Advertisement

அதற்கு பிறகு வந்த நாட்கள் மிகவும் இனிமையாய்க் கழிந்தன. பிரீத்திக்கு அவள் தமிழ் கற்றுக் கொடுப்பதிலும் அவள் அதைக் கொலை செய்து படிப்பதிலுமாய் நாட்கள் அழகாய் சென்றன. அவள் கனடா செல்ல சில நாட்களே இருந்ததால் விக்கியை வரச் சொல்லி ரேணுகா அழைக்க, அவன் பிசியாக இருந்ததால் வர முடியாமலே போயிற்று. பிராஜக்ட் முடியும் தருவாயில் அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை அவன் கவனித்துக் கொண்டிருந்தான்.

வர்ஷாவும், தீபாவும் அவனது அலுவலகத்தில் டிரைனியாக சேர்ந்திருக்க, அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பொறுப்பையும் விக்கியும், ராஜீவும் ஏற்றுக் கொண்டிருந்தனர். கிண்டலும், கேலியும், காதலும், சீண்டலுமாய் அழகாய் நகரத் தொடங்கி இருந்தது அவர்களின் நாட்கள். விக்கியும், வர்ஷாவும் மனதளவில் மிகவும் நெருக்கமாய் பழகிக் கொண்டிருந்தனர். ஒருவரைப் பிரிந்து ஒருவர் விலகி இருக்கும் நேரங்கள் மிகவும் குறைவு.

ராஜீவைப் பிடித்திருந்தாலும் அன்னையின் விருப்பம் இருந்தால் மட்டுமே கல்யாணத்துக்கு சம்மதிப்பேன் என்று தீபா கூறி விட்டதால் ராஜீவின் தந்தை வெளிநாட்டில் இருந்து வருவதற்காய் காத்திருந்தான் அவன். “என் டாடி உன் அம்மாகிட்டே பேசி கல்யாணம் முடிவு செய்த பிறகாவது என்னைக் காதலிப்பாயா… அதற்கும் அத்தையின் சம்மதம் வேணுமா…” கேட்டுக் கொண்டே அவள் பின்னில் அலைந்து கொண்டிருந்தான் ராஜீவ். அவளுக்கு அவனை அப்படிச் சுற்ற விடுவதில் அப்படியொரு சந்தோஷம். அவர்கள் மனதில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்த அழகான நாட்கள்.

இங்கோ, பிரீத்தி அடுத்த நாள் கிளம்ப வேண்டி இருந்ததால் மனசில்லா மனசுடன் தயாராகிக் கொண்டிருந்தாள். அன்று இரவு உடைகளை பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் ரேணுகா.

“அத்தை… எனக்கு உங்களை எல்லாம் விட்டுப் போக மனசே இல்லை, பேசாம ஹர்ஷூவையாவது நான் கனடா கூட்டிட்டுப் போயிடட்டுமா…” என்றாள் அவள்.

“அய்யய்யோ… அப்புறம் என்னை யார் பார்த்துக்குவா…” என்றார் ரேணுகா.

“உங்க பையனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சு மருமகளை வந்து பார்த்துக்க  சொல்லுங்க…” என்று அத்தையின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள் அவள்.

“நான் என்ன மாட்டேன்னா சொல்லுறேன், ஒண்ணுக்கு ரெண்டா பொண்ணுங்க கையில் இருந்தும் என் பையன் ஏதும் சொல்ல மாட்டேங்கிறானே…” என்றார் அவர். அவரையே குறுகுறுவென்று பார்த்தாள் பிரீத்தி.

“என்னடா அப்படிப் பார்க்கறே…” என்றார் அவர் புன்னகையுடன்.

“அத்தை… நான் உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்லட்டுமா…”

“எனக்குத் தெரியாம என்ன ரகசியம் டா, சொல்லு…” என்றார் ஆவலுடன்.

“உங்க மகனுக்குள்ளேயும் யாரோ ஒரு பொண்ணு மேல சின்னதா ஒரு விருப்பம் இருக்கும் போலருக்கு, அது யாருன்னு தெரியலை… ஆனா அவர் மனசுல யாரு மேலயோ ஒரு அபிப்ராயம் இருக்குறது உறுதி…” என்றாள் அவள்.

“ஹையோ, என்னடா சொல்லறே… இது நிஜமா, என் சாமியார் மகன் சம்சாரியா மாற சான்ஸ் இருக்கா… யாருடா அது, உனக்கு எப்படித் தெரியும்…” என்றார் அவர்.

