Advertisement

“அய்யய்யோ… இது சில்வண்டு நம்பராச்சே, இவளுக்கு என் புது நம்பர் எப்படிக் கிடைச்சுது… ஹூம், என் அருமை நண்பன் தான் இந்த சேவையை செய்திருப்பான்னு நினைக்கறேன்…” மனதுக்குள் புலம்பிக் கொண்டே அதை எடுத்து ஹலோவினான்.

“ஹ..ஹலோ… யாருங்க…”

“ஹூம்… நான் எச்டிஎப்சி பாங்குல இருந்து பேசறேன்… உங்க கிரெடிட் கார்டு விஷயமா பேசலாம்னு கூப்பிட்டோம் சார்…” இழுத்த தீபா, “ஏய் வேதாளம், உனக்கு என் நம்பர் கூட மறந்திடுச்சா…” அடிக்குரலில் சீறினாள்.

“வ…வந்து… தீப்ஸ் நீதானா, நீ இங்க தானே இருக்கே… அதான் வேற யாரோ கால் பண்ணுறாங்களோன்னு நினைச்சுட்டேன்… சொல்லு தீபு  நல்லாருக்கியா…” என்றவன் சமாளிப்புடன் பேச முயன்றான்.

“எனக்கென்ன, சூப்பரா இருக்கேன்… உன்கிட்டே கொஞ்சம் விசாரிக்கணும், ஒழுங்கு மரியாதையா மாடிக்கு வா…” என்றாள் சன்னமான குரலில்.

“என்னது விசாரிக்கணுமா… அய்யய்யோ, கோர்ட்ல கேஸ் போட்டு கூண்டுல நிறுத்தி விசாரிப்பா போலருக்கே…” மனதுக்குள் புலம்பிக் கொண்டே, “என்ன தீபு சொல்லற, இந்த வெயில் நேரத்துல மாடில என்ன விசாரிக்கப் போறே…” என்றான் அவன்.

“மாடிக்கு வாங்கன்னு சொன்னேன்…” என்றவள் போனை வைத்துவிட்டாள்.

“அய்யய்யோ ராட்சசி… மிரட்டுறதைப் பார்த்தா அடிச்சிருவா போலருக்கே…” புலம்பிக் கொண்டே மாடிக்கு சென்றான் ராஜீவ்.

மதிய வெயில் சுள்ளென்று வெளிச்சத்துடன் முகத்தில் அடிக்க ஓரமாய் இருந்த நிழலில் சென்று நின்றவன் அவளிடம் எப்படி சமாதானமாய்ப் பேசுவது என யோசித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அங்கு வந்தாள் தீபா. அவனுக்கு அருகில் வந்து நின்றவள் சாலையில் பார்வையைப் பதித்தாள்.

அவளிடம் தயக்கத்துடன் திரும்பிய ராஜீவ், “எப்படி இருக்கே தீப்ஸ்…” என்றான். வெகு நாட்களுக்குப் பிறகு மனதுக்குப் பிடித்தவளை அருகில் கண்டதில் அவன் குரல் நெகிழ்ந்திருந்தது. ஆனால் அவன் கேட்டது காதிலேயே விழாதது போல எங்கேயோ பார்வையைப் பதித்து அமைதியாய் நின்று கொண்டிருந்தாள் தீபா.

“சாரிடா தீபு… உன்கிட்டே எதையுமே சொல்லாம விலகிப் போனது தப்புதான், விக்கி சொல்ல வேண்டாம்னு சொன்னதால எதையும் உன்கிட்டே தெரியப்படுத்த முடியாமப் போயிருச்சு… அவனுக்கு சரியானதும் உன்கிட்டே சொல்லிக்கலாம்னு தான் நானும் அமைதியா இருந்துட்டேன்… என்னை மன்னிச்சிடு தீபும்மா…”

அவனிடம் திரும்பியவள், “விக்கி சொன்னதும், பக்கி சொன்னதும் எல்லாம் இருக்கட்டும், உங்க கால் சரியாகிடுச்சா…” என்றாள் நிதானமாக.

