Advertisement

இதயம் – 15

அடுத்த நாள் காலையில் வர்ஷா, தீபாவை சென்னை ரயிலில் ஏற்றிவிட்டு, ஹர்ஷா ரேணும்மாவின் வீட்டுக்கு வரும்போது தாமதமாகி விட்டது. வீட்டுக்குள் நுழைந்தவளின் பார்வை தேடலுடன் சுழல, ஹாலில் அமர்ந்திருந்த ரேணுகா புன்னகைத்தார்.

“என்னடா ஹர்ஷூ, வந்ததும் யாரைத் தேடறே…”

“பி…பிரீத்தி எங்கேம்மா காணோம்…” என்றவளின் பார்வை அப்போதும் தேடலுடன் இருக்க, அதைக் கண்ட ரேணுகாவின் மனதுக்குள் மணி அடித்தது.

“ஆஹா… அப்படியா விஷயம், பிரீத்தியும், சஞ்சயும் கிளம்பிட்டாங்களான்னு தெரிஞ்சுக்க தான் தேடுறியா…” என்று நினைத்துக் கொண்டவர் அவளை வேண்டுமென்றே சீண்டினார்.

“என் மகன் தான் மருமகளை வெளியே கூட்டிட்டுப் போயிருக்கானே… எத்தனை வருஷமாச்சு, அவன் இப்படில்லாம் ஜாலியா வெளிய போயி… எதோ என் மருமக வந்த நேரம், அவளை வெளியே கூட்டிட்டுப் போக சம்மதிச்சான் பார்த்தியா… அதுவே கொஞ்சம் மாற்றமா தெரியுது, என்ன இருந்தாலும் மாமன் மக மேல ஒரு ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும்…” மருமகளை சிலாகித்துப் பேசி அவள் மனத்தீயில் நெய் ஊற்றி அதிகம் எரியச் செய்தார்.

அவர் கூறியதைக் கேட்டதும் கேட்கக் கூடாத வார்த்தையைக் கேட்டது போல் அவள் முகம் மாறியதை மனதுக்குள் ரசித்துக் கொண்டே மேலும் தொடர்ந்தார்.

“என் அண்ணனுக்கும் அவளை இங்கயே கல்யாணம் பண்ணிக் கொடுக்க ஆசைதான் போலருக்கு… அவ கல்யாண விஷயமா சஞ்சய் கிட்ட பேசணும்…” கூறிக் கொண்டே அவளை அடிக்கண்ணால் பார்த்தார்.

“ம்ம்… சரிம்மா, நீங்க சாப்பிட்டு மாத்திரை போட்டிங்களா… எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது, ராணிம்மாகிட்டே காபி வாங்கிட்டு வந்திடறேன்…” என்றவள், விட்டால் போதும் என்று அவசரமாய் அடுக்களைக்குள் நுழைய, அதைக் கண்ட ரேணுகாவிற்கு குஷியாகி விட்டது.

“அப்படின்னா, இந்தப் புள்ளி மானுக்கு புலி மேல ஈர்ப்பு இருக்குறது கன்பர்ம்… இனி புலியைத்தான் புல்லு திங்க வைக்கப் பழக்கணும்… இல்லேன்னா புலி கிட்ட சிக்கின புள்ளி மான் போல என் ஹர்ஷூ செல்லம் திணறிப் போயிடுவா… அவனை எப்படி வழிக்குக் கொண்டு வர்றது, அந்தப் புலியோட வேஷத்தை பாசத்தைக் காட்டி தான் கலைக்க முடியும்… ம்ம்ம், கலைக்க முயற்சி செய்வோம்…” என நினைத்துக் கொண்டார்.

அன்று முழுதும் ஹர்ஷா நார்மலாகவே இல்லை… ரேணுகாவிற்கு நேரத்துக்கு மருந்து கொடுத்து, உணவு கொடுத்து அவரை கவனித்துக் கொண்டாலும் அவ்வப்போது அவளது பார்வை வாசலைத் தழுவி, ஏமாற்றத்துடன் திரும்புவதை ரேணுகா கண்டும் காணாதது போல அமர்ந்திருந்தார்.

“ஹர்ஷூ… இந்த சஞ்சயைப் பார்த்தியா, எங்கிருந்தாலும் நேரத்துக்கு போன் பண்ணி, அம்மா சாப்டிங்களா, மாத்திரை போட்டிங்களான்னு விசாரிப்பான்… இன்னைக்கு ஒரு போன் பண்ணக் கூட அவனுக்கு தோணலை போலருக்கு… எப்படியோ, என் மகனும், மருமகளும் சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோசம் தான்…” என்றார் அவர் புன்னகையுடன்.

