Advertisement

“விக்கி…” தழுதழுத்தவளிடம், “வர்ஷூ… நம்ம கல்யாணத்தை ஏன் இப்ப வேண்டாம்னு சொன்னேன்னு உனக்குத் தெரியுமா… கல்யாண நாள் அன்னைக்கு உன்னை ஒரு கண்ணுல பார்த்தா திருப்தியா இருக்காது… எத்தனையோ நாள் கனவுலயும், கற்பனைலயும் நினைச்சுப் பார்த்த உன் கல்யாணக் கோலத்தை ஒரு கண்ணால மட்டும் பார்த்தாப் போதாது… என் ரெண்டு கண்ணுலயும் நிறைச்சு வச்சுக்கணும்னு தான் ஆப்பரேஷன்கு பின்னால போதும்னு சொன்னேன்… என் மனசு அதுவரைக்கும் தெளிவாகும்னு தோணலை…” என்றவனின் தோளில் ஆதரவாய் கை வைத்தாள்.

“விக்கி வருத்தப் படாதீங்க, எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்… நமக்கும் நீங்க நினைச்ச போல சீக்கிரமே கல்யாணம் நடக்கும்… இந்த உலகத்துல சுத்தமா கண்ணு தெரியாதவங்க எத்தனையோ பேர் இருக்காங்க, அவங்கவங்க முகத்தைக் கூடப் பார்க்க முடியாம, இந்த உலகத்தில் உள்ள எல்லா காட்சிகளையும் வெறும் கற்பனைல மட்டுமே பார்த்திட்டு வண்ணங்களே தெரியாத இருட்டை மட்டுமே பார்த்த விழிகளோட வாழ்ந்திட்டு இருக்காங்க… அவங்களோட ஒப்பிட்டா, உங்களோட குறை சரி பண்ணக் கூடியது தானே… நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க, எல்லாமே சரியாகும்…” என்றாள்.

“ம்ம்… நீ சொல்லுற போல கண்ணே தெரியாம இருக்கறதும் பெரிய வலிதான்… ஆனா, எல்லாத்தையும் பார்த்து வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமா ரசிச்சு கிட்டிருந்த எனக்கு இந்த இருட்டு பெரிய குறையா தான் தோணுது, சீக்கிரமே சரியாகணும்னு ஒவ்வொரு நிமிஷமும் மனசுக்குள்ள வேண்டிகிட்டு இருக்கேன்…” என்றான் அவன்.

“நடக்கும்… நடக்கும்… நான் கூட சொல்கிறேன்…” சினிமா பாணியில் சொன்னவள் அவன் கைகளை ஆதரவாய் அழுத்தினாள்.

“கண்ணுக்குள் கண்மணியாய்

நானே மலர்ந்திருப்பேன்…

காலமெல்லாம் காட்சியாக

நானே நிறைந்திருப்பேன்…

கலக்கம் வேண்டாம் கண்ணா…

மனக்கறுப்பைத் துடைத்துவிடு…

விழிக்கறுப்பு விலகும் நேரம் வரும்…”

அவள் சொன்னதை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தவன், “பட்டர்பிளை… நீயா கவிதையா பேசறே…” என்றான் திகைப்புடன்.

“காதலித்துப் பார், கவிதை வரும்னு கவியரசு சொன்னதா நீங்க தானே சொன்னிங்க… அதான், எனக்குக் கூட கவிதைலாம் வருது…” என்றவளின் முகத்தில் நாணத்தின் பூக்கள்.

“ஹஹா… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா, என் பட்டர்பிளை…” நெகிழ்ச்சியுடன் அவள் கையை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.

“எனக்கும் சந்தோஷமா இருக்கு விக்கி… என் வண்ணத்தை எல்லாம் தொலைச்சிடுவனோன்னு ரொம்ப பயமா இருந்துச்சு… என்னைப் பார்க்கும் போதெல்லாம் பட்டர்பிளைன்னு கொஞ்சுற நீங்க, கொஞ்ச நாளா அப்படி கூப்பிடவே இல்லை… ஆனா இப்ப சொன்னிங்களே, என் விக்கி ரிட்டர்ன்…” கண்ணீருடன் சிரித்தாள். அதை உள்வாங்கிக் கொண்டு சிரித்தான் அவன்.