“அது வந்து…” இழுத்தவள், “என் அப்பாவுக்கு என்னை உங்க மருமகளா ஆக்கணும்னு ஆசை… சஞ்சய் கூட பழகிப் பார்த்து எனக்கும் பிடிச்சுதுன்னா உங்ககிட்டே இதைப் பத்திப் பேசலாம்னு இருந்தார்…”

“ஓ… சரி அது எனக்கும் தெரியுமே… நீ விஷயத்துக்கு வாடா…” என்றார்.

“நான் வந்த புதுசுல உங்க முசுட்டு மகனை எனக்குப் பிடிக்கலை… ஆனா போகப் போக அவரைப் பத்தி புரிஞ்சுக்க தொடங்கினதும் ஒரு விருப்பம் தோணுச்சு…”

“அட… பார்ரா, என்கிட்டே நீ இதை சொல்லவே இல்லியே…” என்றார் ரேணுகா.

“போங்கத்தை… என்னதான் பிரண்டு மாதிரி பழகினாலும் இதெல்லாமா உங்ககிட்டே சொல்ல முடியும்…” சிணுங்கினாள் அவள்.

“ம்ம்… சரி மேல சொல்லு, அந்தப் பொண்ணு யாரு…” என்றார் சிரிப்புடன்.

“அச்சோ… அவசரப்படாம கேளுங்க…” என்றவள், “உங்க மகன் கண்டிப்பிலயும், ஒரு நியாயம் இருந்துச்சு… அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, பிஸினஸ் பின்னாடி ஓடுறதை ஒரு குத்தமா சொல்ல முடியாது… அது அவசியமான ஒண்ணு, அன்னைக்கு அவரோட வெளியே போயிட்டு வந்த பிறகு தான் அத்தான் மேல உள்ள என் அபிப்ராயம் மாறுச்சு… அப்புறம், அம்மா மேல உண்மையான பாசம் வச்சிருக்கிற எந்த மகனும் தன் மனைவியை சந்தோஷமா வச்சுக்கணும்னு தான் நினைப்பான்… இதுல இன்னொரு பிளஸ் பாயிண்ட், மாமியார்… உங்களை மாதிரி ஒரு மாமியார் கிடைக்க எத்தனை புண்ணியம் பண்ணி இருக்கணும்…” என்று அவரது கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவளை அன்புடன் பார்த்தார் ரேணுகா.

“நீ சஞ்சுவை விரும்பறியாடா… உண்மையை சொல்லு…”

“அப்படியும் சொல்ல முடியாது அத்தை… எல்லா குவாலிபிகேஷனும் உள்ள ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க எந்தப் பொண்ணு தான் யோசிப்பா, அப்படி ஒரு விருப்பம் மட்டும் தான்… அதை நான் நாலு நாள் முன்னாடிதான் சஞ்சு கிட்டே சொன்னேன்…”

“என்னது, சஞ்சுகிட்டே சொன்னியா… அவன் என்ன சொன்னான்…” என்றார் அவசரமாக.

“அன்னைக்கு ஒரு நாள் நைட் போர் அடிக்குதுன்னு அத்தான் கிட்ட ஏதாவது இங்க்லீஷ் புக் படிக்க வாங்கலாம்னு போனேன்… அப்படியே பேசிகிட்டு இருந்தேனா அப்போதான் இதைப் பத்தி சொன்னேன்…” என்றவள், அவர்கள் பேசியதை ரேணுகாவிடம் சொல்லத் தொடங்கினாள்.

“அத்தான், உங்களுக்கு என்னைப் பிடிக்குமா…” லாப்டாப்பில் பார்வையைப் பதித்து மூழ்கி இருந்தவன், அவள் கேள்விக்கு பதிலைக் கொடுத்து பேச்சை முடிப்பதில் குறியாக, “பிடிக்குமே…” என்றான்.

“உண்மையை சொல்லுங்க… நான் வந்த புதுசுல உங்களுக்கு என்னைப் பிடிக்காது தானே, இப்ப எப்படிப் புடிச்சது…” என்றாள்.

“இப்ப இந்த நேரத்துல எதுக்கு இந்தப் பேச்சு, புக் கேட்டே… எடுத்துட்டுக் கிளம்பு…” என்றான் அவன் எரிச்சலுடன்.

“அத்தான்… நாம ஒரே குடும்பம், ஒரே ஸ்டேடஸ்… உங்களை நானும், என்னை நீங்களும் புரிஞ்சுக்கறது ஈசி… எனக்கு உங்களைப் பிடிச்சும் இருக்கு… நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது, என் அப்பாவுக்கும், அத்தைக்கும் கூட அதான் விருப்பம்…” என்றாள் அவள்.