“அம்மா… உங்களுக்கு கால் வலிக்குதா, நான் வேணும்னா பிடிச்சு விடட்டுமா…” என்றாள் அவர் சொன்னது காதில் விழாதது போல.

“இல்லைம்மா… இன்னைக்கு கால் வலிக்கவே இல்லை, நேத்து வலிச்சதால தான் இதை சாக்கு சொல்லி சஞ்சய் நம்மளை விட்டுட்டுப் போயிட்டான்… காலைல நீயும் நேரத்துல வந்திருந்தா கால் வலி இல்லைன்னு சொல்லி நாமும் அவங்களோட போயிருக்கலாம்…” என்றார் ரேணுகா.

“ம்ம்… பரவாயில்லைம்மா, உங்க ஹெல்த் தான் நமக்கு முக்கியம்… இன்னைக்கு எங்காவது போயி சுத்திட்டு வந்திருந்தா மறுபடியும் உங்களுக்கு கால் வலி வந்திருக்கும்… ரெஸ்ட்ல இருந்ததாலே சரியாகிடுச்சு…” கூறிக் கொண்டே, “உங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வரட்டுமா…” என்றாள்.

அவள் மனதில் சஞ்சயுடன் செல்லாத ஏமாற்றம் இருந்தாலும் அதைக் கூட தன் உடல் நலனை நினைத்து சமாதானப்படுத்திக் கொள்கிறாள் என ரேணுகாவுக்குத் தோன்ற அவளை நினைத்து சந்தோஷமாய் இருந்தது.

எப்போதும் கலகலவென்று பேசிக் கொண்டிருப்பவள், அன்று நேரத்திற்கு வந்து ரேணும்மாவை கவனித்துக் கொண்டதோடு சரி… அமைதியாகவே இருந்தாள். அவள் மனது சஞ்சய், பிரீத்தியுடன் இருப்பதை நினைத்து ஏங்கித் தவிப்பதை அவள் புரிந்து கொள்ளா விட்டாலும் ரேணும்மா உணர்ந்து கொண்டார்.

அன்று அவள் வீட்டுக்குக் கிளம்பும் வரையும் அவர்கள் திரும்பி வரவே இல்லை. மாலையில் போனில் அழைத்த சஞ்சய் இரவு உணவு வேண்டாம் என்று கூறி இருந்தான். ஹர்ஷா வாடிய முகத்துடனேயே வீட்டுக்குக் கிளம்பிப் போனாள்.

அவள் மனது அவனைத் தேடுவதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல், தன் உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ளவும் முடியாமல் மிகவும் தவித்துப் போனாள்.

“வார்த்தையால் அடித்தாலும்

வலிக்கவில்லை எனக்கு…

வதைக்கிறது உன் விலகல்…

வந்துவிடு கண் முன்னே…”

அவனைக் காணாமல் அவள் மனது துடிப்பதை உணர்ந்து கொள்ளக் கூட அவளுக்கு பயமாய் இருந்தது. “அவன் ஒரு இமயம்… நான் ஒரு சிறு கல், இப்படி நினைப்பது கூடத் தவறு…” மனதுக்குள் ஒரு குரல் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்க, வலியைத் தனக்குள் ஒதுக்கிக் கொண்டு வழியில் பார்வை பதித்தவள், ஸ்கூட்டியை வீடு நோக்கி செலுத்தத் தொடங்கினாள். சோர்வுடன் வீட்டுக்கு வந்த மகளைக் கண்ட உமா, வேகமாய் அவளது நெற்றியில் கைவைத்துப் பார்த்தார்.

“என்னாச்சுமா… ரொம்ப சோர்வாத் தெரியறே, உடம்புக்கு முடியலையா… ரொம்ப வேலையா…” கரிசனத்துடன் கேட்ட அன்னையின் முகத்தைக் கண்டவள், அதில் நிறைந்திருந்த கவலையில் தன் முகத்தை சரியாக்கிக் கொண்டாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா, ரொம்ப டிராபிக்… அதான் வீடு வந்து சேர்றதுக்குள்ளே தலைவலி வந்திருச்சு… ஒரு காபி குடிச்சா சரியாப் போயிடும்…” சொல்லிக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தவளை யோசனையுடன் பார்த்தார் உமா.