“வந்தாள் மகாலக்ஷ்மியே…

எங்கள் வீட்டில் என்றும் அண்ணி ஆட்சியே…

அம்மாவின் மனம் வாழ்த்த… குலம் வாழ…

குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே…”

நாணச்சிரிப்புடன் ஹர்ஷாவின் தலை குனிந்திருக்க, சஞ்சயின் பார்வை கம்பீரமும் காதலுமாய் மனைவியைத் தழுவ, ஹர்ஷா வலது காலை வீட்டுக்குள் வைத்து நுழைந்ததும் விக்கி பாடிய பாடலைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ரேணும்மாவின் முகமெல்லாம் பெருமிதப் பூரிப்பு. மூத்த மகனின் கல்யாண சந்தோஷத்தில் இளைய மகனின் கவலையைக் கூட சற்றுத் தள்ளி வைத்திருந்தார்.

மனதுக்குப் பிடித்த பெண்ணையே மருமகளாக்கித் தந்ததற்கு மனதுக்குள் கோனியம்மனுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தார். அடுத்து பால் பழம், இத்யாதி சடங்குகள் எல்லாம் முடிய, மூத்த மகளை மனம் நிறைந்த சந்தோஷத்துடன் கண்கள் பனிக்க பார்த்துக் கொண்டிருந்தார் உமா.

எல்லா சடங்குகளும் முடிந்து மகளை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு, இளைய மகளுடன் விடை பெறுவதற்காய் சம்மந்தியிடம் சென்ற உமாவை அவர்களும் இனி அந்த வீட்டில் தான் இருக்கவேண்டும் என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டார் ரேணுகா.

அவரது அறைக்கு அருகில் ஹர்ஷா உபயோகித்திருந்த அறையை அவர்கள் உபயோகித்துக் கொள்ளுமாறு கூறியவரிடம் உமா தயக்கத்துடன் மறுக்க வர்ஷாவின் கையை ஆதரவாய் கையில் எடுத்துக் கொண்டவர், “நான் என் ரெண்டு பசங்க கூட இருக்கற போல நீங்களும் உங்க ரெண்டு பொண்ணுங்க வீட்ல தான் இருக்கணும்… அதானே சரி, இனி இவங்க நம்ம பிள்ளைங்க… இது நம்ம வீடு, எந்த கூச்சமும் இல்லாம இருங்க உமா… அப்புறம் இதுல என் சுயநலமும் இருக்குன்னு வச்சுக்கங்களே…” என்று சிரித்தார்.

“என்ன சம்மந்தி சொல்லறிங்க, உங்களுக்கு சுயநலமா…” ஆச்சர்யத்துடன் கேட்ட உமாவிடம், “பின்ன சின்னஞ்சிறுசுங்க, அவங்க பாட்டுக்கு சந்தோஷமா இருக்கட்டும்… எனக்குத் துணையா நீங்களும், உங்களுக்குத் துணையா நானும் இருந்துக்கலாமே… நீங்களும் என் தோழியா என்னோடவே இருந்துடுங்களே…” என்றார் சிரிப்புடன்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராணிம்மாவின் மனதும் ரேணும்மாவின் அன்பில் குளிர்ந்து.

“இந்தம்மாவுக்கு எத்தனை உயர்ந்த மனசு, இவங்க பணத்தில் மட்டுமல்ல… குணத்திலும் கோடீஸ்வரிதான்…” என நினைத்துக் கொண்டார்.

“சம்மந்தியை தோழியா இருன்னு சொல்லறிங்களே… உங்க மனசு யாருக்கு வரும், உங்க விருப்பம் போலவே ஆகட்டும்…” உமாவும் சம்மதித்தார்.

“ஹப்பா… இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… ராணி,சம்மந்தி சொன்னதைக் கேட்டேல்ல… அவங்களுக்கு அந்த ரூமை ரெடி பண்ண வேண்டியது உன் பொறுப்பு…” என்றார். அவர் சம்மதமாய் தலையாட்டி அங்கிருந்து நகர்ந்தார்.

