Advertisement

“ஹர்ஷூ… அவனைப் பத்தி எங்களுக்குத் தெரியும், அவன் சும்மா வறட்டுப் பிடிவாதம் பிடிக்கிறான்… இப்ப வேண்டாம்னு விட்டுக் கொடுத்துட்டு அப்புறம் வருத்தப்பட்டுட்டு இருப்பான்… நாம செய்தது சரின்னு அப்புறம் சொல்லிப் புரிய வச்சுக்கலாம், இந்த விஷயத்தை உடனே அத்தைகிட்டே பேசி முடிவு பண்ணிடுவோம்… அங்கிள், நாம இப்பவே ஹர்ஷு அம்மாகிட்டே பேசிட்டு வந்திடலாமா…” என்றான் சஞ்சய்.

“ராத்திரி ஆகப் போகுது… இப்ப இதைப் பத்தி பேசப் போக வேண்டாம் சஞ்சய்… ஹர்ஷு, நீ அம்மாகிட்டே எல்லாத்தையும் சொல்லு… நாளைக்கு காலைல நாங்க எல்லாரும் வீட்ல வந்து பேசறோம்… நாளன்னிக்கு ரெண்டு நிச்சயமாப் பண்ணிடலாம்…” என்றார் ராம்.

“ஆமாண்ணா… உமாகிட்டே காலைல நான் போன்ல எல்லா விஷயத்தையும் பேசிடறேன், நாளைக்கு நேர்ல போயிக்கலாம்…”  என்றார் ரேணுகா.

“சரி அம்மா, நாங்க கிளம்பட்டுமா…” என்றாள் ஹர்ஷா.

“இங்கயே நைட் சாப்பிட்டு போலாம்னு சொன்னா ஆயிரம் பதில் பேசுவே, சரி இருட்டத் தொடங்கிருச்சு… பார்த்து பத்திரமாக் கிளம்புங்க…” என்றவர், “என்ன சின்ன மருமகளே…. இப்ப உனக்கு சந்தோசம் தானே…..” என்று வர்ஷாவின் கையில் ஆதரவாய்த் தட்டிக் கொடுத்தார். அழுகையோடு வந்தவள், புன்னகையுடன் திரும்பி செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

ஹர்ஷா சென்னைக்கு சென்று தங்கையைக் கண்டது முதல் இங்கு விக்கியிடம் இப்போது பேசியது வரை அன்னையிடம் சுருக்கமாய் சொல்லி முடித்தாள். அவள் சொல்லுவதைக் கேட்கக் கேட்க அவரது முகபாவம் மாறிக் கொண்டே வந்தது. முதலில் கோபப்பட்டு, பின்பு வருத்தமாகி, முடிவில் வேதனையில் வந்து நின்றது. வர்ஷா இரவு உணவு முடிந்து அறைக்கு சென்ற பின்னர் தான் ஹர்ஷா அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா எதுவும் சொல்லாம இருக்கீங்க…” என்றாள் யோசனையுடன் அமர்ந்திருந்த அன்னையிடம்.

எங்கேயோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த உமா மகளிடம் திரும்பினார்.

“என்ன சொல்ல சொல்லறேடா… கையாலாகாத, கையில காசில்லாத அம்மா நான்… என் மகளை இப்படிக் கட்டிக் கொடுக்கணும், அப்படிக் கட்டிக் கொடுக்கணும்னு கற்பனை பண்ணி மட்டும் என்ன ஆகப் போகுது… உங்க வாழ்க்கைக்கு எது சரின்னு தீர்மானிக்குற பக்குவத்தையும், உரிமையையும் உங்களுக்கு கொடுத்து தான் நான் வளர்த்தி இருக்கேன்… இது வரைக்கும் எல்லாமே சரியா தான் பண்ணி இருக்கீங்க…” என்றவர் நிறுத்தினார்.

“அம்மா… உங்களுக்கு எதாவது வருத்தமா…” என்ற மகளை யோசனையுடன் நோக்கியவர்,

“இல்லாம இருக்குமா… என்னதான் அவங்க லவ் பண்ணி இருந்தாலும், ஒரு கண் பார்வை இல்லாதவருக்கு மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க, ஒரு அம்மாவா எனக்கு எப்படி மனசு வரும்… அவங்க நல்ல குடும்பம் தான், சின்னவரும், இவளும் ஒண்ணா வேலை பார்த்திருக்காங்க… ஒரே மாதிரி படிச்சிருக்காங்க… எல்லாம் சந்தோசம் தான், ஆனா தேவதை மாதிரி இருக்குற என் பொண்ணை அவருக்கு எப்படிக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறது…”

