Advertisement

“கொஞ்சம் முறுக்கும் அதிரசமும் வச்சிருக்கேன்… தீபாவுக்கும் ஆண்ட்டிக்கும் கொடு…” என்றவள், அவளது பாகில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.

“நேரத்துக்கு சாப்பிடுடி… உடம்பைப் பார்த்துக்கோ, நல்லபடியா எக்சாமை முடிச்சிட்டு வா… எப்பவும் ஷாம்பூ போட்டுக் குளிக்காதே… முடியெல்லாம் கொட்டிடும், கொஞ்சம் எண்ணை காய்ச்சினது வச்சிருக்கேன்… தினம் தலைக்கு வச்சு குளி, குளிர்மையா இருக்கும்…” என்றார் உமா.

“ம்ம்… நான் பார்த்துக்கறேன்மா, நீங்க உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க… அக்கா, நீயும் தான்… வீட்டு வேலையையும் அம்மாவையும் பார்த்துகிட்டு வெளியவும் போயி வேலை செய்திட்டு உன்னை கவனிக்காம இருந்துடாதே…” என்றவளின் கையைப் பிடித்துக் கொண்டாள் ஹர்ஷா.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்டா… நீ நல்லபடியா எக்ஸாம் முடிச்சிட்டு வா, சரி… கிளம்பலாமா, இன்னொரு டைம் எல்லாத்தையும் செக் பண்ணிக்கோ… எதையும் எடுக்கறதுக்கு மறந்துடாத…” என்றவள் வர்ஷாவின் பேகுடன் முன்னில் நடந்தாள்.

“அம்மா… நான் வரேன்…” என்ற வர்ஷா, அவரது கன்னத்தில் முத்தமிட அவரும் அவளை உச்சி நுகர்ந்து முத்தமிட்டார்.

“பத்திரமா போயிட்டு வாடா…” அவர் கூறியதும் வர்ஷா வாசலுக்கு நடந்தாள்.

“வர்ஷூ… இதை ஹாண்ட்பாகில் வைத்துக்கோ… நடுவுல எந்த ஸ்டேஷன்லயும் இறங்காதே, வாட்டர் பாட்டில் பாகில் வச்சிருக்கேன்… பார்த்து பத்திரமாப் போயிட்டு வா… நல்லபடியா எக்ஸாம் முடிச்சிட்டு வர என் வாழ்த்துகள்…” என்று தன் கையில் பணத்தைத் திணித்த அக்காவை அன்புடன் ஏறிட்டாள் தங்கை.

“ம்ம்… லவ் யூக்கா, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்…” என்றவள் அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“சரி… இதுக்கு மேல நாம கொஞ்சிட்டு இருந்தா ட்ரெயின் போயிடும், வா…” என்ற ஹர்ஷா ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, கலங்கிய கண்களுடன் கையசைத்த அன்னைக்கு பதிலுக்கு கையசைத்துக் கொண்டே வர்ஷா வண்டியில் அமர்ந்தாள்.

ஹர்ஷா ஆக்சிலேட்டரை முறுக்க வண்டி சாலையில் இறங்கியது. சீரான வேகத்தில் ரயில் நிலையத்தை நோக்கி வண்டியை விட்டாள் ஹர்ஷா.

**************

அழகான காலை நேரம்…

இரவில் மிதமாய்ப் பெய்யத் தொடங்கிய மழை காலை வரை பெய்து அப்போது தான் ஓய்ந்திருந்தது. ஆனாலும் அங்கங்கே மரத்தின் இலைகளில் இருந்து சொட்டிக் கொண்டிருந்தன மழைத் துளிகள். ரோஜா இலைகளில் உருண்டு நின்ற மழைத்துளிகளை ரசித்தபடியே ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அப்போது தான் மலர்ந்த புத்தம் புது ரோஜாவாய் வீட்டுக்குள் நுழைந்தாள் ஹர்ஷா.

ரேணுகாவின் அறைக்கு சென்றவள், சோர்வுடன் படுத்திருந்தவரின் அருகில் சென்றாள்.

“என்னாச்சும்மா.., இன்னும் படுத்திருக்கீங்க, உடம்புக்கு ஒண்ணும் இல்லையே…”

“கொஞ்சம் சோர்வா இருக்குமா… மழை வேற பெய்துட்டு இருந்துச்சா, அதான் அப்படியே இருந்துட்டேன்… குளிருக்கு கால் வேற வலிக்குது…” என்றார் அவர்.

