Advertisement

இதயம் – 22

“சொல்லுமா ரேணுகா, இப்ப நீ எனக்கு சொன்ன ஆறுதல் எல்லாம், நான் உனக்கு சொன்னா நீ என்ன பண்ணுவே… பையன் உயிருக்கு ஆபத்து இல்லாம இந்த அளவுல தப்பிச்சானே, முகத்துல காயம், தழும்பு போகப் போக மறைஞ்சிடும்… கண்ணும் ஆப்பரேஷன் பண்ணி சரி பண்ணிடலாம்னு சமாதானப் பட்டுக்குவியா, அதுக்கு உன்னால முடியுமா…” அழுத்தமாய் தெளிவாய் கேட்டார்.

அதிர்ச்சியுடன் அவரது கையைப் பிடித்துக் கொண்டவர், “அ… அண்ணே, என்ன சொல்லறீங்க… அ..அப்படின்னா, ஆக்சிடண்ட் ஆனது என் விக்கிக்கா…” என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழியத் தொடங்கியது.

அமைதியாய் அவரது கையில் தட்டிக் கொடுத்தவர், “இப்ப அவன் நல்லாருக்கான்மா, நீ கலங்காம இரு…” என்றார் ஆதரவாக. அவர் சொன்னதும் கோபத்துடன் மூத்த மகனிடம் திரும்பினார் ரேணுகா.

“டேய் சஞ்சு., ஏண்டா இதை எங்கிட்ட சொல்லாம மறைச்சே… அய்யோ, என் செல்லம் எப்படி எல்லாம் வேதனைல கஷ்டபட்டானோ… எத்தனை வலியை சகிச்சு கிட்டானோ, அவன் கூட இருந்து பார்த்துட்டு, ஆறுதல் சொல்லித் தேத்தக் கூட முடியாமப் பண்ணிட்டியே… ஒரு கண்ணு வேற தெரியலைன்னா அவன் மனசுக்குள்ளேயே நொறுங்கிப் போயிருப்பானே, அவன் அங்கே இத்தனை வேதனையை அனுபவிச்சிட்டு இருக்குறது தெரியாம அவன் வர மாட்டேங்கிறான்… பேச மாட்டேங்கிறான்னு நான் குறை பட்டுகிட்டேனே, அப்பக் கூட என்கிட்டே சொல்லாம மறச்சுட்டியேடா பாவி…” அழுது கொண்டே அவனது சட்டையைப் பற்றியவர், அப்படியே மயங்கி சரிந்தார்.

அவர் கலங்கிப் பதறுவதை கண் கலங்க பார்த்து நின்ற சஞ்சய், அன்னை மயங்கியதும் பயந்து போனான்.

“ராணிம்மா, தண்ணி எடுத்திட்டு வாங்க…” கத்தினான். அதற்கு முன்னமே ரேணும்மா பேசுவதைக் கேட்டு கண் கலங்க நின்று கொண்டிருந்த ராணி, தண்ணி பாட்டிலுடன் ஓடி வந்தார். தண்ணீரை வாங்கி அன்னையின் முகத்தில் தெளிந்தவன், அவர் மெதுவாய் உடல் அசையவே சமாதானித்தான்.

“விக்கி… என் விக்கி…” உதட்டுக்குள் முனங்கியபடியே சோர்வுடன் புலம்பிக் கொண்டிருந்தார் ரேணுகா.

ராம் வருத்தத்துடன் ரேணுகாவைப் பார்த்துக் கொண்டிருக்க, ராணிம்மாவின் உதவியுடன் அன்னையைக் கைத்தாங்கலாய் அறைக்கு அழைத்துச் சென்ற சஞ்சய், அவரைப் படுக்கையில் கிடத்தினான். கண்கள் மூடியிருக்க அரை மயக்கத்தில் சின்ன மகனின் பெயரைப் புலம்பிக் கொண்டு படுத்திருந்தார் ரேணுகா.

துக்கம் தொண்டையை அடைக்க, நின்று கொண்டிருந்த சஞ்சயின் தோளில் கை வைத்த ராம், “சஞ்சய், அம்மாவை ஹாஸ்பிடல் கொண்டு போகணுமா…” என்றார்.