“அம்மா… இப்ப அவருக்கு கண் பார்வை இல்லைன்னாலும், சீக்கிரமே ஆப்பரேஷன்ல சரி பண்ணிடலாம்… அதை நினைச்சு நீங்க பயந்துக்காதிங்க, வர்ஷா அவர் மேல உயிரையே வச்சிருக்கா… அவ பேசுறதை நீங்க கேட்டிருக்கனுமே… நாங்கல்லாம் திகைச்சுப் போயி நின்னுட்டோம், மனசுல எத்தனை அன்பு இருந்தா இப்படி வேண்டாம்னு சொல்லுறவரைப் பிடிவாதமா சம்மதிக்க வைப்பா… விக்கியும் ரொம்ப நல்லவர்மா, வர்ஷு வருத்தப்படக் கூடாதுன்னு என்னெல்லாம் பண்ணிருக்கார்… அவங்களை நாம சேர்த்து வச்சா நிச்சயமா நல்லாருப்பாங்க…” அன்னைக்கு தெளிவாக்கினாள்.

“ம்ம்… வாழப் போறவளே இதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணின பின்னால நான் என்ன சொல்லப் போறேன், ரெண்டு பேரும் நல்லாருந்தா போதும்…” என்றார் அவரும்.

“ம்ம்… ரொம்ப சந்தோஷம் மா… எத்தனை நாள் வர்ஷு ராத்திரில தூங்காம அழுதுட்டே இருப்பா தெரியுமா, நமக்காக பொய்யா ஒரு சிரிப்பை உதட்டுல ஒட்ட வச்சுக்கிட்டு இருக்கா… ரொம்ப நாள் அப்புறம் இன்னைக்கு தான் அவ முகத்துல உண்மையான புன்னகையைப் பார்த்தேன்…” என்றாள் சந்தோஷத்துடன்.

“ம்ம்… வீட்ல இவ்ளோ நடந்தும் எதுவுமே தெரியாம இருந்திருக்கனே, நான் என்ன அம்மா…” என்றார் உமா வருத்தத்துடன்.

அவர் மனதில் இன்னும் வருத்தம் அலட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள்,

“அம்மா… உங்களுக்கு தெரியக் கூடாதுன்னு தானே நாங்க அவ்ளோ கஷ்டப்பட்டோம்… நீங்க வருத்தப்பட்டு உடம்புக்கு எதுவும் ஆகிட்டா, எங்களுக்குன்னு யார் இருக்கா… இதுல உங்க தப்பு எதுவும் இல்லை, வீணா வருத்தப் படாதிங்க… சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு, தூங்குங்க… காலைல அத்தை போன் பண்ணிட்டு வந்து பேசறேன்னு சொன்னாங்க…” என்றாள் ஹர்ஷா.

“ம்ம் சரிடா, நீயும் டயர்டா இருப்பே… போயி படு, காலைல பேசிக்கலாம்…” என்றவர் அவரது அறைக்கு சென்றார்.

ஹர்ஷாவின் மனது ஒருவித சந்தோஷத்தில் இருந்தது.

உறங்கிக் கொண்டிருந்த வர்ஷாவின் உதடுகளில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகை அவள் மனதை சொல்ல, ஹர்ஷாவின் இதழும் மலர்ந்தது.

சஞ்சயிடம் பேச வேண்டும் போலத் தோன்ற, அலைபேசியை எடுத்துக் கொண்டு அன்னையின் அறையை எட்டிப் பார்த்துவிட்டு பின் பக்கம் சென்றாள்.

லாப்டாப்பில் கண்ணைப் பதித்திருந்த சஞ்சய், அருகில் இருந்த அலைபேசியில் ஒளிர்ந்த ஹர்ஷாவின் எண்ணைக் கண்டதும் முகம் மலர்ந்தான். எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

“ஹல்லோ என் சிண்ட்ரல்லா… என்ன இந்நேரத்துல ஐயா நினைவு, கனவுல வந்து கெடுத்துட்டேனா…” என்றான் சிரிப்புடன்.

“என்னது கெடுக்கறதா…” அவள் குரலை உயர்த்தினாள்.

“அட… தூக்கத்தைக் கெடுத்துட்டனான்னு கேட்டேன்… நீ என்னை மறுபடியும் ஹிட்லரா யோசிக்காதே தாயே…”

“ஹூக்கும், அப்படியே கனவுல வந்துட்டிங்கன்னாலும்…” என்று சிரித்தாள் அவள்.

