Advertisement

அவனுக்கு எந்தப் பெண்ணின் மீதும் விருப்பமும் தோன்றவில்லை. அன்னை காட்டிய பெண்களைக் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவும் இல்லை. இன்னும் இன்னும் வாழ்க்கையில் உயரங்களை அடைய வேண்டும். சாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது லட்சியமாய் இருந்தது.

காலை அசைத்து அசைத்து மெல்ல நடந்து பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார் ரேணுகா தேவி. காலை வெயில் சுள்ளென்று முகத்தில் அடிக்க அவருக்கு ஒரு மாதிரி இருந்தது. அப்போது தான் காலையில் பிரஷர், சுகருக்கான மாத்திரையைக் குடிக்க வில்லை என்பது நினைவுக்கு வந்தது.

“அய்யய்யோ… தலை வேற சுத்துதே, காலைல மாத்திரை போட மறந்துட்டேன்னு தெரிஞ்சா என் மிலிட்டரி மகன் அதுக்கும் கிளாஸ் எடுத்து கொல்லுவானே… எப்படியாவது மெல்ல நடந்து அந்த நிழலுக்குப் போயிடணும்…” என நினைத்துக் கொண்டே பருத்த உடல் முழுக்க வேர்க்கத் தொடங்கியிருக்க அந்த நீண்ட பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார். நல்ல கூட்டம் வேறு இருந்ததால் அவரால் எங்கும் நிற்கவும் முடியவில்லை.

ஒரு வளைவில் சட்டென்று அவரது கட்டுப்பாடில்லாமல் தலை சுற்ற கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தலை சுற்றி விழப் போனவரை ஓடி வந்து தாங்கிக் கொண்டாள், அங்கிருந்த பிள்ளையாரிடம் தன் வேண்டுதலை லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா.

“அச்சோ… என்னாச்சும்மா…” என்றவள் அவரைத் தாங்கிக் கொண்டு சற்று ஓரமாய் இருந்த நிழலுக்கு அழைத்துச் சென்றாள். அதற்குள் யாரோ கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்ட, அதை வாங்கி அவரைக் குடிக்க வைத்தாள். அதற்குள் அங்கே சிலர் கூடிவிட, “எல்லாரும் கொஞ்சம் தள்ளிப் போறீங்களா… அவங்களுக்கு கொஞ்சம் காத்து வரட்டும்…” என்று கூட்டத்தை விலக்கினாள்.

“என்னம்மா…. உங்க மகன் எங்கே போனார், முடியாம எதுக்கு தனியா இப்படி பிரகாரத்தை சுத்திட்டு இருக்கீங்க… உங்களுக்கு பிரஷர் இருக்கா… மாத்திரை எடுத்துக்கலையா…” என்று அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, அதற்குள் வெகு நேரமாய் அன்னைக்காய் காத்திருந்து காணாமல் அவரைத் தேடி அங்கு வந்தான் சஞ்சய். ஹர்ஷாவின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த அன்னையைக் கண்டவன் பதட்டத்துடன் அவர்கள் அருகில் வந்தான்.

“அய்யோ… என்னாச்சும்மா…”

“ஒ… ஒண்ணும் இல்லைப்பா… கொஞ்சம் தலை சுத்திடுச்சு… வேறொண்ணும் இல்லை, நீ பதட்டப்படாத… இப்ப பரவாயில்லை…” என்றார் அவர்.

“ஏன் தலை சுத்துச்சு… காலைல பிரஷர் மாத்திரை போடலையா…”

“அது வந்து… எப்பவும் வசந்தி தானே எடுத்துக் கொடுப்பா… இப்ப அவ இல்லியா… அதான் மாத்திரை போட மறந்துட்டேன்ப்பா…” என்றார் அவர் பரிதாபமாக. வசந்தி அவரது வேலைக்காரப் பெண். அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதால் வேலையில் இருந்து நின்று விட்டிருந்தாள்.

“அம்மா… உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் கேக்கறதில்லை… மாத்திரை கூடப் போடாம அப்படி என்ன மறதி… பிரகாரத்தை சுத்த வேண்டாம்னு சொன்னா அதையும் கேக்கறதில்லை…” பட்டாசாய் பொரிந்தான் மகன். அவன் சொன்னதைக் கேட்டு ரேணுகா பாவமாய் ஹர்ஷாவைப் பார்க்க, இவன் எதற்கு இத்தனை கோபப்படுகிறான் என திகைப்புடன் நோக்கிக் கொண்டிருந்தாள்  அவள்.

“ஹப்பா… சரியான ஹிட்லர்தான் போலருக்கு… அம்மான்னு கூடப் பார்க்காமப் பொரிஞ்சு தள்ளறான்…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

“சரி… வாங்க, கிளம்பலாம்…” என்றவன் அன்னையை கை கொடுத்துத் எழுப்பி விட்டான். அப்போதும் அவன் முகம் கடினமாய் இருந்ததே ஒழிய எள்ளளவும் கனிவு இல்லை.

