Advertisement

சஞ்சய் இரவு நீண்ட நேரம் கழித்தே வீட்டுக்குத் திரும்பினான். அவனது அலுவலகத்தில் ஒரு பிரச்சனையை முடித்துவிட்டு வரத் தாமதமாகிவிட்டது. அவனது முகமும் மனதும் கோபத்தில் நிறைந்து கிடந்தது.

அவனது ஆபீஸ் மார்க்கெட்டிங் மேனேஜர் திலீப் என்பவன், அவனைக் காதலித்த பெண் வேறு ஒருவனை கல்யாணம் செய்து கொண்டதால் மனமுடைந்து விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயற்சி செய்திருந்தான். அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடியில் மரண அவஸ்தையில் துடித்துக் கொண்டிருந்தவனை வாட்ச்மேன் கண்டு ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தார். கொஞ்சம் சீரியஸாய் இருந்த திலீப் அபாய கட்டத்தை தாண்டுவதற்கு இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.

அவனுக்கு இனி பிரச்சனை இல்லை என்று டாக்டர் கூறிய பிறகு தான் சஞ்சய் கிளம்பி வீட்டுக்கு வந்திருந்தான். உறக்கம் வராமல் அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

எப்போதும் சுறுசுறுப்புடனும், சிரித்த முகத்துடனும் சொன்ன வேலையை சரியாய் முடிக்கும் திலீப்பின் மீது சஞ்சய்க்கு ஒரு பிடித்தம் இருந்தது. அவன் ஒரு பெண்ணை விரும்புவது ஆபீஸில் அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. அவனது வருமானத்தில் பெரும்பகுதியை அவளுக்கே அவன் செலவு செய்வதையும் கேள்விப் பட்டிருந்தான். அவனது பர்சனல் விஷயத்தில் தான் எதுவும் சொல்லக் கூடாது என்பதால் சஞ்சய் எதுவும் சொல்லவில்லை.

ஹாஸ்பிடலில் இருந்த திலீப்பின் பெற்றோரின் கதறலைக் கண்ட சஞ்சய்க்கு மனம் கலங்கிப் போயிருந்தது.

“இவன் எங்களுக்கு ஒரே பிள்ளை சார்… கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்னு சொன்னான், நாங்களும் வரப் போற மருமக அவனுக்குப் பிடிச்சிருந்தா போதும்னு தான் நினைச்சோம்… இவன் சொன்னதும் ஒத்துக்கவும் செய்தோம், பொண்ணு வீட்ல பேசி கல்யாணத்தை முடிச்சு வைக்கிறோம்னு சொன்னோம்… ரொம்ப சந்தோஷத்தோட அந்தப் பொண்ணுகிட்டே சொல்லிட்டு கல்யாணம் பேசப் போகலாம்னு சொன்னான்…”

“அடுத்த நாள் வந்து அந்தப் பொண்ணுக்கு வசதியான வேற ஒரு மாப்பிள்ளையோட கல்யாணம் முடிவாகிடுச்சுன்னு சொன்னான், எங்களுக்கு ஒண்ணும் புரியலை… இவன் எதுவும் விவரமா சொல்லவும் இல்லை… இங்கே எல்லாருக்கும் மனசை விட பணம்தான் பெருசும்மான்னு என்கிட்ட சொல்லி அழுதான்… பணம் இல்லாதவனுக்கு காதல் எதுக்குன்னு புலம்பிட்டே இருந்தான்… நான் என்ன சொல்லியும் அவன் தெளியவே இல்லை…”

“நாங்க வேற நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறோம்னு சொன்னோம்… அதுல இருந்து இவன் சரியாவே இல்லை… சரி, கொஞ்ச நாள்ல சரியாகிடுவான்னு நாங்களும் விட்டுட்டோம்… இப்ப இப்படிப் பண்ணிட்டானே…” கதறினார் அவன் அன்னை.

அவர் கதறும்போதும் தன் அன்னையின் நினைவு வந்தது சஞ்சய்க்கு.

