Advertisement

“ராணிம்மா கடைக்குப் போயிட்டு இன்னும் வரலை… அதான் நானே காப்பி போட்டுக் கொடுத்திட்டுக் கிளம்பலாம்னு…” தயங்கிக் கொண்டே சஞ்சயிடம் காப்பியை நீட்டினாள்.

அன்னை சொன்னதைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு அவன் கேட்காமலே அவள் காப்பி கொண்டு தரவும் அவள் நீட்டிய காப்பியை தயக்கத்துடனே வாங்கிக் கொண்டான் அவன்.

அதைக் கண்டதும் ரேணுகா, விக்கி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கிக் கொள்ள அவர்களுக்குள் நடந்த பார்வைப் பரிமாற்றதையும் அன்னையின் முகத்தில் மலர்ந்த புன்னகையையும் காணாத போல் கண்டு கொண்டிருந்தான் சஞ்சய்.

அவன் காப்பியைக் குடிக்க ஹர்ஷா, விடைபெற்றாள்.

“நாம சொல்லாமலே புரிஞ்சு நடந்துக்குவா… ரொம்ப அன்பான பொண்ணு, இல்லடா சஞ்சு…” என்றார் மகனின் முகத்தை நோக்கி.

அவன் எதுவும் சொல்லாமல் காப்பியைக் குடித்துக் கொண்டிருந்தான்.

“ஏண்டா சஞ்சு… உனக்கு தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற… நம்ம விக்கிக்கு இந்தப் பொண்ணைப் பார்த்தா என்ன…” என்று ரேணுகா கேட்க, விக்கிக்குப் புரையேறியது.

“என்னது, எனக்கு பாக்குறிங்களா…” என்றவன், “நான்தான் ஆல்ரெடி பார்த்துட்டனே டார்லிங்… அச்சோ, இப்ப எதுக்கு தேவையில்லாம இதுல என்னைக் கோர்த்து விடுறாங்க…” என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் அன்னை சொன்னதைக் கேட்டதும் சிறு திகைப்புடன் சஞ்சய் நிமிர்ந்ததை ரேணுகா கண்டு கொண்டார். அவன் குடித்து முடித்து கிளாஸை அங்கு வைத்து எழுந்து போக, ரேணுகா கேட்டார்.

“என்னடா, நான் பாட்டுக்கு சொல்லிட்டு இருக்கேன்… நீ பாட்டுக்குக் கண்டுக்காம எழுந்து போறே…”

“இங்க பாருங்கம்மா… எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு நான் சொல்லிட்டேன், எனக்கு காப்பி தர பொண்டாட்டி தான் வேணும்னு இல்லை… வேலைக்காரி கையால காப்பி கிடைச்சாலும் நான் குடிப்பேன்… அப்புறம் என் தம்பிக்கு, எப்போ எப்படி எந்த மாதிரி பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்குத் தெரியும்… உங்களுக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்தா சந்தோஷம்… உங்களுக்கு வேற நர்ஸைப் பார்க்க வேண்டாம்னு நினைச்சுக்குறேன்… அவ்ளோ தான், இதுக்கு மேல அந்தப் பொண்ணை இந்த வீட்டு மருமகளா கொண்டு வரணும்னு ஆசைப் பட்டிங்க, நாளைல இருந்து வேற பொண்ணு தான் உங்களுக்கு நர்ஸா இருப்பா…” மிரட்டலாய் கூறிவிட்டு அவன் எழுந்து மாடிக்கு செல்ல அவன் பேசியதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றிருந்தனர் விக்கியும் ரேணுகாவும்.

அவன் சென்றதும் அன்னையிடம் திரும்பிய விக்கி, “மாம்… அண்ணன் இப்போதானே ஆபீஸ்ல இருந்து வந்தார்… வந்ததும் எதுக்கு இந்தக் கல்யாணப் பேச்சைத் தொடங்கினீங்க… நேரம் காலம் பார்த்து பக்குவமாப் பேசி இருக்கலாமே…” என்றான்.

