Advertisement

இதயம் – 24

ரேணுகா பேசி முடிக்கும் வரை அமைதியாய் இருந்த உமா வாயைத் திறந்தார்.

“சம்மந்தி, என் பொண்ணுங்க ரெண்டு பேரும் பெருசா எதோ புண்ணியம் பண்ணி இருக்காங்க… அதான், உங்களுக்கு மருமகளா வரணும்னு இருக்கு… நீங்க சொன்ன போல ரெண்டு பொண்ணுக்கும் ஒண்ணா கல்யாணம் வைக்கலாம்னு எனக்கும் ஆசைதான், ஆனா என்னால் முடிஞ்ச அளவுக்காவது சின்னவளுக்கும் கொஞ்சம் நகை எல்லாம் செய்து போடணும்னு ஆசைப்படறேன்…”

“அதுக்கென்ன சம்மந்தி, நாங்க நகை போட்டா என்ன… நீங்க போட்டா என்ன, இனி எல்லாமே நம்ம பிள்ளைங்க தானே… உங்களுக்கு முடிஞ்சதை நீங்க செய்யுங்க, மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்…” என்றார் ரேணுகா.

“அதில்லை சம்மந்தி… சின்னத் தம்பி இப்பதான் விபத்துல சிக்கி நல்லாகிட்டு வர்றார், அவருக்கும் எல்லாம் சரியாகி கொஞ்ச நாள் போகட்டுமே… இவங்க சின்னவங்க தானே, என்ன அவசரம்…” இழுத்தார் உமா.

“அதுவந்து சம்மந்தி…” என்று மீண்டும் தொடங்கப் போன ரேணுகாவைத் தடுத்தது விக்கியின் குரல்.

“மாம்… கொஞ்சம் இருங்க, அத்தைக்கு எங்க கல்யாணத்தை தள்ளி வச்சுக்கலாம்னு அபிப்ராயம் இருந்தா அப்படியே பண்ணிக்கலாம்… அவங்களை நிர்பந்தப் படுத்தாதீங்க, என் கண் ஆப்பரேஷன் முடிஞ்ச பின்னால கல்யாணம் பண்ண தான் எனக்கும் விருப்பம்… இப்ப எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை…” என்றான் விக்கி. தன் மனதில் உள்ள தயக்கத்தைப் புரிந்து கொண்ட சின்ன மருமகனைப் பெருமிதமாய் நோக்கினார் உமா. அவர் மனதில் ஒரு திருப்தி பரவுவதைக் கண்ட சஞ்சயும் அதையே சொன்னான்.

“ஆமாம்மா, இவனுக்கு இப்பவும் ட்ரீட்மெண்ட் போயிட்டு தானே இருக்கு… அவன் மனசுல அப்படி ஒரு விருப்பம் இருந்தா அப்படியே பண்ணட்டுமே… எவ்வளவு சீக்கிரம் ஆப்பரேஷன் முடியுமோ வச்சுக்கலாம், நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க…” என்றான்.

“ம்ம்… உங்க எல்லாருடைய விருப்பமும் அதாண்ணா நான் என்ன சொல்லப் போறேன்… எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் என் மருமகள்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகணும், அது மட்டும் தான் என் ஆசை… நீங்க என்ன அண்ணா சொல்லறீங்க…” என்றார் ராமிடம்.

“நானும் சஞ்சய் சொன்னது தான் சரின்னு நினைக்கறேன்… எதுக்கு இப்ப அவசரமா கல்யாணம் பண்ணணும், சின்னப் பசங்க தானே… கொஞ்ச நாள் போகட்டும், இவன் ட்ரீட்மென்ட் எல்லாம் முடிஞ்சு பர்பக்ட் ஆனதும் கல்யாணத்தை பண்ணி வச்சுடலாம்…” என்றார் பெரியவராக. ராஜீவ் அமைதியாய் அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் அங்கு பேசிக் கொண்டிருக்க வர்ஷா அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள். ஹர்ஷாவும் ஹாலில் இருந்தாலும் அவள் எதுவும் பேசாமல் பெரியவர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

கண்கள் மட்டும் அவ்வப்போது சஞ்சயை தழுவி மீண்டது. அவளது ஒவ்வொரு விழித் தீண்டலிலும் அவனிடமிருந்து வெளிப்படும் சிறு புன்னகை அவளை மிகவும் கவர்ந்தது.

“விழிப்பூக்களுக்கு

இத்தனை நாள்

விலங்கிட்டிருந்தாயோ…

ஓயாமல் பூக்கிறது சிறு

பார்வைத் தீண்டலில்…”

அவனது புன்னகையிலும், புருவத் தூக்கலிலும் சிவந்து அவள் பார்வையை மாற்றிக் கொள்ள அதை ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான் சஞ்சய். பெரியவர்களின் பேச்சில் ஒரு கண்ணும், அவன் இதய ராணியின் முகச் சிவப்பில் மறு கண்ணுமாய் அமர்ந்திருந்தான்.

