Advertisement

இதயம் – 14

நாட்கள் நகரத் தொடங்க, பிரீத்தியும் ஹர்ஷாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர். பிரீத்தியும் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது பேசிக் கொண்டிருக்க வீடே கலகலத்தது. சஞ்சய் இருக்கும்போது மட்டும் அமைதியாய் இருக்கும்.

இளம் மாலை நேரத்தில் சிலுசிலுவென்று வீசிய காற்று இதமாய் தீண்டிச் செல்ல, தோட்டத்தில் நாற்காலி போட்டு அங்கே அமர்ந்திருந்தார் ரேணுகா. அவருக்கு அருகில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தாள் ஹர்ஷா.

அவர்களுடன் பேசிக் கொண்டே ரோஜாச் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் பிரீத்தி. செடிகளுக்கு நீரூற்றுவது அவளுக்கு மிகவும் பிடித்த வேலை.

“அத்தை, நம்ம தோட்டத்துல ஏன் ரோஜாச் செடி மட்டும் வச்சிருக்கீங்க, வேற எந்த பூச்செடியும் வைக்கலையே…” என்றாள் பிரீத்தி.

“அது என்னமோ ரோஜாச்செடி மட்டும் தான் என் மகனுக்குப் பிடிக்குமாம்…”

“ஏன் அத்தானுக்கு அது மட்டும் பிடிச்சிருக்கு…”

“யாருக்குத் தெரியும்… அது மட்டும் தான் வைக்கணும், வேற செடி வேண்டாம்னு சொல்லிட்டான்…” என்றார் அவர்.

“முள்ளுக்குள் ரோஜாவாய்

முரட்டு குணத்துள் ஒளித்து

வைத்திருக்கிறாயோ உன்

மனதிலிருக்கும் அன்பை…”

இந்த ஹிட்லருக்கு முள்ளைப் போல தோற்றமும், ரோஜாவைப் போல மனமுமோ…. சஞ்சயைப் பற்றி யோசித்த ஹர்ஷாவின் இதழில் சிறு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

“என்ன ஹர்ஷு, எதுக்கு சிரிக்கறே…” என்றாள் அதை கவனித்துவிட்ட பிரீத்தி.

“ஒ…ஒண்ணுமில்லை…” என்று அவள் சமாளிக்க,

“அவ எதுக்கு சிரிச்சிருப்பான்னு எனக்குத் தெரியுமே…” என்றார் ரேணுகா.

“எதுக்கு அத்தை, நீங்களாவது சொல்லுங்களேன்…” கொஞ்சினாள் பிரீத்தி.

“வேற எதுக்கு… எல்லாம் என் சிரிக்காத ஹிட்லர் மகனை நினைச்சுதான் இருக்கும்…” அவர் சொன்னதும் சட்டென்று திகைத்தவள், “ஹஹா…” என்று வாய்விட்டு சிரித்து விட்டாள்.

“பார்த்தியா… என் பையனை ஹிட்லரா நினைச்சு தான் சிரிச்சிருக்கா…” என்றார் அவர் புன்னகையுடன்.

“அ…அச்சச்சோ… அப்படில்லாம் இல்லைம்மா, என்று மறுத்தாலும் அவளது முகத்தில் சிரிப்பு மறையவில்லை.

“உண்மையை சொல்லு ஹர்ஷூ… அத்தானை நீ ஹிட்லர்ன்னு நினைச்சியா, அப்படி நினைச்சிருந்தா அதுல தப்பே இல்லை… அவருக்கு சரியான பேரு தான்…” என்று சிரித்தாள் பிரீத்தியும்.

“அய்யய்யோ, நான் எதும் நினைக்கலை…” மீண்டும் மறுத்தாள் ஹர்ஷா.

“சரி… பொழைச்சு போ, ஏன் அத்தை… அத்தான் எதுக்கு இப்படி சிரிக்கக் கூட கஞ்சத்தனம் காட்டுறார்… எப்பப் பார்த்தாலும் ஒரே முறைப்பு தான்…” என்றாள் பிரீத்தி.

“அது, அவன் உனக்கு முறை மாப்பிள்ளை இல்லையா, அதான் முறைச்சுட்டே இருப்பான் போலருக்கு…” என்றார் ரேணுகா கிண்டலுடன்.

