Advertisement

இதயம் – 25

இதயங்களில் அன்பையும் காதலையும்

பிரியங்களால் கோர்த்து வைக்கிறேன்….

மாலையாய் அணிகிறாயா – இல்லை

மாங்கல்யமாய் வாழ்கிறாயா…

மறுநாள் சஞ்சய், ஹர்ஷாவின் நிச்சயதார்த்த விழா பெரியவர்களின் ஆசியில் நல்லபடியாய் நடந்து, அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாண நாள் குறித்து, கல்யாண நாளும் வந்தது. மண்டபம் முழுதும் சொந்தங்களாலும், நட்புக்களாலும் நிறைந்திருக்க, அனைவரின் முகத்திலும் சந்தோசம் வழிந்தது.

ரேணுகாம்மா மனம் நிறைய சந்தோசத்துடன் கல்யாணத்திற்கு வருபவர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார். உமாவும் அவர்களது சொந்தத்தை கவனிப்பதில் மும்முரமாய் இருந்தார். குழந்தைப் பட்டாளம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, அவர்களை அதட்டிக் கொண்டிருந்தனர் பெரியவர்கள்.

மேடையில் கம்பீரமாய் பட்டு வேஷ்டி சட்டையில் இதழோரம் ஒட்டிக் கொண்டிருந்த நிரந்தரப் புன்னகையுடன் அமர்ந்திருந்தான் மாப்பிள்ளை சஞ்சய். ஐயர் மந்திரங்களை ஓதி முடித்து, “கல்யாணப் பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ…” என்று கூறியதும், ஹர்ஷாவை அழைத்து வந்தனர்.

பொன்னிற உடலைப் பாந்தமாய்த் தழுவி இருந்த அரக்கு நிறப் பட்டு சேலை சரசரக்க, விண்ணுலக தேவதை மண்ணுலகத்தில் வந்தது போல் நாணத்தில் குங்கும வண்ணம் முகமெல்லாம் நிறைந்திருக்க, இதயமெல்லாம் தன் மணாளனின் மேல் கொண்ட காதலில் கனிந்திருக்க, அணிந்திருந்த பொன்னகைக்கு போட்டியாய் பளீரிடும் சிறு புன்னகையுடன், பூக்களின் மலர்ச்சியோடு அவன் அருகில் வந்து அமர்ந்தாள் ஹர்ஷா.

பார்த்துக் கொண்டிருந்த கண்களெல்லாம் “என்ன அழகான ஜோடி…” என்று சந்தோஷத்துடன் நோக்க, பெற்றவர்கள் பிள்ளைகளின் கல்யாணக் கோலத்தை கண்டு கண்கள் பனித்திருக்க, சிறியவர்கள் சந்தோஷத்தில் திளைத்திருக்க, “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்று முழங்கிய மேளத்தோடும், அட்சதை வாழ்த்துக்களுடனும், இதயம் நிறைந்த காதலுடன் மாங்கல்யத்தை ஹர்ஷாவின் கழுத்தில் பூட்டி தன் வாழ்க்கையின் சரி பாதியாக்கிக் கொண்டான் சஞ்சய்.

தாலி கட்டும் வேளையில் சிறியவர்கள் கை தட்டி ஆர்ப்பரிக்க வர்ஷாவின் கண்கள் ஆவலுடன் விக்கியைத் தழுவி மீண்டன. அடுத்து சில சடங்குகளும் முடிய சொந்த பந்தங்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கிப் புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தொடங்கினர்.

“ஹேய் வாடி… நாமளும் போயி பரிசு கொடுத்து போட்டோ எடுத்திட்டு வந்திடலாம்…” என்றாள் அகிலா. தோழியின் அக்காவின் கல்யாணத்திற்காய் வெளிநாட்டில் இருந்த கவிதாவைத் தவிர மற்ற மூவரும் வந்திருந்தனர்.

தீபா மட்டும் அன்னையுடன் வந்திருக்க, ஷீலாவும் அகிலாவும் சேர்ந்து வந்திருந்தனர்.

“ஏய் தண்டம்… போட்டோன்னா எதுக்கு இப்படிப் பறக்குற, அதான் மொபைல்ல எடுத்துத் தள்ளறியே… நாம மெதுவா பரிசு கொடுத்துக்கலாம், கொஞ்ச நேரம் ப்ரீயா பேசிட்டு இருக்கலாம்…” என்றாள் தீபா.