விக்கி, உமாவின் விருப்பம் போல சிறியவர்களின் கல்யாணத்தை ஆறு மாதத்திற்குப்  பிறகு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டு மறு நாள் நடக்கும் சஞ்சய், ஹர்ஷா நிச்சயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.

அமைதியாய் ஏதோ யோசித்து அமர்ந்திருந்த சின்ன மகனின் வாடிய முகத்தைக் கண்ட ரேணுகா, “விக்கி… நீ கொஞ்ச நேரம் வர்ஷாகிட்டே பேசிட்டு இரு, இதைப் பேசி முடிச்சு கொஞ்ச நேரத்துல கிளம்பிடலாம்…” என்றவர், “அவ ரொம்ப வருத்ததுல இருப்பா, போயி பேசி சமாதானப் படுத்து…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறி அனுப்பினார்.

கண்ணை மறைத்த கூலிங் கிளாசுடன் எழுந்து வந்தவன், ஹர்ஷாவை நோக்க, அவள் வர்ஷா இருந்த அறையைக் கை காட்டினாள்.

சஞ்சய் மெதுவாய் எழுந்தவன், “ஹர்ஷு, எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும்…” என்றான். அவள் அடுக்களைக்கு செல்ல அவனும் பின்னாலேயே சென்றான்.

பிரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டிருந்தவளைப் பின்னிலிருந்து மெல்ல அணைத்தவன், “மை டியர் சிண்ட்ரல்லா, நாம வெளியே கிளம்பலாமா…” என்றான் கிசுகிசுப்புடன்.

“அம்மா ஏதாவது சொல்லுவாங்க, வேண்டாமே…” என்றாள் அவள் கூச்சத்துடன் நெளிந்து கொண்டே.

“அதெல்லாம் என் அம்மாவை வச்சு மேனேஜ் பண்ணிக்கலாம், கவலைப்படாம நீ ரெடியாகி வா…” என்றான் அவள் காதில் விரலால் வருடிக் கொண்டே.

கூச்சத்தில் அவள் தேகமெங்கும் சிலிர்த்து நின்றன ரோமக் கால்கள்.  இந்த அணைப்பும் அவனது கிசுகிசு குரலும் ஒருவித பரவசத்தைக் கொடுக்க, “ம்ம்… நீங்க வெளியே போயி பர்மிஷன் வாங்குங்க, நான் ரெடிதான்…” என்று மென்மையாய் அவனைப் பிடித்து மாற்றினாள்.

“ஹூம்… ஓகே பேபி…” என்றவன், ஹாலுக்கு சென்று அன்னையின் காதில் கிசுகிசுத்தான். இதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜீவுக்கு காதில் புகை வந்தது.

“ஹூம்… ஆளாளுக்கு அம்மா காதைக் கடிச்சே காரியத்தை சாதிச்சுக்கிறாங்களே… இனி இவர் எதுக்கு காதைக் கடிச்சார்னு பார்ப்போம்…” என்று காத்திருந்தான்.

சிறிது நேரம் சாதாரணமாய்ப் பேசிக் கொண்டிருந்த ரேணுகா, “சம்மந்தி… பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்த மோதிரத்துக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன்… சஞ்சய் வாங்கப் போறான், கூட ஹர்ஷுவும் போயி சரியாருக்கான்னு பார்த்து வாங்கி வந்திடட்டுமே…” என்றார் மெதுவாக. அவரே சொல்லுவதால் உமாவும் ஒப்புதலாய் தலையசைக்க ஹர்ஷுவுடன் கிளம்பிய சஞ்சய், ராஜீவிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி சென்றான்.

“ம்ம்… இது போல ஒரு அம்மா எனக்கு இல்லாததால் தான் நான் இப்படி உக்கார்ந்துட்டு இருக்கேன், இந்த அப்பா எப்பப் பார்த்தாலும் பிசினஸைக் கவனிக்குறேன்னு வெளிநாட்டுல போயி உக்கார்ந்துகிட்டு என்னை கவனிக்கறதே இல்லை… ஹூம், என் சில்வண்டு இப்ப எப்படி இருப்பா… இந்த விக்கிப் பயலுக்கு வேண்டி நான் ஏதேதோ பண்ண வேண்டியதாப் போயிருச்சு… இப்ப வெட்ட நினைச்ச அவன் காதல் ஒட்டிகிச்சு, ஒட்ட நினைச்ச என் காதல் வெட்டுப் படுமோ… எங்கிருக்கோம், என்ன ஆனோம்னு எதுவுமே சொல்லாம போனதுக்கு அவ என் மேல செம காண்டுல இருப்பாளே… எனக்கு இதுவரை எரியவே தொடங்காத காதல் பல்பு பியூஸ் போகாம நீதான் பார்த்துக்கணும் கடவுளே…” மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.

