Advertisement

இதயம் – 17

கல்யாணத்திற்கு சென்றிருந்த ரேணுகா வீடு திரும்பும்போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகி இருந்தது. கல்யாண வீட்டில் எப்போதாவது ஒன்று கூடும் சொந்தங்களைக் கண்டதும் சட்டென்று திரும்பி வர மனம் வரவில்லை… எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தவர் சற்று தாமதமாகவே கிளம்பினார்.

சோர்வுடன் வீட்டுக்கு வந்தவர் வாசலில் ஹர்ஷாவின் ஸ்கூட்டியைக் காணாமல் யோசனையுடன் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தார்.

“ராணி…”

பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த ராணி ஓடி வந்தார்.

“சஞ்சு நேரத்திலேயே கிளம்பிட்டானா, எங்கே… ஹர்ஷூவைக் காணோம்,  இன்னும் வரலையா…”

“அ…அது வந்தும்மா… தம்பி கிளம்பிப் போயிடுச்சு, அந்தப் பொண்ணு வந்ததும்…” தயக்கத்துடன் நிறுத்தியவரை யோசனையுடன் பார்த்தார்.

“வந்ததும்… என்ன இழுக்கறே, வாயைத் திறந்து சொல்லு…” அதட்டினார்.

“வந்ததும் தம்பி சாப்பிடலைன்னு சொன்னேன்… நான் கேட்டுட்டு வரேன்னு தம்பி ரூமுக்குப் போச்சு, மேல அவர் ஏதோ ரொம்ப நேரம் திட்டுற சத்தம் கேட்டுச்சு… அப்புறம் கிளம்பிப் போயிட்டார்… கொஞ்ச நேரம் கழிச்சு அழுதுட்டு வந்த அந்தப் பொண்ணும் கிளம்பிப் போயிருச்சு…” என்றார் வருத்தத்துடன்.

“சஞ்சு திட்டினானா, எதுக்குத் திட்டினான்…” என்றார் ரேணுகாவும் புரியாமல்.

“தெரியலைம்மா… தம்பி காலைல இருந்தே கோபமா தான் இருந்துச்சு, ஓடுறதுக்கும் போகலை… சாப்பிடவும் வேண்டாம்னு சொல்லிடுச்சு, அதான் மனசு கேக்காம ஹர்ஷா கிட்டே சொன்னேன்… அந்தப் பொண்ணும் கேட்டுட்டு வரேன்னு போச்சு, என்னாச்சுன்னு தெரியலை… அதுக்குப் பிறகு மேல தம்பி திட்டுற சத்தம் தான் கேட்டுச்சு… பாவம், அழுதுட்டே கீழே வந்துச்சு… நான் என்னன்னு கேக்கக் கேக்க நிக்காம வண்டியை எடுத்திட்டுப் போயிருச்சு…” என்றார் அவர் மீண்டும்.

“ஓ… சரி, நீ வேலையைப் பாரு… நான் பார்த்துக்கறேன்…” என்றவர் யோசனையுடன் அவரது அறைக்குள் நுழைந்தார்.

அலைபேசியை எடுத்து மகனுக்கு அழைத்தவர் அவன் எடுத்ததும், “சஞ்சய், உடனே கிளம்பி வீட்டுக்கு வா…” அதிகாரமாய் சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

ஹர்ஷாவின் அலைபேசிக்கு அழைக்க அது அணைத்து வைக்கப் பட்டிருப்பதாகக் கூறியது. சற்று நேரத்தில் சஞ்சயின் கார் வாசலில் நிற்க அவன் கோபத்துடன் அன்னையின் அறைக்குள் நுழைந்தான்.

“அம்மா… எதுக்கு அவ்ளோ அவசரமா கூப்பிட்டிங்க…” என்றவனை முறைத்தவர்,

“உனக்கும் ஹர்ஷாக்கும் என்ன பிரச்சனை…” நேரடியாய் விஷயத்துக்கு வந்தார். அவரது முகத்தில் கோபமும் குழப்பமும் நிறைந்திருந்தது.

சட்டென்று அவனுக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. “இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டால், என்னவென்று சொல்லுவது… அம்மா வந்ததும் அந்த கைகாரி எல்லாத்தையும் ஒப்பித்து இருப்பாளே, பிறகு புதிதாய் என்னிடம் கேட்க என்ன இருக்கிறது…” என நினைத்துக் கொண்டே அவரை ஏறிட்டான்.

