Advertisement

அத்தியாயம் –  9

“விஜயா, மதியம் சமையல் செய்யும்போது அந்தப் பொண்ணையும் பக்கத்துல வச்சு நம்ம வீட்டுப் பழக்க வழக்கம், யார்க்கு என்ன பிடிக்கும்னு எல்லாம் சொல்லிக் கொடு… தெரிஞ்சுகிட்டும்…”

“சரிங்க மா…”

“அவ பட்டிக்காட்டுல இருந்து வந்தவ, மெஷின்ல துவைக்கத் தெரியுமோ என்னவோ, எப்படின்னு காட்டிரு…”

“சரிங்கம்மா…” விஜயா தலையாட்ட பத்மாவின் கையிலிருந்த அலைபேசி சிணுங்க யாரென்று பார்த்து முகம் சுளித்தாள்.

“இவ வேற என்னவோ இவளைப் பெத்த அம்மாவாட்டம் விடிஞ்ச உடனே நலம் விசாரிக்கக் கூப்பிடறா…” எனச் சொல்லியபடி புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

“ஹலோ..! என்ன நந்தினி, காலைலயே எனக்கு போன் பண்ணிருக்க…?”

“ஆமாத்தை, தேவிக்குதான் போன் பண்ணிப் பார்த்தேன் சுவிட்ச் ஆப்னு வந்துச்சு, அதான் உங்களுக்கு பண்ணினேன்…”

“ஓ..! சரி, சரி… தேவிகிட்ட பேசணுமா…? டிபன் சாப்பிட்டு இருக்கான்னு நினைக்கறேன், கூப்பிடறேன்…” என்றவள், “தேவி…! இங்க வாம்மா…” எனக் குரல் கொடுக்க பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள் ஓடி வந்தாள்.

“எ..என்னங்கத்தை…?”

“இந்தா… நந்தினி போன்ல இருக்கா, இங்கிருந்தே பேசு…” என மலர்ந்த முகத்துடன் கூறிய அத்தையை வியப்புடன் பார்த்தபடி போனை வாங்கியவள் காதுக்குக் கொடுத்தாள்.

“ந..நந்து…!” எனும்போதே தொண்டை அடைத்துக் கொள்ள கண் கலங்கி விட்டது தேவிக்கு.

“தேவி…! சாப்பிட்டியா…? நைட்டு தூங்கினியா…? அங்க ஒண்ணும் பிரச்சனை இல்லையே…” எப்போதும் போல் நேசமும் அக்கறையுமாய் ஒலித்தது நந்தினியின் குரல்.

“ம்ம், இல்ல…”

“மாம்ஸ் உன்னோட பேசினாரா…? அவர் எதாச்சும் கோபமாப் பேசினாலும் கண்டுக்காத… போகப் போக உன்னைப் புரிஞ்சுகிட்டு சரியாகிடுவார், சரியா…?”

“ம்ம்…”

“அத்தை மாமா உன்கிட்ட நல்லாப் பேசுறாங்களா…? நிகிதா அங்கிருந்தா கொஞ்சம் உனக்கு ஆறுதலா இருந்திருக்கும், அவகிட்ட பேசினேன்… லாஸ்ட் செமஸ்டர் நடக்குது 2 நாள்ல முடிஞ்சதும் வீட்டுக்கு வந்திருவேன்னு சொன்னா…”

“ம்ம்…”

“அப்புறம் அவங்க உன்னைக் கோபப்படுதுற போல பேசினாலும் நீ கண்டுக்காத, அது உன் வீடு, அங்கே உள்ளவங்க தான் உன் குடும்பம், அதை மட்டும் மனசுல வச்சுட்டு உனக்கு சரின்னு தோணுறதை செய், சரியா…”

“ம்ம்… சரி நந்து, அப்பா, அம்மா…”

“இதோ பக்கத்துல இருக்காங்க, போனை சார்ஜ் போட்டு வை, நான் அப்புறம் பேசறேன்… அப்பாக்குக் கொடுக்கறேன்…” என்றவள் போன் கை மாற்ற சுபா, நந்துவும் இதே விசாரிப்பும், உபதேசங்களும் கூறி கவனமாய் இருக்கும்படி தேவியிடம் சொல்லி போனை வைத்தனர்.