“ஓ… சின்ன பிராக்ச்சர் தான், வேகமா நடந்தா மட்டும் லேசா வலி இருக்கு…” என்றான் அவன்.

“ம்ம்… ஓட முடியுமா…”

“எதுக்கு இவ இதெல்லாம் கேக்கறா…” என யோசித்துக் கொண்டே ஓடினா வலிக்கத் தான் செய்யும், எதுக்குக் கேக்கறே…” என்றான் அவன்.

“அது… நான் குடுக்கப் போற பூஜைல பாதில ஓடிப் போயிடக் கூடாதுல்ல, அதுக்கு தான் கேட்டேன்…” என்றவள், அவன் தலையிலும் முதுகிலுமாய் குத்தினாள்.

“வேதாளம்… நீயெல்லாம் என்ன புண்ணாக்குக்கு லவ் பண்ணற… ஒரு பிரச்சனைன்னா இப்படி தான் சொல்லாமக் கொள்ளாம காணாமப் போவிங்களா, குரங்குங்களா… இதான் நீ என்னை உருகி உருகி காதலிச்ச லட்சணமா…” சொல்லிக் கொண்டே குத்தத் தொடங்கினாள் தீபா.

“ஆ…அம்மா… ஏய் அடிக்காத, வலிக்குது… போதும் நிறுத்துடி…” என்று புலம்பிக் கொண்டே அவள் கையைப் பற்றியவன்,

“அதான் சாரின்னு சொல்லிட்டேன்ல… நீ தான் என்னைக் காதலிக்கவே இல்லையே… என் அப்பா வந்ததும் உன் அம்மா கிட்ட பேசி அவங்க சம்மதிச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான சொன்னே… இப்ப என்னமோ என்னை உருகி உருகி லவ் பண்ணின சமயத்துல நான் காணாமப் போன மாதிரி புலம்பற…” என்றான் சிரிப்புடன்.

“அது… அப்போ, இது இப்போ… தடியா, நான் சொன்னா… எனக்கு உன் மேல லவ் இல்லன்னு அர்த்தமா… நீ இல்லாதப்ப தான் உன்னை நான் எவ்ளோ மிஸ் பண்ணறேன்னு புரிஞ்சது… உன்னைப் பார்க்க மனசு எவ்வளவு ஏங்குச்சு தெரியுமா… ஆனா உனக்கு, நான் ரெண்டாம்பட்சம் தானே… உன் நண்பன் சொல்லுறது தானே வேதவாக்கு, அதான் எதுவும் சொல்லாம காணாமப் போயிட்ட…” என்றவளின் கண்ணில் கண்ணீர் மின்னியது.

“ஹேய் சில்வண்டு, என்ன இது… உன் கண்ணுல தண்ணியா, என் நண்பன் எனக்கு டிரவுசர் போட்ட காலத்துல இருந்து பழக்கம்… அவனோட நிலமையைப் பார்த்து எனக்குத் தாங்க முடியல… அந்த நேரத்துல அவன் சொன்னதைக் கேக்காம இருக்க எப்படி முடியும்…  காதலுக்காக எதை வேணும்னாலும் தூக்கிப் போடலாம்தான், ஆனா எதுக்காகவும் நட்பைத் தூக்கிப் போட முடியாது… அதான் அவன் சொன்ன போல செய்ய வேண்டியதாப் போயிருச்சு, என்னை மன்னிச்சிடுடா…” என்றவன் அவள் கண்ணைத் துடைத்துவிட்டான்.

“அம்மா… என்ன அடி, பின்னிட்ட… குஸ்திக்கு போறவளை மாதிரி இந்தக் குத்து குத்துனியே, லைசன்ஸ் அப்ளை பண்ணிடலாமா…” என்றான் ராஜீவ்.