“நாங்கல்லாம் கனவுல பர்பார்மன்ஸ் பண்ணலைனாலும் நேர்ல பட்டைய கிளப்புவோம்ல… சரி, பிரியசகியே… என்னை இந்நேரத்தில் அழைத்ததன் காரணம் என்னவோ, உறக்கம் வரவில்லையா… கண்ணை மூடினால் கண்ணுக்குள் நிக்கறேனா…”

“அய்யே… ஆளப் பாரு, அதெல்லாம் ஒண்ணுமில்லை… என்னவோ திடீர்னு உங்க குரலைக் கேக்கணும்னு தோணுச்சு… எப்படியும் நீங்க தூங்காம லாப்டாப்போட தான் உக்கார்ந்திருப்பீங்கன்னு தெரியும்… அதான் கூப்பிட்டேன்…”

“ஓ… ஐயா குரலைக் கேக்கணும்னு ஆசையா, நானும் கூட காதலிக்கக் கத்து தரத்தான் கூப்பிட்டியோன்னு நினைச்சேன்…”

“ம்ம்… சின்னப் பப்பா, காதலிக்கக் கத்துக் குடுக்குறாங்க… நம்மை விட சின்னவங்க, அவங்க ரெண்டு பேரும் எப்படில்லாம் லவ் பண்ணி இருக்காங்க… நாம இன்னும் இந்த விஷயத்துல வளரவே இல்லை… நீங்க அந்த லாப்டாப்பையே வச்சுட்டு உக்கார்ந்துட்டு இருங்க, நான் வச்சிடறேன்….”

“ஏய்… ஏய், என் செல்ல சிண்ட்ரல்லா தானே… கட் பண்ணிடாதே, நான் என்ன பண்ணுவேன்… எனக்கு வேலையே தீர மாட்டேங்குது… உன்னோட பேசணும், கொஞ்சனும்னு மனசுக்குள்ளே ஆசையா தான் இருக்கு… நேரம் இல்லையே…”

“ஹூக்கும்… இப்படியே சொல்லிட்டு இருங்க, என்னதான் கல்யாணத்துக்கு பின்னாடி நாம ஒண்ணாவே இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த சில விஷயங்கள் தான் பொக்கிஷம் மாதிரி மனசுல நிக்கும்… ஹூம்… எனக்கு அதெல்லாம் வாய்ப்பில்லை…”

“ஏய்… ரொம்ப தான் அலுத்துக்காதே, நாங்கல்லாம் நினைக்க மாட்டோம்… நினைச்சுட்டா அப்புறம் உன் பாடு தான் கஷ்டம்… சரி… நீ அத்தைகிட்டே விக்கி, வர்ஷா விஷயம் பேசிட்டியா… என்ன சொன்னாங்க…”

“கொஞ்சம் வருத்தப்பட்டாலும் ஓகே சொல்லிட்டாங்க… நாளைக்கு அத்தையை பேச சொல்லுங்க… அப்புறம் உங்க தம்பியையும் கூட்டிட்டு வாங்க, அம்மாக்கும் பார்க்கனும்னு இருக்கும்ல… அப்படியே ஏதாவது பேசனும்னாலும் ரெண்டு பேரும் பேசிக்கட்டும்…”

“உத்தரவு மகாராணி… நீங்க சொன்ன போலவே செய்துடறோம், காலைல ஐயாவோட வெளியே கிளம்பறதுக்கு தயாரா இரு… நாளைக்கு நாம வெளியே போறோம்…”

“அச்சோ… அது எப்படி, இங்கே வீட்டுல அலங்காரம் பண்ணுறதுக்கு ஆள் வருவாங்கனு நீங்கதானே சொன்னிங்க…”

“ஓ… ஆமாம்ல, அதை நான் ராஜீவை விட்டு பார்த்துக்க சொல்லிடறேன்… அவனையும் கூட்டிட்டு வரேன்…”

“ம்ம்… சரி,  நான் வச்சிடட்டுமா…”

“வைக்கணுமா… அப்புறம் இந்த அட்வான்ஸ், போனஸ் ஏதாவது கிடைக்குமா…”

“அட்வான்சு… போனஸா, அப்படின்னா…” என்றாள் அவள் புரியாமல்.

“அதாண்டா… இந்த…” என்றவன் “ம்ம்ம்மா…..” என்று முத்தமிட்டான்.

அதை எதிர்பார்க்காதவளின் முகம் குங்குமமாய் சிவந்தது.

“என்ன பதிலைக் காணோம்… இதான் அட்வான்ஸ், இதை நீ மேரேஜ்க்கு பின்னாடி எனக்கு திருப்பிக் கொடுத்திடணும்… சரியா, போனஸ் அப்படி இல்லை… நீ திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை… நீயே வச்சுக்கலாம்…”

என்றவன் மீண்டும் முத்தமிட, “ஐயே, எனக்கு தர வேண்டிய முத்தத்தை எல்லாம் மொபைலுக்கு கொடுத்து வீணாக்கிட்டு இருக்காதிங்க… எனக்கு நிஜம் போதும்…” என்றவள் சிரிப்புடன் அலைபேசியை அணைத்து விட்டாள். இருவரின் மனதிலும் வெகு நாட்களுக்குப் பிறகு அவர்களின் காதல் நினைவுகள் மட்டுமே நிறைந்திருந்தது.