“ஏன்… அந்த வேஷக்காரி உங்ககிட்டே எல்லாத்தையும் சொல்லி இருப்பாளே, உங்களுக்கு என்னைவிட அவ மேல தானே நம்பிக்கை அதிகம்… பேசியே எல்லாரையும் நல்லா மயக்கி வச்சிருக்கா… வசியக்காரி, பணத்துக்கு ஆசைப்பட்டு வேலைக்கு வந்துட்டு இப்ப சொத்துக்கு ஆசைப்பட்டு என்னையும் வளைச்சுப் போடப் பார்த்திருக்கா…” என்றவனை கோபத்துடன் முறைத்தவர்,

“என்னடா சொன்னே… நம்ம ஹர்ஷுவைப் பத்தியா அப்படி சொல்லறே, அன்பைத் தவிர அஞ்சு பைசா அதிகமா கொடுத்தா கூட ஒத்துக்க மாட்டாடா… அவளைப் பத்தியா இப்படி அனலா வார்த்தையைக் கொட்டற… அப்படி என்ன அவ எல்லாரயும் மயக்கிட்டா,  எல்லார்கிட்டயும் அன்பா இருக்குறது தப்பா…”

“அன்பா இருக்குறது தப்பில்லை… அன்பா இருக்குற போல நடிக்கறது தான் தப்பு…”

“அப்படி என்னடா அவ நடிச்சுட்டா…”

“நீங்களே யோசிச்சுப் பாருங்க… நான் அவகிட்டே எப்பவாவது அன்பா சிரிச்சுப் பேசிப் பார்த்திருக்கீங்களா…”

“இல்லை… நீதான் சிடுமூஞ்சியாச்சே… அவளைப் பார்க்கும் போதெல்லாம் தேள் போல கொட்டிகிட்டே தான் இருப்பே, அதுக்கென்ன…”

“அப்படி இருக்கற என் மேல அவளுக்கு காதல் வருமா… அப்படி வந்தா அது என்கிட்டே இருக்குற காசுக்கு வேண்டி வந்த காதல்னு தானே அர்த்தம்…” என்றான் அவன் ஆங்காரத்துடன்.

“என்னடா லூசு போலப் பேசறே, அவ உன்னை லவ் பண்ணறேன்னு உன்கிட்ட சொன்னாளா…”

“சொல்லலை… பட் ஒரு கிரீட்டிங் கார்டுல அவ காதலை எழுதி என் ரூம்ல ஒரு புக்ல வச்சிருக்கா…”

“என்னது கிரீட்டிங் கார்டா, என்ன புக்…” என்றார் அவர் குழப்பத்துடன்.

“ஆமா… லவ் அண்ட் லவ் ஒன்லி னு ஒரு இங்கிலீஷ் புக்குள்ள வச்சு என் ரூம்ல வச்சிருக்கா… என்னடா, நமக்கு சம்மந்தமில்லாத ஒரு புது புக் இங்கே இருக்கேன்னு எடுத்துப் பார்த்தேன்… அப்ப தான் அந்த கிரீட்டிங் இருக்குறதே தெரிஞ்சது…” என்றான் அவன்.

“இரு இரு, அந்த புக் உன்னோடது இல்லையா…”

“இல்லையே, அவ தான் வாங்கிருக்கா…” என்றான் அவன்.

“உன் அவசர புத்திக்கு அளவே இல்லையா… அந்த புக் பிரீத்தி ரூம்ல இருந்துச்சு… சரி, நீ மட்டும் தானே இங்க இங்கிலீஷ் புக் படிப்பே… உன்னோடதை தான் பிரீத்தி படிச்சிட்டு அவ ரூம்ல வச்சிட்டுப் போயிட்டா போலருக்குன்னு நான் தான் உன் ரூம்ல கொண்டு வந்து வச்சேன்… ஒருவேளை அவ எழுதி இருப்பாளோ, ஹர்ஷா அப்படில்லாம் எழுதக் கூடிய பொண்ணில்லை…” என்றார் அவர்.

“சும்மா கதை விடாதீங்கம்மா… அந்த கிரீட்டிங் கார்டுல தமிழ்ல தானே எழுதி இருந்துச்சு… பிரீத்திக்கு தான் தமிழ் எழுதத் தெரியாதே…” என்றான் அவன்.

