Advertisement

“அவனுக்கு அவள் மீது விருப்பம் இருப்பது புரிந்தாலும், நெருங்கி வரத் தயங்குகிறானோ…” என யோசித்தாள் அவள். அவளுக்குப் பின்னில் வந்து நின்ற வர்ஷா, உடன் பிறந்தவள் எதோ யோசனையில் வேறு உலகத்தில் இருப்பதைக் கண்டு புன்னகைத்தாள்.

“அக்கா, மாமாவை நினைத்து டிரீம்ல இருக்காளோ… கல்யாணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை பெரிய விஷயம்… நான் நார்மலாய் இருந்திருந்தால் அவளைக் கிண்டலும் கேலியுமாய் எப்படி எல்லாம் சிரிக்க வைத்திருப்பேன்… இப்போது இப்படி ஒதுங்கி செல்வது அவளது கல்யாணக் கனவுகளை ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்ப்பது போலல்லவா… என்னுடைய பிரச்சனையில் அவளுடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள மறந்தேனே…” என நினைத்துக் கொண்டே அக்காவின் தோள் பட்டையில் தாடையைப் பதித்தாள். சட்டென்று திரும்பிய ஹர்ஷா, தங்கையைக் கண்டதும் புன்னகைத்தாள்.

“என்னடா பசிக்குதா, இதோ இப்போ சப்பாத்தி செய்திடறேன்…”

“அதெல்லாம் இருக்கட்டும் கா… நீ எந்த உலகத்துல இருக்கே, மாமாவோட செம டூயட் போலருக்கு… எவ்ளோ நேரமா கன்னம் சிவக்குறதும், யோசனையுமாவே இருக்கே…” புன்னகையை முகத்தில் வலிய வரவழைத்து கேட்டாள் சின்னவள்.

அதைக் கேட்டதும் மேலும் சிவந்தாள் ஹர்ஷா.

“அப்படில்லாம் ஒண்ணும் இல்லடா… மாமாகிட்டே உன்னோட வேலையைப் பத்தி சொன்னேன், என் கொழுந்தியாவை நாளைக்கே வீட்டுக்குக் கூட்டிட்டு வான்னு சொல்லிட்டார்… அவங்களுக்கு நிறைய ஆபீஸ் இருக்கு, எல்லாமே கட்டிடத் தொழில் சம்மந்தமா தான்… உனக்கு எந்த மாதிரி வேலை வேணும்னு சொன்னேன்னா, அந்த ஆபீஸ்ல வேலை கொடுத்திருவார்…”

“அக்கா… அது வேணுமா, நான் மறுபடியும் சென்னை போகலாமான்னு யோசிக்கறேன்…”

“அதெல்லாம் வேண்டாம் டா… நீ இங்கயே இரு, அப்படி உனக்கு மாமா ஆபீஸ்ல வேலை செய்ய விருப்பம் இல்லைன்னாலும் சொல்லு… அவர்கிட்டே ஏதாவது ஐடி கம்பெனில வேலை சரி பண்ண சொல்லறேன், நீ எங்களை விட்டு விலகி போகவே கூடாது… இனி கல்யாண வேலையும் சேர்ந்துக்கும், நீங்க தானே எல்லாம் செய்யணும்… பேசாம ரேணும்மா சொன்ன மாதிரி நம்ம வீட்டை வாடகைக்கு விட்டுட்டு நீங்களும் என்னோடவே அந்த வீட்டுக்கு வந்திடுங்களே… எனக்கும் அது நல்ல யோசனையா தோணுது… நாம எல்லாரும் ஒண்ணாவே இருக்கலாமே… வீடு கலகலன்னு நிறஞ்சிருந்தா ரேணும்மாவுக்கும் ரொம்பப் பிடிக்கும்…” என்ற ஹர்ஷாவின் பின்னில் இருந்து உமாவின் குரல் ஒலித்தது.

“அதென்ன ஹர்ஷு, இன்னும் அவங்களை அம்மான்னு சொல்லி கூப்பிடறே… அழகா அத்தைன்னு சொல்லு, ஒவ்வொரு உறவுக்கும் அதுக்கான தனித்தன்மை இருக்கு… அம்மா போல நடந்து கிட்டாலும் அவங்க உனக்கு அத்தை தானே, அத்தைன்னு கூப்பிடலாமே…” என்றார் அவரது பதவி பறி போய்விடும் குறையில்.