“லைசன்ஸ் எதுக்கு…” புரியாமல் கேட்டவளின் தோளின் இரு புறமும் கையிட்டவன், “என் சில்வண்டுக்கு புரியலையா, நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்… அப்புறம் நீ லைசன்சோட என்னைக் கும்மாங்குத்து பிராக்டிஸ் நடத்தலாமே, டாடியும் இங்கே தான் இருக்கார்… அத்தை கிட்டே பேச சொல்லட்டுமா…” என்றான் அவளது மூக்கில் உரசிக் கொண்டே.

நாணத்தில் சிவந்தவள், “ம்ம்…” என்று வாய்க்குள்ளேயே முனங்கி அவனைத் தள்ளிவிட்டு கீழே இறங்கி ஓடி விட்டாள். மனம் நிறைந்த சந்தோஷத்துடன் விக்கியை அழைத்துப் பேசியவன் சற்று நேரம் கழித்துக் கீழே வந்தான்.

கோனியம்மன் கோவிலின் அருகில் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு ஹர்ஷாவுடன் கீழே இறங்கினான் சஞ்சய். அவர்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்த இடம். அன்று கண்ட ஹர்ஷாவின் முகம் நினைவில் வர புன்னகையுடன் அவளுடன் ஜோடியாய் நடந்தான். அவள் மனதிலும் அதே நினைவுகள். முன்னில் இருந்த கடையில் பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். வேலை நாள் ஆனதால் கோவிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

ஜோடியாய் நுழைந்த இருவரையும் ஆர்வத்தோடு பார்த்துப் புன்னகைத்த அய்யரிடம் பதில் புன்னகையை சிந்திவிட்டு, அர்ச்சனைத் தட்டை நீட்டினர்.

அதை வாங்கிக் கொண்டு, “அம்மா வரலியா தம்பி… உங்க ரெண்டு பேரையும் இப்படிப் பார்க்க ஆனந்தமா இருக்கு, அம்மா சொல்லிருந்தா… தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருக்குன்னு, அம்பாள் மாதிரி ஒரு பொண்ணே உனக்குத் துணையா வரப் போறதுல நேக்கு ரொம்ப சந்தோசம்… ரெண்டு பேரும் ஷேமமாய் இருப்பேள்…” மனதார வாழ்த்திவிட்டு சென்றார்.

அவரது வாழ்த்தில் மனம் குளிர்ந்து நின்றாள் ஹர்ஷா. சஞ்சயின் முகத்திலும் சந்தோஷத்தின் புன்னகை.

சஞ்சய், அம்மனைக் கும்பிட்டுவிட்டு கோவில் மணியை அடிக்க முயல, அதைக் கண்ட ஹர்ஷாவின் முகத்தில், முதல் சந்திப்பில் அவன் முறைத்தது நினைவில் வந்து முகம் மலர்ந்தது. அவள் புன்னகையின் காரணம் சஞ்சய்க்கும் புரிய அவனும் மென்மையாய் சிரித்தான்.

அடுத்து தீபாராதனை முடிந்து அர்ச்சகர் நீட்டிய பிரசாதத்தை வாங்கிக் கொள்ளும் போதும் பழைய நினைவுகளே மனதில் மலர்ந்திருந்தன. நெற்றியில் பிரசாதத்தைத் தொட்டுக் கொண்டு பிரகாரத்தை சுற்றி வந்தனர். கம்பீரமாய் தன் அருகில் நடந்து வருபவனை அழைத்தாள் ஹர்ஷா.

