Advertisement

இதயம் – 21

சஞ்சய் அமேரிக்கா சென்றிருக்க, மதிய உணவு முடிந்து உறங்க சென்றிருந்தார் ரேணுகா. தனது அறையில் ஓய்வாய் இருந்த ஹர்ஷாவின் மனது வர்ஷாவை நினைத்துக் கலங்கியது. எப்போதும் தனிமையில் தன்னை ஒதுக்கிக் கொண்ட சின்ன மகளின் மீது உமாவின் சந்தேகப் பார்வை விழ, அவள் எதுவும் சொல்லாததால் ஹர்ஷாவிடம் கேட்டார்.

“வேலையில் எதோ பிரச்சனை, அதனால் அங்கிருந்து வந்துவிட்டாள்… வேறு வேலை கிடைக்கும் வரை இப்படிதான் யோசித்துக் கொண்டிருப்பாள், சஞ்சய் வந்ததும் அவனிடம் பேசி அவனது கம்பெனியிலேயே அவளுக்கு வேலை வாங்கிக் கொடுத்து விடலாம்…” என்று அன்னையை சமாதானப் படுத்திய ஹர்ஷா, வர்ஷாவிடம் இரவு பேசவும் செய்தாள்.

“எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எங்கிட்ட ஓபனா சொல்லு வர்ஷூ… அப்பதான் அதுக்கு தகுந்த போல நான் அம்மாகிட்ட பேச முடியும், அம்மா உன்னைப் பத்தி யோசிச்சு பயந்து அவங்க உடம்புக்கு எதுவும் வந்திடக் கூடாது…” உடன் பிறந்தவள் வற்புறுத்தவே, வேறு வழியில்லாமல் வர்ஷாவும் தயங்கிக் கொண்டே வாயைத் திறந்தாள்.

“அ…அக்கா… நான் என்னோட வேலை செய்த ஒருத்தரை உயிருக்குயிரா நேசிச்சேன், அவரும் அப்படித்தான்… என் மேல உயிரே வச்சிருந்தாரு… திடீர்னு ஒரு நாள் அவருக்கு என்னாச்சுனு தெரியலை, நாலஞ்சு நாளா ஆபீஸ் வரலை… எங்கே போனார், என்ன ஆனார்னு எதுவும் புரியலை… போன் பண்ணினாலும் ஸ்விட்ச் ஆப்… யாருக்குமே எதுவும் தெரியலை, அஞ்சு நாள் கழிச்சு அவர் நம்பர்ல இருந்து ஒரு மெசேஜ் வந்துச்சு…” என்றவள் நிறுத்தினாள். தங்கை சொல்லுவதை சீரியஸாய் கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷாவின் மனம் படபடத்தது.

“ஒருவேளை, இவளைக் காதலித்தவன் ஏமாற்றி விட்டானோ…”  அவசரமாய் லிங்க் செய்து யோசித்து பயப்பட்டது.

“என்ன மெசேஜ் வர்ஷூ…” தயக்கத்துடன் கேட்டாள் ஹர்ஷா.

அவளது அலைபேசியை எடுத்து பாஸ்வேர்டு அடித்து வாட்ஸ் அப் மெசேஜை ஓபன் செய்தவள், அதை அக்காவிடம் நீட்டினாள். அதை வாங்கிப் படித்த ஹர்ஷாவின் புருவம் அதிர்ச்சியுடன் மேலேறியது.

“ஹலோ பட்டர்பிளை… எப்படி இருக்கே, கண்டிப்பா என் நினைப்புல பீல் பண்ணிட்டு தான் இருப்பே… இருக்கணும், அப்படிதானே பழகிருக்கோம்… நான் சும்மா டைம் பாஸ்க்கு தான் உன்னோட பழகினேன்… சும்மா சொல்லக் கூடாது, நீயும் ரொம்ப ஜாலியாவே பழகினே… என்ன, கடைசி வரைக்கும் படுக்கைக்கு தான் வர மாட்டேன்னு சொல்லிட்டே… எப்படியாவது உன்னை மடக்கி காரியத்தை முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு தான் நினைச்சேன், உன்னோட லக் போலருக்கு… வெளிநாட்டுல எனக்கு வேலை ரெடியாருக்கு, உடனே ஜாயின் பண்ணுன்னு என் பேரண்ட்ஸ் சொல்லிட்டாங்க… முந்தின நாள் கூட உன்னை எப்படியாவது பிளாட்டுக்கு வரவழைச்சு ஒத்துக்க வைக்கணும்னு நினைச்சேன்… பட் நீ வர மாட்டேன்னு சொல்லிட்டே, இனி உன்னை எதிர்பார்த்து ஒண்ணும் ஆகப் போறதில்லைன்னு தான் நான் கிளம்பிட்டேன்… ஹூம்… நான் உன்னை மிஸ் பண்ணிட்டேனே பட்டர்பிளை, அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு…”

