Advertisement

புன்னகைத்தவள், அவர் தந்த காப்பியுடன் ஹாலுக்கு சென்றாள். “அம்மா… விக்கி, வர்ஷா, ராஜீவ் எல்லாம் எங்கே… யாரையுமே காணோம், தீபாவைக் கூடக் காணோம்…” என்றாள் சுற்றிலும் பார்த்துக் கொண்டே.

“அவங்க ஒரு வேலையா வெளிய போயிருக்காங்கடா… கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க…” என்ற ரேணுகா, “சஞ்சு எழுந்துட்டானா…” என்றார்.

“ம்ம்… குளிச்சிட்டு இருக்கார்மா…” என்றவளின் முகத்தில் நாணத்தின் புன்னகை.

“சரி… அவனுக்கு காபி எடுத்திட்டுப் போ,  இங்கிருக்குற வேலை எல்லாம் நாங்க கவனிச்சுக்கிறோம்… நீ உன் புருஷனை கவனி…” என்று அவர் சிரிக்க, “போங்கம்மா…” என்றாள் அவள் சிணுங்கலுடன்.

“ஹர்ஷூ… என்னை அத்தைன்னே கூப்பிடுடா, ரெண்டு பேரையும் அம்மான்னு கூப்பிட்டா குழம்பிப் போயிருவோம்ல…” என்றார் அவர் புன்னகையுடன்.

“இல்லம்மா… நான் உங்களுக்குப் பிறக்கலைன்னாலும் நீங்களும் எனக்கு அம்மா தான், வேணும்னா உங்களை ரேணும்மான்னு கூப்பிடவா…” என்று தீர்வையும் அவளே கூறினாள். மருமகளை அன்போடு அணைத்துக் கொண்டவர், “சரிடா… உன் இஷ்டம்…” என்றார். அதைக் கண்ட உமாவின் முகத்திலும் சந்தோஷம்.

அப்போது குளித்து கீழே வந்த சஞ்சய், “அம்மா காபி…” என்றான் அன்னையிடம்.

“உன்னை கவனிக்கத்தான் உன் பொண்டாட்டி வந்தாச்சே… அவகிட்டே கேளேன்டா…” என்றார் அவர்.

“ஓ… அப்படியா…” என்றவன், “ஏய், பொண்டாட்டி… காப்பி எடுத்திட்டு வா…” என்று அவளை நோக்கிக் கண்ணடிக்க, அம்மாக்களின் முன்பு அவன் செய்த செயலில் நாணம் கொண்டு அடுக்களைக்கு ஓடினாள் ஹர்ஷா. அதைக் கண்டும் காணாமலும் மனதுக்குள் சிரித்துக் கொண்டனர் பெரியவர்கள்.

தினசரியில் பார்வையைப் பதித்துக் கொண்டே காப்பியைக் குடித்து முடித்தான் சஞ்சய். சற்று நேரத்தில் வாசலில் கார் வந்து நிற்கவும், அனைவரும் எழுந்து வாசலுக்கு செல்ல, ஹர்ஷாவும் வெளியே எட்டிப் பார்த்தாள்.

விக்கி வர்ஷா, ராஜீவ் தீபாவுடன், பிரீத்தியும் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் திகைத்த ஹர்ஷா, ஆவலுடன் அவளிடம் செல்ல துள்ளிக் குதித்து உள்ளே நுழைந்தாள் பிரீத்தி.

“ஹாய் கல்யாணப் பொண்ணே… எப்படி இருக்கே, என் இதயம் நிறைந்த கல்யாண வாழ்த்துகள்…” என்று ஹர்ஷூவைக் கட்டிக் கொண்டவள், “ஹாய்… அத்தான்…” என்று சஞ்சய்க்கும் வாழ்த்து கூறி அணைத்துக் கொண்டாள். சற்று நேரம் நலம் விசாரிப்பில் கழிய, ஒரு சர்ப்பிரைஸ் கொடுப்பதற்காய் சொல்லாமல் புறப்பட்டு வந்ததாய் கூறினாள் அவள். மற்ற எல்லாவருக்கும் முந்தின நாளே அவள் வருகையைப் பற்றி தெரிஞ்சிருக்க, ஹர்ஷாவுக்கு மட்டுமே அது சர்பிரைசாய் இருந்தது. ஒரு நாள் முன்னமே கல்யாணத்துக்கு வந்திருக்கலாமே… என்று அங்கலாய்த்த அத்தையிடம், டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறியவள், “இன்னொரு சந்தோஷமான விஷயமும் இருக்கு…” என்று நிறுத்தினாள்.