“சனு… இப்ப நான் பிரசாதம் கொடுத்தா வாங்கிக்குவிங்களா…” சிரிப்புடன் கேட்டவளை குறும்புடன் நோக்கியவன்,

“அந்த அம்மன் எனக்கு கொடுத்த மிகப் பெரிய பிரசாதம் நீ… இதுக்கு மேல எனக்கு என்ன வேணும், நாம இங்கே பார்க்கணும்… வாழ்க்கைல ஒண்ணு சேர இது ஒரு காரணமா இருக்கணும்ங்கிறது எல்லாம் கடவுளோட கணக்கு தானே, உன்னையே எனக்காய் எடுத்துக் கொண்டேன்… உன் பிரசாதத்தை மறுப்பேனா, என் சிண்ட்ரல்லா…” என்றான் காதலுடன்.

“ஹஹா… போதும், ஓவரா ரொமாண்டிக் லுக் விடாதிங்க… நான் மயங்கி விழுந்துடப் போறேன்…” என்றவளுடன் சிரித்துக் கொண்டே நடந்தான். சற்று ஒதுக்கமாய் ஒரு இடத்தில் அமர்ந்தனர்.

“ஹஹா… சனு, ஒண்ணு தெரியுமா… இந்தக் கோவில்ல தான் நான் உங்களுக்கு  ஹிட்லர்ன்னு பேர் வச்சேன்…”

அடிப்பாவி… முதல் பார்வைலயே என்னை ஹிட்லர்ன்னு முடிவு பண்ணி கோவில்ல பேரும் வச்சுட்டியா, ஏன் உனக்கு அப்படித் தோணுச்சு…” என்றான் பரிதாபமாய்.

“பின்ன… ரேணும்மா இங்கே தலை சுத்தி மயங்கி விழுந்ததுக்கு அவங்களைத் திட்டுனீங்க… அப்புறம் கோவில் மணி அடிக்கும்போது நானும் கை வைச்சேன்னு முறைச்சிங்க, பிரசாதம் கொடுத்ததுக்கு விறைப்பா வேண்டாம்னு சொன்னிங்க… நான் அப்படியில்லாம எப்படி நினைக்குறதாம்…”அவள் சொன்னதை எல்லாம் யோசித்துப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.

“ஆமால்ல… நான் எதுக்கு அப்படி உர்ருன்னு இருந்தேன், அப்படி இருந்த நான் உன்னால இப்படி மாறிட்டனே…” என்று சிரித்தான்.

அவளும் சேர்ந்து சிரிக்க, “என்னை முதல்ல பார்த்தப்போ உனக்கு வெறுப்பா இருந்திருக்கும்ல, இவன் சரியான சிடுமூஞ்சின்னு…” கேட்டவன் அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.

அவனை ஏறிட்டவள் ஒரு நிமிடம் அவனையே பார்த்து யோசித்தாள்.

“இல்ல சனு… நீங்க சிடுசிடுன்னு இருந்தாலும் உங்க மேல வெறுப்பெல்லாம் தோணலை, அந்த சிடுசிடுப்புலயும் அம்மா மேல நீங்க வச்சிருந்த அன்பு தெரிஞ்சது… உங்க கம்பீரம், திமிர் எல்லாமே அழகா இருந்துச்சு…”

“ஓ… அப்புறம் உனக்கு எப்ப என்னைப் பிடிக்கத் தொடங்குச்சு…”

“அது எப்பன்னா…” யோசித்தவள், “சரியா சொல்லத் தெரியலையே… உங்களைப் பக்கத்தில் இருந்து பார்க்கப் பார்க்க உங்க சுபாவத்தை புரிஞ்சுக்க முடிஞ்சது, அம்மா உங்களைப் பத்தி பெருமையா ஒவ்வொண்ணும் சொல்லுறதை ரசிச்சுக் கேப்பேன்… எப்பன்னு சரியாத் தெரியலை, எதோ ஒரு நிமிஷத்துல நீங்க என் மனசுக்குள்ளே வந்திட்டிங்க…” புன்னகைத்தவளின் கையைப் பிடித்துக் கொண்டவன், “நீ எனக்குள் எப்ப வந்த தெரியுமா…” என்றான்.