வர்ஷாவின் மனதில் மாமியாரின் மீதிருந்த மதிப்பு ராக்கெட்டாய் உயர்ந்து செல்ல முகத்தில் சந்தோஷமாய் புன்னகை முளைத்தது. சற்றுத் தள்ளி ஹாலில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டும் கேட்காமலும் அமர்ந்திருந்த விக்கியின் மீது பெருமையாய் பார்வை படிந்தது.

நேரம் நகர, இரவும் வந்தது. மாடியில் சஞ்சயின் அறையை சாந்தி முகூர்த்தத்திற்காய் தயார் செய்து கொண்டிருந்தனர் ராஜீவும் விக்கியும். கை நிறைய மல்லிகையை எடுத்து கட்டிலின் மீது தூவிய ராஜீவ், ரோஜாப் பூவை மூக்கில் வைத்து மணத்தை இழுத்துவிட்டு தூவி விட்டான்.

“டேய் மச்சி… இந்த பூவுக்கு நிஜமாலுமே மனதைப் பரவசப்படுத்துற சக்தி இருக்கத்தான்டா செய்யுது… ஹப்பா, கும்முன்னு இருக்கு…” என்றான் ராஜீவ்.

“அடச்சீ வேலையைப் பாரு, கற்பனையை பறக்க விடாதே…” என்று அவன் தலையில் லேசாய் தட்டினான் விக்கி.

“போடா மச்சான்… கொஞ்ச நேரத்துல கசங்கறதுக்கு எதுக்குடா இந்தப் பூவெல்லாம் வேஸ்ட் பண்ணிகிட்டு…” என்று இழுத்தவனை முறைத்த விக்கி,

“அப்படியா சொல்லறே… சரி, உன் கல்யாணம் முடிஞ்சு சாந்தி முகூர்த்ததுக்கு ஏற்பாடு பண்ணும் போது இப்படி எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லிடறேன், சரியா…” என்றான்.

“அடடா… இவன் நம்ம மடிலயே கை வைக்குறானே… இந்தப் பூவெல்லாம் போடலைன்னா சரியான எபக்ட் கிடைக்காதே…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், “அப்படி இல்லை மச்சி… அண்ணாவுக்கு பூவைப் பறிச்சா பிடிக்காதே… இப்ப இத்தனை பூவை இங்க போட்டு வச்சா வருத்தப் பட மாட்டாரா, அதுக்கு தான் சொன்னேன்…” சமாளித்தான்.

“சும்மா மழுப்பாதடா மச்சி… சரி, நீ கீழ போயி பட்டர்பிளையை இங்க வர சொல்லு…” என்றான் விக்கி.

“பட்டர்பிளை எதுக்குடா மச்சி… டேய், சாந்தி முகூர்த்தம் அண்ணனுக்கு டா…” என்றான் ராஜீவ்.

“அடேய் வீணாப் போனவனே… அவகிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் வர சொன்னேன்…” என்றான் விக்கி.

“ஹூக்கும்… நாங்க நம்பிட்டோம், அப்படியே என் ஆளையும் கூட்டிட்டு வரட்டுமா… எனக்கு கூட அவகிட்டே ஒரு விஷயம் சொல்லணும்…” என்றவனை அவன் முறைக்க,

“ம்ம்… சரிசரி, நடக்கட்டும்… நான் போயி வர்ஷுவை வர சொல்லறேன்…” என்றவன் கீழே சென்றான்.

சிறிது நேரத்தில் வாசலில் நிழலாட வர்ஷா உள்ளே வந்தாள். அறையை சுற்றிலும் பார்வையை ஓட்டியவளின் கண்ணில் நாணம் ஒட்டிக் கொள்ள, அவளை ஆசையுடன் பார்த்துக் கொண்டே அருகில் வந்த விக்கி, “வர்ஷூ… ரூம் அலங்காரம் செமையா இருக்குல்ல… அப்படியே நீ குடுக்க வேண்டியதைக் குடுக்கறியா…” என்றான் கிசுகிசுப்பான குரலில்.