“ச்சே… என்ன மகன் இவன், இப்போது காதலித்த ஒருத்தி கிடைக்கவில்லை என்று இத்தனை நாள் அன்பு காட்டி வளர்த்த பெற்றவர்களை மறந்து இப்படி ஒரு காரியத்தை செய்யத் துணிந்து விட்டானே… என்ன பெரிய புடலங்கா காதல், காதலித்த பெண் இவனை விட வசதியான இடத்தில் இருந்து மாப்பிள்ளை வரவும் அவனைக் கல்யாணம் செய்ய சம்மதித்து விட்டாள்… இதற்குப் பெயர் காதலா, பெண்கள் பெரும்பாலும் சந்தர்ப்பவாதிகள் தானோ…”

“அன்பும், அக்கறையும் இருப்பது போலப் பேசி ஒருவனிடம் எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்டு, அவனைவிட வசதியாய் ஒருவன் கிடைத்தால் இவனைத் தூக்கிப் போட்டுப் போக யோசிப்பதே இல்லை… இந்த ஆண்களும் பெண்களின் அன்பான பசப்பு வார்த்தைகளில் மயங்கி புத்தி பேதலித்துப் போய் விடுகிறார்கள்… ச்ச்சே… காதலாம் காதல், புடலங்காய் காதல்….”

“காதல் உண்மையோ, பொய்யோ எனக்குத் தெரியாது… ஆனால் காதலிப்பவர்கள் அநேகம் பேரும் பொய்யாகத்தான் இருக்கிறார்கள்… அதனால் தான் அந்தக் காதல் தோற்றுப் போகிறது…” என நினைத்துக் கொண்டான்.

“இரு வேஷதாரிகளின்

பசப்பு வார்த்தைகளில்

மட்டுமே வளரும் காதல் என்றும்

ஜெயிப்பதில்லை… அதுவே

அவர்களைத் தண்டித்து விடுகிறது…

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தவனுக்கு அப்போதும் உறக்கம் மட்டும் வரவே இல்லை. மனதில் இருந்த வெறுப்பும், கோபமும் ஒரு வித இயலாமையைக் கொடுத்தது.

அலைபேசியை எடுத்தவன், பிரீத்தி பத்திரமாய் சென்று சேர்ந்த குறுஞ்செய்தியை வாசித்துவிட்டு சிறிது நேரம் நோண்டிக் கொண்டிருந்தான். அதை மேசையின் மீது வைத்தவனின் பார்வை புக் செல்பில் பதிய, அங்கே புதியதாய் முளைத்திருந்த அந்த ஆங்கிலப் புத்தகத்தின் மீது கண்கள் நிலைத்தது.

“இது என்னுடையது அல்லவே, இங்கு எப்படி வந்தது…” என நினைத்தவன் அதைக் கையில் எடுத்தான்.

“லவ் அண்ட் லவ் ஒன்லி… ஹூம்… லவ்வாம் லவ்வு, இதை யார் இங்கே கொண்டு வந்து வச்சது… இந்த புக்கை ஹர்ஷாவின் கையில் நான் பார்த்திருக்கிறேனே…” என்றவன் அதை எடுக்க அது கை நழுவி கீழே விழுந்தது.

அந்தப் புத்தகம் விரிந்து கொள்ள அவனது கண்கள் வியப்பில் விரிந்தன.

அதில் ஒரு இதயத்துள் இன்னொடு இதயம் துடிப்பது போல கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் ஒரு அழகான கிரீட்டிங் கார்டு இருக்க அதைக் கையில் எடுத்தான்.

உன் இதயத்துக்குள்

துடித்திடும் – என்

இதயத்தின் ஓசை

உனக்குக் கேட்கவில்லையா…

உன் இதய சிம்மாசனத்தின்

ராணியாய் வீற்றிருக்கத்

துடிக்கும் என் இதயத்தின்

துடிப்பு எனக்கு கேட்கிறதே…

என் இதயமே… உன்

இதயமாய் நான்

மாற மாட்டேனோ…

என் உள்ளம் கவர்ந்த கிருஷ்ணனே,

நீ உன் ராதையைக் கவர்ந்து

செல்லும் நாளேது…

கரம் கோர்க்கக் காத்திருக்கிறேன்

என் கண்ணாளனே…

அதைப் படித்து முடித்தவனுக்கு காரம் தலைக்கேறியது.

