Advertisement

இதயம் – 11

“விக்ரம்… இன்னைக்கு நீயும் என்னோட ஆபீஸ் வர்றே, ரெடியாகிடு…” காலையில் ஜாகிங் முடிந்து திரும்பி வந்த சஞ்சய், அப்போது தான் எழுந்து கொட்டாவியுடன் வெளியே வந்த தம்பியிடம் கூறி விட்டு மாடியேறினான்.

“ஆபீஸ்க்கா… ரெண்டு நாள் ஜாலியா வீட்டுல இருக்கலாம்னு நினைச்சா, இந்த அண்ணன் ஆபீஸ்ல கொண்டு போயி உக்கார வச்சிருவார் போலருக்கே…” மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் குளித்து புறப்படப் போனான் விக்கி. பூஜையறையில் இருந்து வெளியே வந்த ரேணுகா, “ராணி… பெரியவன் குளிச்சு வந்திருவான், சீக்கிரம் காபி போட்டு வச்சிடு…” என்றார்.

“சரிம்மா…” என்றவர் சூடான காப்பியை ஆற்றிக் கொண்டிருக்கும் போது குளித்து முடித்து இறங்கி வந்தான் சஞ்சய். ராணிம்மா கொடுத்த காபியை குடித்துக் கொண்டே அன்றைய தினசரியில் பார்வையைப் பதித்தான்.

“அம்மா… நாளைக்கு காலைல ஒரு கஸ்டமர் மீட்டிங்க்கு நான் பாங்களூர் கிளம்பறேன், நைட் தான் வருவேன்…” என்றான் முன்னில் வந்து சோபாவில் அமர்ந்த அன்னையிடம்.

“சரிப்பா… நாளைக்கு விக்கி சென்னை கிளம்பிடுவானே… இன்னைக்கு எங்காவது கோவிலுக்குப் போயிட்டு வரலாமா…”

“இல்லம்மா… ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை முடிக்க வேண்டி இருக்கு… அவனையும் இன்னைக்கு ஆபீஸ் கூட்டிட்டுப் போறேன்…” என்றான் சஞ்சய்.

“அவனை எதுக்குடா கூட்டிட்டுப் போறே… பையன் எப்பவாவது வீட்டுக்கு வரான்,  ரெஸ்ட் எடுக்கட்டுமே…” என்றார் ரேணுகா.

“இது ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயசில்லைமா… ரிஸ்க் எடுக்க வேண்டிய வயசு…” என்றான் சஞ்சய் பேப்பரில் கண்ணைப் பதித்துக் கொண்டே.

“ஹூக்கும்… இந்த பஞ்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, அவனோட பேசி ஆசை தீரலை… அவன் இப்ப ஆபீஸ் வரலைன்னா என்ன,  நீ அதைக் கட்டிட்டு அழுறது பத்தாதா…” என்றார் கடுப்புடன்.

“அம்மா… சின்னப் புள்ளைங்க மாதிரி புலம்பிட்டே இருக்காதிங்க, அவனும் சிலதெல்லாம் கூட இருந்து பார்த்து கத்துக்கணும்… நாளைக்கு வீட்ல தானே இருப்பான்,  அப்ப ஆசை தீரப் பேசி கொஞ்சிக்கங்க உங்க புத்திரனை…” என்றவன், “நான் புறப்பட்டு வந்திடறேன்… ராணிம்மாவை டிபன் எடுத்து வைக்க சொல்லிடுங்க…” என்றுவிட்டு மாடியேறினான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரேணுகா, “ஹூம்… எது சொன்னாலும் எதாவது பதில் சொல்லி என் வாயை அடைச்சிடுவான்… எப்பவும் உம்முன்னு முகத்தை வச்சுக்கிட்டு… சின்ன பையனா இருக்கும்போது இவன் எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கறதைப் பார்த்து எல்லாரும், உங்க பையனுக்கு புன்னகை மன்னன்னு நினைப்பா… எப்பவும் சிரிச்சுட்டே இருக்கானேன்னு கேப்பாங்க… ஹூம், அந்த சிரிப்பை எல்லாம் அவன் அப்பா கூடவே என் பையன் தொலைச்சுட்டான்…” மனதுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். 

“ஹாய் டார்லிங்,  என்ன யோசிக்கறிங்க…” சட்டையின் கையை மடித்துக் கொண்டே வந்த விக்ரமைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்தது.

“ரெடியாகிட்டியா விக்கி… நீ எதுக்கு எப்பவும் மீசையை இப்படி டிரிம் பண்ணிக்கறே… உனக்கு அண்ணனைப் போல கட்டி மீசை வச்சா இன்னும் அழகாருக்குமே…” என்றார் மகனின் அழகை மனதில் நிறைத்துக் கொண்டே.

