Advertisement

அத்தியாயம் –  7

“அப்பா, துவைக்க வேண்டிய துணியெல்லாம் எடுத்துப் போடுங்க, நான் ஆத்துல துவைச்சிட்டு வந்துடறேன்…”

“எதுக்குடா கண்ணு ஆத்துக்குப் போயிட்டு…? இங்கன கிணத்துத் தண்ணிலயே துவைச்சுப் போட வேண்டியது தான…” சரவணன் கேட்க, “ஆத்துல துவைச்சுக் குளிச்சு ரொம்ப நாளாச்சுப்பா… நந்துவும், நர்ஸக்காவும் கூட வர்றேன்னு சொன்னாங்க, மழை பெய்ததால ஆத்துல நல்லாத் தண்ணி வந்திருக்காம், போயிட்டு வர்றேன் பா…” சொல்லிக் கொண்டே துவைக்க வேண்டிய துணிகளை ஒரு பக்கெட்டில் எடுத்துக் கொண்டாள் மந்தாகினி.

“சரிம்மா, பார்த்துப் போயிட்டு வா…” என்ற சரவணன் தோட்டத்துக்குள் நுழைய மந்தாகினி கிளம்பினாள். இரண்டு வீடு தள்ளி இருந்த பரிமளாவின் வீட்டு முன் நின்று அவளை அழைக்க அவளும் சேர்ந்து கொண்டாள்.

பக்கத்துக்கு ஊரிலுள்ள அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் பரிமளா தான் அந்தக் கிராமத்தின் MBBS படிக்காத டாக்டர் எனலாம். அந்த கிராமத்தில் சின்னச் சின்ன உடல் நோவுக்கு எளிய மக்கள் அவளைத் தேடி அவசர வைத்தியம் பார்த்துக் கொண்டு அவள் தரும் இலவச மருந்து, மாத்திரைகளை வாங்கிச் செல்வர். அரசு மருத்துவமனையில் கிடைக்கும் இலவச மருந்து மாத்திரைகளை ஆசுபத்திரியில் இருந்து எடுத்து வந்து இவர்களுக்குக் கொடுப்பாள். பரிமளாவின் கணவன் அசோக் லேலண்டில் டிரைவராய் இருக்க பாதி நாள் வெளியூர் சென்று விடுவான். அன்று பரிமளாவுக்கு விடுமுறை என்பதால் அவளும் இவர்களுடன் ஆற்றில் குளிக்க வருவதாய் சொல்லி இருந்தாள்.

“ஏன்க்கா, உங்க அத்தையை எங்க ரெண்டு நாளா சத்தமே காணோம்…?” மந்தாகினி கேட்க,

“அது மக வீட்டுக்குப் போறேன்னு ரெண்டு நாள் முன்னவே கிளம்பிருச்சு தேவி… இல்லன்னா, நான் உங்களோட வர முடியுமா…?”

“அதான பார்த்தேன்… அந்தக் கெழவி உங்களைத் திட்டிட்டே கிடக்குமே, சத்தத்தைக் காணமேன்னு நினைச்சேன்…”

“ஹூம்… கல்யாணமாகி அடுத்த மாசமே வயித்துல புள்ள உண்டாகணும்னு நினைக்கிற ஆளு எங்கத்தை… எனக்கு ஒரு வருஷமாகியும் இன்னும் எதுவும் தங்கல, அதான் கரிச்சுக் கொட்டிட்டே இருக்கு… அதெல்லாம் நம்ம கைலயா இருக்கு, கடவுளாப் பார்த்து கொடுக்கும்போது தான கிடைக்கும், சரி ஏதோ சொல்லிட்டுப் போகட்டும்னு நான் எதையும் கண்டுக்க மாட்டேன்…” பேசிக் கொண்டே நடக்க வழியில் காத்திருந்த நந்தினியும் சேர்ந்து கொண்டாள்.

மூவர் தோளிலும் டவலும், மாற்றுத் துணியும் தொங்க, கையிலிருந்த பக்கெட்டில் அழுக்குத் துணி இருந்தது. மூவரும் ஆற்றங்கரை ஓரமாய் நடக்க பசுமையான அந்த சூழ்நிலை மிகவும் ரம்மியமாய் இருந்தது. சில பெண்கள் இவர்களுக்கு முன்னே வந்து சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகியபடி துவைத்துக் கொண்டிருந்தனர்.