“சரி… எனக்கு தான் முறை மாப்பிள்ளை, எல்லார்கிட்டயும் எதுக்கு முறைக்கிறார்…” என்றாள் அவள்.

“பிரீத்தி… அவரோட அனுபவம் அவரை அப்படி மாத்திருச்சு போலருக்கு… வெளியே முறைச்சுகிட்டு இருந்தாலும் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத நல்ல மனசு தானே, நல்ல சுபாவமா தானே இருக்கார்…” என்றாள் ஹர்ஷா.

“பார்ரா… ஆக மொத்தம் என் அத்தானை பலாப்பழம் போலன்னு சொல்லற… வெளியே முள்ளு, உள்ளே சுளை… அப்படிதானே…”

“ம்ம்… இந்த ரோஜாச்செடி போலன்னு கூட சொல்லலாம்… நம்ம கண்ணுக்கு முள்ளு தெரிஞ்சாலும் அதுல தானே ரோஜாவும் பூக்குது… அது போல அவருக்குள்ளும் நிறைய நல்ல சுபாவம் இருக்கு… அப்படித்தானே ம்மா…” என்றாள் ரேணுகாவிடம். அவள் பேசுவதை திகைப்புடன் கேட்டிருந்த ரேணுகா, மனதுக்குள் மெச்சிக் கொண்டார்.

“உன்னைவிட என் மகனைப் புரிஞ்சுகிட்ட பொண்ணு இந்த உலகத்துல எந்த மூலைல தேடினாலும் கிடைக்காது… அவ்ளோ சரியா புரிஞ்சு வச்சிருக்கே, அவனோட அன்பைக் கூட அவன் முரட்டுத்தனமா சிடுசிடுன்னு தான் காட்டுவான்… அதை எத்தனை அழகா புரிஞ்சு வச்சிருக்கா…” என நினைத்துக் கொண்டிருந்தவர், அவள் கேட்டதும் தலையாட்டினார்.

“நீ சொன்னது ரொம்ப சரிம்மா… அவனுக்குள்ளும் பல நல்ல சுபாவம் இருக்கு, என்ன… மனுஷங்ககிட்டே அன்பைக் காட்ட தயங்குறான்… யாரையும் நெருங்க விட அவன் அப்பாவால கிடைச்ச பழைய கசப்பான அனுபவம் விட மாட்டேங்குது…” என்றார் ரேணுகாவும்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்க பிரீத்தியின் அலைபேசி அலறியது.

“அப்பா தான் கூப்பிடறார் அத்தை…” புன்னகையுடன் கூறியவள் எடுத்து உற்சாகத்துடன் பேசத் தொடங்கினாள்.

“ஹலோ டாடி…”

“ஹாய் பேபி,  ஹவ் ஆர் யூ…”

“ஐ அம் பைன்… வாட் அபவுட் யூ…”

“ஐ அம் நாட் பைன் பேபி… நீ என்னை விட்டுட்டு அங்கே போயிருக்கியே, நான் எப்படி நல்லாருப்பேன்…” என்றவர் சிரித்தார்.

“டாடி…” சிணுங்கினாள் மகள்.

“ஓகே… உனக்கு அங்கே பிடிச்சிருக்கா, உன் அத்தையும், அத்தானும் என்ன சொல்லுறாங்க… எல்லாரயும் பார்க்கணும்னு சொல்லிட்டே இருப்பியே… இப்போ ஹாப்பியா…”

“நான் ரொம்ப ரொம்ப ஹாப்பி டாடி… அத்தை சான்சே இல்லை, ச்சோ ஸ்வீட்… வெரி பிரண்ட்லி, இங்கிருந்து வந்தா அவங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்… அத்தானை எப்பவாவது பார்க்கறதோட சரி, அவருக்கு ஆபீஸ் வேலைக்கே நேரம் சரியாருக்கும்… அத்தை நிறைய கோவிலுக்கு கூட்டிட்டுப் போனாங்க… அப்புறம் எனக்கு இங்கே ஹர்ஷான்னு ஒரு பெஸ்ட் பிரண்டு கிடைச்சிருக்கா… டைம் போறதே தெரியாம கதை பேசிட்டு சந்தோஷமா இருக்கோம்…” என்றாள் உற்சாகத்துடன்.