அவளுக்கு காபி கலந்து கொண்டே யோசித்துக் கொண்டிருந்தார். தாய் அறியா சூல் உண்டா… எதோ ஒரு விஷயத்தை மனதிற்குள் வைத்து அலட்டிக் கொண்டிருப்பது போல அவருக்குத் தோன்றியது. அது என்னவென்று யோசித்தவருக்கு குழப்பமாய் இருந்தது.

“அவளுக்கும் வயது இருபத்தாறு ஆகி விட்டது… இன்னும் கல்யாணத்துக்குப் பார்க்காமல் இருப்பது ரொம்பத் தப்பு, இப்போது தான் சின்னவள் வேலைக்கு போகப் போகிறாளே… நாளையே ஜோசியரிடம் சென்று இவள் ஜாதகத்தைக் கொடுத்து பார்க்க சொல்ல வேண்டும்…” என நினைத்துக் கொண்டார்.

அடுத்த நாள் காலையில் இவளைக் கண்டவுடன் சஞ்சயுடன் வெளியே சுற்றிய அனுபவத்தைக் கூறத் தொடங்கிய பிரீத்திக்கு வாய் ஓயவே இல்லை. சஞ்சய் நேரமாகவே கிளம்பி சேலத்தில் ஏதோ இடத்தைப் பார்க்கப் போயிருந்தான்.

அவளை அவன் சினிமாலுக்கு கூட்டி சென்றதையும், சினிமா பார்த்துவிட்டு ஐஸ்க்ரீம் பார்லர், ஷாப்பிங், கூட்டி சென்றதையும், ஈச்சனாரி கணபதி கோவிலில் கண்ட பெரிய பிள்ளையார் சிலையையும், சொல்லிக் கொண்டே போனவள் அவன் வாங்கிக் கொடுத்த டிரஸ், மோதிரம் எல்லாவற்றையும் அவளுக்குக் காட்டினாள். அவளது முகத்தில் அத்தனை சந்தோஷம்.

சஞ்சயைப் பற்றிக் கூறுகையில் பிரீத்தியின் முகத்தில் தோன்றிய பாவனை மாற்றம் ஹர்ஷாவின் மனதுக்குள் சஞ்சயின் மீது துளிர்க்கத் தொடங்கிய சிறு காதல் செடியை அப்படியே உள்ளுக்குள் தள்ளியது. முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் அவள் மனது படும் வேதனையை ரேணும்மா புரிந்து கொண்டார். மதியத்திற்கு மேல் தமிழ் படிப்பதாகக் கூறி பிரீத்தி ஹர்ஷாவை அவளது அறைக்கு அழைத்துச் சென்று விட்டாள்.

அன்று மாலையில் வீட்டுக்கு வந்த சஞ்சய் அன்னையிடம் வந்தான்.

“அம்மா… நேத்து பிரீத்திக்கு டிரஸ் வாங்கக் கடைக்குப் போனபோது ஹர்ஷாவுக்கு ஒரு சேலை வாங்கினேன்… இந்த ஆர்டர் கிடைக்க அவளும் காரணம், அவ எதுவும் வேண்டாம்னு சொன்னாலும் மனசு கேக்கலை… ஒரு சின்ன பரிசாவது கொடுக்கணும்னு தோணுச்சு… அதான், நானே ஒரு பட்டு சேலை வாங்கிட்டு வந்துட்டேன்… இதை நீங்களே கொடுத்துடுங்க…” என்று நீட்டினான்.

அதை வாங்கித் திறந்து பார்த்த ரேணுகாவின் முகம் மலர்ந்தது.

“அடடே… ரொம்ப அழகா இருக்கே, உனக்கு சேலை செலக்ட் பண்ணக் கூடத் தெரியுமா… இந்த மயில் கழுத்துல தங்க சரிகை வச்ச பட்டு சேலை அவளுக்கு ரொம்ப நல்லாருக்கும்… நான் அவளைக் கூப்பிடறேன், நீயே அவகிட்டே கொடுத்திரு…” என்றவர், “ராணி…” குரல் கொடுத்தார்.

“என்னம்மா…” என்று எட்டிப் பார்த்த ராணியிடம், ஹர்ஷாவை அழைத்து வருமாறு கூறினார். அவர் சென்று கூறவும் கீழே வந்தாள் ஹர்ஷா.

