Advertisement

இதயம் – 13

காலையில் நேரத்திலேயே பூஜையை முடித்துக் கொண்டு பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார் ரேணுகா.

“ராணி எனக்கு காபி எடுத்திட்டு வா…”

“இதோ கொண்டு வரேன் மா…” என்ற ராணி சர்க்கரை இல்லாமல் காபி கலந்து அவரது அறைக்குக் கொண்டு போய் கொடுத்தார்.

“சஞ்சு ஜாகிங் முடிச்சு வந்துட்டானா…”

“இன்னும் இல்லைம்மா, இப்ப வர்ற நேரம் தான்…”

“ப்ரீத்தி எழுந்துட்டாளா… அவளுக்கு பெட் காபி வேணுமான்னு கேட்டுப் பார்த்தியா…”

இல்லம்மா, அவங்களே வரேன்னு சொன்னாங்க…” என்றார் ராணி.

அப்போது சஞ்சு வரவே அவனுக்கு காபி எடுக்க சென்றார் ராணி.

காபிக் கோப்பையுடன் அன்றைய தினசரியை விரித்து பார்வையைப் பதித்தவன், அருகில் கேட்ட பிரீத்தியின் குரலில் நிமிர்ந்தான்.

“குட் மார்னிங் சஞ்சய்…” என்றவளை நோக்கியவனின் முகம் சுருங்கியது.

முழங்காலுக்கு மேல் தொடை வரை இருந்த குட்டி டிரவுசரும் கழுத்து இறங்கிய ரவுண்ட் நெக் டீஷர்ட்டும் அவளது அங்க அடையாளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது.  அவளது செழுமையான கோதுமை நிற தேகம் அங்கங்கு தாராளமாய் வெளிப்பட மிகவும் செக்ஸியாய் தெரிந்தாள். அவளை நோக்கியவனின் முகம் அது  பிடிக்காமல் அருவருப்பாய் சுருங்கியது.

காபியைக் குடித்துவிட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்த ரேணுகா மருமகளைக் கண்டு திகைத்து நிற்க, மகனின் சுளிந்த முகம், அது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்தியது. சட்டென்று எழுந்த சஞ்சய், ஒன்றும் பேசாமல் அன்னையை முறைத்துக்  கொண்டே அவனது அறைக்கு சென்று விட்டான்.

“குட் மார்னிங் ஆண்ட்டி… சஞ்சய்க்கு என்னாச்சு, ஏன் விஷ் கூட பண்ணாம எழுந்து போறார்…” என்றாள் அவள் குழப்பத்துடன். அவளது குழப்பமான முகம், ரேணுகாவிற்கு சங்கடத்தைக் கொடுக்க, அவளிடம் பக்குவமாய் எடுத்துக் கூறினார்.

“அது வந்து… பிரீத்திம்மா, அவனுக்கு இப்படி டிரஸ் போட்டா பிடிக்காது… அதும் இல்லாம இந்த மாதிரி டிரஸ் பண்ணுறதெல்லாம் நம்ம நாட்டு வழக்கம் கிடையாதுல்ல… அதான் அப்படியே பழகிட்டு உன்னை இப்படிப் பார்க்கும்போது பிடிக்காம எழுந்து போயிட்டான்… நீ ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதே, உங்க நாட்டுல நீ வளர்ந்த விதம் அப்படி… அவனுக்கு நான் சொல்லிப் புரிய வைக்குறேன்…” என்றார் அவர்.

“ஓ… சாரி ஆண்ட்டி, நான் அங்க இருக்குற போலவே டிரஸ் பண்ணிட்டேன்… இதைப் பத்தி யோசிக்கவே இல்லை… எங்கிட்ட இருக்குறதெல்லாமே இந்த மாதிரி டிரவுசரும், பாண்ட்டும் தான்… எனக்கு சாரி கட்டக்கூட தெரியாதே…” என்றாள் அவள் கவலையுடன்.

