Advertisement

அத்தியாயம் –  6

மதியம் விக்ரம், நந்தகுமாருடன் சரவணனும் வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தார். அவர் காலை நேரமே இளம் நாட்டுக் கோழியைப் பிடித்துவந்து தோலுரித்து கொடுத்துவிட்டு தான் வயக்காட்டுக்கு சென்றிருந்தார். நந்தகுமார் உணவுண்ண வரும்போது நண்பனையும் அழைத்து வந்துவிட்டார்.

“என்ன சுபா, சமையல் ரெடியா…? தெரு முனைலயே வாசனை தூள் பறக்குது…” ஆவலுடன் கேட்ட கணவரிடம்,

“எல்லாம் தயாரா இருக்கு, சாப்பிட வாங்க…” எனக் கூற மூவரும் கை அலம்பித் தயாராயினர்.

“ஆஹா, என்ன ஒரு ருசி…? நீங்க கோழிக்குழம்பு செய்யும்போது மட்டும் ஏன் சுபா இப்படி வர மாட்டிங்குது…? தேவி கிட்ட கேட்டு தான செய்யறிங்க…” நந்தகுமார் கேட்க, “எனக்கும் அதாங்க புரியல, அவ சமைச்ச போல தான் நானும் சமைக்கறேன்… எனக்கு மட்டும் இந்த ருசி வரவே மாட்டிங்குது, ஒருவேள இவ ஏதோ மந்திரம் போடுவா போலருக்கு…” எனச் சிரிப்புடன் சுபா சொல்ல தேவி கூச்சத்துடன் நந்தினியை ஒட்டிக் கொண்டு நின்றாள்.

“அவளுக்கு இயல்பாவே அவ அம்மா கைப்பக்குவம் கிடைச்சிருக்கு சுபா, மந்திரமெல்லாம் எதுவும் இல்ல…” நெகிழ்வுடன் மகளைப் பார்த்து சொல்லிக் கொண்டே ருசித்து சாப்பிட்டார் சரவணன்.

“என்ன மாப்பிள…? நீங்க எதுவும் சொல்லவே இல்ல, கோழிக்குழம்பு எப்படி…?” என்றார் நந்து விக்ரமிடம்.

“ம்ம்… நல்லாதான் இருக்கு மாமா, ஆனா கொஞ்சம் ஓவர் ஸ்பைசியா இருக்கு…” என்றவன் கோழிக்குழம்பை மீண்டும் எடுக்காமல் தவிர்த்து மீன் குழம்பு, வறுவலை எடுத்துக் கொள்ள, மந்தாகினியின் மனம் லேசாய் வாடிப் போனது. இன்றைக்கு அவனுக்கென்று அவள் இன்னும் கவனமாய் பிரத்யேகமாய் செய்த சமையலாயிற்றே.

“விக்ரம் மாம்ஸ்க்கு சென்னை சமையல் தான் பிடிக்கும் போலருக்கு, நம்மூரு போல் காரசாரமா சாப்பிட்டுப் பழக்கம் இல்லல்ல, அதான்…” தோழியின் சமையலை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் நந்தினி.

சாப்பிட்டு முடித்து நண்பர்கள் இருவரும் வெற்றிலை, பாக்குடன் முன்னில் அமர்ந்து ஊர் விஷயம் பேசத் தொடங்க விக்ரம் அவனுக்கான அறைக்கு சென்றுவிட்டான்.

விக்ரம் மனம் குற்றவுணர்வில் குறுகுறுத்தது. உண்மையில் இப்படி ஒரு கோழிக்குழம்பை அவன் இதற்கு முன் சாப்பிட்டதே இல்லை, அத்தனை சுவையாய் இருந்தது. ஆனாலும் மந்தாகினியின் ஆவலான விழிகளைக் கண்டவன் வேண்டுமென்றே குறை கூறி அவளை சீண்ட நினைத்தான். ஆனால் அவன் சொன்னதும் வாடிப் போன அவள் முகத்தைக் கண்டதும், சொல்லி இருக்க வேண்டாமோ எனவும் மனம் யோசித்தது. சிறிது நேரத்தில் மந்தாகினியும் உணவு முடித்து தந்தையுடன் வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.

அடுத்த நாள் அவர்கள் வீட்டில் பெயின்ட் வேலை தொடங்குவதால் அது சம்மந்தமாய் பேச பெயின்டிங் சூப்பர்வைசர் பாண்டியனைக் காண மாமனுடன் சென்ற விக்ரம் இரவு உணவுக்கு தான் வீட்டுக்கு வந்தான்.

