Advertisement

அத்தியாயம் –  8

 

பழைய வீட்டில் பெயின்ட் அடிப்பதுடன் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருந்தான் விக்ரம். அதில் படுக்கையறைகளுக்கு அட்டாச்டு பாத்ரூமும் கட்ட ஏற்பாடு செய்திருந்தான். பெயின்டிங் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க பாத்ரூமும் கட்டி முடித்திருந்தனர். சில பொருட்கள் தீர்ந்து விட்டதால் அதை வாங்கிவிட்டு மறுநாள் காலை வேலையைத் தொடர்வதாக சூப்பர்வைசர் சொல்லிவிட அன்று மதியமே வேலை நிறுத்தி சென்றனர் பணியாட்கள். சூப்பர்வைசரும், விக்ரமும் மட்டும் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சூப்பர்வைசருக்கு யாரோ போனில் அழைக்க பேசிக் கொண்டிருந்தவன் முகம் சந்தோஷமானது. அவர்கள் பேசியது விக்ரமின் காதிலும் அரைகுறையாய் விழ ஆர்வமாய் பார்த்திருந்தான்.

“என்ன பாண்டியன், எதோ கள்ளுன்னு காதில் விழுந்துச்சு…”

“அது ஒண்ணுமில்ல சார், நம்ம பிரண்டு தோப்புல கள்ளு எறக்குறாங்க, அதான் வர்றியான்னு கேட்டான்… நான் கிளம்பட்டுமா சார்…” என்றான் பாண்டியன் அவசரமாக.

“கள்ளு நானும் குடிச்சிருக்கேன்… அப்படி அதுல சரக்கு அளவுக்கு பெருசா ஒண்ணும் இல்லியே..? கொஞ்சம் கூட கிக்கே இல்லாம அந்த புளித்தண்ணிய எப்படி குடிக்கறீங்க…?”

“என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க…? அதெல்லாம் அதுல சில, பல விஷயங்களை கலந்து குடிச்சா சும்மா ஜிவ்வுன்னு இருக்கும், வெளிநாட்டு சரக்கு கூட அந்தப்பக்கம் நிக்கணும்…” என்றவனுக்கு சொல்லும்போதே நாவூறியது.

“ஓ…! எனக்கென்னவோ அது வாசமே பிடிக்கல…”

“வாசமா சார் முக்கியம்…? அப்படியே மூக்கைப் பொத்திகிட்டு கல்ப்பா ஒரே உறிஞ்சுல குடிச்சிடணும், அதெல்லாம் ஒரு கலை… சொன்னாப் புரியாது, நாங்க குடிக்கிற கள்ளை ஒருநாள் கொண்டு வந்து தர்றேன், குடிச்சிப் பார்த்துட்டு சொல்லுங்க… இப்ப நான் கிளம்பறேன் சார்…” என்று சிறந்த குடிமகனாய் வாதாடிவிட்டு கிளம்பிவிட்டான். அவன் சொன்னதைக் கேட்டதும் விக்ரமிற்கும் மது குடிக்கும் ஆசை துளிர்விட்டது. விக்ரம் முழுக் குடிகாரன் இல்லாவிட்டாலும் எப்போதாவது சிறிது மது எடுத்துக் கொள்பவன் தான். இந்த ஊருக்கு வந்தது முதல் நல்ல பிள்ளையாய், அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டிய அவசியத்தால் குடிக்கவில்லை. இப்போது அந்தப் பேச்சு வந்ததும் தொண்டை மது பானத்திற்காய் அரிக்கத் தொடங்க மறுநாள் அந்த சூப்பர்வைசர் டவுனுக்கு செல்லும்போது தன்னுடைய பிராண்டில் ஒரு பாட்டில் வாங்கி வரச் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். யோசித்துக் கொண்டிருந்தவன் பசி வயிற்றைக் கிள்ளவும் தான் நேரத்தைப் பார்க்க மணி மூன்றைத் தொட்டிருந்தது. வீட்டைப் பூட்டிவிட்டு அத்தையின் சமையலை சுவைக்கக் கிளம்பினான் விக்ரம்.