“சரி… காதல் தோல்வில தேவதாஸ் மாதிரி தண்ணியடிச்சு தாடி வளர்த்திட்டு நீ சுத்தப் போறதில்லை… நாலஞ்சு நாள் அழுவே, அப்புறம் என்னை விட அழகான பணக்காரப் பையன் கிடைச்சா, அவனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்குவே… இதெல்லாம் பொண்ணுகளுக்கு இப்ப சாதாரணம் ஆச்சே… ஓகே பட்டர்பிளை, எனக்கு கொஞ்ச நாள் டைம் பாஸ் பண்ண ஜாலியா ஒத்துழைச்சதுக்கு தேங்க்ஸ்,  குட் பை…” என்று முடிந்திருந்தது.

அதைக் கண்டு அதிர்ச்சியுடன் தங்கையை ஏறிட்டவளை நிதானமாய்ப் பார்த்தாள் வர்ஷா.

“என்னக்கா… இப்படி ஒருத்தனை உன் தங்கச்சி லவ் பண்ணி இருக்காளேன்னு அதிர்ச்சியா இருக்கா, இந்த மெசேஜைப் பார்த்ததும் எனக்கும் முதல்ல அதிர்ச்சியா தான் இருந்துச்சு… அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன், இது ஏன் பொய்யா இருக்கக் கூடாது… இது எதோ ஒரு காரணத்துக்காக தான் அவன் அனுப்பி இருக்கான்… அவனை நான் வெறுக்கணும்னு நினைச்சு அனுப்பி இருக்கான்… எனக்குத் தெரியும், அவன் ரொம்ப நல்லவன்… இந்த மாதிரி கீழ்த்தரமான எண்ணம் எல்லாம் அவனுக்கு இருந்ததே இல்லை… அவன் காதல் உண்மையானது, நான் இப்பவும் நம்பறேன்… எங்க காதல் உண்மைன்னா அவன் என்கிட்டே மறுபடியும் வந்து சேருவான்…” உறுதியுடன் கூறினாள்.

அவளை வியப்புடன் பார்த்த ஹர்ஷாவை ஏறிட்டவள், “என்னை மன்னிச்சிடுக்கா, உனக்கு கல்யாணம் ஆன பின்னால இதை உன்கிட்டே சொல்லலாம்னு நினைச்சேன்… அம்மாவைக் கூட எங்களோட வச்சுக்கலாம்னு அவன் சந்தோஷமா சொன்னான்… அப்படிப்பட்டவன் இப்படி ஒரு மெசேஜை அனுப்பினா, நிச்சயமா வேற ஏதோ காரணம் இருக்குன்னு தானே அர்த்தம், அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம என்னால நிம்மதியா இருக்க முடியலை… அதுக்கு தான் அழறேன், இனி அழமாட்டேன்… நம்பிக்கையோட காத்திருக்கப் போறேன், அம்மாவுக்கு என்னால எந்தப் பிரச்னையும் வந்திடக் கூடாது… நான் பழைய மாதிரி இருக்க முயற்சி பண்ணறேன்க்கா…” என்றாள் அமைதியான குரலில்.

“வர்ஷூ… கண்டிப்பா உன் செலக்சன் தப்பா இருக்காதுன்னு நான் நம்பறேன்… ஆனா, அது யாரு, என்னன்னு சொன்னா, சஞ்சய் கிட்டே சொல்லி  விசாரிக்கலாமே…” என்றாள் யோசனையுடன்.

