Advertisement

அன்னையிடம் வர்ஷாவிற்கு உடம்புக்கு முடியவில்லை… என்று மட்டும் அவரை கவலைப்படுத்தாமல் கூறி, தான் போய் அவளைப் பார்த்துவிட்டு, முடியாவிட்டால் அழைத்து வருவதாகக் கூறியவள், சஞ்சய்க்கும் அழைத்து விவரம் கூறினாள்.

அவளைத் தனியே போக வேண்டாம் என்று கூறியவன், அவனுக்கு முக்கியமான வேலை இருந்ததால், அவனது ஆபீஸ் காரை டிரைவருடன் அனுப்பி வைப்பதாகக் கூற, அவள் மறுத்தும் சம்மதிக்காமல் அனுப்பி வைத்தான்.

“ஓகே… ஹர்ஷூ, பத்திரமா போயிட்டு வா… அத்தை தனியா இருக்காங்கன்னு பயப்பட வேண்டாம்… அவங்களை நான் சாயந்திரம் கூட்டிட்டு வந்து நம்ம வீட்டுல விட்டுடறேன், அம்மா கூட இருக்கட்டும்… நீ உன் தங்கச்சியைப் பார்த்து பத்திரமா கூட்டிட்டு வா… எனக்கு வேலை இருக்கு, இல்லன்னா நானே உன்னோட வந்திருப்பேன்…” என்றான்.

“ப..பரவால்லை… நீங்க உங்க வேலையை முடிங்க, நான் போயிட்டு வந்திடறேன்…” என்றாள் மனதுக்குள் எழுந்த சிறு ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு.

“ம்ம்… சரிடா, பார்த்து பத்திரம…” என்றவன் வண்டியை அனுப்பி வைத்தான்.

ஹர்ஷா காரில் சென்னை சென்று அடையும்போது மாலை ஆறு மணிக்கு மேல் ஆகி இருந்தது. அவள் அங்கு சென்று சேருவதற்குள் ரேணும்மாவும், உமாவும் சஞ்சயும் அலைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்தனர்.

அவள் தீபாவின் வீட்டுக்கு வரும்போது அங்கு தீபாவிடம் ஏதோ கோபமாய் கேட்டுக் கொண்டிருந்தார் அவளது அன்னை. வாசலில் கார் வந்து நின்றதும் பேச்சை நிறுத்திவிட்டு எட்டிப் பார்த்தார். அதிலிருந்து இறங்கி வந்த ஹர்ஷாவைக் கண்டதும் சிறு புன்னகையுடன் அவளிடம் வந்தார்.

“வா…ஹர்ஷா… அங்கிருந்து உடனே கிளம்பிட்ட போலருக்கு…”

“ஆமாம் ஆண்ட்டி… கார்ல வந்ததாலே சீக்கிரம் வர முடிஞ்சது, வர்ஷா எங்கிருக்கா…” தேடலுடன் பார்வையை சுழற்றினாள்.

“மாடில இருக்காம்மா… நீ டயர்டா இருப்பே, கொஞ்சம் உக்காரு… தீபா… அக்காவுக்கு காபி எடுத்திட்டு வா, அந்த டிரைவருக்கும் சேர்த்துப் போடு…” மகளை அனுப்பி வைத்தார்.

“என்ன ஆண்ட்டி, வர்ஷுவுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே…” சோர்வுடன் கேட்டவளை ஏறிட்டார் அவர்.

“இந்தப் புள்ளைங்க ரெண்டும் என்கிட்டே எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க… ஆனா வர்ஷா மனசுக்குள்ளே எதையோ வச்சுட்டு வருத்தப்பட்டு உடம்பைக் கெடுத்துக்குறா… உங்ககிட்டே சொல்லாம இதை நானே பார்த்துக்கலாம்னு தான் நினைச்சேன்… அவ எதுவும் சொல்லாம அழுதுட்டே இருக்கா, உங்களுக்குத் தெரிவிக்காம தப்பாப் போயிடக் கூடாதுல்ல, அதான் சொன்னேன்… டாக்டர் பார்த்த பிறகு காய்ச்சல் குறைஞ்சிருக்கு, இப்ப தூங்கிட்டு இருக்கா…” என்றார்.

