Advertisement

அத்தியாயம் –  5

“மச்சான், இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்குப் பெயின்ட் அடிக்க ஆளுங்க வந்திருவாங்க, நீங்க விக்கணும்னு சொன்ன மாந்தோப்பைக் கூட என் நண்பர் ஒருவரே வாங்கிக்கறேன்னு சொல்லிருக்கார், நாளை மறுநாள் பார்க்க வரேன்னு சொன்னார்… மாப்பிள கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன், உங்களுக்கும் விவரம் சொல்லிடலாம்னு தான் கூப்பிட்டேன்… உங்களுக்கு சந்தோசமா…?” நந்தகுமார் தொலைபேசியில் கணேச பாண்டியனிடம் பேசிக் கொண்டிருக்க சுபாஷினியும் அருகே அமர்ந்திருந்தார்.

“ரொம்ப சந்தோஷம் மாப்பிள, இனி பையனுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி வச்சுட்டா நிம்மதியாருக்கும், அதைப் பத்தி பத்மாகிட்ட பேசிட்டு இருந்தப்ப தான் எங்களுக்கு ஒரு யோசனை வந்தது…” கணேச பாண்டியன் பீடிகையுடன் நிறுத்த நந்தகுமார் நெற்றியைச் சுருக்கினார்.

“என்ன யோசனை மச்சான், தங்கச்சி என்ன சொல்லுச்சு…?”

“அதுவந்து…” சற்றுத் தயங்கியபடி சொல்லத் தொடங்கினார்.

“எங்களுக்கு இருக்கறது ஒரே பையன்… உங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு, ரெண்டு பேருக்குள்ள முறையும் இருக்கு, நமக்குள்ள சம்மந்தம் பண்ணிகிட்டா சொந்தமும் விட்டுப் போகாது, அதான்… நீங்க என்ன நினைக்கறிங்கன்னு கேட்டுப் பார்க்கலாம்னு…” தயக்கத்துடனே முடித்தார்.

“அடடா, இதுக்கு எதுக்கு தயக்கம்…? வீட்டுல பொண்ணு, பையன்னு இருந்தா யோசிக்கத் தான செய்வோம். நாங்களும் நந்தினிக்கு நல்ல இடமாப் பார்க்கணும்னு தான் பேசிட்டு இருக்கோம், இந்தப் பொண்ணு தான் பிடி கொடுக்காம கொஞ்ச நாள் போகட்டும்… இப்பதான படிப்பை முடிச்சேன்னு சொல்லிட்டு இருக்கா… அவ ஜாதகத்துலயும் மூணு மாசத்துக்குப் பிறகு கல்யாணத்துக்குப் பார்த்தாப் போதும்னு ஜோசியர் சொல்லிருக்காரு…” என்றார் நந்தகுமார்.

“ஓ…! மூணு மாசம் தான அதுக்கென்ன மாப்பிள்ள, வீட்டுல பெயின்டிங் வேல முடிக்கிறதுக்குள்ள ஓடிப் போயிடப் போகுது… நீங்க தங்கச்சி, மருமகப் பொண்ணுகிட்ட பேசிட்டு மெதுவா விவரம் கொடுங்க, ஒண்ணும் அவசரமில்ல…”
என்றார் கணேச பாண்டியன்.

“சரி மச்சான், நான் பேசிட்டு சொல்லறேன்… வைக்கறேன்…” என்றவர் போனை வைத்துவிட்டு யோசனையுடன் மனைவியைப் பார்த்தார்.

“என்னங்க…? அண்ணன் என்ன சொன்னாரு…?”

“நம்ம நந்தினிய விக்ரம் மாப்பிள்ளைக்குப் பார்க்கலாம்னு அவங்களுக்கு ஒரு எண்ணம் இருக்கும் போலருக்கு… உன்கிட்ட கலந்து பேசிட்டு சொல்லச் சொன்னார், நீ என்ன நினைக்கற சுபா…?” அவர் தனது சகதர்மினியிடம் கேட்க அவள் சற்று யோசித்தாள்.

“விக்ரம் மாப்பிள்ள நல்லாப் படிச்சிருக்கார், பொறுப்பானவரா இருக்கார், பார்க்க ராஜாவாட்டம் லட்சணமா இருக்கார்… அதெல்லாம் சரிதான், ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் மனசை உறுத்துதே…” என்றார் யோசனையுடன்.