அங்கேயோ நந்தினியும், மந்தாகினியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். நந்தினியின் கையில் மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. அன்று தலைக்குக் குளித்து தளர்வாய் பின்னிய கூந்தல் காற்றில் லேசாய் கலைந்திருக்க அவன் முதன் முதலில் பார்த்த மஞ்சள் தாவணியில் அழகான ஓவியம் போல் அமர்ந்திருந்தவளைக் கண்டவனின் விழிகள் நீங்க மறுத்து சண்டித்தனம் செய்ய விக்ரமுக்கு, “இவ எதுக்கு எப்பவும் இங்கயே ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிட்டு இருக்கா…” எனக் கடுப்பாய் வந்தது.

விக்ரமைக் கண்ட நந்தினி, “வாங்க மாம்ஸ், பசிக்கலையா… லேட்டா வர்ரிங்க…?” எனக் கேட்க, “ம்ம்… பசிக்குது, அத்தை எங்கே…” என்றான் சுபாஷினியைக் காணாமல்.

“அம்மா தெரிஞ்சவுங்க வீட்டுக்குப் போயிருக்காங்க… நீங்க பிரஷ் ஆகிட்டு வாங்க, சாப்பிடலாம்…” என்றாள்.

“தேவி…! மாம்ஸ் பாவம் பசியோட வந்திருக்கும், கொஞ்சம் சாப்பாடு எடுத்து வச்சிருடி…” என்றாள் தோழியிடம்.

நந்தினியின் கையில் அப்போதுதான் மருதாணி வைத்திருக்க மறுக்க முடியாமல் எழுந்த மந்தாகினி கை கழுவி விட்டு வந்தாள். விக்ரம் சாப்பிட அமர தட்டில் சாதம் வைத்தவளிடம் எரிந்து விழுந்தான் அவன்.

“எதுக்கு இப்படி மூஞ்சில அடிச்ச போல ஒண்ணாக் கொட்டுற…? நானே பரிமாறிக்கறேன்…” அவன் சிடுசிடுக்க மந்தாகினியின் முகம் வாடிவிட்டது.

சத்தம் கேட்டு நந்தினி அங்கே வர தோழியின் முகத்தைக் கண்டவள், “என்னாச்சு மாம்ஸ்…? எதுக்கு தேவியைத் திட்டினிங்க…?” எனக் கேட்க,

“ப்ச்… ஒண்ணா பிளேட்டுல சாதத்தைக் கொட்டினா எப்படி சாப்பிட…? கொஞ்சமாச்சும் நாகரிகம் தெரிய வேணாம்…?” என்றவனை நந்தினி வியப்பாய் நோக்க தேவி முகம் சுருங்க நின்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

“என்ன மாம்ஸ், இன்னைக்கு தான் அவ புதுசா பரிமாறுற போல சொல்லறீங்க…? இதுக்கு முன்னவும் அவ உங்களுக்குப் பரிமாறி இருக்காளே…?”

“ப்ச்… இனி அவளைப் பரிமாற வேண்டாம்னு சொல்லிடு… எனக்கு நீயோ அத்தையோ பரிமாறினாப் போதும்… இல்லேன்னா நானே போட்டு சாப்பிட்டுக்கறேன்…” என்றவனின் புதிய மாற்றம் நந்தினிக்கு திகைப்பைக் கொடுக்க எதுவும் சொல்லாமல் தோழியிடம் சென்றாள்.

அவனது சிடுசிடுப்பில் தேவியின் பிஞ்சு மனம் வெம்பிப் போக கண்ணில் நீர் தழும்ப வாசலில் நின்றவள் நந்தினியைக் கண்டதும், “நான் கிளம்பறேன் நந்து…” எனக் கூற நந்தினி அவளை சமாதானப்படுத்த முயன்றும் தேவி நிற்காமல், “இல்ல, கிளம்பறேன்…” எனச் சென்று விட்டாள்.