பத்மாவதியிடம் மொபைலை நீட்ட வாங்கிக் கொண்டவள் செல்லப் போனவளை யோசனையாய் பார்த்தார்.

“இந்தாம்மா நில்லு…”

“சொல்லுங்கத்தை…”

“நீயும் நந்தினியும் உயிர் சிநேகிதிங்களா இருக்கலாம்… அதுக்காக நீ கல்யாணம் முடிஞ்சு இங்க வந்த பிறகும் பொழுதுக்கும் பேசிட்டு இருந்தா சரியாருக்காது… அவகிட்ட பேசறதைக் குறைச்சுக்க… இங்க நடக்கறதை எல்லாம் அங்க சொல்லிட்டு இருந்தா குடும்பம் விளங்காது…”

“ச..சரி, அத்தை…”

“ம்ம்… சூடா எனக்கு ஒரு காபி எடுத்திட்டு வா…” எனவும் தேவி சோர்வுடன் அடுக்களைக்கு செல்ல அதைப் பார்த்துக் கொண்டே அங்கே வந்தார் கணேச பாண்டியன்.

“என்ன பத்மா, மருமக கிட்ட பேசிட்டு இருந்தியா…?”

“ஹூம், கொஞ்சிட்டு இருந்தேன்…” என்றார் வெடுக்கென்று.

“சரி, சரி… எதுக்கு டென்ஷனாவற…? நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்…”

“எங்க, வழக்கம் போல கிளப்புக்கு சீட்டாடத் தான…”

மனைவி சொல்லவும் மருமகள் கவனிக்கிறாளா எனத் திரும்பிப் பார்த்த கணேசன், “என்னம்மா நீ… நான் சீட்டு, ரேஸ் எல்லாம் நிறுத்திட்டேன்னு தெரியாதா…? புதுசா ஒரு பிசினஸ் பத்திப் பேசலாம்னு நண்பன் ஒருத்தன் வரச் சொன்னான்… அதான் கிளம்பறேன்…”

“ம்ம், கைக்கு கொஞ்சம் காசு வந்திருச்சுன்னு வேண்டாத வேலை ஏதாச்சும் பண்ணுனிங்க…”

“என்ன பத்மா, நீ இன்னும் என்னைப் பழைய போலவே நினைச்சிட்டு இருக்க… வரதட்சணையா கிடைச்ச காசுல 90% பிசினஸ் கடன் அடைக்கவே போயிருச்சு, மீதிப் பணமும் வீட்டை ரெடி பண்ண யூஸ் பண்ணோம்… இன்னும் வெளிய உள்ள கடனுக்கே பணம் இல்லன்னு இருக்கேன், என்னைப் போயி இப்படி சொல்லிட்டு இருக்க…”

“சரி, சரி புலம்பாம போயிட்டு சீக்கிரம் வந்து சேருங்க…”

“சரிம்மா… விக்ரம் கம்பெனிக்கு கிளம்பிட்டான் தான…?”

“ம்ம்… அவன் நேரமா கிளம்பிட்டான்…”

“சரி, வர்றேன்…” என்றவர் கிளம்ப டீவியை ஆன் செய்த பத்மா அதில் ஒரு சீரியலில் மாமியார், மருமகளைக் கொடுமைப் படுத்துவதைக் கண்டு கண் கலங்கி உச்சு கொட்டியபடி காணத் தொடங்கினாள்.