ஆவலுடன் கண்கள் மலர அவனை நோக்கினாள் அவள்.

“இந்தக் கோவில்ல முதல் முதலா உன்னைப் பார்த்ததுமே அம்மா மனசுல உன்னை மருமகளா ஆக்கிக்கணும்னு ஆசை… அது அவங்க ஆர்வத்தோட உன்னைப் பார்த்த பார்வைல தெரிஞ்சது… எதார்த்தமா கோவில் மணியில் ரெண்டு பேரும் கை வைத்ததும் நீ எனக்காய் பிரசாதம் நீட்டியதும், அம்மா மயங்கி விழுந்த போது உதவி செய்ததையும் பார்த்தபோது உன்னோட பொறுமையும், அழகும் என் மனசுலயும் பதிஞ்சது… ஆனா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த நான் பார்த்ததும் எதோ ஒரு பொண்ணுகிட்ட மயங்குறதான்னு ஒரு ஈகோ… உன்னை விலக்கி நிறுத்தனும்னு நினைச்சு தான் கொஞ்சம் ஹார்ஷா நடந்துகிட்டேன், ஆனாலும் அந்த விலகலில் எல்லாம் நெருங்கியே வந்திருக்கே… நீ என் செல்ல சிண்ட்ரல்லா…” என்றான் காதலுடன்.

பிரமிப்புடன் அவன் சொல்லுவதைக் கேட்டிருந்தாள் ஹர்ஷா. அவன் மனதில் தன்னைக் கண்டதுமே அப்படி ஒரு எண்ணம் தோன்றியதைக் கேட்டதும் அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.

அவள் முகத்தையே பார்த்திருந்தவன், அவளது கையைத் தன் கைக்குள் எடுத்து மெதுவாய் அழுத்தினான். அவளது தேகம் சிலிர்த்தது. இருவரும் மனம் நிறையக் காதலுடன் கோவிலை விட்டு வெளியே வந்தனர்.

அவளை நகைக்கடை, துணிக்கடை என்று அழைத்துச் சென்றவன், அவள் மறுத்தாலும் வற்புறுத்தி வாங்கிக் கொடுத்தான். அது முடிந்து ஜூஸ் ஷாப்பிற்கு  அழைத்துச் சென்றவன் ஒரே ஒரு ஜூஸ் ஆர்டர் கொடுக்க, அவள் குழம்பினாள்.

“என்ன சனு… ஒரு ஜூஸ் ஆர்டர் பண்ணறீங்க, உங்களுக்கு வேண்டாமா…”

“அது… நம்ம ரெண்டு பேரும் ஒண்ணுதானே, அதுவும் ஒண்ணு போதும்…” என்று கூறி திகைக்க வைத்தான். கண்ணோடு கண் சேர்த்து காதலைப் பரிமாறிக் கொண்டே இரண்டு ஸ்ட்ராவில் ஜூஸை குடித்து முடித்தனர்.

“என்ன சனு, திடீர்னு அதிரடி காதல் மன்னனா மாறி இன்ப அதிர்ச்சி குடுக்கறிங்க…” சிரித்தாள் ஹர்ஷா.

“இனி எல்லாம் இப்படிதான் சிண்ட்ரல்லா…” அழகாய் சிரித்தவன் அவள் தலையில் செல்லமாய் தன் தலையை முட்டினான்.

கண்ட முதல் பார்வையில்

காட்சியாய் நிறைந்து விட்டாய்…

கண்களை மூடினாலும்

கனவாக மலர்கின்றாய்…

என்னைத்தான் மறைத்துவைக்க

அணிந்து கொண்டேன் முகமூடி…

அன்பினால் நெருங்கி வந்து

விலக்கத்தான் வைத்தாயே…

வாழ்வின் பிரசாதமானவளே…

வாசல் வந்த தேவதையே…

வாழ்நாளை வசந்தமாக்க

வலது கரம் பிடிப்பாயே…

Advertisement