“அட, என்ன இன்னைக்கு நந்தினியும், நர்சம்மாவும் கூட தேவியோட ஆத்துக்கு வந்துட்டிங்க…” ஒரு பெண்மணி கேட்க, “சும்மா ஆத்துல குளிக்க ஆசையா இருந்துச்சுன்னு வந்தோம் அத்த…” என்றாள் நந்தினி.

கொண்டு வந்த துணிகளைத் துவைத்து பக்கெட்டில் போட்டுவிட்டு மூவரும் குளிக்கத் தொடங்கினர். தேவி நீந்திக் கொண்டு சற்று தூரம் சென்றுவிட்டு திரும்ப வர நந்தினி அவளைத் திட்டினாள்.

“ஏய்..! தண்ணில ஓட்டம் அதிகமாருக்கு, ரொம்ப தூரம் போகாதடி…” என்றபடி அவள் ஓரமாய் பரிமளாவுடன் குளித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் குளித்து கரையேறிய பின்தான் தேவி நீச்சல் நிறுத்தி குளிக்க வந்தாள்.

மஞ்சள்கிழங்கை கல்லில் உரைத்து முகத்தில் தேய்த்து ஆசை தீர குளித்து ஈரத் துணியுடன் கரையேற மரத்தடியில் வைத்திருந்த அவளது மாற்றுத் துணியைக் காணவில்லை.

“நந்து, என் துணி எங்கடி…” ஈரம் சொட்டும் ஆடையுடன் கரையேறி வந்து துணியைத் தேட அவர்களும் திகைத்தனர்.

“நாங்க எடுக்கும்போது அங்க மரத்தடிலதான இருந்துச்சு…”

“அப்புறம் இப்ப என்ன காக்கா கொண்டு போயிருச்சா…?” என்ற தேவியை முறைத்தாள் நந்தினி.

“நாங்க குளிச்சு முடிச்சு எவ்ளோ நேரமாச்சு, நீ இவ்ளோ நேரம் தண்ணில ஆடிட்டு வந்து இப்ப துணியத் தேடினா… இரு பார்ப்போம், வேற எங்காச்சும் வச்சுட்டியா…?”

“இல்லையே, உங்க துணி கூட தான் வச்சேன்…” என்றாள் தேவி பரிதாபமாக.

“ஒருவேள பறந்து போயி தண்ணில விழுந்து அடிச்சிட்டுப் போயிருச்சோ…?” பரிமளா சொல்ல இருவரும் பரிதாபமாய் பார்த்துக் கொண்டனர்.

“இப்ப என்னக்கா பண்ணறது…?”

“என்ன பண்ண, துவைச்ச துணியையே உடுத்துட்டு வீட்டுக்குப் போக வேண்டியது தான்…” நந்தினி சொல்ல, பின்னில் விக்ரமின் குரல் கேட்டது. விக்ரமைக் கண்டதும் வேகமாய் டவலை மேலே போர்த்திக் கொண்ட தேவி கூச்சத்துடன் ஒதுங்கி நிற்க அவன் அருகே வந்தான்.

“நந்தினி, இது உங்க டிரஸ்ஸா பாரு… ஒரு குரங்கு எடுத்திட்டுப் போச்சு, பிடுங்கிட்டு வந்தேன்…” சொன்னபடி துணியை நீட்ட, தேவியின் உடையைக் கண்டவர்களின் முகம் மலர்ந்தது.

“ஆஹா, மாம்ஸ் டிரஸ்ஸைக் காணமேன்னு தேடிட்டு இருந்தோம், நல்ல நேரத்துல கிருஷ்ண பரமாத்மா போல வந்து தேவிக்கு உடுத்த துணி கொடுத்திங்க…” கிண்டலாய் சொல்லியபடி வாங்கிய நந்தினி, தோழியிடம் நீட்ட அவள் சற்று மறைவாய் சென்று உடுத்துக் கொண்டு வந்தாள்.

“பொம்பளைங்க குளிக்கிற இடத்துல ஆம்புளப் புள்ளைக்கு என்ன வேலை, யாரு நந்தினி இது…” கேட்டபடி வந்தார் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.

“அத்த… இவரைத் தெரியலியா…? நம்ம கணேச பாண்டி மாமா பையன் விக்ரம், ஊருல இருந்து வந்திருக்காரு…”

“ஓ நல்லாருக்கியாப்பா…? ஆமா, இங்கென்ன பண்ணுற…?” எனக் கேட்க, “அது வந்து…” என விக்ரம் இழுத்தான்.

