Advertisement

இதயம் – 16

சற்று நேரத்தில் பிரீத்தியை சுமந்திருந்த அலுமினியப் பறவை ஆகாயத்திற்கு எழும்பி, மெதுவாய் வேகத்தைக் கூட்டி சிறு பறவையாய் பறந்து மறைந்தது. அது கண்ணிலிருந்து மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவை அழைத்தான் சஞ்சய்.

“ஹர்ஷா, கிளம்பலாமா…”

அவனது குரலில் இனிமையாய் ஒலித்த தன் பெயரை ரசித்துக் கொண்டே யோசனையாய் ஏறிட்டவள், “ம்ம்…” என்று அவனுக்குப் பின்னில் நடந்தாள்.

வரும்போது மூன்று பேர் இருந்ததால் ஹர்ஷா பின் சீட்டில் அமர்ந்திருந்தாள். இப்போது முன் சீட்டில் அமருவதா, அவன் அதை விரும்புவானா, இல்லை பின் சீட்டில் அமர்ந்தால் திட்டுவானா… எனக் குழப்பத்துடன் அவள் நின்றிருக்க, அதைப் புரிந்து கொண்ட சஞ்சய் முன் கதவைத் திறந்து, “ஹர்ஷா, கெட் இன்…” என்றான்.

அவன் சொன்னதும் அவள் முன் சீட்டில் அமர்ந்து கொள்ள, சிறு புன்னகையுடன் காரை எடுத்தான். சற்று தூரம் இருவரும் அமைதியாகவே இருந்தனர். இருவருக்குள்ளும் யோசிக்கவும், அசை போடவும் சில மலரும் நினைவுகளும் இருந்தன.

“பிரீத்தியின் வாழ்த்து பலிக்குமா…” என சஞ்சய் யோசித்துக் கொண்டிருக்க, ஹர்ஷாவும் அதையே தான் யோசித்தாள்.

“மனதுக்குப் பிடித்த அந்தப் பெண் என்று பிரீத்தி கூறினாளே, அது யாராய் இருக்கும்… ஹிட்லருக்கு அப்படி எந்தப் பெண்ணின் மீதாவது விருப்பம் இருந்தால் ரேணும்மா எதற்கு கவலைப்படப் போகிறார்கள்… அப்படி இருந்தால் ரேணும்மா என்னிடம் சொல்லி சந்தோஷப் பட்டிருப்பாரே… ஒரு வேளை, அவரிடம் சொல்லாமல் பிரீத்தியிடம் சொல்லி இருப்பானோ, ச்சே… என்ன இருந்தாலும் ஹிட்லர் அம்மா பிள்ளை… அவரிடம் சொல்லாமல் இருக்க மாட்டான்… பிரீத்தி பொதுவாய் வாழ்த்தி இருப்பாளாக இருக்கும்…” ஹர்ஷாவின் மனது, அதிகம் யோசிக்க விடாமல் அவளை சமாதானம் செய்தது.

“இவனை அதிகம் நினைக்கக் கூடாது என்றே எப்போதும் இவனை நினைத்துக் கொண்டிருக்கிறேனே, இது எதில் போய் முடியப் போகிறதோ…” என ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், அவனைப் பார்க்கத் தவித்த கண்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள். அவன் அருகில் அமர்ந்திருக்கையில் மனதுக்குள் சிறகு விரிக்கும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல், தவித்துப் போனாள். அவனிடமிருந்து வீசிய மிதமான பர்பியூமின் மணம் காரில் நிறைந்திருக்க அவள் மனதும் நறுமணத்தில் நிறைந்தது.

அவள் யோசனையுடனே இருப்பதைக் கண்ட சஞ்சய், “உனக்கு பிரீத்தியை ரொம்பப் பிடிக்குமா…” என்றான்.

“ம்ம்… பிடிக்கும், அவள் அத்தையைப் போலவே பிரீத்தியும் பழகுவதற்கு இனியவள், கலகலப்பானவள்… அவளை யாருக்குதான் பிடிக்காது…” என்றாள்.

“ஓ… அப்போது என்னைப் போன்ற சிடு மூஞ்சிகளுடன் பழக யாரும் விரும்ப மாட்டார்கள் என்கிறாய், அப்படித்தானே…” என்றான் அவன்.

“அ…அய்யய்யோ… நான் அப்படி நினைத்துக் கூறவில்லை…” அவசரமாய் மறுத்தவளை சிறு புன்னகையுடன் பார்த்தான்.