இரவு உணவு முடிந்து கறுப்பு ஷாட்ஸ், டீஷர்ட்டுடன் வெளியே கிளம்பியவனைக் கண்ட நந்தகுமார், “என்ன மாப்பிள, இந்த இருட்டுல எங்க கிளம்பிட்டீங்க…?” என்றார்.

“கொஞ்சம் காத்தாட அப்படியே நடந்துட்டு வரலாம்னு பார்த்தேன் மாமா…”

“ஓ..! இன்னிக்கு அமாவாசை, வெளிய இருட்டாக் கிடக்கும்… டார்ச்சை எடுத்துக்கங்க…”

“இல்ல, இங்க பக்கத்துல தான பரவால்ல மாமா…” என்றவன் டார்ச்சை எடுக்காமலே நடந்தான்.

நிலவில்லா வானம் கறுப்பு பெயின்ட் அடித்தது போல் விரிந்து கிடக்க, நிலவைத் தேடி வந்த நட்சத்திரங்கள் அதைக் காணாமல் வருத்தத்துடன் சிணுங்கிக் கொண்டிருந்தன. அதை ரசித்துக் கொண்டே நடந்தான் விக்ரம். இரவு பத்து மணிக்கு ஊரே அடங்கிப் போயிருந்தது. இரவு வண்டுகளின் சத்தங்களும், எங்கோ நாய் குரைக்கும் ஓசையும் காதில் கேட்டது. இருளின் துணை கொண்டு வயல்வெளிப் பக்கமாய் நடந்தவன் சற்றுத் தொலைவு நடந்து வந்துவிட்டான். எங்கோ தெருவோரத்தில் சன்னமாய் வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்த தெரு விளக்கும் மின்சாரம் தடை பட்டதில் சட்டென்று அணைந்து போக உலகமே இருண்டது போல் தோன்றியது.

“ச்சே… கரண்ட் போயிருச்சு போலருக்கு, மாமா சொன்ன போல டார்ச் எடுத்திட்டு வந்திருக்கலாமோ…?” யோசித்தவன் சற்றுத் தள்ளி இருந்த ஆல மரத்தை நோக்கி நடந்தான். ஆலமரத்தடியில் இருந்த திண்ணையில் அமர்ந்தவன் கண்ணுக்கு மரத்திலிருந்து பூமி நோக்கித் தொங்கிக் கொண்டிருந்த விழுதுகள் யாரோ தூக்கில் தொங்குவது போல் தோன்ற கொஞ்சம் திகிலாய் இருந்தது. சட்டென்று யாரோ வருவது போல் சத்தம் கேட்க சுற்றிலும் பார்த்தவன் கண்ணுக்கு யாரையும் தெரியவில்லை.

“அட, மொபைலும் சார்ஜ்ல போட்டுட்டு வந்துட்டமே, இருட்டுல ஒண்ணும் தெரியாம எப்படிப் போறது…” அவன் யோசித்தபடி அமர்ந்திருக்க கொலுசுச் சத்தம் கேட்பது போல் தோன்றியது. அவனுக்கு ஆவி, பேய், பிசாசில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அந்தத் தனிமையும், இருட்டும் சற்றே திகிலைக் கொடுக்க, “யாரு…?” என்றான் அதட்டலாய்.

கொலுசுச் சத்தம் நின்று போக, அந்த நிசப்தம் பயங்கர திகிலைக் கொடுக்க சுற்றிலும் பார்த்தான் விக்ரம்.

“யாரையும் காணமே, பிரம்மையா இருக்குமோ…? என்ன இவ்ளோ இருட்டாருக்கு…? இனி இந்த நைட் வாக்கிங் எல்லாம் இந்த ஊருல போகக் கூடாது சாமி…” என்றவன் பின்னில் யாரோ நிற்பது போல் தோன்ற திரும்பியவன், முகமெல்லாம் வெள்ளையாக அவன் கழுத்தைக் நோக்கிக் குனிந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்து அலறிக் கொண்டு எழுந்து ஓடத் தொடங்க அந்த உருவம், “ஹாஹா…” எனப் பெண் குரலில் சிரிக்கத் தொடங்கியது.

