Advertisement

இதயம் – 20

விக்கியைத் தேடி அவன் காபினுக்கு வந்த வர்ஷா விக்கி, ராஜீவ் இருவருமே அன்று ஆபீஸ் வரவில்லை என்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.

“என்னாச்சு, ஏன் ரெண்டு பேரும் வரலை…” நினைத்தவள் விக்கியின் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள அணைத்து வைக்கப் பட்டிருந்தது. அடுத்து ராஜீவின் எண்ணுக்கு முயற்சி செய்ய அதுவும் அப்படியே.

“என்ன இது… ரெண்டு மொபைலும் சுவிட்ச் ஆப் வருது, நேத்து சாயந்திரம் கூடப் பேசிட்டு இருந்தாங்களே… உடம்பு சரியில்லையோ, ரெண்டு பேருக்கும் ஒண்ணாவா உடம்பு சரியில்லாமப் போகும்…” யோசித்துக் கொண்டே அவளது காபினுக்கு வந்தவள், தீபாவிடம் விசாரித்தாள்.

“ஏய் தீப்ஸ்… உன்னோட வேத்ஸ் ஏதாவது மெசேஜோ, காலோ பண்ணினாரா, ரெண்டு பேருமே இன்னைக்கு ஆபீஸ் வரலையாம்…” என்றாள் குழப்பத்துடன்.

“இல்லையே… நேத்து சாயந்திரம் நான் ஆபீஸ்ல பார்த்தது தான், என்னவா இருக்கும்…” என்றாள் அவளும் யோசனையுடன்.

“சரி… சாயந்திரம் அவங்க பிளாட்டுக்குப் போயி பார்த்திட்டு வந்திடலாமா…” வர்ஷாவின் கேள்விக்கு சம்மதமாய்த் தலையாட்டினாள் தீபா. இருவரும் குழப்பத்துடனேயே அன்றைய வேலைகளைத் தொடர்ந்தனர்.

வர்ஷா மீண்டும் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போதும் அதே அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற குரலே ஒலித்தது. மன சஞ்சலத்துடன் பொழுதைக் கஷ்டப்பட்டுக் கழித்தவர்கள், மாலையில் விக்கியின் பிளாட்டை நோக்கி ஸ்கூட்டியில் பறந்தனர்.

இதற்கு முன்னர் ஒருமுறை அங்கு வந்து பழக்கம் இருந்ததால் அவர்களைக் கண்டதும் செக்யூரிட்டி பரிச்சய முகத்தோடு அவர்களிடம் வந்தார்.

“செக்யூரிட்டி சார், பிளாட் 15ல விக்கி, ராஜீவ் ரெண்டு பேரும் இருக்காங்களா… இன்னைக்கு ஆபீஸ் வரலை, அதான் உடம்பு சரியில்லையோன்னு பார்க்க வந்தோம்…”

“இல்லையேம்மா, அவங்க ரெண்டு பேரும் நேத்து ராத்திரி கார்ல எங்கயோ கிளம்பிப் போனாங்களே… இன்னும் திரும்பி வரலை போலருக்கு,  இங்கே கார் இல்லை…” என்றார் அவர்.

“ஓ… எங்கே போனாங்கன்னு தெரியுமா…”

“எதுவும் சொல்லலையே, பொதுவா கிளம்பும்போது கை காட்டிட்டுப் போறதோட சரி… எங்க போறாங்கன்னு சொல்லுற பழக்கம் இல்லை…” என்றார் அவர்.

“அப்படியா, எங்க போனாங்கன்னு தெரியலையே…” மனதில் ஒரு பயப்பந்து உருள கையைப் பிசைந்தாள் வர்ஷா.

“வந்திருவாங்கம்மா, ஏதாவது வேலையா போயிருக்கலாம்… பயப்படாதீங்க…” சமாதானப் படுத்தினார் செக்யூரிட்டி.

“அவங்களைக் கான்டாக்ட் பண்ண வேற ஏதாவது போன் நம்பர் இருக்கா…”

“அவங்களோட மொபைல் நம்பரும், ஆபீஸ் நம்பரும் தான் இருக்கு…” என்று அவரும் கையை விரித்துவிட்டார்.