“அட… லேட் ஆனா அவ முகத்துல அடிச்சு வச்ச பெயின்ட் கலைஞ்சு கலர் கலரா வேர்க்க ஆரம்பிச்சிடுவா, அதுக்குதான் இப்பவே போலாம்னு சொல்லுறா…” என்றாள் ஷீலு.

“வேண்டாம் அடங்குடி, நான் ஒண்ணும் மூஞ்சில பெயின்ட் அடிக்கலை… முகத்துல லைட் ஆ கிரீம் அப்ளை பண்ணி பவுடர் போட்டிருக்கேன்… கண்ணுல லேசா கண்மை, உதட்டுல தெரியாத அளவுக்கு லைட்டா லிப்ஸ்டிக்… இது கூட செய்யக் கூடாதா, பெருசா சொல்ல வந்துட்டா…” முகத்தை வெட்டிக் கொண்டாள் அகிலா.

“ஹூக்கும்… ரொம்ப தான் வெட்டிக்காதே, அப்புறம் என் பொண்ணை கூட்டிட்டுப் போயி கழுத்தை உடைச்சுட்டியான்னு உன் அப்பா சண்டைக்கு வரப் போறார்…” என்றாள் ஷீலு. அவர்கள் பேசிக் கொண்டிருக்க தீபாவின் பார்வை மேடையில் கல்யாண ஜோடிகளின் அருகில் நின்று கொண்டிருந்த விக்கி வர்ஷாவின் மீது நிலைத்திருந்தது.

அவள் பார்வை போன திசையில் திரும்பிய அகிலா, “என்ன தீபு… வர்ஷு, விக்கியை அப்படிப் பார்த்துட்டு இருக்கே…” என்றாள்.

“ஒண்ணுமில்ல அகி… இவங்க ரெண்டு பேரும் எப்படி ஜாலியா கலகலன்னு பேசிட்டு இருப்பாங்க… இப்பப் பாரேன், இருக்குற இடமே தெரியாம எவ்ளோ சைலண்ட் ஆகிட்டாங்க…” என்றாள் பெருமூச்சுடன்.

“ம்ம்… மனுஷனுக்கு காலம் தர்ற அனுபவம் தான் மாற்றத்தைத் தருது… என்னதான் வெளியே காட்டிக்கலன்னாலும் அவங்க மனசுல விக்கியோட கண்ணைப் பத்தின டென்ஷன் இருக்கத்தானே செய்யும்… ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாப் பழகினாங்க… யார் கண்ணு பட்டுச்சோ, இப்படில்லாம் நடந்துருச்சு… இனியாவது எல்லாம் சரியாகி சந்தோஷமா அவங்க கல்யாணம் நடக்கட்டும்…” என்றாள் அகிலா.

“ம்ம்… கண்டிப்பா நடக்கும்டி…” என்றாள் தீபா.

“சரி… எங்க உன் வேதாளத்தைக் காணோம்….” என்றாள் ஷீலு சுற்றிலும் பார்வையை ஒட்டிக் கொண்டே.

“ஏய்… இனி நீங்கல்லாம் அப்படிக் கூப்பிடாதிங்க, நான் மட்டும் தான் அவரை வேதாளம்னு சொல்லுவேன்…” என்றாள் தீபா துப்பட்டாவின் முனையைத் திருகிக் கொண்டே.

“பார்ரா… புள்ளை வெக்கப்படுது, கல்யாணம் பிக்ஸ் ஆனதும் கட்டிக்கப் போறவர் மேல உரிமை எல்லாம் கொண்டாடுது… சரி தாயே, நாங்க இனி அப்படி சொல்லலை… நீயே அவரை எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுக் கொஞ்சு…” ராம் ரெண்டு மாதத்தில் வெளிநாடு திரும்பி செல்ல வேண்டிய அவசியம் இருந்ததால் தீபாவுக்கும், ராஜீவுக்கும் அடுத்த மாதத்திலேயே கல்யாணத்தை முடித்து விடத் தீர்மானித்திருந்தனர்.

“ஷீலு… அங்க பாருடி, இவளோட வே… சாரி, ராஜீவ் ஜூஸ் எடுத்திட்டு வர்றாரு…” என்றாள் அகிலா.