இங்கு எத்தனையோ பேருக்கு தான் செய்யும் தவறுகள் தெரிவதில்லை. மற்றவர்கள் அதையே செய்தால் மட்டும் குற்றம் சொல்லத் தெரிகிறது…

மதிய உணவுக்கும் விக்ரம் வீட்டுக்கு வராதது தேவிக்கு கஷ்டமாய் இருந்தது. எல்லா வேலையும் முடித்து அறைக்கு செல்ல மாடிப்படி ஏறியவளிடம் பத்மா, “இந்தாம்மா, உன்னோட துணிமணி எல்லாம் எடுத்திட்டு வந்து கீழே இருக்க ரூம்ல வச்சுக்க… உங்களுக்கு ரெண்டு நாள் கழிச்சு வெள்ளிக்கிழமை சாந்தி முகூர்த்தம் வைக்க சொல்லி உன் வளர்ப்புக் குடும்பம் சொல்லிருக்கு… அதுக்குப் பிறகு நீ விக்ரம் ரூமுக்குப் போயிக்கலாம்…” என தலையாட்டினாள்.

விக்ரமை நேருக்கு நேர் காணும் தைரியம் இன்னும் அவள் மனதுக்கு வராததால் இந்த மாற்று அறை விஷயம் அவளுக்கு ஏற்புடையதாகவே இருந்தது.

விக்ரம் அறையிலிருந்த தனது உடமைகளை எடுத்துக் கொண்டு கீழே இருந்த அறைக்கு வந்தாள் தேவி. அந்த அறையில் தான் நந்தகுமார் சீர்வரிசையாய் கொடுத்த பொருட்கள் எல்லாம் இருந்தன. அதை சற்று ஒதுக்கி வைத்து அலமாரியில் தனது பொருட்களை வைத்தவள், கட்டிலை இன்னும் செட் ஆக்காமல் சாய்த்து வைத்திருந்ததால் மெத்தையைத் தரையில் விரித்துப் படுத்துக் கொள்ள அங்கு அதற்கு மட்டுமே இடம் இருந்தது.

காலை முதல் இடைவிடாத பணி அவளை சோர்வாக்கியதை விட விக்ரமின் பாரா முகமும், குத்தும் வார்த்தைகளும், அலட்சியப்படுத்தலும் மிகவும் மனதை வலிக்க வைத்தது. அலைபேசியை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டுப் படுத்தவளுக்கு காலில் கண்ணாடி குத்திய இடம் விண்ணென்று வலித்தது.

காலில் கட்டைக் கண்ட பத்மாவதி என்னவென்று கேட்க, விஷயத்தை சொன்னதும், “ஓஹோ…!” என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டாள். தேவி கட்டைப் பிரித்துப் பார்க்க காயம் சற்று ஆழமாய் இருந்தது. விஜயா மாலை கடைக்கு செல்லும்போது மருந்து வாங்கி வருவதாய் சொன்னதை நினைத்தவளுக்கு அவளை நினைத்து ஆறுதலாய் இருந்தது. ஏதேதோ யோசித்தபடி சிறிது நேரம் படுத்திருந்தவள் ஐந்து மணிக்கு மீண்டும் அடுக்களைக்கு செல்ல காபி போட்டுக் கொண்டிருந்தாள் விஜயா.

அவளை விலக்கி நிறுத்திவிட்டு யாரார்க்கு எப்படி வேண்டுமென்று கேட்டு தேவியே காபி தயாரித்தாள். மாலை தோட்டத்தில் செடிகளுக்கு நீர் விடுகையில் மனம் சற்றே உற்சாகமாய் உணர்ந்தது.

மாலை 7 மணிக்கு வீட்டுக்கு வரும்போதே விக்ரமின் முகம் கடுகடுவென்று இருந்தது. கார் கதவை அறைந்து சாத்தும் சத்தம் கேட்டதுமே அடுக்களைக்கு சென்று விட்டாள் தேவி.