சட்டென்று அவன் மீது டார்ச் வெளிச்சம் விழ, “அட நில்லுங்க லகுட குசல பாண்டியரே, நான்தான்…!” என்ற அந்தக் குரல் பரிச்சயமாய் தோன்ற சற்று தூரம் சென்றபிறகு திகிலுடன் திரும்பிப் பார்த்தான் விக்ரம். அங்கே முகத்தில் பூசி இருந்த திருநீரைத் தாவணி முந்தானையில் துடைத்துக் கொண்டிருந்த மந்தாகினியை டார்ச் வெளிச்சத்தில் கண்டவன் முகம் பயம் நீங்கி கோபத்தில் சிவந்தது.

“என்ன லகுடகுசல பாண்டியரே, விட்டா சென்னைக்குப் போயி தான் நிப்பிங்க போல, பேய்க்கு அவ்ளோ பயமா…?” என்றாள் சிரிப்புடன் அவனை நோக்கி வந்த மந்தாகினி.

“யூ இடியட், இப்படியா பயப்படுத்துறது…? கொஞ்சமாச்சும் சென்ஸ் வேண்டாம்…? செய்யறது எல்லாம் குரங்கு சேட்டை, நீ மந்தாகினி தேவி இல்ல, மங்கி தேவியே தான்…! பயத்துல எனக்கு ஏதாச்சும் ஆகிருந்தா என்ன பண்ணறது….?” படபடவென்று அவன் பொரிந்து தள்ள அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் கலகலவென்று சிரித்தாள்.

“என்னாகும்…? பேயைக் கண்ட பயத்துல பாண்டியரு இதயம் நின்னு செத்துப் போயிருப்பிங்களா…? ஹாஹா, சரி ரொம்ப பயந்துட்டிங்க போலருக்கு, நாளைக்கு வேணும்னா கோவில் பூசாரிகிட்ட சொல்லி மந்திரிச்சு தாயத்து கட்டிடலாம்…” என மீண்டும் சிரித்தவளை கடுப்புடன் நோக்கியவன்,

“லூஸு, பேயைக் கண்டா பயப்படுவாங்களோ இல்லியோ, உன் மூஞ்சிய பக்கத்துல பார்க்கற எவனா இருந்தாலும் நிச்சயம் பயந்து தான் போவான்…”

“ஓ… எங்க மூஞ்சி அவ்ளோ டெரரா இருக்கோ…?”

“டெரரா இல்ல, அசிங்கமா இருக்கு…” என்றவனை இப்போது அவள் முறைக்க அவனுக்கு சற்று கோபம் தணிந்தது.

“இந்த இருட்டு நேரத்துல எதுக்கு பேய் மாதிரி சுத்திட்டு இருக்க…? ராத்திரி கூட உன்னால வீட்டுல அடங்கி இருக்க முடியாதா…?” சற்றுத் தணிந்த குரலில் கேட்டான்.

“வயக்காட்டுல காட்டுப் பன்னித் தொல்ல அதிகமா இருக்கு, ராத்திரி வந்து எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டுப் போயிருது… காவலுக்கு இருக்கவரு இன்னைக்கு உடம்பு சுகமில்லன்னு வரல, அதான் என் அப்பா காவலுக்குப் போயிருக்காரு… அவருக்கு சாப்பாடு கொடுக்கப் போனேன்…”

“ஓ…! அவர் வந்து சாப்பிட்டுப் போகாம வயசுப் புள்ளைய இந்த நேரத்துல பேய் மாதிரி உலாவ விட்டுட்டாரா…?”

“ப்ச்… அவர் சாப்பாடு வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டாரு. அவருக்கு சுகரு மாத்திர போடலேன்னா கிறுகிறுன்னு வரும், அதான் அதையும் கொடுக்கப் போனேன்…”

“இந்த நேரத்துல இப்படிப் போக உனக்கு பயமா இல்லியா…?” பேசிக் கொண்டே அவளுடன் நடக்க தெருவிளக்குக்கு உயிர் வந்துவிடவே எரியத் தொடங்கியது.

“எனக்கென்ன பயம்…? எங்கூருல எந்த பயமும் கிடையாது…”

“ஓஹோ…!” என்றவன்,

“ஐயோ, பாம்பு…!” என்று அலற, வேகமாய் அவன் பின்னில் ஒளிந்து கொண்டவள்,

“எ..எங்க…?” எனக் கேட்க, “ஹேய், பயந்துட்டியா…?” என்று அவன் சிரிக்க யாரோ சைக்கிளில் வரும் சத்தம் கேட்டு திரும்பினர். வாயில் பீடி புகைய சைக்கிளில் வந்தவர் இருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு, “என்ன தேவிம்மா, யாரு இது…? ஏதோ, பாம்புன்னு சத்தம் கேட்டுச்சு…” என்று கேட்க, அவளோ மிரண்ட விழிகளுடன், “பா…பாம்பு…” என்று சொல்லி அவனைப் பார்க்க அவன் அவரிடம் சொன்னான்.