“நான் ஹர்ஷாவுக்கு போன் பண்ணி சொல்லறேன் அங்கிள், அவ வந்து அம்மாவைப் பார்த்துக்குவா… அம்மா உணர்ச்சிவசப் படும்போது இந்த மாதிரி அப்பப்போ வரும்…” என்றவன், ஹர்ஷாவை அழைத்து சுருக்கமாய் விஷயத்தைக் கூறினான். விக்கிக்கு இப்படி ஆனதையும், ரேணும்மா மயங்கி விழுந்ததையும் கேட்டு அதிர்ந்து போனவள், தான் உடனே கிளம்பி வருவதாகக் கூறினாள்.

வர்ஷா ஆபீஸ் சென்றிருக்க, அன்னையிடம் விஷயத்தை சொல்லிவிட்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள் ஹர்ஷா.

“சஞ்சய்… ஆக்ஸிடன்ட் நடந்து ஒரு மாசம் கழிச்சு சொல்லியும் ரேணுகா இப்படித் துடிக்கிறாளே, தம்பிக்கு இப்படி ஆனது தெரிஞ்சதும் நீ எவ்ளோ வேதனைப் பட்டிருப்பே… நல்ல வேளை நீ சொல்லாம மறைச்சுட்ட… உன் அம்மா அந்த நிலைமைல விக்கியைப் பார்த்திருந்தா… அச்சோ, நினைச்சுப் பார்க்க கூட முடியலை…” என்று தலையை குலுக்கிக் கொண்டவர்,

“ஹூம்… ஆபீஸையும் கவனிச்சுகிட்டு, தம்பியோட டிரீட்மென்டையும் நடத்திட்டு, அம்மாவோட ஹெல்த்தையும் பார்த்துகிட்டு, ஹர்ஷாகிட்ட கூட சொல்லாம மனசுக்குள்ளயே ஒதுக்கிக்கிட்டு, இவ்ளோ நாள் எத்தனை பாடுபட்டிருப்பே, நீ கிரேட் டா கண்ணா…” மனதாரப் பாராட்டினார்.

“அங்கிள்… என் மனசு எத்தனையோ பிரச்சனைகளை பார்த்து, பேஸ் பண்ணி மரவிச்சு இறுகிப் போயிடுச்சு, வேதனைகளைத் தாங்கியே பழகினவன் நான்… இந்த வலியையும் தாங்கிகிட்டேன், என் உலகமே இவங்க தானே… ஆனா, அம்மாவும், ஹர்ஷாவும் ரொம்ப மென்மையானவங்க… அவங்களுக்கு இதைத் தாங்கிக்கறது ரொம்பக் கஷ்டம், அதான் அவங்ககிட்டே சரியான பின்னால சொல்ல நினைச்சேன்… ராஜீவ், விக்கி கூட இருக்கறது எனக்கு பெரிய பலம்… இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் வந்திருவாங்க… அவனைப் பார்த்து அம்மா பயந்துடக் கூடாதுன்னு தான் சொன்னேன்…” என்றான் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

அதைக் கேட்டுக் கொண்டே அவசரமாய் வீட்டுக்குள் நுழைந்த ஹர்ஷா, சஞ்சயைக் கண்டதும் திகைத்துப் போனாள். அவனது முகத்தில் அத்தனை வேதனையும், சோகமும் அப்பிக் கிடந்தது.

அவளைக் கண்டதும், “வாம்மா…” என்றார் ராம் சிநேகத்துடன்.

“அ..அங்கிள்… அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு… எழுந்துட்டாங்களா, சனு… என்ன இது,. நீங்களே இப்படிக் கலங்கி நிக்கலாமா…” என்று அவனையும் சமாதானப் படுத்தினாள்.

“ஹர்ஷூ… அம்மா ரூம்ல இருக்காங்க, நீ வந்து பாரு…” என்றவன், அவளுடன் ரேணும்மாவின் அறைக்கு சென்றான். ரேணுகாவிற்கு ஒன்று என்றதும் பறந்து வந்தவளை நினைத்து ராமிற்கு சந்தோஷமாய் இருந்தது.