அதற்குள் தீபா காபியுடன் வர, அதை வாங்கிக் குடித்துவிட்டு மாடிக்கு சென்றனர். தீபாவின் முகத்தில் எதோ ஒரு தவிப்பு தெரிய அதை மறைப்பதற்காய் அவள் போராடுவதை ஹர்ஷா புரிந்து கொண்டாள்.

வாடிப் போன பூவாய் படுக்கையில் சோர்வுடன் சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் வர்ஷா. முகமும் கண்களும் வீங்கி எத்தனையோ நாள் உடம்புக்கு முடியாமல் இருந்தவள் போலக் கிடந்தாள்.

உடன் பிறந்தவளின் கோலம் மூத்தவளின் மனதைப் பிசைந்தது. அதிர்ச்சியுடன் ஓடிச்சென்று தங்கையிடம் அமர்ந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டாள்.

“சின்னப் பொண்ணை வேலைக்குன்னு இங்கே விட்டிருக்கக் கூடாதோ… நம்ம கூடவே வச்சிருந்தா இப்படி ஆகி இருக்க மாட்டாளோ, ஆண்ட்டி நல்லாப் பார்த்துகிட்டாலும் வேலைக்குப் போறவங்க… அவங்களைக் குறை சொல்ல முடியாது…” கலக்கத்துடன் தங்கையை அழைத்தவள், நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துப் பார்த்தாள்.

“வர்ஷு… வர்ஷூம்மா, இங்க பாருடா… அக்கா வந்திருக்கேன், கொஞ்சம் எழுந்துக்கடா…” அவளை மெல்ல எழுப்ப முயன்றாள்.

கனமான இமைகளை மெல்லப் பிரித்தாள் வர்ஷா. மங்கலாய் கண்ணுக்கு முன்னில் தெரிந்த அக்காவைக் கண்டதும் தூக்கம் கலைய, முழுதும் கண்ணைத் திறந்து எழுந்து கொள்ளப் போனாள்.

“அ…அக்கா, வந்துட்டியாக்கா…” என்றவள், மீண்டும் அழுவதற்கு ஆயத்தமாக, காரணம் புரியாமல் தங்கையின் நிலை கண்டு கலங்கினாள் ஹர்ஷா.

“என்னடா வர்ஷூ, எதுக்கு இப்படி அழறே… இங்க பாரு, எதுவா இருந்தாலும் அக்கா இருக்கேன்ல… கலங்கக் கூடாது, கண்ணைத் துடைச்சுக்கோ… மெதுவா எழுந்து உக்காரு…” என்றவள் அவளது கண்களைத் துடைத்துவிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

அவர்கள் இருவரையும் கண்ட தீபாவுக்கும் கண் கலங்கியது.

“வர்ஷுவோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணமோ… அக்காவும், அம்மாவும் நான் இருக்கேன்னு தானே அவளை இங்கே அனுப்பினாங்க, அந்த பிராடுகளை நம்பி இவளைப் பழக விட்டது தப்போ… இப்பக் காலம் கடந்து இதெல்லாம் யோசிச்சு என்ன பிரயோசனம்…” எதையும் வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே புலம்பினாள் தீபா.

“இப்படியே அழுதுட்டு தான் இருக்கா, எதைக் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா… என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே நாம சரிபண்ண முடியும்… யாராவது தப்பா நடந்துக்கப் பார்த்தாங்களான்னு கூட கேட்டுப் பார்த்துட்டேன், எதுக்கும் பதில் இல்லை…” என்றார் தீபாவின் அன்னை.

“சரி ஆண்ட்டி… நான் பேசறேன் அவகிட்ட, இன்னைக்கு அவ நல்லா தூங்கட்டும்… காலைல காய்ச்சல் குறைஞ்சிருச்சுன்னா இவளை ஊருக்கு அழைச்சிட்டுப் போயிடறேன்…” என்றாள்.

“சரிம்மா… நான் நைட்டுக்கு டிபன் பண்ணறேன், நீ இவங்களோட பேசிட்டு இரு…” என்றவர், அடுக்களைக்கு சென்றார்.

