Advertisement

இதயம் – 19

ஓ பட்டர்பிளை பட்டர்பிளை…

ஏன் விரித்தாய் சிறகை…

இரவு உணவு முடித்து லாப்டாப்பில் மூழ்கி இருந்த விக்கி, அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் புன்னகையுடன் அதைக் கீழே வைத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

“ஹாய் டார்லிங், என்ன இந்த நேரத்துல…”

“ஆமாண்டா பையா… நீ தான் பெரிய உத்தியோகஸ்தன் ஆகிட்டியே, வேலை நேரத்துல கூப்பிட்டா, எப்பவும் பிஸியா இருக்கேன்… அப்புறம் கூப்பிடறேன்னு வச்சிடறே, அதான் இப்பக் கூப்பிட்டேன்… உன் கிட்டே பேச அம்மாக்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைக்குமா…” என்றார் சிரிப்புடன்.

“ஓ… நோ மம்மி… என்ன இது, என்னைக் கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க… குரல்ல வேற டன் கணக்கா சந்தோஷம் வழியுது, என்ன விஷயம்…” என்றான் அவன் சிரிப்புடன்.

“அதை சொல்லதாண்டா கூப்பிட்டேன்… உன் வார்த்தை பலிக்கப் போகுது, நீ சொன்ன மாதிரி மகாலட்சுமியே உன் அண்ணியா வரப் போறா… உன் சாமியார் அண்ணன் கல்யாணத்துக்கு தலையாட்டிட்டான்…” என்றார் சந்தோஷத்துடன்.

“வாவ்… வாட் எ கிரேட் நியூஸ் மாம், அண்ணன் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரா… அப்ப என் லைன் கிளியர்னு சொல்லுங்க…. சூப்பர், இந்த அதிசயம் எப்படி நடந்துச்சு டார்லிங்…” குதித்தான் விக்கி.

“அதெல்லாம் பெரிய கதைடா விக்கி பையா… நீ முடிஞ்சா ஒரு எட்டு வீட்டுக்கு வா… ஹர்ஷூ சும்மா கெத்தா, ஸ்டைலா, உன் அண்ணனை மிரட்டிட்டா, தெரியுமா… ஐயா தொபுக்கடீர்னு அவ கிட்டே சரணடைஞ்சுட்டார்…”

“ஹஹா… என்ன டார்லிங் சொல்லறீங்க, நம்ம அண்ணனா… எப்படிம்மா, அச்சோ எனக்கு நம்பவே முடியலையே…” என்றான் அவன்.

“நம்புடா நம்பு, எல்லாம் உண்மைதான்… இங்கே ரெண்டு மூணு நாள்ல நிறைய நடந்திருச்சு… ஆனா எல்லாமே நல்லதுக்குதான், எப்படியோ என் மகன் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்… அதும் எனக்குப் பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டான்… எனக்கு இனி செத்தாலும் சந்தோசம் தான்டா…” என்றார் கண்கள் கலங்க.

“அச்சோ… என்ன டார்லிங் நீங்க, இப்படில்லாம் பேசறீங்க… அப்ப உங்க சின்ன மகனைப் பத்தி யோசிக்க மாட்டீங்களா… பெரிய மகன் மட்டும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆனா போதுமா…” என்று சிணுங்கினான் அவன்.

அதைக் கேட்டு சிரித்தவர், “நீ கில்லாடிடா… உன்னைப் பத்தி எனக்குக் கவலை இல்லை, நான் பண்ணி வைக்கலைனாலும் நீயே ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்திடுவே… உன் அண்ணன் அப்படியா, சரி… அடுத்த வாரம் அமேரிக்கா கிளம்பப் போறேன்னு சொன்னே… எப்ப வீட்டுக்கு வர்றே, உன் அண்ணனைப் பார்க்க வரலியா…”

“ம்ம்… இங்கே கொஞ்சம் பிஸியா இருக்கு மாம், முடிச்சிட்டு கேப் கிடைச்சா வர்றேன்… இல்லன்னா, அமேரிக்கா போயிட்டு வந்து ஒரு வாரம் உங்களோடவே இருக்கேன்… சரியா…”

“ம்ம்… உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா… எவ்ளோ நாளாச்சு பார்த்து, நீ இங்கயே நம்ம ஆபீஸைப் பார்த்துக்காம அங்க போயி உக்கார்ந்துட்டு இருக்கே…” சலித்துக் கொண்டார் அவர்.