“வேண்டாம்கா… மாமா இப்பவே ரொம்ப பிஸியா அலைஞ்சிட்டு இருக்கார், கல்யாண விஷயத்தைப் பேசி முடிவு பண்ண முடியலைன்னு அம்மா வேற புலம்பிட்டு இருக்காங்க… நீ என்னை நம்புற போல நானும் அவர் வந்திருவார்னு நம்பறேன்…. அவர் மெசேஜ்ல பொய் இருக்கலாம், ஆனால் எங்க காதல்ல பொய் இல்லை, பயப்படாதேக்கா… நான் இனி அழுது புலம்பி உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டேன், கவலைப் படாம இருங்க…” என்றவளைக் கூர்ந்து நோக்கினாள் ஹர்ஷா. அவளுக்கு தங்கையின் நம்பிக்கை பிடித்திருந்தது.

“சரிடா… ஆனா, ஏதாவது பிரச்சனைன்னா அக்கா கிட்ட கண்டிப்பா சொல்லிடணும், மனசுக்குள்ளயே வச்சு வருத்தப் படக்கூடாது… சரியா…” என்றாள் அவள் தோளில் தட்டிக் கொடுத்து.

“ம்ம், சரிக்கா…” அக்காவிடம் பேசியதில் அவள் முகத்திலும் ஒரு தெளிவு வந்திருந்தது.

சுட்டித்தனமும், விளையாட்டுமாய் இருக்கும் தன் செல்லத் தங்கை மிகவும் பக்குவமாய் அவளது பிரச்சனையை அலசி ஆராய்ந்து அதற்கு ஒரு தீர்வும் சொல்லி விட்டுப் போவதைக் கண்ட ஹர்ஷா அவளை நினைத்துப் பெருமிதமடைந்தாள். சஞ்சய் வந்ததும் அவனிடம் வர்ஷாவைப் பற்றி பேசி இங்கேயே வேலைக்கு சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

வர்ஷாவிடம் அதற்குப் பிறகு நல்ல மாற்றம் தெரிந்தது. முன்னைப் போல் எதிலும் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் வெளியே சாதாரணமாய் காட்டிக் கொள்ள முயற்சி செய்தாள். அவளது வருத்தத்தை அவளுக்குள்ளேயே ஒதுக்கிக் கொண்டு முகத்தில் காட்டிக் கொள்ளாமல் வளைய வருவதை ஹர்ஷா புரிந்து கொண்டாள்.

சிறு தனிமை கூட அவளை சிலையாக்கி சிந்தனைகளை எங்கேயோ இழுத்துச் சென்று விடும்போது மட்டுமே அவளது வருத்தத்தின் சுவடுகளை அசை போடுகிறாள் எனப் புரிந்தது.

“சிறகுகளை முறித்துவிட்டு

எங்கு பறந்தாயடா…

பறக்க முடியா

பட்டாம்பூச்சியாய் நான்…”

அதைக் கவனித்தாலும், கண்டு கொள்ளாமல் வீட்டில் எது பேசினாலும் அவளையும் அதில் இழுத்துக் கொள்வாள் ஹர்ஷா. ஒருவாரத்தில் அமெரிக்கா வேலையை முடித்துக் கொண்டு வெற்றியுடன் திரும்பி வந்தான் சஞ்சய். சின்ன மகனையும் உடன் அழைத்து வருவான் என ரேணுகா காத்திருக்க, அவனை சென்னையிலேயே விட்டு வந்ததாய் கூறினான் சஞ்சய். அதைக் கேட்டதும் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்ட அன்னையை சமாதானம் செய்தான் மகன்.

“அம்மா… நம்ம புதிய கம்பெனியை அவன் பேருக்கு மாத்தினதும் கொஞ்ச நாள் இங்கே வந்து இருப்பான், அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாய் இருங்க… அங்கே கொஞ்சம் வேலை இருக்கு, அவனும் எல்லாம் செய்தா தானே புரியும்னு தான் அவனுக்கு அந்த வேலையைக் கொடுத்திருக்கேன்… எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கு, வந்ததும் இப்படிதான் கோபத்தைக் காட்டுவீங்களா… உங்களுக்கு நான் எப்பவுமே செகண்டரி தான்…” வருத்தத்துடன் பேசிய மகனைத் தவிப்புடன் பார்த்தார் ரேணுகா.