விக்கியின் அறையில் அவனிடம் கோபமாய் பேசிக் கொண்டிருந்தான் ராஜீவ்.

“அந்த மெசேஜை நீ போட சொன்ன போதே நான் வேண்டாம்னு சொன்னேன்… கேட்டியா, பாவம் வர்ஷு… எவ்ளோ பயந்து போயிருப்பா, எப்படி பீல் பண்ணி இருப்பா… சாதாரண பொண்ணுங்களைப் போல அவளையும் நினைச்சுட்டியே, உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கா பார்த்தியா…”

“டேய் லூசு… நான் ஏன் இப்படிப் பண்ணினேன்னு தெரிஞ்சும் எதுக்கு உளறிகிட்டு இருக்கே, எனக்கு மட்டும் என் பட்டர்பிளையை பிரிஞ்சு போகணும்னு ஆசையா… அவளை என் இதயத்துல சுமக்கலை டா… என் இதயத் துடிப்பே அவதான், இந்த உலகத்துல என் அம்மா, அண்ணனுக்குப் பிறகு நான் ரொம்ப நேசிச்ச, என்னை மிகவும் பாதிச்சது அவ அன்பு தான்… அதைத் தூக்கிப் போட நான் யோசிக்கறேன்னா எனக்கு எத்தனை வலிச்சிருக்கும்… இதெல்லாம் எதுக்காக செய்தேன்னு யோசிச்சுப் பார்த்தியா…”

“அவ நல்லாருக்கட்டும்னு நினைச்சு நீ இதை செய்தாலும், நீ வேண்டாம்னு சொன்னதும், அவ சரின்னு சொல்லிட்டுப் போயிடுவான்னு நினைச்சிருக்கே பாரு… அதான் தப்புன்னு சொல்லறேன், சரி… எப்படியோ, ஒருத்தர் மேல ஒருத்தர் இதயம் நிறைய காதலை சுமந்துகிட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவீங்களோன்னு நான் ரொம்ப வருத்தப்பட்டேன்… கடவுள் எப்படி கொண்டு வந்து சேர்த்துட்டார் பார்த்தியா… உண்மையான காதல் எப்பவுமே தோற்காது டா…” நெகிழ்ச்சியுடன் பேசிய நண்பனை தோளோடு அணைத்துக் கொண்டான் விக்கி.

“டேய் மச்சி… கடவுள் எனக்கு வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையுமே கொடுக்கலை… நல்ல அம்மா, அப்பா இல்லாத குறையே தெரியாமப் பார்த்துக்கற அருமையான அண்ணன்… நல்ல நண்பன், என் பட்டர்பிளை மனைவியா வந்துட்டா என் வாழ்க்கை எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு எப்பவும் நினைச்சுட்டே இருப்பேன்… ரொம்ப சந்தோஷப்படாதேன்னு கடவுள் இந்த விபத்தைக் கொடுத்துட்டான்… ஒரு கண்ணில்லாம அவ பக்கத்துல நான் எப்படி நிப்பேன்… என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவ வேதனைல துடிப்பாளே, அதுக்கு தானே நான் விலகிப் போக நினைச்சேன்… அதைப் புரிஞ்சுக்காம நானே வேணும்னு பிடிவாதமா நிக்குறாளே…” என்றவனின் வார்த்தையில் வலியோடு ஒரு பெருமிதமும் நிறைந்திருந்தது.

“உண்மையான காதல் எதையும் விட்டுக் கொடுக்கும் டா… ஆனா எதுக்காகவும் காதலை விட்டுக் கொடுக்காது, சந்தோஷமா படுத்துத் தூங்கு… நாளைக்கு அவகிட்டே மனசு விட்டுப் பேசு… உன் மனசு தெளிவாகிடும்…” என்றவன் படுத்துக் கொண்டான். வெகு நேரம் விக்கி படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தான். வர்ஷா பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

நான் அழகனா என்கிறாயே…

நீ அழகானவன் இல்லை…

பேரழகானவன் – என்னிடம்

பேரன்பைக் காட்டுவதால்…

கண்கள் கலந்து வந்த காதல்…

கன்னக் குழியில் விழுந்த காதல்…

தண்ணீரில் எழுதிய கவிதையாய்

மறைந்து தான் போயிடுமா…

உள்ளம் ரெண்டும் உணர்ந்த காதல்

உண்மையில்லை என்றாகுமா…

உணர்விலே கலந்த காதல்

உயிரைவிட்டுப் பிரிந்து போகுமா…

எனக்குள்ளே நீயிருக்க

உன்னை விட்டு எங்கு செல்வேன்…

உணர்வுக்குள் உணர்ந்தவனே

உன்னைவிட்டு நான் பிரியேன்…

Advertisement