வர்ஷா ஒன்றும் புரியாமல் அழுது விடுவது போல நின்று கொண்டிருக்க, தீபாவுக்கும் மனசுக்குள் ஒரு உறுத்தல் எழுந்தது.

“ஒரு வேளை, வர்ஷாவும், விக்கியும் காதலிப்பது தெரிந்து அவன் வீட்டினர் அவர்களை அழைத்துச் சென்றிருப்பார்களோ…” எனவும் யோசித்துப் பார்த்தாள்.

கண் கலங்க, என்ன செய்வதென்று கவலையுடன் நின்று கொண்டிருந்த வர்ஷாவை சமாதானப்படுத்தி கிளம்பினர்.

அன்று முழுவதும் மாறி மாறி அவர்கள் இருவரின் அலைபேசிக்கு அழைத்தும் லைனே கிடைக்கவில்லை. வர்ஷா அறையில் அழுது கொண்டிருக்க அன்னைக்குத் தெரியாமல் சமாளிக்க தீபா கஷ்டப்பட வேண்டி வந்தது.

“என் சிறகுகளை உன்னுடன்

எடுத்துச் சென்றாயோ கண்ணா…

உன் பட்டாம் பூச்சி பறக்க

முடியாமல் தவிக்கிறேனே…

சிறகுகள் வேண்டாம் எனக்கு…

சிறை எடுத்திட வந்திடு நீ…”

அடுத்த நாள் ஆபீஸுக்குக் கிளம்பும்போது கூட இன்று கண்டிப்பாய் அவர்கள் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே கிளம்பினர். அன்றும் அவர்கள் வரவில்லை என்றதும் இருவருக்குள்ளும் ஒரு பதட்டம் தொடங்கியது. சக ஊழியர்களிடம் விசாரித்தும் யாருக்கும் தெரியவில்லை.

“தீபா… எனக்கு ரொம்ப பயமாருக்கு, ரெண்டு பேரும் எங்கே போயிருப்பாங்க… எங்க போனாலும் நம்மகிட்டே சொல்லி இருப்பாங்களே, ஒரு வேளை, கோவை போயிட்டாங்களோ… விக்கி வீட்டு நம்பர் இங்கே கிடைக்குமா…” என விசாரித்துப் பார்க்க, எல்லாருக்கும் அவன் வீடு கோவை என்பதைத் தவிர, வீட்டு முகவரியோ, அலைபேசி எண்ணோ தெரியவில்லை. அவனது பிளாட் முகவரி தான் அலுவலகத்தில் கொடுத்திருந்தான்.

இன்னும் நான்கு நாட்களில் இருவரும் அமேரிக்கா கிளம்ப வேண்டும், அப்படி இருக்கும்போது எங்கு சென்றிருப்பார்கள்… என யோசித்து யோசித்து தலைவலியே வந்துவிட்டது வர்ஷாவிற்கு. நிமிடத்திற்கொரு முறை கலங்கும் விழிகளைத் துடைத்துக் கொண்டே வேலையும் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டவளை விடுப்பு எடுக்க வைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் தீபா. தீபாவின் அன்னை அலுவலகம் சென்று விடுவதால் அவருக்குத் தெரியாமல் எப்படியோ இரண்டு நாட்கள் கழிந்தன.

தலைவலி என்று கூறி இரவு உணவுக்குக் கூட வராமல் அறையிலேயே அடைந்து கிடந்தாள்  வர்ஷா. தீபாவுக்கும் அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை.

“வரு… நீ இப்படி அழுதுட்டே இருக்குறது அம்மாக்குத் தெரிஞ்சா என்னன்னு கேள்வி கேக்கப் போறாங்க, ரெண்டு நாளும் உனக்கு தலைவலின்னு அவங்க கண்ணுல படாம சமாளிச்சுட்டே… அழுதழுது கண்ணு, முகமெல்லாம் வீங்கி எப்படியோ இருக்குடி… ரெண்டு பேரும் என்ன சின்னக் குழந்தைகளா, ஏதாவது வேலையா எங்காவது போயிருப்பாங்க… நம்ம கிட்ட சொல்ல முடிஞ்சிருக்காது… வந்திருவாங்க, பயப்படாதே…” தோழியை சமாதானப்படுத்த முயன்றாள் தீபா.