“இல்லடா விக்கி… முதல்ல எல்லாம் ஹர்ஷூவைக் கண்டதும் மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டு முறைச்சுட்டுப் போவான்… இப்ப கொஞ்ச நாளா அவளைப் பார்த்து முறைக்கறதில்லை… அதான், பையன் மனசு மாறிட்டானோன்னு நினைச்சு ஒரு ஆர்வத்துல பேசிட்டேன்… அந்த முசுட்டுப் பய மூஞ்சில அடிச்ச போல பேசிட்டுப் போகுது, இவனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது போலருக்கு…”

“அம்மா… நீங்க ஏன் அப்படி நினைக்குறிங்க,உங்களுக்கு இந்தப் பொண்ணை பிடிச்சிருக்கு… ஒருவேளை அண்ணனுக்கு இவங்களைப் பிடிக்காம இருந்துச்சுன்னா… அவருக்குப் பிடிச்ச போல ஒரு பொண்ணைப் பார்த்தா அவர் மனசு நிச்சயமா மாறும்மா,  நீங்க கவலைப் படாதிங்க…” என்றான் விக்கி.

“ஒரு வேளை அப்படியும் இருக்குமோ… ஹர்ஷூவை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா…” என யோசித்தவர், “ஹூம்… மனசை மரக்கட்டையா மாத்திகிட்ட என் மகனுக்குப் பிடிக்காமல் போனால் ஆச்சர்யம் ஒண்ணும் இல்லையே…” என்று நினைத்துக் கொண்டு,

“ம்ம்… போடா, நீ என்னமோ சொல்லறே… தெய்வ விதி போல நடக்கட்டும்… சரி நீ  போயி பிரெஷ் ஆகிட்டு வா… ராணி வந்துட்டா போலருக்கு, தோசை ஊத்த சொல்லறேன்…” என்றார்.

அப்போது ராணியும் உள்ளே வர, விக்கி அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அவனது அறை நோக்கி நகர்ந்தான். ரேணுகா, ராணியிடம் டின்னருக்கு என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றார்.

*************

“ஹையா… அக்கா வந்துட்டா…”

வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திக் கொண்டிருந்த ஹர்ஷா, அவளிடம் ஓடி வந்த தங்கையைக் கண்டு சிரித்தாள்.

“ஏய்… மெதுவாப் போடி, பரிட்சைக்குப் போகும்போது பல்லை உடச்சி வச்சிட்டுப் போகாதே…” என்று அவள் பின்னாலேயே வந்தார் உமா.

“அப்படி உடைஞ்சா என் அக்கா சரி பண்ணிடுவா… நீங்க கவலைப் படாதீங்கம்மா…” என்று அன்னையிடம் கூறிக் கொண்டே, “அக்கா, எப்படி இருக்கே… எனக்கு என்ன வாங்கிட்டு வந்தே…” கேட்டுக் கொண்டே ஸ்கூட்டியில் பரபரவென்று தேடினாள்.

“உன்னோட பாவரைட் பாதாம் ஹல்வா தானே தேடறே… இங்கிருக்கு…” என்றவள், பாகில் இருந்து அந்தக் கவரை எடுத்து அவளிடம் நீட்டினாள்.

“அம்மா, இது உங்களோட மாத்திரை… தீரப் போகுதுன்னு வாங்கிட்டு வந்தேன்…” அன்னையிடம் ஒரு சின்ன கவரை நீட்டியவள்,  “இதுல மஷ்ரூம் இருக்கு… இவளுக்குப் பிடிக்குமே, நாளைக்கு பிரியாணி பண்ணறதுக்கு…” 

“வாவ்… சூப்பர், என் செல்ல அக்கா…” என்று அவளைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவளைக் குழந்தை போலத் தோன்றியது ஹர்ஷாவிற்கு.

“பயணம் எல்லாம் சுகமா இருந்துச்சா… கவிதா மேரேஜ்கு யாரெல்லாம் வந்திருந்தாங்க…” என்று கேட்டவளிடம்,

“அக்கா… அதை நான் சொல்லத் தொடங்கினா ரொம்ப நேரம் ஆகிடும்… நீ ரொம்ப டயர்டா வந்திருப்பே, போயி பிரெஷ் ஆகிட்டு வா… உனக்கு பிடிச்ச பில்டர் காபி சுட சுட போட்டுத் தரேன்… குடிச்சுட்டே பேசலாம்…” என்று குஷியுடன் உள்ளே ஓடியவளைக் கண்டு உமாவும், ஹர்ஷாவும் புன்னகைத்தனர்.