“ம்ம்… அடுத்த தடவை வரும்போது மீசையை அப்படி வச்சுட்டா போகுது… வீட்டுக்கு ஒரு மிலிட்டரி ஆபீசர் போதுமேன்னு நினைச்சேன்… சரி,  அண்ணன் இன்னும் புறப்பட்டு வரலியா…” என்றவன், “இப்போ வந்திருவான்பா…” அவர் கூறியதும், “ராணிம்மா… இன்னைக்கு என்ன ஸ்பெஷல், நெய் வாசம் பட்டையைக் கிளப்புது…” என்றான் அடுக்களையை எட்டிப் பார்த்துக் கொண்டே.

“உங்களுக்குப் பிடிக்குமேன்னு பொங்கலும், கேசரியும் செய்தேன் தம்பி… உக்காருங்க, சாப்பிட எடுத்து வைக்குறேன்..” என்றார் அவர்.

“அண்ணனும் வந்திடட்டும் ராணிம்மா…” என்றவன், தினசரியுடன் அமர்ந்தான்.

“அண்ணன் எப்பவுமே நேரமா ஆபீஸ் கிளம்பிடுவாரா டார்லிங்…”

“ம்ம்… நீ வர்றதுனால இன்னைக்கு கொஞ்சம் லேட்டு… இல்லேன்னா இந்நேரத்துல ஆபீஸ் போயிருப்பான்…” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே உள்ளே உள்ளே நுழைந்தாள் ஹர்ஷா.

“குட் மார்னிங் மா… குட் மார்னிங் சார்…” என்றாள் விக்கியிடம்.

“காலை வணக்கம் மகாலட்சுமியாரே… அடடா, என்ன இது… என்னைப் போயி சார்னு எல்லாம் கூப்பிட்டு கிழவன் ஆக்குறீங்க, அழகா விக்கின்னு கூப்பிடுங்க…” என்றான் அவன் சிரிப்புடன்.

“ஹூக்கும்… அப்ப உன் அண்ணனைக் கிழவன்னு சொல்லறியா… அவனுக்கு சார்னு தான் கூப்பிடணும்…” என்று மூத்த மகனைக் கிண்டல் அடித்தார் ரேணுகா.

சஞ்சய் படியில் இறங்கி வருவதைக் கண்ட விக்கி சைலண்டாக, ரேணுகா சட்டென்று பேச்சை மாற்றினார்.

“ஹர்ஷூ… இன்னைக்கு உன் ஸ்கூட்டி சத்தமே கேக்கலியே…” என்றார்.

“இன்னைக்கு நான் பஸ்ல தான் வந்தேன்மா… அதான் கேக்கலை… நீங்க டிபன்க்கு முன்னாடி போட வேண்டிய மாத்திரையைப் போட்டிங்களா…” என்றாள் ஹர்ஷா.

“இன்னும் இல்லை, எடுத்திட்டு வாம்மா…” என்றவருக்கு மாத்திரையை எடுத்துக் கொடுத்து தண்ணி பாட்டிலையும் கையில் கொடுத்தாள்.

அவர்கள் உணவு மேசையில் அமர, ராணி பொங்கலையும், கேசரியையும் பரிமாறினார்.

“ஹர்ஷூ… நீயும் வந்து உக்காரும்மா…” என்றார் ரேணுகா.

“இல்லம்மா… நான் சாப்பிட்டு தான் வந்தேன், நீங்க சாப்பிடுங்க….” என்றவள் அங்கிருந்து நகரப் போக,

“அட… கொஞ்சூண்டு சாப்பிட்டா ஒண்ணும் குறைஞ்சிட மாட்ட, நீ வந்து உக்காரு…” என்று அவள் கை பிடித்து தன் அருகில் அமர வைத்தார். சஞ்சய் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்க, அவசரமாய் அவன் முகத்தைப் பார்த்தாள் ஹர்ஷா.

“அச்சோ… இந்த ரேணும்மா வேற என்னை தர்ம சங்கடப் படுத்தறாங்களே… இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கலைன்னு அவனோட முகமே சொல்லுதே…” நினைத்துக் கொண்டவள், “ஒரு நிமிஷம் மா…” என்று எழுந்து சென்றாள்.

அவளது லஞ்ச் பாக்சை எடுத்து வந்தவள், “அம்மா… இன்னைக்கு மஷ்ரூம் பிரியாணி செய்தேன்… உங்களுக்குப் பிடிக்குமேன்னு எடுத்திட்டு வந்தேன்…” என்று கூறவும்,

“அப்படியா, கொண்டா…” என்று அதை வாங்கித் திறந்தவர், “ஆஹா… என்ன வாசனை, சூடாவும் இருக்கே…” என்று கூறிக் கொண்டே, “ராணி, ஒரு ஸ்பூன் எடுத்திட்டு வா…” என்றவர், அவரது பிளேட்டில் கொஞ்சம் போட்டுக் கொண்டார்.