அவளைக் கண்டதும், அதுவரை இருந்த கலக்கம் மாறி முகம் தெளிந்த சஞ்சயின் மனதில் அவள் மீதுள்ள ஈடுபாடு தெரிந்தது. “ரெண்டு பேரும் நல்ல ஜோடிதான்… சந்தோஷமா இருக்கணும்…” என மனதுக்குள் வாழ்த்திக் கொண்டார்.

மருமகளைக் கண்டதும் மீண்டும் அழத் தொடங்கிய ரேணுகாவை சமாதானப் படுத்துவதற்குள் ஹர்ஷா சோர்ந்து விட்டாள். அவருக்கு வேண்டிய மாத்திரைகளைக் கொடுத்தவள், அவர் சற்று உறங்கியதும் சஞ்சயைத் தேடி வந்தாள். விமானத்தில் வரும் விக்கி, ராஜீவை அழைத்து வருவதற்காய் ராம் விமான நிலையம் கிளம்பி இருந்தார்.

தனது அறையில் சோபாவில் தலையை சாய்த்து கண் மூடி இருந்தான் சஞ்சய்.

அவனது மூடிய கண்களுக்குள் அங்குமிங்குமாய் அசைந்து கொண்டிருந்த கிருஷ்ணமணிகள் உறங்காமல் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்தின.

தன் நெற்றியில் படிந்த ஹர்ஷாவின் மெல்லிய விரல்களின் குளிர்மையில் கண்ணைத் திறந்தவன், அருகில் நின்று கொண்டிருந்தவளை இரு கைகளாலும் வயிற்றில் கட்டிக் கொண்டு ஆதரவு தேடும் குழந்தை போல முகத்தை அவள் வயிற்றில் பதித்தான். அதைக் கண்டு திகைத்தவள் அவன் மனநிலை புரிந்து தலையைத் தடவிக் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றாள்.

ஐந்தே நிமிடத்தில் தன்னை சரியாக்கிக் கொண்டு அவளை விடுவித்தவன், “உக்கார் ஹர்ஷூ…” என்று சோபாவைக் காட்டினான். அவன் அருகில் அமர்ந்தவள், அவனது கையை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டாள்.

“என்ன சனு இது… நீங்களே கலங்கிப் போனா எப்படி, இனி விக்கி வரும்போது அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோன்னு எனக்கு பயமாருக்கு…” என்றாள்.

“ம்ம்… எனக்கும் அதான் பயமாருக்கு, நீ நைட் வரைக்கும் இங்கயே இருக்கியா… நான் உன்னை வீட்ல கொண்டு வந்து விடறேன்…”

“ஹூம்… ஸ்கூட்டி இங்கே வச்சுட்டுப் போனா காலைல கஷ்டம்… நான் வர்ஷுவை ஆபீஸ் முடிஞ்சு இங்கே வர சொல்லிடறேன்… நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஸ்கூட்டில கிளம்பிடறோம்…. நீங்க அம்மா கூட இருங்க…” என்றவள், “ஏன் சனு, இவ்ளோ நாள் இதெல்லாம் மனசுக்குள்ளேயே வச்சு கஷ்ட பட்டிருக்கணுமா… என்கிட்ட சொல்லி இருக்கலாமே, இது எப்ப நடந்துச்சு…”

“சொல்லலாம்னு தான் நினைப்பேன்… யாரோ ஒருத்தருக்கு ஏதாவதுன்னாலே நீயும் சரி, அம்மாவும் சரி துடிச்சுப் போயிடுவீங்க… அதும் இல்லாம ஆக்சிடன்ட் ஆன சமயத்துல விக்கி முகத்தைப் பார்க்கவே முடியலை, அவன் எவ்ளோ அழகா இருப்பான்… தலைல அடிபட்டு, முகமெல்லாம் கிழிஞ்சு அங்கங்கே தையல் போட்டு பார்க்கவே பயங்கரமா இருந்தான்…”

“ஐயய்யோ… எல்லா வேதனையையும் மனசுக்குள்ள வச்சுக்கிட்டு நீங்க எப்படி அங்கயும், இங்கயுமா மேனேஜ் பண்ணினிங்க… உங்களுக்கு உதவியாவாவது நான் இருந்திருப்பேனே…” என்றாள் அவள் ஆதங்கத்துடன்.