“அத்த, என்னோட மாத்துத் துணியை கொரங்கு எடுத்திட்டுப் போயிருச்சு போல, இவர்தான் அதுகிட்ட இருந்து புடுங்கிட்டு வந்து கொடுத்தார்…” தேவி சொல்ல அவனை ஒரு நம்பாத பார்வை பார்த்தபடி அப்பெண்மணி, “சரி, சரி… கொடுத்தாச்சுல்ல, ஆம்பளப் பையன் இங்கன நின்னுட்டு இருந்தா பொம்பளப் புள்ளைங்க குளிக்க கூச்சப்படும்ல, நீ போ தம்பி…” என அவனை விரட்ட விக்ரம் தயக்கத்துடன் அவர்களைப் பார்த்துவிட்டு சென்று விட்டான்.

“ஏன் புள்ளைங்களா, அந்தப் பையனுக்கு தான் நம்ம ஊரு வழக்கம் தெரியாது… நீங்களாச்சும் பொண்ணுங்க குளிக்கற படித்துறை பக்கம் பசங்க வரக்கூடாதுன்னு சொல்லி அனுப்பணும்ல, அதை விட்டுட்டு அவனோட கத பேசிட்டு இருக்கிங்க… கொரங்கு துணிய எடுத்திட்டுப் போச்சாம், இங்க மனுஷக் கொரங்குகளைத் தவிர வேற எந்தக் கொரங்கையும் நான் காங்கலியே… எனக்கென்னவோ அந்தப்பய வேணும்னே இவ துணியை எடுத்து ஒளிச்சு வச்சுட்டு கொண்டு வந்து கொடுக்கிறானோன்னு சந்தேகமா இருக்கு…” என சத்தமாய்க் கூறியபடி நகர தங்களுக்குள் வியப்புடன் பார்த்தனர்.

தேவியின் முகம் யோசனையைக் காட்ட, “என்னடி மாம்ஸ் வேணும்னே அப்படி பண்ணி இருக்குமோனு யோசிக்கறியா..? அவங்க ஏதோ தெரியாம சொல்லிட்டுப் போறாங்க, மாம்ஸ் அப்படிப்பட்ட ஆளெல்லாம் கிடையாது… நீ வா போவோம்…” எனக் கூறியபடி நந்தினி முன்னில் நடக்க மற்ற இருவரும் அவளைத் தொடர்ந்தனர்.

விக்ரமின் மனமோ, “ச்ச்சே… துணியைக் காணம்னு அந்த மங்கியைக் கொஞ்சம் அலைய விடணும்னு பார்த்தா இந்த நந்தினி துவைச்ச துணியையே போட்டுக்க சொல்லி ஐடியா கொடுத்து நம்ம திட்டத்தைக் கெடுத்துட்டாளே… எல்லார் கிட்டயும் நான் பயந்ததை சொல்லி கிண்டல் பண்ணுற அந்த மந்தாகினிப் பேயைக் கொஞ்சமாச்சும் தவிக்க விடலாம்னு நினைச்சா இப்படி ஆகிருச்சே… அந்தம்மா என்னடான்னா இந்த உலகப் பேரழகிங்க குளிக்கிறதை நான் எட்டிப் பார்த்த போல நம்மளை ஒரு மாதிரி கேவலமா லுக் விடுது… ஹூம் இருடி, இன்னொரு சந்தர்பம் கிடைக்காமலா போயிடும்… அப்ப இருக்கு உனக்கு…” என நினைத்தபடி பெயின்ட் வேலை நடக்கும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான்.

வழியில் சட்டென்று அவனை மறித்தபடி தேவி வந்து நிற்க திகைப்புடன் அவளைப் பார்த்தவன், “இதோ திங்கிங் ஆப் தி டெவில், முன்னாடி வந்து நிக்குது..” என்றபடி அவளை ‘என்ன’ என்பது போல் நோக்க முறைத்தாள் தேவி.

“ஏன் இப்படிப் பண்ணிங்க…?”

“நான் என்ன பண்ணேன்…? இப்ப எதுக்கு மங்கி தேவி என்னை வழி மறிக்கற…?” என்றான் இவனும் கிண்டலாக.

“வேணும்னே தான இப்படிப் பண்ணிங்க…?”

“ஆமா, அதுக்கென்ன…?”

“இது தப்பில்லையா…?”