“நான் இழந்த குழந்தைத்தனம் இவளிடமாவது மிச்சமிருக்கிறதே…” என எண்ணிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் ஹர்ஷா. அவள் பிரஷாகி வரும்போது சூடாய் தங்கை நீட்டிய பில்டர் காபியின் மணம் மனதை நிறைத்தது.

“வர்ஷூ… என்னடி இது, முடியெல்லாம் கொட்டிப் போயிருக்கு… கண்ட ஷாம்பூ எல்லாம் போடாதே… செம்பருத்தி இலையைப் பிழிஞ்சு தலைக்கு யூஸ் பண்ண சொல்லிருக்கேன்ல…”

“போக்கா… நீ பாட்டுக்கு சொல்லிட்டே, அதை யாரு உக்கார்ந்து பிழியறது… ஷாம்பூ எடுத்தோமா, ஓபன் பண்ணோமா… யூஸ் பண்ணினமான்னு இருக்குறது எவ்ளோ ஈசியா இருக்கு…” அக்காவின் அருகில் சாய்ந்து அமர்ந்து கொண்டே பாதாம் ஹல்வாவை விழுங்கிக் கொண்டிருந்தாள் வர்ஷா.

“ம்ம்… செம்பருத்தி இலை பிழிய கஷ்டமா இருந்தா வெந்தயம் அரைச்சு தேய்க்க வேண்டியது தானே…”

“போக்கா… அதெல்லாம் தேச்சா முடியெல்லாம் கசப்பு ஸ்மெல்… அதோட பொடி வேற முடில ஒட்டிக்குது… இதான் ஈஸி, சூப்பர் ஸ்மெல்… இந்தா, நீயும் எடுத்துக்கோ…” என்று அவளிடம் ஹல்வாவை நீட்டினாள்.

“ம்ம்… நல்லது கொஞ்சம் கசக்க தான் செய்யும்… ஆனாலும் அதுல தானே நமக்குத் தேவையான நல்ல குணம் இருக்கு…” என்று உமா கூறவும், ஹர்ஷாவிற்கு சட்டென்று சஞ்சயின் நினைவு வந்தது.

“இவனும் இப்படித்தானே… வாயைத் திறந்தால் கசப்பாய் பேசிக் கொண்டு…” நினைத்துக் கொண்டிருந்தவளை உலுக்கினாள் வர்ஷா.

“அக்கா… உன் வேலை எல்லாம் எப்படி இருக்கு, அந்த வீட்டுல இருக்கவங்க நல்லாப் பழகுறாங்களா…”

“ம்ம்… அந்த வீட்டு அம்மா என்னைப் பொண்ணு போலப் பார்த்துக்குவாங்க… ரொம்ப நல்லவங்க, எனக்கு வேலைக்கு போற பீலிங்கே இல்லை…”

“ஓ… பரவால்லயே, இந்த மாதிரி குணமுள்ளவங்களும் இருக்காங்களா…”

“ம்ம்… இருக்காங்கடா,  நிஜமாலுமே ரொம்ப நல்லவங்க…”

“ம்ம்… என் பரிட்சை மட்டும் முடிஞ்சு நான் வேலைக்குப் போகத் தொடங்கிட்டா அப்புறம் கவலையே இல்லைக்கா… அம்மாவையும் உன்னையும் நான் பார்த்துக்குவேன்… நீ அம்மாவை கவனிச்சுட்டு வீட்லயே இருக்கலாம்… அம்மா ஆசைப்படி உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணமும் பண்ணிடனும்…” என்றாள் பெரிய மனுஷியாய்.

அதற்குள் ஒரு தட்டில் முறுக்கை வைத்து எடுத்து வந்தார் உமா.

“நீ சொல்லுறதெல்லாம் சரிதான்… ஆனா சென்னைல தான் வேலைக்குப் போவேன்னு சொல்லுற பாரு… அதான் எனக்குப் பிடிக்கலை…” என்றார் உமா.

