Advertisement

“அ… அதுவந்துமா…” தயங்கியவள், அன்னையிடம் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வாரோ எனத் தயங்கினாலும் சொன்னாள்.

“அம்மா… நம்ம ரேணும்மாக்கு கொஞ்சம் பிபி ஜாஸ்தி ஆகி நேத்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க… நைட் அவங்களைப் பார்த்துக்க ஆளில்லை… அதான் நான் நைட் ஷிப்ட் எடுத்து பார்த்துகிட்டேன்… என்னைப் பொண்ணு போலப் பார்த்துக்குவாங்க, ரொம்ப அன்பானவங்க… அவங்களுக்கு ஒரு உதவியா இருக்கட்டும்னு தான் இருந்தேன் மா… இங்கே பக்கத்து வீட்ல சுசீலா இருந்ததாலே தான்,  இல்லைன்னா நான் வந்திருப்பேன்…” என்றாள்.

“ம்ம்… அதெல்லாம் சரி, இப்படி அன்பானவங்க, நல்லவங்க வீட்டுல வேலை செய்யாம ஏன் விட்டுட்டு வந்தே…” என்றார் உமா.

அவரது அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லுவதென்று புரியாமல் விழித்தவள், சஞ்சயைப் பற்றி அவரிடம் குற்றம் கூறப் பிடிக்காமல் பேச்சை மாற்றினாள்.

“அம்மா அங்கே வேலைக்குப் போக வேண்டாம்னு தோணுச்சு, விட்டுட்டேன்… அதை விடுங்க, வர்ஷூ போன் பண்ணினாளா… அவ வேலை எல்லாம் எப்படிப் போகுதாம்…” என்றாள் அவர் தட்டில் தோசையை வைத்துக் கொண்டே.

“ம்ம்… அவகிட்டே பேசினேன்… உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்குறதா சொன்னேன்… ரொம்ப சந்தோஷப்பட்டா, உடனே உன் கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்லுறா…”

“என்னம்மா சொல்லறிங்க… எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டிங்களா, பார்க்கப் போறேன்னு தான நேத்து சொன்னிங்க…”

“ம்ம்… நேத்து ஒரு சம்மந்தம் வந்துச்சு, எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு… மாப்பிள்ளையோட அம்மா ரொம்ப தங்கமானவங்க, நல்ல குடும்பம்… எந்தக் குறையும் சொல்ல முடியலை, உன்னை அவங்களுக்கும் பிடிச்சிருக்கு… அவர் தான் இந்த வீட்டு மாப்பிள்ளைன்னு நான் முடிவே பண்ணிட்டேன்…” என்றார்.

அதைக் கேட்டவளின் முகம் கலவரமாக அதைப் பார்க்காதது போல சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

“உனக்கும் கண்டிப்பா அவங்களைப் பிடிக்கும்… எனக்கு தோசை போதும்மா, இரு… மாப்பிள்ளை போட்டோ எடுத்திட்டு வரேன்…” என்றவர் எழுந்து உள்ளே சென்றார்.

அவள் என்ன செய்வதென்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். “சரி… எப்படி இருந்தாலும் பெண் பார்க்க நேரில் வந்து தானே ஆகவேண்டும்… சில பல நிபந்தனைகளைப் போட்டு ஓட வைத்து விட வேண்டியது தான்…” என நினைத்துக் கொண்டாள்.

ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்தவர், “அப்புறம் வர்ஷூ சொன்னா… நீ மாப்பிள்ளை கிட்டே எந்த நிபந்தனையும் போடக் கூடாதாம்… உன் கல்யாணத்துக்குப் பிறகு நான் அவளோட சென்னை வந்திடணுமாம், இனி அவதான் என்னைப் பார்த்துக்குவாளாம்… நீ நிம்மதியா கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்துவியாம்…” என்றார். அதைக் கேட்டவள் திகைத்தாள். இதைத்தானே சொல்லி கல்யாணத்துக்கு அவள் கொக்கி போட நினைத்தாள்.

