Advertisement

இதயம் – 10

வர்ஷாவை அவளது வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி இறக்கி விட்டுவிட்டு அவனது வீட்டை நோக்கிக் காரை விட்டான் விக்கி. மனம் முழுதும் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.

“ஓ… பட்டர்பிளை… பட்டர்பிளை உதடுகள் பாடிக் கொண்டே இருந்தன. அப்போது ராஜீவ் அவனை அலைபேசியில் அழைக்க, வண்டியை ஓரமாய் நிறுத்தி, எடுத்தவன் உற்சாகமாய் ஹலோவினான்.

“என்னடா மச்சி… பட்டர்பிளை ஓகே சொல்லிடுச்சா, குரல்ல ஒண்ணரை டன் வெயிட்டுக்கு உற்சாகம் வழியுது…” என்றான் ராஜீவ்.

“பின்னே… நம்மல்லாம் யாரு, ப்ரபோஸ் பண்ணுறதுலயே அசத்திட்டோம்ல… மச்சி, இன்னொரு விஷயம் தெரியுமா… பட்டர்பிளை பஸ்ல தான் போவேன்னு சொல்லாம நான் நினைச்ச மாதிரி ஐயாவோட கார்லயே வந்துட்டா… நாங்க ரெண்டு பேரும் அங்கிருந்து காதல் வானில் சிறகடிச்சுகிட்டே கோவை வந்து சேர்ந்துட்டோம்…”

“அடப்பாவி… ஒரு போன் கால் கூடப் பண்ணலையேன்னு நினைச்சு கூப்பிட்டா இதான் விஷயமா, ம்ம்… செம மச்சம்டா மச்சி உனக்கு, நீ நினைச்ச மாதிரியே நடக்குது… ஹூம், சரி… ரெண்டு பேரும் கார்ல வந்திருக்கீங்களே… சில பல கொடுக்கல், வாங்கல்கள் எதாவது நடந்துச்சா…” என்றான் ஆர்வத்துடன்.

“ஏய்… ஆர்வக்கோளாறு, என்னை என்ன உன்னைப் போல நினைச்சியா… அதெல்லாம் மெதுவாப் பார்த்துக்கலாம்… அவளோட பேசிட்டே இருந்ததுல மூணு மணி நேரம் போனதே தெரியலை… எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா, நாங்க நிறையப் பேசினோம்… ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் புரிஞ்சுகிட்டோம்… இது போதும் டா, இந்தப் புரிதல் தான் காதலுக்கு ரொம்ப முக்கியம்…”

“ம்ம்… என்னமோ, அனுபவஸ்தன் சொல்லற… எனக்கு என்ன அதைப் பத்தி தெரியும்…” சலித்துக் கொண்டான் ராஜீவ்.

“ஏண்டா சலிச்சுக்கறே… தீபா எங்கே, பக்கத்துல இல்லையா…”

“அவ பாத்ரூம் போன கேப்ல தான் உனக்கு கூப்பிட்டேன்… அவகிட்டே பேச முயற்சி பண்ணினேன்… நான் உங்ககிட்டே பிரண்ட்லியா தான் பழகுறேன்… அப்படி உங்களுக்கு விருப்பம் இருந்தா பரீட்சை முடிஞ்சு என் அம்மாகிட்டே பேசிக்கோங்கன்னு சொல்லுறா… சரி, இந்த மட்டும் சொன்னாளேன்னு நானும் விட்டுட்டேன்…”

“ஓ… சரி விடுடா, உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லலையே… அது வரை ஓகே தான்… அப்புறம் பார்த்துக்கலாம், அவங்களோட பரீட்சை முடிஞ்சதும் நம்ம ஆபீஸ்லயே டிரைனியா அப்ளை பண்ண சொல்லி இருக்கேன்… அப்புறம் என்ன, நமக்கு அவங்களோடப் பழகறது ரொம்ப ஈசி…” என்றான் விக்கி.

“ம்ம்… சரிடா, சில்வண்டு வருது… அம்மா, அண்ணாவைக் கேட்டதா சொல்லு… நான் வச்சுடறேன்…”  என்றவன் அலைபேசியை அணைத்து விட்டான்.

