Advertisement

“அது சரி… அவன் ஒரு முரட்டு முசுடன்னு பார்த்ததுமே புரிஞ்சுகிட்டியா நீ… என் மருமக கெட்டிக்காரிதான்…” என்று அவளது தலையில் கை வைத்து தடவினார் ரேணுகா.

“உங்களை எல்லாம் பார்க்கும்போது, பேசி சிரிக்கும்போது நான் எவ்ளோ மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது அத்தை… என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்… அம்மா இல்லாத எனக்கு அன்பான, அக்கறையான உங்க பேச்சைக் கேக்கும்போது இங்கயே இருந்துட மாட்டோமான்னு இருக்கு…”

“அதுக்கு என்ன மருமகளே… ஒண்ணுக்கு ரெண்டு பையனைப் பெத்து வச்சிருக்கேன், நீ என் மருமகளா எங்களோடவே இருந்திடு…” என்று அவர் தோளில் தட்டியவர் ஓரக்கண்ணால் ஹர்ஷாவை கவனித்தார். அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவளின் முகம் கடைசியில் அவர் சொன்ன வார்த்தையில் சிரிப்பைத் தொலைத்து.

அதைக் காணாதது போல முகத்தை திருப்பிக் கொண்டவர், “ஹர்ஷூம்மா…  என் மருமகளை பத்திரமா ஸ்கூட்டில கூட்டிட்டுப் போயி அவளுக்கு பிடிச்ச சுரிதார் வாங்கிக் குடுத்து கூட்டிட்டு வர வேண்டியது உன் பொறுப்பு, சரியா…” என்றார்.

“சரிம்மா, போயிட்டு வந்திடறோம்…” தலையாட்டினாள் ஹர்ஷா.

“இங்க வாம்மா…” என்று அவளை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றவர், அவளுக்கு பத்து சுரிதார் எடுக்குறது கூட உனக்கும் ரெண்டு சேர்த்து எடுத்துக்கோ…” என்று அவள் கையில் பணத்தை வைத்தார்.

“இ… இல்லம்மா, எனக்கு வேண்டாம்… அவங்களுக்கு வாங்கி கொடுங்க…” என்று மறுத்தாள் அவள்.

“அவளுக்கு நான் வாங்கிக் கொடுக்க தான் போறேன்… இது என் ஆசைக்கு என் ஹர்ஷுவுக்கு… நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா டா…” என்றார்.

“அம்மா…” என்றவள் மறுக்க முடியாமல் நிற்க, “ப்ளீஸ்… உனக்கு ரெண்டு சுரிதார் வாங்கிக்கோ… அப்புறம் ஒரு அழகான பட்டு சேலை உனக்குப் பிடிச்ச போல வாங்கிட்டு வா… என் மருமகளோட பிறந்த நாள் வருது… அவளுக்கு சர்ப்ரைஸா கொடுத்திடலாம்… விலையெல்லாம் பார்க்காம நல்லதா உனக்குப் பிடிச்ச போல வாங்குடா…” என்றார்.

“ம்ம்… சரிம்மா…” அவள் தலையாட்டியதும் ஹாலுக்கு வந்தனர்.

“பிரீத்தி… ஹர்ஷூகிட்டே நான் பணம் கொடுத்திருக்கேன்… உங்களுக்கு பிடிச்ச போல வாங்கிக்கோங்க… சரியா, ரெண்டு பேரும் சீக்கிரம் கடைக்குப் போயிட்டு பத்திரமா வந்திடுங்க…” என்றார்.

“ம்ம்… சரி ஆண்ட்டி…” என்ற பிரீத்தி, உற்சாகத்துடன் ஹர்ஷாவுடன் கிளம்பினாள். ஹர்ஷா ஸ்கூட்டியை எடுக்க, பின்னில் இரு புறமும் காலிட்டு அமர்ந்து கொண்டாள். சீரான வேகத்தில் போத்தீஸ் நோக்கி வண்டி ஓடத் தொடங்கியது. அவர்கள் திரும்பி வரும்போது ஹர்ஷாவை பிரீத்திக்கும் மிகவும் பிடித்திருந்தது.

********************

செந்தமிழ் தேன் மொழியாள்…

நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்…

நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்…

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்…

பருகிடத் தலை குனிவாள்… அவள்

செந்தமிழ் தேன் மொழியாள்…

கண்ணாடியின் முன்பு நின்று பாடிக் கொண்டே புறப்பட்டுக் கொண்டிருந்தான் ராஜீவ்.

“டேய், போதும்டா… அந்தக் கண்ணாடிக்கு மட்டும் கண் இருந்தா, இப்போ ரத்தக் கண்ணீர் விட்டு அழுதிருக்கும்…” என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்தான் விக்கி.