“ஆனா, நாம கால் பண்ணாலும் போக மாட்டேங்குதே… எங்கே போனாங்கன்னு தெரியாம என்னால நிம்மதியா இருக்கவே முடியலை…” என்ற வர்ஷாவுக்கு மீண்டும் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

“வரூ… நாம வேணும்னா ஹர்ஷூ அக்கா கிட்டே இதைப் பத்தி பேசலாமா, அவங்க சொன்னாப் புரிஞ்சுகிட்டு ஏதாவது சொலூஷன் சொல்லுவாங்க…” என்றாள் தீபா.

“இல்லடி… அக்காவுக்கு இப்பதான் கல்யாணம் சரியாகியிருக்கு, அம்மாவும், அக்காவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க… அதைக் கெடுக்க வேண்டாம், அதும் இல்லாம அம்மாவுக்கு என் லவ் மேட்டர் தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாங்க… அவங்களுக்கு எந்த ஹெல்த் பிராப்ளமும் வந்திடக் கூடாது…” தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள சொன்னாலும் கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது வர்ஷாவிற்கு.

“இந்த விக்கியும், வேதாளமும் சரியான பிராடு பசங்க… அவங்களா வந்தாங்க, லவ் பண்ணறேன்னு சொன்னாங்க… இப்ப சொல்லாமல் கொள்ளாமல் காணாமப் போயிட்டாங்க… எப்படியும் இங்கே வந்து தானே ஆகணும், வரட்டும்… பார்த்துக்கலாம்…” கோபமாய் சொன்னாள் தீபா.

இப்படியே ஐந்து நாட்கள் முடிந்திருக்க அவர்களைப் பற்றி எந்த விவரமும் தெரியாமல் வர்ஷாவின் பதட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. உண்ண முடியாமல் உறங்க முடியாமல் கவலையில் உழன்றவளுக்கு காய்ச்சலும் வந்துவிட்டது. அவள் வீட்டில் மாத்திரை போட்டு ஓய்வெடுக்க, தீபா மட்டும் அலுவலகம் சென்றாள்.

விக்கியைப் பற்றி நினைத்துக் கொண்டே கண்ணை மூடி படுக்கையில் சாய்ந்திருந்த வர்ஷாவிற்கு, அலைபேசியில் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி ரிசீவான ஓசை கேட்டது. சட்டென்று எழுந்தவள், அலைபேசியை எடுத்து நோக்க, விக்கியின் எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருப்பதாக நோடிபிகேஷன் காட்டியது.

“வி…விக்கி…” அவசரமாய் மெசேஜை ஓபன் செய்தவள் அதில் இருந்த விஷயத்தைக் கண்டு கண்கள் நிலை குத்த அதிர்ந்து போனாள்.

சென்னை கிளம்பிய சஞ்சய் மூன்று நாட்களுக்குப் பிறகு சாயந்திரத்திற்கு மேல் வீட்டுக்குத் திரும்பி வந்தான். சோர்வுடன் களைத்துப் போய் வந்தவன், தானும் விக்கியுடன் அமெரிக்கா கிளம்பப் போவதாகக் கூறி அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கி விட்டான்.

“ஏண்டா சஞ்சு… விக்கி மட்டும் அமேரிக்கா போனாப் போதாதா, நீயும் போனா இங்கே நான் மட்டும் தனியா இருக்கணுமே… நீ இப்பவே சோர்வா இருக்கே, கொஞ்சம் ரெஸ்ட் எடேன் டா…” அலுத்துக் கொண்டார் ரேணுகா.

“அம்மா… துணைக்கு உங்க மருமகளையும் அத்தையும் இங்கயே கூட்டிட்டு வந்து வச்சுக்கங்க… கண்டிப்பா நான் போயே ஆகணும், ஹர்ஷாவைக் கூட கூட்டிட்டுப் போகலாம்னு நினைச்சேன்… உங்க ரெண்டு பேருக்கும் துணைக்கு ஆள் வேணும்னு தான் விட்டுட்டுப் போறேன்…” என்றான் அவன்.

