Advertisement

“என்ன இருந்தாலும் அவளை அழைத்து வராவிட்டால் அம்மா விட மாட்டார்கள், ஆனால் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்… எந்தத் தப்பும் செய்யாதவளை எத்தனை கேவலமாய் பேசி விட்டேன், என்னை மன்னிப்பாளா… வேறு வழியில்லை… அம்மாவுக்காக அவளை அழைத்து வரத்தான் வேண்டும்… மாலை அவள் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்…” என நினைத்துக் கொண்டான். அன்னையின் பிடிவாதத்தைப் பற்றி அவன் நன்றாக அறிவான்.

எத்தனை ஜாலியாக இருப்பாரோ, பிடிவாதம் வந்துவிட்டால் அத்தனை சீரியசாகி விடுவார்… ஹர்ஷாவின் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்பதைப் பற்றி யோசித்தால் தயக்கமாய் இருந்தாலும் வேறு வழியில்லாமல் அன்னைக்கு வேண்டி அவள் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான் சஞ்சய்.

“வார்த்தைக் கத்தியால்

வதைக்கிறாய் என்னை…

வஞ்சி என்னோடு உன்

வஞ்சம் தான் என்னவோ…”

சோர்ந்த முகத்துடன் ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தாள் ஹர்ஷா. அவளது வீங்கிய கண்களும் முகமும் இரவு முழுதும் உறங்கவில்லை என்பதை உணர்த்தியது. முதல் நாள் சஞ்சய் பேசிய வார்த்தைகளின் வலி தாங்காமல் அங்கிருந்து கிளம்பியவள் வீட்டுக்கு சென்று அன்னையை வருத்த விரும்பாமல்  கோவிலுக்கு சென்று வெகுநேரம் அழுதாள்.

பிறகு தன்னைத் தானே தேற்றிக் கொண்டு ஹாஸ்பிடலில் சுகந்தி டாக்டரைக் கண்டு இனி ரேணும்மாவின் வீட்டுக்கு செல்லவில்லை… ஹாஸ்பிடலுக்கே வருகிறேன், எனக் கூறிவிட்டு வந்திருந்தாள். அவர் எத்தனையோ சமாதானப்படுத்தியும் என்னவென்று கேட்டும் எதுவும் சொல்லாமல் போகப் பிடிக்கவில்லை என்று மட்டும் கூறிவிட்டாள்.

அவளது அழுத முகத்தை வைத்து சஞ்சய் ஏதாவது சொல்லி இருப்பான், விருப்பம் இல்லாமல் அவளை அனுப்ப வேண்டாம் என நினைத்து அவரும் ஹாஸ்பிடலுக்கே வர சொல்லி விட்டார்.

ஆனால் சாயந்திரம் வீட்டுக்கு சென்றவளைக் கண்ட உமா சும்மா இருப்பாரா… என்னவாயிற்று என்று துளைத்தெடுத்தார். ஹாஸ்பிடல் டியூட்டி லெட்ஜரில் ஒப்பிட்டுவிட்டு அவளிடம் நலம் விசாரித்த சகபாடிகளிடம் பதிலளித்துவிட்டு வார்டுக்கு சென்றாள் ஹர்ஷா. காலை நேரமாதலால் அதிகம் கூட்டம் இல்லை. பொதுவான வேலைகளை செய்து முடித்து டாக்டர் வருவதற்காய் காத்திருந்தாள். மனதுக்குள் சஞ்சய் பேசிய வார்த்தைகளே சிதறிக் கிடந்தன.

“எத்தனை கேவலமாய்ப் பேச முடியுமோ அத்தனை பேசிவிட்டு மன்னித்து விடுவதாம், என் இதயம் முழுதும் அவனது நினைவுகளே நிறைந்திருக்க அவனே அதைக் குத்திக் குதறி விட்டானே…”

“பணத்துக்காகவா நான் இவனை விரும்புகிறேன்… ரேணும்மாவிற்கு என்னைப் பிடிக்கும் எனத் தெரிந்தாலும் என் காதலை இவனிடம் சொல்லாமல் மறைக்க இது தானே காரணம்… இந்தப் பழிச்சொல்லை இவன் வாயால் கேட்க வேண்டி வருமோ என பயந்து தானே இவனிடம் அன்பைக் காட்டக் கூடத் தயங்கினேன்… எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பவனிடம் என் காதலை சொல்லி அதையும் சந்தேகக் கண்ணில் பார்த்துவிட்டால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாதென்று தானே தயங்கினேன்… என்ன, ஏது என்று எதையும் விசாரிக்காமல் ஒட்டு மொத்தமாய் நான் தான் குற்றம் செய்தவள் என்று முடிவு செய்து எத்தனை கேவலமாய் வார்த்தைகளை விட்டுவிட்டான்…” அவள் மனது புலம்பித் தவித்தது.