“அட… உன்னை யாருடா சாரி கட்ட சொன்னா… இந்த மாதிரி டிரஸ் போட வேண்டாம்னு தான் சொன்னேன்… இங்கத்த ஆளுங்களுக்கு இப்படில்லாம் பார்த்துப் பழக்கம் இல்லை… அவ்ளோ தான், நீ சாரி எல்லாம் கட்ட வேண்டாம்… சுடிதார் போட்டுக்கோ, போதும்…” என்றார் அவர் புன்னகையுடன்.

“ஓ… சரி ஆண்ட்டி… இன்னைக்கே நான் சுரிதார் எடுத்துடறேன்…” என்றாள் அவள்.

“ம்ம்… சரிம்மா… நீ போயி டிரஸ்ஸை மாத்து… நான் சஞ்சுகிட்டே பேசிட்டு வரேன்…” என்றவர், அவனது அறைக்கு மாடிப்படி ஏறினார்.

உடை மாற்றி ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் அறைக்குள் நுழைந்த அன்னையைக் கண்டதும் திரும்பினான்.

“டேய் சஞ்சு… என்னடா அவகிட்டே இப்படி மூஞ்சியைத் திருப்பிட்டு வந்திட்டே… அவ உன்னைப் பத்தி என்ன நினைப்பா, பாவம்… அவளுக்கு இதெல்லாம் தெரியாது, அவ முகத்தைப் பார்க்கவே பாவமா இருக்கு…” என்றவரிடம் திரும்பியவன் முறைத்தான்.

“இங்க பாருங்கம்மா… இங்கே வந்து நம்மளோட இருக்கணும்னா நம்ம வழக்கப் படி தான் இருக்கணும்… இந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு வீட்டுக்குள்ளே சுத்தக் கூடாதுன்னு நீங்க சொல்லிக் கொடுக்கலையா…”

“டேய்… இன்னைக்கு தானே டா இப்படிப் பாக்கறேன்… இப்போ சொல்லிட்டேன், இனி அவ அந்த மாதிரி டிரஸ் போட மாட்டா…”

“பொண்ணுன்னா அழகா இருந்தா மட்டும் போதாது… அடக்கமாவும் இருக்கத் தெரியணும்… ஒரு இடத்துக்குப் போகும்போது அதுக்குத் தகுந்த மாதிரி நம்ம பழக்க வழக்கத்தையும் கொஞ்சம் மாத்திக்கணும்… இப்படியா பசங்க மாதிரி டிரஸ் போட்டுட்டு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம என் பக்கத்துல வந்து உக்காருவா…” என்றான் அவன் கோபத்துடன்.

“டேய்… அவ பழகின விதம் அப்படி, மத்தபடி என் மருமக நல்ல பொண்ணுடா… எதோ தெரியாம செய்துட்டா, நீ கோவிச்சுகிட்டு வந்தது அவளுக்கு வருத்தமா இருக்கும்… ஒரு வார்த்தை நல்லவிதமா பேசிட்டு போ…”

“முதல்ல அவகிட்டே சொல்லி அந்த டிரவுசரை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு நம்ம ஹர்ஷா போல டிரஸ் பண்ண சொல்லுங்க… பொண்ணுங்கன்னா அப்படி இருக்கணும்…” என்றவன்,

“நான் கிளம்பறேன்…” என்று கூறிவிட்டு பாகை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன், “நம்ம ஹர்ஷா…” என்றதும் ஒரு நொடி திகைத்து நின்ற ரேணுகா, “டேய்… டிபன் சாப்பிட்டுப் போயேண்டா…” என்றார் அவன் பின்னில் வந்து.

உடை மாற்றுவதற்காய் மாடிக்கு வந்த பிரீத்தி அவன் பேசியது அனைத்தையும் கேட்டுக் கொண்டு அறைக்கு வெளியே நின்றிருந்தாள். அவளைக் கோபத்துடன் கேவலமாய்ப் பேசியதோடல்லாமல், ஒரு சாதாரண நர்சோடு தன்னை ஒப்பிட்டுப் பேசியதும் அவளுக்கு அவமானத்தில் முகம் சிவந்து கோபமாய் வந்தது.