ஹர்ஷா தங்கையிடம் பேச முயற்சிக்கும் போதெல்லாம் அவள் அழுது கொண்டே இருக்க, அவளிடம் பேசுவதை விட்டு தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள். தீபாவிடம் என்னவென்று கேட்க முயல வர்ஷுவே சொல்லாமல் அவளது  காதல் விவகாரத்தை தான் சொல்லுவது சரியல்லவென்று அவளும் சொல்லாமல் மறைத்து விட்டாள். காலையில் காய்ச்சல் குறைந்திருந்ததால், தங்கையைக் கூட்டிக் கொண்டு கிளம்பினாள் ஹர்ஷா.

மாலையில் வீட்டுக்கு வருவதற்குள் தங்கையிடம் எத்தனையோ முறை அமைதியாய் கேட்க முயற்சி செய்தும் அவள் கண்ணீரைத் தவிர வேறு எதையும் பதிலாகத் தரவில்லை.

வீட்டுக்கு சென்று அன்னையின் முன்பு இப்படி அழுது வைத்தால் வேறு வினையே வேண்டாம்… என நினைத்த ஹர்ஷா அவளிடம் சொல்லி வைக்க நினைத்தாள். ஜன்னல் வழியே தொலைதூரத்தில் எங்கோ பார்வையைப் பதித்திருந்தவளின் கையை ஆதரவாய் எடுத்துக் கொண்டாள். தங்கையின் நிலை கண்டு அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு காப்பி ஷாப்பில் வண்டியை நிறுத்த சொல்லி வர்ஷுவுடன் சென்றவள், அவளிடம் இதமாய் எடுத்து சொன்னாள்.

“வர்ஷூ… நானும் எத்தனயோ தடவை கேட்டுப் பார்த்துட்டேன், உன் அழுகையோட காரணத்தை சொல்ல மாட்டேங்கிறே… இந்த உலகத்துல எந்தப் பிரச்னையும் நிரந்தரம் இல்லை… அதுக்கான தீர்வு கண்டிப்பா இருக்கும், உனக்கு எப்ப சொல்லத் தோணுதோ சொல்லு… ஆனா ஒண்ணு, அம்மா முன்னாடி இப்படி அழுது வச்சேன்னா, அவங்க ரொம்ப பயந்து போயிருவாங்க… ஆயிரம் கேள்வி கேப்பாங்க, சமாதானம் பண்ண முடியலைனா அவங்களுக்கும் முடியாமப் போயிரும்… அதனால உன் அழுகையைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி ரிலாக்ஸ் பண்ணிக்கோ…” என்றாள்.

அக்காவின் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, சம்மதமாய் தலையாட்டினாள் வர்ஷா.

“எனக்கு ஒண்ணு மட்டும் சொல்லு… உனக்கு யாராலயும் எந்தப் பிரச்சனையும் இல்லை தானே…” தங்கையின் முகத்தை வேதனையுடன் நோக்கி இருந்த தமக்கையின் முகத்தைக் கண்ட வர்ஷா, இல்லையென்று மெதுவாய் தலையாட்டினாள்.

அடுத்து வந்த நாட்களில் அம்மாவுக்குத் தெரியாமல் அழுது கொண்டிருக்கும் தங்கையையும், எப்போதும் போல இல்லாமல் அறைக்குள் சென்று ஒதுங்கிக் கொள்ளும் மகளை அவர் விசாரிப்பதை சமாளிப்பதுமாய் ஹர்ஷாவின் பாடு திண்டாட்டமானது. அவளது கஷ்டத்தைப் புரிந்து கொண்ட வர்ஷா மெதுவாய் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.

வீட்டுப் பிரச்சனைகள் மனதை அலட்டிக் கொண்டிருக்க, சஞ்சயை அதிகம் கவனிக்கவில்லை ஹர்ஷா. அவனும் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதில்லை… அவனிடம் தங்கையைப் பற்றி சொல்லுவதா, வேண்டாமா என யோசித்தவள், என்னவென்று எனக்கே சரியாகத் தெரியாமல் அவனிடம் எதற்கு சொல்லி குழப்ப வேண்டும் என நினைத்து சொல்லாமல் விட்டாள்.

