Advertisement

இதயம் – 18

ரேணுகா சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தாலும் நம்ப முடியாமல் அவரை குழப்பத்துடன் ஏறிட்டவள், “என்னம்மா சொல்லறீங்க…” என்றாள் அதிர்ச்சியுடன்.

“என்னோட மூத்த மருமகளா நம்ம வீட்டுக்கு வருவியான்னு கேட்டேன்…” என்றார் அவர் புன்னகையுடன். அவர் சொன்னதும் சட்டென்று சஞ்சயை ஏறிட்டாள் ஹர்ஷா.

“அவனை என்ன பாக்குறே, இது என் முடிவு… அவன் இதுக்கு கட்டுப்படுவான்னு நம்பறேன், உன்னோட சம்மதம் தான் வேணும்…” என்றார் அவர்.

முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் நின்றவளின் மனதுக்குள் புயல் அடித்துக் கொண்டிருந்தது.

அவள் கேட்க விரும்பிய வார்த்தை. “ரேணும்மாவின் மருமகளாய், சஞ்சயின் மனைவியாய் அந்த வீட்டுக்குள் வலம் வர விரும்பிய தன் இதயத்தின் விருப்பம், எல்லாமே நிறைவேறிவிடும்… சம்மதம்… என்ற ஒரு வார்த்தையை மட்டும் அவள் சொல்லிவிட்டால்… ஆனால்…” என நினைத்தவள், அவரை ஏறிட்டாள்.

“என்னை மன்னிசிடுங்கம்மா… அன்பு மட்டுமே நிறைந்திருக்கும் உங்களுக்கு மருமகளா வர்றதுக்கு எந்தவொரு பொண்ணும் பாக்கியம் பண்ணி இருக்கணும், இந்த வார்த்தையை ரெண்டு நாள் முன்னாடி நீங்க கேட்டிருந்தா இந்த உலகத்துலயே என்னை விட யாரும் சந்தோஷப்பட்டிருக்க முடியாது… ஆனா, இப்ப… இந்த வார்த்தை எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலை…”

“ஹர்ஷூ… நீ என்னம்மா சொல்லறே…” ரேணுகாவுடன் சஞ்சயும் அவள் முகத்தை அதிர்ச்சியுடன் ஏறிட்டான்.

“ஆமாம்மா, எப்ப என் அன்பை பணத்துக்காக நான் போடுற வேஷம்னு சந்தேகப் பட்டாரோ இதுக்கு மேல என்ன இருக்கு… அவரை எனக்குப் பிடிச்சிருந்துச்சு… எவ்ளோ தான் கோபத்தை காட்டினாலும் அதுக்குள்ளே ஒளிஞ்சிருந்த அன்பையும், அக்கறையையும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது… குடும்பத்துக்காக தன் சுக துக்கங்களைக் கூட யோசிக்காம அயராம உழைச்ச அந்த மனசு பிடிச்சிருந்தது…”

“அவருக்கு வந்த அனுபவங்கள் காரணமா எல்லாத்துக்கும் சந்தேகப் பட்டாலும் உண்மையான அன்பைக் கூடப் புரிஞ்சுக்க முடியாம கோபத்தோட முகமூடியைப் போட்டுக்குவார்னு நான் எதிர்பார்க்கலை… இப்போ உங்க விருப்பத்துக்கு நான் சம்மதிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாலும் எப்பவாவது ஒரு நாள் என் பணத்துக்காக தானே என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்ல மாட்டார்னு என்ன நிச்சயம்… அதனால இந்தப் பேச்சை விட்டுடுங்கம்மா…”

“ஹர்ஷூ…”

“அம்மா… பணம் கொடுத்தா என்னை விட நல்ல நர்ஸ் எத்தனையோ பேர் கிடைப்பாங்க, பணம் பணத்தோட தான் சேரும்னு சொல்லுவாங்க… உங்க மகனுக்கு நல்ல பணக்கார இடத்துல பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வைங்க… உங்களையும், உங்களோட நான் செலவழிச்ச அன்பான நிமிஷங்களையும் நான் எப்பவும் மறக்க மாட்டேன், உங்களைப் போல ஒரு மனுஷியை நான் இனி என் வாழ்நாள்ல சந்திப்பனான்னு தெரியலை… நீங்க ரொம்ப கிரேட், உங்களை விட்டுப் போக விருப்பம் இல்லைன்னாலும், அதான் சரின்னு நான் நினைக்கறேன், என்னை மன்னிசிடுங்கம்மா… உங்களைப் பார்த்துக்கங்க, நான் வரேன்…” என்றவள், அவளது கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