“இல்ல பிரீத்தி… உன் லைப் ஸ்டைல் வேற, என் எதிர்பார்ப்புகள் வேற… கல்யாணத்தில் எந்த விருப்பமும் இல்லாம தான் நான் இருந்தேன்… ஆனாலும் மனசுக்குள்ளே ஒரு ஆசை இருந்துச்சு… என்னை எனக்காய் மட்டும் விரும்புற ஒரு பொண்ணைப் பார்த்தா இந்த தீர்மானத்தை மறு பரிசீலனை பண்ணலாம்னு நினைச்சேன்… அந்த மாதிரி பொண்ணை இத்தனை வருஷமா நான் பார்க்கலை… இப்போ ஒரு சின்ன நம்பிக்கை வந்திருக்கு…”

“ஓ… இப்போ யாரையாவது உங்களுக்குப் பிடிச்சிருக்கா அத்தான்… அது யாருன்னு சொல்லுங்க, அத்தை, அந்தப் பொண்ணை சந்தோஷமா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க…” என்றாள் பிரீத்தி. அவன் கூறியது மனதிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டு.

“ம்ம்… அதுக்கான நேரம் வரலை, எனக்கானவ இவதான்னு ஒருத்தியைப் பார்த்தப்போ தோணுச்சு… ஆனா, என்கிட்டே இருக்குற பணத்துக்காக என்னை நேசிக்குற யாரையும் எனக்கு வேண்டாம்… அவ எனக்காக மட்டுமே என்னை நேசிப்பாளான்னு உறுதியான பின்னால தான் அவளை முழுமனசா என்னால நேசிக்க முடியும்… அப்புறம் தான் என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கணும்…” என்றான் அவன் சீரியஸாக.

“ம்ம்… ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட அனுபவங்கள் தான் எதிர்பார்ப்புகளை உருவாக்குது… உங்க எதிர்பார்ப்புக்குத் தகுந்த, உங்களுக்குப் பிடிச்ச ஒருத்தியோட உங்க வாழ்க்கை அமைஞ்சு நீங்க சந்தோஷமா இருக்க என் வாழ்த்துகள்… இது அத்தைக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க… அந்தப் பொண்ணு யாருன்னு எனக்கு மட்டும் சொல்லுங்க அத்தான், ப்ளீஸ்…” உதட்டை சுளித்துக் கொண்டு கெஞ்சினாள் அவள்.

“ஹஹா… நீ இப்படிப் பேசுறதைப் பார்க்கும்போது சின்ன வயசுல உன்னைப் பார்த்த போல இருக்கு… அது நினைவு வர்றதுனாலயோ என்னவோ, உன்கிட்ட கோபமாப் பேச வர மாட்டேங்குது…” என்று சிரித்தான் அவன்.

“ஹஹா… நல்ல வேளை, தப்பிச்சேன்… சரி, அதெல்லாம் இருக்கட்டும்…. பொண்ணு யாருன்னு சொல்லலையே…” என்றாள் புன்னகையுடன்.

“இல்ல பிரீத்தி… என் எதிர்பார்ப்புக்கு அவ தகுதியானவளான்னு நிச்சயமா தெரியட்டும், அப்புறம் சொல்லறேன்…” என்றான் அவன் யோசனையுடன்.

“அத்தான்… நான் இன்னும் நாலு நாள்ல கிளம்பிருவேன், என்கிட்டே சொல்லறதுக்கு என்ன… ப்ளீஸ் சொல்லுங்களேன்…”

“இல்ல பிரீத்தி… என் அம்மாகிட்டே கூட நான் சொல்ல முடியாது, எனக்கே அவளைப் பிடிச்சிருக்கான்னு சொல்ல முடியலை… அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரியணும்… அப்புறம் தானே சொல்ல முடியும்…” என்றான் அவன்.

“ம்ம்… உங்களுக்கே ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னா கண்டிப்பா அந்தப் பொண்ணு ரொம்ப கிரேட் தான்… அவளுக்கும் உங்களைப் பிடிச்சிருக்க என் வாழ்த்துகள்…” என்றாள் அவள் சந்தோஷத்துடன்.

“ம்ம்… தேங்க்ஸ் பிரீத்தி…” என்றவனின் முகத்தில் முதன் முறையாய் ஒரு நிறைவான புன்னகையைக் கண்டாள் அவள். சஞ்சயுடன் பேசியதை பிரீத்தி சொல்லி முடித்ததும் ரேணுகாவிற்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

பிரீத்தியிடம் சஞ்சய் கூறிய பெண் ஹர்ஷாவாகத்தான் இருக்கும்… என அவருக்குத் தோன்றியது. அவனாக அதை வெளிப்படுத்தும் வரை தான் ஹர்ஷாவிடம் இதைப் பற்றி பேசக் கூடாது… என நினைத்துக் கொண்டார் அவர்.