“ஹஹா… என்னம்மா, உங்க அம்மா பதவிக்கு போட்டியா ரேணும்மா வந்திடுவாங்கன்னு யோசிக்கறீங்களா… அதெல்லாம், என் அக்காவுக்கு யார்கிட்ட எப்படிப் பழகணும்னு நல்லாவே தெரியும்…” என்றாள் வர்ஷா.

“ம்ம்… பெரியவளுக்கு நல்ல இடத்துல சம்மந்தம் அமைஞ்ச போல உனக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சுட்டா நான் நிம்மதியா கண்ணை மூடிருவேன், கடவுள் தான் வழி காட்டணும்…” என்ற அன்னையை முறைத்தாள் வர்ஷா.

“ஏன்மா… புள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு, பிரீயாகிட்டா கண்ணை மூடியே ஆகணும்னு கட்டாயமா என்ன., அடுத்து பேரப் புள்ளைகளை எடுத்துக் கொஞ்சணும்னு ஆசைப்பட மாட்டிங்களா… போயி சேர்ராங்களாம்…” என்று முகத்தைத் திருப்பிக் கொண்ட சின்ன மகளை சந்தோஷத்துடன் பார்த்தார் உமா. ஹர்ஷாவுக்கும் அவள் இப்படி கிண்டலாய் பேசியது சந்தோஷத்தைக் கொடுத்தது.

“சரி… சரி, எல்லாம் நல்லதே நடக்கட்டும்… நாளைக்கு நீயும், என்னோட ரேணும்மா வீட்டுக்கு வர்றே, ரெடியாரு…” என்றாள் ஹர்ஷா.

“அதென்ன ரேணும்மா வீடு… என் வீடுன்னு உரிமையோட சொல்ல வேண்டியது தானே…” என்ற அன்னையிடம், “எதுவுமே நமக்குன்னு ஆகுற வரைக்கும் உரிமை எடுத்துக்கக் கூடாதும்மா…” என்று சிரித்தாள் ஹர்ஷா.

“ம்ம்… உன் நல்ல மனசுக்கு நல்ல இடத்துக்கு போகப் போறே, எனக்கு சந்தோஷமா இருக்குடா…” நெகிழ்ச்சியுடன் கூறினார் உமா.

அடுத்த நாளே ஹர்ஷாவுடன் சஞ்சயைக் காண சென்றாள் வர்ஷா.

அவன் அறையில் இருக்க, ரேணும்மாவிடம் வணக்கம் கூறிய வர்ஷாவை அறிமுகப் படுத்தினாள் ஹர்ஷா. மருமகளுடன் அழகாய், குட்டி தேவதையாய் வந்தவளைக் கண்டதும் ரேணும்மா சந்தோஷத்துடன் அவள் கைகளைப் பற்றி அருகில் அமர வைத்து, பேசிக் கொண்டிருந்தார். ராணிம்மாவுக்கும் தங்கையை அறிமுகப் படுத்தி வைத்தாள் ஹர்ஷா. அந்த வீட்டில் ஹர்ஷாவின் மேல் அனைவரும் வைத்திருக்கும் அன்பும் மரியாதையுமே அவள் அங்கே எத்தனை முக்கியமானவள் என்பதை சொல்லாமல் சொல்லியது. முதன் முதலில் வீட்டுக்கு வந்தவளை வற்புறுத்தி டிபன் சாப்பிட வைத்த ரேணுகாவின் அன்பை அனுபவித்து உணர்ந்தாள் அவள்.

அதற்குள் சஞ்சயும் வந்துவிட, கம்பீரமாய் படியிறங்கி வந்தவனைக் கண்டதும்,  மரியாதையுடன் எழுந்து நின்ற சின்னவளை, காரணமே இல்லாமல் பிடித்துப் போனது அவனுக்கு. பொதுவாய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளது படிப்பு, குவாலிபிகேஷன், எந்த மாதிரி வேலையில் விருப்பம் என விசாரித்துக் கொண்டான்.