தான் அங்கு நிற்பதையோ, அவள் பேசுவதை கவனிப்பதையோ ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தன்னையும், தன் ஆணவத்தையும், தான் சம்பாதித்த சொத்துக்கள் அத்தனையையும் அவள் காலுக்கு கீழே இட்டு நசுக்கி விட்டுப் போவது போல உணர்ந்தான் சஞ்சய். அவன் வாழ்நாளில் இப்படி ஒரு வலியையும், உதாசீனத்தையும் அனுபவித்ததே இல்லை.

அவன் இதயம் முதன் முறையாய் அவளுக்காய் துடிக்கத் தொடங்கியது. அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனக்கு இத்தனை வலியைக் கொடுக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. முதன் முறையாய் தான் ஒன்றுமில்லாத அனாதையாய் நிற்பதைப் போல உணர்ந்தான்.

மகனைத் திரும்பிப் பார்த்த ரேணுகாவின் மனம் கலங்கியது. எப்போதும் சிறு பார்வையில் கூட கம்பீரத்தை வெளிப்படுத்தும் தன் மூத்த மகன் ஹர்ஷாவின் வார்த்தைகளில் நொறுங்கிப் போய் நிற்பதை உணர்ந்தவர், அவனை அழைத்தார்.

“சஞ்சு…” அவரை ஏறிட முடியாமல் குனிந்த தலையுடன் நின்றிருந்தவனை மறுபடியும் அழைத்தார்.

“என்னப்பா, மனசு வலிக்குதா…”

“அம்மா…” என்றவனின் கலங்கிய குரலே அவன் வருத்தத்தை தெரிவித்தது.

“சஞ்சய்… உண்மையான அன்புக்கு மட்டும் தான் இந்த சக்தி இருக்கு, எல்லாத்தையும் சந்தேகப்பட்டுட்டே இருந்தா அன்புங்கிற வார்த்தைக்கும் அர்த்தம் இல்லாமப் போயிடும்… ஹர்ஷா உண்மையானவ, அவ அன்பும் உண்மையானது… அவளுக்கு உன் மேல ஒரு விருப்பம் இருக்குன்னு எனக்குத் தெரியும்… உனக்கும் அவ மேல ஒரு விருப்பம் இருக்கு… அதை நீ உணர்ந்து கிட்டயோ இல்லையோ, நான் உணர்ந்துகிட்டேன்… உன் மனசை கொஞ்சமாவது அசைச்சுப் பார்த்தது ஹர்ஷாவோட அன்பும், பொறுமையும்  தான்னு எனக்குத் தெரியும்… ஆனா அந்த அன்பையும் உன் சந்தேக புத்தியால அவசரப்பட்டு இழந்துட்டியேப்பா, ஹர்ஷூ மாதிரி ஒரு பொண்ணு மருமகளா வரணும்னு எனக்கு ரொம்ப ஆசை, எல்லாம் போச்சு…” என்றவர் ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டார்.

அவரையே பார்த்தவன், “அம்மா, வருத்தப் படாதீங்க… உங்க ஆசையை கண்டிப்பா நான் நிறைவேத்துவேன்… ஹர்ஷூ மாதிரி இல்ல, ஹர்ஷுவையே உங்க மருமகளாக்கிக் காட்டறேன்…” மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், எழுந்து வெளியே சென்றான்.

“ஹேய் பட்டர்பிளை… உன்னை காபின்ல காணோம்னு தேடினா இங்க கேண்டீன்க்கு பறந்து வந்து உக்கார்ந்துட்டு இருக்கே… ஏதோ பலமான யோசனை போலருக்கு, என்ன… நம்ம ஹனிமூன் எங்க வச்சுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா…” கேட்டுக் கொண்டே அவள் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் விக்கி.

அவனை முறைத்தவள், “ஆளைப் பாரு, இப்பதான் லவ் பண்ணவே தொடங்கிருக்கோம்… அதுக்குள்ளே ஹனிமூன் பத்தி யோசிக்கத் தொடங்கியாச்சா…” என்றாள் வர்ஷா.