“வா ஹர்ஷூ… இங்க பார்த்தியா, என் பிள்ளை எத்தனை அழகான சேலையை வாங்கிட்டு வந்திருக்கான்… நல்லாருக்கா…” என்று காட்டினார். அவளது விருப்பத்தைத் தெரிந்து கொள்ள அவள் முகத்தையே ஆவலாய்ப் பார்த்த மகனது பார்வையை மனதில் குறித்துக் கொண்டார் ரேணும்மா.

“ரொம்ப நல்லாருக்குமா… உங்க மருமகளுக்கா, அழகாருக்கு…….” என்றவளைத் திகைப்புடன் ஏறிட்டார் ரேணுகா.

அவளது வெண்ணிற தளிர் விரல்கள் அந்த சேலையைத் தடவிப் பார்க்கும்போதே அவளுக்கு அந்த சேலை எத்தனை அழகாய் இருக்கும் என சஞ்சயின் பிசினஸ் மூளை யோசித்துக் கொண்டிருந்தது.

“அவள் பிரீத்திக்கு என்று நினைத்து விட்டாளோ…” என நினைத்து அவசரமாய் மறுத்தான் அவன்.

“இல்ல… இது பிரீத்திக்கு இல்ல, உனக்கு என்னோட ஒரு ஸ்மால் கிப்ட்… மறுக்காம வாங்கிக்கோ…” என்றான் சஞ்சய்.

“அ…அது வந்து… சாரி, எனக்கு வேண்டாம்…” தயக்கத்துடன் கூறினாள் ஹர்ஷா. அதைக் கேட்டதும் அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது.

“ஏன்… ஏன் வேண்டாம்… நான் ஒரு புடவை வாங்கிக் கொடுத்தா கூட உனக்கு ஏத்துக்க முடியாதா, அப்படி என்ன அகம்பாவம்…” என்றான் கோபத்துடன். அவனது கோபமான குரல் அவளுக்கு அச்சத்தைக் கொடுத்தாலும், உரிமையோடு அவன் திட்டுவது சந்தோஷத்தையும் கொடுத்தது.

“அ…அம்மா… நீங்களாவது புரிஞ்சுக்கோங்க… எங்க வழக்கப்படி அந்நிய குடும்பத்து பெண்களுக்கு வேறு குடும்பத்து ஆண் புடவை எடுத்துக் குடுக்க மாட்டாங்க… கல்யாணம் முடிவானா மட்டும் தான் மாப்பிள்ளை, பொண்ணுக்கு புடவை கொடுப்பார், அதனால தான்  நான் வேண்டாம்னு சொன்னேன்…” அவள் விளக்கம் கொடுக்கவும், இப்போது திகைப்பது சஞ்சயின் முறை ஆயிற்று.

“ஓ… மாப்பிள்ளை தான் பொண்ணுக்கு சேலை குடுப்பாரா…” என்ற ரேணுகா, “எல்லாம் தானா அமையுதே…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே, “இப்ப என்ன, அவன் புடவை கொடுக்கக் கூடாது அதானே… நான் கொடுக்கறேன் நீ வாங்கிக்கோ, பிரச்சனை முடிஞ்சது…” அவள் கையில் சேலையைக் கொடுத்தார் ரேணுகா.

“அ…அம்மா… சேலைக்கு ரொம்ப விலை போலருக்கு…” என்று மீண்டும் அவள் தயங்க, சஞ்சய் அவளை முறைப்பதைக் கண்டதும் அப்படியே நிறுத்தி விட்டாள்.

“அந்த பயம் இருக்கட்டும்….” என்று நினைத்துக் கொண்டவன், “ரொம்பத்தான் பண்ணறா, நமக்கு ஆர்டர் கிடைக்க ஒருவிதத்தில் உதவியா இருந்தும் ஏதும் வேண்டாம்னு சொல்லிட்டாளே, சரி… நாமளே ஏதாவது பரிசு வாங்கிக் கொடுப்போம்னு நினைச்சு வாங்கினா வாங்கிட்டு வந்தா இல்லாத நியாயம் பேசிகிட்டு… இங்கே ஒவ்வொண்ணுங்க என்னடா கிடைக்கும்… ஆட்டைய போடலாம்னு அலையுதுங்க… பிழைக்கத் தெரியாத பொண்ணா இருக்கே…” என்று மனதுக்குள் அவளைத் திட்டுகிறோமா, பாராட்டுகிறோமா… எனப் புரியாமலே எதோ சொல்லிவிட்டு நகர்ந்தான் சஞ்சய்.

Advertisement