Advertisement

திரும்பியவள் திணறிப் போனாள். அவளுக்கு வெகு அருகாமையில் நின்றிருந்தான் சஞ்சய். அவனிடமிருந்து வீசிய பர்பியூமின் நறுமணம் அவளைத் திணறடிக்க, வழி மறைத்து நின்றவனை ஏறிட்டாள் அவள்.

“எ… என்ன இது, தள்ளுங்க… நான் போகணும்…” அவனது கண்களின் சக்தியைத் தாங்க முடியாமல் குனிந்து கொண்டே கூறினாள். அத்தனை அருகாமையில் நின்றது அவளுக்கு படபடப்பாய் இருந்தது.

“ஏன்… நான் என்ன பண்ணினேன், நீ தாராளமா போ…” என்றான் அவன்.

“இப்படி நின்னா எப்படிப் போறது…”

“அப்பப் போகாதே…” என்றான் தலையை சரித்துக் கொண்டே. இந்த சஞ்சய் அவளுக்கு முற்றிலும் புதிது. அவன் முகத்தில் கடுகடுப்பு இல்லை. சிறு திருட்டுப் புன்னகை மட்டும் ஒளிந்து கிடந்தது.

“ப்ச்ச்… நான் அம்மாவுக்கு மாத்திரை கொடுக்கணும், வழியை விடுங்க…”

“மாத்திரை தானே கொடுத்துக்கலாம்… என் கையெல்லாம் அழுக்கா இருக்கு,  அந்தக் கேசரியைக் கொஞ்சம் ஊட்டி விட்டுட்டுப் போ…”

“எ…என்னது, விளையாடறீங்களா… கையைக் கழுகிட்டு சாப்பிடுங்க…”

“முடியாது… நீ ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன்…” தோளைக் குலுக்கினான் அவன். அவளுக்கு அவனை அப்படிக் காண சிரிப்பாய் வந்தது.

“ஹிட்லருக்கு இப்படில்லாம் கூட பண்ணத் தெரியுமா…” என்று வாய்க்குள்ளேயே முனங்கினாள்.

“எ…என்ன சொன்னே…” என்றான் பாதி புரிந்தும் புரியாமல்.

“ஒண்ணும் சொல்லலை…” சமாளித்தாள் அவள்.

“இல்லையே… நீ என்னை ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சே…” என்றான் அவன் மீண்டும்.

அவனைக் குறுகுறுவென்று பார்த்தவள், “ஹூம்… ஹிட்லர்ன்னு சொன்னேன்…” முகத்தில் இப்போது புன்னகை எட்டிப் பார்த்தது.

“என்னது… ஹிட்லரா,  நீ யாரை சொல்லறே…” என்றான் அவன்.

“ஹிட்லர் யாருன்னு தெரியாதா… கண்ணாடி முன்னால போயி நின்னு பாருங்க, தெரியும்…” என்றவள், அவனது நெஞ்சில் கையை வைத்துத் தள்ளி விட்டு வெளியே ஓடி விட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு திகைத்து நின்றிருந்தான் அவன்.

“அடிப்பாவி… என்னைத்தான் ஹிட்லர்ன்னு சொல்லிட்டுப் போனியா, என்னைப் பார்க்க அப்படியா இருக்கு… ஒரு வேளை மீசையை அப்படிக் கட் பண்ணிட்டேனோ…” என்றவன் அவசரமாய் கண்ணாடியில் பார்க்க, அதில் தெரிந்த அவனது முகத்தை அதிசயமாய் பார்த்தான் அவன்.

எப்போதும் இருப்பதைவிட இன்று அழகாய் இருப்பது போலத் தோன்றியது. அதற்குக் காரணம் அவன் இதழில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகை என்றும் புரிந்தது.

“ம்ம்… ஹர்ஷா அழகின்னா, நீயும் அழகன் தான்டா சஞ்சய்… ரெண்டு பேருக்கும் மேட்சிங் சூப்பரா இருக்கும்…” சொல்லிக் கொண்டான்.