“ஹலோ பேபி… நாம லவ் பண்ணத் தொடங்கி நூறு நாள் முடிஞ்சிருச்சு தெரியும்ல, அதுக்கே பாதி ஹனிமூன் கொண்டாடலாம்…” என்றான்.

அவனை முறைத்தவள், “என்னது… பாதி ஹனிமூனா…” என்றாள்.

“ஆமா, சின்னதா ஒரு ஹக்… லைட்டா ஒரு பிரெஞ்ச் கிஸ்… இதெல்லாம் டிரை பண்ணினா தப்பில்லையாம்… லவ் டிக்சனரில பார்த்தேன்…” என்றவன் திரும்பி, “ரவிண்ணா… ஒரு காபி…” என்று ஆர்டர் கொடுத்தான்.

“லவ் டிக்சனரில பார்த்திங்களா… வரவர உங்களுக்கு லவ்வோமேனியா அதிகமாயிட்டே போகுது…” என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.

“ம்ம்… என்னோட லவ் அட்சயபாத்திரம் மாதிரி, எப்பவுமே வற்றாம பொங்கி வழியும்ல… சரி, நீ எதுக்கு இங்கே வந்து உக்கார்ந்துட்டு இருக்கே… வேலை இல்லையா…” என்றான்.

“ம்ம்… அம்மா போன் பண்ணினாங்க… அவங்களோட பேசறதுக்கு வேண்டி இங்கே வந்தேன்…” என்றவள் அவனை யோசனையுடன் பார்த்தாள்.

“ஓ… அத்தை என்ன சொன்னாங்க, நல்லாருக்காங்களா…” என்றான் காபியை உறிஞ்சிக் கொண்டே.

“ம்ம்… அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறதா சொன்னாங்க… இந்த வருஷத்துக்குள்ளே அக்காவுக்கு கல்யாணத்தை முடிக்கணும்னு ஜோசியர் சொன்னாராம்.. அதை தான் சொன்னாங்க…”

“ஓ… அப்ப உனக்கு ரூட் கிளியர், நல்ல விஷயம்னு சொல்லு… இதுக்கு என்ன யோசனை…”

“விக்கி… நான் உங்ககிட்டே ஒரு விஷயம் பேசணும், இப்ப பேச முடியுமா… உங்களுக்கு வேலை இருக்கா…”

“இன்னும் 30 மினிட்ஸ்கு ஐயா ப்ரீதான்… என்கிட்டே சொல்ல என்ன தயக்கம்,  சொல்லுடா… என்ன விஷயம்…” என்றான் அவன்.

“விக்கி… நான் சொல்லி இருக்கேன்ல, என் குடும்பத்தைப் பத்தி… இத்தனை நாளா அக்கா, அம்மாவுக்கும், என்னோட படிப்பு முடியறதுக்கும் வேண்டி கல்யாணத்தைப் பத்தி யோசிக்காமலே இருந்துட்டா… இப்ப நான் படிச்சு முடிச்சு வேலைக்கும் போகத் தொடங்கியாச்சு, அம்மாவுக்கு ஹார்ட் சர்ஜரி பண்ணினதாலே அவங்களைத் தனியா விட முடியாது…”

“எங்களுக்கு சொந்தமா ஒரு வீடு இருக்கு… அம்மாவுக்கு பென்ஷனும் வரும்,  ஆனாலும் அவங்களுக்கு ஒரு துணை வேணும்…”

“சரி… அதுக்கென்ன…”

“அக்காவுக்கு இப்ப மாப்பிள்ளை பார்க்கும்போது அக்கா கண்டிப்பா இதை ஒரு காரணமா சொல்லுவா… அம்மாவை அவ கூட வச்சுக்கணும்னு… அதுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒத்துக்குவாங்கன்னு சொல்ல முடியாது… இத்தனை நாள் அவதான் அம்மாவைப் பார்த்துகிட்டா, இனி நான் பார்த்துக்கணும்னு ஆசைப்படறேன்… அக்காவோட கல்யாணம் முடிஞ்ச பின்னால அம்மாவை என்னோட கூட்டிட்டு வந்து வச்சுக்கனும்னு நினைக்கறேன், நம்ம கல்யாணத்துக்குப் பின்னாடியும்… இதுல உங்களுக்கு ஏதாவது அப்ஜக்சன் இருக்கா…” என்றாள் தயக்கத்துடன்.