விடிந்தால் அமெரிக்கா செல்லப் புறப்படுவதால் முந்தின நாள் மாலை ஹர்ஷாவைக் காண்பதற்காய் சீக்கிரமே வீட்டுக்கு வந்தான் சஞ்சய். செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டே தங்கையின் நினைவில் மூழ்கி இருந்தவள், உள்ளே நுழைந்த சஞ்சயின் காரைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

“காலையில் அமேரிக்கா கிளம்பி விடுவானே, இவனோடு மனம் விட்டுப் பேசி எத்தனை நாள் ஆகிவிட்டது…” நினைத்துக் கொண்டே அவனிடம் நடந்தாள்.

அவள் வந்ததும் காரிலிருந்து இறங்கியவன், “ஹர்ஷூ… காபி எடுத்திட்டு ரூமுக்கு வா…” என்றான் சிறு புன்னகையுடன்.

“ம்ம்… சரி…” என்றவளின் மனதுக்கு பாலையில் தகித்தவளுக்கு சிறு மழை கிடைத்தது போலத் தோன்றியது அவன் வரவு.

காப்பியுடன் அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் வந்த உடையுடன் அப்படியே படுத்துக் கிடந்தவனை அதிசயமாய் பார்த்தாள். எப்போது வந்தாலும் உடை மாற்றி பிரெஷ் ஆகிவிட்டு ஓய்வெடுப்பது தான் அவனது சுபாவம். கண்கள் மூடி சோர்வுடன் படுக்கையில் கிடந்தவனைக் காண அவளுக்கு வருத்தமாய் இருந்தது.

காப்பியை டீப்பாயின் மீது வைத்தவள், அவன் தலையில் தொட்டுப் பார்த்தாள்.

“என்னாச்சு சனு, தலை வலிக்குதா…” அவளது ஜில்லென்ற பிஞ்சுக் கரத்தை தன் வலிய கரத்தால் நெற்றியில் வைத்து அமர்த்தியவன்,

“ம்ம்… ரொம்ப வலிக்குதுடா…”   என்றான்.

“மாத்திரை தரேன், காபியைக் குடிங்க… ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்… கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு உங்களை கவனிக்க நேரமில்லாம அலைஞ்சா இப்படிதான் இருக்கும்…” என்றவள் மாத்திரையை எடுத்துக் கொடுத்தாள்.

அதை வாங்கி விழுங்கியவன், “இப்படி உக்கார்…” என்று அவளைக் கட்டிலில் அமர வைத்தான். அவள் அமர்ந்ததும், அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டவன், “கொஞ்சம் தலையைப் பிடிச்சு விடறியா, ஹர்ஷூம்மா…” என்றான். மனதுக்குப் பிடித்த ஆண்மகன் மடியில் கிடக்க மங்கையின் முகமோ சிவப்பானது.

“அச்சோ, அம்மா வந்திடப் போறாங்க…” என்றாள் அவள் தயக்கத்துடன்.

“அம்மா வர மாட்டாங்க… நீ கொஞ்சம் தைலம் தேச்சு விடேன், ப்ளீஸ்…” என்றவன் அவள் கையை எடுத்து அவன் நெற்றியில் வைத்தான்.

சிறு புன்னகையுடன், தைலத்தை எடுத்து அவன் நெற்றியில் தேய்த்து விட்டாள். புருவங்களுக்கு மேல் சிறு மசாஜ் செய்து, அவனது கலைந்து கிடந்த சிகையை தடவிக் கொடுத்தாள். சுகமாய் கண்ணை மூடிக் கொண்டவன், சற்று நேரத்தில் அப்படியே உறங்கிப் போனான். சிறு பிள்ளையாய் மடியில் உறங்குபவனை கண்ணெடுக்காமல் பார்த்தாள் ஹர்ஷா.