“அவதான் கொஞ்ச நாளா தமிழ் எழுதப் படிச்சிட்டு இருக்காளே…”

“என்னம்மா சொல்லறீங்க…” என்றவனின் கோபம் வடியத் தொடங்கி இருந்தது.

“எப்பப் பார்த்தாலும் கோபம் கண்ணை மறைச்சா எது நிதர்சனம்னு புரியாத அளவுக்கு மூளை மழுங்கிப் போயிடும்… அவசரப்பட்டு உன்னோட ஆத்திரத்தை வார்த்தையா அந்தப் பொண்ணுகிட்டே கொட்டிருக்கே… அவ மனசு என்ன பாடுபடுமோ, நான் வர்ற வரை கொஞ்சம் பொறுமையா இருக்க முடியாதா… பொறுமைன்னு ஒரு விஷயம் உனக்கு இல்லவே இல்லையே…”

“எப்பவும் சந்தர்பத்தை வச்சு அவசரமா முடிவெடுத்து எல்லாரையும் குத்தக்காரங்க ஆக்குறது தானே உன் வேலை… பிரீத்திக்கு உன் மேல ஒரு விருப்பம் இருந்துச்சு, அதனால அவ கூட எழுதி இருக்கலாமே… ஹர்ஷா தான் உன்னைக் காதலிச்சு கவிதை எழுதி இருப்பான்னு நீ எப்படி முடிவு பண்ணினே… அவ எழுதணும்னு உன் மனசுக்குள்ளே எதாவது எதிர்பார்ப்பு இருந்துச்சா என்ன… நான் இப்போ பிரீத்திக்கு கூப்பிடறேன், அவ என்ன சொல்லுறான்னு பார்த்திட்டு ஹர்ஷா கிட்ட பேசி இருக்கலாமே…” என்றவரின் ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்குள் இடியாய் இறங்கியது.

“அப்படியானால் அவசரப்பட்டு ஹர்ஷாவை கண்டபடி திட்டிவிட்டோமோ… அதில் எந்தப் பேரும் எழுதி இருக்கவில்லையே… பிரீத்திக்கு இத்தனை அழகாய் கவிதையில் காதலை சொல்லும் அளவுக்கு தமிழில் எழுத வருமா, நிச்சயமாய் இருக்காது… இது ஹர்ஷா எழுதியது தான், கொஞ்சம் கூட பிசிறில்லாத கையெழுத்து… எழுதப் பழகிக் கொண்டிருப்பவளுக்கு இப்படி எழுத முடியாது…” அவன் மாறி மாறி யோசித்துக் கொண்டிருக்க ரேணுகா, பிரீத்திக்கு அழைத்துக் கொண்டிருந்தார்.

எதிர்புறத்தில் அத்தையின் எண்ணைக் கண்டு புன்னகையுடன் அலைபேசியை எடுத்தாள் பிரீத்தி.

“ஹாய் அத்தை… எப்படி இருக்கீங்க…”

“நல்லாருக்கேண்டா, நீ எப்படி இருக்கே… பயணம் எல்லாம் சுகமா இருந்துச்சா, நேத்து புல்லா ஜெட்லாக்ல டயர்டா இருந்திருப்பே… அதான் உன்னை தொந்தரவு பண்ணலை… நல்லா ரெஸ்ட் எடுத்தியா…” என்றார் அன்புடன்.

“நேத்து புல்லா தூங்கி எந்திரிச்சேன் அத்தை… இன்னைக்கு செம பிரெஷா இருக்கேன், அப்பா கிட்ட இவ்ளோ நேரம் அங்கே நாம என்னெல்லாம் பண்ணினோம்னு சொல்லிட்டு இருந்தேன்… இப்போ தான் அவர் வெளியே கிளம்பிப் போனார்… உங்களை எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணறேன் அத்தை…” என்றாள் வருத்தத்துடன்.

“ம்ம்… நாங்களும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணறோம்டா… நீ வந்ததுல இருந்து வீடே ரொம்ப கலகலப்பா இருந்துச்சு, ஹூம்… என்ன பண்ணுறது, சரிடா… உன்கிட்டே ஒரு விஷயம் கேக்கலாம்னு தான் கூப்பிட்டேன்…” என்றார்.

“என்ன அத்தை, என்ன விஷயம்…” என்றாள் அவள்.