“ஏன் நீ பண்ணது மட்டும் சரியா…? ஏதோ நடுராத்திரி பேய் மாதிரி நீ வந்து நிக்கவும் சட்டுன்னு பயந்துட்டேன்.. அதை ஊருல எல்லாரு கிட்டயும் சொல்லி கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இருக்க…”

“அதுக்காக டிரஸ்ஸை எடுத்து ஒளிச்சு வச்சிட்டு பழி வாங்க நினைக்கறியளோ, இதை நான் நந்து வீட்டுல சொன்னா உங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க…?”

சட்டென்று திகைத்த விக்ரம், “இதப்பாரு, நீ என்னைக் கிண்டல் பண்ணின, அதுக்குப் பதிலா நான் உன்னைக் கொஞ்சம் தவிக்க விட நினைச்சு இதை செய்தேன், அதுக்கு இது சரியாப் போச்சு… இதையும் எல்லார் கிட்டயும் சொல்லிட்டுத் திரிஞ்சா அப்புறம் சும்மா விட மாட்டேன்…”

“ஓஹோ…! ஐயா என்ன பண்ணுவிங்க…?” அவனை நெருங்கி நின்று கேட்டவளின் தேகத்திலிருந்து கலந்து கட்டி மணத்த சோப்பு, மஞ்சளின் வாசம் அவனுக்குள் ஒரு கிறக்கத்தைக் கொடுக்க சட்டென்று அவள் கையைப் பிடித்து தன்னிடம் இழுத்தவன் அவள் முகத்தருகே தன் முகம் வைத்து, “சொல்லுற வாயைக் கதற விட்டிருவேன்…” என மிரட்டலாய் சொல்லி அவள் உதட்டில் விரலால் சுண்டி விட அவனது நெருக்கத்தில் அவளுக்குள்ளும் படபடப்பு கூட திகிலுடன் அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யாரோ பேசிக் கொண்டு வருவது போல் சத்தம் கேட்க சட்டென்று அவளை விட்டு விலகினான் விக்ரம். அந்தப் பக்கம் வந்த இரு பெரியவர்கள் இவர்களை யோசனையாய் பார்த்தபடி அருகே வந்தனர்.

“அட நம்ம தேவிப் பொண்ணு, என்னாச்சு மா…? யாரு இந்தப் பையன்…? ஏதாச்சும் வம்பு பண்ணறானா…?” எனக் கேட்க, “இல்ல தாத்தா, சும்மா பேசிட்டு இருந்தோம்… நீங்க போங்க…” என அவர்களை அனுப்பி வைக்க, விக்ரமும் நிற்காமல் அவளை ஒரு பார்வை பார்த்தபடி நகர்ந்து விட்டான்.

உண்மையில் தேவி அவன் பயப்பட்டதை சொன்னது என்னவோ நந்தினியிடம் தான்… அவளிடமிருந்து நந்தகுமார், சுபாஷினி, சரவணன் எனப் பரவி அவர்களிடமிருந்து பெயின்ட் கான்ட்ராக்டர், வேலையாட்கள் எனக் காற்றாய் பரவி விட இவனைக் காணும்போது அவர்கள் கிண்டலாய் சிரிப்பது போலவே தோன்றியது விக்ரமுக்கு.

கான்டிராக்டர் இவனிடம், “என்ன சார், ரொம்ப பயந்துட்டிங்க போலிருக்கு…? வேணும்னா கோவிலுக்குப் போயி மந்திரிச்சுக் கட்டிடலாமா…?” எனக் கேட்டு சிரிக்க இவனுக்கு தேவியின் மீது ஆத்திரமாய் வந்தது. அந்தக் கோபத்தில் தான் அவளைத் தவிக்க விட இப்படிச் செய்து வைத்தான்.

ஆனால் இப்போது ஏனோ அவன் மனமும் நிலையின்றித் தவிக்கத் தொடங்கியது. அவளது அருகாமையில் அந்த விழிகளுக்குள் தெரிந்த ஏதோ ஒன்றில் அவன் மனம் சுருண்டு மாட்டிக் கொண்டு தவித்தது.

தொட்டு விடும் தூரம்

தானே வந்தாய்…

ஏன் விட்டு விட்டேன்

என் இதயத்தை

உன் காலடியில்…

உன் கண்களின் சாகசத்தில்

என்னைக் கேட்க வைக்கிறாய்

காதல் யாசகத்தை…

தேவியின் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் விக்ரம் அவளிடம் நடந்து கொண்டதையே நினைத்திருந்தது. அவள் கையை அழுத்தமாய் பற்றி அவன் இழுத்தது வலிப்பதற்கு பதில் புதுவித உணர்வைத் தந்தது. அன்று முழுதும் மனதில் ஒரு பரவசம் சிலிர்ப்புடன் ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் விக்ரம் அவள் மனதுக்குள் வந்துவிட்டான் என்பதைப் புரிந்து கொண்டாள்.