அன்னை செய்வது விருப்பமில்லாவிட்டாலும் ஏதும் சொல்லாமல் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

“விக்கி… இந்தா நீ கொஞ்சம் போட்டுக்கோ, ஹர்ஷூ ரொம்ப நல்லா சமைப்பா…” என்றவர், விக்கியின் பிளேட்டிலும் பரிமாறினார்.

“சஞ்சு… நீயும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பார்க்கறியா…” என்றவர் அவனுக்கு பரிமாறப் போக, அவன் என்ன சொல்லப் போகிறானோ என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹர்ஷா.

“இ…இல்லம்மா… எனக்கு காலைல பிரியாணி சாப்பிட்டா நெஞ்சைக் கரிக்கும்… நான் இன்னொரு நாள் சாப்பிடறேன்…” என்று நாசூக்காய் மறுத்துவிட்டான் சஞ்சய்.

“வாவ்… பிரியாணி சூப்பரா இருக்கு, அண்ணாவோட பங்கை எனக்கு குடுங்க மாம்…” என்ற விக்கி, அதையும் வாங்கி தன் பிளேட்டில் போட்டுக் கொண்டான்.

எப்போதும் சொல்வது போல முகத்தில் அடித்தாற்போல பேசாமல் மகன் பக்குவமாய் மறுத்தது ரேணுகாவிற்கு வியப்போடு சந்தோஷத்தையும் கொடுத்தது.

ஹர்ஷாவிற்கும் அவன் ஏதும் கோபப்படாமல் இருந்ததே நிம்மதியாய் இருந்தது.  

“ராணி… ஹர்ஷாவுக்கு கொஞ்சம் கேசரியை வை…” என்றவர்,

“பிரியாணி சூப்பரா இருக்கு ஹர்ஷூ…. உன் புகுந்த வீட்டு ஆளுங்க கொடுத்து வச்சவங்க… உன் கைக்கு வைர மோதிரம் தான் போடணும்…”  பாராட்டிக் கொண்டே சாப்பிட்டார்.

“ஹூம்… ஏன் போட மாட்டிங்க, வைரம் மளிகைக் கடைல மலிவு விலைல கிடைக்குதுல்ல… பத்து விரல்லயும் வாங்கிப் போடுவிங்க… இந்த அம்மாக்கு எதையுமே பெருசா சொல்லணும்…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்து கை கழுக சென்றான் சஞ்சய்.

“மகாலட்சுமி… பிரியாணி நிஜமாலுமே ரொம்ப சூப்பர்… அண்ணனுக்கு தான் சாப்பிட பாக்கியம் இல்லை… ரொம்ப தேங்க்ஸ்…” என்று பாராட்டிக் கொண்டே எழுந்தான் விக்ரம்.

அவர்கள் கிளம்பிப் போனதும் பெண்கள் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தனர். ரேணுகா, அவரது பிள்ளைகளின் குறும்புகளைப் பற்றியும் சின்ன வயது சம்பவங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்க ஹர்ஷா அதை ரசித்துக் கொண்டே அவர் காலில் தைலம் தடவி விட்டுக் கொண்டிருந்தாள்.

“இப்படிதான் ஒரு தடவை… நிறையப் பசங்க சேர்ந்து விளையாடிட்டு இருந்தாங்க… அப்போ ஒரு பையன் விக்கியைப் பிடிச்சு கீழே தள்ளிட்டான்… இவனுக்கு கீழே விழுந்து கையில காயம் ஆகி ரத்தம் வந்திருச்சு… அதைப் பார்த்துட்டு வந்த சஞ்சுவுக்கு எங்கிருந்து தான் அப்படிக் கோபம் வந்துச்சோ, அங்கிருந்த கல்லை எடுத்து அந்தப் பையன் மண்டைலயே அடிச்சுட்டான்… அவனுக்கு மண்டை உடைஞ்சு ரத்தமா கொட்டுது… ஏண்டா இப்படிப் பண்ணினேன்னு கேட்டா, என் தம்பியை அடிச்சா சும்மா விட்டிருவேனான்னு கேட்டுகிட்டு அவன் அப்பாகிட்டே அடி வாங்குறான்… அவ்ளோ பாசம் அவனுக்கு சின்னவன் மேல…” என்று பெருமையாய் கூறிக் கொண்டிருந்தார் ரேணுகா.