அவனை முறைத்தவன், “என்னோட திறமையை டெவலப் பண்ணவே விட மாட்டேங்கறியே… நீயெல்லாம் ஒரு நண்பனாடா, நான் எவ்ளோ நல்லா பாடினாலும் குத்தம் சொல்லிட்டே இரு… சின்ன வயசுல நான் ஸ்டேஜ்ல பாடி பரிசு வாங்கினதெல்லாம் மறந்துட்டியா…” நண்பனிடம் எகிறினான் ராஜீவ்.

“ம்ம்… பரிசு குடுத்ததும் தெரியும், அது எதுக்கு குடுத்தாங்கன்னும் தெரியும்… ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ரைம்ஸ் சொன்னதுக்கு பரிசு கொடுத்ததை பாட்டு பாடி கிடைச்சதா நீ எல்லார்கிட்டயும் சொல்லிட்டுத் திரிஞ்சதும் தெரியும்… எதோ நண்பனாச்சே, எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தக் கூடாதேன்னு நான் இந்த ரகசியத்தை கண்ட்ரோல் பண்ணி சொல்லாம இருக்கேன்… வீணா என்னை சீண்டிவிடாதே,  அப்புறம் ரணகளமாயிடும்…” என்றான் விக்கி.

“விடுடா மச்சி… பிரண்ட்சுக்குள்ளே இதெல்லாம் சாதாரணம்டா, நம்ம ரகசியத்தை நாமளே வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடாது… அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்களா…” என்று பேச்சை மாற்றினான்.

“ம்ம்… இப்பதான் கிளம்பறாங்க, நாமளும் கிளம்பினா சரியாருக்கும்…” என்ற விக்கி, “டேய் மச்சி… என்னோட ATM கார்டு எங்கே வச்சேன்னு தெரியலைடா… உன்னோடது நான் எடுத்து வச்சிருக்கேன், நீ தேடாதே…” என்று கூறி அவன் வயிற்றில் புளியைக் கரைத்தான்.

“அடப்பாவி… அது எப்படிடா, எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்கக் கிளம்பும்போது உன் ATM கார்டு காணாமப் போகும்… இதுல எல்லாம் விவரமாத்தான் இருக்கே, எடுத்துத் தொலை… கிளம்புவோமா…” என்றான்.

“நட்புக்குள்ள இதெல்லாம் சாதரணம்டா மச்சி… நீ இப்படிதான் சொல்லுவேன்னு எனக்குத் தெரியும், வா… வா… டைம் ஆச்சு…” என்று கார் சாவியை எடுத்துக் கொண்டு இறங்கினான் விக்கி.

அவர்கள் முதன் முதலில் வர்ஷாவை சந்தித்த அதே ரெஸ்டாரண்டுக்கு சென்று காரைப் பார்க் செய்துவிட்டு வரவும், நமது பாண்டவிகள் என்ட்ரி ஆகவும் சரியாக இருந்தது. பட்டர்பிளையும் சில்வண்டும் ஒரு ஸ்கூட்டியில் பறந்து வர, அகிலாவும், ஷீலுவும் ஒரு ஸ்கூட்டியில் வந்தனர். கவிதா சதீஷுடன் காரில் வந்தாள். அனைவருக்கும் அன்று தான் தேர்வுகள் முடிந்திருந்தன.

எல்லாரும் அவரவர் வீட்டுக்குத் திரும்புவதாலும், கவிதா சில நாளில் சதீஷுடன் அமெரிக்கா கிளம்புவதாலும் அனைவருக்கும் ட்ரீட் கொடுப்பதற்காய் விக்கி  அழைத்திருந்தான். விக்கியை ரசனையுடன் நோக்கிய வர்ஷுவின் முகம் புன்னகையுடன் சிவக்க, அவளை நோக்கி புருவத்தை உயர்த்தியவன், சிரிப்புடன் அவர்களை நெருங்கினான். கட்டி மீசை அவனுக்கு மிகவும் அழகாய் இருந்தது.

“வாடா மாப்பிள்ள, எல்லாரும் எப்படி இருக்கீங்க…” என அங்கேயே விசாரிக்கத் தொடங்கியவனின் பார்வை அவ்வப்போது வர்ஷாவைத் தழுவ, அதைக் கண்ட ஷீலா, அகிலாவிடம் கண் சாடை காட்டினாள்.

“கண்லயே நலம் விசாரிப்பு நடக்குது பார்த்தியா…” அதைக் கண்டு அவளும் சிரித்தாள்.