“என்னம்மா சொல்லறீங்க… நீங்க என்னோட தான் இருக்கணும், அதுக்கு ஒத்துக்கிற மாப்பிள்ளையைத் தான் பார்க்கணும்… அவ சின்னப் பொண்ணு, அவ சொல்லுறான்னு பேசறீங்க…” என்றாள் ஹர்ஷா.

“எனக்குத் தெரியும், நீ இப்படிதான் சொல்லுவேன்னு… இந்த மாப்பிளை வீட்டுக்காரங்க அதுக்கும் சம்மதம் சொல்லிட்டாங்களே… இது தெரிஞ்சாலே நீ சம்மதிச்சிடுவேன்னு எனக்குத் தெரியும்டா…” என்றார் அவர் சந்தோஷத்துடன்.

ஹர்ஷா அதற்கு மேல் என்ன சொல்லுவதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, “இந்தா… மாப்பிள்ளை போட்டோவைப் பாரு…” அவள் கையில் ஒரு போட்டோவைத் திணித்தார்.

அவள் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றிருக்க, “மாப்பிள்ளை பார்க்க ரொம்ப லட்சணமா, வாட்ட சாட்டமா இருக்கார்… உனக்கு சரியான மேட்சிங்காவும் இருப்பார்மா,  பாரு…” என்றார் உமா.

“அ…அம்மா… ப்ளீஸ், எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாமே…” என்றாள் தயக்கத்துடன்.

“ஏன்… ஏன் வேண்டாம்…”

“அ…அது வந்து…” என்று இழுத்தவளை, “நீ அந்தப் பையனை லவ் பண்ணறியா…” என்றார்.

சடாரென்று அவரைப் பார்த்தவள், “வ…வந்தும்மா, எந்தப் பையன்…” என்று திணறினாள்.

“அதான் அந்த ரேணும்மா பையன், சஞ்சய் தானே அவர் பேரு…” என்றார் அவர்.

“அது வந்தும்மா, அப்படி எதுவும் இல்லை…” என்றவள்,

“சஞ்சயின் மீதுள்ள தன் விருப்பத்தை ஒதுக்கி வேறொருவனை கரம் பிடிக்க என்னால் முடியுமா… நடக்காதென்று நினைத்த ஒரு விஷயத்தை நடத்த அவர்களே முன்வந்த போது தான் வீராப்பாய் வேண்டாம் என்று கூறியது தவறோ, இப்போது என்ன செய்வது…” என மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“சரி… அப்ப நான் பார்த்த இந்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிடலாமா…” என்ற உமா, “நீ முதல்ல போட்டோவைப் பாரு…..” என்று கவரில் இருந்து எடுத்து நீட்டினார்.

தயக்கத்துடன் அதை வாங்கியவளை, “பார்த்துட்டு சொல்லுடா…” என்றார் உமா. பார்க்கப் பிடிக்காமலே அதில் பார்வையைப் பதித்தவள் சுகமாய் அதிர்ந்தாள்.

அவளை நோக்கி கஞ்சத் தனமான புன்னகையுடன் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தான் அவளது ஹிட்லர். அதை எதிர்பார்க்காதவள் முகத்தில் சட்டென்று வந்த நிம்மதியையும், சந்தோஷத்தையும் கண்ட உமாவின் மனதும் நிறைந்தது.

“என்னம்மா… மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா, உனக்கு சம்மதம் தானே…” என்றார் சிரிப்புடன்.

“அம்மா… இவர் போட்டோ எப்படி…” என்றாள் அவள் அதைப் பார்த்துக் கொண்டே.