காரை எடுத்த விக்கிக்கு மாலை நேர டிராபிக்கில் மெதுவாகவே போக முடிந்தது. அவன் வீட்டுக்கு முன்னில் வண்டியை நிறுத்தும்போது கைக்கடிகாரத்தில் முட்கள் மாலை 5.30 ஐக் கடந்திருந்தன.

அவனைக் கண்டதும் உற்சாகத்துடன் வணக்கம் சொன்ன செக்யூரிட்டி கேட்டைத் திறந்துவிட காரை வேகமாய் கொண்டு வந்து போர்டிகோவில் நிறுத்தினான். காரின் சத்தத்தைக் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்தார் ரேணுகா. சின்ன மகனின் காரைக் கண்டவரின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

அதற்குள் காரில் இருந்து இறங்கி வந்த விக்கி, “ஹாய் டார்லிங், ஹவ் ஆர் யூ…” என்று அன்னையைக் கட்டிக் கொண்டான்.

“யார் இந்தப் புதிய அவதாரம்… ரேணும்மாவை வேற டார்லிங்னு கூப்பிடுது…” ஹர்ஷா யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளிடம் திரும்பினான் விக்கி.

“டார்லிங்… இவங்கதான் நீங்க சொன்ன மகாலட்சுமியோட டூப்பா, ரொம்ப அழகா இருக்காங்க…” என்றான் ஹர்ஷாவைக் காட்டி.

அதைக் கேட்டதும் ரேணுகா புன்னகையுடன் தலையாட்ட, அவனை அதிசயமாய்ப் பார்த்தாள் ஹர்ஷா.

“அம்மா இவரு…” என்று அவள் திகைப்புடன் கேட்க,

“என் ரெண்டாவது மகன் விக்ரம்…” என்றவரின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

“அண்ணன் எங்கேம்மா…” என்றான் பார்வையை சுழற்றிக் கொண்டே.

“அவன் எந்தக் காலத்துல இந்த நேரத்துல வீட்டுல இருந்திருக்கான்… எந்த நேரமும் வேலை, வேலைதான்… எப்பவும் இவ்ளோ பெரிய வீட்டுல நானே தனியா இருக்க வேண்டி இருக்கு… அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சு மருமகள், பேரன் பேத்தின்னு வந்தாலாவது இந்த வீடு கொஞ்சம் கலகலப்பா இருக்கும்னு நினைச்சா, உன் அண்ணன் சம்மதிச்சா தானே…” புலம்பத் தொடங்கினார் ரேணுகா.

“டார்லிங்… நீங்க அதைப் பத்தி கவலையே படாதீங்க, உங்க பெரிய பையன் கல்யாணம் பண்ணலைனா என்ன… நான் இப்பவே ரெடியா தான் இருக்கேன்… எனக்குப் பண்ணி வைங்களேன்… உங்க ஆசையை நிறைவேத்தி வைக்க நான் இருக்கேன் டார்லிங்…” என்றான் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு.

அதைக் கேட்டு ஹர்ஷா சிரிக்க, ரேணுகாவும் சிரித்தார்.

“போடா பையா… உன் குறும்புக்கு அளவே இல்லை, உன் அண்ணன்கிட்டே சொல்லி உன் ரூட்டைக் கிளியர் பண்ண வேண்டியது உன் பொறுப்பு… இல்லேன்னா நீ இப்படியே சொல்லிட்டே இருக்க வேண்டியது தான்…” என்றார்.

“அச்சோ டார்லிங், என்ன சொல்லுறிங்க…” என்றான் அவன் அதிர்ச்சியுடன்.

“பின்னே… அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு கல்யாணம் பண்ணினா உலகம் என்ன சொல்லும்… அது பாவமில்லையா, உனக்கு அண்ணி வரணும்கிறதைப்  பத்தி சொன்னா, நீ உனக்கு பொண்டாட்டி வரதைப் பத்தி பேசுறியா,  படவா…” என்றார்.

“அச்சச்சோ… இதுல இப்படி ஒரு சிக்கல் இருக்கா, இதோ நம்ம கைலயே மகாலட்சுமி போல ஒரு பொண்ணு இருக்கே… பேசாம இவங்களையே அண்ணனுக்கு கட்டி வச்சு எனக்கு அண்ணியாக்கிட வேண்டியது தானே…” என்றான் அவன் ஹர்ஷாவைக் காட்டி.