அலட்டல் இல்லாமல் சாதாரணமாய் தேவையான விஷயங்களை மட்டும் பேசிய அக்காவின் வருங்காலக் கணவனை அவளுக்கும் பிடித்திருந்தது. என்னவொரு கம்பீரம், எத்தனை தெளிவான பேச்சு… அக்காவுக்கு சரியான ஜோடிதான்… மனசுக்குள் இருவருக்கும் பொருத்தம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அலுவலகம் கிளம்பியவன், வர்ஷாவையும் அவனுடன் அழைத்துச் சென்றான். வண்டியில் எதோ யோசனையுடன் அமைதியாய் வந்தவளை தொந்தரவு செய்யாமல் அவனது யோசனைகளுடனே அலுவலகம் வந்து சேர்ந்தான். அவனது செக்ரட்டரி பிரியாவிடம், வர்ஷாவை கணிணி செக்ஷனுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி விட்டு அவனது மற்ற அலுவல்களில் மூழ்கிப் போனான்.

நாட்கள் அழகாய் நகர, அவளுக்கு தரப்பட்ட பணியில் அழகாய் பொருந்தி வேலைக்கு செல்லத் தொடங்கி இருந்தாள் வர்ஷா. ராஜீவின் தந்தை ராம் இந்தியா வந்ததும், ஹர்ஷாவின் வீட்டில் கல்யாணப் பேச்சு தொடங்கியது. அமைதியான, பொறுப்பான ஹர்ஷா, சஞ்சய்க்கு சரியான பொருத்தம்தான் என அவரும் கூறிவிட, அடுத்த நல்ல நாளிலேயே நிச்சயத்தை வைத்துக் கொள்ள தீர்மானித்து விட்டார் ரேணுகா.

நிச்சயத்துக்கு அவர்கள் எல்லாரும் தயாராகி விட்டாலும், சஞ்சய் மிகவும் பிசியாகவே இருந்தான். சென்னை, பாங்களூர் என்று வேலைக்காய் பறந்து கொண்டிருந்தவனை, நிச்சயத்துக்கு முந்தின நாள் ஆவது ப்ரீயாகுமாறு சலித்துக் கொண்டார் ரேணுகா. நிச்சயதார்த்தப் புடவை, உடைகள், அது சம்மந்தமான வேலைகள் என அவர் பரபரத்துக் கொண்டிருக்க, ராம் தலைமையில் நிச்சயதார்த்த விழாவுக்கு நாள் குறித்தும் ஆயிற்று. யாரை எல்லாம் அழைக்க வேண்டும் என லிஸ்ட் போடத் தொடங்கி விட்டார்.

எல்லா வேலைகளையும் சஞ்சய் வீட்டில் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டாலும், உமா, தனது பழைய நகைகளை கொடுத்து மகளுக்காய் புதிய நகைகளை வாங்கினார். விக்கியை அலைபேசியில் அழைத்த ரேணுகா, கண்டிப்பாய் நிச்சயத்துக்கு இரண்டு நாள் முன்பே வீட்டுக்கு வந்தாக வேண்டும் எனத் தீர்மானமாய் கூறிவிட்டார். சஞ்சயிடமும் குறைபட்டுக் கொண்டார். அவனும், விக்கி வருவான் எனக் கூறி விட்டான்.

ரேணுகாவிற்கு உதவியாய் இரண்டு பேரை வீட்டில் வேலைக்கு வைத்திருந்தான் சஞ்சய். ரேணுகாவுடன் வெளியே செல்வதற்கும், அவர் சொல்லும் வேலைகளை செய்து முடிக்கவுமாய்… நிச்சயத்தை ஹர்ஷாவின் வீட்டில் வைத்துக் கொள்ள உமா ஆசைப்படவே சிறிய அளவில் செய்வதால் அதற்கு ஒத்துக் கொண்டனர்.

ரேணுகாவின் புலம்பல் தாங்க முடியாமல் நிச்சயத்துக்கு இரண்டு நாள் முன்பு விக்கி வருவதாகக் கூறியிருந்தான். அவன் மாலை விமானத்தில் சென்னையில் இருந்து வருவதால் புறப்பட்டு விட்டானா… என அலைபேசியில் அழைத்து உறுதி செய்துவிட்டு போனை வைத்த ரேணுகா, வாசலில் கார் வந்து நிற்கவே எட்டிப் பார்த்தார்.