அவர்களுக்கு அருகில் ஜூஸ் கிளாஸ் நிரம்பிய டிரேயுடன் வந்தவன், “சில்லு… நீ இவங்களோட பேசிப் பேசி ரொம்ப டயர்டாகிருப்பே… இந்தாடா செல்லம், உனக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்தேன்… எடுத்துக்கோ…” என்று நீட்டினான்.

அருகில் இருந்த இருவரும் வாயைப் பிளந்து நோக்க, “ரொம்ப தான் வாயைத் திறக்காதிங்க… உங்களுக்கும் தான் கொண்டு வந்திருக்கேன், நீங்களும் எடுத்துக்கங்க…” என்று அவர்களுக்கும் கொடுத்தான்.

ஜூஸைக் குடித்துவிட்டு தெம்புடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ராஜீவ்.

“அப்புறம் ஷீலு, அடுத்த மாசம் ஆஸ்திரேலியா கிளம்பறதா சொன்னியே… அப்ப என் கல்யாணத்துக்கு நீ வர மாட்டியா…” என்றாள் அகிலா வருத்தத்துடன். அவளுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் நிச்சயமாகி இருந்தது.

“கல்யாணத்துக்கு வர்றது கொஞ்சம் கஷ்டம் தான் தண்டம், ஆனா கண்டிப்பா உன் வளைகாப்புக்கு வரதுக்கு முயற்சி பண்ணறேன்…” என்று கூறி அவளை சிவக்க வைத்து தோழியின் வருத்தத்தைப் போக்கினாள் ஷீலு.

“ஹஹா… நல்ல வேளை, என் கல்யாணம் முடிஞ்சு தான் நீ கிளம்பப் போற… கவிதாவும் அடுத்த மாசம் இந்தியா வரேன்னு சொல்லி இருக்கா, எல்லாரும் கண்டிப்பா என் கல்யாணத்துக்கு ஒண்ணு சேரணும்டி…” என்றாள் தீபா.

“ம்ம்… எப்படி எல்லாம் பேசிட்டு ஒண்ணா சுத்திட்டு இருந்தோம்… இனி எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கைக்கு, அடுத்து எல்லாரும் எப்ப சேருவோம்னு சொல்ல முடியாது… சோ, உன் கல்யாணத்துக்கு நிச்சயமா எல்லாரும் வருவோம்…” வாக்கு கொடுத்தாள் ஷீலு.

“எதுக்கு இப்படி சோகமா மூஞ்ச தூக்கி வச்சிருக்கீங்க… எல்லாரும் ஒரு டேட் பிக்ஸ் பண்ணி சந்திச்சுகிட்டா போச்சு…” என்று சமாதானிப்பித்தான் ராஜீவ்.

“ம்ம்… தீபு, வர்ஷு, கவி மூணு பேருக்கும் வாய்த்த அடிமைகள் மிகவும் புத்திசாலிகள்… அதனால அவங்களுக்கு கவலை இல்லை… ஆனா எங்களுக்கு வாய்க்கும் அடிமைகள் திறமைசாலிகளா, புத்திசாலிகளான்னு வந்தாதானே தெரியும்…” சிரித்தாள் ஷீலு.

“சந்தடி சாக்குல புருஷனை அடிமைன்னு சொல்லிட்டியேம்மா…” தலையை ஆட்டி வருத்தப்பட்டான் ராஜீவ். அதைக் கண்ட தோழியரின் முகத்தில் புன்னகை நிறைந்தது.

மேடையில் கூட்டம் குறையத் தொடங்க புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்துக் கூறி விட்டு கல்யாண விருந்துண்டு வர்ஷா, விக்கியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் இருவரும் விடை பெற்றனர். தீபாவின் அன்னையும் வேலை இருப்பதாகக் கூறி தீபாவை மட்டும் விட்டுவிட்டு சென்னை கிளம்பி விட்டார். அவளுக்குப் பின்னாலேயே சுத்திக் கொண்டிருந்தான் ராஜீவ்.

அப்போது மேடையில் இருந்த விக்கியிடம் வந்த ஒருவன், “என்ன மச்சான்… ரொம்ப நேரமா அந்தப் பக்கத்துல இருந்து கை காட்டிட்டே இருக்கேன், என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிற… கொஞ்ச நாள் வெளியூர் போனதும் மறந்துட்ட பார்த்தியா…” என்றான் வருத்தத்துடன். அவன் விக்கியின் கல்லூரி கால நண்பன்.