ஹாலில் அமர்ந்திருந்த பத்மா மகனைக் கண்டதும், “என்னப்பா, வரும்போதே டென்ஷனா வர்ற…?” என்றாள்.

“ப்ச்… எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி டிஸைன் டிஸைனா பிரச்சனை வருதோ…”

“என்னடா விக்ரம், என்னாச்சு…?”

“தயாள் சார் வீட்டுல விருந்துக்கு கூப்பிட்டிருக்கார்… அதுவும் அவளையும் அழைச்சிட்டுப் போகணுமாம்…” என்றவனின் கடுகடுப்பு பத்மாவுக்குப் புரிந்தது.

தயாள் பெரிய பிசினஸ் மேன், இவர்களின் கம்பெனி வளர்ச்சிக்கு எத்தனையோ உதவி செய்தவர், அவரது அழைப்பை நிச்சயம் மறுக்கவும் முடியாது…

ஊரில் நடந்த விஷயங்களோ, மணப்பெண் மாறியதோ இங்கே யாருக்கும் தெரியாது. இப்போதும் விக்ரம் அத்தை மகளைக் கல்யாணம் செய்ததாகவே நினைத்திருந்தனர். மணப்பெண்ணின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் இங்கே நடத்த இருந்த ரிசப்ஷனைக் கான்சல் செய்வதாக மட்டுமே கூறி இருந்தனர். விக்ரமிடம் ரிசப்ஷன் தான் இல்லை, மேரேஜ் ஆனதுக்கு எங்களுக்கு பார்ட்டி கூட வைக்கலைனா எப்படி என சில பிசினஸ் நண்பர்கள் நச்சரித்துக் கொண்டும் இருந்தனர்.

“தயாள் சார்கிட்ட மறுத்து சொல்ல முடியாதே… என்ன பண்ணறது…?” என்றாள் பத்மா.

“ப்ச்… அவர் கண்டிப்பா சன்டே வரணும்னு சொல்லிட்டார்…”

“ம்ம்… நாய்க்கு வாய்க்கப் பட்டா குலைச்சு தான ஆகணும்… கூட வர்றது யாரோன்னு நினைச்சுட்டு அவளை விருந்துக்கு அழைச்சிட்டுப் போ… இல்லன்னா தயாள் கேக்கற நிறைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும்…”

“ம்ம்… எல்லாம் என் விதி, அதோட இந்த பிசினஸ் பிரண்ட்ஸ் இம்சைங்க வேற…”

“அவனுங்களுக்கு என்னவாம்…?”

“மேரேஜ் முடிஞ்சதுக்கு ரிசப்சன் வைக்கலைன்னு பார்ட்டி கேட்டு இம்சை பண்ணுறாங்க மா… அதான், அவங்களை அழைச்சு நாளைக்கு ஈவனிங் ஹோட்டல்ல பார்ட்டி கொடுக்கலாம்னு இருக்கேன்…”

“ம்ம்…” என்றவர் கண்ணைச் சுற்றிலும் ஓட்டிவிட்டு குரலைத் தாழ்த்தி, “அவளையும் அழைச்சிட்டுப் போறியா…?” என்றார்.

“ப்ச்… என்ன பண்ணித் தொலையறது…? அதுக்காக என்னால அவளை கூட அழைச்சிட்டுப் போகல்லாம் முடியாது.. நாளை ஈவனிங் அவளை நான் சொல்லுற ஹோட்டலுக்கு ஆட்டோல வர சொல்லிருங்க… கொஞ்சம் நல்லபடியா புறப்பட்டு வர சொல்லுங்க…” என்று எழுந்தான்.

“டேய், காபி எதுவும் சாப்பிடறியா…?”

“வேணாம் மா… எனக்கு ஆம்லட் போட்டு விஜயாட்ட ரூமுக்கு கொண்டு வர சொல்லுங்க…” என்றவன் சென்று விட, மகன் இந்த நேரத்திலேயே குடி பூஜையைத் தொடங்கப் போகிறான் எனப் புரிந்து கொண்டாள் பத்மா.