அதன் பின் விக்ரம் முன்பு வருவதை முடிந்தவரை தேவி தவிர்த்து விடுவாள். நந்தினியும் புரிந்து கொண்டு வற்புறுத்தவில்லை. விக்ரம், நந்தினியின் கல்யாணப் பேச்சு ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க வீட்டில் பெயின்டிங் வேலையோடு பாண்டியன் கொண்டு வந்து கொடுக்கும் போதை மிகுந்த கள்ளைக் குடிப்பதையும் விக்ரம் வழக்கம் ஆக்கிக் கொண்டான். அந்த சமயத்தில் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்து விடுவான்.

பாத்ரூமை மாற்றி அமைத்து பிளம்பிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் விக்ரமின் பெற்றோர் அங்கே வர பெரியவர்கள் பேசி கல்யாணத்துக்கு நாளும் குறித்துச் சென்றனர். எப்போதும் தோழியின் வீடே கதியென்று கிடக்கும் மகள் இப்போதெல்லாம் எப்போதாவது போய்விட்டு உடனே திரும்பி விடுவதில் சரவணனுக்கும் ஆச்சர்யமே. அதுவும் நந்தினியின் கல்யாண ஏற்பாடு நடந்து கொண்டிருக்க அவர்கள் வீட்டிலும் பெயின்டிங், சின்னச் சின்ன மராமத்து வேலைகள் நடக்கையில் இவள் அதிகம் செல்லாதிருந்தது கண்டு மகளிடமே கேட்டு விட்டார்.

“தேவிம்மா, நந்தினிக்கும் உனக்கும் ஏதாச்சும் மன வருத்தமா…? இப்பல்லாம் அதிகம் அங்க போகக் காணமே…? என்னாச்சு டா…” அன்போடு கேட்டவரிடம் புன்னகைத்தவள்,

“என்னப்பா கேக்கறிங்க…? எனக்கும் நந்துவுக்கும் என்ன வருத்தம் வரப் போகுது…? அவ கல்யாணமாகி சென்னை போயிட்டா நான் தனியா ரொம்பக் கஷ்டப்படுவேன்… அதான் இப்பவே கொஞ்சம் அவளோட இருக்கற நேரத்தைக் குறைச்சுக்க முயற்சி பண்ணறேன், வேற பிரச்சனை எதுவும் இல்லை…” எனக் கூற சரவணனும் சமாதானமாகி விட்டார்.

மந்தாகினி முழுமையாய் அங்கே போகாமலும் இல்லை. நந்தினியை வெளியே சந்திப்பது, விக்ரம் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று வருவது என மாற்றிக் கொண்டதால் அவர்களுக்கு வித்தியாசமாய் தெரியவில்லை.

“கிளிங்க்….” பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்த விக்ரம் சட்டென்று அந்த சத்தத்தில் எழுந்தான். அவன் கையிலிருந்த பியர் குப்பி கீழே விழுந்து உடைந்திருக்க அதில் மிச்சமிருந்த பானம் கீழே கொட்டியிருந்தது. வெறுப்புடன் அதைப் பார்த்தவன் முகத்தைச் சுளித்தான்.

“பாவி…! அன்னைக்கு மட்டும் இவ அங்க வராம இருந்திருந்தா, என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்கும்… இப்படி என்னைக் குற்றவாளியா கூனிக் குறுகி நாலு பேர் முன்னாடி நிக்க வச்சுட்டு என் கையாலயே தாலியை வாங்கிட்டு, என் மனைவியா வாழ இங்கயே வந்துட்டாளே… இல்ல, என்னால முடியாது… என் பேரை அசிங்கப்படுத்தி கட்டாயத் தாலி வாங்கிகிட்டவளை என்னால மன்னிக்க முடியாது… நான் பண்ணுற கொடுமைல அவளே இங்கிருந்து விழுந்தடிச்சு ஓடணும்… ஓட வைப்பேன்…” சொல்லிக் கொண்டே பாட்டிலை எடுக்கக் குனிந்தவன் விரலில் கண்ணாடிச் சில்லொன்று லேசாய் பதம் பார்க்க அதை அப்படியே விட்டுவிட்டு கட்டிலில் மல்லாந்தான்.