எழுந்தவர், “யாருன்னே தெரியலைனாலும் சட்டுன்னு வந்து உதவி செய்ததுக்கு ரொம்ப நன்றிம்மா, நான் வரேன்…” என்றுவிட்டு, மகன் அவளிடம் ஏதாவது சொல்வானா… என்று நினைத்து அவன் முகத்தைப் பார்க்க, அதில் எந்த உணர்வும் இல்லை. அன்னையை அழைத்துக் கொண்டு நடந்தான்.

“ஒரு தேங்க்ஸ் சொல்லக் கூட இந்த உம்மணா மூஞ்சிக்கு மனசு வரலை போலருக்கு, சரியான சுடுதண்ணி…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே கையிலுள்ள குட்டி கைக்கடிகாரத்தைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

“அய்யோ… டியூட்டிக்கு டைம் ஆச்சே, இனி வீட்டுக்குப் போயி லஞ்ச் எடுத்திட்டு கிளம்பறதுக்குள்ளே லேட் ஆச்சுன்னா திட்டு விழுமே…” நினைத்துக் கொண்டே வேகமாய் கோவிலை விட்டு வெளியேறியவள் தனது சிவப்பு வண்ண ஸ்கூட்டியில் சாலையில் பறந்தாள்.

பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்தவள், ஸ்கூட்டியை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.

“என்னடா ஹர்ஷூ, கோவில்ல ரொம்ப கூட்டமா…” சோர்வுடன் வந்தது அன்னை உமாவின் குரல். மெலிந்த தோற்றம், கண்களில் கவலைகளின் குடியிருப்பு.

“ஆமாம் மா… ஆடி வெள்ளியாச்சே, கூட்டம் இல்லாம இருக்குமா…” என்றவள் திருநீரை எடுத்து அவரது நெற்றியில்  வைத்து விட்டாள்.

“அம்மா, நீங்க சாப்டிங்களா…”

“ம்ம்… எனக்கு வேற என்ன வேலை… சாப்பிடறதும் தூங்கறதும் தானே…” சலிப்புடன் வந்தது அவரது குரல்.

“என்னம்மா, எதுக்கு இந்த சலிப்பு… இத்தனை காலம் நீங்க கஷ்டப்பட்டாச்சு… இப்போ நாங்கல்லாம் பெருசான பின்னால இனியாவது கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டியது தானே…”

“ம்ம்… நீ இப்படி அரக்க பறக்க வீட்லயும் வேலை செய்துட்டு வேலைக்கும் போயிட்டு கஷ்டப்படறதைப் பார்க்க எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குமா… நின்னுகிட்டே அடுக்களைல எதாவது செய்யறேன்னு சொன்னாலும் நீ விட மாட்டேங்கிறே…” அலுத்துக் கொண்டார் அவர்.

“இவ்ளோ நாள் எங்களுக்காய் உங்க உடம்பை வருத்திகிட்டது போதும்… இனி ராணி மாதிரி உக்கார்ந்து எங்களை அதிகாரம் பண்ணிட்டு நல்லா ஓய்வெடுங்க…” அவரிடம் சொல்லிக் கொண்டே தனது டிபன் பாக்ஸில் மதிய உணவை எடுத்துக் கொண்டாள் அவள்.

“ம்ம்… எனக்கு உங்க எதிர்காலத்தை நினைச்சா மலைப்பா இருக்கு… கையில உள்ள பணம் எல்லாம் இந்த ஆப்பரேஷன்கு போயிருச்சு… வீடு மேலயும் கடன் வாங்கிட்டோம்… இன்னும் உன் தங்கை எஞ்சினியரிங் படிப்பை முடிக்கணும்… ரெண்டு பேருக்கும் நல்ல இடத்துல வரன் பார்த்து கல்யாணம் முடிக்கணும்… இதுக்கெல்லாம் எத்தனை பணம் வேணும்… இனி என்ன பண்ணப் போறோம்னு நினைச்சா ஒரு வாய் சோறு கூட நிம்மதியா இறங்க மாட்டேங்குது…”

“அம்மா, இன்னைக்கு முதல்ல பார்ப்போம்… நாளைக்கு என்ன வேணுமோ அதுக்காய் முயற்சி பண்ணுவோம்… நான் இருக்கேன்ல… எப்படியாவது வர்ஷாவை நல்லபடியா படிப்பை முடிக்க வச்சிருவேன்… அப்புறம் அவளும் நல்லவொரு வேலைக்குப் போகத் தொடங்கிட்டா நீங்க நினைச்சது போல எல்லாம் நடக்கும்… வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக்காதிங்கம்மா… எதிர்காலத்தை விட எங்களுக்கு நீங்க முக்கியம்…” ஆறுதலாய் வந்த மகளின் வார்த்தைகள் அவர் மனதை நெகிழ்த்தியது.