“அடப்பாவி… கல்யாணத்துக்கு முன்னாடி அவளை எப்படி கூட்டிட்டுப் போவே, சம்மந்திம்மா சம்மதிக்க மாட்டாங்களே… ம்ம்… ராம் அங்கிள் கிட்டே உனக்கும் ஹர்ஷாவுக்கும் கல்யாணம் முடிவானதைப் பத்தி சொல்லிட்டேன்… அவர் அடுத்த மாசம் இந்தியா வரேன்னு சொல்லி இருக்கார்… வந்ததும் கல்யாணம் முடிவு பண்ணிடலாம், அதுக்குப் பிறகு வேணும்னா ரெண்டு பேரும் ஜோடியா போயிட்டு வாங்களேன்…” என்றவர், “பையன் ரொம்ப முன்னேறிட்டானே…” என மனதுக்குள் மெச்சிக் கொண்டார்.

“ம்ம்… சரிம்மா, அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்…” என்றான் லாப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டே. தன்னிடம் பேசக் கூட நேரமில்லாமல் வேலையைக் காரணம் காட்டி ஓடிக் கொண்டே இருந்தவனை முறைத்தார் அவர்.

“டேய் சஞ்சு… எதுக்குடா, இப்படி நிக்க நேரமில்லாம ஓடிட்டே இருக்கே… பாரு, உன் முகம் எல்லாம் களைச்சுக் கிடக்கு… இப்பவே நாலஞ்சு வயசு அதிகமா காட்டுது… கல்யாணத்துக்கு பேசத் தொடங்கியாச்சு, இனியாவது கொஞ்ச நேரம் என் மருமகளுக்கு ஒதுக்கக் கூடாதா… நீ பக்கத்துல இல்லன்னு மனசுக்குள்ள வருத்தம் இருந்தாலும் அவ எதையும் காட்டிக்காம அமைதியா இருக்கா… அந்தப் பொண்ணுக்கும் எல்லாரையும் போல மனசுல ஆசை இருக்கும்ல…”

“ம்ம்… கவலைப் படாதீங்கம்மா, நான் அமேரிக்கா போயிட்டு சீக்கிரமே வந்திடுவேன்… அப்புறம் உங்க விருப்பப்படி உங்க மருமக முந்தானையைப் பிடிச்சுட்டு அவ பின்னாடியே சுத்தறேன், இப்ப என்னைக் கொஞ்சம் தனியா விடறீங்களா…” என்றான் அவன்.

“ஹூக்கும்… இந்தக் கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, என்னமோ பண்ணு… ஆனா என் மருமகளை சந்தோஷமா வச்சுக்க மறந்திடாதே…” என்றவர் எழுந்து சென்றார்.

அவர் அங்கிருந்து நகர்ந்ததும் அலைபேசியை எடுத்தவன் ராஜீவின் தந்தை ராமிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். அடுத்து வந்த நாட்களில் மிகவும் பிஸியாகிப் போனான். ஆபீசில் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்க அதில் மூழ்கியவன், ஹர்ஷாவை ஒரு முறை பார்த்ததோடு சரி. வீட்டுக்கு வருவதற்கே நேரமில்லாமல் இருந்தான். ஹர்ஷாவும் அவனது நேரமின்மையைப் புரிந்து அவனிடம் போனில் விசாரிப்பதோடு அமைதியாகி விட்டாள். அப்போதுதான் புதியதாய் ஒரு பிரச்சனை முளைத்தது.

அன்று காலையில் குளித்து புறப்பட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா அலைபேசியில் ஒளிர்ந்த தீபாவின் அன்னையின் எண்ணைக் கண்டதும் நெற்றியை சுருக்கினாள்.

“ஆண்ட்டி எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணறாங்க… வர்ஷுவும், தீபுவும் தானே எப்பவும் பேசுவாங்க, ஏதாவது முக்கியமான விஷயமா இருக்குமோ…” நினைத்துக் கொண்டே மனதுக்குள் எழுந்த பதட்டத்துடன் அலைபேசியைக் காதுக்குக் கொடுத்தாள்.

“ஹலோ ஆண்ட்டி, நல்லாருக்கீங்களா…” நார்மலான விசாரிப்புடன் தொடங்கினாள்.