“அட நானா இப்படியெல்லாம் யோசிக்கிறேன், என்னாலயே இதெல்லாம் நம்ப முடியவில்லையே… ம்ம்… இருந்தாலும் இது ஒருவித சந்தோஷமாய் தான் இருக்கு…” சிரித்துக் கொண்டு கேசரியை சாப்பிடத் தொடங்கினான்.

அன்று எங்கும் போகவே தோன்றவில்லை அவனுக்கு. ஹர்ஷாவை சீண்டிக்கொண்டு அவள் முகம் சிவப்பதை ரசிக்க ஆசையாய் இருந்தது. ஆனால் அவளோ அவனைத் தவிர்த்துக் கொண்டே இருந்தாள்.

காலை டிபனுக்கு நேரம் கழித்து தான் கீழே வந்தான் சஞ்சய்.

“அம்மா… டிபன் எடுத்து வைக்க சொல்லுங்க…” என்றவன் சாப்பாட்டு மேசைக்கு வந்தான்.

மகனது முகத்தில் தெரிந்த உற்சாகத்தையும், ஆர்வத்தோடு ஹர்ஷாவைத் தழுவி மீண்ட விழிகளையும் கண்ட ரேணுகா, மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

“ஹர்ஷூ… சஞ்சுவுக்கு டிபன் எடுத்து வை டா, ராணி மாடில இருக்கா…” என்றார்.

“ம்ம்… சரிம்மா…” என்றவள், அவனுக்கு தட்டு வைத்து ஹாட் பாக்ஸில் இருந்த இட்லியை எடுத்து வைத்தாள். சட்னியை ஊற்றியதும் சாப்பிடப் போனவனின் வலதுகை விரலில் சுற்றப் பட்டிருந்த பேண்டைடு அவள் கண்ணை உறுத்தியது.

“கையில என்ன, எதுக்கு பேண்டைடு…”

“அது நைட் ஆப்பிள் நறுக்கும்போது கத்தி கையைக் கிழிச்சிருச்சு…” என்றவன் இட்லியை சாப்பிடப் போக,

“இ… இருங்க… அதோட சாப்பிட வேண்டாம், நான் ஸ்பூன் தரேன்…” என்றவள், இரண்டு ஸ்பூனை எடுத்து வந்தாள். ஒரு ஸ்பூனால் அவள் இட்லியைக் கட் பண்ணிக் கொடுக்க மறு ஸ்பூனால் அவன் சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடித்தவன், வாயை அலம்பிவிட்டுத் திரும்ப, டவலை நீட்டினாள் ஹர்ஷா. டவலோடு சேர்த்து அவளைத் தன் அருகே இழுக்க, பயத்தில் ஆவென்று  கத்தி விட்டாள் ஹர்ஷா.

சட்டென்று அவளது சிவந்த உதடுகளில் பட்டும் படாமலும் தன் உதட்டைப் பதித்து விடுவித்தான். அவனது வலிய கைகளுக்குள் ஒரு கொடி போல நின்றவள், திகைப்புடன் அதிர்ச்சியில் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவளது குரலைக் கேட்டு ஹாலில் இருந்து குரல் கொடுத்தார் ரேணுகா.

“என்னாச்சு ஹர்ஷு, எதுக்குக் கத்தினே…”

“இங்க ஒரு கரப்பான் பூச்சி மா, அதைப் பார்த்து பயந்துட்டா… இல்ல ஹர்ஷூ, பயந்துட்டியா…” என்றவன், “என்னை ஹிட்லர்னு இந்த உதடு தானே சொல்லுச்சு… அதுக்கு தான் இந்த தண்டனை, இன்னும் எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லிக்கோ… எத்தனை தடவ வேணும்னாலும் தண்டனை கொடுக்க நான் தயார், என் செல்ல சிண்ட்ரல்லா…” என்றவன், அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள் கன்னத்தில் தட்டி விட்டுச் சென்றான்.

அவனது அருகாமையும், மெல்லிய முத்தமும், சிண்ட்ரல்லா… என்ற அழைப்பும் அவளை சிலிர்க்க வைத்து சிலையாக்கி இருந்தன. அடுக்களை சுவரில் சாய்ந்து நின்று மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்தவளை, ரேணுகாவின் குரல் கலைத்தது.