“சரி… உள்ளே போகலாம் வாங்க…” என்று ராஜீவ் கூறவும் ரெஸ்டாரண்டுக்குள்ளே நுழைந்தனர். அனைவரும் அமர்ந்ததும் அவர்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

சதீஷின் அருகில் கவிதாவும் அவளுக்கு அருகில் ஷீலா, அகிலா, வர்ஷா, தீபா, ராஜீவ், விக்கி என சதுரவடிவில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரம் சதீஷின் வேலையைப் பற்றியும் அவர்கள் அமேரிக்கா செல்வதைப் பற்றியும் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். விக்கியின் பார்வை அவ்வப்போது எதிரில் இருந்த வர்ஷாவைத் தழுவி அவளை வெக்கப்படச் செய்தது.

“ஏன் விக்ரம்… உங்க கம்பெனில ரெண்டு பேருக்கு தான் ஜாப் வேகன்ட் இருக்கா, எங்களுக்கெல்லாம் ரெபர் பண்ண மாட்டிங்களா…” என்றாள் ஷீலா.

“ச்சே… ச்சே… அப்படில்லாம் இல்லை, நீங்க ஆஸ்ட்ரேலியா போகப் போறதா வர்ஷூ சொன்னா… அதான் அதைப் பத்தி பேசலை…” என்றான் விக்கி.

“அது நம்ம கம்பெனி போல தான்… எத்தனை பேரை வேணும்னாலும் நாங்க சொன்னா சேர்த்துக்குவாங்க… நீங்களும் ஜாயின் பண்ணறதுன்னா சொல்லுங்க, சொல்லிடலாம்…” என்றான் ராஜீவ்.

“நான் சும்மா கேட்டேன் ராஜீவ்… எனக்கு விசா வந்ததும் நான் ஆஸ்ட்ரேலியா பறந்திடுவேன், அகிலாவும் ஊருக்குப் போயிடுவா… இனி எல்லாரும் எப்போ மீட் பண்ணுவோமோ தெரியலை… நாலு வருஷம் ஒண்ணாவே சுத்திட்டு இருந்துட்டு ஆளுக்கு ஒரு பக்கமா பிரிஞ்சு போகப் போறதை நினைச்சா வருத்தமா இருக்கு…” என்றாள் ஷீலு வருத்தத்துடன். அதைக் கேட்டதும் மற்ற பெண்களின் முகமும் வாடியது.

“அடடா… இந்தக் காலத்துல இதெல்லாம் ஒரு விஷயமா, பக்கத்துல இருந்தா தான் பிரண்ட்ஸா… இப்போ எத்தனை வசதி இருக்கு… மொபைல், ஸ்கைப்னு பேசறதுக்கு ஆயிரம் வழிகள்… வருஷம் ஒரு முறையாவது எல்லாரும் பிளேன் பண்ணி ஒரு இடத்துல மீட் பண்ணிக்கோங்க… தட்ஸ் சிம்பிள், நாங்க எல்லாம் அப்படிதான் பண்ணறோம்…” என்றான் சதீஷ்.

“ம்ம்… என்ன இருந்தாலும் இப்போ போல ஒண்ணா இருக்க முடியுமா… அதும் இல்லாம, நீங்க ஆம்பளைங்க, நினைச்ச போல பண்ணுவிங்க… எங்களுக்கு அப்படி முடியுமா… பெண்களோட உலகம் ரொம்ப சின்னது… கல்யாணம் ஆயிடுச்சுன்னா, குடும்பம், கணவன் இவங்களைப் பத்தி யோசிக்கணும்… பிரண்டைப் பார்க்கப் போக அவங்க அனுமதி வாங்கணும்… தன்னோட நட்பை எப்பவும் போலத் தொடர நினைக்குற எத்தனையோ ஆண்கள், மனைவியோட நட்பைப் பத்தியோ, அது விட்டுப் போகக் கூடாதுங்கறதைப் பத்தியோ யோசிக்கறதில்லையே… அதனாலதான் பெண்களுக்கு ஆண்களைப் போல கல்யாணத்துக்குப் பின்னால நட்பைத் தொடர முடியறதில்லை…” என்றாள் ஷீலா.

“ம்ம்… ஷீலு சொல்லறது ரொம்ப சரிதான், கல்யாணத்துக்குப் பின்னால தன்னோட குடும்பம், கணவன், குழந்தைங்களைப் பத்தி யோசிக்கறது மட்டும் தான் முக்கியம்னு நினைக்குறது நிறையப் பெண்களின் சுபாவம்… நட்பு அங்கே இரண்டாம் பட்சம் ஆகிடறது… மனசுக்குள்ளே ஒரு ஓரத்தில் தன்னோட பழைய நட்புகளையும் அது தந்த சுகமான நிமிடங்களையும் அசை போடறதோட பெண்களோட நட்பு குறைஞ்சு போயிடுது… மெனக்கெட்டு அவங்க எதுவும் செய்ய முடியறதில்லை…” என்றாள் தீபா.