வெளியே வந்தவன், அவள் அங்கே நிற்பதைக் கண்டாலும் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டான். அண்ணன் மகள் கோபத்துடன் நிற்பதைக் கண்ட ரேணுகா அவசரமாய் அவளை சமாதானப்படுத்தத் தொடங்கினார்.

“அடடா… அவன் பேசுறதெல்லாம் கேட்டு நீ பீல் பண்ணாதடா… அவன் எப்பவுமே இப்படிதான், அவனை விட்டுத் தள்ளு.. நீ டிரஸ் மாத்திட்டு வா,  டிபன் சாப்பிடலாம்…” என்றார்.

அவள் அப்படியே நிற்பதைக் கண்டவர், “அத்தை சொல்லறேன்ல, போடா… உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன், சீக்கிரம் வா…” என்றார் அன்புடன்.

அதை மறுக்க முடியாமல் அவளது அறைக்கு நடந்தாள் அவள். டிரவுசரை மாற்றி பாண்டும் ஷர்ட்டும் அணிந்து வந்தவளுடன் ரேணுகாவும் சாப்பிட அமர்ந்தார்.

“ராணி, உனக்கு வேண்டி வெண் பொங்கலும் மெதுவடையும் பண்ணிருக்கா, சாப்பிடு…” என்றவர் அவள் பிளேட்டில் பரிமாறினார்.

அவள் அமைதியாய் சாப்பிடத் தொடங்க, “நீ இன்னும் சஞ்சு சொன்னதையே நினைச்சுட்டு இருக்கியா… என்னம்மா நீ, வெளிநாட்டுல வளர்ந்த பொண்ணு… ரொம்ப போல்டா இருப்பேன்னு நினைச்சா… இந்த சின்ன விஷயத்துக்கு மனசைப் போட்டு அலட்டிக்கறே…” என்றார் ரேணுகா.

“ஏன் அத்தை, இப்படி டிரஸ் பண்ண வேண்டாம்… மாத்திட்டு வான்னு சஞ்சய் என்கிட்டே சொன்னாலே நான் மாத்தி இருப்பேனே… நம்மகிட்டே வேலை செய்து சம்பளம் வாங்குற அந்த ஹர்ஷாவை விட நான் குறைஞ்சு போயிட்டேனா… சஞ்சய் எப்படி அப்படி சொல்லலாம்…” என்றாள் அவள்.

“ஹர்ஷூவும் நம்ம வீட்டுப் பொண்ணு போல தான்மா… நம்ம கிட்டே சம்பளம் வாங்குறதாலே அவ எந்த விதத்துலயும் குறைஞ்சவ கிடையாது… அன்புலயும், மத்தவங்களை அனுசரிச்சு நடந்து போற பண்புலயும் அவ நம்மை விட உயர்ந்தவ, நம்பிக்கையானவளும் கூட… இந்த வயசுல அவளுக்குன்னு எதையும் யோசிக்காம குடும்பத்துக்காக மட்டுமே வாழ்ந்திட்டு இருக்கா…”

“ஓ… அதுக்காக சஞ்சய் அப்படி சொல்லுவாரா…” என்றாள் அவள்.

“சஞ்சய் அவளை சொன்னது எனக்கே ஆச்சர்யம் தான், ஏன்னா அவன் எப்பவும் அவ கிட்ட எரிஞ்சு விழுந்துட்டே தான் இருப்பான்… ஆனா அவன் சொன்ன மாதிரி அவ எப்பவும் மத்தவங்க கண்ணை உறுத்தாத மாதிரி தான் டிரஸ் பண்ணுவா… எளிமையா இருந்தாலும் பாக்குறவங்களுக்கு ஒரு மரியாதையை தோண வைக்கும்… அந்த மரியாதைல தான் அவளை சொல்லி இருக்கான், நீ குறைச்சல்னு சொல்லலைமா…” என்று விளக்கினார் ரேணுகா.