“அ..அதுவந்து, பாம்பு ஒண்ணு…! அதோ அந்தப் பக்கமாப் போயிருச்சு…” எனக் கூறியவனை ஆராய்ச்சியுடன் நோக்கினார் அந்த வயதான மனிதர்.

“ஓ… சரி, நீங்க யாரு தம்பி… இந்த நேரத்துல இங்கென்ன பண்ணறீங்க…?” என்றார் சந்தேகத்துடன்.

“நான் சென்னைல இருக்க கணேசபாண்டியன் மகன், விக்ரம பாண்டியன்… ரெண்டு நாள் முன்னாடிதான் ஊருக்கு வந்தேன்…” என்றான் விக்ரம்.

“ஓ…! நம்ம கணேசன் மவனா…? சின்னப் புள்ளைல பார்த்தது. நந்து சொல்லிட்டு இருந்தான். அப்பா நல்லாருக்காரா…?” என்றார் அப்பெரியவர் தெரிந்த பாவனையுடன்.

“ம்ம்… நல்லாருக்கார், சாப்பிட்டு கொஞ்சம் காத்தோட்டமா நடக்கலாம்னு வெளிய வந்தேன், அப்போதான் தேவியைப் பார்த்தேன்…” என்றான் விக்ரம்.

“ஓஹோ…! நீ ஏன் கண்ணு உன் அப்பா சொல்லச் சொல்லக் கேக்காம ராத்திரி நேரத்துல தனியா வயக்காட்டுக்குப் போற, அவனுக்கு மனசு கேக்காம என்னைப் பின்னாடி அனுப்பி வச்சான்… பாம்பு போயிருச்சுல்ல, இனி பயமில்லையே…” என்றவரின் பார்வை விக்ரமின் கையைப் பயத்தோடு பற்றிக் கொண்டிருக்கும் தேவியின் மீது விழ, அவனது கையை கூச்சத்துடன் விடுவித்தாள் தேவி.

“இல்ல தாத்தா, நான் கிளம்பறேன்…” என்றவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னே நடக்க, “சரி தாத்தா, நானும் கிளம்பறேன்…” என்ற விக்ரமும் வீட்டை நோக்கி நடந்தான்.

“தேவி… எவ்ளோ தடவ கூப்பிட்டுக் கிடக்கேன், அப்படி என்னத்த யோசிச்சிட்டு இருக்க…?” சரவணன் சற்றே குரலை உயர்த்தி மகளை அழைக்கவும் முன்தினம் நடந்தவற்றை புன்னகையுடன் யோசித்தபடி நின்ற மந்தாகினி கலைந்தாள். வயலில் இருந்து காலையில் வீட்டுக்கு வந்து குளியலை முடித்து காப்பிக்காய் காத்திருந்தார் சரவணன்.

“ஒ..ஒண்ணுமில்ல பா, இதோ வர்றேன்…” அடுப்பில் கொதித்து மணத்த கருப்பட்டிக் காப்பியை டம்ளரில் ஊற்றித் தந்தைக்கு நீட்ட வாங்கிக் கொண்டவர் அதை நுகர்ந்துவிட்டு,

“ஹா… என்னா வாசம், எம்புள்ள கை பட்டா கருப்பட்டிக் காப்பி கூட பாயாசம் போல மணக்குது…” சிரித்தபடி சொல்ல செல்லமாய் தந்தையை முறைத்தாள் மகள்.

“ம்ம்… மணக்கும், மணக்கும்… உடம்புல அம்புட்டு சக்கரைய வச்சுக்கிட்டு கருப்பட்டிக் காப்பி கேக்குது உங்களுக்கு… இனிப்பு வேண்டாம்னு சொன்னாக் கொஞ்சி, கெஞ்சியே காரியத்தை சாதிச்சுக்க வேண்டியது…” தந்தையை அதட்டியபடி அருகே அமர்ந்தாள் மந்தாகினி தேவி.