“என்ன டார்லிங்…. இதுவும் நம்ம கம்பெனி தானே, இன்னும் ஒரு மாசத்துல இந்த ஐடி சொலூஷன் நம்ம SV Group of Companies ல சேரப் போகுதே… அப்புறம் நாம தானே இதுக்கு ஓனர், கொஞ்ச நாள் வேலை செய்யறவங்களோட பழகறதுக்கு வேண்டி தானே அண்ணன் என்னையும், ராஜீவையும் இங்கே வொர்க் பண்ண சொன்னார்… எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ்கு வேண்டி ஒன் இயர் வேலை செய்ய சொன்னார்… அமேரிக்கா போயிட்டு வந்ததும் நம்ம பேருக்கு கம்பெனியை மாத்தப் போறோம், அதுக்கான வொர்க்கும் நடந்திட்டு இருக்கு… அதுக்குப் பிறகு நான் நினைச்ச நேரமெல்லாம் என் டார்லிங்கைப் பார்க்க பறந்து வந்திட மாட்டேனா…” என்றான் அவன்.

“ம்ம்… அப்பவும் நீ அங்கே தானே இருக்கணும்… இந்த ராம் அண்ணாகிட்டே சஞ்சய்க்கு கல்யாணம் முடிவான விஷயத்தை சொல்லணும்… அவரும் எத்தனை நாள் தான் வெளிநாட்டிலேயே இருப்பார்… கொஞ்ச நாள் இங்கே வந்திருந்து சஞ்சய் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சுக் கொடுக்க சொல்லணும்…” என்றார் யோசனையுடன்.

“ம்ம்… அங்கிள்க்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப் படுவார் மாம்… சொல்லுங்க, சரி… நீங்க உங்க ஹெல்த்தை பார்த்துக்கங்க… இனி உங்களுக்கு சந்தோஷத்துலயே ஹெல்த் பிராப்ளம் எல்லாம் விலகி ஓடப் போகுது… அண்ணி வேற கூடவே இருந்து பார்த்துக்குவாங்க… என் டார்லிங் இன்னும் ஹெல்த்தியாகிடுவீங்க… சரி, அண்ணா என்ன சொல்லுறார்… இப்பவே அண்ணியைக் கூட்டிட்டு வரலாம்னு சொன்னாரா…”

“ஹஹா… ஹர்ஷா வேண்டாம்னு சொல்லி இருந்தா அவன் தூக்கிட்டே வந்திருப்பான் போலருக்கு… இப்பதான் தூங்கப் போனான், சரி நீ தூங்கு… டைம் ஆச்சு, நான் வச்சிட்டா… முடிஞ்சா கிளம்பறதுக்கு முன்னாடி வந்துட்டுப் போடா விக்கி…” என்றார் அவர் ஆதங்கத்துடன்.

“ம்ம்… சரி டார்லிங், ஐ வில் டிரை… ஓகே டேக் கேர் பை…” என்றவன் அலைபேசியை வைத்துவிட்டான். அவனுக்கும் சந்தோஷமாய் இருந்தது.