அவன் பேசியதை நினைத்தவளுக்கு வேதனையாய் இருந்தது.

அன்னையிடம் எதோ சொல்லி சமாளித்து நாளை முதல் ஹாஸ்பிடலுக்கு போவதாய் சொல்லிவிட்டு தன் அறைக்குள் முடங்கிக் கொண்டவளை, சஞ்சய் வந்திருப்பதாய் கதவைத் தட்டினார் உமா.

ஹாலில் அமர்ந்திருந்தவன், அறைக்குள் இருந்து வெளியே வந்தவளைக் கண்டதும் அதிர்ந்து போனான். அழுது வீங்கிய முகமும், சிவந்த கண்களும் நீதானே இதற்கெல்லாம் காரணம் என்று அவனைக் குற்றப் படுத்துவது போலத் தோன்றியது.

“அம்மா… காபி…” என்று அன்னையை அடுக்களைக்குள் அனுப்பி விட்டு, அவளைக் கண்டு அதிர்ந்து நின்றவனிடம் திரும்பினாள்.

“ஏதாவது சொல்ல விட்டுப் போயிருச்சா, சொல்லுங்க…” என்றாள் எங்கோ வெறித்துக் கொண்டு.

“ஹர்ஷா… ஸ…ஸாரி… நான் ஆபீஸ் டென்ஷன்ல எதோ தப்பாப் புரிஞ்சுகிட்டு, யோசிக்காம உன்னை ஏதேதோ திட்டிட்டேன்… அப்புறம் தான் உன்மேல எந்தத் தப்பும் இல்லைன்னு தெரிஞ்சது… ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி…” என்றான் மனதார.

“ஹூம் கோபத்துலயோ, அவசரத்துலயோ… உங்க மனசுல என்னைப் பத்தி என்ன நினைச்சிருந்திங்களோ… அதானே வார்த்தையா வந்திருக்கும், பரவாயில்லை… நீங்க குடுத்த சம்பளத்துக்கு அதையும் சேர்த்துக்கறேன்…” என்றாள் விரக்தியாக.

“ஹர்ஷா… நான் அப்படில்லாம் நினைக்கலை, எதோ கோபத்துல… ஸாரி,  என்னை மன்னிக்க மாட்டியா…” என்றான்.

“பணம் இருக்கறவுங்க எது செய்தாலும் தப்பில்லை… நீங்க எதுக்கு என்கிட்டே மன்னிப்பு கேக்கணும், அதெல்லாம் அவசியமில்லை… ஆனா இதை மட்டும் மனசுல வச்சுக்கங்க… பணமில்லாம இருந்தாலும் எங்களுக்கும் மனசிருக்கு… அதுல வார்த்தையால அடிச்சா எங்களுக்கும் வலிக்கும்…” என்றாள் நிதானமாக.

“ஸாரி ஹர்ஷா… அம்மா என்னை ரொம்பத் திட்டினாங்க… உன்கிட்டே ஸாரி சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டாங்க…”

“ஓ… அப்ப அதுக்காக தான் வந்திருக்கிங்க, உங்க தப்பை உணர்ந்து வரலை…”

“அப்படில்லாம் இல்லை… அவங்க வந்து பிரீத்திகிட்டே பேசின பின்னால தான் எனக்கு உன் மேல தப்பில்லைன்னு புரிஞ்சது… அதான் மன்னிப்பு கேட்க வந்தேன், என்னை மன்னிக்க மாட்டியா…” என்றான் வலி நிறைந்த குரலில்.

அவன் மன்னிப்புக் கேட்பதும் ஏனோ அவளுக்கே வலித்தது.

“சரி மன்னிச்சுட்டேன்… உங்க அம்மாகிட்ட சொல்லிடுங்க…” என்றாள்.

“அப்ப நாளைக்கு வீட்டுக்கு வருவியா…” என்றான் ஆர்வத்துடன்.

“இல்லை… நான் இனி உங்க வீட்டுக்கு வரலை… அங்கிருக்கவங்களை என்னோட மனுஷங்களா பார்த்தது தப்பு தான்… பணத்துக்கு வேண்டி வேலைக்கு போனா வேலையை மட்டும் தான் செய்யணும்… அன்பைக் காட்டக் கூடாதுன்னு புரிஞ்சுகிட்டேன்,  நீங்க கிளம்புங்க…”

“அப்படின்னா இன்னும் என் மேல கோபம் தானா…” என்றவனை உறுத்து நோக்கியவள்,

“கோபமில்லை, வருத்தம் மட்டும் தான்… இது என் மனசுல விழுந்த காயம், ஆறுறதுக்கு நாளாகும்… நீங்க வேற நர்ஸ் பார்த்துக்கங்க, கிளம்புங்க…” என்றவளை இயலாமையுடன் பார்த்தவனுக்கு அவளை என்ன சொல்லி சமாதானப் படுத்துவதென்று தெரியவில்லை.