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவெனக் கேட்டேன்…

என் கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்னவெனக் கேட்டேன்…

இரவெல்லாம் மனதுக்குள் ஒலித்து மெல்ல மொட்டு விடத் தொடங்கிய பாடலுக்கு விடை அறியும் முன்னே அது கருகப் போவதை உணராமல் அடுத்த நாள் விக்ரமைக் காணும் ஆர்வத்துடன் நந்தினியின் வீட்டுக்கு வந்தாள் மந்தாகினி.

இவளைக் கண்டதும் வழக்கம் போல் தட்டில் இட்லியை வைத்துக் கொண்டு வந்து நந்தினி நீட்ட வாங்கிக் கொண்டு அவளுக்கு ஊட்டி விட்டாள் தேவி. கண்கள் விக்ரமைத் தேட புறப்பட்டு வந்தவனைக் கண்டதும் கண்கள் மலர்ந்தது. நந்தகுமாருடன் பேசிக் கொண்டே இவளைக் காணதது போல் கடந்தவன் அத்தையிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.

ஏதோ யோசனையுடன் அமைதியாய் நந்தினிக்கு ஊட்டி விட்டவளிடம், “எனக்குப் போதும் தேவி, நீ சாப்பிடு…” என்ற நந்தினி அவள் பேருக்குக் கொறிப்பதைக் கண்டு தட்டை வாங்கி அவளே ஊட்டிவிடத் தொடங்கினாள்.

“தேவி…! விஷயம் தெரியுமா..? விக்ரம் மாம்ஸ்க்கு என்னைக் கட்டி வைக்க வீட்டுல பேச்சு ஓடிட்டு இருக்கு…” எனக் கூற மந்தாகினி திடுக்கிட்டு விழித்தாள்.

“மாம்ஸ் படிச்சிருக்கார், அழகாருக்கார்… உறவுமுறையும் கூட, அதான் உடனே வேண்டாம்னு சொல்லாம பரிசீலனை பண்ணிப் பார்க்கலாம்னு நினைக்கறேன்… நீ என்ன நினைக்கற…?” நந்தினி கேட்க தேவி யோசித்தாள்.

நந்தினியின் மனதிலும், அவள் குடும்பத்திலும் விக்ரம் புது உறவாய் மலரப் போவதை அவர்கள் பேச்சில் உணர்ந்து கொண்டாள். அன்று காலையில் தான் சுபாஷினி மகளிடம் இப்படி விக்ரம் வீட்டில் பேச்சு வந்ததாய் சொல்ல, நந்தினியும் யோசிக்கத் தொடங்கி இருந்தாள். அவளுக்கு விக்ரம் மீது பெரிதாய் ஈர்ப்பொன்றும் இல்லாவிட்டாலும் குறைகள் எதுவும் சொல்லத் தோன்றாததால் நிராகரிக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருந்தாள். எல்லா விதத்திலும் நந்தினிக்கும், விக்ரமுக்கும் பொருத்தம் இருப்பதாய் தோன்ற சட்டென்று மனதைத் தெளிவாக்கிக் கொண்ட தேவி, “உனக்கு அவர் பொருத்தமா இருப்பார்னு தோணுது நந்து…” என்றாள் உண்மையான நேசத்துடன்.

“அப்படியா சொல்லற…? எனக்கும் தோணுச்சு, அதான் ரிஜக்ட் பண்ணாம லிஸ்ட்ல வச்சிருக்கேன்… ஆனா கல்யாணமாகி சென்னை போயிட்டா நான் உங்களை எல்லாம் மிஸ் பண்ணனுமேன்னு கொஞ்சம் யோசனையா இருக்கு…”

“அதுக்கென்ன நந்து, எப்பவா இருந்தாலும் கல்யாணமாகி வேற வீட்டுக்குப் போய் தான ஆகணும்… அந்தப் பிரிவைப் போக்கதான் எல்லாரு கிட்டயும் போன் இருக்கே…”

“ம்ம், இருந்தாலும்…” நந்தினி இழுக்க மந்தாகினி சிரித்தாள்.