“ஹர்ஷூ, இங்க வாடா…”

என்னம்மா… முக சிவப்புடன் வந்து நின்றவளை மனதுக்குள் ரசித்துக் கொண்டே, “சஞ்சு கூப்பிடறான் பாரு… அவனுக்கு எதோ மெயில் அனுப்பணுமாம், டைப் பண்ணினா கை வலிக்குதுன்னு சொல்லுறான்… ஆப்பிள் கட் பண்ணக் கூடத் தெரியாம விரல்ல காயம் பண்ணி வச்சிருக்கான், நீ மருந்து வச்சு விட்டுட்டு அந்த மெயில் அனுப்ப ஹெல்ப் பண்ணிடுடா…” மாடியிலிருந்து வந்தவர் அவளிடம் சொல்லிக் கொண்டே அவரது அறைக்குள் நுழைந்தார்.

“அச்சச்சோ… மறுபடியும் அவனது அறைக்கா, முன்பு போல ஹிட்லராய் இருந்தால்கூட தைரியமாய் அவன் அருகில் செல்லலாம்… இப்போது காதல் மன்னன் போல அல்லவா அய்யா நடந்து கொள்கிறார்…” சிணுங்கினாலும் அவளது கால்கள் ஆர்வத்துடன் மாடிப்படிக்கு செல்லுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

“ச்சே… என்ன இது, போகப் பிடிக்காதது போல மனசுக்குள் நினைக்கிறேன்… ஆனால் என் கால்கள் அவன் அருகாமையை எதிர்பார்ப்பது போலத் தானாக செல்லத் தொடங்குகிறதே… இனி, என்னவெல்லாம் பண்ணப் போகிறானோ…” ஆர்வமும், எதிர்பார்ப்பும் போட்டி போட நாணத்துடன் அவன் அறைக்கு சென்றாள்.

கதவைத் தட்ட, வந்து திறந்தவன் முறைத்தான்.

“இப்ப எதுக்கு நீ கதவைத் தட்டினே…”

“அம்மா தான், நீங்க கூப்பிடறதா…” என்று இழுத்தவளை, “அது சரி… நீ எதுக்கு நம்ம ரூமுக்கு வரதுக்கு கதவைத் தட்டினேன்னு கேட்டேன்…” என்றவனை ஆச்சர்யத்துடன் நோக்கினாள் அவள்.

அவனை நோக்கி விரிந்த அவளது பெரிய விழிகளை ரசித்துக் கொண்டே அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவன் சோபாவில் அமர வைத்தான். அருகில் அமர்ந்தவன், காதலுடன் கண்ணைச் சிமிட்டி சிரித்தான். அவளது கன்னங்கள் சிவக்க தலையைக் குனிந்து கொண்டாள் ஹர்ஷா.

“கண்களுக்கு விலங்கிடாதே…

கண்கள் வழியே துணையோடு

கவிதை பாடி மகிழட்டும்…

கலந்திடட்டும் காதலோடு…”

அவள் செவி அருகில் கிசுகிசுப்பாய் ஒலித்தது அவனது குரல். கூச்சத்தில் அவள் நெளிய, அவள் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டான் சஞ்சய்.

“ஹர்ஷூ, ரொம்ப தேங்க்ஸ் மா…” என்றான் நெகிழ்ச்சியுடன்.

“எதுக்கு…”

“ரொம்ப வருஷமா, யாரோவா வாழ்ந்திட்டு இருந்த என்னை, நானா மாத்தித் தந்ததுக்கு… எனக்குள் ஒளிந்து கிடந்த என்னை வெளியே கொண்டு வந்ததுக்கு, இந்த நிமிஷம் நான் எத்தனை சந்தோஷமா இருக்கேன் தெரியுமா…. நீ என் வாழ்க்கையை மாத்தித் தந்த சிண்ட்ரல்லா…” தெளிந்த மனதுடன் கூறியவனை திகைப்புடன் ஏறிட்டாள் அவள்.