“எத்தனை கம்பீரமாய், எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்… என்ற பாவத்தில் நடந்து கொள்ளுபவன், இப்போது இப்படி சிறு குழந்தையாய் மடியில் சுருண்டு கிடக்கிறானே… சிறிது கூட ஓய்வெடுத்துக் கொள்ளாமல் பிசினஸின் பின்னால் ஓடினால் இப்படிதான் இருக்கும்… உடலுக்கு நாம் ஓய்வு கொடுக்காவிட்டால் தேவையான ஓய்வை உடலே எடுத்துக் கொள்ளும்…” என நினைத்துக் கொண்டே அவன் தலைக்கு ஒரு தலையணையை வைத்துவிட்டு மெல்ல எழுந்தாள். கீழே வந்தவளுக்கு மீண்டும் தங்கையின் நினைவுகளே மனதை சூழ்ந்து கொண்டன. அவளைக் கண்ட ரேணும்மா, எதோ யோசித்துக் கொண்டே அவளிடம் வந்தார்.

“என்னடா, சஞ்சு என்ன பண்ணுறான்… காபி கொடுத்தியா…”

“ம்ம்… தூங்கறார்மா, பாவம் தலைவலி போலருக்கு… மாத்திரை போட்டுப் படுத்திருக்கார்…” என்றாள் அவள்.

“ம்ம் ஓய்வில்லாம ஓடினா, இந்த சின்னவன் நாளைக்கு கிளம்பறானே… போன் பண்ணிப் பேசலாம்னு பார்த்தா, கட் பண்ணிட்டு பிஸின்னு மெசேஜைப் போட்டு விடறான்…” என்று சலித்துக் கொண்டவர், “ஹா… ஹர்ஷூ… அப்புறம், உன் தங்கை வீட்ல தானே இருக்கா… அவளையும் ஒரு நாள் இங்கே அழைச்சிட்டு வாடா,  நான் பார்த்த மாதிரியும் ஆச்சுல்ல…” என்றார்.

“ம்ம்… சரிம்மா, அழைச்சிட்டு வரேன்…” என்றவளின் குழப்பமான முகம் கண்டு அவருக்கு என்ன தோன்றியதோ.

“என்னடா, முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு… கல்யாணத்தைப் பத்திப் பேசாம சஞ்சு, இப்படி வேலை பின்னாடியே சுத்திட்டு இருக்கான்னு வருத்தமா இருக்கா… ஒரு மாசம் பொறுத்துக்க, ராம் அண்ணா வெளிநாட்டுல இருந்து வந்திடுவாரு… அப்புறம் கல்யாணத்தைப் பேசி முடிவு பண்ணிடலாம்… இந்த ராம் யாருன்னு தெரியுமா, என் வீட்டுக்காரரோட பிரண்டு… என் பையனோட காட் பாதர்… இந்தக் குடும்பத்துல எல்லா முக்கிய விசேஷமும் அவர் தலைமையில் தான் நடக்கணும்னு எங்களுக்கு ஆசை, நீ கவலைப் படாதே… சீக்கிரமே அந்தக் குதிரையோட லகானை உன்கிட்டே கொடுத்திடறேன், அப்புறம் நீயாச்சு… உன் புருஷனாச்சு…” என்று அன்போடு தலையைத் தடவி விட்டார்.

அவருக்கு நாணப் புன்னகை ஒன்றை பதிலாக்கி விட்டு வாசலுக்கு வந்தவள், “கல்யாண நேரத்தில் வர்ஷா இப்படி இருந்தால் எல்லாரும் கேள்வி கேட்பார்களே… அதற்கு முன்னால் அவளது பிரச்னை என்னவென்று கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்…” என நினைத்துக் கொண்டாள்.

அன்னை சுமந்தார் கருவறையிலே…

தந்தை சுமந்தார் தோள்களிலே…

நானும் உனை சுமந்திட்டேன் மடியினிலே…

உன் மீதான பிரியங்களால் தான்

தொலைத்துவிட்டேன் என்

பிடிவாதங்களை… உன்னை

விட்டு விலக முடியாமலே விட்டுக்

கொடுக்கப் பழகிக் கொண்டேன்…

வெடித்து நீயும் அழும்போது

துடித்து நானும் போகிறேனடி…

உன் முதல் தோழி நான் என்பதை

மறந்து போனாயோ கண்ணே…

உன் கண்ணில் வழியும் துளிகள்

எல்லாம் கடலாக சேர்ந்துவிட நான்

கண்ணீர் கடலில் தத்தளிக்கிறேன்…

கரையேற உன் மனதைத் திறந்திடு…

Advertisement