“நீ என்ன சொல்லற சுபா…?”

“என் அண்ணி பத்மாவதி குணத்தைப் பத்தித் தெரியும்ல, வயசான காலத்துல சொந்த மாமியாரைக் கூடப் பார்த்துக்காம வீட்டை விட்டுத் துரத்திவிட்டு எங்க அம்மா வீட்டுல தான பெரியம்மா சாகற வரைக்கும் கிடந்தாங்க, அவங்களை நம்பி என் பொண்ணை எப்படிக் கொடுக்க முடியும்…? அதுவுமில்லாம நமக்குப் பக்கத்து ஊருலயே பார்த்துக் கட்டிக் கொடுத்தா நினைக்கும்போது புள்ளையப் பார்த்துக்கலாம். ஒத்தப் புள்ளைய அவ்ளோ தூரம் கட்டிக் குடுத்துட்டு நமக்கும் வெறிச்சின்னு கிடக்கும்ல…”

அவர் சொன்னதை யோசித்த நந்து, “நீ சொல்லறதும் சரிதான் சுபா… ஆனா நம்ம நந்துகிட்ட உன் அண்ணியோட பாச்சாவெல்லாம் பலிக்காது தெரியும்ல, அப்புறம் நமக்கிருக்கற சொத்தெல்லாம் நம்ம பொண்ணுக்குத் தான் கொடுக்கப் போறோம், உன் அண்ணி தான் பணத்தைப் பார்த்தா பல்லிளிக்கிற ஆளாச்சே, அதுக்காக நம்ம புள்ளைய நல்லா தான் வச்சுப்பா… சரி, இதை அப்புறமா யோசிப்போம். நந்து எங்க போனா, இன்னும் காணோம்…?”

“அவ லைப்ரரி போயிட்டு வர்றேன்னு சொன்னா …”

“ஓ…! நான் வயக்காட்டுக்குப் போயிட்டு வந்துடறேன்… மதியம் சாப்பாட்டுக்கு லேட்டாகும், விக்ரம் மாப்பிள்ளை வந்தா எனக்காகக் காத்திருக்க வேண்டாம்னு சொல்லிடு…” என்றவரிடம் சுபாஷினி, “சரிங்க…” எனவும் தோளில் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு புல்லட்டில் கிளம்பினார். சுபாஷினி மருமகனுக்காய் வாங்கி வைத்திருந்த ஆற்று மீன்களை சரி செய்து சமையலைத் தொடங்க சென்றார்.

விக்ரம் வெயிலோடு வீசிய இளம் தென்றலை ரசித்துக் கொண்டே அவர்களின் பழைய வீடு இருந்த பகுதிக்கு நடந்து கொண்டிருந்தான். முன்தினம் நந்தகுமாருடன் அங்கே சென்றிருந்ததால் வழி பரிச்சயமாகி இருந்தது. கணேச பாண்டியன் பிறந்து வளர்ந்த வீடு. அவருக்குக் கல்யாணமாகி சென்னைக்கு மாமனார் வீட்டருகே குடி பெயர்ந்தவருக்கு பிறகு சொந்த ஊர் எப்போதாவது விசேஷங்களுக்கு மட்டும்  வந்து செல்லும் வெளியூராகிப் போனது.

கணேச பாண்டியனுக்கு பத்து வருடங்களாய் பிசினசில் அடிமேல் அடி விழ எப்படி எல்லாமோ லோன் வாங்கி சொத்தை விற்று சரி செய்ய முயன்று கொண்டிருந்தவருக்கு வட்டி மேலுக்கு மேல் குட்டி போட்டதில் கடன் கையை மீறிக் கழுத்தைப் பிடிக்கத் தொடங்கியிருந்தது.

ஐந்து வருடத்திற்கு முன்பு வந்து போன ஹார்ட் அட்டாக்கும் பயத்தைக் கொடுத்திருக்க எப்படியாவது எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் வேகத்தில் இருந்தார்.  வெகு காலமாய் ஊருக்கு வராமல் போக்குவரத்து நின்று போயிருக்க இப்போது பணத் தேவைக்காய் வர வேண்டியதாயிற்று. அவர்களுக்கு சொந்தமான ரெண்டு ஏக்கர் மாந்தோப்பை விற்கவும், அந்தப் பழைய வீட்டைப் பழுது பார்த்து பெயின்ட் செய்யவும் தீர்மானித்திருந்தார் கணேசன். அந்த வீட்டின் மீது லோன் வாங்கி இருந்ததால் அதை விற்க முடியவில்லை. இப்போது சரி செய்து லீசுக்கு விடும் எண்ணத்துடன் மகனை மேற்பார்வையிட அனுப்பி இருந்தார்.

