Advertisement

அழகான ஞாயிற்றுக் கிழமை மாலை.

சூரியனின் மாலை வெயிலில் மெரீனா பீச்சில் அங்கங்கு சிலர் நடமாடிக் கொண்டிருக்க, நிழல் தேடி ஒதுங்கி இருந்தது பல காதல் ஜோடிகள். மிச்சம் இருந்த வெயிலும் மறைந்து விட்டால் அங்கு முழுவதும் பல தரப்பட்ட மக்களால் வண்ண மயமாய் காட்சியளிக்கத் தொடங்கிவிடும்.

சற்று தள்ளி ஓரமாக கடலைப் பார்த்து அமர்ந்திருந்தனர் விக்ரமும், வர்ஷாவும். அவளுக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருக்க, விக்கி, ஞாயிறன்று அவளைக் காணவேண்டும் என வற்புறுத்தவே தீபாவுடன் கடற்கரைக்கு வந்திருந்தாள். தீபாவும், ராஜீவும் வழக்கம் போல சற்றுத் தள்ளி நின்று கடலை நோக்கி கடலை போட்டுக் கொண்டிருந்தனர்.

கரையைத் தழுவிவிட்டு திரும்பி ஓடும் அலையைப் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தாள் வர்ஷா. அவளையே பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

அவனிடம் திரும்பியவள், “என்ன, அப்படிப் பாக்கறிங்க விக்கி…”

“ஒரு சின்ன கவிதை தோணுச்சு, சொல்லட்டுமா…” என்றான்.

“ம்ம்… சொல்லுங்க…” என்றவள் ஆவலுடன் அவனை நோக்கினாள்.

“கரையாக நீ இருந்தாலே

அலையாக நான் தீண்டுவேனே…

நுரையாக நாமும் கலந்திருப்போமே…

எனை நீயும் பிரியும் நொடியில்

உதிர்ந்திடுமே எனதுயிரும்…

உன் சிறு தழுவலில் மீண்டும்

உயிர்த்திடுவேன்… உனக்கெனவே…”

“வாவ் செம,  நீங்க நிறைய கவிதை எழுதுவீங்களா விக்கி…”

“நிறையன்னு சொல்ல முடியாது… இப்போ கொஞ்ச நாளா அப்பப்போ கவிதை தோணிட்டே இருக்கு, அது என்ன பெரிய அதிசயமா… ரொம்ப ஈஸி பட்டர்பிளை…”

அவன் சொன்னதைக் கேட்டதும் விழிகளை வியப்புடன் அகல விரித்தவள், “அப்படியா, எப்படி எழுதணும்… எனக்கு கவிதையை ரசிக்க மட்டும் தான் தெரியும்… எனக்கும் சொல்லிக் கொடுங்களேன் விக்கி…” என்றாள்.

“இட்ஸ் வெரி சிம்பிள் பேபி, அது ஒண்ணும் பெரிய வித்தை இல்லை… என்னையே பார்த்துகிட்டிரு, கவிதை தானாய் வரும்…” என்றான் அவன்.

“என்னது… உங்களைப் பார்த்தா கவிதை வருமா, விளையாடறீங்களா…”

“ஆமா… நான் சொன்ன கவிதை கூட உன்னைப் பார்த்து தான் தோணுச்சு…” என்று சிரித்தான் அவன். அவள் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்க,

“காதலித்துப் பார், கவிதை வரும்னு நம்ம கவியரசு வைரமுத்து சொன்னது தெரியாதா… இப்போ தானே நீ என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிருக்கே, போகப் போக உனக்கும் கவிதை வந்திரும்…” என்றான் அவன்.

“ஹூக்கும்… நான் இப்பவா காதலிக்கறேன், எப்ப என்னைப் பார்த்து முதன் முதலா சிரிச்சிங்களோ… அப்ப அந்தக் கன்னத்துக் குழியில் தொபுக்கடீர்னு விழுந்தவ தான்… இப்பவும் எழுந்திருக்க முடியலை… உங்க முகத்துக்கு பிளஸ் பாயிண்டே நீங்க சிரிக்கும்போது கன்னத்துல விழற குழி தான்… அப்படியே அதுக்குள்ளே குடித்தனம் நடத்தணும் போல ஆசையாருக்கு…” அவள் மென்மையான குரலில் கூறவும் ஆச்சர்யத்துடன் ஏறிட்டான் அவன்.