“ப்ச்… பாவம், ரொம்பவே மனசு வெறுத்துப் போயிருக்கான் போலருக்கு… கல்யாணம் முடிஞ்சு ஜாலியா ஹனிமூன் கிளம்ப வேண்டிய பையன்… இந்தக் கருமாந்திரத்தைக் கட்டிகிட்டு கையில புட்டியோட அலையறானே… இந்த நந்தினிகிட்ட மட்டும் இவன் தப்பு பண்ணதுக்கு ஆதாரம் இல்லாம இருந்திருந்தா கல்யாணத்தையே நிறுத்திருப்பேன்… ஆதாரத்தைக் காட்டிப் பேசவும் பலமா மறுக்கவும் முடியல…” யோசித்துக் கொண்டிருந்த பத்மா, தேவி வருவதைக் கண்டதும், “ஏய் இங்க வா…” என அழைக்க வந்தாள்.

“விஜயாட்ட சொல்லி ஆம்லேட் போட்டு விக்ரம் ரூமுக்கு கொண்டு போய் கொடுக்க சொல்லு…” பத்மா சொன்னதைக் கேட்டதும் தேவி திகைத்து நோக்க அவளைக் கடுப்புடன்  பார்த்தாள் பத்மா.

“ஏய்…! என்ன முழிச்சிட்டு நிக்கற..? சொன்னது காதுல விழலையா…? விஜயா எங்கே…?”

“அ..து வந்து… அவங்களை நீங்க தான் மார்க்கெட் அனுப்பி வச்சீங்களே அத்தை…”

“ஓ… ஆமாமா, சரி நீயே நாலு முட்டை ஊத்தி ஆம்லட் போட்டு விக்ரம் ரூமுக்கு கொண்டு போயி கொடுத்திரு…”

“நானா…?”

“அப்புறம் செத்துப் போன உன் அப்பனா ஆம்லட் போட வருவான்… தொணத் தொணன்னு கேள்வி கேட்டுட்டு நிக்காம சீக்கிரம் போட்டுக் கொண்டு போயி குடு…” அதட்டலாய் சொல்லிவிட்டு அறைக்கு நடந்தாள்.

தந்தையை சொன்னதும் சுருக்கென்று கண்ணில் நீர் நிறைய, அவள் சொன்னது போல் ஆம்லட் செய்து எடுத்துக் கொண்டு மாடிப் படி ஏறினாள் தேவி. நடக்கையில் கண்ணாடி குத்திய இடத்தில் நல்ல வலி இருந்தது.

கதவும் பாட்டிலும் திறந்திருக்க விக்ரம் உடையைக் கூட மாற்றாமல் குடிக்கத் தொடங்கியிருந்தான். பீர் அடிக்கடி குடித்தாலும் ஹாட் பக்கம் எப்போதாவது செல்பவன் இப்போது அடிக்கடி ஹாட்டைத் தொடத் துவங்கியிருந்தான். நெஞ்சமெல்லாம் வெறுப்பும் கோபமும் அடைந்து கிடந்தது.

நந்தினியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் மனதை இப்போதும் குடைந்து கொண்டிருந்தன. தேவியை மனைவியாய் ஏற்பது கூட அவன் பிரச்சனை இல்லை. ஆனால் அவள் மனைவியாய் வந்த வழியைத் தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“நான் என்ன அத்தனை கேவலமானவனா…? அத்தனை பேர் முன்னாடி என்னை நிக்க வச்சு கேள்வி கேட்டு கூனிக் குறுக வச்சு அசிங்கப் படுத்திட்டா… இந்த மங்கி தேவி என்கிட்ட எப்படி வாயாடுவா, ஆனா நான் எதுவும் பண்ணலைன்னு சொல்லாம ஊமையாட்டமா நின்னாளே… அப்ப அவளும் நான் அந்த கேவலத்தைப் பண்ணிருப்பேன்னு நினைக்கறாளா…?” அறைக்குள் வந்ததுமே ஒரு குப்பியை தண்ணீர் கலக்காமல் ராவாய் உள்ளே தள்ளியிருந்தான். கண்ணை மூடி போதையில் யோசித்துக் கொண்டிருக்க அருகில் பிளேட்டை வைக்கும் சத்தத்தில் கண் திறக்க தேவியைக் கண்டவன் விழிகள் சிவந்தன.