“அச்சோ இல்லடா மச்சான், நான் கவனிக்கலை… நீ தப்பா நினைச்சுக்காத…”

“சரி… இதென்ன, கல்யாண மேடைல கூட கறுப்புக் கண்ணாடியோட நிக்கற… கண்ணாடி போட்டா அழகாருக்கேன்னு ஏதாவது பிகர் சொல்லுச்சா…” அவன் காதைக் கடித்தான்.

சட்டென்று விக்கியின் வாடிப் போன முகத்தைக் கண்ட வர்ஷா, “அது வந்து…” என்று விக்கி ஏதோ சொல்லப் போவதற்குள் அவனிடம் வந்தாள்.

“சார்… அவருக்கு கண்வலி, அதான் கண்ணாடி போட்டிருக்கார்…”

“ஓ… இதென்ன, இந்த சீசன்ல கண்வலி வந்திருக்கு… எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு மச்சான்…” என்றவன், ம்ம்… குடுத்து வச்சவன் டா… உன் அண்ணியோட தங்கை செம பிகர், உனக்கு செட் ஆகிருச்சு போலருக்கு…” என்று அவனிடம் கிசுகிசுத்தவன், சற்று நேரம் பேசிவிட்டு சென்று விட்டான்.

அவன் சென்றதும் வர்ஷுவை மேடையில் இருந்து அழைத்துக் கொண்டு சற்று ஒதுக்கமாய் வந்தவன், “வர்ஷூ… ஏன் அவன்கிட்டே அப்படி ஒரு பொய்யை சொன்னே, அவன் என் நண்பன் மா…” என்றான்.

“ஹூம் இருக்கட்டுமே, உங்க பிரண்டுகிட்டே என்ன நடந்துச்சுன்னு சொன்னா அது மேலும் நாலு பேருக்கு தெரியும்… ஆளாளுக்கு உங்ககிட்டே வந்து துக்கம் விசாரிக்குற போல விசாரிப்பாங்க… நீங்க பீல் பண்ணுவிங்க, அது இன்னும் சிலருக்கு தெரிஞ்சு அவங்களும் வந்து ஆறுதல் சொல்லுவாங்க… அந்த ஆறுதலில் அக்கறை இருந்தா பரவாயில்லை, அனுதாபமும், கேலியும் தான் இருக்கும்… அதான் சொல்லலை…” என்றாள் சங்கடத்துடன்.

சிரிக்க மறந்த ஓவியம் போல வருத்தம் தோய்ந்த விழிகளுடன் நின்று கொண்டிருந்தவளை ஏறிட்டவன், “நீ சொல்லுறதும் சரிதான் வர்ஷூ… அவன் என் இடது கண் பக்கத்துல இருந்து கூப்பிட்டதால எனக்குத் தெரியலை… இதைப் பத்தி எல்லார் கிட்டயும் சொன்னா பரிதாபமா தான் பார்ப்பாங்க,  நீ சொன்னது தான் சரி…” என்றான்.

“ம்ம்…” என்றவளின் அருகில் வந்தவன், “ஏன் வர்ஷூ… டல்லா இருக்கே, எதாவது வருத்தமா…” என்றான்.

“நீங்க பழைய போல மாறணும் விக்கி… நான் என் விக்கியை ரொம்ப மிஸ் பண்ணறேன்…” என்றவளின் கண்ணில் கண்ணீர் மின்னியது.

“ம்ம்… உன் பீலிங் புரியுதுடா, கொஞ்சம் டைம் குடு… நானும் பழைய போல மாறிடுவேன்… என்னதான் வெளிய தைரியமா காட்டிகிட்டாலும் முடியலைடா… ஒரு பக்கம் சூழ்ந்து நிக்குற இருட்டு என்னை மிரட்டுது… தலையைத் திருப்பி மறுகண்ணால் பார்த்துகிட்டு என்னால ஒரு காட்சியைக் கூட நிறைவா உணர முடியலை… இந்தக் கறுப்புக் கண்ணாடி என் கண்ணை மட்டும் அல்ல… மனசுல படர்ந்திருக்கிற இருட்டையும் மறைச்சு வச்சிருக்கு…” கரகரப்பான குரலில் அவன் சொன்னதைக் கேட்டு அவளது இதயம் பதறியது.

Advertisement