“என்னது…” என்று அவள் கண்ணை உருட்டிக் கொண்டு மிரட்டல் குரலில் கேட்க,

“அட… நான் உன்கிட்ட கொடுத்து வச்சிருந்ததை கொடுக்கறியான்னு கேட்டேன்…” என்று சமாளித்தான் அவன்.

“ம்ம்…” என்றவள், உள்ளங்கைக்குள் அடக்கி வைத்திருந்த ஒரு சின்ன வெல்வெட் பெட்டியை நீட்ட அதில் சஞ்சய்க்கும், ஹர்ஷாவிற்கும் பிரீத்தி கொடுத்த இதய வடிவ மோதிரம் பளிச்சிட்டது.

“இதை ஏன் கல்யாண மேடைல கொடுக்காம இங்கே கொடுக்கறிங்க விக்கி…”

“அங்கே கொடுத்தா பத்தோட பதினொன்னாப் போயிடும்… இந்த இதயம் அவங்க அன்புக்கான ஸ்பெஷல் பரிசில்லையா, அதும் இல்லாம அவங்க இதை மறந்தே போயிட்டாங்க… அம்மாதான் இதை என்கிட்ட கொடுத்து இங்கே வைக்க சொன்னாங்க…” என்றவன், பழம், பலகாரம் வைத்திருந்த தட்டுக்கு அருகில் அந்தப் பெட்டியை வைத்தான்.

மீண்டும் ஒரு முறை சுற்றிலும் பார்த்துவிட்டு, “டைம் ஆச்சு… நாம கீழே போகலாம்…” என்றவன், “பட்டர்பிளை ப்ளீஸ், ரொம்ப நாளாச்சு… ஒரே ஒரு…” என்று முடிக்காமல் தயங்க, அவனைத் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவள், அவனது இதழில் ஆழமாய் ஒரு முத்திரையைப் பதித்து விலகினாள்.

“பார்வையாலே என் இதயத்தில்

விதைத்து வைத்தாய் பேரன்பை…

பரந்து விரிந்து இதயமெங்கும்

பரவிக் கிடக்கிறது உன் காதல்…”

“விக்கி… நான் எப்பவா இருந்தாலும் உங்களுக்கு தான் சொந்தம், இந்தத் தயக்கம் என் விக்கிக்குத் தேவை இல்லை…” என்றவள் திகைத்து நின்றவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

“பூமி தொடாத மழைத்துளியின்

தூய்மையைப் போல் – உன்

காதல் என் இதயம் தொட்டு

சிலிர்க்க வைக்கிறதே…”

அவர்கள் கீழே சென்றதும் சஞ்சயை அவனது அறைக்கு அனுப்பி விட்டு, ஹர்ஷா இருந்த அறைக்குள் நுழைந்தார் ரேணுகா. தீபாவும், வர்ஷுவும் பார்த்துப் பார்த்து செய்த அலங்காரத்தில் பேரழகு தேவதையாய் ஜொலித்துக் கொண்டிருந்தவள், மாமியாரைக் கண்டதும் புன்னகையுடன் எழுந்தாள்.

“அம்மா…” அன்போடு அழைத்தவளை அணைத்துக் கொண்டவர், “அம்பாள் சிலையாட்டமா இருக்கடா செல்லம்… உன் கொழுந்தன் உனக்கு சரியான பேர்தான் வச்சிருக்கான் மகாலட்சுமின்னு, என் மனசு ஆசைப்பட்ட போல நீயே என் மூத்த மருமகளா வந்துட்டே… இந்த வீடு எப்பவும் சந்தோஷமா இருக்கும்… எண்ணி பத்தே மாசத்துல என் கையில ஒரு பேரப் பிள்ளையைப் பெத்துக் குடுத்துடணும் சரியா…” அன்புடன் அவளது தலையைத் தடவினார்.

அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த உமா, “ஹர்ஷூ… அத்தை கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோடா…” எனவும் மாமியாரின் காலில் விழுந்தாள் ஹர்ஷா.

“எப்பவும் சந்தோஷத்தோட, தீர்க்க சுமங்கலியா பதினாறும் பெற்று வாழணும்டா செல்லமே…” மனதார வாழ்த்தியவர், அவளை எழுப்பி நெற்றியில் அன்போடு முத்தமிட்டார்.

Advertisement