“ஒரு இருந்தாலும் இல்ல, யோசிச்சா நீயே சம்மதிப்ப…” என்றவள் அதற்கு மேல் அவளிடம் பேச முடியாமல் தவிர்ப்பதற்காய் காலியான தட்டுடன் சுபாஷினிக்கு சமையலில் உதவ சென்றாள்.

மதிய உணவுக்கு விக்ரம் வீட்டுக்கு வருகையில் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த தேவியைக் கண்டவுடன் சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டான். அவளும் ஒரு நொடி அவனைக் கண்டு தடுமாறினாலும் தன்னை மீட்டுக் கொண்டு காணாதது போல் சென்று விட சலிப்புடன் அவனது அறைக்கு சென்றுவிட்டான்.

விக்ரம் மனம் புதுவித குற்றவுணர்வில் குறுகுறுத்தது.

“ச்சே… என்ன பீல் இது… அவளைப் பார்த்தாலும் தவிப்பா இருக்கு, பார்க்காம தவிர்த்தாலும் தவிப்பா இருக்கு…” என தன்னைத் தானே நொந்து கொண்டான்.

“இல்ல, இது சரியா வராது… நேத்து நான் செய்த தீர்மானம் தான் சரி… என் குடும்பத்துக்கும், எதிர்காலத்துக்கும் நான் நந்தினியைக் கல்யாணம் பண்ணறது தான் நல்லது… தேவை இல்லாம அந்தப் பொண்ணு மனசுல எந்த எதிர்பார்ப்பையும் விதைக்கக் கூடாது… என் மனசுல வந்த சின்ன சலனத்தை மஞ்சக்கிளியோட கண்ணுலயும் பார்த்தேன்… காலைல வந்ததும் ஒரு எதிர்பார்ப்போட என்னைத் தேடுனதும், பார்த்ததும் கண்ணுல இருந்த சந்தோஷமும், இதெல்லாம் தப்பு…! அவளை அவ வழியில விட்டுடுவோம்… எனக்குள்ள எந்த தடுமாற்றமும் இருக்கக் கூடாது… நந்தினி தான் என் மனைவி, அதான் என் குடும்பத்துக்கு நல்லது…” மீண்டும் தீர்மானமாய் தனக்குள் சொல்லிக் கொண்டான் விக்ரம். அதன் பின் மந்தாகினியை அருகே கண்டாலும் பேசுவதைத் தவிர்த்தான் விக்ரம்.

அவன் கட்டுப்பாடைத் தாண்டி சில நேரத்தில் அவளைக் காணும் கண்களும், மனமும் அவளையே சுற்றி வருகையில் எரிச்சலுடன் அவளிடமே சிடுசிடுத்தான். நந்தினியோ எல்லா விஷயத்திலும் தோழியைக் கூட்டு சேர்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்க, மந்தாகினியைக் கண்டதுமே தேன் கண்ட வண்டைப் போல் சுற்றிவரத் துடிக்கும் விழிகளை இம்சையாய் உணர்ந்தான் விக்ரம்.

வீட்டில் பெயின்ட் வேலை நடந்து கொண்டிருக்க அங்கேயே அதிக நேரமும் இருந்தான். அப்படியும் உண்ண, உறங்க அத்தை வீட்டுக்கு வரும்போது மந்தாகினியை சிலநேரம் காண வேண்டி வந்தது. எவ்வளவு தான் விலகிப் போக நினைத்தாலும் நந்தினியை விட மந்தாகினியிடமே மனம் விரும்பிச் செல்ல கடுப்பாய் உணர்ந்தான்.

மந்தாகினிக்கு அவனது விலக்கம் முதலில் கஷ்டத்தைக் கொடுத்தாலும் பின் அதுவே சரியென்று தோன்ற அவளும் தேவையில்லாமல் பேசவில்லை. அவன் முன் செல்வதைக் கூடத் தவிர்க்கவே நினைத்தாள். நந்தினிக்கு அமையப் போகும் நல்ல வாழ்க்கைக்கு தான் ஒருவிதத்திலும் தடையாய் அமைந்து விடக் கூடாதென்று அவனைப் பற்றிய நினைவுகளைக் கூட அறவே ஒதுக்கத் தொடங்கியவள் அதில் வெற்றியும் கண்டாள்.

அந்தியும் சாய்கிறது…

மனம் மட்டும் ஏன்

இன்னும் காய்கிறது…

உள்ளம் எனை சுடுகிறது…

உன்னிடம் உருகும் மனதை

வெறுப்பென்னும் முகமூடி

கொண்டு மறைக்கிறது…

Advertisement