“ம்ம்… இன்னைக்கு ஹாட் வாட்டர்ல குளிங்க, காலுக்கு சாக்ஸ் போட்டுக்கலாம்… நான் ஹீட்டர் போட்டு வைக்குறேன்மா…” என்றவள் குளியலறையை நோக்கி சென்றாள். 

“அம்மா… நீங்க குளிச்சிட்டு வாங்க,  டிபன் சாப்பிட்டுட்டு பிரஷர் மாத்திரை போட்டுக்கலாம்…” என்றவள் வெளியேற, ரேணுகா சோர்வுடன் குளியலறை நோக்கி சென்றார்.

“ராணிம்மா… டிபன் என்ன பண்ணுனிங்க, அம்மாவுக்கு கொஞ்சம் ஓட்ஸ் உப்புமா செய்திட்டா பரவாயில்லை…”

“வா கண்ணு… அம்மா தோசை தான் ஊத்த சொன்னாங்க… சட்னி எல்லாம் அரைச்சு வச்சுட்டேன்… யாரும் இன்னும் சாப்பிடத்தான் வரலை…”

“ஓ… சார் இன்னும் எழுந்து வரலையா…”

“மழைல நல்லா தூங்குவார் போலருக்கு… இன்னைக்கு ஓடறதுக்கும் போகலை, காபி குடிக்கவும் வரலை…”

“நம்ம ஹிட்லர் இவ்ளோ நேரம் தூங்கினா கின்னஸ் ஆச்சே… தூங்க  மாட்டானே, என்னவா இருக்கும்… ஒருவேளை உடம்புக்கு முடியலையோ…” என யோசித்ததும் அவளுக்கு சற்று பதட்டம் தோன்றியது.

“ராணிம்மா… நீங்க ரூம்க்கு கொண்டு போயி கொடுத்திருக்கலாமே…” என்றாள்.

“அச்சோ நானா, அவருக்கு அதெல்லாம் பிடிக்காது கண்ணு…” என்றார் ராணி.

“சரி… நீங்க காபி போட்டுக் கொடுங்க, நான் கொண்டு போயி கொடுக்கறேன்…”

“ம்ம்… சரி கண்ணு…” என்றவர், மளமளவென்று பில்டர் காபியைப் போட்டு சிறிய பிளாஸ்கில் ஊற்றி அவளிடம் கொடுக்க, சிறிய ட்ரேயில் அதையும் கோப்பையையும் வைத்துக் கொண்டு மாடியில் சஞ்சயின் அறைக்கு சென்றாள் ஹர்ஷா.

அவனது அறைக்கதவு தாழிடப்பட்டிருக்க, தயக்கமாய் இருந்தாலும் மெதுவாய்த் தட்டினாள். நான்கைந்து முறை தட்டிய பிறகும் கதவு திறக்கப் படாமலிருக்க அவளுக்குள் மெதுவாய் ஒரு பதட்டம் தொடங்கியது. சற்று பலமாய்த் தட்டினாள். சிறிது நேரத்திற்குப் பின் மெதுவாய் கதவு திறக்க உள்ளே கண்களைத் திறக்க முடியாமல் நின்றிருந்தான் சஞ்சய். கண்கள் வீங்கி சிவந்திருக்க, கலைந்த தலையுடன் சோர்வாய் நின்று கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் பதறிப் போனவள், “அச்சச்சோ, என்னாச்சு… ஏன் இப்படி இருக்கிங்க…” என்று வேகமாய் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். அனலாய் சுட்டது. அவள் செய்வதைத் தடுக்கும் நிலையிலோ, எதிர்க்கும் நிலையிலோ அவன் இல்லை. மயக்கத்தில் இருந்து எழுந்து வந்தவன் போல நின்று கொண்டிருந்தான்.

“ஐயோ… ரொம்ப சுடுதே…” என்றவள், அவனைக் கட்டிலுக்கு கூட்டி வந்து உட்கார வைத்தாள்.

“இந்தாங்க… சூடா இந்த காபியைக் குடிங்க…” என்றவள், ஒரு கப்பில் ஊற்றி அவனிடம் நீட்டினாள். அவன் மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கிக் குடித்தான்.

“நான் இப்ப வந்திடறேன்… நீங்க படுத்துக்கோங்க…” என்றவள் அவசரமாய் வெளியேறினாள்.

சற்று நேரத்தில் திரும்பி வந்தவள், காய்ச்சல் மாத்திரையைக் கொடுத்து விழுங்க சொன்னாள்.

“இ… இது என்ன மாத்திரை… எ…னக்கு வேண்டாம்… சுகந்தி ஆண்ட்டியை வர சொல்லு…” என்றான் அவன் முனங்கிக் கொண்டே.

