Advertisement

இதயம் – 12

“டேய் சஞ்சு… காய்ச்சல் கொஞ்சம் விடறதுக்குள்ளே அந்த லாப்டாப்பை எடுத்துட்டு உக்கார்ந்துட்டியா, கண்ணெல்லாம் எரியப் போகுது… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன் டா…” சலிப்புடன் கூறினார் ரேணுகா.

நன்றாக உறங்கி எழுந்தவனுக்கு காய்ச்சல் குறைந்திருந்தது. இரண்டு இட்லியை உள்ளே தள்ளிவிட்டு லாப்டாப்பை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தான் சஞ்சய். அவனது அலைபேசியில் மாறி மாறி அழைப்புகள் வந்து கொண்டிருக்க அவனால் ஓய்வெடுக்க முடியவில்லை.

“என்னம்மா பண்ணறது… நீங்களே பார்த்திங்கல்ல, மாறி மாறி கால்ஸ் வந்திட்டு இருக்கு… நம்ம அரசாங்கம் பெரிய பட்ஜெட்ல புதுசா ரயில்வே குவார்ட்டர்ஸ் கட்டப் போகுது, அதுக்கு இன்னைக்கு ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணி அனுப்பியாகணும்… ஆல்ரெடி நிறைய போட்டி இருக்கு, நாம லேட் பண்ணக் கூடாது…” என்றான் அவன்.

“அதெல்லாம் சரி… அதை நீயே தான் பண்ணனுமா, நம்ம ஆபீஸ்ல எத்தனை பேர் இருக்காங்க… அவ்ளோ ஏன்,  உன்னோட பிஏ பிரியாகிட்டே சொல்ல வேண்டியது தானே… அவ செய்ய மாட்டாளா…”

“அவ ரெடி பண்ணாலும் நான் செக் பண்ணி தானே அனுப்பணும்… அதும் இல்லாம இந்த மாதிரி விஷயம் எல்லாம் மத்தவங்களை நம்பி செய்ய விடக் கூடாது… நாம பண்ணுற போல வராது…” என்று கூறிக் கொண்டே கண்கள் எரிந்தாலும் கொட்டேஷனில் கண்ணைப் பதித்திருந்தான்.

“என்னமோ போ… ஊரு உலகத்துல நீ ஒருத்தன் தான் பிஸினஸ் பண்ணுற போல பேசுவ,  சொன்னாலும் கேக்க மாட்ட…” என்று அவர் புலம்பிக் கொண்டிருக்க அங்கே வந்தாள் ஹர்ஷா.

“அம்மா… கொஞ்சம் கஞ்சி எடுத்திட்டு வந்தேன், அவரைக் குடிக்க சொல்லிடுங்க…” என்றாள்.

“ஏன்… இவங்க சொல்ல மாட்டாங்களோ…” மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

“டேய் சஞ்சு… இந்தா, சூடா இந்தக் கஞ்சியைக் குடிச்சிட்டு உன் வேலையைப் பாரு…” என்றார் ரேணுகா.

“ம்ம்…” என்றவன் இதமான சூட்டில் கிளாஸில் அவள் நீட்டிய பொடியரிசிக் கஞ்சியை வாங்கிக் குடித்துவிட்டுக் கொடுத்தான்.

“இந்த டாப்லட் போட்டுக்கோங்க…” என்றவள் அடுத்து மாத்திரையை நீட்ட,

“இப்ப தான் காய்ச்சல் விட்டுடுச்சே… மறுபடியும் எதுக்கு மாத்திரை…” என்றான்.

“அந்த டோஸ் முடிஞ்சிருக்கும்… மறுபடியும் வந்திடாமல் இருக்க தான் அடுத்த மாத்திரை…” என்றாள் அவள்.

“வாங்கிப் போட்டுக்கடா, எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுகிட்டு…” என்று ரேணுகா கூறவும், வாங்கி விழுங்கினான் சஞ்சய்.

“அம்மா… இப்படி லாப்டாப் ஸ்க்ரீனையே உத்துப் பார்த்துட்டே இருந்தா தலைவலி வரும்…  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க…” என்றாள் அவள்.

“அவளை முறைத்தவன், அப்புறம் இந்த வேலை எல்லாம் நீயா செய்வே… சும்மா ரெண்டு பேரும் என்னை ரெஸ்ட் எடுக்க வைக்குறதுலயே இருக்கீங்க… நானே இது சரியா வர மாட்டேங்குதேன்னு டென்ஷனா இருக்கேன், ரெண்டு பேரும் கொஞ்சம் போறீங்களா…” என்றான் கடுப்புடன்.