ஹர்ஷாவைக் கண்டவுடனே அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது… ஒரு மரியாதையோடு கூடிய பிடித்தம், “அண்ணனின் சுபாவத்துக்கு அவளைப் போன்ற பொறுமையான பெண் தான் சரி… இதை உடனே பட்டர்பிளை கிட்டே சொல்லணுமே…” என நினைத்தவன், அவளை அழைக்க அது அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

“சரியான கும்பகர்ணி… கொஞ்ச நேரம் முன்னாடி தானே பேசினேன்… அதுக்குள்ள  போனை ஆப் பண்ணிட்டு தூங்கிட்டா போலருக்கு… சரி… இந்த சந்தோஷத்தை ராஜீவ் கிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப் படுவான்…” என நினைத்தவன், ராஜீவின் அறைக்கு சென்றான்.

அடுத்த அறையில் குப்பறப் படுத்து தலையணையைக் கட்டிப் பிடித்து உறங்கிக் கொண்டிருந்த ராஜீவின் முதுகில் ஒரு அடி வைத்து எழுப்பினான்.

“ஆ… ஐயோ அம்மா…” என்று வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவனை நோக்கி, “தூங்கிட்டு இருந்தியா மச்சி…” என்றான் விக்கி.

பரிதாபமாய்ப் பார்த்த ராஜீவ், “ஏண்டா கேக்க மாட்ட… ராத்திரி பன்னெண்டு மணிக்கு வந்து தூங்குறவனை எழுப்பிட்டு இப்படி கேக்கறியே, இது உன் தப்பில்லைடா… என் தப்பு, உன்னை மாதிரி பிசாசுப் பயலோட ராத்திரி ஒரே வீட்ல தங்கி இருக்கும்போது கதவைத் தாழ்ப்பாள் போட்டு படுக்கணும்னு கூடத் தெரியாத அடிமுட்டாளா இருக்கனே… என் தப்புதான், விஷயத்தை சொல்லு…” என்றான் எரிச்சலுடன்.

“டேய் மச்சி… என்னடா சலிச்சுக்கறே, அம்மா கூப்பிட்டாங்க தெரியுமா…”

“எதுக்கு, என்னை எழுப்பி விடச் சொல்லியா…” சலிப்புடன் கேட்டான்.

“டேய் வேதாளம்… அண்ணன் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாராம்…  பொண்ணு கூட முடிவாகிருச்சாம், நாம அமேரிக்கா போயிட்டு வந்ததும் கல்யாணம்னு சொன்னாங்க… இனி நம்ம ரூட்டும் கிளியராகப் போகுது, கல்யாணத்துக்கு கண்டிப்பா உன் அப்பா இந்தியா வரப் போறார்… அப்படியே நம்ம கல்யாணத்தையும் பேசி முடிவு பண்ணிடலாம்… நான் ரொம்ப ஹாப்பி மச்சான்…”

“டேய்… நிஜமா தான் சொல்லறியா, இல்ல கனவு ஏதாவது கண்டியா… அம்மா அண்ணனுக்கு கல்யாணம்னு சொன்னாங்களா…” என்றான் ராஜீவ் நம்ப முடியாமல்.

“அட ஆமாண்டா மச்சி… நான் தான் தூங்கவே இல்லையே, லாப்டாப்புல வொர்க் பண்ணிட்டு இருந்தேன்… அம்மா வேற அமெரிக்கா கிளம்பறதுக்கு முன்னாடி வந்துட்டு போக சொல்லுறாங்க… எனக்கும் அம்மாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிட்டு அண்ணனுக்கும் வாழ்த்து சொல்லிட்டு போனா நல்லாருக்கும்னு தோணுது… கேப் கிடைச்சா போயிட்டு வந்திடலாம் டா மச்சி…”

“ஓகே டா… அண்ணனுக்கு கல்யாணமா, என்னால நம்பவே முடியலை… ஆண்ட்டி என்ன மாயமந்திரம் போட்டு இதுக்கு ஒத்துக்க வச்சாங்க…”

“எல்லாம் காதல் மந்திரமா தான் இருக்கும்… நாம அதை அப்புறம் விசாரிச்சுக்கலாம், எப்படியோ… என் டார்லிங் ரொம்ப ஹாப்பியா இருக்காங்க, எனக்கு அது போதும்… சரி, எனக்கு தூக்கம் வருது… என்னை கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணாதே…” என்றவன் அவனது அறைக்கு நடந்தான்.