“சரி… உனக்கு என் மேல இருந்த கோபமெல்லாம் போயிடுச்சா…” என்றான் அமைதியாக.

“கோ… கோபமெல்லாம் இல்லை, வருத்தம் மட்டும் தான்… இப்ப அதுவும் இல்லை…” என்றாள் அவள்.

“இனி நம்ம வாழ்க்கைல உன் மனசு சங்கடப்படுற போல ஒரு நாளும் நான் பேச மாட்டேன்… என்னை விட உன்னை நான் நம்பறேன்… சரியா…”

“சரி அதை விடுங்க… உங்க விரலுக்கு மருந்து போட்டு விடறேன், வாங்க…”

“அப்புறம் ஹர்ஷூ… என்னை நீ ஹிட்லர்ன்னு சொன்னியே, அந்த ஹிட்லருக்கு கூட ஈவா பிரவுன் னு ஒரு அழகான காதலி இருந்தா தெரியுமா… அவ மேல உயிரையே வச்சிருந்தான்… அத்தனை சர்வாதிகாரியான, கொடூரமான ஹிட்லரே காதலுக்கு முன்னாடி தலை வணங்கித் தான் நின்னுருக்கான்… நான் எம்மாத்திரம், உன் அன்பு என்னை நானா மாத்திருச்சு… தேங்க் யூ பேபி…” என்றவன் அவள் கையில் மென்மையாய் முத்தமிட்டான்.

“சீக்கிரமே அம்மாகிட்டே கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா… நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா…” என்றவனை வெட்கத்துடன் பார்த்தவள், அவன் தோளில் சந்தோஷத்துடன் சாய்ந்து கொண்டாள். சிணுங்கலும் சீண்டலுமாய், அழகாய் நீங்கத் தொடங்கியது அவர்களது காதல் நாட்கள்.

இரண்டு நாட்கள் கழிந்திருக்க, மதிய நேரத்தில் அவசரமாய் ஹர்ஷுவை அலைபேசியில் அழைத்தான் சஞ்சய்.

“ஹர்ஷூ… நான் ஒரு வேலை விஷயமா அவசரமா சென்னை கிளம்பறேன், நீ நம்ம வீட்லயே அம்மாவுக்குத் துணையா இரு… அத்தையையும் இங்கே கூட்டிட்டு வந்துடு, எனக்கு இப்ப எல்லாத்தையும் விவரமா சொல்ல நேரமில்லை… அம்மாகிட்டே நான் போன் பண்ணி சொல்லிக்கறேன்… நீ… நீ எல்லாத்தையும் பார்த்துக்க…” என்றான் அவசரமாக.

“எ… என்னாச்சுங்க… அம்மா என்ன விஷயம்னு கேப்பாங்களே…” பதட்டமானாள்.

“நம்ம புது கம்பெனி வாங்குற விஷயமான்னு சொல்லிடு…”

“ம்ம்… உங்களுக்கு டிரஸ் எல்லாம்…” தயக்கத்துடன் இழுத்தாள் ஹர்ஷா.

“சரி… நான் வீட்டுக்கு வந்திட்டே கிளம்பறேன், வச்சிடறேன்…” என்றவன் வைத்து விட்டான். ஹர்ஷா தான் குழம்பி நின்றாள்.

“எதற்கு இந்த அவசரம்… அப்படி என்ன, திடீரென்று முளைத்த வேலை…. சரி அம்மாவிடம் சொல்லி விடுவோம்…” என்றவள் ரேணுகாவிடம் விஷயத்தை சொல்லி அவனது உடைகளை எடுத்து வைத்து முடிக்கும்போது சஞ்சயின் வண்டி கேட்டுக்குள் நுழைந்தது.

டென்ஷனுடன் வீட்டுக்குள் நுழைந்தவனைக் கண்ட ரேணுகா, வேலையில் ஏதோ பிரச்சனை போலிருக்கிறது… என்று புரிந்து கொண்டார்.

சஞ்சயின் முகம் பாறையாய் இறுகிக் கிடைப்பதைப் பார்த்த ஹர்ஷா, “என்னவாக இருக்கும், நம் ஹிட்லரின் முகமே சரியில்லையே…” என நினைத்துக் கொண்டாள்.