“ஹூக்கும்… சரியான சிடுமூஞ்சியைப் பெத்து வச்சிருக்கேன்… காலைல முடியாமக் கிடந்த கோலம் என்ன, இப்போ கொஞ்சம் எழுந்து உக்கார்ந்ததும் சீருற சீறல் என்ன… கொஞ்சம் முன்னாடியும் ஹர்ஷா கிட்ட எரிஞ்சு விழுந்தான்… அவளா இருக்கப் போக மறுபடியும் கஞ்சியை எடுத்திட்டு வந்து நிக்குறா, அவளுக்கென்ன தலையெழுத்தா… இதெல்லாம் கேக்கணும்னு… எது சொன்னாலும் கோபம் தான்…” வாய்க்குள்ளேயே முனங்கிக் கொண்டிருந்தார்.

அவன் சொன்னதைக் கேட்ட ஹர்ஷாவோ, “என்ன பண்ணனும்னு சொன்னா நான் ஹெல்ப் பண்ணறேன்…” என்றாள் தயக்கத்துடன்.

“ஓஹோ… நர்ஸிங் படிச்சதாய் தானே கேள்விப்பட்டேன்… இதெல்லாம் எப்படி செய்ய முடியும்…” என்றான் கிண்டலாக.

“நர்ஸிங்கோட நான் கம்ப்யூட்டர் கோர்ஸ், டாலியும் எக்ஸ்ட்ரா படிச்சிருக்கேன்… கொஞ்ச நாள் ஒரு கம்பெனில அக்கவுண்டண்டா வொர்க் பண்ணியும் இருக்கேன்… கொடேஷன் ரெடி பண்ணவெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்… என்ன வேணும்னு சொல்லுங்க, நான் ட்ரை பண்ணறேன்… உங்களுக்கு ஓகேனா அதை யூஸ் பண்ணிக்கங்க…” என்றாள் ஹர்ஷா அமைதியாக.

“சரி… உனக்கு ஒரு மணி நேரம் டைம் தரேன், இது நான் மேலோட்டமா ரெடி பண்ண கொட்டேஷன்… இதை சரி பண்ணி, இந்த வால்யூ வர மாதிரி கொட்டேஷன் ரெடி பண்ணிட்டு வா, அப்புறம் நீ சொன்னதை ஒத்துக்கறேன்…” என்றான் அவன்.

“சரி… நான் பண்ணிட்டு வந்து தரேன்…” என்றவள் அவனது லாப்டாப்பை எடுக்கப் போக, “நோ… நோ, இட்ஸ் மை பர்சனல் லாப்டாப்… நீ என் முன்னாடியே யூஸ் பண்ணு…” என்றான்.

“ஹூம்… உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா சாமி…” என நினைத்துக் கொண்டே தலையாட்டினார் ரேணுகா.

அவனது நம்பிக்கையின்மை அவன் கூறிய வார்த்தையில் வெளிப்பட ஹர்ஷா நொந்து போனாள். ஆனாலும் இந்த மட்டும் அவன் சம்மதிச்சதே அவளுக்கு அதிசயம் தான். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவள், அவன் கொடுத்த கால்குலேஷனை கவனமாக நோக்கினாள். பிறகு ஆல்ரெடி இருந்த கொட்டேஷனில் சிறிது மாற்றம் செய்து எதோ செய்யத் தொடங்கினாள்.

அவள் செய்வதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ரேணுகா. சஞ்சய் அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டே கட்டிலில் ஓய்வாய் அமர்ந்திருந்தான்.

அவள் முக்கால் மணி நேரத்தில் அதை முடித்துவிட்டு அவனிடம் நீட்டினாள்.

“இது சரியான்னு பாருங்க, நீங்க சொன்ன வால்யூ வருது…” என்றவள் லாப்டாப்பை நீட்ட, வாங்கிப் பார்த்தவனின் முகம் ஆச்சர்யத்தைக் காட்டியது.

“வாவ்… வெரி குட், நான் நினைச்ச போலவே பர்பக்டா இருக்கு… தேங்க் யூ…” என்றவன் நின்று கொண்டிருந்த அவளது கையைப் பிடித்து குலுக்கினான்.

அவன் செய்ததைத் திகைப்புடன் பார்த்திருந்தனர் ரேணுகாவும், ஹர்ஷாவும். அவனது இரும்பு போன்ற உறுதியான கரங்கள் அவளது மென்மையான கரத்தை சந்தோஷமாய் குலுக்கியது.

ஹர்ஷாவிற்கு ஷாக் அடித்தது போல ஒரு சந்தோஷ அலை உடலெங்கும் பரவ, அவளது முகம் நாணத்தில் சிவந்து கூச்சத்துடன் தன் கையை உருவிக் கொண்டது. அதை கண்டு கொண்ட ரேணும்மாவின் முகத்திலும் சந்தோஷம்.

