Advertisement

இதயம் – 23

ஹர்ஷா சொல்லி முடிக்கும் வரை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த ரேணுகா, சஞ்சய் மற்றும் ராமின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் யோசனையாய் நெளிந்து கொண்டிருந்தன. சற்று நேரம் அமைதியாய்க் கழிய ரேணுகா தொடங்கினார்.

“என்னடா ஹர்ஷூ சொல்லறே, விக்கியும் வர்ஷாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்களா…” திகைப்புடன் கேட்டார்.

அழுது கொண்டிருந்த வர்ஷாவை சற்று சமாதானப்படுத்தி தனது அறையில் அமர்த்திவிட்டு அவர்களிடம் விஷயத்தை சொல்லி முடித்திருந்தாள் ஹர்ஷா.

“அவங்க ரெண்டு பேரும் என்கிட்ட இதைப் பத்தி எதுவும் சொல்லலையே…” என்றான் சஞ்சய் தாடையை யோசனையுடன் சொரிந்து கொண்டே.

“வர்ஷாவைப் பார்த்ததும் இவனுங்க ரெண்டு பேரும் ரூமுக்கு நழுவிட்டாங்களே…” என்ற ராம், “சரி வாங்க, அவங்க கிட்ட பேசிடலாம்…” என்று மாடிக்கு செல்ல, மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.

விக்கியின் அறைக்கதவு தாழிடப்பட்டிருக்க, கதவைத் தட்டினர். சற்று நேரத்தில் ராஜீவ் வந்து கதவைத் திறக்க, உள்ளே நுழைந்தனர்.

விக்கி அவனது அறையின் பால்கனியில் வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“என்னடா ராஜீவ் இது, வர்ஷாவைப் பார்த்ததும் நீங்க ரெண்டு பேரும் மேல வந்துட்டிங்க… அவ அழுதுட்டு இருக்கா, எதுக்கு அவளை லவ் பண்ணிட்டு அப்படி ஒரு மெசேஜை விக்கி அனுப்பி இருக்கான்…” என்றார் ரேணுகா.

“அ….து வந்தும்மா…” என்று ராஜீவ் திணற, “சொல்லுடா, விக்கி அவளை லவ் பண்ணது உண்மை தானே… அப்புறம் எதுக்கு அப்படி ஒரு மெசேஜ்…” என்றார் ராம் மகனிடம்.

“டாட்… அது வந்து…” அவன் தயங்க அங்கு வந்த விக்கி, “மாம்… அவனை எதுக்கு கேக்கறிங்க, நானே சொல்லிடறேன்… வர்ஷாவை பார்த்தேன், சரி… டைம் பாஸ்க்கு அவளோட பழகலாம்னு தோணுச்சு… அதான் அவளை லவ் பண்ணுற போல நடிச்சேன்… மத்தபடி எனக்கு அவ மேல உண்மையான லவ் எல்லாம் கிடையாது, அதான் அப்படி ஒரு மெசேஜ் அனுப்பினேன்…” என்றான் விக்கி.

ஹர்ஷாவும், ரேணுகாவும் திகைத்துப் போய் நிற்க, இந்த பதிலை எதிர்பார்க்காத ராம் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னடா சொல்லறே, டைம் பாஸ்க்கு லவ் பண்ணியா…” என்ற சஞ்சய், அவனையே தீர்க்கமாய் பார்த்துவிட்டு, “நீ உண்மையா தான் சொல்லறியா…” என்றான்.

“ம்ம்…” வாய்க்குள்ளேயே முனங்கினான் விக்கி.

“சரி… அதை வர்ஷாகிட்டே நீயே சொல்லிடு, நீ எதோ ஒரு காரணத்துக்காக அப்படி ஒரு மெசேஜை அனுப்பி இருக்கே… கண்டிப்பா அவளைத் தேடி வந்திருவேன்னு நம்பிட்டு இருக்காளே, அவகிட்ட புரியுற மாதிரி வந்து சொல்லு…” என்றான் சஞ்சய்.

“அ…அது வந்து… எனக்கு அவளைப் பார்க்கவே பிடிக்கலைண்ணா, நீங்களே சொல்லிப் புரிய வைங்க…” என்றான் விக்கி. அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் ஹர்ஷாவும், ரேணுகாவும்.

“டேய்… என் மகன் விக்கியா இப்படில்லாம் பேசறது, மத்தவங்க வருத்தப்படுற மாதிரி பேசக் கூட மாட்டியே…. ஒரு பொண்ணை டைம் பாஸ்க்கு லவ் பண்ணேன்னு ஈசியா சொல்லற….” என்றார் ரேணுகா.

விக்கி அமைதியாய் நிற்க, ராஜீவ் தலை குனிந்து நின்றிருந்தான்.