“என்னடா விஷயம் சொல்லு…” என்ற ரேணுகாவின் தோளில் தொங்கிக் கொண்டு செல்லம் கொஞ்சியவள், “நம்ம விக்கிக்கு ஒரு ஐ டோனர் கிடைச்சுட்டாங்க…”

“என்னடா சொல்லற, இது நிஜம் தானா…” என்றார் நம்ப முடியாமல்.

இத்தனை சந்தோஷமான விஷயத்தைத் தெரிந்து கொண்டும் விக்கியின் முகத்தில் பெரிதாய் சந்தோஷத்தைக் காணவில்லையே என நினைத்தவர், “நீ உண்மையைத்தான் சொல்லறியாடா… யாரு கண் தானம் பண்ணறாங்க, எங்கிருக்காங்க…” என்றார் சந்தோஷத்துடன். சிறியவர்களின் முகத்தைக் கண்டவர், “இவங்களுக்கு இந்த விஷயம் சொல்லிட்டியா, அப்புறம் ஏன் வருத்தமாவே இருக்காங்க…” என்றார் புரியாமல்.

“அத்தை… சென்னைல இருக்குற ஒரு லேடி தான் விக்கிக்கு கண்தானம் செய்யப் போறாங்க, ஒரு ஆக்சிடண்ட்ல அவங்க பிரெயின் டேமேஜ் ஆகி கோமாக்குப் போயிட்டாங்க… இனி அவங்களுக்கு நினைவே திரும்பாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… காலேஜ்ல படிக்குற அவங்க பொண்ணுக்கு இதயத்துல பெரிய ஓட்டை இருக்கு… இதயமாற்று சிகிச்சை செய்தா தான் பிழைப்பான்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க, அதனால அவங்க இதயத்தை பொண்ணுக்கு கொடுக்க அவங்க வீட்டுல முடிவு பண்ணிட்டாங்க… அவங்க ஒரு ஆர்கன் டோனர்,  நல்லா இருக்குற அவங்க உடல் உறுப்புகளை எல்லாம் தானம் பண்ணறதுக்கு எழுதி வச்சிருக்காங்க… அதனால விக்கிக்கு ஒரு கண்ணையும் வேறொரு சின்ன பையனுக்கு இன்னொரு கண்ணையும் கொடுக்கப் போறாங்க… அவங்களோட உடல் உறுப்புகள் எல்லாமே நோயோட போராடிகிட்டு இருக்குற இன்னொருத்தருக்கு புது வாழ்க்கையைக் கொடுக்கப் போகுது… இதெல்லாம் சென்னைல இருக்குற என் டாக்டர் நண்பன் மூலமா தெரிந்த விஷயங்கள்… அவன்கிட்டே விக்கியைப் பத்தி சொல்லி, அந்தப் பொண்ணோட ஆப்பரேஷன் செலவோட, ஒரு பெரிய தொகையை அந்தக் குடும்பத்துக்கும் கொடுக்குறதா அவன் மூலமா பேசினோம்… அவங்களும் விக்கிக்கு ஒரு கண்ணைக் கொடுக்க சம்மதிச்சுட்டாங்க… இதெல்லாம் நான் சொன்னதும் கண்ணு கிடைக்கறது சந்தோசம்னாலும் அவங்களை நினைச்சு வருத்தப் பட்டுட்டு இருக்காங்க…” என்றாள் பிரீத்தி.

அவள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த ரேணுகா, “நீ சொன்ன போல எல்லாமே அந்தக் குடும்பத்துக்குப் பண்ணிடலாம் டா… மரணத்துக்குப் பின்னால மண்ணோட மக்கிப் போகப் போற நம்ம உடல் உறுப்புகளை மத்தவங்களுக்கு தானம் செய்து உதவ முடியும்னா நாமும் நம்ம உடல் உறுப்புக்களை தானம் செய்ய இன்னைக்கே பதிவு செய்திடுவோம்…” என்றார் நெகிழ்ச்சியுடன். எல்லாருக்கும் அதே எண்ணமே தோன்ற அனைவரின் இதயத்திலும் அங்கு அன்பு மட்டுமே நிறைந்திருந்தது.