அறைக்குள் ஜன்னல் அருகில் நின்று வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள் வர்ஷா. அவளுக்குள் கோபமும், வருத்தமும், வலியும் மாறிமாறி அலையாய் வந்து மனதில் மோதிக் கொண்டிருந்தது. விக்கியின் நினைவில் ஆழ்ந்திருந்தவள் பின்னில் கேட்ட குரலில் திரும்பினாள்.

“வர்ஷூ…”

அவள் எத்தனயோ நாட்களாய் கேட்க மாட்டோமா எனத் தவித்திருந்த அதே குரல். ஒரு குரலில் மனதின் குழப்பத்தை எல்லாம் துடைத்துப் போடும் சக்தி உள்ளதா… அதுவரை அவனை நினைத்து வருந்திக் கொண்டு துயரத்தில் இருந்தவளுக்கு அவனது குரலே பெரும் பலமாய் தோன்றியது. திரும்பாமல் தலை குனிந்து நின்றவளின் தோளில் கை வைத்தான் விக்கி.

“வர்ஷூ, என் மேல கோபமா…”

பதில் பேசா அவளது உதடுகள் துடிக்க, கண்ணில் இருந்து கண்ணீர் முத்துகள் உருண்டோடின.

அவளைத் திருப்பி தனக்கு நேராய் நிறுத்தியவன், “என்னை மன்னிச்சிடு வர்ஷூ, எனக்கு நடந்த விபத்தைப் பத்தி சொன்னா நீ தாங்கிக்க மாட்டேன்னு நினைச்சு தான் உன்கிட்ட சொல்லலை… என் ரெண்டு கண்ணுலயும் நிறைஞ்சு நின்ன உன்னை ஒரு கண்ணால பார்க்க முடியாதுன்னு தான் சொல்லலை… நீ எனக்காக சிந்துற ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் இந்தக் காயத்தை விட எனக்கு மிகப் பெரிய வலியைக் கொடுக்கும்னு நினைச்சு தான் சொல்லலை… நீ எந்தக் குறையுமில்லாத ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கட்டும்னு தான் சொல்லலை…” அடுக்கிக் கொண்டே போனவனை முறைத்தாள் அவள்.

“ஓஹோ… நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க, வல்லவங்க… காதலிச்ச பொண்ணு நல்லாருக்கனும்னு நினைக்குற தியாக மனசுள்ளவங்க… ஆனா நாங்க ஒருத்தரைக் காதலிச்சிட்டு அவங்களுக்கு ஒண்ணுன்னா இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிட்டுப் போற சுயநலவாதிங்க, அப்படித்தானே…”

படபடவென பட்டாசாய்ப் பொரிந்தவளுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியாமல் விழித்தான் அவன்.

“அ…அதுவந்து, அப்படில்லை வர்ஷூ…” என்று தந்தியடித்தவனை முறைத்தவள்,

“பின்ன எப்படியாம்… எத்தனை நாள், எங்க போனிங்க, என்ன ஆனிங்கன்னு எதுவுமே தெரியாம, யார்கிட்டயும் ஓபனா பேசவும் முடியாம மனசுக்குள்ளேயே வச்சு அழுதிட்டு இருந்திருப்பேன்… என்னைப் பத்தி என்ன நினைச்சிங்க, உங்க அழகுல மயங்கி தான் லவ் பண்ணினேன்னா… ஒருவேளை, இந்த விபத்து நம்ம கல்யாணத்துக்குப் பின்னாடி நடந்து உங்களுக்கு இப்படி ஆயிருந்தா உங்களை விட்டுப் போயிருவேன்னு நினைச்சிங்களா, காதல் தொடக்கத்துல மட்டும் தான் வெளித்தோற்றதைப் பார்க்கும்… அதுக்குப் பிறகு மனசு மட்டும் தான்… என்னோட இதயத்தை உங்ககிட்ட கொடுத்துட்டு வேரொருத்தரோட துடிப்பை அதுல உணர முடியாது, அதுக்கு பதிலா என் இதயம் துடிக்கறதையே நிறுத்தி இருக்கும்…” என்றவளின் கண்ணிலிருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவளது ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுக்கு வலியையும் சந்தோஷத்தையும் ஒருமித்துக் கொடுத்தன.