“டேய் ராஜீவ்… இவன் சொல்லுறதெல்லாம் உண்மையா, உனக்குத் தெரியாம இவன் எதுவும் பண்ண மாட்டானே…” என்றார் கண்ணில் நீருடன்.

“அ…அம்மா, இது அவன் வாழ்க்கை… அவன் முடிவு, நான் என்ன சொல்ல முடியும்…” என்றான் ராஜீவ்.

“சரி… நீ எங்க கிட்ட சொன்னதை அப்படியே வர்ஷாகிட்டே வந்து சொல்லு…” என்றான் சஞ்சய்.

“இல்லண்ணா… எனக்கு அவளைப் பார்க்கக் கூடப் பிடிக்கலை… நீங்களே சொல்லிடுங்க…” என்று நிமிர்ந்தவன் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த வர்ஷாவைக் கண்டதும் அதிர்ந்து முகத்தைத் திரும்பிக் கொண்டான். அழுதழுது கலங்கிப் போயிருந்தவள், விக்கியைக் காண்பதற்காய் அவளாகவே மாடிக்கு வந்து விட்டாள்.

தங்கையை அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா, அவளது கையை ஆதரவுடன் பற்றிக் கொள்ள ரேணுகாவிடம் வந்தவள், “ஆ… ஆண்ட்டி… எனக்கு உங்க பையன் கிட்ட அஞ்சு நிமிஷம் பேசறதுக்கு அனுமதி கொடுப்பீங்களா…” என்றாள் கண்ணில் வழியும் நீருடன்.

“அச்சோ… நீ அழாதம்மா, இவனுக்கு தலைக்கு அடி பட்டதுல புத்தி கலங்கிப் போயிருச்சுன்னு நினைக்கறேன்… அதான் இப்படில்லாம் பண்ணறான், நீ கவலைப் படாதே… நான் அவன்கிட்டே பேசறேன்…” என்றார் அவள் கண்ணைத் துடைத்து விட்டுக் கொண்டே.

“இ…இல்ல ஆண்ட்டி… என்னைப் பார்க்கப் பிடிக்கலை… லவ் பண்ணற மாதிரி நடிக்க தான் செய்தேன்னு விக்கி என்னைப் பார்த்து சொல்லட்டும்… நான் இனி அவர் கண் முன்னாலயே வர மாட்டேன், ப்ளீஸ் ஆண்ட்டி…” என்றாள் வர்ஷா.

அவளைக் கலக்கமாய்ப் பார்த்துக் கொண்டே ஹர்ஷாவின் முகத்தை ஏறிட்டார் ரேணுகா. “அவள் சம்மதியுங்கள்…” என்பது போல தலையாட்ட, “சரிம்மா, நீ அவன்கிட்டே பேசு… நாங்க வெளியே இருக்கோம்…” என்றார் அவர்.

“பரவாயில்லை, நீங்க இங்கயே இருங்க… அவர் வாயால அந்த வார்த்தையைக் கேட்டுட்டு நான் போயிடறேன்…” என்றவள், அவன் முன்னில் வந்து நின்றாள்.

அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “டேய் விக்கி… அவதான் நீ சொன்னா போயிடறேன்னு சொல்லுறாளே, சொல்லு…” என்றான் சஞ்சய்.

தலை தாழ்த்தி நின்றவனிடம், “வி..விக்கி… இப்ப உங்களுக்கு என்ன சொல்லணுமோ சொல்லுங்க, நீங்க என்னைக் காதலிச்சது வெறும் டைம் பாஸ் தானா… என்னைப் பார்க்கும் போதெல்லாம் கண்ணுல வழிந்த காதல் பொய்யா, என்னை பட்டர்பிளைன்னு கூப்பிட்டு பின்னாடியே சுத்தினது எல்லாம் வெறும் நாடகம் தானா… சொல்லுங்க, நான் போயிடறேன்….” என்றவளின் குரலில் ஒரு உறுதி வந்திருந்தது.

கறுப்புக் கண்ணாடிக்குள் கண்ணை மறைந்து நின்றிருந்தவன் அவளது முகத்தை ஏறிட முடியாமல் தவித்து நின்றான். கண்ணை கண்ணாடிக்குள் மறைக்கலாம்… மனதை மறைக்க ஏதும் வழி உள்ளதா, என்ன…

நண்பனின் மனநிலையைப் புரிந்து கொண்ட ராஜீவ், வர்ஷாவிடம் பேச முயன்றான்.

“வர்ஷா… அது, அவன் ஏன் அப்படி…” என்று தொடங்கியவனை கை காட்டி நிறுத்த சொன்னவள், “வேண்டாம், எனக்கு உங்க பதில் தேவையில்லை… இவரை சொல்ல சொல்லுங்க…” என்றாள் விக்கியைப் பார்த்துக் கொண்டே.