“என்னவொரு தைரியம், ஒரு வார்த்தை பேசுவதற்குள் இதயமாம்… காதலாம், கல்யாணமாம்… என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்… இதற்கு தான் என் அம்மாவைக் கையில் போட்டுக் கொண்டாளா, எல்லாம் பிளேன் பண்ணித்தான் செய்கிறாளா… என்னை மயக்கத்தான் எனக்குப் பிடித்தது போல் நடந்து கொண்டு நாடகம் ஆடுகிறாளா…”

“இப்படி எழுதி என் அறையில் வைத்தால் மயங்கி அவள் பின்னால் சென்றுவிடுவேன் என நினைத்து விட்டாளா, கைகாரி… பிளான் பண்ணி எல்லாரையும் கைக்குள் போட்டுக் கொண்டாளே… வரட்டும், இன்று அவளுக்கு நான் செய்யும் பூஜையில் இனி இப்படி நினைக்கக் கூட மாட்டாள்…” கருவிக் கொண்டே அவளுக்காய் காத்திருந்தான் அவன்.

மனம் ஏனோ உளைக்கலமாய் கொதித்தது.

“இவளும் சராசரிப் பெண்களைப் போலத்தானே இருக்கிறாள்… இதில் எதற்கு நல்லவள் வேஷம் போட வேண்டும், நல்ல வசதியோடு வாட்டசாட்டமாய் ஒருத்தனை அருகில் கண்டால் வளைச்சுப் போடத்தானே இந்தப் பெண்களுக்குத் தோன்றுகிறது… இவள் மட்டும் இதில் விதிவிலக்கா என்ன…” அவனுக்குள் ஒருவித ஏமாற்றம் சூழ, திலீபைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு ஹர்ஷாவைப் பற்றிய நல்ல விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. அவளையும் அந்தப் பெண் போலவே நினைத்துக் கொண்டான்.

“எப்பவும் அவ மேல சிடுசிடுன்னு எரிஞ்சு விழற என் மேல எப்படி அவளுக்கு காதல் வரும்… நான் ஒரு டைம் கூட அவளோட ஒரு வார்த்தை நல்லாப் பேசினதில்லை… அப்படி இப்படி அன்பா பார்த்ததில்லை, அப்படி இருக்க அவளுக்கு என் மேல காதல்னா எப்படி நம்ப முடியும்… இதெல்லாம் என் பணத்துக்காகன்னு தானே அர்த்தம்…” அவனே மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டான்.

“இந்த அம்மாவும் வெளுத்ததெல்லாம் பால்னு நம்பி நம்மகிட்டே ஆஹா, ஓஹோன்னு சொல்ல வேண்டியது…. வரட்டும், அவளுக்கு இன்னைக்கு இருக்கு…” என்றவன் கருவிக் கொண்டு அவளுக்காய் காத்திருந்தான். மனசுக்குள் அந்தப் பெண்ணின் மீது இருந்த கோபத்தையும், வெறுப்பையும் ஹர்ஷாவின் மீது இறக்கி வைக்கத் தயாராகி விட்டான்.

அடுத்த நாள் அனைவருக்கும் இனிதே விடிய, தனக்கான விடியலைப் பற்றித் தெரியாத ஹர்ஷாவும் எப்போதும் போல காலையில் புறப்பட்டு வந்து சேர்ந்தாள்.

வாசலில் நின்றிருந்த சஞ்சயின் காரைக் கண்டதும் மனதுக்குள் தென்றல் வீச புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள்.

சுற்றிலும் பார்வையை ஓட்டியவள், “ராணிம்மா… அம்மா இன்னும் வரலியா,  அவர் சாப்பிட்டாரா…” என்று விசாரித்தாள்.

“தம்பி எதோ கோபமா இருக்கு… சாப்பிட எதுவும் வேண்டாம்னு சொல்லிருச்சுமா…” என்றார் அவர் வருத்தத்துடன்.

“ஓ, சரி நான் கேட்டுட்டு வரேன்…” என்றவள் அவன் அறைக்கு சென்று கதவைத் தட்டினாள். கதவைத் திறந்தவனைக் கண்டவள் அதிர்ந்து போனாள். இரவு முழுதும் உறங்காததால் கண்கள் சிவந்து, முகம் வீங்கி அனல் வீசும் பார்வையுடன் நின்று கொண்டிருந்தான் சஞ்சய்.