“ம்ம்… நீங்க சொல்லுறது ஒருவிதத்தில் உண்மைதான்… ஆனா, என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகுற பொண்ணுக்கு அவ நட்பு விட்டுப் போகாமல் இருக்க நான் எல்லா விதத்திலும் உதவியா இருப்பேன்…” என்றான் விக்கி வர்ஷாவைப் பார்த்துக் கொண்டே. அதைக் கேட்டதும் அவளது இதழ்களில் புன்னகை நெளிந்தது.

“நானும் அதை வழிமொழிகிறேன்…” என்றான் ராஜீவ். அதைக் கேட்டதும் அனைவரும் சிரித்தனர்.

“சரி… சரி, அடுத்தது யார் கல்யாண சாப்பாடு போடப் போறீங்க… முன்னாடியே சொல்லிடுங்க… அங்கே எல்லாரும் மீட் பண்ண பிளேன் பண்ணிடுவோம்…” என்றான் விக்கி.

“அனேகமா நம்ம அகிலாண்டமாதான் இருக்கும்…” என்று ஷீலா கூற, ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். கிளம்பும்போது வர்ஷுவைத் தனியாய் அழைத்து வந்த விக்கி, கார் பார்க்கிங்கில் சற்று ஒதுங்கி நின்று பேசிக் கொண்டிருந்தான்.

“பட்டர்பிளை… இந்த சுரிதார் உனக்கு ரொம்ப அழகா இருக்கு…”

“ம்ம்… உங்களுக்கு ஆண்ட்டி சொன்ன போல இந்த கட்டி மீசை ரொம்ப அழகா இருக்கு… உங்களை நான் கண்ணு வச்சே முகத்தோட அழகெல்லாம் போயிடப் போகுது… பேசாம நீங்க உங்க முகத்தை இன்ஷூர் பண்ணி வச்சுக்கோங்களேன்…” என்றாள் வர்ஷா.

“என் முகத்தை உனக்கு அவ்ளோ பிடிக்குமா…” என்றான் அவன் சந்தோஷத்துடன்.

“ம்ம்… முதன் முதலா உங்களைப் பார்த்ததுமே என்னை இம்ப்ரெஸ் ஆக வச்ச முகமாச்சே…” என்றவள் சிரிக்க, அவள் கையைப் பற்றிக் கொண்டான் விக்கி.

“பட்டர்பிளை… நீ ஊருக்குப் போனா என்னோட போன்ல கூடப் பேச மாட்டே… நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவனே…” என்றான் வருத்ததுடன். வர்ஷாவும், தீபாவும் நாளை கோவை செல்வதாக இருந்தனர். ஒரு வாரம் வர்ஷாவின் வீட்டில் தங்கிவிட்டு இருவரும் திரும்பி வந்ததும் விக்கியின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்வதாகக் கூறி இருந்தனர்.

“என்ன பண்ணறது விக்கி… அம்மாவையும், அக்காவையும் பார்க்கப் போகணும்ல… ஒரு வாரம் தானே, அப்புறம் ஆபீஸ்ல ஜாயின் பண்ணிட்டா நாம தினமும் பார்த்துக்கலாமே…” என்றாள் வர்ஷா.

“சீக்கிரமே ரிடர்ன் வந்திரு பட்டர்பிளை… உனக்காய் நானும், நம்ம ஆபீஸும் காத்திட்டு இருக்கோம்…”

“ம்ம்… இந்த பட்டர்பிளையும் உங்களோட சிறகடிக்குறதுக்கு காத்திட்டு இருக்கு…” என்றவளின் கையில் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே முத்தமிட்டான் விக்கி.

இதயமில்லாத உன்னை

நேசிக்கவில்லை நான்…

தொலைத்திட்ட என் இதயத்தைத்

தான் உன்னிடம் தேடிக்

கொண்டிருக்கிறேனடா…

தொலைத்த இடத்தில் தேடினால் தான்

தொலைத்தது கிடைக்குமாமே…

விழிகளுக்கு விலங்கிட்டாய்…

இதயத்திற்கு தாழிட்டாய்…

இருந்தும் எப்படி என்னை

சிறை எடுத்தாய்… கண்கள்

தீண்டும் ஒவ்வொரு முறையும்

என்னை நீ காயப்படுத்தினாலும்

உனைக் கண்ட மறுநொடியே

இதயத்தை உன்னிடம் கொடுத்துவிட

துடிக்கிறேனடா… என்னை உன்னிடம்

தொலைத்துவிட்டேன் என்பதற்காவது

உன்னில் ஒரு முறை என்னைத்

தேடக் கூடாதா… தேடலில்

இணைவது நம் இதயமாகட்டுமே…

Advertisement