“ராஜீவ்… நீ சும்மா இரு, அவனே சொல்லட்டும்…” என்றார் ரேணுகா.

விக்கியின் முன்னில் வர்ஷா நிற்க, அவன் தலை குனிந்திருந்தது.

“ம்ம்… அமைதியா இருந்தா என்ன அர்த்தம், விக்கி… என் கண்ணைப் பார்த்து சொல்லுங்க, உங்க மெசேஜ்ல நீங்க சொன்னதெல்லாம் உண்மையா…” அவளது குரல் தெளிவாய் ஒலித்தது.

விக்கி அமைதியாகவே நிற்க மற்றவர்கள் குழப்பத்துடன் நின்றனர்.

“டேய்… அதான் அவ கேக்கறாளே, இப்படியே நின்னா எப்படி… வாயைத் திறந்து சொல்லேண்டா…” என்றார் ரேணுகா.

“என்ன மாம் சொல்ல சொல்லறீங்க… காதலிக்கும்போது எனக்கு ரெண்டு கண்ணு இருந்துச்சு, இப்ப ஒரு கண்ணு தான் இருக்கு… அட்ஜஸ்ட் பண்ணி என்னை ஏத்துக்கோன்னு சொல்லுறதா, அவ என்னை லவ் பண்ணின காரணத்துக்காக குறையோட இருக்கற என்னை ஏத்துக்கனுமா என்ன… அவ கண்ணைப் பார்த்து என்னால சொல்ல முடியும், ஆனா ஒரு கண்ணே இல்லாத என்னைப் பார்த்து அவ கண்ணீர் விட்டா நான் செத்தே போயிடுவேன்… என் பட்டர்பிளை, என்னோட இல்லைனாலும் பரவாயில்லை… ஆனா எந்தக் குத்தமும் குறைவும் இல்லாம சந்தோஷமா இருக்கான்னு தெரிஞ்சாலே போதும்… அதுக்கு தான் அப்படி ஒரு மெசேஜ் அனுப்பினேன்… அதைப் பார்த்ததும் என் மேல கோபப்பட்டு, வெறுத்து விலகிப் போயிடுவா, அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்குவான்னு நினைச்சேன்… ஆனா, இப்படி நம்பிக்கையோட காத்துகிட்டு இருப்பான்னு நினைக்கலை… நான் அவளைக் காதலிச்சது உண்மைதான், ஆனா, இப்ப என் மனசுல காதல் இல்லை… அவ நல்லாருக்கணும்னு நினைப்பு மட்டும் தான் இருக்கு…” என்றவன் கண்ணாடியைத் தாண்டி வழிந்த கண்ணீருடன் பேச அனைவரும் திகைத்து நின்றனர்.

“விக்கி… உங்களைக் காதலிச்சுட்டு வேறொருத்தரைக் கல்யாணம் பண்ணிகிட்டா என் வாழ்க்கை நல்லாருக்கும்னு நீங்க எப்படி நினைக்கலாம்… உங்களுக்கு இப்ப ஆக்சிடன்ட்ல போன கண்ணு நம்ம கல்யாணத்துக்குப் பின்னால போயிருந்தா…? அப்பவும் இப்படிதான் யோசிப்பீங்களா, சொல்லுங்க…”

அவள் கேட்டதும் அவன் அமைதியாய் யோசிக்க, அவள் தொடர்ந்தாள்.

“காதலிக்கத் தொடங்கும் போது வேணும்னா ஒருத்தரோட புற அழகு கண்ணுக்கு முக்கியமாத் தெரியலாம்… புரிஞ்சுக்கத் தொடங்கும்போது மன அழகு தான் வாழ்க்கைக்குப் பெருசாத் தெரியும்… உங்களோட கண்ணுக்குள்ளே கண்மணியைப் போல நேசிச்சுட்டு, இப்ப கண்ணுல தூசி போல தூக்கிப் போட நினைக்கறிங்களே…” கண்களில் வழிந்த கண்ணீருடன் பேசியவளை ஆதரவுடன் தோளில் தட்டிக் கொடுத்தார் ரேணுகா.

சஞ்சயும், ஹர்ஷாவும் அவள் பேசுவதை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ராஜீவுக்கு அவளது மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

விபத்து நடந்து ஒரு கண் இழந்ததை அறிந்ததும் விக்கி, வர்ஷாவிற்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று ராஜீவிடம் கூறியபோது அவன் வேண்டாம் என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தான். விக்கி தான் வம்படியாய் அவனை மெசேஜ் அனுப்ப வைத்தான். ராஜீவிற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் நண்பனுக்காய் தீபாவின் மீதிருந்த காதலைக் கூட மறந்துவிட்டு வர்ஷாவிற்கு அந்த மெசேஜை அனுப்பினான். வர்ஷா, விக்கியின் மீது வைத்திருந்த காதல் அவன் அறியாததா… ஆனால் புரிந்து கொள்ள வேண்டியவனோ, அவள் மனதை மிகவும் சாதாரணமாய் எடை போட்டு விட்டான்.