“பட்டர்பிளை… நிஜமா தான் சொல்லறியா…” சந்தோஷத்துடன் கேட்டவனை சிரிப்புடன் ஏறிட்டாள் அவள்.

அவன் சிரிக்கையில் சேர்ந்து சிரித்த கண்களை ரசனையுடன் பார்த்தவள், “நிஜமாய் தான் சொல்கிறேன் விக்கிரமாதித்த மகாராஜா, உங்கள் முதல் பார்வையிலேயே நான் விழுந்து தொலைந்துவிட்டேன்…” என்றவளின் முகம் நாணத்தில் சிவந்திருக்க அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஓ… உனக்கு என் கன்னத்துக் குழி அவ்ளோ பிடிக்குமா…” என்றான் அவன்.

“ம்ம்… அது மட்டும் இல்லை, சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் கண்கள்… இந்த அழகான முகம், உங்களோட மீசை……” என்றவள், அவனது மீசையில் பார்வை நிலைக்க திகைப்புடன் ஏறிட்டாள்.

“ஹேய் விக்கி… நீங்க எப்பவும் மீசையை டிரிம் பண்ணதானே செய்விங்க… இப்போ என்ன கொஞ்சம் கட்டியா இருக்கு…” என்றவளை சிரிப்புடன் ஏறிட்டான் அவன்.

“அது… என் டார்லிங் க்கு இந்த மாதிரி மீசை வைச்சு என்னைப் பார்க்கணுமாம், அதான் கஷ்டப்பட்டு தண்ணி ஊத்தி வளர்த்திட்டு இருக்கேன்…” என்றான் அவன்.

“ஹஹா… தண்ணி ஊத்தி வளர்த்துறீங்களா, இந்த மீசை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு…” என்றவளை சிரிப்புடன் ஏறிட்டான் அவன்.

“ஒருவேளை, உன் அழகான கண்ணில் நான் அழகாய்த் தெரிகிறேனோ…”

“அதெல்லாம் இல்லை… நிஜமாலுமே நீங்க அழகன் தான், உங்க முகத்தைப் பார்த்துட்டே இருக்கணும் போலருக்கும்…” என்றவளின் விழிகளை நோக்கியவன், அவளையே பார்த்துக் கொண்டிருக்க அந்தக் கண்களின் கதிர்வீச்சைத் தாங்கிக் கொள்ள முடியாமல் குனிந்து கொண்டாள் அவள்.

“அப்ப என் முகத்துக்காக தான் என்னைப் பிடிச்சிருக்கா… நானும் கூட, என் அருமை பெருமை, நல்ல சுபாவம் எல்லாம் பார்த்து தான் என்னைப் பிடிச்சிருச்சோன்னு நினைச்சேன்…”

“ஹலோ… என்ன இது, எதுக்கு இப்படி இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லறிங்க… உங்களுக்கு நல்ல சுபாவமா, இதெல்லாம் ரொம்ப த்ரீ மச்சா இல்லியா…” என்றவளை முறைத்தவன்,

“அப்போ நான் முரடன், வில்லன்னு சொல்லறியா… வில்லன் ஹீரோயினை என்ன பண்ணுவான் தெரியுமா…” என்று அவளை மேலும் கீழுமாய் நம்பியார் போல முகத்தை வைத்துக் கொண்டு பார்க்க,

“ஹூக்கும்… வில்லன், ஹீரோ கிட்டே நல்லா மொத்து வாங்குவான்…” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டாள்  அவள்.

“என்ன சொன்னே, நான் அடி வாங்குவேனா…” என்றவன் அவளை அடிப்பதற்காய் கையோங்கிக் கொண்டு துரத்த, அவள் நழுவி அலையை நோக்கி ஓடினாள். அவள் பின்னாலேயே சென்றவன், அவள் கைகளை எட்டிப் பிடித்தான்.

இருவருமாய் கைகோர்த்து அலையில் கால் நனைத்து சிறிது தூரம் நடந்தனர். இதமான மாலை நேரக் காற்று சுகமாய் அவர்களைத் தழுவிச் சென்றது.

“பட்டர்பிளை…” காதலாய் அவள் காதில் கிசுகிசுத்தது அவன் குரல்.

“ம்ம்…” காற்றில் கலந்து ஒலித்தது அவளது குரல்.

“ஐ லவ் யூ பட்டர்பிளை… ஐ லவ் யூ சோ மச்…” என்றவனின் கைகள் பிடித்திருந்த அவளது தளிர் விரல்களை அன்புடன் அழுத்தின.