“ஏண்டா சொல்ல மாட்டே… நல்லா தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி விட்டுட்டு, உன்னை எழுப்பக் கூடாதா… ரொம்பவே விவரம் தான்… போடா, போயி கமுந்தடிச்சு நல்லா படுத்துத் தூங்கு…” என்றவன், அவனது கட்டிலில் சென்று விழுந்தான்.

“ஏய்… சில்வண்டு… என் அப்பா கல்யாணத்துக்கு வரும்போது உன் அம்மாகிட்டே நம்ம கல்யாணத்தை முடிவு பண்ணி உன்னை தூக்கிட்டுப் பறக்கப் போறேன்…” சுகமாய் கற்பனையில் மூழ்கியவனுக்கு உறக்கம் தான் விலகிப் போயிருந்தது.

அடுத்த நாள் காலையில் ஹர்ஷாவின் ஸ்கூட்டியைக் கண்டதும், செக்யூரிட்டி வேகமாய் வந்து கேட்டைத் திறந்து விட்டது போல அவளுக்குத் தோன்றியது. கூச்சமும், தயக்கமும் போட்டி போட வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு சஞ்சுவின் கார் நிற்பதைப் பார்த்துக் கொண்டே படி ஏறப் போனவளுக்கு, அவள் அங்கிருந்து அழுது கொண்டே வீட்டை விட்டு இறங்கிச் சென்றது நினைவில் வந்து நெஞ்சில் சுமையாய் அழுத்தியது. அந்த வார்த்தைகளின் கூர்மை அவள் மனதை ரணமாக்கி இருந்தது. இனி அதை நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது என நினைத்தவள், அதை ஒதுக்கிவிட்டு அமைதியாய் வீட்டுக்குள் நுழைந்தாள்.

“ஹர்ஷூ… வந்துட்டியாடா, வா வா…” பூஜையறையில் இருந்து வெளியே வந்த ரேணுகா, “இந்தா குங்குமம் வச்சுக்க…” என்று தட்டை நீட்டினார்.

அவள் நெற்றியில் இட்டுக் கொண்டதும், “ராணி, யார் வந்திருக்கா பாரு…” என்று அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தார்.

“வா கண்ணு… அம்மா எல்லாம் சொன்னாங்க, எனக்கும் ரொம்ப சந்தோஷம்… கேசரி செய்திருக்கேன், எடுத்திட்டு வரேன்…” என்றவர், அடுக்களைக்குள் நுழைய, ஹர்ஷா எதுவும் பேசாமல் அமைதியாய் கூச்சத்துடன் நின்றாள்.

“என்னடா… எதுவுமே பேச மாட்டேங்கறே, புதுசா வந்த மாதிரி நிக்கற…” புதிதாய் வந்தது போல தான் இருந்தது அவளுக்கு. முதன் முறை வரும்போதும் கூட உற்சாகமாய் உணர்ந்தவளுக்கு இப்போது ஏனோ சற்று மூச்சு முட்டுவது போல உறுத்தலாய்த் தோன்றியது. ரேணும்மா அவளையே பார்ப்பதை உணர்ந்தவள் தன்னை சரியாக்கிக் கொள்ள முயன்றாள். அதற்குள் ராணிம்மா கேசரியை சிறு கப்பில் எடுத்து வந்தார்.

“இந்தாடா… என் மருமகளா முதன் முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்கே, கேசரி சாப்பிடு…” என்ற ரேணுகா, ஒரு கப்பை அவளிடம் நீட்டினார்.