சஞ்சய் தான் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

“என்னடா… அதிசயமா இருக்கு, இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்கே… மதியம் சாப்பிட்டியா…”

“ம்ம்… சாப்பிட்டேன், இந்தப் பக்கம் ஒரு வேலை… அப்படியே வந்தேன்மா…” என்றவன், பிரிட்ஜில் இருந்து தண்ணீரைக் குடித்துவிட்டு அவரிடம் வந்தான்.

“என்னடா சஞ்சு, உன் முகத்துல எதோ குழப்பம் தெரியுது… என்னன்னு சொல்லுடா…” என்றார் அன்புடன்.

“ம்ம்… அம்மா, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” தயக்கத்துடன் தொடங்கினான் மகன்.

“சொல்லுடா… என்ன சொல்லணும்…” அவனது முகத்தையே கூர்ந்து கவனித்தார்.

“நம்ம ராஜீவ் இருக்கான்ல மா, ஒரு மாசம் முன்னாடி அவன் கார்ல ஒரு லோடு வண்டி இடிச்சு ஆக்சிடன்ட் ஆயி கை, கால், முகத்துல எல்லாம் அடிபட்டு ரொம்ப ஆபத்தான நிலைமைல இருந்தான்…”

“அய்யய்யோ… என்னடா சொல்லறே, கொஞ்ச நாள் முன்னாடியா… அவன் உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே…” பதறினார் ரேணுகா.

“இல்லைம்மா, இப்ப கை, கால் சரியாகி நல்லா இருக்கான்… ஆனா, அவன் ஒரு கண்ணுல மட்டும்…” தயங்கியவன் அவர் அதிர்ச்சியுடன் நோக்க, “கம்பி குத்தி கண் பார்வை போயிருச்சு…” என்றான் மெதுவாக.

“ஐயையோ… ராம் அண்ணாவுக்கு இது தெரியுமா, அவர் எப்படித் தாங்கிக்குவார்…  வாழ வேண்டிய சின்ன வயசுல கண்ணு தெரியலைனா எவ்ளோ பெரிய கஷ்டம்… விக்கி எப்பவும் அவன் கூடத்தானே இருப்பான், அவனுக்கு ஒண்ணும் இல்லியே… உண்மையை சொல்லு…” பதறத் தொடங்கினார்.

“அம்மா… ராஜீவோட முகத்துல லாரியோட பின் பாகம் இடிச்சதுல முகமெல்லாம் கிழிஞ்சு காயமாகி தையல் போட்டிருந்தது… இப்ப அதெல்லாம் சரியாகி தழும்பு இருக்கு, ஐ டோனர் கிடைச்சா கண்ணையும் ஆபரேஷன்ல சரி பண்ணிடலாம்…”

“ஓ… எப்படியோ அவன் உயிருக்கு ஆபத்தில்லையே, கண்ணும் சரியாகிடுச்சுன்னா போதும்… கடவுளே…” என்று வேண்டிக் கொண்டவர், “ஆமா… இது எப்போ நடந்துச்சு, இவ்ளோ நாளா என்கிட்டே எதுக்கு மறைச்சே… ராம் அண்ணனுக்கும் தெரியாது போலருக்கே…” என்றார் அவர்.

“ஆமாம்மா… ஆக்சிடன்ட் ஆனதும் உங்ககிட்ட சொல்லி இருந்தா நீங்க ரொம்ப பயந்து போயிருப்பீங்க… உங்க ஹெல்த்துக்கும் நல்லதில்லை, உங்களுக்கு எதுவும் ஆகிட்டா நாங்க என்ன பண்ணுவோம்… அதான் சொல்லாம மறைச்சு நானே பார்த்துகிட்டேன்… ராம் அங்கிள் இப்ப வருவார், அவர்கிட்டே நீங்க தான் பக்குவமா எடுத்து சொல்லணும்…” என்றான்.

