரி… நீ எதுக்கும் யோசிச்சு சொல்லு, உனக்கு முடியலைனா வேற யாரையாவது அனுப்பிக்கலாம்…” என்றார் டாக்டர்.

“ம்ம்… நைட் தங்காத மாதிரி இருந்தா எனக்கு ஓகே தான் டாக்டர்… அதைப் பத்தி அவங்க ஏதும் சொன்னாங்களா…..”

“இல்லம்மா… நான் அதைக் கேக்கலை, இன்னும் கொஞ்ச நேரத்துல அத்தை பரிசோதனைக்கு வருவாங்க… அவங்க கிட்ட நேராவே பேசிக்கலாம்… அவங்க ரொம்ப நல்ல டைப் மா… உன்னை வீட்டுப் பொண்ணு போல பார்த்துக்குவாங்க… சரி, நான் ரவுண்ட்ஸ் போறதுக்கு ஏற்பாடு பண்ணு, அவங்க வந்ததும் பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம்…” என்றார் டாக்டர்.

“சரி டாக்டர்…” என்றவள் வார்டை நோக்கி நகர்ந்தாள்.

டாக்டர் ரவுண்ட்சை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பி வர, அங்கே அவருக்காய் காத்திருந்தனர் ரேணுகாவும், சஞ்சயும்.

ரேணுகாவின் முகம் சோர்ந்திருக்க, சஞ்சயின் முகம் கடுகடுவென்று இருந்தது.

“அடடா… நீங்க வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கிங்களா…” என்றவர், “உள்ளே வாங்க அத்தை… வா சஞ்சய்…” என்றார்.

ரேணுகா சற்று காலை விந்திக் கொண்டே வர, கடுப்புடன் அறைக்குள் நுழைந்தான் சஞ்சய். டாக்டருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.

“அத்தை… என்ன இது, சின்னப் பிள்ளைகளை மாதிரி நேரத்துக்கு மாத்திரை போட மாட்டீங்கறீங்கன்னு சஞ்சய் ஒரே குற்றப் பத்திரிகையா வாசிக்கறான்… தலை சுத்தி எங்காச்சும் விழுந்து அடி பட்டா அப்புறம் உங்களுக்கு தானே கஷ்டம்…” என்றவர் பேசிக் கொண்டே அவரது பிரஷரை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

“ம்ம்… நான் என்ன வேணும்னா மறக்கறேன்… வயசாயிடுச்சுன்னாலே மறதியும் வந்திடுது… அதுக்கு தான் இவனை ஒரு கல்யாணத்தைப் பண்ணி எனக்கு ஒரு மருமகளைக் கூட்டிட்டு வாடான்னு சொன்னா இவன் எங்கே காதுல போட்டுக்கறான்… அவ்ளோ பெரிய வீட்டுல எப்பப் பார்த்தாலும் செவுத்தையே பார்த்திட்டு தனியா உக்கார்ந்துட்டு இருக்கேன்… ஒரு பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லை… அந்த டிவியைப் பார்க்கவும் எனக்குப் பிடிக்கலை, இவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி பேரன் பேத்தின்னு வீடு நிறைய ஓடி விளையாடிட்டு இருந்தா, எனக்கு எந்த நோயும் வராதுன்னு நானே அடிச்சு சொல்லறேன்… என் பேச்சை கேட்டா தானே…” அவரும் அவர் பங்கு வாதத்தைப் பேசி முடித்தார்.

அவர் பேசுவதைக் கேட்டு முறைத்துக் கொண்டிருந்த சஞ்சய், “ம்ம்… பேசி முடிச்சாச்சா, நேரம், காலத்துக்கு மாத்திரை போட சொன்னா, அதை செய்யாம  மறந்துட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி உயிரை எடுக்கறீங்க… அப்படி என்ன மறதி… ஏதோ மாடிப்படில அப்படியே உக்கார்ந்ததால ஒண்ணும் ஆகலை… கொஞ்சம் தவறுதலா தலைல எங்காவது அடி பட்டிருந்தா, கொஞ்சம் கூட யோசிக்காம நடந்துக்கறீங்களேம்மா…” கோபமாய்த் தொடங்கி வருத்தமாய் முடித்தான் அவன்.

ரேணுகா பரிதாபமாய் அவனைப் பார்க்க, அவர்கள் பேசியதைக் கேட்டு சிரித்தார் சுகந்தி.

“சரி… சஞ்சய், அம்மா கேக்குறது இருக்கட்டும்… நீ ஏன் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே மாட்டேங்குற… அத்தைக்கு அந்த நினைப்பே பெரிய நோயா மனசை அலட்டுது போலருக்கு… பிரஷர் ரொம்ப அதிகமா இருக்கு… அவங்களுக்கும் சில ஆசைகள் இருக்கும் இல்லையா…” என்றார் ரேணுகாவைப் பரிசோதித்துக் கொண்டே சுகந்தி.

Advertisement