“வர்ஷூ… நீ பேசறது கேக்கறதுக்கு வேணும்னா நல்லாருக்கும்… ஆனா வாழ்க்கைல, உன்னை எப்படில்லாம் சந்தோசமா வச்சுக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்… என் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் நீ பரிதாபமா தானே பார்ப்பே… பழைய போல உன்னால பார்க்க முடியுமா, சொல்லு… இந்த முகத்தைப் பார்த்தா உனக்கு காதல் வருமா…” என்றவன், முகத்தில் பாதி மறைத்திருந்த கறுப்புக் கண்ணாடியை எடுத்தான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவின் கண்ணில் அதிர்ச்சி தெரிந்தது. அவளைப் பார்த்து குறும்புடன் சிரித்த கண்களில் ஒன்று கறுமையாய்… இமைகள் இரண்டும் ஒட்டிக் கொண்டிருக்க கண் இருந்த இடம் முழுதும் கறுப்பாக இருந்தது. ஒரு பக்கத்துக் கண்ணால் மட்டுமே பார்க்க முடிவதால் தலையை சரிவாக வைத்துக் கொண்டே பேசினான். முகம் முழுதும் காயத்தின் தழும்புகள். அவள் கண்ணெடுக்காமல் ரசித்த அவனது முகமா அது..

சூடாய் அவளது கன்னத்தை நனைத்துக் கொண்டு இறங்கியது கண்ணீர்.

அவளை நோக்கியவன், “சொல்லு… இந்த முகத்தைப் பார்த்தா உனக்கு காதல் வருமா, பரிதாபம் வருமா…” என்றான் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டே.

அவனிடம் எதுவும் சொல்லாமல் ரேணுகாவிடம் திரும்பியவள், “ஆண்ட்டி… உங்க மகனுக்கு ஒரு கண் இல்லாம இருக்கலாம்… ஆனா உங்க எல்லாருக்கும் விருப்பம்னா, அவருக்குப்  பார்வையா இருக்கணும்னு நான் ஆசைப் படறேன்…” என்றவளை கண்ணீருடன் அணைத்துக் கொண்டார் ரேணுகா. ஹர்ஷாவின் கண்களும் கலங்கின. சஞ்சய் ராம், ராஜீவின் மனமும் நெகிழ்ந்தன.

ஆனால் சந்தோஷப் பட வேண்டிய விக்கியின் முகமோ இறுகியது.

“எனக்கு யாரோட அனுதாபமும் தேவை இல்லை, இதை நான் ஒத்துக்க மாட்டேன்…” என்றான் அழுத்தமான குரலில்.

“ஏன் ஒத்துக்க மாட்டிங்க… நான் விரும்பினது உங்க மனசை இல்ல, அழகைத் தான்னு சொல்லறீங்களா, என் காதலை நான் எப்படி நிரூபிக்கணும்னு சொல்லுங்க… வேணும்னா என் கண்ணை உங்களைப் போல ஆக்கிடட்டுமா… இல்லேன்னா உங்களுக்குத் தந்துடட்டுமா, நீங்க என்னை ஏத்துக்கலைனாலும் நான் வேறொருத்தரை கல்யாணம் பண்ணணும்னு நீங்க சொல்லுறதை நான் ஏத்துக்கவே மாட்டேன்…” என்றாள் வர்ஷா பிடிவாதத்துடன்.

அவள் சொன்னதைக் கேட்டு விக்கியும், மற்றவர்களும் திகைத்துப் போய் நின்றிருக்க, அவனிடம் வந்தார் ரேணுகா.

“டேய் விக்கி… அவதான் தெளிவா சொல்லிட்டாளே, அப்புறமும் எதுக்கு உனக்கு பிடிவாதம்… உன் கண்ணை ஆப்பரேஷன்ல சரி பண்ணிடப் போறோம்… மனசுக்குப் பிடிச்ச பொண்ணை வேறொருத்தனுக்கு கட்டி வச்சுட்டு வாழ்க்கை பூரா வருத்தப்பட்டுட்டு இருக்கப் போறியா… நான் முடிவு பண்ணிட்டேன், வர்ஷு தான் என் சின்ன மருமகன்னு… இந்த அம்மாவுக்காக நீ இதை ஏத்துகிட்டு தான் ஆகணும்…” என்றார் ரேணுகா.

அதைக் கேட்டவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து பால்கனிக்கு செல்ல, “அ…அம்மா… அவரோட சம்மதம் இல்லாம நாம எப்படி முடிவு பண்ணுறது…” என்று ஹர்ஷா தயக்கத்துடன் கேட்டாள்.

Advertisement