நந்தினி அவளது ஸ்கூட்டியில் லைப்ரரிக்கு சென்றிருக்க, விக்ரமை வீட்டில் நிற்கும் காரை எடுத்துச் செல்லுமாறு நந்தகுமார் கூறியும் அவன் நடந்து செல்வதாகக் கூறிவிட்டான். அந்த கிராமத்துப் புழுதி பறக்கும் ரோட்டில் காரில் வருவதை விட இருமருங்கும் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே நடக்க அவனுக்கு மிகப் பிடித்திருந்தது. மாந்தோப்புக்கு போய்விட்டு வீட்டுக்கு செல்ல நினைத்தவன் தோப்புக்குள் நுழைந்தான்.

வரிசையாய் குடை விரித்தது போல் கிளை விரித்து அடர்த்தியாய் நின்றது மாமரங்கள். இளம்தளிர்கள் சூரிய ஒளியில் பசுமையாய் மின்னிக் கொண்டிருக்க, கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன காய்கள். சில கனிகள் கனிந்து அணிலும், கிளிகளும் கொத்தியதில் பாதியாக மரக் கிளையிலும், கீழேயுமாய் கிடந்தன.  சூரியனின் வெளிச்சம் பூமியில் படாத அளவுக்கு மரங்கள் அடர்ந்து நிழலைக் கொடுக்க, சருகாகி விழுந்த இலைகளை ஷூ காலால் மிதித்துக் கொண்டே சுற்றிலும் பார்த்தபடி நடந்தான் விக்ரம். இதுவரை தோப்பை குத்தகைக்குக் கொடுத்திருந்ததால் ஒரு வருவாய் வந்து கொண்டிருந்தது. இந்த வருடம் அதை விற்கும் முடிவில் இருந்ததால் யாருக்கும் குத்தகைக்கும் விடவில்லை.

“இவ்ளோ மாங்கா இருக்கு, மாமாகிட்ட சொல்லி பறிக்க ஏற்பாடு பண்ணனும்…” நினைத்துக் கொண்ட விக்ரம் அங்கு ஏதோ ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் கவனித்தான்.

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்.

அவன் மாம்பழம் வேண்டுமென்றான்…

அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை.

இந்தக் கன்னம் வேண்டுமென்றான்…

சின்ன சிணுங்கலுடன் பெண் குரலில் பாடல் கேட்க திகைப்புடன் சுற்றிலும் யாரென்று தேடியபடி குரல் வந்த திசையில் சத்தமின்றி நடந்தான். சிறிது உள்ளே வந்ததும் ஒரு மரத்தின் மேலிருந்து பாடலின் வரிகள் ஹம்மிங்காய் மிதந்து வர, சடசடவென்று மாங்காயைக் கோலால் அடித்துத் தள்ளி விடும் சத்தம் கேட்கவும் ஒரு மரத்தின் பின் மறைவாய் நின்று கொண்டு கவனித்தான் விக்ரம்.

சட்டென்று ஒரு நீண்ட குச்சி கீழே விழ அடுத்து மரத்தின் மீதிருந்து ஒரு தாவணிப் பெண் உருவம் கீழே குதித்து முதுகைக் காட்டி நின்றதால் அவனால் முகம் பார்க்க முடியவில்லை.

“என்ன ஒரு திருட்டுத் தனம்…? மாங்காய்த் திருடி…” முணுமுணுத்தவன் அப்பெண் குனிந்து கீழே விழுந்த மாங்காயை எடுக்கத் தொடங்கவும் சட்டென்று அவள் எதிரில் சென்று நின்று அவளை பயமுறுத்த நினைத்தான்.

சற்றே கனிந்த மாங்காய் ஒன்றை தாவணி முந்தானையில் துடைத்துக் கொண்டு கடித்து சுவைக்கத் தொடங்கியவள், தன் முன்னே வந்து முறைப்பாய் நின்றவனை சாதாரணமாய் நோக்க, அவளைக் கண்டவனோ திகைத்தான்.