“பிறகு எப்படி நினைத்துக் கூறினாய்…” அவளிடம் வம்பிழுப்பதற்காகவே அவன் பேசினான்.

“நான் பிரீத்தியைப் நினைத்து தான் சொன்னேன்…” என்றவளின் முகத்தில் தெரிந்த தவிப்பை ரசித்துக் கொண்டே அவள் ஏறிட்டபோது முறைத்தான் அவன்.

“அப்படியானால் நான் சிடுமூஞ்சிதான் என்பதை சொல்லாமல் சொல்கிறாய்,  அப்படித்தானே…”

“அச்சோ… அப்படி ஒன்றும் நான் கூறவில்லை, நீங்களே ஏன் இப்படி கற்பனை செய்து கொள்கிறீர்கள்…” என்றவளுக்கு உண்மையிலேயே கோபம் வந்தது.

அவன், இரண்டு வார்த்தை பேச மாட்டானா, பழக மாட்டானா… என அவளது மனம் ஏங்கித் தவிப்பது அவளுக்குத் தானே தெரியும்… இவனாகவே கற்பனை செய்து கொண்டு பழகப் பிடிக்கவில்லை என்று கூறினால் ஒத்துக் கொள்ள முடியுமா… அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், அதில் மாறி மாறித் தெரிந்த பலவித பாவனைகளைக் கண்டு சிரித்துக் கொண்டான்.

“நான் கற்பனையில் ஒன்றும் கூறவில்லை, சிலரது பழக்க வழக்கத்தை வைத்து தான் கூறுகிறேன்…” என்றான் அவனும் விடாமல்.

“உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்… என்ற உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்…” அவளும் விடவில்லை.

“ஓஹோ… அப்படியானால் நீ என்னைப் புரிந்து கொண்டாயா… இல்லையா…” இந்த நேரடியான கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்தவள் அவனை ஏறிட்டாள்.

அவள் எதற்கு அவனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான் என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. அவனுக்கு பதில் சொல்லி அவன் சிடுமூஞ்சி என்று சொன்னதை மாற்றும் எண்ணமே அவளுக்கு நிறைந்திருந்தது.

“நா…நான்… உங்களோடு நன்றாகத் தானே பேசுகிறேன், நீங்கள் கோபப்பட்டாலும் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு தானே இருக்கிறேன்…” என்றாள் அமைதியாக.

“ஆனால் நீ பிரீத்தியோடும், அம்மாவோடும் பேசுவது போல என்னிடம் பேசுவதில்லையே… அப்படியானால் நான் பழக லாயக்கில்லாத சிடுமூஞ்சி என்று தானே அர்த்தம்…” என்றான் அவன்.

இதற்கு எப்படி பதில் சொல்வது எனப் புரியாமல் யோசித்தவள், “அப்படியெல்லாம் இல்லை, நீங்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறீர்கள்… உங்களைத் தொந்தரவு செய்து உங்கள் சமயத்தை வீணாக்க முடியாதே, மற்றபடி பேசக் கூடாதென்று நினைத்துப் பேசாமல் இல்லை…” என்று விளக்கமும் கொடுத்தாள்.

“ஓ… சரி…” என்றவன், “ஒரு காபி குடித்துவிட்டு செல்லலாமா, லேசாகத் தலை வலிக்கிறது…” என்றான்.

“என்னவாயிற்று… தலைவலி மாத்திரை வேண்டுமானால் என்னிடம் இருக்கிறது…” என்றாள் அக்கறையாக.

“இல்லை… ஒரு காபி குடித்தால் சரியாகிவிடும்…” என்றவன் ஒரு கபேயில் வண்டியை நிறுத்தினான். அவன் இறங்கி நடக்க, தயக்கத்துடன் அமர்ந்திருந்தவளை நோக்கித் திரும்பியவன், “வரவில்லையா…” என்றான்.

“இ…இல்லை… எனக்கு காபி வேண்டாம், நான் இங்கேயே இருக்கிறேன்…” என்றாள் அவள். அதைக் கேட்டதும் அவன் முகம் மாற, “ஓகே…” என்றுவிட்டு அவன் மட்டும் சென்றான்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் வண்டியை எடுத்தான். முன்னர் இருந்தது போல் இல்லாமல் முகத்தை கடுமையாய் வைத்திருந்தான்.

“அய்யய்யோ… இப்போது ஹிட்லராய்த் திரும்பி வந்திருக்கிறானே… இவன் இப்படி இருக்கும்போது நாம் பேசலாமா வேண்டாமா…” என மனதுக்குள்  பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவள் வாயைத் திறந்தாள்.