காலையில் கண் விழித்த தேவிக்கு அவளை அமேசான் காட்டுக்குள் தனித்து விட்டது போல் பயமாய் இருந்தது. புதிய இடம், சூழ்நிலையோடு அவ்வீட்டு மனிதர்களும் புதிதாகவே தோன்றினர். இவள் வழக்கம் போல் காலையில் நேரமே கண் விழிக்க வீடு உணர்ந்திருக்கவில்லை.

தயக்கமாய் அடுக்களைக்கு செல்ல விஜயா அப்போதுதான்  எழுந்து பாயை சுருட்டி வைத்துக் கொண்டிருந்தாள்.

“அடடே, என்ன மா நேரமா எழுந்துட்டிங்க…? நீங்க போயி குளிச்சிட்டு வாங்க… அதுக்குள்ள நானும் குளிச்சிட்டு வந்து  காபி போட்டுத் தாரேன்…” சொன்ன விஜயா அவளது மாற்று உடையுடன் வெளியே இருந்த குளியலறை நோக்கிச் செல்ல தேவியின் உடைப்பெட்டி விக்ரமின் அறையில் இருந்ததால் செல்லலாமா, வேண்டாமா எனத் தயங்கி நின்றாள். முன்தினம் காலை உடுத்திய பட்டு சேலை கசகசவென்று தேகத்தை உறுத்த வேறு வழியின்றி மாடியேறினாள்.

நந்தினியும், அவளும் முன்பே அந்த அறைக்கு சென்றிருந்ததால் தடுமாற்றமின்றி அறைக்கு முன் வந்தவளுக்கு உள்ளே செல்லத்தான் பயமாய் இருந்தது. சிங்கத்தின் குகைக்குள் செல்ல பயந்து நிற்கும் கஸ்தூரி மானாய் அவள் கால்கள் கதவருகே வேரூன்றி நின்றன.

சில நிமிடங்கள் நின்றவள், அறைக்குள் எந்த அசைவும் இல்லாதது போல் தோன்றவே மெல்ல கதவைத் தள்ளிப் பார்க்க அது திறந்து கொண்டது. மிதமான இரவு விளக்கின் வெளிச்சம் அறையில் நிறைந்திருக்க கட்டிலில் விக்ரம் நல்ல உறக்கத்தில் இருப்பது தெரிய, சிறு ஆசுவாசத்துடன் தனது பாகைத் தேடி அவளது விழிகள் சுழன்றன.

வைத்த இடத்தில் அது காணாததால் அறை முழுதும் தேட இறுதியில் உள்ளே இருந்த சின்ன அறைக்குள் வீசி எறியப்பட்டது போல் கிடந்த பாகைக் கண்டதும் மனம் வலிக்க அருகே சென்றாள்.

அவன் எழுவதற்குள் சீக்கிரம் குளித்து அறையை விட்டு வெளியேறி விட வேண்டுமென்று மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். நல்ல காலமாய் அவள் குளித்து வரும் வரையும் அவன் எழுந்திருக்கவில்லை. சேலையை அந்த அறைக்குள் சென்று சரியாய் உடுத்துக் கொண்டு வந்தவளுக்கு உடம்பின் பாரம் குறைந்தது போல் தோன்றியது.

விக்ரம் அருகே தயக்கத்துடன் வந்தவள் அவன் எழுந்து விடுவானோ எனப் பார்த்துக் கொண்டே கதவை நோக்கி நடக்க காலில் சுள்ளென்று ஏதோ ஏறவும், “ஆ…” என அலறி விட்டாள். உடைந்த பாட்டிலின் கண்ணாடித் துண்டொன்று அவள் காலைப் பதம் பார்த்திருக்க பதறியவள், காலிலிருந்து கண்ணாடியை அகற்றவும் ரத்தம் வழியத் தொடங்கியது. அவள் சத்தத்தில் விக்ரமும் உணர்ந்து விட்டிருந்தான். தன் முன்னே நின்றவளைக் கண்டதும் சட்டென்று திகைத்து அடுத்த நொடி ஆத்திரம் தலைக்கேற வேகமாய் எழுந்தவன், “ஏய்ய்…! சனியனே, காலங்கார்த்தால எதுக்குடி என் முன்னாடி வந்த…” எனக் கத்த காலின் காயத்தை விட அவன் வார்த்தைகள் அதிகமாய் வலிக்க கலங்கி விட்ட கண்களுடன் காலைப் பிடித்துக் கொண்டு நின்றவள் பயத்துடன் பார்த்தாள்.