அதைக் கேட்டதும் ஹர்ஷா திகைப்புடன் நோக்க, ரேணுகாவின் முகம் மலர்ந்து பின் சாதாரணமானது.

“ஹர்ஷூ… நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதம்மா, இவன் இப்படித்தான்… சும்மா ஜாலியாப் பேசிட்டு இருப்பான்…” என்றார் அவர்.

“அட… நான் நிஜமா தான் டார்லிங் சொல்லறேன்… ஏங்க, நீங்க எனக்கு அண்ணியா வர கூடாதா…” என்றவனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஹர்ஷா.

“எ…என்னங்க சொல்லறிங்க, ப்ளீஸ் இப்படில்லாம் பேசாதிங்க, உங்க அண்ணன் கேட்டா என்னைத் தப்பா நினைச்சுக்குவார்…” என்றாள் அவள்.

“பார்ரா… பார்த்திங்களாம்மா, அண்ணன் தப்பா நினைச்சுக்குவார்னு இவங்க வருத்தப் படுறாங்களே… நமக்குத் தோணுச்சா, ஹூம்…” என்றான் சிரிப்புடன்.

“அச்சோ… அப்படில்லாம் இல்லை, ராணிம்மா கடைக்குப் போயிருக்காங்க… நான் உங்களுக்கு ஏதாவது குடிக்க எடுத்துட்டு வரேன்…” என்றவள், அடுக்களைக்குள் நுழைந்தாள். அவளுக்கு ஒருவிதப் பதட்டமாய் இருந்தது.

“ஏன்… எல்லாரும் அவரை எனக்கு ஜோடியாக்கியே பேசுகிறார்கள்… ஒருவேளை, எங்கள் இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் நல்லாருக்குமோ…” யோசித்துக் கொண்டே அவனுக்கு காப்பியைக் கலந்தாள். கம்பீரமான சஞ்சய் அவள் கண்ணில் தோன்றி மறைந்தான் சின்னப் புன்னகையுடன்.

“உன் புன்னகை என்ன பொக்கிஷமா

வெளியே காட்டாமல் பூட்டி

வைத்துக் கொள்கிறாயே…

சிந்திவிட்டால் சிந்தைவிட்டு

சிதறிடுமோ பெண் நெஞ்சம்…”

மனதுக்குள் அவனைப் பற்றி தோன்றிய கவிதை வரிகளில் மெல்லப் புன்னகைத்தாள் அவள். சட்டென்று அவள் உள்மனதில் எச்சரிக்கை மணி அடித்தது.

“நான் எதற்கு இப்போது இப்படி யோசிக்க வேண்டும்… இது இது… சரியில்லையே… அச்சோ, எனக்கு என்னவாயிற்று… என்னைக் காணும்போதெல்லாம் பாம்பைக் கண்ட கீரியாய் சிலிர்த்து நிற்பவனை இப்படியெல்லாம் யோசிக்க எனக்கு எப்படித் தோன்றியது…” சட்டென்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், காப்பியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றாள். அங்கு கலகலவென்று பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் ரேணுகாவும் விக்கியும்.

விக்கி வந்ததும் வீட்டின் சூழ்நிலையே மாறிப் போனதை எண்ணி வியந்து கொண்டே அவனுக்கு காப்பியைக் கொடுத்தவள், “அம்மா… நான் கிளம்பட்டுமா,  ராணிம்மா இப்போ வந்திடுவாங்க… நைட் டின்னர் முடிஞ்சு மாத்திரையைப் போட மறந்துடாதிங்க…” என்றாள். அவள் முன்னமே அவரிடம் நேரமே கிளம்ப வேண்டும் என்று பர்மிஷன் கேட்டிருந்தாள்.

“ம்ம்… சரிம்மா, நீ கிளம்பு…” என்று அவர் விடை கொடுக்க விக்கியிடமும் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள் ஹர்ஷா.