“தலைவலி இப்போது பரவாயில்லையா…”

“என் தலைவலியை சரியாக்கிக் கொள்ள எனக்குத் தெரியும்… ஓவர் அக்கறை தேவையில்லை…” என்றான் முகத்திலடித்தது போல.

அதைக் கேட்டதும் அவள் முகம் வாடிப் போக, “இவனுக்கு என்னவாயிற்று… காபி குடிக்க சென்றவனுக்கு ஏதாவது கஷாயத்தைக் கலக்கிக் கொடுத்து விட்டார்களா… கசப்பாய் வார்த்தைகளைத் துப்புகிறான்…” என நினைத்தவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவனும் யோசனையிலேயே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

இருவரும் பிரீத்தி கொடுத்த பரிசுப் பொருளைத் திறந்து பார்க்காமலே வீடு வந்து சேர்ந்தனர். இருவரின் பரிசுப் பொருளும் காரிலேயே இருக்க, அவளை வாசலில் இறக்கிவிட்டு சஞ்சய் அப்படியே கிளம்பி விட்டான்.

அவனது கோபமான முகம் அவளுக்கு சங்கடத்தைக் கொடுக்க, வருத்தத்துடனே வீட்டுக்குள் நுழைந்தாள்.

ரேணும்மா அப்பொது தான் சாப்பிட்டு விட்டு உறங்கப் போயிருந்தார். அவர் மாத்திரை போட்டுக் கொண்டாரா… என ராணிம்மாவிடம் விசாரித்துவிட்டு அவளது அறைக்கு சென்றவள், சஞ்சயின் மனமாற்றத்துக்கான காரணம் என்னவாயிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் மனது, பலதும் எண்ணிக் கலங்கியது.

“இமயமே என்றாலும் – உனைத்

தீண்டும் சிறு தென்றலாய்

நான் மாற மாட்டேனா…

விடியலில் காணாமல் போயிடும்

விட்டிலின் வெளிச்சமாய் நானோ…”

யோசித்துக் கொண்டிருந்தவளை கலைத்தது கைப்பைக்குள் இருந்த அலைபேசி. அவளுடன் மருத்துவமனையில் வேலை செய்த நர்ஸ் சோபனா தான் அழைத்திருந்தாள். அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்து ஹலோவினாள் ஹர்ஷா.

“ஹாய் சேச்சி,  எப்படி இருக்கீங்க…”

“நான் சுகமாயிட்டுண்டு ஹர்ஷூ, நீயும் அம்மாவும் சுகமானோ…” என்றாள் அவள்.

“ம்ம்… சுகம் தான் சேச்சி, குட்டி பையன் எப்படி இருக்கான்… இப்பவும் குறும்பு பண்ணுறானா…”

“எண்ட மோளே, அதையேன் கேக்கறே… இப்ப குறும்பு அதிகம் ஆயிடுச்சு, உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னு தான் நான் விளிச்சது… அந்த வீட்டுல எல்லாரும் நல்ல சுபாவமா… அந்தம்மாவோட மகன் ஒரு சிடுமூஞ்சின்னு நம்ம ஹேமா சொல்லிருச்சு, அந்தாளு ஒண்ணும் பிரச்சனை இல்லையே…”

அவன் சொன்ன அதே சிடுமூஞ்சியை ஷோபனாவும் சொல்லவும் திகைத்தவள், “அப்படில்லாம் ஒண்ணும் இல்லை சேச்சி… எல்லாரும் நல்லா தான் பழகறாங்க…” என்றாள் அவள்.

“ம்ம் சரி, உன்னைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு… என் வீட்டு வழியா தானே நீ வீட்டுக்குப் போகும்… ஒரு டைம் கூட வரவே இல்லையே…”

“அது வந்து… நான் வீட்டுக்கு வரணும்னு நினைப்பேன் சேச்சி, டைமே கிடைக்க மாட்டேங்குது… ஒரு நாள் உங்க எல்லாரையும் பார்க்கறதுக்கு ஹாஸ்பிடல் வரேன்…” என்றாள் அவள்.

“ம்ம்… சரி மோளே, வா… நான் வச்சிடட்டா…” என்றவள் அலைபேசியை அணைத்து விட்டாள்.

“ஒருநாள் ஹாஸ்பிடல் போயி எல்லாரையும் பார்த்திட்டு வரணும்…” நினைத்துக் கொண்டாள் ஹர்ஷா.