“அம்மா,. அங்கே தான் நிறைய ஸ்கோப் இருக்கு… அதும் இல்லாம எனக்கும், தீபாவுக்கும் எக்ஸாம் முடிஞ்சதுமே ஒரு பெரிய ஐடி கம்பெனில ட்ரைனியா ஜாயின் பண்ண சொல்லி ஆபர் வந்திருக்கு… நான் வேலைக்குப் போனா அக்கா உங்ககூட வீட்ல இருந்து பார்த்துக்கட்டும்மா… பாவம், அக்காவும் எத்தனை நாள் தான் இப்படி ஓடிகிட்டே இருப்பா…” என்ற தங்கையின் தலையை நெகிழ்வுடன் தடவிக் கொடுத்தாள் ஹர்ஷா.

சின்ன மகள் பேசியதைக் கேட்டு அந்தத் தாயின் மனமும் பூரித்தது. அதற்குப் பிறகு சிறிது நேரம் அவள் கவிதாவின் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க கேட்டுக் கொண்டிருந்தனர்.

“சரிடா… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, நான் நைட்டுக்கு டிபன் பண்ணிடறேன்…” என்ற ஹர்ஷா எழுந்தாள்.

“என்னக்கா செய்யப் போறே…”

“உனக்குப் பிடிச்ச பூரியும் கிழங்கும் தான்… ஓகே தானே…”

“டபுள் ஓகே கா… சரிக்கா,  நான் கொஞ்ச நேரம் படிக்கறேன்…” 

“ம்ம்… சரி வர்ஷூ, நான் டிபன் ரெடி பண்ணிட்டு உன்னைக் கூப்பிடறேன்… நீ படிச்சிட்டு இரு…” என்றவள் அடுக்களைக்குள் நுழைய, வர்ஷா அவர்களின் அறைக்குள் நுழைந்து தன் பாகை எடுத்துத் திறந்தாள்.

மனம் விக்கியுடன் இருந்த நேரத்தை அசை போட சந்தோஷத்தில் நிறைந்தது.

விக்ரம்… விக்ரம்…

நான் வெற்றி பெற்றவன்…

இமயம் தொட்டு விட்டவன்…

தீயை சுட்டு விட்டவன்…

என் வீரமே வாகையே சூடும்…

விக்ரம்… விக்ரம்…

அவள் பாடிக் கொண்டே புத்தகத்தைக் கையில் எடுக்க அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த ஹர்ஷா,

“என்ன வர்ஷூ… பழைய பாட்டெல்லாம் பாடிட்டு இருக்கே… அதும் ஜெண்ட்ஸ் சாங்…” என்றாள் சிரித்துக் கொண்டே.

“வ…வந்து… அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா… வரும்போது இந்தப் பாட்டைக் கேட்டேனா… அதான், மனசுக்குள்ளேயே நிக்குது…” என்று சமாளித்தாள் அவள்.

“ஓ… சரி வர்ஷூ… உனக்கு புதுசா ரெண்டு நைட் டிரெஸ் வாங்கி வச்சிருக்கேன்… போட்டுப் பார்த்து நல்லாருக்கான்னு சொல்லு… அதை சொல்லத்தான் வந்தேன்…” என்றவள் அலமாரியில் இருந்து ஒரு கவரை எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

“அச்சோ… மண்டு… மண்டு, இப்படியா வாயை விட்டு அவன் பேரைப் பாடித் தொலைப்பே…” என அவளே சிரிப்புடன் தலையில் அடித்துக் கொண்டாள்.

கன்னத்துக் குழியழகா…

காதல் சொன்ன கவியழகா…

கண்ணுக்குள் நின்னுகிட்டு

கருத்தை நீ கவர்ந்தாயே…

வண்ணச் சிறகடித்து

வானில் நானும் பறக்கிறேனே…

வண்ணத்துப் பூச்சியாக உன்

கன்னக் குழியில் வாழ்ந்திடவா…

கண்கள் ரெண்டும் காந்தமாக

கவர்ந்து என்னை இழுக்கிறதே…

கருப்பு மீசை அழகும் தான்

கட்டி என்னை இழுக்கிறதே…

Advertisement