அப்போது உமா அவர்கள் இருவருக்கும் காபியுடன் வர, “காபி குடிங்க சார்…” என்றவள் ஒரு கோப்பையை அவனிடம் நீட்ட, அந்த சாரில் தொனித்த விலகலில் அவன் மனது துடித்தது. அமைதியாய் காப்பியை குடித்துவிட்டு நன்றி கூறி கிளம்பினான்.

வாடிய முகத்துடன் கிளம்பிச் சென்றவனை நினைத்து அவளுக்கும் வேதனையாகவே இருந்தது. அவள் அறைக்கு செல்லப் போனவளை அன்னையின் குரல் நிற்க வைத்தது.

“ஹர்ஷா, நில்லு…”

“என்னம்மா…”

“அங்கே என்ன நடந்துச்சு… என்கிட்ட இப்போ உண்மையை சொல்லப் போறியா  இல்லியா…”

“அம்மா… அங்கே வேலைக்குப் போனேன், அவங்களுக்குப் பிடிச்ச போல எனக்கு நடந்துக்கத் தெரியலை… வேலையை விட்டு நின்னுட்டேன்… அவ்ளோ தான், நாளைல இருந்து ஹாஸ்பிடலுக்கு போகப் போறேன், வேற ஒண்ணும் இல்லைம்மா…” என்றவளை ஆழ்ந்து பார்த்தார் உமா.

“ம்ம்… சரி, நான் இன்னைக்கு நம்ம ஜோசியரைப் பார்க்கப் போயிருந்தேன்… உனக்கு இன்னும் ஒரு வருஷத்துக்கு கல்யாண யோகம் இருக்கு… அதுக்குள்ளே பண்ணியாகணுமாம், அப்புறம் நாலு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ண முடியுமாம்… அதான் நாளைக்கு உன் ஜாதகத்தை கோவில்ல வச்சு கும்பிட்டு தரகர்கிட்டே கொடுக்கலாம்னு இருக்கேன்…” என்றார்.

“இது என்னடா புதுக் குழப்பம்…” என நினைத்தவள், “எனக்கு எதுக்குமா இப்ப கல்யாணம்…” என்றாள்.

“அப்புறம் அறுவது வயசுலயா கல்யாணம் பண்ணுவாங்க… அதான் வர்ஷூ இப்ப வேலைக்குப் போறால்ல, நான் முடிவு பண்ணிட்டேன்…” என்றார்.

“அன்னையிடம் என்ன சொல்லுவது எனத் தெரியாமல் முழித்தவள், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு சரிம்மா… உங்க இஷ்டம், ஆனா மாப்பிள்ளை எனக்குப் பிடிச்சிருக்கனும்… என்னோட கண்டிஷனுக்கு ஒத்து வரணும்… அப்பதான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்…” என்றாள்.

“ம்ம்… சரி…” என்று அவரும் சம்மதித்தார்.

யோசனையாய் அமர்ந்திருந்தவள் அருகில் கேட்ட குழந்தையின் அழுகுரலில் கலைந்தாள்.

“சுகந்தி டாக்டர் வந்துட்டாங்களா…” என்றார் இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு நின்றிருந்த அந்தப் பெண்மணி.

“இப்போ வந்திருவாங்க,  குழந்தைக்கு என்னாச்சு…”

குழந்தை ரொம்ப நேரமா அழுதுட்டே இருக்கு…” என்றார் அவர்.

குழந்தையை தொட்டுப் பார்த்து வயிற்றில் கை வைத்துப் பார்த்தவள், “வயிறு கட்டி இருக்கு… டியூட்டி டாக்டர் இருப்பாங்க, நீங்க போயி பாருங்க…” என்றாள்.

“சரிம்மா…” என்றவர், அங்கிருந்து நகர்ந்தார்.

சற்று நேரத்தில் சுகந்தி டாக்டர் வந்துவிடவே அன்றைய பணி சுமையில் தற்காலிகமாய் தன் மன சுமைகளை மறந்திருந்தாள் ஹர்ஷா.

அன்று மதிய வேளையில் ரேணும்மாவைத் தாங்கலாய் அழைத்து வந்த சஞ்சயைக் கண்டதும் அதிர்ந்தவள், அவர்களிடம் ஓடினாள்.

“அம்மா… உங்களுக்கு என்னாச்சு…” அவரை மறுபுறம் கையைப் பிடித்து வந்து நாற்காலியில் அமர்த்தினாள்.