“ஏய் மஞ்சக்கிளி, பட்டப் பகல்ல மாங்காய் திருட்டா…?” கேட்டவனை முறைத்தவள், “நான் எங்க திருடினேன்…? இந்தப் பக்கமா போனவளை இந்த மாமரம் தான் கூப்பிட்டு மாங்காயப் பறிச்சுக்கோ, என்னால பாரம் தாங்க முடியலைன்னு சொல்லுச்சு…” என்றவளை ஏதோ வினோத ஜந்து போலப் பார்த்த விக்ரம், “என்னது, மரம் உன்கிட்ட மாங்கா பறிக்க சொல்லுச்சா…?” என்றான் கிண்டலுடன்.

“ஆமா சொல்லுச்சு…! அதான், என்னால முடிஞ்ச உதவியை செய்யலாமேன்னு கொஞ்சம் மாங்காய் பறிச்சு அதோட பாரத்தைக் குறைக்கப் பார்த்தேன்…” என்றாள் கையிலிருந்த மாங்காயைக் கடித்துக் கொண்டு.

“ம்ம்… சொல்லும், சொல்லும்…! உங்க ஊருல இப்படி தான் திருட்டுத்தனம் பண்ணிட்டு அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு புளுகுவிங்களா…? சொல்லறது தான் சொல்லற, கொஞ்சம் நம்பற மாதிரியாச்சும் சொல்ல வேணாமா…?”

“அதிருக்கட்டும், டவுனுக்காரருக்கு இங்கென்ன வேலை…? இவளோ அக்கறையா கேக்கறிங்க…? உங்களைத்தான் இந்தத் தோப்புக்கு வாட்ச்மேனா போட்டிருக்காங்களா, என்ன…?”

“இந்தா பொண்ணு, சும்மா யாரு எவருன்னு தெரியாம வாய்க்கு வந்ததை சொல்லாத. யாரு நான் வாட்ச்மேனா…?”

“அப்படி இல்லன்னா திருட வந்திங்களா…?”

மாங்காயைக் கடித்துக் கொண்டே அவனிடம் வம்பு பேசிக் கொண்டிருந்தவளுக்கு அவனும் சளைக்காமல் பதில் பேசினான். விக்ரமுக்கு அந்த மஞ்சள் அழகியிடம் பேசுவது சற்று சுவாரஸ்யமாய் இருந்தது.

“என்னமா ரொம்ப பேசற…? இது யாரு தோப்பு தெரியுமா…?”

“ஏன், உங்களுக்குத் தெரியாதா…?” அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வண்டி சத்தம் கேட்க இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பினர். நந்தினி தான் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள்.

இருவரையும் கண்டு புன்னகைத்தவள், “மாம்ஸ், நீங்களும் தோப்புக்கு வந்துட்டிங்களா…?” என விக்ரமிடம் கேட்க, மந்தாகினிக்கு அப்போது தான், நந்தினி ஊரிலிருந்து வந்ததாக சொன்ன மாம்ஸ் இவனென்று புரிய முழித்துக் கொண்டு நின்றாள்.

“மாம்ஸ், இது என் பிரண்டு மந்தாகினி தேவி…” என தோழியை அவனுக்கு அறிமுகப்படுத்த, “இவ மந்தாகினி தேவி இல்ல, மங்கி தேவிங்கற பேரு தான் சரியாருக்கும்… வாலில்லாத குரங்கு, மரத்து மேலருந்து எப்படிக் குதிச்சா…?” என மனதுக்குள் நினைத்துக் கொண்டவனுக்கு, பாவாடை சட்டையில் ஒரு கையில் உப்பும், மறு கையில் சின்ன நெல்லிக்காயும் வைத்துக் கொண்டு உச்சுக் கொட்டி ஜொள் விட்டு சாப்பிடும் சின்ன வயது தேவியை நினைவு வந்தது.