“வெளிய போ…” விக்ரம் கண்ணை உருட்டியபடி கத்த அதற்கு மேல் அங்கு நிற்காமல் ரத்தம் வழிய காலை இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

கோபத்தில் விம்மியவன் பெரிதாய் மூச்சு விட்டுக் கொண்டு கட்டிலில் அமர கீழே உடைந்து கிடந்த பாட்டிலையும், அதன் அருகே கிடந்த ரத்தத் துளிகளோடு கூடிய கால் அடையாளமும் கண்டவன் மனம் சற்றே பதறியது.

“ஐயோ…! அவ கால்ல கண்ணாடி குத்திருச்சு போலருக்கே… இப்படி ரத்தம் வந்திருக்கு…” என யோசித்தபடி கதவருகே சென்று பார்க்க ஒரு காலை நொண்டியபடி மாடியிலிருந்து மெல்ல இறங்கிக் கொண்டிருந்தாள் மந்தாகினி.

அதைக் கண்டு ஒரு நிமிடம் மனம் வருந்தினாலும் அடுத்த நிமிடமே அது சந்தோஷமாய் மாறியது.

“வேணும்டி, இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே ரத்தம் சிந்த வேண்டியதாப் போயிருச்சு பார்த்தியா…? என்னை அந்த நந்தினி அவ்ளோ பேசும்போது பொம்மை மாதிரி வேடிக்கை பார்த்துட்டு தான நின்ன, நான் அப்படிப் பண்ணிருக்க மாட்டேன்னு உனக்கும் நம்பிக்கை இல்லல்ல… நல்லா அனுபவி, இது வெறும் ஆரம்பம் தான்…” மனதுக்குள் கருவிக் கொண்டவன் குளியலறைக்குள் நுழைந்தான்.

“விஜயா, இதென்ன சட்னில உப்பே இல்ல…?” உணவு மேசையில் சாப்பிட அமர்ந்திருந்த பத்மா கோபமாய் குரல் கொடுக்க பதட்டமாய் வெளியே வந்தாள் விஜயா.

“அ..அதுவந்து மா…” அவள் தயங்கி நிற்க மந்தாகினி உப்பை எடுத்துக் கொண்டு வேகமாய் வந்தாள்.

“ம..மன்னிச்சிருங்க அத்தை, நான்தான் சட்னி அரைச்சேன்…”

“ஓ…! உன் வேலை தானா, உனக்கென்ன நாக்கு செத்துக் கிடக்கா… உப்பிருக்கான்னு பார்த்து போடத் தெரியாது…” பத்மா கோபமாய் மருமகளிடம் பொரிய,

“இ.இல்லத்த, உங்களுக்கு பிரஷர் இருக்குன்னு விஜயாக்கா சொன்னாங்க… அதான், கொஞ்சம் உப்பு கம்மியா போட்டு சட்னி அரைச்சேன்…” தயங்கியபடி தேவி சொல்ல முறைப்பாய் அவளைப் பார்த்தாள் பத்மா.

“ஓ…! இவங்க MBBS படிச்ச டாக்டரு, பிரஷர் இருந்தா உப்பு கம்மியாப் போடணும்னு கண்டு பிடிச்சுட்டாங்க, என்னோட பிரஷரை நான் பார்த்துக்கறேன், நீ குறைக்க வேணாம்…” என்றவள், “ம்ம்… உப்பைப் போடு…” என்றாள் அதிகாரமாய். மந்தாகினி சிறிது உப்பைப் போட்டு கலக்கி விட இட்லியோடு சாப்பிடத் தொடங்கினாள் பத்மா.