மாத்திரை எடுத்துக் கொள்ளாததால் பிரஷர் தாறுமாறாய் ஏறி இருந்தது. அவரைப் பரிசோதித்துவிட்டு உடனே அட்மிட் செய்துவிட்டார் சுகந்தி. மயக்கத்தில் இருந்தவரின் அருகில் இருந்து பார்த்துக் கொண்டாள். மறந்தும் கூட சஞ்சயை ஏறிடவில்லை. அவனுக்கு அவசரமாய் ஒரு மீட்டிங் செல்ல வேண்டி இருக்கவே தயக்கத்துடன் அவளிடம் வந்தான்.

“ஹர்ஷா… எனக்கு ஒரு மீட்டிங் போகணும், ஒரு மணி நேரத்துல திரும்பி வந்திடுவேன்… அம்மாவை கொஞ்சம் பார்த்துக்க முடியுமா…” என்றான்.

அவனிடம் திரும்பியவள் முறைத்தாள்.

“பேஷண்டைப் பார்க்கத்தானே நர்ஸா இருக்கேன்… நான் பார்த்துக்குவேன்… நீங்க உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க…” என்றாள் கோபத்துடன். ரேணும்மாவை அவன் கவனிக்கவில்லையே என்று அவளுக்கு அவன் மீது கோபமாய் வந்தது.

அவன் சொன்னது போலவே ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்துவிட்டான்.

ரேணும்மாவிற்கு பிரஷர் சற்று நார்மலாகி இருக்க, மாலையில் மெதுவாய் கண்ணைத் திறந்தார். சுகந்தி அவரிடம் எப்போதும் போல உபதேசத்தையும் அர்ச்சனையையும் வழங்கிவிட்டு செல்ல தன் அருகில் நின்றிருந்த ஹர்ஷாவைப் புன்னகையுடன் ஏறிட்டார் ரேணுகா.

ஹர்ஷா, அவரது பார்வையை எதிர்கொள்ள முடியாமல், அவரது இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்ச்சியுடன் அங்கிருந்து நகர, அவள் கையை எட்டிப் பிடித்தார் ரேணுகா.

“ஹ..ர்ஷூ… எ…என் மேல கோபமா, பேச மாட்டியா…” என்றார் திணறலுடன்.

அதைக் கேட்டதும் அவள் ஒளித்து வைத்திருந்த கண்ணீர் மீண்டும் கண்களில் துளிர்க்க, “அம்மா…” என்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள் அவள்.

“உங்க மேல எனக்கென்ன கோபம் மா… அப்படில்லாம் எதுவும் இல்லை, நீங்க உங்க உடம்பை வருத்திக்கறீங்களேன்ற வருத்தம் தான்,  ஏன்மா இப்படிப் பண்ணினீங்க…” என்றாள் அவள்.

“அதெல்லாம் விடு… மனசு சரியாருந்தா உடம்பு தானா சரியாகிடப் போகுது… நீ சஞ்சய் வந்து கூப்பிட்டதுக்கு வரமாட்டேன்னு சொன்னியாமே, அவன் செய்தது ரொம்பப் பெரிய தப்பு தான்… மன்னிப்புங்கிற சாதாரண வார்த்தை வலியைப் போக்கிடாது… ஆனாலும் நீ மன்னிக்கணும் மா… அன்பை மட்டுமே காட்டிய உன்னோட மனசு என் மகனை சபிச்சுடக் கூடாது…” என்றார் அவர்.

“அச்சோ… அம்மா, எனக்கு எந்த கோபமும் இல்லை, போதும் மன்னிப்பு கேட்டது…” என்றாள் அவள்.

“அப்ப நீ மறுபடியும் என் வீட்டுக்கு வரணும்… நர்ஸா இல்லை, என் மூத்த மருமகளா… வருவியா…” என்றவரை அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, சஞ்சய் எதுவும் சொல்லாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்தான்.

நான் மௌனமான பொழுதுகளில்

உன் மனம் என்னை சுற்றியே அலைந்தது…

உன்னோடு பேசத் துடிக்கும் போது ஏனடி

விலகி சென்று தவிக்க விடுகிறாய்…

நீ என்னைப் பார்த்தாலே

நெஞ்சுக்குள் வேர்க்குதடி…

பாலையான மனதும்

சோலையாய் பூக்குதடி…

உன்னை உணராமல் போனதால்

உறவும் தான் முறிந்திடுமா…

அறியாமல் பேசிய வார்த்தை

பந்தத்தை அறுத்திடுமா…

வாள்போரில் வென்றிட்ட நான் உன்

விழிப் போரில் தான் வீழ்கிறேனடி..

தரிசான என் நெஞ்சை பரிசாக ஏற்றவளே…

மண்டியிட்டுக் கேட்கிறேன் உன்னிடம்…

எதைத் தரப் போகிறாய்…

மனதையா… மரணத்தையா…

Advertisement