“நாம இம்புட்டு கஷ்டப்பட்டு சம்பாதிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிடலன்னா எப்படி கண்ணு…? சக்கரைக்கு சக்கர தான் ஆகாது, உன் அப்பனை இந்தக் கருப்பட்டி ஒண்ணும் பண்ணாது…” சொல்லிக் கொண்டே அந்த காப்பியை ரசித்து ருசித்துக் குடித்தார் சரவணன்.

“சரி, எனக்கு டவுனுல ஒரு வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு வயலுக்குப் போறேன்… நீ இங்க சோலிய முடிச்சிட்டு சீக்கிரமா நந்து வீட்டுக்குப் போ. காலைல வரும்போது தங்கச்சியப் பார்த்தேன், உன்னை சீக்கிரம் வரச் சொல்லுச்சு…” என்றார் சரவணன்.

“சரிப்பா…” என்றவள் காலி டம்பளருடன் உள்ளே சென்றாள்.

மந்தாகினியும் சீக்கிரமே குளித்து இளம்நீல வர்ண தாவணியும் கருநீலப் பாவாடை, பிளவுஸ் அணிந்து கொண்டவள், லேசாய் கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டு தலையை தளர்வாய் பின்னலிட்டு தோட்டத்தில் மலர்ந்திருந்த செண்பகம் ஒன்றைப் பறித்து சொருகிக் கொண்டாள். மனம் ஏனோ உற்சாகத்தில் திளைத்திருந்தது.

“லகுடகுசல பாண்டியரு இம்புட்டு பயந்தாங்கொள்ளின்னு தெரியாமப் போயிருச்சே… சின்ன வயசுல எங்க எல்லாரையும் எப்பப் பார்த்தாலும் பயப்படுத்திட்டே இருப்பாரு, இப்ப அவரை நடுநடுங்க வச்சு பழி வாங்கிட்டோம்ல… இதை நந்துகிட்ட சொன்னா விழுந்து விழுந்து சிரிப்பா… ப்ச் என்ன…? கடைசில பாம்புன்னு பொய் சொல்லி என்னையும் பயப்படுத்தி அவர் பின்னாடியே ஒளிய வச்சிட்டாரே…” அதை நினைத்து கண்ணாடியில் தன்னை நோக்கி சிரித்துக் கொண்டவள் சந்தோஷமாய் கிளம்பினாள்.

இரவெல்லாம், விக்ரமுடன் பேசிய பேச்சுகளும், அவனை சீண்டி வம்பிழுத்ததும், சின்ன வயதில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு விளையாடியதும் எல்லாம் மனதுக்குள் ரீவைண்டாகி அவள் உறக்கத்திற்கு வேட்டு வைக்க, ஒருவித பரவசமான உணர்வில் மனம் நிறைந்திருந்தது. மீண்டும் அவனிடம் வம்பிழுத்து சீண்டிப் பார்க்க மனம் ஆவலாய் காத்திருக்க குதூகலமாய் கிளம்பிவிட்டாள்.

இவள் செல்கையில் விக்ரம் முன்னிலேயே இருக்க அவனை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு பேசாமல் நடந்தவளைக் கண்டவன், “பாம்பு, பாம்பு…” எனக் கூற சட்டென்று அவள் துள்ள, “ஹாஹா…” எனச் சிரித்தவனை முறைத்தாள் தேவி.

அவன் சொன்னதைக் கேட்டு நந்தகுமாரும், சுபாஷினியும் வெளியே வந்து பார்க்க அவன் சிரிப்பதைக் கண்டு திகைத்து,

“என்னாச்சு மாப்பிள, பாம்புன்னு கத்தின போல இருந்துச்சு, நீங்க சிரிச்சுட்டு இருக்கீங்க…” சுபாஷினி விக்ரமைக் கேட்க, நந்தகுமார் பார்வையைச் சுழற்றினார்.

அது ஒண்ணும் இல்ல அத்த, சட்டுன்னு அதைப் பார்த்ததும் பாம்புன்னு நினைச்சுட்டேன்…” என்று சற்றுத் தள்ளிக் கிடந்த கயிறு ஒன்று காற்றில் நெளிவதைக் காட்ட, அவர்களும் அதைக் கண்டு சிரித்துவிட தேவி அவனை முறைக்க அவன் அவளை நோக்கிப் பழிப்புக் காட்டினான்.

“என்னடா தேவிம்மா, மாப்பிள பாம்புன்னு கத்தினதும் பயந்துட்டியா…? நந்தகுமார் கேட்க, “பாம்பைப் பார்த்தா படையே நடுங்கும்னு சொல்லுவாங்க, நம்ம தேவி எம்மாத்திரம்… நீ உள்ள வாடி…” என அவளை உள்ளே அழைத்துச் சென்றார் சுபாஷினி.