அடுத்த நாள் காலையில் பிரீத்தி மனசில்லா மனசுடன், கண் கலங்க அவர்களிடம் விடை பெற்றாள்.

அவளை விமான நிலையத்தில் விடுவதற்காய் சஞ்சயுடன் ஹர்ஷாவும் சென்றிருந்தாள். ரேணுகா சற்று சோர்வாய் இருப்பதாகக் கூறி வீட்டிலேயே இருந்துவிட்டார். விமான நிலையத்தில் அவளுக்கான விமானத்தின் அழைப்பு வந்ததும் ஹர்ஷாவிடம் வந்த பிரீத்தி, கண்கலங்க அவளை அணைத்துக் கொண்டாள்.

“ஹர்ஷூ… நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்… உங்களோட இருந்த இந்த ஒரு மாசத்தை நான் எப்பவும் மறக்க மாட்டேன்… லவ் யூ மை டியர்…” என்றவள், “நீயும் என்னை மறந்திட மாட்ட தானே…” என்றாள். அவள் அப்படிக் கேட்க, ஹர்ஷாவிற்கும் கண் கலங்கியது.

“நீ ஒரு அருமையான பிரண்டு பிரீத்தி… உன்னை நானும் மிஸ் பண்ணுவேன், அதனால என்ன… உனக்கு எப்போ தோணுதோ, அப்போ பறந்து வந்திடு…” என்றவள் அவள் கையில் சமாதானமாய் தட்டிக் கொடுத்தாள். அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்ட சஞ்சய்க்கும் நெகிழ்ச்சியாய் இருந்தது.

“ம்ம் ஷ்யூர்…” என்ற பிரீத்தி, “இது உனக்கான என் சின்ன கிப்ட்… தயவு செய்து மறுத்திடாதே, அப்புறம் திறந்து பார்…” என்று கிப்ட் பேப்பரால் சுற்றப் பட்ட ஒரு பொருளை நீட்டினாள். அவள் வாங்காமல் தயங்க, கையில் திணித்தாள்.

“அத்தான்… உங்க மேரேஜ்கு நான் வருவேனா இல்லியான்னு தெரியலை, உங்க மனசுக்குப் பிடிச்ச அந்தப் பொண்ணோட நீங்க சந்தோஷமா இருக்கணும்… என் வாழ்த்துகள்…” என்றவள், அவனிடமும் அதே போன்ற ஒரு கிப்ட் பேப்பர் சுற்றப்பட்ட பரிசுப் பொருளைக் கொடுத்தாள்.

“எனக்கெதுக்கு பிரீத்தி…” என்று கேட்டவனின் கையில் அதைத் திணித்துவிட்டு,  “ப்ளீஸ் அத்தான் மறுக்காதிங்க… ரெண்டு பேரும் நான் கிளம்பினதும் பிரிச்சுப் பாருங்க… வரேன், பை…” என்று கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே பளபளப்புடன் வாய் திறந்து நின்று, பயணிகளைத் தன் வயிற்றுக்குள் நிறைத்துக் கொண்டிருந்த பெரிய அலுமினியப் பறவையை நோக்கி நடந்தாள்.

என்னை போல் உன்னை யாரும்

நெருங்கினாலே – நெஞ்சம்

நெருஞ்சி முள்ளாய் குத்துகிறதே…

யாருமில்லா தனிமையில்

என்னை சிறை வைத்து – உன்

நினைவுகளிடமிருந்து – என்னை

மீட்டெடுக்க முயலுகிறேன்…

உன் நினைவுகளைத் தத்தெடுத்துக்

கொள்ளும் தனிமை கூட ஏகாந்தமே…

கோபக்காரன் ஆனாலும் – என்னை

கொள்ளை கொண்டவன் நீதானே…

என்ன பிடிக்குமென நீ கேட்கும் ஒரு

தருணத்திலாவது சொல்லிவிட மாட்டேனா…

எனக்கு உன்னைதான் பிடிக்குமென்று…

மன்னவனே என்றாலும்

மனதிற்கு பிடிக்கவில்லை என்றால்

மங்கையின் விழிகள் ஏறிடாது…

என்னவனே உன்னைத் தவிர

இனி யாரையும் பார்த்திடாது…

Advertisement