புறப்பட்டு சாப்பிட வந்த விக்ரம், “என்னம்மா, காலைலயே எதுக்கு டென்ஷன் ஆகறீங்க…?” என்றபடி அமர்ந்தான்.

“அது ஒண்ணுமில்லப்பா, உன் பொண்டாட்டி சட்னில உப்பே போடல… எப்படி சாப்பிடறது…?” எனவும் குரல் உயர்த்தினான்.

“மா… யாரு, யாருக்குப் பொண்டாட்டி…? இனி அப்படிச் சொல்லாதிங்க…” என்றவன் கோபமாய் தட்டைத் தள்ளிவிட்டு சாப்பிடாமலே எழுந்து சென்றுவிட சுவரோடு சேர்ந்து நின்றபடி இருந்த தேவியின் கண்கள் அதைக் கேட்டு கலங்க பத்மாவோ அவளை முறைத்தாள்.

“வந்த முதல்நாளே என் புள்ளையைப் பட்டினி போட்டுட்ட, நல்லா வருவ போ…” எனக் கோபமாய் சொல்லியபடி அவளும் சென்று விட அழுகையை அடக்கியபடி நிற்கும் தேவியைக் கண்டு விஜயாவுக்குப் பாவமாய் இருந்தது.

“சின்னம்மா, வாங்க…” என அடுக்களைக்குள் அழைத்துச் சென்றவள், “இவங்களுக்கு எல்லாம் நாக்கோட தேள் கொடுக்கையும் சேர்த்து ஆண்டவன் படைச்சுட்டான், இதுக்கு வருத்தப்பட்டா எப்பவும் அதுக்கு தான் நேரமிருக்கும், உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்யுங்க, இவங்க பேசறதைக் கண்டுக்காதிங்க… இந்த வீட்டுலயே கொஞ்சம் மனிதாபிமானம் உள்ள ஆள் உங்க புருஷனோட தங்கச்சி நிகிதா தான், அதுவும் இப்ப ஹாஸ்டல்ல இருக்கு… இல்லனா உங்களுக்கு ஆறுதலா இருந்திருக்கும்…” என ஆறுதல் சொல்ல அவளோ, “விஜயாக்கா என்ன இருந்தாலும் அவங்க என் புருஷனும், அத்தையும்… இது என் குடும்பம்… நீங்க இப்படி சொல்லி என் மனசுல அவங்க மேல வெறுப்பை வளர்த்தாதீங்க… எல்லாம் போகப் போக சரியாகிடும்…” என்றாள் கண்ணைத் துடைத்தபடி. அவளது நிமிர்வான பேச்சு விஜயாவுக்கு திகைப்பைக் கொடுக்க, “இவ்ளோ தெளிவா யோசிக்கற நீ அப்புறம் எதுக்கு மா கண் கலங்கிட்டு நிக்கற…” என்றாள்.

“அது பீலிங், வேற டிபார்ட்மென்ட்…” என்றவள் சிரிக்கையில் மீண்டும் கண்ணில் நீர் நிறைய அவளை அதிசயமாய் பார்த்த விஜயாவின் கண்ணில் ஒரு மெச்சுதல் தெரிந்தது.

காலில் கண்ணாடி கிழித்த காயத்தில் துணியால் கட்டுப் போட்டுக் கொண்டு நொண்டியபடி செல்லும் மந்தாகினியை வியப்புடன் பார்த்து நின்ற விஜயாவின் மனம், “இவள் சாதாரணப் பெண்ணல்ல…” என்றது.

உன்னைத் தவிர்ப்பதாய் நினைத்து

தவித்துக் கொண்டிருக்கிறேன்…

என் மறதிக்கு அப்பாற்பட்டவனாய்

என் மனதிற்கு பட்டா இட்டவனாய்

உன்னை பத்திரப்படுத்தி விட்டேன்

என் இதயத்தில்…

எண்ணத்தின் சாசனங்கள்

என்றும் அழிவதில்லை…

Advertisement