“என்ன ஆண்ட்டி, நீங்களும் ஹர்ஷா புராணம் பாடறீங்க… விட்டா ரெண்டு பேரும் சேர்ந்து ஹர்ஷாவுக்கு சிலையே வச்சிருவீங்க போலருக்கு, என்ன இருந்தாலும் வேற வீட்டு ஆளுங்களை அப்படியே நம்பி நம்ம வீட்டுல புழங்க விடக் கூடாது… என் அப்பா எப்பவும் சொல்லுவார், மாமாவோட நண்பன் அவரை ஏமாத்தின கதையை… நீங்களும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்…”

“ம்ம்… மறக்கலைமா, அதுக்காக நம்மளை நாமே நம்பாம இருக்கறதும் முட்டாள் தனம்… இந்த நம்பிக்கை அவளோட பழக்க வழக்கத்துனால வந்தது… சரி, உனக்கு இன்னும் கொஞ்சம் பொங்கல் வைக்கட்டுமா…” என்றார்.

“ம்ம்… வைங்க அத்தை,பொங்கல்னு ஒரு டிஷ் இருக்குன்னு அப்பா பேசுறதுல கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா இதெல்லாம் நான் சாப்பிட்டதே இல்லை…” என்றவள் ரசித்து சாப்பிடத் தொடங்கினாள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வரவும், ஹர்ஷா உள்ளே வந்தாள். கண்ணை உறுத்தாத லாவண்டர் வண்ண சுரிதாரில் அழகாய் இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரீத்திக்கு, ஹர்ஷாவைப் பற்றி அவர்கள் சொல்வது உண்மைதான் எனத் தோன்றியது.

“அம்மா… மாத்திரை தீர்ந்திடுச்சுன்னு சொன்னிங்களே… வாங்கிட்டு வந்துட்டேன், இந்தாங்க போட்டுக்கங்க…” என்றவள் அவள் பாகில் இருந்து ஒரு சின்ன கவரை வெளியே எடுத்தாள். அவருக்கு வேண்டிய மாத்திரையை எடுத்துக் கொடுக்க அவர் விழுங்கினார்.

“இந்தாங்கம்மா…” என்றவள் கவரை நீட்டினாள்.

“நீயே என் ரூம் மேல் டிராவுல வச்சிடுடா… அங்கேயே பணம் இருக்கும்,  இதுக்கு எவ்ளோ ஆச்சோ எடுத்துக்கம்மா…” என்றார்.

“இல்லம்மா… ஒண்ணும் அவசரமில்லை, நீங்களே அப்புறம் பணத்தை எடுத்துக் கொடுங்க… மாத்திரையை ரூம்ல வச்சிடறேன்…” என்றவள் அவரது அறைக்கு சென்றாள்.

“பார்த்தியா… நாமளே உரிமை கொடுத்தாலும் அவ எடுத்துக்க மாட்டா,  அவளோட லிமிட் தாண்டி வரவே மாட்டா…”

“ஓ… அவ எதுக்கு உங்களை அம்மான்னு கூப்பிடறா…”

“அவ என்னை மேடம்னு தான் கூப்பிட்டா… நான் அம்மான்னு கூப்பிட சொல்லி கேட்டுகிட்டதால அப்படிக் கூப்பிடறா, அவ என்னோட உடம்பை மட்டும் கவனிச்சுக்கலை… என் மனசுல இருந்த தனிமையை ஓட்டினதும் அவ தான்…”

“ஓ… இன்ட்ரஸ்டிங்… நீங்க சொல்ல சொல்ல எனக்கு கூட ஹர்ஷாவைப் பிடிச்சிரும் போலருக்கு…” என்றாள் சிரித்துக் கொண்டே.