“உன்னோட பொருள் ஏதாவது இங்கே விட்டுட்டுப் போயிட்டியா…”

“என்னோட பொருளா… ஹூம், ஆமா அத்தை… ஒரு புக் ஒண்ணு வாங்கி இருந்தேன், அதை எங்கே வச்சேன்னு தெரியலை… நான் கிளம்பும்போது காணோம்… சரின்னு விட்டுட்டு வந்துட்டேன், ஏன் அத்தை… அங்கே பார்த்திங்களா…” என்றாள் அவள்.

“ம்ம்… ஆமாம்டா… உன் ரூம்ல கட்டிலுக்குக் கீழ கிடந்துச்சு, அதுல ஒரு கிரீட்டிங் கார்டு வேற இருந்துச்சு… அதான் முக்கியமானதா இருக்குமோன்னு நினைச்சுக் கூப்பிட்டேன்…”

“கிரீட்டிங் கார்டா…” யோசித்தவள், “அத்தை… நான் தமிழ் எழுதிப் பழகிட்டு இருந்தேன்ல… அப்ப ஹர்ஷா கிட்ட ஒரு காதல் கவிதை எழுதித் தர சொன்னேன், அவ யாருக்குன்னு கேட்டா… நான் ஒருத்தருக்கு தமிழ்ல லவ் ப்ரபோஸ் பண்ணப் போறேன், சக்சஸ் ஆனா சொல்லறேன்னு சொன்னேன்… அவ சூப்பரா எழுதிக் கொடுத்தா… ஹஹா… உங்களுக்கு ஒரு கூத்து தெரியுமா…”

“அவ எழுதுன கிரீட்டிங் கார்டை அப்படியே கொடுக்க மனசில்லாம நானே அந்தக் கவிதையைப் பார்த்து எழுதிப் பழகி வேற ஒரு கிரீட்டிங் கார்டுல எழுதி எடுத்துட்டு தான் அத்தான் கிட்டே என் மனசை சொல்லப் போனேன்… அவர் மனசுல வேற யாரோ இருக்காங்கன்னு தெரிஞ்சதும் அதைக் கிழிச்சுப் போட்டுட்டேன்… இந்த புக்கும் இதுக்குள்ளே ஹர்ஷா எழுதிக் கொடுத்த கிரீட்டிங்கும் இருந்ததை எங்கயோ வச்சு மறந்துட்டேன்… அதை ஹர்ஷாகிட்டே கொடுத்திடுங்க, அவ எங்கே பக்கத்துல இருக்காளா…” என்று சிரித்தாள் அவள்.

அவள் பேசுவதை ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சயை ரேணும்மா முறைக்க, அவன் குற்றவுணர்ச்சியில் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“ஹர்ஷா இங்கே இல்லைடா… ஒரு வேலையா வெளியே போயிருக்கா, சரி… நீ அண்ணன் வந்தா நான் பேசினதா சொல்லு… அப்புறம் பேசறேன்… வச்சிடட்டா…” என்றவர் அலைபேசியை வைத்துவிட்டார்.

“இப்ப என்ன சொல்லற… ஒருத்தர் மேல குத்தம் சொல்லறதுக்கு முன்னாடி அவங்க அப்படிப் பட்டவங்களான்னு யோசிக்கணும்… அது எப்படி, நீதான் உன் நிழலைக் கூட நம்பாதவன் ஆச்சே… யாரோ வீட்டுப் பொண்ணு அது, அதையவா நம்பப் போற… இப்ப அவ ஏன் எழுதினா, எதுக்கு எழுதினான்னு புரிஞ்சிடுச்சுல்ல… அவ மேல எந்தத் தப்பும் இல்லைன்னும் தெரிஞ்சிடுச்சு… சரி, கிளம்பு…” என்றார்.

“எ… எங்கேம்மா…” என்றான் அவன் குற்றவுணர்வுடன்.

“ஹர்ஷா வீட்டுக்கு போயி அவகிட்டே மன்னிப்பு கேட்டு அவளைக் கூட்டிட்டு வா… ஊரான் வீட்டுப் பொண்ணை கண்டபடி பேச உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது… உன்கிட்டே சம்பளம் வாங்கினா உன் அடிமைன்னு நினைப்பா… அவ செய்யுற வேலைக்கு தான் சம்பளம் கொடுக்கிறோம்… அவ தன்மானத்துக்கு இல்லை, அதைக் கேவலப் படுத்த உனக்கு உரிமை இல்லை… கிளம்பு…” என்றார்.

“நான் எப்படிம்மா… என்னால முடியாது…” என்றான் அவன்.