“எ… என்னாச்சு… உடம்பு சரியில்லையா, ஏன் இப்படி இருக்கீங்க… காய்ச்சல் இருக்கா…” என்று அவன் நெற்றியில் தொட்டுப் பார்க்கப் போனவளின் கையைப் பிடித்து உள்ளே இழுத்தவன், கதவை சாத்தினான். அவள் புரியாமல் திகைத்து நிற்க அவன் முறைத்தான்.

“என்ன… அக்கறையா இருக்குற போல நடிக்கறியா, இன்னும் நான் உன்னை நம்புவேன்னு நினைக்கறியா… நீ போட்ட வேஷம் கலைஞ்சு போச்சு, போதும்…”

அனலாய் அவன் கொட்டிய வார்த்தைகள் அவள் இதயத்தைப் பொசுக்க, “எ…என்ன சொல்றீங்க… நான் எங்க நடி..ச்சேன்…” வார்த்தைகள் தடுமாறி விழுந்தன.

“ஏய்…. அதிகமாப் பணம் கிடைக்கும்னு இந்த வீட்டுக்கு வேலை செய்ய வந்தவ தானே நீ… சாதாரண ஒரு நர்ஸ், அப்படியே என்னை வளைச்சு போட்டுக்கிட்டு இந்த வீட்டுக்கே எஜமானி ஆகிடலாம்னு கணக்கு போட்டிருக்கே… என் அம்மா உலகம் தெரியாதவங்க… அவங்க வேணும்னா உன்னை நம்பலாம், நான் அப்படியில்லை… என்கிட்டே ரொம்பதான் நடிக்காதே…” என்றவனின் வார்த்தைகள் சாட்டையாய் அவளை சுழற்றியடித்தன.

“நீங்க என்ன சொல்லறீங்க, எனக்கு ஒண்ணும் புரியலை…”

“புரியாதுடி… எப்படி புரியும், தூங்குறவங்களை எழுப்பலாம்… தூங்குற மாதிரி நடிக்குறவங்களை எழுப்ப முடியுமா… உன் வேஷம் கலஞ்சு போச்சு… அன்பா, அக்கறையா எல்லார்கிட்டயும் பேசிப் பேசியே கைக்குள்ளே போட்டுகிட்டியே, பெரிய கைகாரி தான் நீ… எப்பவும் சிடுசிடுன்னு எரிஞ்சு விழுந்துகிட்டு அன்பா ஒரு வார்த்தை கூட பேசாத என்மேல உனக்கு காதலா… நீ என்ன அன்னை தெரசாவா, அன்பால எல்லாரையும் அரவணைச்சுப் போறதுக்கு…”

“என் பணத்து மேல தானே உனக்கு காதல்… பணத்துக்காக மனசை விக்குற கூட்டம், ச்சே… இதெல்லாம் என்ன பொழப்போ…” என்றவன் அந்த கிரீட்டிங் கார்டை அவள் மீது விட்டெறிந்து பேசிக் கொண்டே இருந்தான்.

அவனது வார்த்தைகள் அவளை எந்த அளவுக்கு வேதனைப்படுத்தி கூறு போடும் என்பதை உணராமல் அவன் பேசிக் கொண்டிருக்க, அதற்கு மேல் அவன் சொன்ன எதுவும் அவள் காதில் விழவில்லை. கண்களில் இருந்து வற்றாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க உயிரற்ற சிலை போல் அசையாமல் நின்றிருந்தாள்.

கனலாய் காயும் உந்தன்

கண்ணில் நான் வந்து

விழுந்தது தான் பாவமோ…

எந்தன் மனமும் எரிந்து

சாம்பலாய் போகுமோ…

என் நேசம் தெரிந்தும்

நடிக்கிறாயா… இல்லை

புரிந்து கொள்ள மறுக்கிறாயா…

கத்தியின்றி காயம் – உன்

வார்த்தை செய்யும் மாயம்…

நாவென்ற சாட்டையால்

என்னை சுழற்றுகின்றாய்…

ராட்டையாய் சுழலுது உள்ளம்…

எங்கும் சூட்டுக் கோலாய் – உன்

வார்த்தையின் தழும்புகள்…

களிம்பேதும் இல்லாமல்

தளும்பிடும் பேதை மனசு…

Advertisement