“ஏன்… எதற்கு… எங்கே…” என்று விசாரித்த அன்னைக்கு அவசரமாய் பதிலை சொல்லிவிட்டு, அலமாரியில் இருந்து எதையோ எடுத்து வைத்துக் கொண்டவன், பாகில் டிரஸ்ஸை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பி விட்டான்.

“சஞ்சு… வந்தது தான் வந்தே, ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன் டா…” என்றார் ரேணுகா.

“இல்லம்மா வேண்டாம், நான் உடனே போயாகணும்… சரி நான் கிளம்பறேன், நீங்க பத்திரமா இருங்க, ஹர்ஷூ பார்த்துக்கடா…” என்றவன் அவளது தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டி கேட்டைக் கடந்து சாலையில் இறங்கியது.

“ஏய் தீப்ஸ்… சீக்கிரம் வாடி, ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு…” புலம்பிக் கொண்டே நடந்த வர்ஷாவுடன், வண்டியை நிறுத்திவிட்டு ஓடி வந்து சேர்ந்து கொண்டாள் தீபா.

“அந்த சிம்பான்சி லோகு ஆல்ரெடி எல்லாத்துக்கும் கிளாஸ் எடுப்பான்… இதுல நாம லேட்னா அதுக்குத் தனியா கிளாஸ் எடுப்பான்…” சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்து அவசரமாய் முடிக்க வேண்டிய வேலைகளைத் தொடங்கினர்.

அலுவலகத்தில் நுழைந்ததும் தானாய் ஆன் ஆகும் WIFI வழியே அலைபேசியில் மெசேஜ் ரிசீவ் ஆகும் சத்தம் கேட்டது.

“நான் வர்றதுக்கு லேட் ஆனதும் மகாராஜா வாட்ஸ்அப் ல மெசேஜா அனுப்ப ஆரம்பிச்சுட்டார் போலருக்கு…” என சிரித்துக் கொண்டவள்,

“உன்னை அப்புறம் வந்து கொஞ்சுறேன் கண்ணா, முதல்ல வேலையை முடிச்சுடறேன்…” என நினைத்துக் கொண்டே கம்ப்யூட்டரில் கண்ணைப் பதித்திருந்தாள். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தான் அவளுக்கு சற்று ஓய்வு கிடைத்தது.

மொபைலை எடுத்து மெசேஜைப் பார்க்கத் தொடங்கியவளின் முகம் ஏமாற்றத்தில் சுளித்தது. அதில் ஏதேதோ மெசேஜுகள் இருக்க விக்கியின் மெசேஜைக் காணவில்லை.

“ச்சே… ஒரு குட் மார்னிங் மெசேஜ் கூடப் போடலை, காலைல வந்ததும் உன்னைப் பார்த்தா தான் வேலை நல்லாப் போகும்னு இங்கே வந்து டயலாக் பேசுவான்… இன்னைக்கு வரவும் இல்லை… சரி, நாமளே அவன் காபினுக்கு சென்று பார்ப்போம்…” என நினைத்தவள், தீபாவிடம் சொல்லிவிட்டு அவன் காபின் நோக்கி நடந்தாள்.

என்னை எனக்கே புரிய வைத்தாய்…

எனக்குள் உன்னை உணர வைத்தாய்…

எங்கோ தொலைந்திருந்த என்னை

உன் கண்ணில் கண்டு கொண்டேன்…

உன் இதய சிறைக்குள் குடியிருத்தி

உன் ரசிகனாய் மாற வைத்தாய்…

உன்னோடு நான் பேசிடும் நிமிடங்கள்…

உயிரோடு நான் வாழ்ந்த தருணங்கள்…

என் மனதில் குடியிருக்க வந்தவளே…

என் மன இருளை நீக்க வந்த தேவதையே…

என் வாழ்வில் வெளிச்சம் தொடர்ந்திட

என்னோடு கை கோர்க்கும் நாள் எந்நாளோ…

Advertisement