அதைக் கேட்டதும் அவளுக்கு வருத்தமாய் இருந்தது. அவனுக்கு முடியாத நிலையில் கூட தன்னை நம்ப மறுக்கிறானே… என வேதனையாகவும் இருந்தது.

“ப்ளீஸ்… நான் ஒரு நர்ஸ், இது காய்ச்சல் மாத்திரை தான்… என்னை நம்புங்க…” என்றவளின் வேதனையான குரலைக் கேட்டு கண்ணை சுருக்கி அவள் முகத்தைப் பார்த்தவன், அதற்கு பின் மறுக்காமல் வாங்கி விழுங்கினான்.

கண்ணை மூடிப் படுத்திருந்தவன், நெற்றியில் சட்டென்று நனைவு தோன்ற மெல்லக் கண்ணைத் திறந்தான். அவனுக்கு மிக அருகில் அவளது அழகிய முகம். அவளது பிஞ்சு விரல்கள் ஒரு வெள்ளைத் துணியை தண்ணீரில் நனைத்து அவன் நெற்றியில் உள்ள சூடைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

அவளை அத்தனை அருகாமையில் பார்த்ததும் அவனுக்குள் ஏதேதோ ஹார்மோன் மாற்றங்கள் நிகழ, அவஸ்தையாய் நெளிந்தான். ஆனால் அவளது முகத்தில் எந்த வித்தியாசமும் இல்லாமல் அது அவளது தொழில் என்பதில் தெளிவாய் இருந்தாள்.

“ஹ… ஹர்ஷா… போதும், ஐ பீல் பெட்டர்…” என்றவன், மெல்ல சாய்ந்து அமர்ந்தான்.

“கொஞ்சம் தூங்குங்க, வியர்த்திடும்… எழுந்தும் காய்ச்சல் இருந்தா டெம்பெரேச்சர் செக் பண்ணிட்டு இன்ஜெக்ஷன் போட்டுக்கலாம்…. இப்ப எதாவது சாப்பிடறிங்களா… தலைவலி இருக்கா…”

“இ… இல்ல வேண்டாம்…” என்றவன் அப்படியே கண்ணை மூடிக் கொண்டான்.

அவனை ஓய்வெடுக்க விட்டு அவள் கீழே சென்றாள்.

“ராணிம்மா… தோசை வேண்டாம், இட்லி ஊத்திடுங்க… அவருக்கு காய்ச்சல் இருக்கு… அம்மா இன்னும் குளிச்சு வரலையா…”

“இல்லம்மா… நீ இந்தக் காபிய குடி… நான் இட்லி ஊத்திடறேன்…” என்றவர் காபிக் கோப்பையை நீட்ட, அவள் வாங்கிக் கொண்டாள்.

“ஹர்ஷா… இங்க கொஞ்சம் வாம்மா…” என்று ரேணுகாவின் அறையில் இருந்து குரல் கேட்க, அதை அப்படியே வைத்துவிட்டு அவரது அறைக்கு சென்றாள்.

“என்னம்மா… கால் ரொம்ப வலிக்குதா, கொஞ்ச நேரம் பிடிச்சு விடட்டா…”

“ம்ம்… வலிக்குதும்மா… இப்போ கொஞ்ச நேரம் சாக்ஸ் போட்டுக்கறேன், அதைக் கொஞ்சம் எடுத்துக் குடு…”

அதை எடுத்துக் கொடுத்தவள், “அம்மா… உங்களுக்கு சாப்பிட இங்கேயே கொண்டு வந்திடட்டுமா…” என்றாள்.

“ம்ம்… சரிம்மா, சஞ்சு கிளம்பிட்டானா… இல்லை, இன்னும் எழுந்திருக்கலையா… அவனைக் காலையில் இருந்து  பார்க்கவே இல்லை… நைட்டும் லேட்டா தான் வீட்டுக்கு வந்தான்… மழைன்னு தூங்கிட்டு இருக்கானா, இவ்ளோ நேரம் எழுந்திருக்காம இருக்க மாட்டானே…” என்றார் ரேணுகா.

“இல்லைம்மா… அவருக்கு கொஞ்சம் காய்ச்சல் அடிக்குது, மாத்திரை போட்டுட்டு தூங்குறார்…” என்றாள் அவள் தயக்கத்துடன்.