“அம்மா… இந்த ஆர்டர் மட்டும் நமக்குக் கிடைச்சா ஹர்ஷாவுக்கு நல்ல ஒரு இன்க்ரிமென்ட் கொடுத்திடலாம்… ஓகே…” என்றான் சந்தோஷத்துடன்.

அதைக் கேட்டதும் ஹர்ஷாவின் முகம் வாடியது. சட்டென்று சரி செய்து கொள்ளவும் செய்தாள்.

வேலை என்று வந்துவிட்டால் அவன் அப்படித்தான். திறமைக்கு எப்போதும் மதிப்புக் கொடுப்பான். அதனாலேயே அவனது முரட்டு குணத்தைப் பொறுத்துக் கொண்டு தங்கள் திறமையை வேலையில் காட்டுவர் அவனது ஊழியர்கள். அதைப் பாராட்டவும் அவன் தயங்க மாட்டான்.

“சரி… ஹர்ஷா, எனக்கு நீ இன்னொரு ஹெல்ப் கூடப் பண்ணனுமே… ஒரு மெயில் டிராப்ட் பண்ணனும், முடியும் தானே…” என்றான்.

“ம்ம்…” என்றவளின் தலை தானே சம்மதமாய் ஆடியது.

“இந்தா… நான் சொல்லுறதை அப்படியே டைப் பண்ணு…” என்றவன் அவனது மெயிலை ஓபன் பண்ணி லாப்டாப்பை அவளிடம் நீட்டினான்.

லாப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு அவள் சோபாவில் அமர அவள் அருகில் எதார்த்தமாய் அமர்ந்து சொல்லத் தொடங்கினான்.

அவனுக்கு அருகில் அமர்ந்திருப்பது அவளுக்கு சற்று தடுமாற்றமாய் இருக்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் டைப் செய்யத் தொடங்கியவள், சற்று நேரத்தில் சரியாக்கிக் கொண்டாள். அவர்களை அப்படிப் பார்த்த ரேணுகாவின் மனதில் சின்னதாய் ஒரு நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது.

அடுத்த நாள் காலையில் ஹர்ஷாவிற்கு பாங்கில் ஒரு வேலை இருந்ததால் சற்று தாமதமாக ரேணும்மாவின் வீட்டுக்கு வந்தாள். அடுக்களையில் தடபுடலாய் விருந்து ரெடியாகிக் கொண்டிருப்பது பலவித வாசனையிலேயே தெரிந்தது.

“என்ன ராணிம்மா… சமையல் வாசனை வாசலுக்கு வருது, என்ன ஸ்பெஷல்…”

“அதான் கண்ணு… இன்னைக்கு அம்மாவோட அண்ணன் பொண்ணு வெளிநாட்டுல இருந்து வருதுல்ல, அதுக்கு தான் விதவிதமா செய்ய சொல்லி அம்மா ஒரு லிஸ்ட் கொடுத்துட்டாங்க, அதான் மணக்குது…” என்றார் அவர்.

“ஓ… அது சரி,  அம்மா எங்கே… ஹால்ல காணோம்…”

“மேல மாடில இருக்காங்கம்மா… சுப்புவை ரூம் ரெடி பண்ண சொன்னாங்க, பார்க்கப் போயிருக்காங்க… அய்யா அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வரப் போயிருக்காரு…”

“ஓஹோ… அவருக்கு உடம்புக்கு பரவால்லை தானே…”

“காலைல எழுந்து ஓடிட்டு தான் வந்தாரு, இன்னைக்கு நல்லாருக்காரு கண்ணு…”

“சரி… நான் அம்மாவைப் பார்த்துட்டு வரேன்…” என்றவள் மாடிக்கு சென்றாள்.

முன்பு ரேணுகா தங்கியிருந்த அறையை ப்ரீத்திக்காய் தயாராக்க சொல்லி இருந்தார் அவர். அறை பளிச்சென்றிருக்க புதிய திரை சீலைகள் காற்றில் படபடத்தன. ஹர்ஷாவைக் கண்டவர் புன்னகையுடன் திரும்பினார்.

“வா ஹர்ஷூ… பாங்குல எதோ வேலை இருக்குன்னு சொன்னே, முடிஞ்சுதா…”

“முடிஞ்சுதும்மா, நீங்க மாத்திரை போட்டிங்களா…”

“அச்சோ… மறந்துட்டேன் பாரு, சாப்பிட்டதும் இங்கே வந்து பார்த்திட்டு இருந்தேன், அப்படியே விட்டுப் போச்சு…”

“என்னம்மா நீங்க,  இப்படியா மறப்பீங்க… உங்க கால் வலி எப்படி இருக்கு பரவால்லியா…”

“ம்ம்… இன்னைக்கு வலி குறைஞ்சிருக்குமா, உன் கைல என்னதான் மந்திரம் வச்சிருக்கியோ… நேத்து நீ காலைப் பிடிச்சு விட்டதுக்கு இன்னைக்கு வலி குறைஞ்சிருச்சு…” என்றவர் சிரித்தார்.