“அச்சச்சோ… அப்படி இல்லடா சஞ்சு, சின்னவனைப் பார்த்து எவ்ளோ நாள் ஆகிடுச்சு… போன்ல கூடப் பேச மாட்டேங்கிறான், நான் பண்ணினா போனும் கிடைக்க மாட்டேங்குது… அதான் வருத்தத்துல அப்படிப் பேசிட்டேன், நீ ஒண்ணும் நினைச்சுக்காதடா… சரி, நீ குளிச்சிட்டு வா… கொஞ்ச நேரத்துல ஹர்ஷா வந்திடுவா, பாங்குல ஒரு வேலையாப் போயிருக்கா… சரி, அமெரிக்கால இருந்து என் மருமகளுக்கு என்ன வாங்கிட்டு வந்தே…” பேச்சை மாற்றினார்.

“ஒண்ணும் வாங்கிட்டு வரலை… இங்க கிடைக்காதது எதுவும் அங்க கிடைக்கப் போகுதா என்ன, உங்க மருமகளுக்கு என்ன பிடிக்குமோ, அவளைக் கூட்டிட்டுப் போயி நீங்களே பார்த்து வாங்கிக் கொடுங்க…” என்றவன், சோர்வுடன் சோபாவில் தலையை சாய்த்து கண்ணை மூடிக் கொண்டான்.

அதற்குள் ராணி காபி கொண்டுவர மகனிடம் கொடுத்தார் ரேணுகா.

“சஞ்சு… நான் கேக்கறதுக்கு உண்மையான பதிலை சொல்லு… உனக்கு ஹர்ஷாவைப் பிடிச்சிருக்கு தானே, எனக்கு வேண்டி அவளைக் கல்யாணம் பண்ண நினைக்கலையே…” என்றார் தயக்கத்துடன். அவருக்கு அப்படித் தோன்ற என்ன காரணமென்று புரியாமல் அவரிடமே கேட்டான் சஞ்சய்.

“ஏன்மா அப்படிக் கேக்கறீங்க, என்ன தான் உங்களுக்குப் பிடிச்சிருந்தாலும், எனக்குப் பிடிக்கலைனா அந்த விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா… ஹர்ஷுவைப் போல ஒரு பொண்ணு மருமகளா வரணும்னு நீங்க ஆசைப்பட்ட மாதிரி, எனக்குள்ளும் ஹர்ஷுவைப் போல ஒரு பொண்ணு மனைவியா வந்தா நல்லாருக்கும்கிற எண்ணத்தை விதைச்சு வச்சது அவளோட செயல்பாடுகள் தான்… என்ன, வெளியே ஒத்துக்க மனசு வரலை… அதை பிரீத்தி புரிஞ்சுகிட்டா…” என்ற மகனின் தோளில் இதமாய் கையை வைத்தார் ரேணுகா.

“எனக்கு இப்பதான் மனசுக்கு நிறைவா இருக்குடா… என்னடா, எல்லாப் பசங்களையும் போல என் பையன் பொண்டாட்டியா வரப் போற பொண்ணை ஆசையா ஒரு பார்வை கூடப் பார்க்க மாட்டேங்கிறானே… அவளுக்குன்னு எதுவும் செய்ய மாட்டேங்கிறானே, நாம அவசரப்பட்டு தப்புப் பண்ணிட்டமோன்னு ஒரு உறுத்தல் இருந்துச்சு, அதான் கேட்டேன்…”

“அம்மா… நானும் ஹர்ஷுகிட்டே அப்படில்லாம் நடந்துக்கணும்னு தான் நினைக்கறேன், ஆனா, எனக்கு அதெல்லாம் வர மாட்டேங்குதே… நீங்க அவகிட்டே சொல்லி எனக்கு கொஞ்சம் டிரைனிங் கொடுக்க சொல்லுங்க…” என்று நக்கல் அடித்தவனை தலையில் செல்லமாய் கொட்டினார் ரேணுகா.

“ஹூம்… படவா, விட்டா, நீ என்னையே கிளாஸ் எடுக்க சொல்லுவே… ராம் அண்ணா வரட்டும்… உங்களுக்கு கல்யாணத்தை முடிச்சு வச்சிடறேன், அப்புறம் அவ உனக்கு கிளாஸ் எடுத்தாலும் சரி… நீ அவளுக்கு சொல்லிக் கொடுத்தாலும் சரி, அது உங்க பாடு…” என்று புன்னகையுடன் எழுந்து சென்றவரை நெகிழ்ச்சியுடன் பார்த்தான் சஞ்சய்.