அதைக் கேட்டதும் விக்கி வர்ஷா, ராஜீவ் தீபா, சஞ்சய் ஹர்ஷா, உமா, பிரீத்தி அனைவரின் மனதிலும் ஒரு தெளிவு தோன்றியது. அன்பை மட்டுமே அறிந்திருந்த ரேணும்மாவின் இதயத்திற்கு மகனது கண்களில் வெளிச்சத்தைக் காணப் போகும் சந்தோசம் தெரிந்தது. மருமகனுக்கு சீக்கிரமே கண் பார்வை கிடைத்துவிடும் என்பதில் உமாவின் மனமும் தெளிந்தது.

சிறியவர்களின் முகத்திலும் புன்னகை பரவ, சஞ்சயும் ஹர்ஷாவும் பிரீத்தியிடம் மற்ற விஷயங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தனர். விக்கியும் வர்ஷாவும் கண்ணைத் திறந்து கொண்டே கனவு காணத் தொடங்க, சீக்கிரமே அடுத்த ஜோடிகளுக்கும் திருமணத்தை முடித்துவிடலாம்… என நினைத்துக் கொண்டார் ரேணுகா. அனைவரின் மனதும் நிறைந்திருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு.

“வர்ஷு…. திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டியாடா, கிளம்பலாமா…” கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் விக்கி.

“ம்ம்… எல்லாம் எடுத்து வச்சுட்டேங்க, இந்த பாகை எடுத்துக்கோங்க…” என்றவள் கண்ணாடியின் முன்பு நின்று அவளை சரிபார்க்க, அவளைப் பின்புறமிருந்து அணைத்தான் விக்கி.

அவளது சங்குக் கழுத்தில் ஆசையோடு முத்தமிட அவனது மீசையின் குறுகுறுப்பில் நெளிந்தாள் அவள். அவளது தோளில் கைபோட்டு அவன் சேர்ந்து நிற்க கண்ணாடியில் இருவரும் ஜோடியாய் நின்ற பிம்பத்தை ஆசையுடன் ரசித்துக் கொண்டிருந்தாள் வர்ஷா.

அவளது பார்வை கண்ணாடியிலேயே இருப்பதைக் கண்டவன்,

“ஏய் பட்டர்பிளை… என்ன பாக்குறே, உன் புருஷன் ரொம்ப அழகா இருக்கேனா… ஓவரா ரசிக்கற, கண்ணு பட்டுறப் போகுது…” என்றான் அவன்.

“என் புருஷனை நான் ரசிப்பேன்… உங்களுக்கு என்ன…” என்றாள் அவள்.

“ஓஹோ…” என்றவன் அவளை அணைக்க, “என்னங்க இது… சேலை எல்லாம் கசங்கப் போகுது, விடுங்க…” சிணுங்கினாள் அவள்.

“அது சரி… நீ உன் புருஷனை ரசிக்கும்போது நான் என் பொண்டாட்டியை அணைக்கக் கூடாதா…” என்று அவளது இரு தோளிலும் கையைப் போட்டுக் கொண்டே கேட்டான்.

அவள் அவனையே நோக்க புருவத்தை தூக்கியவன்,

“என்னம்மா கண்ணு… அப்படி லுக்கறே, கண்ணுல டன் கணக்கா சந்தோஷம் வழியுது…” என்றான்.

சட்டென்று அவன் கன்னக் குழியில் முத்தமிட்டவள், “ஐ லவ் யூ டா… என் அழகுப் புருஷா, எனக்கு என் பழைய விக்கி கிடைச்சாச்சு… அதான் சந்தோஷமா இருக்கேன், கிளம்பலாமா… அத்தை காணோம்னு நினைப்பாங்க…” என்றாள்.

புன்னகையுடன் அவள் தலையில் முட்டியவன், “கிளம்பலாண்டி… என் அழகுப் பொண்டாட்டி…” அவளது கையைப் பிடித்துக் கொண்டு கீழே வந்தான்.

“என்னடா விக்கி, எல்லாம் எடுத்து வச்சாச்சா… டைம் ஆச்சு, கிளம்பலாமா…” என்றார் ரேணுகா.

எல்லாரும் கீழே அவர்களுக்காய் காத்திருந்தனர்.

சென்னையில் விக்கி, ராஜீவ் வேலை செய்த நிறுவனத்தை இப்போது விக்கியும், ராஜீவும் தான் பார்த்துக் கொள்கின்றனர்.