“அட… இதுக்கு தான் இப்படி சுத்தி வளச்சியா… என் மண்டு பட்டர்பிளை…” என்று அவள் தலயில் லேசாய் தட்டியவன், “இங்க பாருடா… எப்ப உன்னை நான் லவ் பண்ணினேனோ அப்பவே உன் அம்மாவும் என் அம்மா போலதான், என் அம்மா ரொம்ப நல்ல டைப்… அத்தை நம்ம வீட்டுல தங்கினா அவங்களுக்கு ஒரு பிரண்டு கிடைச்சதா நினைச்சு சந்தோஷப்படத்தான் செய்வாங்க… இதுக்கு தான் இத்தனை பெரிய யோசனையா, இனி அத்தை நம்ம பொறுப்பு… சரியா…” என்றான்.

அவனது கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டவள், “ரொம்ப தேங்க்ஸ் விக்கி…” என்றாள்.

“நான்தான் அத்தைக்கு தேங்க்ஸ் சொல்லணும்… நீ எதுக்கு சொல்லறே…”

“நீங்க எதுக்கு அம்மாக்கு தேங்க்ஸ் சொல்லணும்…” என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.

“பின்னே… எனக்கு வேண்டி ஒரு தேவதையைப் பெத்து வளர்த்தி, என் கண் முன்னாடி பட்டாம்பூச்சியா பறக்க விட்டிருக்காங்களே, அதுக்கு தான்…” என்றவனின் கையில் மெல்லக் கிள்ளியவள், “உங்களுக்கு எப்பவுமே கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி தான்…” என்றாள்.

“அது சரி… உண்மையை சொன்னா லொள்ளுன்னு சொல்லறே, சரி வா, வேலையைப் பார்க்கலாம்…”

“ம்ம்… நீங்க அடுத்த வாரம் அமேரிக்கா போகணுமே, அதுக்கு முன்னாடி அத்தையைப் பார்க்க ஊருக்குப் போகலையா…”

“இல்லடா… வேலை சரியா இருக்கு, அம்மாகிட்ட போன்ல சொல்லிட்டு கிளம்பிட வேண்டியது தான்… போயிட்டு வந்து ரிலாக்ஸா அம்மாவோட ஒரு வாரம் இருக்கணும்னு பிளேன் பண்ணிட்டேன்… நீயும் என்னோட வரதுக்கு ரெடியா இரு, நாம நம்ம ஊருக்குப் போறோம்…. ரைட், சரி வா… வா… அந்த வேதாளம் என்னைக் காணம்னு தேடிட்டு இருப்பான்…” சொல்லிக் கொண்டே நடந்தான்.

அடுத்த நாள் காலையில் தான் ரேணுகாவை டிஸ்சார்ஜ் செய்தனர். எப்போதும் நைட் ஷிப்ட் எடுக்காத ஹர்ஷா அன்று அன்னைக்குத் துணையாய் அடுத்த வீட்டுப் பெண்ணை படுத்துக் கொள்ள சொல்லிவிட்டு ரேணுகாவைப் பார்த்துக் கொண்டாள். ஆனால் அவரிடம் எதுவுமே பேசவில்லை. நேரத்துக்கு மருந்தைக் கொடுத்து பிரஷரைப் பரிசோதித்து விட்டு அங்கிருந்து சென்று விடுவாள்.

அவளை ஏக்கத்துடனும், வேதனையுடனும் தொடரும் சஞ்சயின் கண்களை சந்திக்க பிடிவாதமாய் தன் விழிகளுக்கு விலங்கிட்டு வைத்தாள். காலையில் ரேணும்மா டிஸ்சார்ஜ் ஆகிக் கிளம்பியதும் அவளும் ஷிப்டை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினாள்.

குளித்து முடித்து வந்தவள், அன்னை ஊற்றித் தந்த தோசையை அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“இன்னொரு தோசை வைக்கட்டுமா மா…”

“போதும்மா, நீங்க உக்காருங்க… நான் சூடா தோசை சுட்டுத் தரேன்…” என்றவள், அவரை அமர வைத்து தோசை ஊற்றத் தொடங்கினாள்.

“நேத்து என்னடா திடீர்னு நைட் ஷிப்ட் எடுத்துட்டே… எந்த சூழ்நிலைலயும் நீ நைட் எடுக்க மாட்டியே, வீட்டுக்கு வந்திருவியே… நேத்து என்னாச்சு…” தோசையை தேங்காய் சட்னியில் தொட்டுக் கொண்டே கேட்டார் உமா.

Advertisement