“என் வர்ஷூ, எத்தனை தெளிவாய் யோசிக்கிறாள்… நான்தான் தேவை இல்லாமல் தவறாய் யோசித்து விட்டேனோ…” என நினைத்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

“வர்ஷு… என்னை மன்னிச்சிடுடா, நான் தான் தப்பா யோசிச்சுட்டேன்… நீ இல்லாம நானும் வெறும் ஜடமா தான் இருந்திருக்கேன், இனி இப்படில்லாம் முட்டாள்தனமா யோசிக்க மாட்டேன்…” என்றவன் அவளைத் தன்னோடு சேர்த்து மென்மையாய் அணைத்துக் கொண்டான். கறுப்புக் கண்ணாடியைத் தாண்டி வழிந்த அவன் கண்ணீரை வர்ஷாவின் விரல்கள் ஆறுதலாய்த் துடைத்து விட்டன.

அதற்குப் பிறகு சிறிது நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்ததில் விக்கியின் மனதும் தெளிந்திருந்தது. சற்று நேரத்தில் வீட்டை அலங்கரிக்க ஆட்கள் வந்துவிட அவர்கள் கிளம்பி விட்டனர். ராஜீவ் மட்டும் உமாவிடம் கேட்டு அவர்களிடம் வேலையை சொல்லிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து அவனுக்கு காபியுடன் வந்த வர்ஷா, “ஹலோ மிஸ்டர் வேதாளம்… லாஸ்ட்ல நீங்க ஒரு வேதாளம்தான்னு நிரூபிச்சுட்டிங்களே…” என்று கோபத்துடன் கேட்க, அவளிடம் அவஸ்தையாய் முழித்தான் ராஜீவ்.

“அதுவந்து வர்ஷு… நான் எதுவும் வேணும்னு பண்ணலை, விக்கி சொன்னதால வேற வழியில்லாமதான்…” என்று இழுக்க,

“விக்கி சொன்னா கிணத்துல குதிச்சிருவீங்களோ…” என்றாள் அவள் நக்கலுடன்.

அவன் என்ன சொல்வதென்று முழிக்க, “என்னை சமாதானப் படுத்திட்டிங்க, ஒரு சுனாமி நம்ம வீட்டை நெருங்கி வந்துட்டே இருக்கு… உங்க பாடு திண்டாட்டம் தான், என்ஜாய்…” என்றவள் அங்கிருந்து நகர ராஜீவ் சட்டென்று புரியாமல் யோசித்தான்.

“இவ என்ன சுனாமி வருதுன்னு சாதாரணமா சொல்லிட்டுப் போறா, டீவில ஏதாவது சொல்லி இருப்பாங்களோ…” யோசித்துக் கொண்டிருந்தவன், அதற்குள் வேலையாட்கள் ஒவ்வொன்றும் கேட்கவே அதை கவனித்துக் கொண்டிருந்தான்.

உமாவுக்கு உதவியாய் வர்ஷா அடுக்களையில் இருக்க, அவர் மகளிடம் விக்கியைப் பற்றி கேட்டுக் கொண்டே சமையலை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் ஆட்டோ வந்து நிற்க வெளியே எட்டிப் பார்த்த ராஜீவ் சுகமாய் அதிர்ந்தான்.

அவனது சில்வண்டு கையில் ஒரு பாகுடன் ஆட்டோவிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பின்னே அவளது அன்னையும் இறங்க, அதற்குள் வர்ஷாவும், உமாவும் வாசலுக்கு சென்று அவர்களை வரவேற்றனர்.

அவர்களைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் சிலையாய் நின்ற ராஜீவ், அவள் நகர்ந்து வீட்டுக்குள் நுழைவது புரிந்ததும் அவசரமாய் ஒளிவதற்கு இடம் தேடினான். அனல் கக்கும் பார்வையை அவன் மீது வீசிக் கொண்டே எதுவும் பேசாமல் வந்த தீபா, உமாவிடம் நலம் விசாரித்துக் கொண்டே தோழியுடன் அவளது அறைக்கு சென்றாள்.

“ஆஹா வர்ஷா சொன்ன சுனாமி இவ தானா, அடிப்பாவி… இதுல என்ஜாய்னு வேற சொல்லிட்டுப் போனாளே, என்னவொரு வில்லத்தனம்… இந்த சில்வண்டு இல்லேன்னாலே என்னைக் குடைஞ்சு எடுப்பா, இப்ப எப்படிக் கிழிக்கப் போறாளோ…. இவங்க கைல நான் மாட்டினா அவ்ளோ தான்…” என்றவன் தனித்து நிற்காமல் பணி ஆட்களுடனேயே இருந்தான். மதிய உணவுக்கு உமா அழைத்தும் கூட பிறகு சாப்பிடுவதாகக் கூறியவன், வேலையைத் துரிதப் படுத்தினான். சற்று நேரம் கழித்து அவனது அலைபேசி அலற பரிச்சயமான அந்த எண்ணைக் கண்டதும் திகைத்தான்.

Advertisement