அவள் அதை வாங்கிக் கொண்டதும், அடுத்த கப்பை அவர் எடுத்துக் கொள்ள, “அம்மா… நீங்க சாப்பிடப் போறீங்களா, வேண்டாம்… இப்பதான் உடம்பு சரியாகிருக்கு…” தடுத்தாள் ஹர்ஷா.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா… இன்னைக்கு நான் எத்தனை சந்தோஷமா இருக்கேன், வேணும்னா கேசரி சாப்பிட்டுட்டு ஒரு மாத்திரை அதிகமாப் போட்டுக்கறேன்… இனி என் உடம்புக்கு எதுவும் வராது… நீ பயப்படாதே…” கூறிக் கொண்டே கேசரியை எடுத்து வாயில் வைத்தார்.

“ஏன் ராணி… இன்னும் கொஞ்சம் நெய் ஊத்தி இருக்கலாமே… சர்க்கரை கூடக் கொஞ்சம் பத்தலை…” சொல்லிக் கொண்டே அடுத்தடுத்து ஸ்பூனில் எடுத்து வேகமாய் சாப்பிடத் தொடங்கினார்.

அதைக் கண்டதும், ராணி சிரிப்புடன் ஹர்ஷாவைப் பார்க்க அவளுக்கும் சிரிப்பு வந்தது.

“சரி சரி… நீங்களும் சாப்பிடுங்க, எனக்கு வயிறு வலிக்கப் போகுது…” கூறிக் கொண்டே அதைக் காலி செய்யத் தொடங்கினார் ரேணுகா.

“ராணி… சஞ்சுவுக்கு கேசரி எடுத்திட்டு வா, அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்… ஹர்ஷூ, நீ அவனுக்கு ரூம்ல கொண்டு போயி கொடுத்திடுடா… அவன் எதோ வேலையா இருந்தான்…” என்றார் ரேணுகா.

“அய்யய்யோ… நான் அவன் அறைக்கு செல்ல வேண்டுமா…” என நினைத்ததுமே அவளுக்கு உதறலெடுத்தது. அவளது தயக்கம் ரேணும்மாவிற்கும் புரிந்தே இருந்தது. அதை மாற்றுவதற்காகவே அவளை அனுப்ப நினைத்தார்.

ராணிம்மா கேசரிக் கப்பை அவளிடம் புன்னகையுடன் நீட்டி, “இந்தா கண்ணு, தம்பிக்கு குடு…” என்றார். தயக்கத்துடன் வாங்கிக் கொண்டவள், மாடிப் படியை நோக்கி நடந்தாள்.

அவனது அறைக்கு முன்னால் நின்றவள் தயக்கத்துடன் கதவில் கை வைக்க, அதற்குள் உள்ளிருந்து கதவைத் திறந்தான் சஞ்சய். கதவுக்கு முன்னில் நின்றவளை எதிர்பார்க்காதவனின் முகம் மலர்ந்தது.

“உள்ளே வா ஹர்ஷூ…” வழி விட்டு நிற்க கேசரி கப்பை நீட்டியவள்,

“அம்மா கொடுத்திட்டு வர சொன்னாங்க…” என்றாள் வெளியே நின்று கொண்டே.

“என் கை அழுக்கா இருக்கு,  நீயே உள்ளே வச்சிரு…” என்றான் அவன்.

இதற்கு முன் அவள் அவனது அறைக்குள் எத்தனையோ முறை வந்திருந்தாலும் இன்று வருவதற்கு தயக்கமாய் இருந்தது. குனிந்த தலையுடன் நின்றிருந்தவளை முதன் முறையாய் ரசனையோடு பார்த்தான் சஞ்சய்.

ஈரஜடை போட்டு அவிழ்த்து விட்டிருந்த கூந்தல் இடுப்புக்குக் கீழே இருக்க, கண்களுக்கு லேசாய் மை தீட்டி சின்னதாய் நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். அவனது தோள் வரை உயரம். அடக்கமான, மரியாதை தோன்றும் அழகு. அவன் அவளையே குறுகுறுவென்று பார்ப்பதை உணர்ந்தவள், வேகமாய் அவன் அறைக்குள் வந்து டீப்பாயின் மீது கேசரியை வைத்து மூடி வைத்து திரும்பினாள்.

Advertisement