அவன் தன் கைகளைப் பிடித்து சொர்கத்துக்கு அழைத்து செல்வது போல உணர்ந்தாள் அவள்.

“மீ டூ லவ் யூ விக்கி…” என்றவள் அவன் கைகளை இறுக்கிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து நடந்தாள்.

“இந்த நிமிடம்… இந்த நிமிடம்…

இப்படியே நீண்டிடாதா…

இந்தத் தீண்டல் இந்த இணைப்பு

இறுதி வரைக்கும் தொடர்ந்திடாதா…”

இருவருமாய் மணலில் கால் புதைத்து நடக்க அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர் ராஜீவும் தீபாவும்.

“ஹலோ… என்ன, விட்டா இப்படியே ரெண்டு பேரும் கோவைக்கு போயிருவீங்க போலருக்கு… கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க… நாங்களும் இந்த உலகத்துல தான் இருக்கோம்…” என்றாள் தீபா.

அதைக் கேட்டதும் நாணத்தில் செவ்வானமாய் சிவந்தது வர்ஷாவின் முகம்.

“அச்சோ… இதைக் கின்னஸ் ரெகார்டுல போடணுமே… ஹலோ மிஸ்டர் வேத்ஸ், இந்த அரிய காட்சியை உங்க மொபைல் காமிராவில் ஒரு கிளிக் பண்ணுங்களேன்…” என்றாள் தீபா.

“டேய் வேதாளம்… சில்வண்டுகிட்டே ஓவரா என் ஆளை ஓட்ட வேண்டாம்னு சொல்லு, நானே அவ எப்படா வெக்கப்படுவா… ரசிக்கலாம்னு காத்துட்டு இருக்கேன்… சும்மா கிண்டல் பண்ணிட்டு…” என்றான் விக்கி.

“அடப் பாவிகளா… நீங்க கேலி பண்ணுங்க, ரசிங்க… அதுக்கு என்னை எதுக்கு போட்டு உருட்டுறீங்க… சரி, நேரமாச்சு கிளம்பலாமா…” என்றான் ராஜீவ்.

“ம்ம்… கிளம்பலாம் டா…” என்ற விக்கி, “சரி… உங்களுக்கு எக்ஸாம் முடிய இன்னும் எத்தனை நாளிருக்கு…” என்றான் பெண்களிடம்.

“இன்னும் பத்தே நாள் தான் இருக்கு… அதுக்கப்புறம் உங்க ஆபீஸ்க்கு டிரைனியா ஜாயின் பண்ண வந்து நின்னா, எங்களை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட மாட்டிங்களே…” என்றாள் தீபா கிண்டலாக.

“இந்த நக்கல் தானே வேண்டாம்கிறது… நீங்க எப்ப வேணும்னாலும் வந்து ஜாயின் பண்ணலாம்… எங்க ஆபீஸ் கதவுகள் உங்க வரவுக்காய் ராத்திரி கூட பூட்டாமத் திறந்தே இருக்கு தெரியுமா,  இல்லடா மச்சி…” என்றான் நண்பனிடம்.

“ஹூம்… ஆமாமா… நீங்க எப்ப வேணும்னாலும் வந்து ஜாயின் பண்ணுங்க, ரெண்டு டிரைனி சீட் கன்பர்ம்…” என்றான் அவன் சிரிப்புடன்.

“எங்கள் சேவை உங்கள் கம்பெனிக்கு தேவை என்று கூறுகிறீர்கள்… மறுக்க முடியுமா, விரைவில் வந்து சேவையாற்றுகிறோம்…” என்று அவள் கூறவும் அனைவரும் சிரித்தனர்.

என் விழிகள் என்ன மெத்தையா

நீ வந்து உறங்கி செல்கிறாயே…

கண்கட்டி வித்தையாய் நித்தமும்

உன் நினைவே என்னை வெல்லும்…

என் நித்திரைகளைக் கொல்லும்….

பொம்மையைக் கட்டிக் கொண்டு

உறங்கும் குழந்தையாய் – உன்

நினைவுகளோடு உறங்குகிறேன்…

உன் வெண்தாமரை பாதத்தைத்

தழுவிய தங்க கொலுசும் தவிக்குதடி…

வெட்கம் கொண்ட வெள்ளி கொலுசாய்

என் மனமும் மெல்ல சிணுங்குதடி….

Advertisement