“கண்டிப்பா பிடிக்கும் கண்ணு… அந்தப் பொண்ணு இங்கே வந்த பிறகு தான் அம்மா முகத்துல நிரந்தரமா புன்னகை இருக்கு… எல்லாருக்கும் பிடிக்குற போல தான் அதோட சுபாவம்…” என்றார் ராணிம்மா சந்தோஷத்துடன்.

“ஓ… நீங்களும் அவ ரசிகை தானா, விட்டா அவ பேர்ல ரசிகர் மன்றமே வச்சிடுவிங்க போலருக்கு…” என்று அவள் சிரிக்க, அங்கு வந்த ஹர்ஷா, “யாருக்குமா ரசிகர் மன்றம்…” என்றாள் புன்னகையுடன்.

“எல்லாம் உனக்கு தான்… என்ன வச்சிடலாமா…” என்று ரேணுகா கேட்க, “போங்கம்மா, உங்களுக்கு எப்பவும் என்னை கிண்டல் பண்ணிட்டே இருக்கணும்…” என்று சிரித்துக் கொண்டே அவரிடம் வந்தவள் அவருக்கு பிரஷரை பரிசோதித்தாள்.

“ம்ம்… கொஞ்சூண்டு அதிகமா இருக்கு…” என்றவள்,

“அம்மா… நாளைக்கு நான் வந்து பிளட் டெஸ்ட் எடுத்த பிறகு டிபன் சாப்பிட்டா போதும்… சுகர் டெஸ்ட் பண்ண கொடுத்திடலாம்…” என்றாள்.

“சரிம்மா பண்ணிடலாம், ராணி… ஹர்ஷூக்கு காபி குடுக்கலையா…” என்றார்.

“இதோ… அவங்களுக்கு தான் ஆத்திட்டு இருந்தேன்மா…” என்றவர், அவளிடம் காபிக் கோப்பையை நீட்டினார்.

அவர்களுக்குள் இருந்த அந்த பாசப் பிணைப்பு, பார்த்துக் கொண்டிருந்த பிரீத்திக்கு வியப்பைக் கொடுத்தது.

“என்ன மருமகளே… எங்களை அப்படி ஆச்சர்யமா பார்த்திட்டு இருக்கே, சரி… உனக்கு சுரிதார் எடுக்கணும்னு சொன்னியே… டிரைவரை வர சொல்லறேன்… ஹர்ஷுவைக் கூட்டிட்டு கார்ல போயிட்டு வந்திடுங்க…” என்றார் ரேணுகா.

“காரெல்லாம் போர் அடிக்குது ஆண்ட்டி… எங்காவது அப்படியே சுத்திட்டு வரணும் போலருக்கு… நாங்க ஹர்ஷாவோட ஸ்கூட்டில போயிட்டு வரட்டுமா…” என்றாள் பிரீத்தி.

“என்னது ஸ்கூட்டிலயா, சஞ்சய்க்கு தெரிஞ்சா திட்டுவானே…”

“அத்தான்கிட்டே சொல்ல வேண்டாம், என் செல்ல அத்தையே…” என்று ரேணுகாவின் கன்னத்தைப் பிடித்து அவள் கொஞ்ச அதைக் கண்டு மற்ற இருவரும் சிரித்தனர்.

“அத்தானா… ஹஹா, இப்படில்லாம் உனக்கு சொல்லத் தெரியுமா…” என்றார் ரேணுகா.

“அத்தானைப் பார்க்கப் போறோம்னு மனசுக்குள்ளே சொல்லிட்டே இருப்பேன்… இல்லேன்னா மறந்து போயிடும்ல, ஆனா சஞ்சயைப் பார்த்ததும் அத்தான்னு கூப்பிட கொஞ்சம் பயமா இருந்துச்சு… அதான் கூப்பிடலை…” என்றாள் அவள்.

Advertisement