மந்தாகினி, முழித்துக் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட நந்தினி, “ஏய் இதான்டி நம்ம விக்ரம் மாம்ஸ், கணேச பண்டி மாமாவோட பையன் விக்ரம பாண்டியன். சின்ன வயசுல நாம எல்லாரும் ஒண்ணா ஓடிப் பிடிச்சு விளையாடுவமே, உன்னைக் கூட அழ வச்சிட்டே இருப்பாரே…” என நினைவு படுத்த, “ஓ…! அந்த லகுடகுசல பாண்டியரா…?” என மந்தாகினியும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ரெண்டு பேரும் முழிச்சிட்டு நிக்கறிங்க…? மாங்கா பறிச்சு வைக்க சொன்னனே, பறிச்சியா இல்லியா தேவி…?” எனத் தோழியைக் கேட்க, “ம்ம்… பறிச்சிட்டேன், இதா வந்துடறேன்…” என்றவள் கீழே மீதமிருந்த காய்களை எடுத்து பையில் போட,

“அம்மா ஊறுகா போடா மாங்கா பறிச்சிட்டு வர சொன்னாங்க மாம்ஸ், அதான் இவகிட்ட சொன்னேன்… இவ அசால்ட்டா மரம் ஏறி நல்ல காயா தள்ளி விடுவா…” எனத் தோழியைப் புகழ,  “அதான் எனக்குத் தெரியுமே, குரங்கு மாதிரி மரத்துல இருந்து குதிச்சதைக் கண்ணால பார்த்தனே…! அப்ப இவங்க சொல்லி தான் மங்கி தேவி பறிச்சிருப்பா போலருக்கு…” என நினைத்தபடி அவளைப் பார்த்தான் விக்ரம்.

தேவி அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி பை நிறைய மாங்காயுடன் வர, “சரி மாம்ஸ், நாங்க கிளம்பறோம்…” என்ற நந்தினி அவளையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பி விட நடந்ததை புன்னகையுடன் அசை போட்டபடி நடந்தான் விக்ரம். “ச்சே, தேவை இல்லாம அவளைத் திருடின்னு சொல்லிட்டமே…” வருந்தவும் செய்தான்.

மதியம் விக்ரம் வீட்டுக்கு செல்லும்போது அங்கே மந்தாகினியும் இருந்தாள். அவளும், நந்தினியும் கலகலத்துப் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டுக்குள் நுழையும் போதே கேட்டது. விக்ரமைக் கண்டதும் மௌனியானவள்,

“சரி நான் கிளம்பறேன் நந்து, அப்பா சாப்பிட வந்திருவாக…” எனப் பரபரக்க, “இருடி… அம்மா மீன் குழம்பு எடுத்திட்டு போக சொன்னாங்கல்ல, அப்பாக்கு ரொம்பப் பிடிக்கும்… நான் எடுத்திட்டு வர்றேன்…” என்று நந்தினி உள்ளே சென்றாள்.

விக்ரம் மந்தாகினியைக் கண்டதும் இயல்பாய் ஒரு குறும்பு எட்டிப் பார்க்க, “என்ன மஞ்சக்கிளி, என்னைப் பார்த்ததும் பறக்கப் பார்க்குது…?” எனக் கேட்க அவனைப் பார்த்தவள் எதையோ சொல்ல வந்து அப்படியே முழுங்கி விட்டாள்.

நந்தினியுடன் வெளியே வந்த சுபா விக்ரமைக் கண்டதும், “வாங்க மாப்பிள…” என்றவர் தேவியிடம், “நீ இங்க சாப்பிட்டுப் போக வேண்டியது தானடி, என்ன அவசரம்…” எனக் கேட்க, “இல்ல மா, அப்பா வயல்ல வேலை முடிச்சு நேரமா வருவேன்னு சொன்னாக… அதான்…” என்றாள்.

“சரி, நாளைக்கு அண்ணன்கிட்ட நல்ல வெடக்கோழியா ஒண்ணு கொண்டு வரச் சொல்லு… நீயும் காலைல வந்திரு தேவி, நிறைய வேலை கிடக்கு….”

“சரிம்மா வரேன்…” என்றவள் கிளம்பி விட்டாள். விக்ரமின் பார்வை அவனையும் அறியாமல் செல்லும் மந்தாகினியின் மீதே படிந்திருந்தது.

“என்ன மாப்பிள்ள… தோப்பு, வீடுலாம் பார்த்தாச்சா…?”

“ம்ம்… யாரையாவது ஆளை விட்டு காய் எல்லாம் பறிக்க சொல்லணும் அத்த, நிறைய பழுத்து கீழே விழுந்து வேஸ்டாப் போகுது…” என, “அதுக்கென்ன நாளைக்கே முத்துகிட்ட வர சொல்லிடுவோம்…” என்றார் சுபா.