“ம்ம்… நான் ஒரு நாள் சென்னைக்கு அவசரமா கிளம்பிப் போனேனே, நினைவிருக்கா… அப்பதான் இது நடந்துச்சு… அமேரிக்கா கிளம்பறதுக்கு முன்னாடி விக்கியும் ராஜீவும், அம்மாவைப் பார்த்திட்டு போக வேண்டி கார்ல நைட் கிளம்பி வந்திருக்காங்க… வர்ற வழில ஹைவேல ஒரு லோடு வண்டி இவங்க வண்டில மோதிருக்கு… டிரைவர் சீட்டுல இருந்த விக்கிக்கு கை, கால் பிராக்சர், தலைல அடிபட்டு, முகம் கண்ணு எல்லாம் காயம்…. ராஜீவுக்கு கொஞ்சம் மேலோட்டமான அடிதான், கால் மட்டும் பிராக்சர் ஆகி இருந்துச்சு… அவனுக்கு இப்ப சரியாகிடுச்சு, ஆனா விக்கியோட கண்ணுதான்…” வருத்தத்துடன் கூறினான் சஞ்சய்.

“ம்ம்… அதுக்கும் ஒரு ஐ டோனர் கிடைக்காமப் போயிடுவாங்களா என்ன, சரியாகிடும்… பீல் பண்ணாதிங்க…” சமாதானமாய் சொன்னாள்.

“ம்ம்… நிச்சயத்துக்கு அவன் வரலைன்னு தான் சொன்னான்… கலயாணத்துக்கு எப்படியும் ஒரு மாசம் இருக்கே… அதுக்குள்ளே கண்ணையும் சரி பண்ணிட்டு அம்மாவைப் பார்க்க வரேன்னு சொன்னான்… அம்மா தான் பிடிவாதமா பார்க்கணும்னு சொல்லிட்டாங்க…”

“ம்ம்… ஒரு அம்மாவா, அவங்களோட தவிப்பைக் குத்தம் சொல்ல முடியாதுல்ல, இந்த அளவுக்கு ஆபத்து இல்லாமப் பிழைச்சு வந்ததே பெரிய விஷயம் தானே…” என்றாள் அவள்.

“ம்ம்… உன்கிட்டயும் சொல்லாம மறைச்சுட்டேன்னு உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே…”

“அதான்… காரணத்தை நீங்களே சொல்லிட்டீங்களே, ஆனா ஒண்ணு… இனி எந்த சூழ்நிலைலயும் எந்த வருத்தமான விஷயத்தையும் உங்களுக்குள்ளே வச்சு மறுகக் கூடாது, எங்கிட்ட ஷேர் பண்ணிக்கணும்… சரியா…”

“ம்ம்… உத்தரவு மகாராணி…” மெல்ல புன்னகைத்தவன், “ஆமா, உன்கிட்டே ஒண்ணு கேக்கனும்னு நினைச்சேன்… உன்னோட ஹிட்லர் எப்ப சனுவா மாறினான்…” என்றான் குறும்புப் புன்னகையுடன்.

அவனையே கண் சிமிட்டாமல் பார்த்தவள், “எப்ப என்னை, என் அன்பைப் புரிஞ்சுகிட்டு, உங்க ஈகோவை விட்டு, சுபாவத்தை மாத்திகிட்டு மன்னிப்பு கேட்டு என் அம்மாகிட்ட என்னை மனைவியாக்கிக் கொடுக்கக் கேட்டிங்களோ, எப்ப உங்க முகத்துல சிரிப்பு வந்துச்சோ அப்பவே மாறிடுச்சு…” என்றாள் நாணத்துடன்.

“ம்ம்… மனசுக்குள்ளே பல பிரச்சனைகளை வச்சுட்டு உன்னை லவ் பண்ணக் கூட முடியலை, எனக்கு லவ் பண்ணத் தெரியாதுன்னு நீ ஒண்ணும் தப்பா நினைக்கலையே…” என்றான் அவன் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.