அவன் கண் மூடி அமர்ந்திருப்பதைக் கண்டு வேகமாய் தட்டை வைத்துவிட்டு செல்லத் திரும்பியவள் அவனது அதட்டல் குரலில் நின்றாள்.

“ஏய்… நில்லுடி…!”

தயங்கி நின்றவள் சற்றே பயத்துடன் அவனை நோக்கித் திரும்பினாள்.

“எங்கடி ஓடற…? இங்க வா…” ஒற்றை விரலால் அவன் அருகே வரும்படி சொன்னவன், அவள் நின்றதைக் கண்டதும் மெல்ல தள்ளாடி எழுந்தான். அவன் மேல் குப்பென்று மணத்த மதுவின் வாசம் அவளது நாசிக்குள் பரவி வேதனையை மனதில் நிரப்பியது.

அவனை நோக்காமல் அவள் தலை குனிந்தபடி நிற்க, அவளைக் குறுகுறுவென்று சில நொடிகள் பார்த்தவன், “ச்சீ… துரோகி…!” என்றுவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.

ஆம்லட் தட்டை குனிந்து எடுத்தவன், “போ…” என தட்டுடன் அவள் மீது வீசி எறிந்துவிட்டு கட்டிலில் மல்லாந்தான். அந்தத் தட்டோ வந்த வேகத்தில் அவள் நெற்றியில் லேசாய் பதம் பார்த்து முகத்திலேயே ஆம்லட் விழுந்து கீழே நழுவ அதிர்ந்து நோக்கி நின்றாள் தேவி.

நெற்றியில் சுள்ளென்று வலிக்க தொட்டுப் பார்க்கவே சின்னதாய் ரத்தம் பொடிய லேசாய் காயமாகியிருந்தது. அது தெரியாமல் போதை தலைக்கேறத் தொடங்கியதில் உளறத் தொடங்கினான் விக்ரம்.

கட்டிலில் கிடந்தபடி, “துரோகி…! நேசிச்சனே, பதில் பேசாம ஊமையா நின்னியே… நம்பிக்கை துரோகி…” என ஏதேதோ உளறியபடி படுத்திருக்க அவள் விழிகள் கலங்கின. கீழே சிதறிய பொருட்களை எடுத்தபடி விக்ரம் அருகே வந்தவள் அவனையே சில நொடிகள் பார்த்து நின்றாள்.

“இல்ல பாண்டியரே, நான் துரோகி இல்ல… எனக்கே நடந்தது என்னன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கும் போது வேற எதையும் என்னால யோசிக்க முடியல…” மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் அவன் அசைந்து படுக்கவும் வேகமாய் அறையை விட்டு வெளியேறினாள்.

நெஞ்சத்தின் அடியாழத்தில்

அமிழ்த்தி வைக்கிறேன் உன்னை…

என் உள்ளத்தை நீ

அடக்கி ஆளாதே என்று

பதுக்கி வைத்தாலும்

பள்ளம் பார்த்த வெள்ளமென

பாய்ந்து விடுகிறது

உன்னைப் பார்த்தாலே…

நான் வெறுத்துவிட்டேன்

என்பதெல்லாம் வெறும் பேச்சு…

என் உயிருக்குள்

உலா வருகிறது உன் மூச்சு…

Advertisement