அப்போது சஞ்சயின் கார் உள்ளே வருவதைக் கண்டவள் தயக்கத்துடன் நின்றாள். காரிலிருந்து கம்பீரமாய் இறங்கியவன், அவள் ஸ்கூட்டியிடம் நிற்பதைக் கண்டு, “என்ன…” என்பது போல் பார்த்தான்.

“ஒ… ஒண்ணுமில்லை…” என்று பலமாய் தலையாட்டியவளின் பதட்டம் அவனுக்குப் புதிதாய் இருந்தது. அவள் காதில் அணிந்திருந்த சிறிய தங்க வளையங்கள் அவள் தலையாட்டலுக்குத் தகுந்தது போல அங்குமிங்கும் ஆடியது.

“ஹர்ஷா… இந்த பைலைக் கொஞ்சம் எடுத்திட்டு வரீங்களா…” என்றவனின் கையில் சூட்கேசும் லாப்டாப் பாகும் இருந்தது.

அவன் சொன்னதும் ஓடிப் போய் பைலை கையில் எடுத்துக் கொண்டவள், அவன் பின்னாலேயே பூனைக்குட்டி போல நடந்தாள்.

உள்ளே நுழையும்போதே அடுக்களையை நோக்கி, “ராணிம்மா… சூடா ஒரு காப்பி…” என்று கூறியவனைக் கண்டதும், அன்னையுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த விக்கி பவ்யமாய் எழுந்து நின்றான். ஹர்ஷா பைலை வைத்துவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

தம்பி வருவது தெரிந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்திருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேசினான் சஞ்சய்.

“என்னடா விக்ரம்… எப்ப வந்தே, ஆபீஸ் வொர்க் எல்லாம் பழகிடுச்சா… அந்த அமெரிக்கன் புது பிராஜக்ட் ஸ்டார்ட் பண்ணிட்டியா…” என வரிசையாய்க் கேள்வி கேட்ட மூத்த மகனைக் கடுப்புடன் முறைத்தார் ரேணுகா.

“இவனுக்கு எப்பப் பார்த்தாலும் வேலை, பணம் இதே பேச்சு தான்… வேற எதைப் பத்தியாவது பேசுறானா…” என நினைத்தவர், “டேய் சஞ்சு… அதெல்லாம் இருக்கட்டும்,  அவன் எப்படி இருக்கான்னு ஒரு வார்த்தை விசாரிச்சியா… எப்பப் பார்த்தாலும் வேலை, பணம்னு மெசின் மாதிரி யோசிச்சுகிட்டு…” என்றார் எரிச்சலுடன்.

அன்னை அப்படி சொன்னதும் சஞ்சயின் முகம் சிறுத்துப் போக அதைக் கண்ட விக்கி, “அம்மா என்ன பேசுறிங்க… அண்ணன் எதுக்கு என் உடம்பைப் பத்தி விசாரிக்கணும்… அவர் இருக்கும்போது எனக்கு என்ன ஆகப் போகுது, அவர் என்னைப் பார்த்துக்க மாட்டாரா… சும்மா பார்மாலிடிக்கு எதுக்கு கேக்கணும்…” என்றவனை நெகிழ்ச்சியுடன் பார்த்தான் சஞ்சய்.

இருந்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவன் அமைதியாய் அமர்ந்திருக்க, “ஆபீஸ் வொர்க் எல்லாம் நல்லா போகுதுண்ணா… புது பிராஜக்ட் வொர்க் தான் நானும் ராஜிவும் இப்போ பார்த்திட்டு இருக்கோம்… நல்லபடியா முடிச்சிருவோம் அண்ணா, நீங்க ரொம்ப டயர்டா இருக்கிங்களே… ஆபீஸ்ல ரொம்ப வொர்க்கா…” என்றான் அக்கறையுடன்.

“ஆமாம்… நீங்க இதையே பேசுங்க, உங்களுக்கு பேசறதுக்கு வேற என்ன இருக்கு… உன் அண்ணனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கனும்னு நான் மட்டும் நினைச்சா போதுமா… சலிச்சுப் போயி வீட்டுக்கு வரவனுக்கு ஒரு கிளாஸ் காப்பி கொடுக்க பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்…” அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இது எதுவும் அறியாமல் காப்பி கிளாசுடன் அங்கு வந்தாள் ஹர்ஷா.

Advertisement