அவர் சஞ்சயைப் பற்றி சொல்லச் சொல்ல அவன் மேலுள்ள கசப்பான அபிப்ராயங்கள் விலகி நல்ல அபிப்ராயம் மனதுக்குள் வருவதை உணர்ந்து கொண்டிருந்தாள் ஹர்ஷா. அவனைப் பற்றி ரேணுகா பேசுவதைக் கேட்க அவளுக்கு மிகுந்த ஆவலாகவும் இருந்தது. அன்றைய நாள் நல்லபடியாகக் கழிய மாலையில் வர்ஷாவுடன் சந்தோஷமாய் கழிந்தது. அடுத்த நாள் விடியற்காலையில் சஞ்சய் பாங்களூர் சென்றுவிட்டான். விக்கி மதிய உணவு முடிந்ததும் சென்னை கிளம்பி விட்டான்.

வர்ஷாவிடம் பேச வேண்டும் என்று மனதுக்குள் தோன்றிக் கொண்டே இருக்க அலைபேசியை எடுத்தவன் அழைக்காமலே வைத்து விட்டான். அவள் திரும்பி சென்னை வரும்வரை அலைபேசியில் இருவரும் பேசிக் கொள்ள கூடாது என ஸ்ட்ரிக் ரூல்ஸ் போட்டிருந்தாள்.

“என்ன பண்ணுறது… அவ குரலைக் கேக்கணும் போலவே இருக்கே, கூப்பிட்டா ராட்சஷி கத்துவாளோ…” யோசித்தவன், “பார்த்துக்கலாம்…” என்று அழைத்தான்.

“ஹலோ…” ரகசியமாய் வந்தது வர்ஷாவின் குரல்.

“ஹேய் பட்டர்பிளை… எப்படி இருக்கே, என்ன பண்ணிட்டு இருக்கே…”

“விக்கி… நான் தான் உங்களைக் கூப்பிட வேண்டாம்னு சொல்லி இருக்கேன்ல, அப்புறம் எதுக்கு கூப்பிட்டீங்க…” அவள் சற்று பதட்டத்துடன் பயந்து கொண்டே மெல்லிய குரலில் பேசுவது போலத் தோன்றியது அவனுக்கு.

“என் பட்டாம்பூச்சியோட பட்டுக் குரலைக் கேக்கணும்னு தோணுச்சா, அதான் ரூல்செல்லாம் பிரேக் பண்ணி கூப்பிட்டுட்டேன்… ஸாரி பேபி…” என்றான் வண்டியை ஓட்டிக் கொண்டே.

“சரிசரி… அம்மா இருக்காங்க, சீக்கிரம் பேசுங்க… சென்னை கிளம்பிட்டிங்களா…”

“ம்ம்… கிளம்பிட்டேன்… இப்போ வண்டி ஓட்டிட்டு தான் பேசிட்டு இருக்கேன், நீ எப்படி இருக்கே… அத்தை கையால சாப்பிட்டு நல்லா ரசகுல்லா மாதிரி ஆகிட்டியா…”

“ஹூக்கும்… வந்து ரெண்டு நாள் தானே ஆச்சு, நான் அப்படியே தான் இருக்கேன்… உங்களை வண்டி ஓட்டும்போது போன் பேசாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்… சரி, பத்திரமா பார்த்து ஓட்டுங்க… சென்னை ரீச் ஆனதும் எனக்கு ஒரு மெசேஜ் போட்டுடுங்க… ப்ரீயா இருக்கும்போது நானே உங்களுக்கு கூப்பிடறேன்… சரியா, வச்சிடறேன்…” என்றவளை,

“ஏய் பட்டர்பிளை… இரு, இரு… சீக்கிரமே சென்னை வந்திரு… உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்… டேக் கேர், பை…” என்றுவிட்டு அலைபேசியை வைத்தான். அதைக் கேட்டதும் அவள் இதழ்களில் ஒரு குறுநகை விரிய முகம் நாணத்தில் சிவந்தது.

நாட்கள் நகரத் தொடங்க வர்ஷுவும் செமஸ்டருக்காய் மும்முரமாய் படிக்கத் தொடங்கினாள். அன்னையுடனும் அக்காவுடனும் அழகாய் கழிந்தது அவளது நாட்கள். ஒரு வாரம் அவர்களுடன் இருந்துவிட்டு அவள் சென்னைக்கு பரீட்சை எழுதக் கிளம்பினாள்.

“வர்ஷூ… எல்லாம் எடுத்து வச்சுட்ட தானே… எதையும் மறந்திடலையே…”

தங்கைக்கு ட்ரெயினில் சாப்பிடக் கொண்டு போவதற்காய் சப்பாத்தியை பாக்சில் வைத்துக் கொண்டே கேட்டாள் ஹர்ஷா.

“எடுத்து வச்சுட்டேன்க்கா…” புறப்பட்டுக் கொண்டே சொன்னாள் வர்ஷூ.

Advertisement