“மாப்பிள, நாம கிளம்பலாமா…?” என்ற நந்தகுமாருடன் விக்ரம் சிரிப்புடன் செல்ல அவர்கள் செல்லுவதை பார்த்துக் கொண்டிருந்தவளை நந்தினியின் குரல் கலைத்தது.

“வாடிம்மா, வா…! மகாராணிக்கு காலைல எழுந்து குளிச்சிட்டு வர இவ்ளோ நேரமா…?” என்ற நந்தினியும் குளித்து முடித்திருந்தாள். வெளியே என்ன சத்தமென்று கேட்க சிரித்தபடி கூறிய சுபாஷினி, “தேவி, சந்தகை செய்திருக்கேன் உனக்குப் பிடிக்கும்ல, எடுத்து சாப்பிடு…” என்று சொல்ல, அதற்குள் நந்தினியே ஒரு தட்டில் சந்தகை, குருமாவை வைத்து தேவியிடம் நீட்டினாள்.

“நீ சாப்பிட்டியா நந்து…?”

“இல்லடி, நீ வந்ததும் சாப்பிடலாம்னு வெயிட்டிங்… பசிக்குது, சீக்கிரம் ஊட்டி விடு…” எனக் கூற, “அந்தப் புள்ளைய நிம்மதியாத் திங்க விடுறியா…? சின்னப் புள்ள மாதிரி அவ உனக்கு ஊட்டி விட்டுட்டு இருக்கனுமா…?” எனக் கடிந்து கொண்டார் சுபாஷினி.

“ப்ச்… நீங்க போங்க மா, இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது…” என்ற நந்தினி ஆவென்று வாயைக் காட்ட மந்தாகினி சிரித்துக் கொண்டே அவளுக்கும் ஊட்டி விட்டாள்.

“என்ன புள்ளைங்களோ…? நாளைக்குப் புருஷன் வீட்டுக்குப் போனா யாரு ஊட்டுவாங்கன்னு பார்க்கறேன்…”

“அதெல்லாம் என் மாமியாரை ஊட்ட சொல்லுவேன், இல்லன்னா என்னைக் கட்டிக்கப் போற அவதார புருஷனை ஊட்டி விடச் சொல்லுவேன், உங்களுக்கு என்ன கஷ்டம்…?” என்ற நந்தினி அன்னையிடம் கேட்க,

“ஆகமொத்தம் நீ அந்தப் புள்ளையத் தின்ன விட மாட்ட…” சுபாஷினி சொல்ல, “அதுக்கென்ன, நான் சாப்பிட்டு அவளுக்கு ஊட்டி விடறேன்…” என்றாள் நந்தினி.

“ம்ம்… ஊட்டி விடுவியோ, கொடைக்கானல் விடுவியோ… நான் வேலையப் பார்க்கறேன், சீக்கிரம் வாங்க…” என்றவர் அடுக்களைக்கு நகர மந்தாகினி அமைதியாய் ஊட்டினாள்.

“நீ ஏண்டி பியூஸ் போன பல்பாட்டம் முகத்தை வச்சிருக்க…? நிஜமாலும் பாம்புன்னு பயந்துட்டியா…?” எனக் கேட்க அதைக் கேட்டு தேவி கலகலவென்று சிரித்தாள்.

“ஏய்…! எதுக்குடி இப்ப சிரிக்குற…? என்னன்னு சொல்லிட்டு சிரிடி…” என்றாள் நந்தினி.

“உலகத்தை நினைச்சேன், சிரிச்சேன்… என்னை பாம்புன்னு சொல்லி பயப்பட வச்ச அந்த லகுடகுசல பாண்டியர் எவ்ளோ பெரிய பயந்தாங்கொள்ளின்னு தெரியுமா…? அதை நினைச்சுதான் சிரிச்சேன்…” என சிரித்தபடி முன்தினம் நடந்ததைக் கூற நந்தினியும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

காற்று நமைக் கேட்டு

வருடுவதில்லை…

பூக்கள் செடியைக் கேட்டு

மலர்வதில்லை…

சிறகுகள் சம்மதம் கேட்டு

முளைப்பதில்லை…

அதுபோலவே இந்தக் காதலும்…

இயற்கையாய் நம்

அனுமதியின்றி

நமக்கே தெரியாமல்

முகிழ்த்து விடுகிறது…

Advertisement