அடுத்தநாள் காலையில் முத்துவுடன் வேறு சில ஆட்கள் வந்திருக்க தோப்பில் காய் பறிக்கும் வேலை நடந்தது. மந்தாகினி அவளது வீட்டில் தந்தை சரவணன் வயலுக்குக் கிளம்பியதுமே பெரிய வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அவள் வைக்கும் நாட்டுக் கோழி குழம்பு நந்தினியின் வீட்டில் எல்லாருக்கும் மிகப் பிடிக்கும் என்பதால் தேவியைக் குழம்பு வைக்க சொல்லிவிட்டு மற்ற வேலைகளை நந்துவும், சுபாஷினியும் பார்த்துக் கொண்டனர்.

தோப்பில் வேலை நடக்கும்போது கணேச பாண்டியன் மகனை அலைபேசியில் அழைத்துப் பேசினார். பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு நந்தினியை அவனுக்கு மணமுடிப்பது சம்மந்தமாய் நந்தகுமாரிடம் பேசியதைக் கூற, “என் கல்யாணத்துக்கு இப்ப என்னப்பா அவசரம்…? மாமா வீட்டுல இதைப் பத்தி எதுவும் பேசின போலத் தெரியலையே…” என்றான் மகன்.

“விக்ரம், அங்க பக்கத்துல யாரும் இல்லையே…”

“இல்லப்பா, நான் தனியா தான் இருக்கேன்…”

“டேய், நந்தினிக்கு மூணு மாசம் கழிச்சு தான் வரன் பார்க்குற போல மச்சான் சொன்னார்… அவங்களுக்கு இருக்கற சொத்துபத்து எல்லாத்துக்கும் இந்த நந்தினிப் பொண்ணு ஒருத்திதான் வாரிசு. எனக்கும், உன் அம்மாவுக்கும் நம்ம இப்போதைய நிலைமை தெரியாத இடத்துல உனக்குப் பொண்ணு எடுக்கறது தான் மரியாதைன்னு தோணுது… நாம கடன்ல தான் மாந்தோப்பை விக்கப் போறோம்னு உன் மாமனுக்குத் தெரியாது… சும்மா கிடக்கறதை வித்து பிசினஸ்ல போட்டா இன்னும் டெவலப் பண்ணலாம்னு இதை விக்கற போல சொல்லி வச்சிருக்கேன்… டேய், நந்தினியை நீ கட்டிகிட்டா நம்ம கடனை அடைக்கிறதோட நீயும் செட்டில் ஆகிடலாம். நாங்க இந்த வேலைக்கு உன்னை ஊருக்கு அனுப்ப இதுவும் ஒரு காரணம்…” மெதுமெதுவாய் மகனின் மனதில் விஷயத்தை ஏற்ற முயன்றார் கணேசன். அவர் சொல்லுவது அவனுக்கும் புரிந்தாலும் உடனே எந்த பதிலும் சொல்லவில்லை.

“சரிப்பா, இன்னும் நமக்கு டைம் இருக்கு… யோசிக்கலாம்…”

“விக்ரம், யோசிக்கலாம்னு சொல்லி எனக்கு கிடைச்சிருக்கற ஒரு நம்பிக்கையும் குலைச்சிடாத… எப்படியாச்சும் அந்த நந்தினிக்கு உன்னைப் பிடிக்கிற போல நடந்து இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிடு… உன் மூலமா தான் நம்ம குடும்பத்துக்கு ஒரு விடிவுகாலம் வரும்னு மலை போல நம்பிட்டு இருக்கேன், கெடுத்துடாதப்பா…”

“ம்ம்… சரிப்பா, நான் வேண்டாம்னு சொல்லல… யோசிக்க டைம் இருக்குன்னு தான் சொன்னேன்… உங்க விருப்பம் போல எல்லாம் நடக்கும்…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க மனதில் ஒரு சம்மந்தமும் இல்லாமல் ஏனோ மந்தாகினியின் முகம் நினைவில் வந்து முறைத்துப் பார்க்க அவன் திகைத்து நின்றான்.

சுடுநீரை ஊற்றினால்

விதைகள் முளைப்பதில்லை…

சுடுசொல்லில் சுட்ட பின்

நேசங்கள் மலர்வதில்லை…

அமிலத்தைத் தெளித்து

அமுதம் சமைக்க நினைக்கிறாய்

இதயத்தைப் பொசுக்கிவிட்டு

இடமொன்று கேட்கிறாய்…

வெறுக்குமோ மறக்குமோ

வேதனையின் சுவடுகள்…

 

Advertisement