“நான் நல்லாருக்கேன் ஹர்ஷா… அம்மா பக்கத்துல இருக்காங்களா…” அவர் குரலில் சிறு தவிப்பு தெரிந்தது.

“இ..இல்ல ஆண்ட்டி… அம்மா ஹால்ல இருக்காங்க, சொ..சொல்லுங்க, ஏதாவது பிரச்சனையா…” அவளது பதட்டம் அதிகமாகத் தொடங்கியது.

“ஹர்ஷா… நான் சொல்லுற விஷயம் அம்மாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கலாம், அதான் உன்னைக் கூப்பிட்டேன்…”

“எ…என்னாச்சு ஆண்ட்டி… வ…வர்ஷுவுக்கு எதுவும் ஆபத்து இல்லையே…”

“ஹர்ஷா… கொஞ்ச நாளாவே வர்ஷுவோட நடவடிக்கைல எதோ மாற்றம் இருக்கு… நானும் கவனிச்சுட்டு தான் இருந்தேன், அவ அஞ்சாறு நாளா ஆபீஸ்க்கும் போகலை போலருக்கு… இப்ப ரெண்டு நாளா எப்பப் பார்த்தாலும் அழுதுட்டே இருக்கா, ஒழுங்கா சாப்பிட மாட்டேங்கிறா, தூங்க மாட்டேங்கிறா… எங்காவது வெறிச்சுப் பார்த்திட்டு உக்கார்ந்துக்கறா… என்னன்னு கேட்டாலும் ஏதும் சொல்ல மாட்டேங்குறா… தீபாவுக்கும் தெரியாதுன்னு சாதிக்குறா, இப்ப காய்ச்சல் வேற வந்து அனத்திக்கிட்டுப் படுத்திருக்கா… இது ஏதாவது பிரச்சனைல கொண்டு போயி விட்டுடுமோன்னு எனக்கு பயமா இருக்கு… அதான், உனக்குக் கூப்பிட்டேன்… கொஞ்ச நாள் அவளை உங்ககூட வச்சுகிட்டா நல்லாருக்கும்னு நினைக்குறேன்… நானும் ஆபீஸ் போயிடறேன்… சரியா கவனிக்க முடியலை… இப்பதான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்து தூங்கிட்டு இருக்கா… நீ உடனே கிளம்பி சென்னை வர முடியுமா…” என்றார் தீபாவின் அம்மா.

தாறுமாறாய் துடிக்கத் தொடங்கிய இதயத்துடிப்புடன் அவர் சொன்னதைக் கவனமாய் கேட்டிருந்த ஹர்ஷாவின் நெற்றி யோசனையாய் சுருங்கியது.

“தீபாவின் அன்னை தேவை இல்லாமல் அழைக்கக் கூட மாட்டார்… மிகவும் அனுசரணையாய் சொந்த மகளைப் போல வர்ஷாவைப் பார்த்துக் கொள்ளுவார்… அவரே அவளைப் பற்றி யோசித்து எதற்கோ பயப்படுகிறார் என்றால்… அதுவும் அவளுக்கு இப்போது காய்ச்சலில் முடியாமல் வேறு இருக்கிறாள் என்று…” யோசித்துக் கொண்டிருந்தவளை மீண்டும் ஒலித்த அவரது குரல் கலைத்தது.

“கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி வந்திரு ஹர்ஷா, வந்திருவ தானே…”

“வ…வந்திடறேன் ஆண்ட்டி, இன்னைக்கே வரேன்…” என்று அலைபேசியை வைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் ஹர்ஷா.

“அச்சோ… வர்ஷுவுக்கு என்ன பிரச்சனையா இருக்கும், அவ சின்னப் பொண்ணாச்சே… இப்பதான் படிச்சு முடிச்சிருக்கா, உலகம் தெரியாதவ… எங்கே, எப்படி காயப்பட்டாளோ… ஆண்ட்டி சொல்லுறதைப் பார்த்தா அவ மனசை ரொம்ப பாதிச்சிருக்கும் போலருக்கே, என்னவா இருக்கும்…” யோசித்தவள், உடனே கிளம்ப நினைத்தாள்.

Advertisement