“ம்ம்… பாவம் பையன் எப்படித் துடிச்சானோ, உண்மைய சொல்லு… இப்ப ஒண்ணும் பயப்படறதுக்கில்லையே… விக்கி அவனோடவே இருந்ததாலே தான் இங்கே வரலையா… அவனும் எங்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே…”

“ம்ம்… ஆமாம்மா, அவன் எப்படி சொல்லுவான்… நீங்க ரொம்ப பயந்து போயிருவீங்கன்னு தான் சொல்லலை… போகப் போக முகத்துல இருக்குற தழும்பும் மறைஞ்சு, கண்ணும் ஆப்பரேஷன் பண்ணிட்டா பழைய போல ஆகிடுவான்… ஆனா இதை அப்பவே சொல்லி இருந்தா நீங்க ரொம்ப பயந்து போயிருப்பீங்க, அதான் நாங்க சொல்லலை… ஆனா அங்கிள் கிட்ட நீங்க தான் பக்குவமா சொல்லணும்மா…” என்றான் அவன்.

“ம்ம்… இதை எப்படி நான் அண்ணன்கிட்டே சொல்லுவேன்… வருஷக் கணக்குல புள்ளையைப் பார்க்காம இருந்துட்டு இப்பதான் வந்திருக்கார்… இன்னைக்கு பையன் வந்திருவான்னு இருக்கும் போது இப்படின்னா…” என்றவரிடம், “வேற வழி இல்லைம்மா… உயிருக்கு ஆபத்து இல்லாம இந்த அளவுக்கு சரியானதே பெரிய விஷயம் தானே…” என்றதும்,

“ம்ம்… அதும் சரிதான், நிஜமாலுமே வேற எந்த ஆபத்தும் இல்லையே….” மீண்டும் நிச்சயப்படுத்திக் கொள்ள கேட்டார். “இல்லைம்மா, தழும்பு கூட சரியாகிட்டு வருது… நீங்க பார்த்ததும் பயந்திடக் கூடாதுன்னு தான் உங்ககிட்டே சொன்னேன்… உங்களுக்கு எதுவும் ஆயிடக் கூடாதும்மா, அதுக்காக தான் சொல்லலை…” அவனது குரல் கலங்கி இருந்தது.

அவனிடம் மேலும் சில விவரத்தைக் கேட்டு தெளிவாய் யோசித்தவர், ராஜீவுடன் இருந்ததால் தான் விக்கி இங்கு வரவில்லை என்று காரணத்தையும் புரிந்து கொண்டார். கண்களில் கம்பி குத்தி கை, கால் உடைந்த நிலையில் அவனை யோசித்துப் பார்த்தவருக்குக் கலங்கியது. அப்படிக் காண யாருக்கு தான் துணிச்சல் வரும்… உயிருக்கும் மற்ற உறுப்புகளுக்கும் ஆபத்தில்லாமல் இந்த அளவில் சரியாகி வந்தானே… என நினைத்து தேற்றிக் கொண்டார்.

சற்று நேரத்தில் ராமின் கார் வாசலில் நிற்க, கம்பீரமாய் அவர் உள்ளே வந்தார். அவரை வரவேற்று காபி கொடுத்து உபசரித்து மெதுவாய் சஞ்சய் சொன்ன விஷயத்தை ராமிடம் கூறினார் ரேணுகா.

அதைக் கேட்டு அதிர்ந்தவரை, “இந்த மட்டும் தானே என்று சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் அண்ணா, உயிருக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன செய்வது… இது சரிப்படுத்த முடியும் விஷயம் தானே…” என்று சமாதானப் படுத்தவும் முயற்சித்தார்.

ரேணுகா சொன்னதைக் கேட்டு கலக்கத்துடன் அமர்ந்திருந்த ராம் அடுத்து கேட்ட கேள்வியில் குழம்பி, கலங்கிப் போனார் ரேணுகா.

வண்ணத்துப் பூச்சியின்

வண்ணமாய் வந்தவனே… என்

வண்ணத்தை எடுத்துக் கொண்டு

எங்கு சென்று மறைந்தாயடா…

சிதைந்து போன மனதிலும்

சிதையாத சித்திரமடா உன் முகம்…

வெறும் காகிதக் கப்பலாய் மனம்

உன் நினைவில் மூழ்குதே தினம்…

என் கண்ணில் தூசி விழுந்தாலே

துடித்துப் போகும் நீயா இன்று

துரும்பாக உறுத்துகிறாய்…

இரவையும் பகலையும்

கொன்று குவிக்கும்

இரக்கமில்லா – உன்

நினைவுகளாலே மீண்டும்

உயிர்க்கிறேன் நான்…

Advertisement