“அம்மாக்களுக்கு பிள்ளைகள் தானே உலகம்…. அவர்களுக்கு ஒவ்வொன்றும் செய்து வைப்பதில் எத்தனை சந்தோசம்… இந்தப் புன்னகையும், சந்தோஷமும் அதனால் தானே, சோர்வும், சலிப்புமாய் இருந்த என் அன்னை எப்படி உற்சாகமாய் மாறி விட்டார்… இதற்கெல்லாம் காரணம் என் ஹர்ஷூ தானே…” என நினைத்தவனுக்கு அவளை உடனே காண வேண்டும் போலத் தோன்றியது.

மீண்டும் அவனிடம் திரும்பி வந்த ரேணுகா, “டேய் சஞ்சு… இந்த சின்னவனோட நம்பர் நாட் இன் யூஸ் னு சொல்லுதே… உன்கிட்டே வேற ஏதாவது நம்பர் இருக்கா…” பரிதவிப்போடு கேட்ட அன்னையை உருக்கமாய் பார்த்தான் சஞ்சய்.

“அம்மா, சொல்ல மறந்துட்டேன்… அவன் நம்பர் மாறி இருக்கு, நான் வேற நம்பர் தரேன்… அதுல டிரை பண்ணுங்க…” என்றவன் ஒரு புதிய எண்ணைக் கூற அவன் அருகில் சோபாவில் அமர்ந்து, அதைத் தன் அலைபேசியில் அழுத்தி ரிங் ஆகத் தொடங்கியதும், அவரது முகம் மலர்ந்தது.

“ரிங் ஆகுதுடா, சஞ்சு…” என்றார் மகனிடம் அவசரமாய்.

ம்ம்… பேசுங்கம்மா…” என்றவன் அன்னையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்த தாய்ப்பாசத்துக்கு ஈடேது… அதைப் பிடித்து வைக்கவும் முடியாது, இவரது புன்னகை என்றும் இப்படியே நிலைக்க வேண்டும் கடவுளே…” யோசித்துக் கொண்டே தனது அறைக்கு எழுந்து சென்றான் சஞ்சய்.

அடுக்களையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டே சஞ்சயிடம் வர்ஷுவின் வேலையைப் பற்றி சொன்னதை யோசித்துக் கொண்டிருந்தாள் ஹர்ஷா. அவனும், “என் கொழுந்தியாவை நாளைக்கே வீட்டுக்கு அழைச்சிட்டு வா, இவ்ளோ நாளா நான் பார்க்க வராம இருந்ததே தப்பு… அவகிட்டே பேசிட்டு அவளுக்குப் பிடிச்ச வேலைல உக்கார வச்சிடுவோம்… அவ அக்கா கம்பெனில அவளுக்கு இல்லாத வேலையா, ஹோம் மினிஸ்டர் சிபாரிசு இருக்கும்போது மறுக்க முடியுமா…” என கிண்டலுடன் சொல்லி இருந்தான். அவனுடன் கொஞ்சலும், கிண்டலுமாய் பேசியதை நினைத்ததும் அவளது முகம் சிவந்தது.

“எப்படி அழகாய் பேசுகிறான்… இவனைத் தான் ஹிட்லர் என்று அழைத்தேனா, எப்படி மாறி விட்டான்… என்னிடம் எத்தனை மென்மையாய் நடந்து கொள்கிறான், இப்போதெல்லாம் அவனது கோப முகத்தைக் காண்பதே இல்லையே… காதல் மன்னனாய் வலம் வந்தாலும் அவ்வப்போது அவனது நினைவுகள் எங்கேயோ சிக்கிக் கொண்டு வேறு உலகத்துக்கு சென்று விடுகிறானே… அப்படி எதை தான் யோசிப்பான், ஹூம்… ஒரு கம்பெனி வைத்திருப்பவர்களே, ஓயாமல் உழைக்க வேண்டும்… இவனுக்கு இத்தனை கம்பெனி இருக்கும்போது அதைப் பற்றி யோசனை இருந்து கொண்டே தானே இருக்கும்… நாம் தான் புரிந்து அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும்…” யோசித்துக் கொண்டே மாவை உருண்டை பிடிக்கத் தொடங்கினாள்.

Advertisement