“அச்சோ… உங்களுக்கு இந்த முகம் செட்டாகலையே மிஸ்டர் ஹிட்லர், நீங்க எப்பவும் போல கண்ணை உருட்டி, மிரட்டியே பேசுங்க… எனக்கு அதான் பிடிச்சிருக்கு…” என்று அவன் மூக்கைப் பிடித்து ஆட்டியவள், “சரி… நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் அத்தம்மாவைப் பார்க்கப் போறேன்…” என்று எழுந்தாள்.

“என்னது அத்தம்மாவா…” திகைப்புடன் கேட்டான்.

“ம்ம்… ரேணும்மாவை அத்தைன்னு சொல்லிதான் உறவு முறையோட கூப்பிடணுமாம் உங்க அத்தையோட ஆர்டர்…” என்றவள் சிரித்தாள்.

“ஓ… இதும் நல்லா தான் இருக்கு…” என்றவன் புன்னகைத்தான்.

“சரி ஹர்ஷூ, நம்ம வேலை எல்லாம் எப்படி நடந்திட்டு இருக்குன்னு சொல்லவே இல்லையே…”

“என்னது நம்ம வேலையா…” புரியாமல் பார்த்தாள்.

“அதான்மா, நம்மளோட நிச்சயதார்த்த வேலை… நாளைக்கு வீட்டுக்கு ஆட்களை அனுப்பறேன்… அவங்களை வச்சு வீட்ல எல்லா வேலையும் பார்த்துக்கோ, விக்கி இப்படி இருக்கும்போது அதிகம் ஆளைக் கூப்பிட வேண்டாம்னு தான் அம்மாகிட்டே நிச்சயதார்த்தம் சிம்பிளா போதும்னு சொல்லிட்டேன்…”

“ம்ம்… சரி சனு, விக்கி எப்ப வருவார்…”

“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவான்… அங்கிள் அவனை அழைச்சிட்டு வரத்தான் ஏர்போர்ட் போயிருக்கார்…”

“ஓ சரி, நான் கீழே போறேன்… நீங்க பிரெஷ் ஆகிட்டு வாங்க…” என்றவள், வர்ஷாவை அழைத்து ஆபீஸ் முடிந்ததும் சஞ்சயின் வீட்டுக்கு வரும்படி கூறினாள்.

“இங்கிருந்து இருவரும் ஒன்றாகக் கிளம்பலாம்…” எனக் கூறியவள் அன்னைக்கும் அழைத்துப் பேசிவிட்டு ரேணும்மாவின் அறைக்கு வந்தாள். அவர் சோபாவில் அமர்ந்திருக்க, முகத்தில் சற்று தெளிவு தெரிந்தது.

“அத்..அம்மா…” அவருக்கு அருகில் சென்று அமர்ந்தவளை ஏறிட்டவர், “காபி குடிச்சியா ஹர்ஷூ, என்னை நினைச்சு பயந்துட்டியா…” என்றார் அமைதியாக.

“ம்ம்… உங்களுக்கு எதுவும் ஆயிடக் கூடாதுன்னு தானே உங்க மூத்த பிள்ளை சொல்லாம மறைச்சிருக்கார்… நீங்க வருத்தப் படாதீங்கமா, இப்பல்லாம் ஆர்கன் டோனர்ஸ் நிறைய பேர் இருக்காங்க… உங்க நல்ல மனசுக்கு உங்க பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் வராது… சின்னவர்க்கு சீக்கிரமே சரியாகிடும், ஆனா ஒண்ணு… கூட இருக்குற நாம தான் அவங்களுக்கு நம்பிக்கை வர்ற போல நடந்துக்கணும்… நாமளே அழுது புலம்பி, நம்பிக்கை இல்லாமப் பேசினா, பாதிக்கப் பட்டவங்க மனசு விட்டுப் போயிருவாங்க, நான் சொன்னது உங்களுக்குப் புரியுதாம்மா…” அமைதியாய் பேசினாள் ஹர்ஷா.

Advertisement