“ஓ… உனக்கு அங்க அவ்ளோ பிடிச்சிருச்சா, திரும்பி வர்ற ஐடியா இருக்கா… இல்லியா பேபி,  டாடி பாவம் இல்லையா…”

“டாடி… பேசாம நாமளும் இங்கயே வந்து செட்டில் ஆகிடலாமா, எனக்கு இங்கிருந்து வரவே மனசு இல்லை… நான் இழந்த அன்பையும், அக்கறையையும்  சந்தோஷத்தையும் எல்லாம் வந்த இந்த சில நாள்ல இங்க அனுபவிக்கத் தொடங்கிட்டேன்… இனி இதெல்லாம் விட்டுட்டு அங்கே வந்து தனியா இயந்திர வாழ்க்கை வாழணும்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு…” என்றவளை தோளில் தட்டிக் கொடுத்தார் ரேணுகா.

“என்ன பேபி… இப்படி சொல்லறே, நம்ம பிசினஸ் எல்லாம் இங்கே தானே இருக்கு… சரி, அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… நீ அத்தை கிட்டே போனைக் குடு…” என்றார் அவர்.

“ம்ம் சரி டாடி…” என்றவள், “அத்தை, டாடி உங்ககிட்டே பேசணுமாம்…” என்றாள். அலைபேசியை வாங்கியவர் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

“பிரீத்தி… ஏன் அப்பாகிட்டே இப்படிப் பேசினே, அவர் பீல் பண்ணுவார்ல…” என்றாள் ஹர்ஷா.

“என் மனசுல உள்ளதைத் தான் சொன்னேன் ஹர்ஷூ… நிஜமாலுமே இன்னும் சில நாள்ல இங்கிருந்து கிளம்பணும்னு நினைக்கும்போது மனசுக்கு எதையோ இழந்துட்டுப் போகுற போலத் தோணுது… அத்தையை… உன்னை, இந்த வீட்டை… ஏன், என் சிடுமூஞ்சி அத்தானைக் கூட எனக்குப் பிடிச்சிருக்கு… உங்க எல்லாரையும் விட்டுட்டு ஒரு வாரத்துல கிளம்பணும்னு நினைக்கும்போது அழுகையா வருது…” கண் கலங்கியவளை ஹர்ஷா சமாதானப் படுத்தினாலும், அத்தானையும் பிடித்திருக்கிறது என்று அவள் கூறிய வார்த்தை மனதுக்குள் சுருக்கென்று ஒரு வலியைக் கொடுத்தது.

“அவள் அத்தை மகனை அவளுக்குப் பிடித்தால் நமக்கு என்ன…” என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளவும் செய்தாள்.

அதற்குள் ரேணுகா அண்ணனிடம் பேசி முடித்துவிட்டு புன்னகையுடன் வந்தார்.

“என்ன அத்தை… உங்க முகத்துல லைட் எரியுது, டாடி என்ன சொன்னார்…” என்றாள் பிரீத்தி.

“என் அண்ணா என்ன சொன்னார்னா, என் மருமகளுக்கு இங்கே ரொம்பப் பிடிச்சிருந்தா, இங்கயே ஒரு மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணி வச்சு செட்டிலாக்க சொன்னார்… என்ன பண்ணி வச்சிடவா…” என்றார் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்த அவள் கூந்தலை ஒதுக்கிக் கொண்டே.

அதைக் கேட்டதும் அவள் முகத்தில் மெதுவாய் நாணம் எட்டிப் பார்க்க, “போங்க அத்தை…” என்றவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே திரும்பியவர், ஹர்ஷாவின் யோசனையான முகத்தைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

அப்போது சஞ்சயின் கார் கேட்டுக்குள் நுழைவதைக் கண்ட ரேணுகா, “புலி எதுக்கு சம்மந்தமில்லாத நேரத்தில் என்ட்ரி கொடுக்குதுன்னு தெரியலையே…” என்று கூறிக் கொண்டே,

“சரி வாங்க… உள்ளே போவோம், இங்கே நம்மைப் பார்த்தா, அவனோட ரோஜாப் பூவெல்லாம் பறிச்சு விக்கறதுக்கு தான் நாம நிக்கற போலக் கத்துவான்…” கூறிக் கொண்டே எழுந்தார்.