ராஜீவ் திருமணத்திற்குப் பிறகு ராம் வெளிநாடு சென்றதும் அவன் தீபாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட, விக்கி, வர்ஷாவிற்கு புதியதாய் வீடு பார்த்து பால் காச்சுவதற்காய் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

ரேணும்மாவும், உமாவும் சஞ்சயின் காரில் ஏறிக் கொள்ள, விக்கியும் வர்ஷுவும் விக்கியின் காரில் வந்தனர்.

அவனது கண் ஆப்பரேஷன் நல்லபடியாய் முடிய, ராஜீவுக்கும் விக்கிக்கும் ஒரே நாளிலேயே கல்யாணத்தையும் முடித்து விட்டனர்.

சென்னை சென்று வீட்டில் பால் காய்ச்சியதும், சஞ்சய் ஆர்டர் கொடுத்திருந்த வீட்டு சாதனப் பொருட்களும் வந்துவிட்டன.

அன்று அவர்களுக்கு வீட்டில் எல்லாவற்றையும் ஒதுக்க உதவி செய்து விட்டு அடுத்த நாள் இவர்கள் கோவை கிளம்பினர்.

மருமகள், மாமியாரைப் பிரிய வேண்டிய வருத்தத்தில் அவரது கையைப் பிடித்து கண்கலங்க, அதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார் உமா. அவர்கள் புது வாழ்க்கையை அங்கு தொடங்க, மன நிறைவுடன் அனைவரும் திரும்பி வந்தனர்.

“சஞ்சு… நான் இப்போ எத்தனை சந்தோஷமா இருக்கேன் தெரியுமா, உன் அப்பாகிட்ட கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன்… என் ரெண்டு பிள்ளைகளும் சந்தோஷமா வாழ்க்கையைத் தொடங்கிட்டீங்க… இதெல்லாம் பார்க்க அவருக்குத்தான் கொடுத்து வைக்கலை…” நெகிழ்ச்சியுடன் கூறினார் ரேணுகா.

“நானும் தான் ரேணும்மா… என் கைல இந்த ரெண்டு பொண்ணுகளை விட்டுட்டு அவர் போயிட்டாறேன்னு ரொம்ப கலங்கி இருந்தேன்… ஒரு நல்ல குடும்பத்துல, உங்களைப் போல அம்மாவுக்கு மருமகளா, தங்கமான மாப்பிள்ளைகளுக்கு வாக்கப்பட்டது அவங்க செய்த புண்ணியம்… நானும் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…” அவரும் கண்கலங்கினார். ஹர்ஷா அவர்கள் பேசுவதைக் கேட்டு பெருமையுடன் கணவனை நோக்க அவனோ, “அடடா… என்ன இது… ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கேன்னு சொல்லிட்டு கலங்கிட்டு இருக்கீங்க, இப்ப சந்தோசம் வந்தா அழணும்னு மாத்திட்டாங்களா என்ன…” என்றான் கிண்டலுடன்.

“நீங்க ஏங்க அவங்களைக் கிண்டல் பண்ணறீங்க… இந்த சந்தோசம் எப்பவும் நம்ம குடும்பத்துல நிலைச்சிருக்க அந்த அம்மன் தான் அருள் புரியணும்…” மனதார வேண்டிக் கொண்டாள் ஹர்ஷா. அவள் மனதும் நிறைவாய் உணர்ந்தது.

 அனைவரின் இதயங்களிலும் அன்பும் சந்தோசமும் மட்டுமே நிறைந்திருக்க, இது எப்போதும் நிலைத்திட கோனியம்மன் அருள் புரியட்டும் என்று நாமும் வேண்டி விடைபெறுவோம்…. நன்றி வணக்கம்……

இதயத்தின் இனிமைக்கு விருந்தானாய்…

இதயத்தின் வலிகளுக்கு மருந்தானாய்…

உனக்காய் எனக்குள் ஒரு உலகம் படைத்தேன்…

அதற்குள் எல்லாமாய் உன்னையே வைத்திட்டேன்…

இனி நீயின்றி இயங்காது நம்முலகம்…

இதயத்தில் உன்னை சிறை வைத்தேன்…

இருந்தும் நானே உன்னிடம் கைதியாகிறேன்…

இதயமும் ஒரு பூமிப் பந்து தானோ…

இடைவிடாமல் உன் நினைவில் சுற்றி வருகிறதே…

இதயம் இதயம் இணைந்த போதே – நாம்

இருவரல்ல ஒன்று என்றாகிப் போனதே…

இதமாய் இதயங்களை இணைக்கிறது காதல்…

Advertisement