“நேத்து ராத்திரி அந்தப் பிள்ளை இங்கே வந்திருந்தார்… வீட்டுல நடந்ததையும், உன்மேல கோபப்பட்டு கண்டபடி திட்டுனதையும், அவர் அம்மா வந்து உன் மேல தப்பில்லைன்னு தெரிஞ்சதும் மன்னிப்பு கேட்டு கூட்டிட்டுப் போக வந்ததையும், நீ வீட்டுக்கு வராம மருந்து குடிக்க மாட்டேன், சாப்பிட மாட்டேன்னு அந்தம்மா உடம்புக்கு முடியாமப் போனதையும் எல்லாம் சொன்னார்…”

“அவங்க உன்கிட்டே மருமகளா வந்திடுன்னு சொன்னதுக்கு நீ மறுத்ததையும் சொன்னார்… நீ ஒத்துகிட்டா கூட அவருக்குப் பெருசா இருந்திருக்காதாம், ஆனா மனசுக்குள்ளே அவர் மேல விருப்பம் இருந்தும், பணத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டேன்னு ஒரு அவச்சொல் உன்னோட அன்புக்கு வந்திடக் கூடாதுன்னு நீ சொன்னது அவரை ரொம்ப பாதிச்சிருச்சாம்… என்கிட்டயும் மன்னிப்புக் கேட்டு, உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பப் படறதா சொன்னார்… அவர் மேல உனக்கும் ஒரு விருப்பம் இருக்குன்னு எனக்குத் தோணுச்சு…”

“உரிமை உள்ள இடத்துல ஆம்பளைங்க கொஞ்சம் அதிகமா கோபத்தைக் காட்டறது சகஜம் தான்… அது போல தான் அவரும் பேசி இருக்கார்னு புரிஞ்சுது, அதான் ஒத்துகிட்டேன்… அவர் போட்டோவை வாங்கி உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டி தான் இவ்ளோ பேசினேன்… உன் தயக்கமே அவர் மேல உனக்கு இருக்குற விருப்பத்தை சொல்லிருச்சு… இப்ப நீ சொல்லுறதுல தான் அவரை நான் மாப்பிள்ளைன்னு சொல்லுறதா, இல்லை உன் சார்னு சொல்லுறதான்னு முடிவு பண்ணனும்…” என்றார் அவர்.

“திருட்டு ஹிட்லர்… இத்தனை வேலை பண்ணி இருக்கியா நீ…. ஒண்ணுமே தெரியாத போல பாவமா பார்த்துகிட்டு ஹாஸ்பிடல்ல அப்படி நின்னுகிட்டு, இங்கே வந்து மாமியாரைக் கவுத்துட்டு போயிருக்கியா…” என்று நினைத்தவளுக்கு அவன் மீதுள்ள கோபமெல்லாம் மறைந்திருந்தது. சந்தோஷத்தில் உடனே அவனைக் காணவேண்டும் போலத் தோன்ற, கையில் உள்ள போட்டோவைப் பார்த்தாள்.

“இருந்தாலும் உங்க மாப்பிள்ளைக்கு சிரிக்கக் கூட இத்தனை கஞ்சத்தனம் கூடாதும்மா…” என்று தன் மனதில் உள்ளதை சொல்லாமல் சொல்லிவிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.

அதைக் கேட்டதும் உமாவின் முகமும் பெரிதாய் மலர்ந்தது. உடனே அவர் ரேணும்மாவுக்கு தெரிவிக்க, அவர் சஞ்சயுடன் ஹர்ஷாவின் வீட்டுக்கு வந்துவிட்டார்.

“ஹர்ஷூம்மா… என் ஆசையை நிறைவேத்தி வச்சியே, இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா… என் பையன் இப்படியே இருந்திருவானோன்னு ரொம்ப பயந்தேன்… அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமையப் போகுதுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு… நீ கிளம்பு, நம்ம வீட்டுக்குப் போகலாம்… சம்மந்திம்மா, என் மருமகளைக் கூட்டிட்டுப் போறேன்…” என்றார் அவர்.

“சம்மந்திம்மா… முதல்ல அவ வேலைக்கு வேண்டி வீட்டுக்கு வந்துட்டு இருந்தா, இப்ப கல்யாணம் முடிவான பின்னால எப்படி வீட்டுக்கு அனுப்பறது…” தயங்கினார் உமா.