அவர் காலைத் தாங்கிக் கொண்டே நடக்க, “என்னம்மா…. கால் வலிக்குதா….” என்ற ஹர்ஷா, அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.

“இவ்ளோ நேரம் உக்கார்ந்துட்டு இருந்தேன்ல… அதான், கொஞ்சம் வலிக்குது…”

“ம்ம்… சரி நான் கொஞ்சம் காலைப் பிடிச்சு விடறேன்… சரியாகிடும்…” என்றவள் உள்ளே நுழைய, ஹாலில் நின்று கொண்டிருந்த சஞ்சய் அன்னையிடம் புன்னகையுடன் வந்தான்.

“அம்மா… ஒரு குட் நியூஸ், நாம அன்னைக்குக் கொடுத்த கொட்டேஷன் ஓகே ஆகிடுச்சு… அந்த கவர்ன்மென்ட் குவாட்டர்ஸ் கட்டறதுக்கு நமக்கு ஆர்டர் கிடைச்சிருச்சு…” என்றான் சந்தோஷத்துடன்.

“ஓ… ரொம்ப சந்தோசம்டா சஞ்சு… உன் உழைப்புக்கு கிடைச்ச வெற்றி இது…” என்றார் ரேணுகா சந்தோஷத்துடன்.

“ம்ம்… என் உழைப்பு மட்டும் இல்லைம்மா… அன்னைக்கு சரியான நேரத்துல ஹர்ஷா அந்த கொட்டேஷன் ரெடி பண்ணி அனுப்பினதால தான் இந்த ஆர்டர் நமக்குக் கிடைச்சிருக்கு… இதுல நமக்கு ரொம்பப் பெரிய தொகை லாபம் கிடைக்கப் போகுது…” என்றான் அருகில் நின்ற ஹர்ஷாவையும் சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டே.

“வாவ்… சூப்பர் அத்தான், என் மனமார்ந்த வாழ்த்துகள்…” சந்தோஷத்தில் அவனை அத்தான் என்று அழைத்துவிட்ட பிரீத்தியை வித்தியாசமாய்ப் பார்த்தவன் “ம்ம்… தேங்க்ஸ்…” என்று சொல்லி ஹர்ஷாவிடம் திரும்பினான்.

“ஹர்ஷா… இந்த வெற்றியில் உனக்கும் பங்கிருக்கு, உனக்கு என்ன வேணும்னு சொல்லு… கண்டிப்பா பண்ணறேன்…” என்றவனை ஒரு நிமிடம் கண்ணிமைக்காமல் பார்த்தாள் ஹர்ஷா.

“என்ன கேட்டாலும்

தருவேன் என்கிறாயே…

உன் இதயம் கேட்டால்

என்ன செய்வாய்…

எனைக் கொள்வாயா…

இல்லை கொல்வாயா…”

அவளது பார்வை அவன் இதயம் வரை ஊடுருவுவதை உணர்ந்த சஞ்சய் திகைத்தான்.

“இதயத்தை தந்த பிறகு

தான் முடிவு செய்தேன்…

நீ எனைக் கேட்டாலும்

தரவேண்டும் என…

உனைக் கொல்லாமல்

கொள்வேன் அன்பே…”

அவளது பார்வைக்கு அவனது பதில் இப்படி இருக்காதா… என ஊடுருவிப் பார்த்த அவள் பார்வையைத் தாங்க முடியாமல், சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டவன், “நான் சொன்னது சரிதானேம்மா…” என்றான் அன்னையிடம்.

“ஆமாம் ஹர்ஷூ… உனக்கு என்ன வேணும்னு தயங்காமக் கேளும்மா, எதுவா இருந்தாலும் கேளு…” என்றார் அழுத்தத்துடன்.

“எனக்கு எதுவும் வேண்டாம்மா… நான் செய்யற வேலைக்கு அதிகமாகவே சம்பளம் கொடுக்கறீங்க, இதுக்கு மேல எதுவும் நான் எதிர்பார்க்கலை…” என்றவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

“இட்ஸ் ஓகே… உனக்கு இப்ப எதுவும் வேண்டாம்னாலும் எப்ப எந்த உதவி வேணும்னாலும் கேளு, கண்டிப்பா செய்யறேன்…” என்றவன், “அம்மா, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க…” என்றான் அவர் கையைப் பிடித்துக் கொண்டு.

Advertisement