“சரிம்மா, மதியத்துக்கு சாப்பிட்டு போட வேண்டிய மாத்திரை எல்லாம் மேசைல எடுத்து வச்சிருக்கேன்… மறக்காம போட்டிருங்க, நான் கிளம்பட்டுமா…”

“ம்ம்… சரிடா, சாப்பிட நேரம் இல்லைன்னு அப்படியே சாப்பாட்டைத் திருப்பிக் கொண்டு வந்திடாதே… நேரத்துக்கு சாப்பிடு… நைட் வரும்போது கவனமா வண்டி ஓட்டிட்டு வா… பத்திரமா போயிட்டு வா…” என்றார். மகளைப் பெருமிதமாய் நோக்கியவரின் விழிகள் கலங்கின. அவள் கிளம்பியதும் அவரது நினைவுகள் பின்னோக்கி சென்றன.

உமாவின் கணவர் சுந்தர் மின்சாரத் துறையில் லைன் மேனாக வேலை செய்து வந்தவர். ஒரு மழை நாளில் மின்சார இணைப்பை சரியாக்குவதற்காய் மின் கம்பத்தின் மீது ஏறியவர், ஷாக் அடித்து கீழே விழுந்து தலையில் அடிபட,  ஆஸ்பத்திரியில் கிடந்து சிகிச்சை பயனின்றி இறந்து போனார். சிகிச்சைக்காய் கையில் உள்ள சேமிப்பு முழுதும் கரைந்து போக, போதாமல் கடனும் சேர்ந்து கொள்ள இரண்டு பெண்களையும் வைத்துக் கொண்டு பரிதவித்து நின்றார் உமா.

அவருக்கு மின்சாரத் துறையிலேயே கிளர்க் உத்தியோகத்தைக் கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொண்டது அரசாங்கம். அன்று முதல் தாயும் தந்தையுமாய் அவரே பெண் குழந்தைகளை கருத்தோடு வளர்த்து வந்தார். மூத்தவள் ஹர்ஷா, பொறுமையும் நிதானமும் நிறைந்தவள். அவளுக்குப் பிடித்த நர்ஸிங் படிப்பை சந்தோஷமாய் படித்து முடித்தாள்.

சிறியவள் வர்ஷா… சற்று துடுக்குத்தனம் நிறைந்தவள், அன்புக்கு மட்டுமே அடிபணிபவள்… அக்காவும், அன்னையுமே அவளது உலகம்… சென்னையில் ஒரு தோழியின் வீட்டில் பணம் செலுத்தும் விருந்தினராகத் தங்கி எஞ்சினியரிங் கல்லூரியில் இறுதி வருடம் படித்து வருகிறாள்… அவளுக்கு நன்றாகப் படித்து ஐடி கம்பெனியில் வேலைக்குப் போய் எடுத்ததுமே கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது ஆசை.

ஹர்ஷா நர்ஸிங் படிப்பை முடித்த சமயத்தில் உமாவுக்கு அவ்வப்போது முடியாமல் போக பரிசோதித்த டாக்டர், இதயத்தில் ஒரு வால்வில் ஏதோ பழுது இருப்பதாகக் கூறி, முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூடிய சீக்கிரமே மேஜர் ஆப்பரேஷன் செய்து அதை சரி செய்ய வேண்டும் என்றும் கூறி விட்டார்… எனவே உமா விருப்ப ஓய்வு எழுதிக் கொடுத்து வீட்டில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். அவரது சிகிச்சை, மருத்துவ செலவு என நிறையத் தொகை செலவாக இருந்த சிறிய வீட்டின் மீது கடன் வாங்கி அந்த செலவுகளை செய்தனர். ஆப்பரேஷனையும் முடித்தனர். 

அவரது அலுவலகத்தில் இருந்து கிடைத்த பணத்தில் வீட்டுக் கடனைத் தவிர மற்ற கடன்களை அடைத்து விட்டனர். ஹர்ஷா ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வந்தாள். அவளது சம்பளமும், உமாவின் ஓய்வூதியமும் மட்டுமே வருமானமாய் இருக்க, சற்று கஷ்டப்பட்டு தான் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது.

மகள் சென்று வெகு நேரமாகியும் வழியையே பார்த்துக் கொண்டு நின்ற உமா, கதவைத் தாளிட்டு படுக்கையில் சரிந்தார்.

விழிகளில் விழுந்திட்டேன்

இதயத்தில் நுழைந்திடுவேனா…

விழி மூடி யோசிக்கறேன்…

இதயத்துடிப்பாய் நீயே வந்தாய்…

இதயம் பேசும் வார்த்தைகள்

என்ன மொழி கண்ணே…

உன் விழிகளின் மூலம்

சொல்லிக் கொடுப்பாயா…

விழியை திறக்க மனமில்லை…

விழி வழியே நீ பறந்துவிட்டால்…

விழி இருந்தும் பார்வையற்ற

குருடனாய் நான் ஆவேனே…

சொர்கத்தின் வாசலும்

நரகத்தின் வாசலும்

உன் விழியில் கண்டேன்…

முதன்முறையாய் என் இதயம்

அதில் துடிக்கக் கண்டேன்…

இதயமே… என் இதயமே…

Advertisement