அன்று மாலை ரேணுகா, அவரது சொந்தத்தில் ஒரு கல்யாணத்துக்கு செல்ல வேண்டி இருந்ததால் ஹர்ஷாவை நேரமாகவே வீட்டுக்கு கிளம்பிக் கொள்ளுமாறு கூறிவிட்டார்.

“அம்மா… கல்யாணம் நாளைக்கு தானே, நீங்க இன்னைக்கே போகணுமா… அங்கே ஸ்வீட், பாயசம்னு எல்லாம் சாப்பிட்டு வைக்காதிங்க… இப்பதான் சுகர் கொஞ்சம் நார்மலுக்கு வருது, நைட் மறக்காம மாத்திரை போடுங்க… நான் போன் பண்ணறேன், காலைல கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிடுவீங்க தானே…” வரிசையாய் கேள்வி கேட்டாள் ஹர்ஷா.

“அடடா… சஞ்சய் இல்லாத குறையைத் தீர்க்க நீ இவ்ளோ கேள்வி கேக்கறியே… எல்லாம் நான் பார்த்துக்கறேன் மா, விடியக்காலைல கல்யாணத்துக்கு இங்கிருந்து கிளம்பறது கஷ்டம்… அதும் என் ஒண்ணு விட்ட அக்காவோட பொண்ணுக்கு கல்யாணம்… போகாம இருக்கவும் முடியாது, காலைல கல்யாணம் முடிஞ்சதும் சாப்பிட்டு கிளம்பி வந்திருவேன்… நீ வர்ற நேரத்துல நானும் வீட்டுக்கு வந்திருவேன், போதுமா…” என்றார் சேலையை உடுத்திக் கொண்டே.

“அம்மா… இருங்க, நான் மடிப்பு சரி பண்ணி விடறேன்…” என்றவள், அவர் சேலையை சரி பண்ணி விட்டாள்.

“ம்ம்… அப்படியே புன்னகை அரசி போல இருக்கீங்க…” என்றாள் சிரித்துக் கொண்டே.

“ஹஹா… சஞ்சய் அப்பாவும் நான் புறப்பட்டு நின்னா இப்படித்தான் சொல்லுவாரு…” ஒரு நாணப் புன்னகையை சிந்தியவரின் முகம் வாடியது.

“அம்மா… சரி கிளம்புங்க, டிரைவர் வந்துட்டார் போலருக்கு… பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க…” என்ற ஹர்ஷா, அவரது பேகை எடுத்து வந்து டிரைவரிடம் கொடுத்து காரில் வைக்க சொன்னாள்.

மாத்திரை முன்னாடி ஜிப்ல வச்சிருக்கேன்… நான் போன் பண்ணும்போது சரின்னு சொல்லிட்டு அப்புறம் எங்கே வச்சேன்னு தேடிட்டு இருக்காதிங்க, மறக்காம மாத்திரை போடுங்க…” என்றாள் மீண்டும்.

குழந்தைக்கு சொல்வது போல அவள் மீண்டும் மீண்டும் கூறவே, “சரிம்மா… எத்தனை தடவை தான் சொல்லுவே, நான் பார்த்துக்கறேன்…” என்றவர் சிரித்தார்.

சஞ்சய்க்கு வர முடியாததால் அன்னையை அழைத்துச் செல்ல கம்பெனி டிரைவரை அனுப்பி வைத்திருந்தான்.

சற்று நேரத்தில் அவர் புறப்பட்டுக் கிளம்பிவிட, ஹர்ஷாவும் வீட்டுக்குக் கிளம்பினாள். நேரமே கிளம்பியதால் ஹாஸ்பிடல் சென்று பழைய தோழமைகளைப் பார்த்துவிட்டு செல்ல நினைத்தாள்.

“இந்த வர்ஷூ இப்பல்லாம் தினமும் போன் கூடப் பண்ணுறதில்லை… அப்படி என்னதான் வேலையோ, நான் கூப்பிடும் போதும் லைன் பிஸி… இன்னைக்கு அவளைக் கூப்பிட்டு கொஞ்சம் கண்டிச்சு வைக்கணும்… ஒரு எட்டு சென்னை போயி அவளோட ஆபீஸைப் பத்தி தெரிஞ்சுகிட்டு வரணும்…” தங்கையைப் பற்றி  யோசித்துக் கொண்டே ஸ்கூட்டியை சாரதா ஹாஸ்பிடலுக்கு விரட்டினாள் ஹர்ஷா.

Advertisement