“சம்மந்திம்மா… இப்ப உரிமையோட என் மருமகளாவே வீட்டுக்கு வரட்டுமே, ஹர்ஷா இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… எப்பவும் போல அவ வந்துட்டுப் போகட்டும்… கல்யாணம் நிச்சயம் பண்ணினதும் வீட்டுல இருக்கட்டும்…” என்றார் ரேணுகா. ஹர்ஷா நாணமும், சந்தோஷமும் போட்டி போட ரேணுகாவின் அருகில் அமர்ந்திருந்தாள்.

சஞ்சயும் ஹர்ஷாவையே ஆவலுடன் பார்ப்பதைக் கண்ட உமா, “சரி… சம்மந்திம்மா… இவ இனி உங்க வீட்டுப் பொண்ணு… உங்களுக்கு என்ன தோணுதோ,  பண்ணுங்க…” என்று ஒத்துக் கொண்டார்.

“சஞ்சய்… அந்த கவரை எடு….” என்றவர், “என் மருமகளுக்காக மருமகளே எடுத்துட்டு வந்த சேலை… நீயே இதை அவளுக்கு குடு… அன்னைக்கு கொடுக்கும்போது கல்யாண மாப்பிள்ளை தான் புடவை கொடுப்பாங்கன்னு எதோ சொன்னியே, இப்ப வாங்கிக்கோ…” என்று சிரித்தார்.

அவள் நாணத்துடன் அதை வாங்கிக் கொண்டாள். ஆனால் சஞ்சயைப் பார்க்கவே இல்லை… அவளது பார்வை தன் மேல் விழாதா… எனக் காத்துக் கிடந்தான் சஞ்சய்.

“அப்புறம் பிரீத்தி உங்க ரெண்டு பேருக்கும் எதோ பரிசு கொடுத்தாளாமே… ரெண்டு பேரும் திறந்து பார்த்திங்களா, இல்லையா…” என்றார்.

“அச்சச்சோ… அது கார்லயே இருக்கும்மா…” என்றவன், “எடுத்திட்டு வந்திடறேன்…”  என்று வெளியே சென்றான்.

இருவரின் பேர் எழுதிய அந்தப் பரிசுப் பொருளை எடுத்து வந்தவன், ஹர்ஷாவிடம் அவளுடையதை நீட்டினான்.

“ரெண்டு பேரும் உள்ளே என்ன இருக்குன்னு பாருங்க…” என்றார் ரேணுகா.

உள்ளே சின்னதாய் ஒரு நகைப் பெட்டி இருந்தது. இருவரும் அதைத் திறக்க, இரண்டு இதயங்கள் ஒன்றோடு ஒன்று இணைவது போல அழகாய் கண்ணைப் பறித்தது மோதிரம்.

“உங்களோட இதயத்தோட விருப்பம் என்னன்னு உங்களுக்கு முன்னாடி எங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு… உங்களுக்கு இது பிரீத்தியோட கல்யாணப் பரிசு,  இதயமும், இதயமும் இப்பவாவது இணைஞ்சதே…” என்று சிரித்தார் ரேணுகா.

வாள் வீச்சை விழியில் கொண்டு

வாட்டி வதைக்கிறாய் என்னை…

விழிகளுக்கு விலங்கிடு பெண்ணே…

விழுந்து தொலைவது என் இதயம்…

வார்த்தை வாள் கொண்டு

வதைத்திட்டேன் நான் உன்னை…

விழியின் வாளை நீ சுழற்றாதே

வீழ்வது உனக்குள் இருக்கும் நானே…

ஆயிரம் வார்த்தைகள் தராத வலியை

உன் விழிகளின் உதாசீனத்தில்

உணர்ந்து கொண்டேன் நான்…

என் உணர்வும் நீயென

உணர்ந்து விட்டேன் பெண்ணே…

Advertisement