“என்னது காய்ச்சலா, அச்சச்சோ… சுகந்தியை வர சொல்லட்டுமா…”

“வேண்டாம் மா… நான் மாத்திரை கொடுத்திருக்கேன்… தூங்கி எழுந்தும் கம்மி ஆகலைன்னா ஒரு ஊசி போட்டுடலாம்… நான் பார்த்துக்கறேன்…”

“ஹூம்… அதானே, உனக்கு காய்ச்சலுக்கு என்ன மாத்திரை கொடுக்கணும்னு தெரியாதா என்ன… கொஞ்சம் கூட உடம்புக்கு ரெஸ்ட் குடுக்காம ஓடிட்டே இருந்தா, இப்படிதான், உடம்பு அதாகவே ரெஸ்ட் எடுத்துக்கும்…” என்றவர், “வா… அவனைப் போயி பார்த்திட்டு வரலாம்…” என்றார்.

“வேண்டாம் மா… நீங்களே கால் வலின்னு சொன்னிங்க, இனி படி ஏறினா அதிகம் ஆகிடும்… நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க… அவர் கொஞ்ச நேரத்துல எழுந்து வந்திருவார்… பயப்படாதிங்க, நான் பார்த்துக்கறேன்…” என்றாள் அவள்.

“ம்ம்… சரிம்மா, நீ சொன்னா சரி தான்… நாளைக்கு என் அண்ணன் பொண்ணு கனடால இருந்து வர்றா… இவன் வேற இந்த நேரத்துல முடியாம இருக்கான்… சரி, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்றார் அவர்.

“நான் உங்களுக்கு சாப்பிட எடுத்திட்டு வரேன்…” என்றவள், “அது யாரு… புதுசா ஒரு அண்ணன் பொண்ணு, வெளிநாட்டுல இருந்து வர்றா…” என யோசித்துக் கொண்டே அவருக்கு ஓட்ஸ் உப்புமாவை ஒரு பிளேட்டில் எடுத்துக் கொண்டு ஸ்பூனுடன் அறைக்கு கொண்டு போய் கொடுத்தாள்.

“என்னம்மா இது… உப்புமாவா…”

“ம்ம்… உங்களுக்கு கொஞ்சம் சுகர் அதிகம் ஆயிருக்கும்னு நினைக்கறேன், நாளைக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்திடலாம்… இன்னைக்கு இதை சாப்பிடுங்கம்மா…” என்றாள் அன்புடன்.

“ம்ம்… சஞ்சு எதுவும் சாப்பிட்டானா…”

“காபி மட்டும் கொடுத்தேன்…. இப்ப எழுந்ததும் இட்லி கொடுக்கறேன்மா…”

“ம்ம்… சரிடா, நீ ஏதாவது சாப்டியா, காபி குடிச்சியா…” என்றவரின் மனதுக்குள் ஏனோ அவளை நினைத்து மழையடித்தது.

அதற்குள் அங்கு வந்த ராணி, “எங்கேம்மா… காபி குடுத்தா வாங்கிட்டு, தம்பியைப் பார்க்கப் போயிருச்சு, மறுபடியும் நீங்க கூப்பிட்டீங்கன்னு அடுக்களைலயே வச்சிட்டு வந்திருச்சு… அது ஆறிப் போயிடுச்சு… இந்தா கண்ணு, வேற காபி கொண்டு வந்தேன், இதையாவது சூடா குடி…” என்று அவர் நீட்ட, அவளைப் பெருமிதமாய்ப் பார்த்தார் ரேணுகா.

“எத்தனை அருமையான பெண்… எப்படிப் பக்குவமாய் சொந்தப் பெண் போலப் பார்த்துக் கொள்கிறாள்… இவள் மட்டும் என் மருமகளாய் வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்…” என அவர் மனது மீண்டும் ஆசைப்படத் தொடங்கியது.

உன் நேசம் கண்டாலே

என் வேசம் கலைந்திடுமோ…

தீயாக நானிருந்தால்

நீராக நீயாகின்றாய்…

என் மனதுக்கு எப்போது

சிறகு முளைத்தடி பெண்ணே…

உன்னைச் சுற்றியே அலைகிறதே…

மாயக்கரம் கொண்டு – என்

மனமெங்கும் எழுதி

வைத்தாயோ உனதோவியத்தை…

நீ முறைத்துப் பார்க்கிறாய் என்பதை விட

என் முகம் பார்க்கிறாய் என்பதே போதுமடா…

உன் திட்டலும் தித்திக்கிறதே

கற்கண்டாய் மனம் சுவைக்கிறதே…

வாளைவிடக் கூர்மையான உன்

வார்த்தை செய்யும் காயத்திற்கு

மருந்தாக மனம் உன்னையே

தேடிடும் மாயம் தான் என்னவோ…

Advertisement