“ஆஹா, போங்கம்மா… நீங்க ஏதாவது கிண்டலடிப்பீங்க, நான் மாத்திரை எடுத்திட்டு வரேன்…” என்றவள் கீழே சென்றாள்.

அவருக்கு மாத்திரையைக் கொடுத்துவிட்டு அறையில் சிறு மாற்றம் செய்ய ஐடியா கொடுத்தாள். அங்கு முடிந்ததும் இருவரும் கீழே வந்தனர். ரேணுகாவுடன் பேசிக் கொண்டே ராணிம்மாவுக்கு காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தாள் ஹர்ஷா.

சிறிது நேரத்தில் வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்க, எழுந்தவர் ஆவலுடன் முன் வாசலுக்கு சென்றார்.

ஜீன்ஸ் ஷர்ட் அணிந்து, அவிழ்த்துவிடப் பட்ட கூந்தல் காற்றில் அலைபாய வீட்டை சுற்றி ஓடிய கண்கள் அதை எடைபோட வெள்ளைக் குதிரை போல வண்டியில் இருந்து இறங்கினாள் ப்ரீத்தி. கண்களில் அணிந்திருந்த கூலிங் கிளாஸ் முகத்தை பாதி மறைத்திருந்தது.

மறுபக்கம் இருந்து இறங்கிய சஞ்சயின் முகம் இறுக்கமாய் இருந்தது. இருவரையும் நோக்கிக் கொண்டே வந்த ரேணுகா, அண்ணன் மகளை சந்தோஷத்துடன் வரவேற்றார்.

கூலிங் கிளாசைக் கழற்றி ஷர்ட்டில் சொருகியவள், “ஹாய் ஆண்ட்டி, ஹவ் ஆர் யூ…” என்று கேட்டுக் கொண்டே ரேணுகாவைக் கட்டிக் கொண்டாள். அவள் மீது வீசிய உயர்தர பர்பியூமின் மணம் இதமாய் நாசியை வருடியது.

“அட என் மருமக எவ்ளோ பெருசாகிட்ட… சின்னப் புள்ளையா கவுன் போட்டப்ப பார்த்தது, இப்போ வளர்ந்து எவ்ளோ பெரிய ஆளாகிட்ட… வா… வா, என் அண்ணன் எப்படி இருக்காரு…” என்று சந்தோஷமாய் வரவேற்ற ரேணுகாவின் சந்தோஷத்தை நோக்கிக் கொண்டே அவர் அருகில் நின்று கொண்டிருந்தாள் ஹர்ஷா.

அவளைக் கண்டதும், “அத்தைக்கு ரெண்டு பசங்க மட்டும் தானே இருக்காங்க, இந்த பியூட்டி யாரா இருக்கும்…” என யோசித்துக் கொண்டே, “சஞ்சய்… ஹூ இஸ் ஷி…” என்றாள் ஹர்ஷாவைக் காட்டி.

“அவங்க அம்மாவுக்கு அசிஸ்ட் பண்ணற ஹோம் நர்ஸ்…” என்றான் அவன்.

“ஓ… ஸ்டாபா, ஹேய் பியூட்டி… என் லக்கேஜ் எல்லாம் வண்டில இருந்து ரூம்ல வைக்க அரேன்ஜ் பண்ணிடு…” என்று அதிகாரமாய் சொல்லிக் கொண்டே அவள் வீட்டுக்குள் நுழைய ஹர்ஷாவின் முகம் சுருங்கிப் போனது.

ரேணுகாவிற்கு அது பிடிக்காமல், “ஹர்ஷூ… சுப்புவை வர சொல்லி லக்கேஜை எடுத்து மாடி ரூம்ல வைக்க சொல்லிடும்மா…” என்று சொல்லிவிட்டு மருமகளுடன் உள்ளே நுழைந்தார்.

ப்ரீத்தி அவளிடம் அதிகாரமாய் சொன்னது சஞ்சய்க்கு பிடிக்கா விட்டாலும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது வாடிய முகம் ஏனோ மனதை வருத்தியது.

அவள் அமைதியாய் சுப்புவை அழைக்க செல்வதைக் கண்டவன், அவனது அறைக்கு சென்று விட்டான்.

************************

Advertisement