“ஏன்… எதையும் யோசிக்காம திட்டி அவளை அழ வைச்சு வீட்டை விட்டுத் தொரத்த முடிஞ்சது… இப்போ நீ செய்தது தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பு கேட்டு அவளைக் கூட்டிட்டு வர முடியாதா… நீ போயி அவளைக் கூட்டிட்டு வரலைன்னா, அவ வர்ற வரைக்கும் நான் சாப்பிடப் போறதில்லை, தண்ணி கூட குடிக்க மாட்டேன்…” என்றார் அவர் தீர்மானமாக.

“அம்மா… இதென்ன பேச்சு, நான் போன் பண்ணி வேணும்னா அவகிட்டே சாரி சொல்லி வர சொல்லறேன்… நேர்ல எல்லாம் என்னால போக முடியாது…” என்றான் அவன் பிடிவாதமாக.

“அப்ப எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு ஏத்துக்கத் தயாரா இரு…” என்றவர் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டார்.

“அம்மா… பிடிவாதம் பிடிக்காதிங்க, நான் போயி கூப்பிட்டாலும் அவ வருவாளான்னு தெரியலை… நீங்க வேணும்னா போயி கூப்பிட்டுப் பாருங்க…”

“நானா… நான் எதுக்கு அவளைக் கூப்பிடணும், நானா அவளை வேதனைப்படுத்தி வீட்டை விட்டுத் துரத்தினேன்… பெண் பாவம் பொல்லாதது, ஒழுங்கு மரியாதையா நீ போயி மன்னிப்புக் கேட்டு கூட்டிட்டு வர்ற வழியைப் பாரு… கிளம்பு, நான் கொஞ்சம் படுக்கறேன்… எனக்கு படபடப்பா வருது…” என்றார் அவர்.

“எ…என்ன சொல்லறிங்கம்மா… காலைல மாத்திரை போட்டிங்களா, எடுத்திட்டு வரட்டுமா…” என்றான் பதட்டத்துடன்.

“ஒண்ணும் வேண்டாம்… இனி அடுத்த மாத்திரை நான் ஹர்ஷா கையால தான் குடிப்பேன்… உன் பாசம் நிஜம்னா கிளம்பிப் போ, இல்லை வேஷம்னா உன் வேலையைப் பார்த்திட்டுப் போ… இதுக்கு மேல நான் ஏதும் பேச விரும்பலை…” என்றவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமைதியாகி விட்டார்.

அவர் மனதுக்குள் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருந்தது. தானாய் அமைந்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து விட்டார். அன்னையைத் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டே அறையில் இருந்து வெளியேறினான் சஞ்சய்.

பிரிட்ஜைத் திறந்து குளிர்ந்த நீரை எடுத்துக் கடகடவென்று குடித்தவன், ஒரு நிமிடம் அமர்ந்து யோசித்தான்.

“நான் எதற்கு ஹர்ஷாவை இத்தனை திட்டினேன்… அவளிடம் என்ன எதிர்பார்க்கிறேன்… அவளிடம் என் மனதைப் பறிகொடுத்து பின்னால் நானும் திலீபைப் போல புலம்ப வேண்டி வரும் என்ற பயமா… அவள் என்னைக் காதலிப்பதாய் ஏதும் சொல்லவே இல்லையே, எல்லாப் பெண்களும் பணத்துக்காய் நேசிப்பார்கள் என எப்படி முடிவுக்கு வந்தேன்… என் அன்னைக்கு பணம் ஒரு பொருட்டே இல்லையே… அதைப் போல ஹர்ஷாவும் ஏன் இருக்கக் கூடாது, எதற்கு இப்படி வார்த்தைகளை விட்டேன்…”

“உண்மையில் அவளை நான் காதலிக்கத் தொடங்கி விட்டேனா… அவள் அன்பில் மயங்கிப் போவதை தோற்றுப் போவதாய் நினைக்கிறேனா, அவளை எனக்குப் பிடிக்கவில்லை என்றும் நினைக்க முடியவில்லையே… பிறகெதற்கு இப்படி வார்த்தைகளால் அவளை வேதனைப் படுத்தினேன்… அவளை வேதனைப் படுத்திவிட்டு நான் மட்டும் சந்தோஷமாகவா இருக்கிறேன்… என்னை அவள் காதலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனா, எனக்குள் ஏன் இத்தனை குழப்பம்…” தலையைப் பிடித்துக் கொண்டான் அவன்.

Advertisement